ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
“ஞானத்தைக் கண்டடைந்திருக்கிற மனிதன் மகிழ்ச்சியுள்ளவன்”
இப்பொழுது 71,000-ற்கும் மேற்பட்ட மகிழ்ச்சியுள்ள யெகோவாவின் சாட்சிகள் இருக்கும் கொரியாவில் இந்த நீதிமொழி உண்மையாக நிரூபித்திருக்கிறது. (நீதிமொழிகள் 3:13, NW) இந்த ஊழியர்களில் 42 சதவீதத்தினர் முழுநேர ஊழியத்தில் இருப்பதைக் கற்பனை செய்துபாருங்கள்! மகிழ்ச்சி, உண்மையான ஞானத்தைத் தேடுபவர்களின் பங்காக இருக்கிறது என்பதைப் பின்வரும் அனுபவங்கள் காண்பிக்கும்.
பூஸானிலுள்ள ஒரு பெண், 16 வருடங்களாக கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளில் ஒன்றிற்குச் சென்றுவந்தாள். அவள் எத்தனையோ வேதப்பூர்வமற்றப் பழக்கங்களைக் கவனித்திருந்ததால், கடவுள் ஒருவர் இருக்கமுடியாது என்று அவள் நினைக்க ஆரம்பித்தாள். மறுபட்சத்தில், கடவுள் இருக்கிறார் என்பதையும் அவளால் மறுக்கமுடியவில்லை; ஆகவே, உண்மையான சர்ச் என்று ஒன்று இருந்தால் அதைக் கண்டடையும்படி கடவுளிடம் உண்மையாக ஜெபித்தாள். அத்தருணத்தில், அவள் திடீரென்று யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி நினைத்தாள்; அவளுடைய சர்ச் அவர்களை இகழ்ந்தது என்றும் திரித்துவம், எரிநரகம், இன்னும் கிறிஸ்தவமண்டலத்தின் மற்றக் கோட்பாடுகளைச் சாட்சிகள் நம்பாததன் காரணமாக, அவர்களுக்கு எதிராகச் சர்ச்செல்பவர்களை எச்சரித்தது என்றும் நினைவுகூர்ந்தாள். ஒருவேளை அவர்கள்தான் உண்மையான சர்ச்சா? ஓர் அயலாரின் உதவியுடன், ராஜ்ய மன்றம் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தாள். அதற்கடுத்த நாள், அவள் ஒரு கூட்டத்திற்குச் சென்றாள்.
கூட்டத்தின் ஒழுங்கைக் கண்டு அவள் வியப்படைந்தாள். அவளுடைய சர்ச்சில் இருந்ததைப்போன்ற வெறித்தனமான சத்தமோ உணர்ச்சிமிக்க பாடலோ அங்கு இருக்கவில்லை. அவளோடு பைபிளைப் படிக்க விருப்பமுள்ளவளாய் இருந்த ஒரு சாட்சியிடம் அவள் அறிமுகப்படுத்தப்பட்டாள்; அவளுடைய பல கேள்விகள் காரணமாக முதல் படிப்புப் பல மணிநேரங்களுக்கு நீடித்திருந்தது. இரண்டாம் படிப்பில், அவள் தன்னுடைய சர்ச்சிலிருந்து விலகி, ஒரு சாட்சியாவதாக அறிவித்தாள். அவள் வெறுமனே கூட்டங்களுக்கு வரமுடிவதால், இனிமேலும் படிப்பிற்குத் தேவை இல்லையென அந்தச் சகோதரியிடம் சொன்னாள். இருப்பினும், கூட்டங்களுக்குச் செல்வதோடுகூட ஒரு தனிப்பட்ட பைபிள் படிப்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் அவளுக்குக் காண்பிக்கப்பட்டது. அவள் அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு, தன்னுடைய படிப்புகளுக்குத் தன்னைப் பொருத்தி, குறித்த காலத்தில் முழுக்காட்டப்பட்டாள்.
உண்மையான கடவுளாகிய யெகோவாவைப்பற்றிய ஞானத்தைக் கண்டடைந்ததால், இப்போது அவள் மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறாள்; கடவுளுடைய புதிய உலகில் என்றும் வாழக்கூடிய நம்பிக்கையையும் கொண்டிருக்கிறாள்.
ஓய்வுபெற்ற தளபதி சத்தியத்தைக் கற்கிறார்
ஒரு படைத் தளபதியின் மனைவி 1962-ல் முழுக்காட்டப்பட்டாள். முதலில் அவளுடைய கணவன் அவளை எதிர்த்தார், ஆனால் பின்னர் எதிர்ப்பதை நிறுத்திவிட்டார்; அடுத்த 28 வருடங்களுக்கு, அவருக்குச் சத்தியத்தில் ஆர்வத்தைத் தூண்ட முயன்று, இடையிடையே பல்வேறு சகோதரர்கள், அவருடன் படித்தனர். அவர் சில கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் சென்றார், ஆனால் சத்தியத்தை முக்கியமாக எடுத்துக்கொள்வதிலிருந்து விலகுபவர்களில் ஒருவராக அவர் இருந்தார். அவரும் அவரது மனைவியும் 1990-ல் ஜப்பானுக்குச் சென்றிருந்தனர்; அங்கு மாவட்ட மாநாட்டுக்கு ஆஜராய் இருந்தனர். இந்த முறை, அவர் பேச்சுகளுக்குக் கூர்ந்த கவனம் செலுத்தினார்—அவர் முன் ஒருபோதும் செய்திராத காரியம் இது. பொய் மதத்தை அம்பலப்படுத்தும் தைரியமான பேச்சுக்களைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்; ஆனால் இவை உண்மையில் கிறிஸ்தவமண்டலத்தின் மாய்மாலத்திற்கு அவருடைய கண்களைத் திறந்தன. ஜப்பானில் கடவுளுடைய மக்களின் ஒழுங்கும் மகிழ்ச்சியும் அவர் மனதில் பதிந்தது; அது கொரியாவில் அவர் பார்த்திருந்ததைப்போலவே இருந்தது. கொரியாவுக்குத் திரும்பியதும், அவர் ஒரு கவனமான பைபிள் படிப்பை ஆரம்பித்து, முடிவில் முழுக்காட்டப்பட்டார்.
ஆக, அவர் முழுக்காட்டப்பட்டப்பின் என்ன செய்யவேண்டும்? ஒரு பேர்பெற்ற பயணிகள் ஹோட்டலின் தலைவர் பதவியை விட்டுவிலகி முழுநேர ஊழியத்தில் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்துகொண்டார். பின்வாங்கிக்கொண்டிருந்ததால், 28 வருடங்கள் இழந்ததைச் சரியீடு செய்வதற்கு மிகச் சிறந்த வழி ஓர் ஒழுங்கான பயனியராக இருப்பதே என்று அவர் நினைக்கிறார்.
“ஞானத்தைக் கண்டடைந்திருக்கிற மனிதன் மகிழ்ச்சியுள்ளவன்” என்ற நீதிமொழி தனக்கும் பொருந்துகிறது என்பதை அவர் இப்போது உணருகிறார்!