யெகோவாவின் அருமையான ஆடுகளைக் கனிவாக மேய்த்தல்
மூப்பர்கள் மெய்மறந்து கவனம்செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போஸ்தலன் பவுலிடம் அறிவுரைகளைப் பெறுவதற்கு எபேசுவிலிருந்து மிலேத்துவிற்கு 50 கிலோமீட்டர் அவர்கள் பிரயாணஞ்செய்திருந்தார்கள். இப்போது அவர்கள் அவரைக் கடைசியாகப் பார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது அவர்கள் வருத்தப்பட்டார்கள். ஆதலால் கேட்க இருந்த வார்த்தைகள் அதிக முக்கியமானவை என்று அவர்கள் அறிந்திருந்தார்கள்: ‘உங்களைக்குறித்தும், தேவன் தம்முடைய [சொந்தக் குமாரனின், NW] ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்குப் பரிசுத்த ஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங் குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.’—அப்போஸ்தலர் 20:25, 28, 38.
அந்த எபேசிய மூப்பர்களுக்கு மேய்ப்பர்களைப்பற்றிய பவுலின் சுருக்கமான மேற்கோள் நிச்சயமாகவே மிகுதியான செய்தியைத் தந்தது. அவர்கள் அக்கம்பக்கத்திலுள்ள நாட்டுப்புறங்களில் ஆடுகள் மேய்க்கும் வேலையைக்குறித்து நன்கு அறிந்திருந்தார்கள். எபிரெய வேதாகமத்திலுள்ள மேய்ப்பர்களைப்பற்றிய அநேகக் குறிப்புகளை அறிந்தவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். மேலும் யெகோவா தம்முடைய ஜனத்தின் மேய்ப்பராகத் தம்மை ஒப்பிட்டுப்பேசினார் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.—ஏசாயா 40:10, 11.
பவுல் அவர்களை ‘மந்தையின்’ மத்தியில் “கண்காணிகளாக,” ‘சபையின் மேய்ப்பர்களாக’ அவர்களைப்பற்றி பேசினார். ஆனால், “கண்காணிகள்” என்ற சொல் அவர்களுடைய நியமிப்பு என்னவாக இருந்தது என்பதைக் குறித்தது, “மேய்ப்பர்” என்ற சொல் எவ்வாறு அந்தக் கண்காணிப்பைச் செய்வது என்பதை விளக்கியது. ஆம், தன்னுடைய ஆட்டு மந்தையை ஒரு மேய்ப்பன் நடத்தும் அதே அன்பான வழியில், சபையின் ஒவ்வொரு அங்கத்தினரிடமும் கண்காணிகள் கனிவாக நடக்கவேண்டிய தேவையிருந்தது.
இன்று வெகுசில மூப்பர்களே சொல்லர்த்தமான ஆடுகளை மேய்க்கும் நேரடியான அனுபவத்தைப் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆனால் ஆடுகள், மேய்ப்பர்கள் ஆகிய இருதரப்பினரைப்பற்றியும் அவ்வளவு அநேக மேற்கோள்களைப் பைபிள் காட்டுவதால், விசேஷமாக அடையாள அர்த்தத்தில், பவுலின் அந்த வார்த்தைகள் ஒரு காலத்திற்கடங்கா பயனைக் கொண்டிருக்கின்றன. பூர்வ காலத்தில் கடவுள் தயவுகாட்டின மேய்ப்பர்களைப்பற்றிய பதிவுகளிலிருந்து அதிகத்தைக் கற்றுக்கொள்ள முடியும். அவர்களுடைய போற்றத்தக்க எடுத்துக்காட்டுகள், கடவுளுடைய சபையை மேய்ப்பதற்கு இன்றுள்ள மூப்பர்கள் என்னென்ன பண்புகளை வளர்க்கவேண்டிய தேவையிருக்கிறது என்பதைக் காண்பதற்கு உதவிசெய்யும்.
பயமில்லாத மேய்ப்பன் தாவீது
பைபிள் காலத்தின் மேய்ப்பர்களைப்பற்றி நாம் சிந்திக்கும்போது, பெரும்பாலும் தாவீதை நாம் நினைத்துப்பார்ப்போம், ஏனென்றால் ஆட்டு மந்தை மேய்ப்பவனாக அவன் தொடங்கினான். தாவீதின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முதல் பாடங்களில் ஒன்று, ஒரு மேய்ப்பனாக இருப்பது ஓர் உயர் பதவியல்ல என்பதுதான். உண்மையில், சாமுவேல் தீர்க்கதரிசி ஈசாயின் மகனில் ஒருவரை இஸ்ரவேலின் எதிர்கால ராஜாவாக அபிஷேகஞ்செய்வதற்கு வந்தபோது, இளைஞன் தாவீது முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருந்தான். ஏழு மூத்த சகோதரர்களையும் ஏற்றுக்கொள்ள யெகோவா மறுத்தப் பின்புதான், வயல்வெளிகளில் ‘ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த’ தாவீதைப்பற்றி, சொல்லப்பட்டது. (1 சாமுவேல் 16:10, 11) ஆனாலும், தாவீது மேய்ப்பனாகக் கழித்த ஆண்டுகள், இஸ்ரவேல் தேசத்தை மேய்ப்பதற்குத் தேவைப்படும் கடின வேலைக்கு அவரைத் தயார்செய்தது. “[யெகோவா] தம்முடைய தாசனாகிய தாவீதைத் தெரிந்துகொண்டு, ஆட்டுத் தொழுவங்களிலிருந்து அவனை எடுத்தார் . . . தம்முடைய ஜனமாகிய . . . யாக்கோபை மேய்ப்பதற்காக,” என்று சங்கீதம் 78:70, 71 சொல்கிறது. பொருத்தமாகவே, தாவீது மனதைக்கவரும், நன்கு அறியப்பட்ட 23-ம் (NW) சங்கீதத்தை, “யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்,” என்ற ஆரம்ப வார்த்தைகளோடு எழுதினார்.
தாவீதைப்போலவே, கிறிஸ்தவச் சபையில் உள்ள மூப்பர்கள் மனத்தாழ்மையான உதவி மேய்ப்பர்களாகச் சேவிக்கவேண்டும், தகுதியற்ற முக்கியத்துவத்தைப் பெற நாடக்கூடாது. அப்போஸ்தலன் பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதினதுபோல, மேய்க்கும் பொறுப்பைப் பெற நாடுகிறவர்கள், ‘நல்ல வேலையை விரும்புகிறார்கள்,’ முக்கியத்துவத்தை அல்ல.—1 தீமோத்தேயு 3:1.
ஒரு சொல்லர்த்தமான மேய்ப்பனாக தாவீதின் வேலை தாழ்வானதாக இருந்தாலும் சில சமயங்களில் அது அதிக தைரியத்தைத் தேவைப்படுத்தியது. உதாரணமாக, அவருடைய தந்தையின் மந்தையிலிருந்து ஒரு செம்மறியாட்டை ஒருமுறை ஒரு சிங்கமும், மறுமுறை ஒரு கரடியும் பிடித்துக்கொண்டுபோனபோது, தாவீது தைரியமாக எதிர்த்துப்போராடி, கொன்றுதின்ன வந்த விலங்குகளைக் கொன்றுபோட்டான். (1 சாமுவேல் 17:34-36) ஒரு சிங்கம் அதைவிட பெரிய விலங்குகளைக் கொன்றுபோட முடியும் என்பதை ஒருவர் மனதில் வைத்தால், இது தைரியத்தின் தனிச்சிறப்புமிக்க வெளிப்பாடாக இருந்தது. பாலஸ்தீனாவில் பொதுவாக வாழும் சீரியாவின் பழுப்புநிற கரடி, 140 கிலோகிராம் எடையுடையதாக இருக்கும். அதனுடைய பலமான உள்ளங்கையின் ஒரே அடியில் ஒரு மான் செத்துப்போகும்.
தாவீது தன்னுடைய தகப்பனின் ஆடுகளுக்குத் தைரியமான அக்கறையைக் காட்டியது, கிறிஸ்தவச் சபையிலுள்ள மேய்ப்பர்களுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அப்போஸ்தலன் பவுல் ‘மந்தையை கனிவோடு நடத்தாத’ “கொடிதான ஓநாய்கள்” வரும் என்று எபேசு மூப்பர்களை எச்சரித்தார். (அப்போஸ்தலர் 20:29) நவீன காலங்களிலுங்கூட, கிறிஸ்தவ மேய்ப்பர்கள் யெகோவாவினுடைய ஆடுகளின் ஆவிக்குரிய நலத்தைக் காப்பதற்குத் தைரியத்தைக் காண்பிக்கவேண்டிய சந்தர்ப்பங்கள் வரலாம்.
அன்பான மேய்ப்பர் தாவீதையும், நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்றுவதில், ஆடுகள் துணிவோடு பாதுகாக்கப்படவேண்டியதிருந்தாலும், அவை உச்ச அளவு கனிவோடும் நடத்தப்படவேண்டும். (யோவான் 10:11) மந்தை யெகோவாவிற்குச் சொந்தம் என்று அறிந்து, மூப்பர்கள் ஒருபோதும் ஆடுகளைக் கொடூரமாக நடத்தக்கூடாது, “தேவனுடைய சுதந்தரமாகிய இவர்களை இறுமாப்பாய்” ஆளாமலும் இருக்கவேண்டும்.—1 பேதுரு 5:2, 3; மத்தேயு 11:28-30; 20:25-27.
கணக்கு ஒப்பிவித்தல்
கோத்திரப்பிதா யாக்கோபு மற்றொரு பிரபலமான மேய்ப்பன். அவருடைய கவனிப்பில் இருக்கும்படி ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆட்டுக்கும் அவர் தனிப்பட்ட வகையில் பொறுப்பானவர் என்று அவர் உணர்ந்தார். அவர் தன் மாமன் லாபானுடைய மந்தைகளை அவ்வளவு உண்மையோடு கவனித்துக்கொண்டதால், தன்னுடைய 20 வருட ஊழியத்திற்குப் பின்பு, யாக்கோபு இவ்வாறு சொல்லமுடிந்தது: “உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினையழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் தின்னவில்லை. பீறுண்டதை நான் உம்மிடத்துக்குக் கொண்டுவராமல், அதற்காக நான் உத்தரவாதம் பண்ணினேன்; பகலில் களவுபோனதையும், இரவில் களவுபோனதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.”—ஆதியாகமம் 31:38, 39.
நம் ஆத்துமாக்களின் மேய்ப்பராக, யெகோவா தேவன், ‘தம்முடைய [சொந்தக் குமாரனின், NW] ரத்தத்தினாலே சம்பாதித்த’ ஆடுகளில், இன்னுமதிக அக்கறையைக் கிறிஸ்தவக் கண்காணிகள் காண்பிக்கிறார்கள். (அப்போஸ்தலர் 20:28; 1 பேதுரு 2:25; 5:4) சபையை வழிநடத்தும் ஆண்கள், “உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால்,” என்று பவுல் எபிரெய கிறிஸ்தவர்களிடம் ஞாபகப்படுத்தியபோது, அவர் இந்த முக்கியமான பொறுப்பை அழுத்திக்காண்பித்தார்.—எபிரெயர் 13:17.
யாக்கோபின் உதாரணம், ஒரு மேய்ப்பனுடைய வேலைக்குக் காலக் கட்டுப்பாடே இல்லை என்பதையும் குறிக்கிறது. அது 24-மணிநேர சமாச்சாரம், அடிக்கடி தன்னல தியாகத்தைத் தேவைப்படுத்துகிறது. அவர் லாபானிடம் சொன்னார்: “பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைப் பட்சித்தது; நித்திரை என் கண்களுக்குத் தூரமாயிருந்தது.”—ஆதியாகமம் 31:40.
பின்வரும் அனுபவம் காண்பிக்கிறபிரகாரம், இது இன்றுள்ள பல அன்புமிக்க கிறிஸ்தவ மூப்பர்களுக்கு உண்மையில் பொருந்துகிறது. மூளையில் கட்டி நீக்கப்பட்டதன் காரணமாக சிக்கல்கள் உண்டானதால், ஒரு சகோதரர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டார். அவருடைய குடும்பம் அவர் அருகில் இரவும் பகலும் இருப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தேவையான தார்மீக ஆதரவையும், உற்சாகத்தையும் தருவதற்கு உள்ளூர் மூப்பர் ஒருவர், ஒவ்வொரு நாளும் அந்தச் சகோதரரையும் அந்தக் குடும்பத்தையும் போய்ப்பார்க்கும்படி தன்னுடைய அதிகவேலையான அட்டவணையைப் பொருத்தமாக மாற்றிக்கொண்டார். ஆனாலும், மருத்துவமனையின் தீவிர சிகிச்சையின் மாறாத காரியகிரமத்தின் காரணமாக, பகற்நேரத்தில் அவர் சந்திக்க வருவது எப்போதுமே முடியாத காரியம். இது அந்த மூப்பர் மருத்துவமனைக்கு இரவில் வெகு காலதாமதமாகச் சென்றுபார்க்கும்படிச் செய்தது. ஆனால் அவர் ஒவ்வொரு இரவும் தவறாமல் போனார். “எனக்குச் செளகரியமான நேரத்தைவிட, நோயாளிக்குத் தகுந்தநேரத்தில் நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன்,” என்று சொன்னார் அந்த மூப்பர். அந்தச் சகோதரர் போதுமான அளவு குணமடைந்தபோது, மருத்துவமனையின் மற்றொரு பகுதிக்கு அவர் மாற்றப்பட்டபோதும், மூப்பர் தொடர்ந்து தன்னுடைய உற்சாகப்படுத்தும் விஜயங்களைத் தினமும் செய்துகொண்டிருந்தார்.
மோசே ஒரு மேய்ப்பனாக என்ன கற்றுக்கொண்டார்
“பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்,” என்று பைபிள் மோசேயைப்பற்றி சொல்கிறது. (எண்ணாகமம் 12:3) ஆனாலும், பதிவு எப்போதுமே இது அவ்வாறு இல்லை என்பதைக் காட்டுகிறது. இளைஞனாக இருந்தபோது, உடன் இஸ்ரவேலனை அடித்ததற்காக எகிப்தியன் ஒருவனை அவர் கொலைசெய்தார். (யாத்திராகமம் 2:11, 12) இது நிச்சயமாகவே சாந்தகுணமுள்ளவனின் நடத்தையாக இருக்கமுடியாதே! ஆயினும், லட்சக்கணக்கான தேசத்தாரை வனாந்தரவழியாய் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு வழிநடத்த கடவுள் மோசேயைப் பின்னால் பயன்படுத்துவார். ஆதலால், தெளிவாகவே, மோசே இன்னுமதிகமான பயிற்சியின் அவசியத்தில் இருந்தார்.
மோசே “எகிப்தியருடைய சகல சாஸ்திரங்களிலும்” ஏற்கெனவே உலகியல் சார்பில் கற்பிக்கப்பட்டிருந்தாலும், யெகோவாவின் மந்தையை மேய்ப்பதற்கு அதிகம் தேவையாயிருந்தது. (அப்போஸ்தலர் 7:22) இந்தக் கூடுதலான பயிற்சி என்ன வடிவத்தை ஒருவேளை எடுக்கக்கூடும்? மீதியான் தேசத்தில் 40 வருட காலமாக ஒரு மனத்தாழ்மையுள்ள மேய்ப்பனாக மோசே சேவிக்கும்படி கடவுள் அனுமதித்தார். தன் மாமனாகிய எத்திரோவின் மந்தைகளைக் கனிவோடு மேய்த்தபோது மோசே பொறுமை, சாந்தம், மனத்தாழ்மை, நீடியபொறுமை, எரிச்சலுணர்வை அடக்குதல், தன்னடக்கம் போன்ற அருமையான பண்புகளை வளர்த்தார். யெகோவாவிற்காகக் காத்திருக்கவும் அவர் கற்றுக்கொண்டார். ஆம், சொல்லர்த்தமான ஆடுகளைக் கனிவோடு மேய்ப்பது, மோசேயை இஸ்ரவேல் தேசத்தின் திறமைமிக்க மேய்ப்பனாக தகுதியாக்கியது.—யாத்திராகமம் 2:15–3:1; அப்போஸ்தலர் 7:29, 30.
கடவுளுடைய மக்களை வழிநடத்துவதற்கு ஒரு மூப்பருக்குத் தேவையான பண்புகள் இவைதானல்லவா? ஆம், பவுல் தீமோத்தேயுவிடம் இவ்வாறு ஞாபகப்படுத்தினார், ‘கர்த்தருடைய ஊழியக்காரன் . . . எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர்பேசுகிறவர்களுக்கு . . . சாந்தமாய் உபதேசிக்கவேண்டும்.’—2 தீமோத்தேயு 2:24, 25.
சில சமயங்களில், ஒரு மூப்பர் தன்னிடம்தானே ஏமாற்றமடைந்தவராய் உணரக்கூடும், ஏனென்றால் இந்தப் பண்புகளை முழுமையாக வளர்ப்பது அவருக்குக் கடினமாயிருக்கலாம். எனினும், அவர் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது. மோசேயின் விஷயத்தில்போல, ஒருவர் ஒரு நல்ல மேய்ப்பராக இருப்பதற்குத் தேவையான பண்புகளை முழுமையாக வளர்ப்பதற்கு அதிகக் காலம் எடுக்கலாம். ஆகிலும், காலப்போக்கில், அந்த உள்ளப்பூர்வமான முயற்சி பலனளிக்கப்படும்.—1 பேதுரு 5:10-ஐ ஒப்பிடவும்.
ஒரு மூப்பராக, நீங்கள் ஒருவேளை மற்றவர்களைப்போல் முழுவதுமாகப் பயன்படுத்தப்படாமல் இருக்கலாம். ஒருவேளை, யெகோவா, மோசேயின் காரியத்தில் செய்ததுபோல, சில முக்கியமான பண்புகளை நீங்கள் முழுமையாக வளர்ப்பதற்கு அனுமதிக்கக்கூடுமல்லவா? யெகோவா “உங்களைப் பராமரிக்கிறார்” என்பதை ஒருபோதும் மறக்காதீர்கள். எனினும், ‘நாம் அனைவருமே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளவேண்டிய’ அவசியம் இருக்கிறது. ‘ஏனென்றால் பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார். தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.’ (1 பேதுரு 5:5-7, NW) நீங்கள் உங்களையே யெகோவா அனுமதிக்கும் பயிற்றுவிப்பிற்குக் கீழ்ப்படுத்தி, அதை ஏற்றுக்கொண்டால், மோசே இருந்ததுபோல, நீங்கள் அவருக்கு அதிகப் பயனுள்ளவர்களாக இருக்கமுடியும்.
யெகோவாவின் அனைத்து ஆடுகளுமே அருமையானவை
ஒவ்வொரு தனிப்பட்ட ஆட்டோடும் ஒருவித பொறுப்புணர்வைப் பைபிள் காலங்களில் வாழ்ந்த நம்பத்தகுந்த, அன்பான மேய்ப்பர்கள் கொண்டிருந்தார்கள். ஆவிக்குரிய மேய்ப்பர்களைக்குறித்து இதேதான் உண்மையாக இருக்கவேண்டும். இது பவுலின் வார்த்தைகளில் மிகத்தெளிவாக இருக்கிறது: “மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள்.” (அப்போஸ்தலர் 20:28) ‘மந்தை முழுவதில்’ யாரெல்லாம் உட்படுவர்?
நூறு செம்மறியாடுகளைக் கொண்டிருந்து, ஆனால் காணாமற்போன ஓர் ஆட்டை மந்தையினிடமாகக் கொண்டுவந்து சேர்ப்பதற்காகச் சரியாகவே தேடியலைந்த ஒரு மனிதனைப்பற்றிய ஓர் உதாரணத்தை இயேசு கொடுத்தார். (மத்தேயு 18:12-14; லூக்கா 15:3-7) அதைப்போலவே, ஒரு கண்காணி சபையிலுள்ள ஒவ்வொரு அங்கத்தினர் மேலும் அக்கறை காண்பிக்கவேண்டும். ஊழியத்தில் பங்கெடுக்காமல் இருப்பதோ கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வராதிருப்பதோ ஆடு மந்தையின் பாகமாக இனிமேலும் இல்லை என்று அர்த்தப்படுத்துவதில்லை. அவர் ‘மந்தை முழுவதின்’ பாகமாகத் தொடர்ந்து இருப்பதால், இவரைக்குறித்தும் மூப்பர்கள், யெகோவாவிற்கு ‘உத்தரவாதம் கொடுக்கவேண்டிய’ நிலையில் இருக்கிறார்கள்.
ஒரு மூப்பர் குழு, சபையில் கூடிவந்துகொண்டிருந்த சிலர் செயலற்ற நிலைக்கு இழுக்கப்பட்டுப் போய்விட்டதைக்குறித்து அதிக அக்கறையோடு இருந்தார்கள். இப்படிப்பட்டவர்களின் ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டது. மேலும் அவர்களைச் சந்தித்து, யெகோவாவின் ஆட்டுக்கொட்டிலிற்கு திரும்பிவரும்படி உதவிசெய்வதற்கு விசேஷித்த முயற்சிகள் எடுக்கப்பட்டன. இரண்டரை ஆண்டுக் காலத்தில், இந்த மூப்பர்கள் 30-க்கு மேற்பட்டவர்களுக்கு யெகோவாவின் ஊழியத்தில் மீண்டும் சுறுசுறுப்பாய் செயல்படும்படி உதவிசெய்ய முடிந்ததைக்குறித்து, கடவுளுக்கு எவ்வளவு நன்றியுணர்வோடு இருந்தார்கள். அவ்வாறு உதவியளிக்கப்பட்டவர்களில் ஒருவர் சுமார் 17 வருடமாக செயலற்ற நிலையில் இருந்தவர்!
‘[கடவுளுடைய] [சொந்தக் குமாரனின், NW] ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட’ ஆடுகள் என்ற உண்மை, கண்காணிகளின் பொறுப்புணர்ச்சியை இன்னுமதிகமாக்குகிறது. (அப்போஸ்தலர் 20:28) இந்த அருமையான ஆடுகளுக்கு ஈடாக எந்தவித உயர்வான விலையும் கொடுக்கப்படமுடியாது. மேலும் ஒவ்வொரு செம்மறியாட்டைப் போன்ற நபரைக் கண்டு, உதவிசெய்வதற்கு செலவழிக்கப்படும் எல்லா நேரத்தையும் முயற்சியையும் நினைத்துப்பாருங்கள்! அதேப்போன்ற முயற்சி கடவுளுடைய ஆட்டுக்கொட்டிலில் அவையனைத்தையும் வைத்திருப்பதற்கு எடுக்கப்படவேண்டுமல்லவா? நிச்சயமாகவே, சபையில் உள்ள ஒவ்வொரு ஆடும் அருமையானதுதான்.
மந்தையின் ஓர் அங்கத்தினர் வினைமையான ஒரு தவற்றில் ஈடுபடும்போதும், மூப்பரின் பொறுப்பு மாறுவதில்லை. தவறுசெய்தவரை ஆதாயப்படுத்திக்கொள்வதற்கு அவர்கள் தொடர்ந்து அக்கறைகாட்டும் மேய்ப்பர்களாகக் கனிவோடு, இரக்கத்தோடு முடிந்தவரை செயல்படவேண்டும். (கலாத்தியர் 6:1, 2) வருந்தத்தக்கவிதமாகவே, சில சந்தர்ப்பங்களில், சபையின் ஓர் அங்கத்தினர் தான் செய்த வினைமையான தவறுகளுக்குத் தேவபக்திக்குரிய மனவருந்துதலைக் காண்பிக்காமல் இருப்பது வெளிப்படையாகவே இருக்கலாம். அப்படியிருந்தால், அன்பான மேய்ப்பர்கள் மந்தையின் மீதிப்பகுதிப் பாதிக்கப்படாமல் இருக்கும்படிக் காத்துக்கொள்ளும் வேதப்பூர்வமான பொறுப்பை உடையவர்களாக இருக்கிறார்கள்.—1 கொரிந்தியர் 5:3-7, 11-13.
இருந்தபோதிலும், வழிதவறிப்போன ஆட்டிற்கு இரக்கத்தைக் காட்டுவதில் பரிபூரண முன்மாதிரியை யெகோவா தேவன் வைக்கிறார். நம்முடைய பரிவிரக்கமுள்ள மேய்ப்பர் பரிவிரக்கத்தோடு சொல்கிறார்: “நான் காணாமற்போனதைத்தேடி, துரத்துண்டதைத் திரும்பக் கொண்டுவந்து, எலும்பு முறிந்ததைக் காயங்கட்டி, நசல்கொண்டதைத் திடப்படுத்துவேன்.” (எசேக்கியேல் 34:15, 16; எரேமியா 31:10) இந்த மிக மேம்பட்ட மாதிரியைப் பின்பற்றும்படி, நவீன கால ஆவிக்குரிய மேய்ப்பர்கள் இவர்களுடைய உதவிக்கு இப்பொழுது பிரதிபலிக்கும் சபை நீக்கம் செய்யப்பட்டவர்களைப் போய்ப்பார்க்கும் ஓர் அன்பான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காணாமற்போன செம்மறியாடுகளை மீட்டுக்கொள்ளும் இந்த இரக்கமிக்க முயற்சிகள் நல்ல விளைவைக் கொடுத்திருக்கின்றன. திரும்ப நிலைநாட்டப்பட்ட ஒரு சகோதரி சொன்னார்: “மூப்பர்கள் பார்க்கவந்தபோது, நான் திரும்பி வருவதற்குத் தேவையான உற்சாகத்தை எனக்குக் கொடுத்தது.”
சந்தேகமில்லாமலே, மிலேத்துவில் எபேசு மூப்பர்களுக்கு பவுலின் வார்த்தைகள் அர்த்தம்நிறைந்தவையாய் இருந்தன—அவர்களுக்கும், இன்றுள்ள கண்காணிகளுக்கும். மேய்ப்பர்கள் என்று அவர் குறிப்பிட்டது, கண்காணிகளில் காணப்படவேண்டிய நல்ல பண்புகளை ஞாபகத்திற்கு கொண்டுவருவதாக இருந்தது—மேய்ப்ப-ராஜாவாகிய தாவீதால் முன்மாதிரியாக காட்டப்பட்ட மனத்தாழ்மை, தைரியம்; யாக்கோபின் 24-மணி நேர ஊழியத்தினால் வெளிப்படுத்தப்பட்ட தனிப்பட்ட பொறுப்புணர்வு, பாதுகாக்கும் பராமரிப்பு; மோசேயினால் காட்டப்பட்ட இன்னுமதிகமான பயிற்றுவிப்பை ஏற்கும் விருப்பமான மனநிலை போன்ற பண்புகள். சபை மூப்பர்கள் கனிவோடு, ‘தேவன் தம்முடைய [சொந்தக் குமாரனின், NW] ரத்தத்தினாலே சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு’ உண்மையில் இந்தப் பைபிள் முன்மாதிரிகள் அவர்களுக்குத் தேவையான பண்புகளை வளர்க்கவும் காட்டவும் உதவிசெய்யும்.