கர்த்தருடைய இராப்போஜனம் அது எவ்வளவு அடிக்கடி ஆசரிக்கப்படவேண்டும்?
கிறிஸ்மஸ், ஈஸ்டர், “புனிதர்” தினங்கள். பல விடுமுறை நாட்களும் விழாக்களும் கிறிஸ்தவமண்டல சர்ச்சுகளால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இயேசு கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்கள் எத்தனை கொண்டாட்டங்களை ஆசரிக்கும்படி கட்டளையிட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? பதில் என்னவென்றால், ஒன்றை மட்டுமே! மற்ற விழாக்கள் எதுவும் கிறிஸ்தவத்தை நிறுவியவரால் அதிகாரம் பெற்றவையாய் இருக்கவில்லை.
தெளிவாகவே, இயேசு ஒரே ஓர் ஆசரிப்பை நிறுவியிருந்தால், அது மிக முக்கியமானதாய் இருக்கிறது. சரியாக, இயேசு கட்டளையிட்டவிதமாகவே கிறிஸ்தவர்கள் அதை ஆசரிக்கவேண்டும். இந்தத் தனித்தன்மை வாய்ந்த ஆசரிப்பு என்னவாக இருந்தது?
அந்த ஓர் ஆசரிப்பு
இயேசு மரணமடைந்த நாளன்று, அவரால் இந்த ஆசரிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அவர் யூத பண்டிகையாகிய பஸ்காவை தம்முடைய அப்போஸ்தலருடன் கொண்டாடியிருந்தார். பின்னர் இவ்வாறு சொல்லிக்கொண்டு பஸ்காவின் புளிப்பில்லாத அப்பங்களில் சிலவற்றை அவர்களுக்கு எடுத்துக் கொடுத்தார்: “இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமாயிருக்கிறது.” பின்னர், இயேசு இவ்வாறு சொல்லிக்கொண்டு திராட்சரச பாத்திரத்தை எடுத்துக்கொடுத்தார்: “இந்தப் பாத்திரம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாயிருக்கிறது.” “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்றும் அவர் சொன்னார். (லூக்கா 22:19, 20; 1 கொரிந்தியர் 11:24-26) இந்த ஆசரிப்பே கர்த்தருடைய இராப்போஜனம், அல்லது நினைவு ஆசரிப்பு என்று அழைக்கப்படுகிறது. இயேசு தம்மைப் பின்பற்றுபவர்கள் ஆசரிக்கும்படி கட்டளையிட்ட ஒரே ஆசரிப்பு இதுவே.
தங்களுடைய மற்ற எல்லா விழாக்களுடனும் சேர்த்து இந்த ஆசரிப்பையும் நடத்துவதாக அநேக சர்ச்சுகள் உரிமைபாராட்டுகின்றன; ஆனால் பெரும்பான்மையானவை இயேசு கட்டளையிட்டதிலிருந்து வேறுபட்ட முறையிலே அதைக் கொண்டாடுகின்றன. ஒருவேளை, அந்த ஆசரிப்பின் அடிக்கடி நிகழும் தன்மை மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடாக இருக்கிறது. சில சர்ச்சுகள் அதை மாதந்தோறும், வாரந்தோறும், அல்லது தினந்தோறும்கூட ஆசரிக்கின்றன. “என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்,” என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களிடம் சொன்னபோது, அவர் இதைத்தான் கருதினாரா? தி நியூ இங்கிலிஷ் பைபிள் சொல்லுகிறது: “என்னை நினைவுகூரும் ஓர் ஆசரிப்பாக இதைச் செய்யுங்கள்.” (1 கொரிந்தியர் 11:24, 25) ஒரு நினைவு ஆசரிப்பு அல்லது ஓர் ஆண்டு நிறைவுநாள் எவ்வளவு அடிக்கடி ஆசரிக்கப்படுகிறது? வழக்கமாக, வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே.
யூத நாட்காட்டியில் நிசான் 14-ம் தேதி அன்று,a இயேசு இந்த ஆசரிப்பைத் தொடங்கிவைத்துவிட்டு, பின்னர் மரித்தார். அதுவே, பொ.ச.மு. 16-ம் நூற்றாண்டில் யூதர்கள் எகிப்தில் பெரிய விடுதலையை அனுபவித்திருந்ததை அவர்களுக்கு நினைப்பூட்டுகிற ஒரு பண்டிகையான பஸ்காவின் நாளாக இருந்தது. அந்தச் சமயத்தில், ஓர் ஆட்டைப் பலிசெலுத்தியது யூத முதற்பேறானவற்றின் இரட்சிப்பில் விளைவடைந்தது; அதற்கு மாறாக, எகிப்தின் முதற்பேறனைத்தையும் யெகோவாவின் தூதர் கொன்று போட்டார்.—யாத்திராகமம் 12:21, 24-27.
இது நம்முடைய புரிந்துகொள்ளுதலுக்கு எப்படி உதவி செய்கிறது? கிறிஸ்தவ அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.” (1 கொரிந்தியர் 5:7) இயேசுவின் மரணம், அதைவிட அதிக மகத்தான இரட்சிப்பிற்கான வாய்ப்பை மனிதவர்க்கத்திற்குக் கொடுக்கிற அதைவிட பெரிய பஸ்கா பலியாக இருந்தது. ஆகையால், கிறிஸ்தவர்களுக்கு, கிறிஸ்துவுடைய மரணத்தின் நினைவு ஆசரிப்பு யூத பஸ்காவை மாற்றீடு செய்திருக்கிறது.—யோவான் 3:16.
பஸ்கா ஒரு வருடாந்தர கொண்டாட்டமாக இருந்தது. அப்படியென்றால், நியாயமாகவே, நினைவு ஆசரிப்பும் அவ்வாறே இருக்கிறது. பஸ்கா—இயேசு மரித்த அந்த நாள்—எப்போதும் யூத மாதமாகிய நிசான் 14-ம் நாள் நிகழ்ந்தது. எனவே, நாட்காட்டியில் நிசான் 14-க்கு ஒத்திருக்கும் நாளில் வருடத்திற்கு ஒரு முறை கிறிஸ்துவின் மரணம் நினைவு ஆசரிப்பு செய்யப்படவேண்டும். 1994-ல், அந்த நாள், சனிக்கிழமை, மார்ச் 26, சூரிய அஸ்தமனத்திற்குப்பின் இருக்கிறது. இருந்தாலும், கிறிஸ்தவமண்டலத்தின் சர்ச்சுகள் இதை விசேஷித்த ஆசரிப்பிற்குரிய ஒரு நாளாக ஏன் வைக்கவில்லை? வரலாற்றை சற்று நோக்குவது அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும்.
அப்போஸ்தல வழக்கம் அபாயத்தில்
பொ.ச. முதல் நூற்றாண்டின்போது, இயேசுவின் அப்போஸ்தலரால் வழிகாட்டப்பட்டவர்கள் சரியாக அவரால் கட்டளையிடப்பட்டிருந்தபடியே கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரித்தனர் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை. எனினும், இரண்டாம் நூற்றாண்டின்போது, அது நினைவுகூரப்படவேண்டிய சமயத்தை சிலர் மாற்ற ஆரம்பித்தனர். அவர்கள் அந்த நினைவு ஆசரிப்பை, நிசான் 14-உடன் ஒத்திருக்கும் நாளில் வைக்காமல், அந்த வாரத்தின் முதல் நாளில் (இப்போது ஞாயிற்றுக்கிழமை என்று அழைக்கப்படும் நாளில்) நடத்தினர். அது ஏன் செய்யப்பட்டது?
யூதர்களுக்கு, ஒரு நாள் என்பது மாலை சுமார் ஆறு மணிக்குத் துவங்கி மறுநாள் அதேநேரம் வரையாக நீடித்தது. இயேசு பொ.ச. 33, நிசான் 14-ல் மரணமடைந்தார்; அது வியாழக்கிழமை மாலையிலிருந்து வெள்ளிக்கிழமை மாலை வரை நீடித்தது. அவர் மூன்றாம் நாளில், ஞாயிற்றுக்கிழமை விடியற்காலையில் உயிர்த்தெழுப்பப்பட்டார். நிசான் 14 எந்த நாளில் வருகிறதோ அதற்குப் பதிலாக, ஒவ்வொரு வருடமும் வாரத்தின் குறிப்பிட்ட நாளில் இயேசுவின் மரண நினைவுகூருதல் ஆசரிக்கப்படவேண்டும் என்று சிலர் விரும்பினர். இயேசுவின் மரண நாளைவிட அவருடைய உயிர்த்தெழுதல் நாள் அதிக முக்கியமானது என்றும் அவர்கள் கருதினர். ஆகவே, அவர்கள் ஞாயிற்றுக்கிழமையைத் தேர்ந்தெடுத்தனர்.
தம்முடைய உயிர்த்தெழுதல் அல்ல, தம்முடைய மரணமே நினைவுகூரப்படவேண்டும் என்று இயேசு கட்டளையிட்டார். மேலும், நாம் இப்போது பயன்படுத்தும் கிரிகோரியன் நாட்காட்டியின்படி, ஒவ்வொரு வருடமும் யூத பஸ்கா ஒரு வித்தியாசமான நாளில் வருவதால், இயல்பாக, அந்த நினைவு ஆசரிப்பைக் குறித்ததிலும் அதுவே உண்மையானதாக இருக்கும். ஆகவே அநேகர் ஆரம்ப ஏற்பாட்டைப் பற்றிக்கொண்டிருந்து, ஒவ்வொரு வருடமும் நிசான் 14 அன்று கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரித்தனர். காலப்போக்கில், அவர்கள் “பதினான்கவர்கள்” என்று அர்த்தங்கொள்ளும் குவார்டோடெசமன்கள் என அழைக்கப்படலாயினர்.
இந்த “பதினான்கவர்கள்” ஆரம்ப அப்போஸ்தல மாதிரியைப் பின்பற்றுகிறவர்களாய் இருந்தனர் என்று சில அறிஞர்கள் ஒத்துக்கொண்டனர். ஒரு சரித்திராசிரியர் சொன்னார்: “பஸ்காவை [கர்த்தருடைய இராப்போஜனத்தை] ஆசரிப்பதற்கான நாளைக் குறித்ததில், ஆசியாவிலுள்ள குவார்டோடெசமன் சர்ச்சுகளுடைய வழக்கம் எருசலேமின் சர்ச்சுடையதோடு ஒத்திருந்தது. 2-ம் நூற்றாண்டில் இந்தச் சர்ச்சுகள், நிசான் 14 அன்று தங்கள் பஸ்காவில், இயேசுவின் மரணத்தால் கூடியதாக்கப்பட்ட மீட்பை நினைவுகூர்ந்து ஆசரித்தனர்.”—ஸ்டடியா பேட்ரிஸ்டிகா, தொகுதி V, 1962, பக்கம் 8.
ஒரு கருத்து வேறுபாடு வளர்கிறது
சின்ன ஆசியாவிலுள்ள அநேகர் அப்போஸ்தல பழக்கத்தைப் பின்பற்றிக்கொண்டிருக்கையில், ரோமில் ஞாயிற்றுக்கிழமை ஆசரிப்பிற்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சுமார் பொ.ச. 155-ம் வருடத்தில், ஆசிய சபைகளின் பிரதிநிதியாகிய சிமிர்னாவைச் சேர்ந்த பாலிகார்ப், இதையும் மற்ற பிரச்னைகளையும் கலந்தாலோசிக்க ரோமிற்குச் சென்றார். வருத்தகரமாக, இந்த விஷயத்தைக் குறித்ததில் எந்த ஒருமித்த முடிவும் எடுக்கப்படவில்லை.
லியன்ஸை சேர்ந்த ஐரினீயஸ் ஒரு கடிதம் எழுதினார்: “நம்முடைய கர்த்தரின் சீஷனாகிய யோவானுடனும் அவர் கூட்டுறவு கொண்டிருந்த மற்ற அப்போஸ்தலருடனும் எப்போதும் ஆசரித்திருந்ததை பாலிகார்ப் அனுசரிக்காமல் இருக்கும்படி [ரோமைச் சேர்ந்த] அனசீடஸால் இணங்க வைக்கவும் முடியவில்லை; அதுவரையிலும் அனசீடஸ் அதை ஆசரிக்கும்படி பாலிகார்ப் இணங்க வைக்கவுமில்லை, ஏனென்றால், தனக்கு முன்பிருந்த மூப்பர்களின் பழக்கத்தைத் தான் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவர் சொன்னார்.” (யுசீபியஸ், புத்தகம் 5, அதிகாரம் 24) பாலிகார்ப் தன்னுடைய நிலைநிற்கையை அப்போஸ்தலருடைய அதிகாரத்தின் அடிப்படையில் வைத்திருக்கையில், அனசீடஸ் ரோமிலிருந்த முந்தின மூப்பர்களின் வழக்கத்தை ஏற்றிருந்ததாக தெரிகிறது என்பதைக் கவனியுங்கள்.
பொ.ச. இரண்டாம் நூற்றாண்டின் இறுதியினிடமாக இந்தக் கருத்து வேறுபாடு தீவிரமானது. சுமார் பொ.ச. 190-ல், விக்டர் எனப்பட்ட ஒருவர் ரோமின் பிஷப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்த்தருடைய இராப்போஜனம் ஞாயிற்றுக்கிழமையில் ஆசரிக்கப்படவேண்டும் என்று அவர் நம்பினார்; மேலும் முடிந்தளவிற்கு மற்றுமநேக தலைவர்களின் ஆதரவை நாடினார். ஞாயிற்றுக்கிழமை ஏற்பாட்டிற்கு மாற்றும்படி ஆசிய சபைகளை விக்டர் வற்புறுத்தினார்.
சின்ன ஆசியாவிலிருந்தவர்களின் சார்பில் பதிலளிப்பவராய், எபேசுவைச் சேர்ந்த பலிக்ரடிஸ் இந்த வற்புறுத்தலுக்கு இணங்க மறுத்தார். அவர் சொன்னார்: “இடைபுகும் மாற்றங்களை அனுமதிக்காமல் நாங்கள் அந்த நாளை ஆசரிக்கிறோம்; அதில் கூட்டுகிறதுமில்லை, கழிக்கிறதுமில்லை.” பின்னர் அவர் அப்போஸ்தலன் யோவான் உட்பட அநேக ஆதாரங்களைப் பட்டியலிட்டார். “இவர்கள் அனைவரும், சுவிசேஷத்தின்படி பஸ்காவை பதினான்காம் நாளில் ஆசரித்தனர்; எவ்விதத்திலும் அதிலிருந்து விலகிச்செல்லவில்லை.” பலிக்ரடிஸ் மேலும் சொன்னார்: “சகோதரரே, என்னுடைய பாகத்தில் நான், . . . அச்சுறுத்தல்களால் திகிலூட்டப்படுவது இல்லை. ஏனென்றால் என்னைவிட மேம்பட்டவர்கள், மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது என்று சொல்லியிருக்கின்றனர்.”—யுசீபியஸ், புத்தகம் 5, அதிகாரம் 24.
இந்தப் பதில் விக்டருக்கு வெறுப்பூட்டுவதாய் இருந்தது. அவர் “எல்லா ஆசிய சர்ச்சுகளையும் திருச்சபைத் தொடர்புரிமை நீக்கம் செய்து, தன்னைப்போன்ற கருத்தைக் கொண்டிருந்த எல்லா சர்ச்சுகளும் அவர்களுடன் எந்த வழிபாட்டுக் கூட்டுறவையும் வைக்கக்கூடாதென தன் சுற்றறிக்கை கடிதங்களை அவற்றிற்கு அனுப்பினார் என்று ஒரு சரித்திர பதிவு சொல்கிறது.” என்றபோதிலும், “அவருடைய இந்த அவசர மற்றும் தைரியமான நடவடிக்கை, அவருடைய சார்பாக இருந்த எல்லா ஞானமுள்ள, மெய்யார்வமுள்ள ஆட்களாலும் நல்லவிதத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை; அன்பு, ஒற்றுமை, மற்றும் சமாதானத்தைக் காத்துக்கொள்ளும்படி . . . அவருக்கு ஆலோசனை கூறி, அவர்களில் பலர் அவருக்குக் கடுமையாக எழுதினார்கள்.”—பிங்ஹாம்ஸின் அன்டிகுவிட்டீஸ் ஆஃப் தி கிறிஸ்டியன் சர்ச், புத்தகம் 20, அதிகாரம் 5.
விசுவாசத்துரோகம் அமைப்புமுறையாக்கப்பட்டது
அப்படிப்பட்ட எதிர்ப்புகள் இருந்தபோதிலும், கர்த்தருடைய இராப்போஜனத்தை எப்போது ஆசரிப்பது என்பதைப்பற்றிய விவாதத்தில் சின்ன ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் அதிகப்படியாக தனிப்பட்டவர்களானார்கள். மற்ற இடங்களிலும் வேறுபாடுகள் நுழைந்திருந்தன. சிலர் நிசான் 14 முதல் பின்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையான முழு காலப்பகுதியையும் ஆசரித்தனர். மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மிக அடிக்கடி—வாராந்தரமாக ஞாயிற்றுக்கிழமையில்—நடத்திக்கொண்டு வந்தனர்.
பொ.ச. 314-ல் ஆர்லின் (பிரான்ஸ்) மன்றம் அந்த ரோம ஏற்பாட்டை வற்புறுத்தவும் மற்ற எந்த மாற்று யோசனையையும் கீழடக்கவும் முயன்றது. மீதியிருந்த குவார்டோடெசமன்கள் ஒத்துப்போக மறுத்தனர். இதையும் தன்னுடைய பேரரசில் கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டியவர்களைப் பிரித்துக்கொண்டிருந்த மற்ற காரியங்களையும் தீர்ப்பதற்காக புறமத ஆட்சியாளராகிய கான்ஸ்டன்டைன் பொ.ச. 325-ல் நைசியாவின் மன்றம் என்ற ஒரு திருச்சபை சார்ந்த அவையைக் கூட்டினான். அது ரோம வழக்கத்திற்கு ஒத்திசைந்து செல்லும்படி சின்ன ஆசியாவிலுள்ள அனைவருக்கும் கட்டளையிடும் ஓர் ஆணையைப் பிறப்பித்தது.
கிறிஸ்துவின் மரண நினைவு ஆசரிப்பை யூத நாட்காட்டி தேதியின்படி ஆசரிப்பதை விட்டுவிடுவதற்காகக் கொடுக்கப்பட்ட முக்கியமான தர்க்கங்களில் ஒன்றைக் கவனிப்பது அக்கறைக்குரியதாக இருக்கிறது. K J. ஹேஃபலாவின் கிறிஸ்தவ மன்றங்களின் ஒரு சரித்திரம் (A History of the Christian Councils) குறிப்பிடுகிறது: “மிகவும் அச்சுறுத்தும் குற்றச்செயல்களால் தங்கள் கைகளைக் கறைப்படுத்தியிருந்த, தங்கள் மனங்கள் குருடாக்கப்பட்டிருந்த யூதர்களின் பழக்கத்தை (கணக்கிடுதலை) பின்பற்றுவது, பண்டிகைகளிலேயே மிகவும் புனிதமான இதற்கு குறிப்பாக தகுதியற்றதாய் இருக்கிறது என்று அறிவிக்கப்பட்டது.” (தொகுதி 1, பக்கம் 322) அப்படிப்பட்ட ஒரு நிலையில் இருப்பது, “சர்ச்சுக்கு வெறுப்பூட்டின யூத ஜெப ஆலயத்திற்கு ‘தாழ்வுபடுத்துகிற கீழ்ப்படிதலாக’” கருதப்பட்டது என்று J. ஜஸ்டர் சொல்வது, ஸ்டடியா பேட்ரிஸ்டிகா, தொகுதி IV, 1961, பக்கம் 412-ல் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
அது யூதப்பகைமை! இயேசு மரணமடைந்த அதே நாளில் அதை ஆசரித்தவர்கள் யூத பழக்கங்களைக் கடைப்பிடித்தவர்களாகக் கருதப்பட்டனர். இயேசுதாமே ஒரு யூதனாக இருந்தார் என்பதும், அப்போது தம்முடைய உயிரை மனிதவர்க்கத்திற்காக அளிப்பதன்மூலம் அந்த நாளுக்கு அதன் அர்த்தத்தைக் கொடுத்திருந்தார் என்பதும் மறக்கப்பட்டது. அப்போதிருந்து, குவார்டோடெசமன்கள் திருச்சபைக்கு முரணான கோட்பாடுடையவர்கள் என்றும் உட்பிரிவினை ஆதரிப்பவர்கள் என்றும் கண்டனம் செய்யப்பட்டு, துன்புறுத்தப்பட்டனர். அவர்கள் திருச்சபையிலிருந்து நீக்கப்படவேண்டும் என்பதாக பொ.ச. 341-ல் அந்தியோகியாவின் மன்றம் ஆணை பிறப்பித்தது. இருந்தபோதிலும், பொ.ச. 400-ல் அவர்களில் அநேகர் இன்னும் இருந்தனர்; அதற்குப்பின் நெடுங்காலத்திற்கு அவர்கள் சிறிய எண்ணிக்கைகளில் தொடர்ந்து இருந்தனர்.
அப்போது முதற்கொண்டு, கிறிஸ்தவமண்டலம் இயேசுவின் ஆரம்ப ஏற்பாட்டிற்குத் திரும்பிவர தவறியிருக்கிறது. பேராசிரியர் உவில்லியம் ப்ரைட் ஒத்துக்கொண்டார்: “இயேசுவின் பாடனுபவிப்புகளை நினைவுகூருவதற்கென்றே ஒரு விசேஷித்த நாள், பெரிய வெள்ளி, ஒதுக்கிவைக்கப்பட ஆரம்பிக்கப்பட்டபோது, பலிக்குரிய மரணத்துடன் புனித பவுல் தொடர்புபடுத்தி வைத்திருந்த அதோடுள்ள ‘பஸ்காவின்’ தொடர்புகளை கட்டுப்படுத்தி வைப்பதற்கு அது மிக தாமதமான காலமாக இருந்தது: அவை உயிர்த்தெழுதல் பண்டிகைக்குத்தானே பரவலாக பொருத்தப்பட்டிருந்தன; கிரேக்கு மற்றும் லத்தீன் கிறிஸ்தவமண்டலத்தின் சடங்காச்சார மொழிநடையில் கருத்துக்களின் வேறுபாடு ஒன்று தன்னைத்தானே நிலைநாட்டிக்கொண்டது.”—தி ஏஜ் ஆஃப் தி ஃபாதர்ஸ், தொகுதி 1, பக்கம் 102.
இன்றைய நாளைக் குறித்து என்ன?
‘இந்த எல்லா வருடங்களுக்கும் பின்பு, நினைவு ஆசரிப்பு எப்போது ஆசரிக்கப்படுகிறது என்பது உண்மையில் முக்கியமானதா?’ என்று நீங்கள் கேட்கக்கூடும். ஆம், முக்கியமானதே. அதிகாரத்தைப் பெற போராடிக்கொண்டிருந்த வன்னெஞ்சமுடைய ஆட்களால் மாற்றங்கள் செய்யப்பட்டன. இயேசு கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக மக்கள் தங்கள் சொந்த கருத்துக்களைப் பின்பற்றினர். அப்போஸ்தலன் பவுலின் இந்த எச்சரிப்பு தெளிவாக நிறைவேற்றமடைந்தது: “நான் போனபின்பு மந்தையைத் தப்பவிடாத கொடிதான ஓநாய்கள் உங்களுக்குள்ளே [கிறிஸ்தவர்களுக்குள்ளே] வரும். உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.”—அப்போஸ்தலர் 20:29, 30.
கீழ்ப்படிதலே இப்போது விவாதத்திற்கு உட்பட்டதாய் இருக்கிறது. கிறிஸ்தவர்கள் ஆசரிப்பதற்கு இயேசு ஓர் ஆசரிப்பை மட்டுமே நிறுவினார். அது எப்போது, எப்படி ஆசரிக்கப்படவேண்டும் என்று பைபிள் தெளிவாக விவரிக்கிறது. அப்படியானால் அதை மாற்றும் உரிமை யாருக்கு இருக்கிறது? இந்த விஷயத்தில் இணங்கிச் செல்வதற்கு மாறாக, துன்புறுத்தலுக்கும் திருச்சபை நீக்கத்திற்கும் ஆரம்பகால குவார்டோடெசமன்கள் உட்பட்டனர்.
இயேசுவின் விருப்பங்களை மதித்து அவருடைய மரணத்தை அவர் நிறுவிய தேதியில் ஆசரிக்கும் கிறிஸ்தவர்கள் இன்னும் பூமியில் இருக்கிறார்கள் என்று அறிய நீங்கள் ஆவலாய் இருக்கக்கூடும். இந்த வருடம், உலகெங்கும் யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய ராஜ்ய மன்றங்களில் சனிக்கிழமை, மார்ச் 26 அன்று மாலை 6:00 மணிக்குப்பின்—அதாவது நிசான் 14-ம் நாள் துவங்குகையில்—ஒன்றுகூடுவார்கள். அப்போது அவர்கள், மிகவும் அர்த்தமுள்ள இந்தச் சமயத்தில் செய்யப்படவேண்டும் என்று இயேசு சொன்னவற்றைச் சரியாகச் செய்வார்கள். அவர்களுடன் சேர்ந்து ஏன் கர்த்தருடைய இராப்போஜனத்தை ஆசரிக்கக்கூடாது? அங்கு வந்திருப்பதன்மூலம், நீங்களும் இயேசு கிறிஸ்துவின் விருப்பங்களுக்கு உங்களுடைய மதிப்பைக் காண்பிக்கலாம்.
[அடிக்குறிப்புகள்]
a யூத வருடத்தின் முதல் மாதமாகிய நிசான், முதல் பிறைநிலாவின் தோற்றத்துடன் தொடங்கியது. இவ்வாறு நிசான் 14 எப்போதும் முழு நிலவின் நாளில் அமைந்தது.
[பக்கம் 6-ன் பெட்டி]
“அந்த அருமையான மீட்பின் கிரயம்”
இயேசு கிறிஸ்துவினுடைய மீட்பின் கிரயபலி ஒரு கோட்பாட்டைவிட மிக அதிகத்தை உட்படுத்துகிறது. இயேசு தம்மைப்பற்றி சொன்னார்: “மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மாற்கு 10:45) அவர் இவ்வாறும் விளக்கினார்: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் [மனிதவர்க்க] உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (யோவான் 3:16) மரித்தவர்களுக்கு, அந்த மீட்பின் கிரயம் உயிர்த்தெழுதலுக்கான வழியைத் திறந்து, நித்திய ஜீவனுக்கான எதிர்நோக்கை அளிக்கிறது.—யோவான் 5:28, 29.
கர்த்தருடைய இராப்போஜனத்தின் ஆசரிப்புகளில், அடிப்படையான முக்கியத்துவம் வாய்ந்த இயேசு கிறிஸ்துவின் மரணம் நினைவுகூரப்படுகிறது. அவருடைய பலி அவ்வளவு காரியங்களை நிறைவேற்றுகிறது! தேவ பக்தியுள்ள பெற்றோரால் பயிற்றுவிக்கப்பட்டு, பல பத்தாண்டுகளாக கடவுளின் சத்தியத்தில் நடந்திருக்கிற ஒரு பெண் தன் நன்றியுணர்ச்சியை இந்த வார்த்தைகளால் வெளிக்காட்டினாள்:
“நாங்கள் நினைவு ஆசரிப்பை எதிர்நோக்கி இருக்கிறோம். அது ஒவ்வொரு வருடமும் அதிக விசேஷித்ததாகிறது. 20 வருடங்களுக்கு முன்பு, சவ அடக்கத்திற்கான ஏற்பாடுகள் செய்யும் அறையில், என் அருமை அப்பாவை பார்த்துக்கொண்டு நின்று, மீட்பின் கிரயத்திற்கு உண்மையான இருதயப்பூர்வ போற்றுதலை உணர்ந்ததை நான் நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அது வெறும் தலை அறிவிற்குரிய ஒன்றாக இருந்தது. ஓ, எல்லா வேதவசனங்களையும், அவற்றை எப்படி விளக்குவதென்றும் நான் அறிந்திருந்தேன்! ஆனால் மரணத்தின் அந்தக் கடுமையான உண்மையை அனுபவித்தபோதுதானே, அந்த அருமையான மீட்பின் கிரயத்தால் நமக்கு என்ன நிறைவேற்றப்படும் என்பதைக்குறித்து என்னுடைய இருதயம் மிகுந்த சந்தோஷத்தில் பூரித்தது.”