பிரிவினை நிறைந்த சர்ச்—அது நீடித்திருக்க முடியுமா?
“கிறிஸ்துவின் இரட்சிக்கும் சத்தியத்தைப் பற்றிக்கொள்கிற யாவரும் காணக்கூடிய சர்ச்சை சேர்ந்தவர்கள். கீழை ஆர்த்தடாக்ஸுக்கும் மேலை ஆர்த்தடாக்ஸுக்கும், ரோமுக்கும் ரிஃபர்மேஷன் சர்ச்சுகளுக்கும் இடையே உள்ள கிறிஸ்தவமண்டல பிரிவினைகள் ஒரே சர்ச்சிலிருக்கும் பிரிவினைகளாகும்.” (ஒருமித்திருக்கும் கிறிஸ்தவர்கள் [Christians in Communion]) அப்படியாகத்தான் ஓர் ஆசிரியர் கிறிஸ்தவத்தைக் கருதுகிறார்—பெரிதும் சிதறடிக்கப்பட்ட மதங்களடங்கிய குடும்பமாக, யாவரும் இயேசு கிறிஸ்துவை ஏதோவொரு வகையில் விசுவாசிப்பதாக உரிமைபாராட்டுகின்றனர்.
என்றாலும், அது முரண்படும் கொள்கைகளையும் ஒழுக்கத் தராதரங்களையும் கொண்ட பிரிவினை நிறைந்த ஒரு குடும்பமாக இருக்கிறது. “தற்கால கிறிஸ்தவம் . . . பஸ்ஸில் பயணம்செய்வதற்கான விதிகளைக் காட்டிலும் சர்ச் அங்கத்தினராவதற்கு கீழ்த்தரமான தராதரங்களை உடையதாயிருக்கிறது,” என்று ஒருவர் கருத்தறிவிக்கிறார். அவ்வாறெனில், அதன் ஆவிக்குரிய நிலையை நாம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும்? கத்தோலிக்க பிஷப் பேஸில் பட்லர் முடிவாக சொல்கிறார்: “நிச்சயமாகவே ஒரு பிரிவினை நிறைந்த கிறிஸ்தவம் மிகவும் சுகவீனமாயிருக்கிறது.” (சர்ச்சும் ஒருமைப்பாடும் [The Church and Unity]) இந்தச் சுகவீனம் எவ்வாறு தொடங்கியது? சுகவீனத்திலிருந்து மீள நம்பிக்கைகள் இருக்கின்றனவா?
“அக்கிரமக்காரன்”
அப்போஸ்தலன் பவுல் ஒற்றுமையின்மை தொடங்கும் என்று எச்சரித்தார். கிறிஸ்துவின் பிரசன்னம் விரைவில் நடைபெறவிருக்கிறது என்று நினைத்த தெசலோனிக்கேய கிறிஸ்தவர்களிடம் அவர் எழுதினார்: “எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாசதுரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய [அக்கிரமக்காரன், NW] வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் [யெகோவாவின் நாள்] வராது.”—2 தெசலோனிக்கேயர் 2:3.
இந்த “அக்கிரமக்காரன்” கிறிஸ்தவ சபையில் விசுவாசதுரோகத்தையும் கலகத்தனத்தையும் புகுத்தினான். இவன் யார்? எந்தவொரு தனிப்பட்ட மனிதனுமல்ல, ஆனால் மாறாக, கிறிஸ்தவமண்டல குருவர்க்க வகுப்பாகும். இந்த வகுப்பு இயேசுவின் அப்போஸ்தலருடைய இறப்புக்கு சற்றே பிறகு தன்னைத்தானே விசுவாசதுரோக சபைக்கு மேலாக மேன்மைப்படுத்தியது, முடிவில் திரித்துவம், மனித ஆத்துமா அழியாமை போன்ற புறமத தத்துவங்களைப் போதிக்கலானது. (அப்போஸ்தலர் 20:29, 30; 2 பேதுரு 2:1-3) ஆபத்தான கிருமியைப்போல, நிச்சயமாக ஒற்றுமையின்மைக்கு வழிநடத்தக்கூடிய பேய்-ஏவிய கருத்துக்களால், அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த கிறிஸ்தவ சபையைத் தொற்றியது.—கலாத்தியர் 5:7-10.
இந்தத் தொற்று அப்போஸ்தலன் பவுலின் நாளிலேயே பரவத் தொடங்கியது. அவர் எழுதினார்: “அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.” (2 தெசலோனிக்கேயர் 2:7) விசுவாசதுரோக நஞ்சுக்கு எதிராக அப்போஸ்தலர் தடையாட்களாக செயல்பட்டனர். அவர்களுடைய ஒருமித்த செல்வாக்கு நீக்கப்பட்ட பிறகு, கட்டுப்பாடில்லா விசுவாசதுரோகம் அரிபிளவையைப்போல படர்ந்தது.—1 தீமோத்தேயு 4:1-3; 2 தீமோத்தேயு 2:16-18.
இந்த ‘அக்கிரமக்காரனின்’ நடவடிக்கைகள் தொடர்ந்து தணியாதிருக்கிறது. “பாலுறவு மற்றும் இறையியல் வாதனையில் ஒரு சர்ச்” என்ற ஒரு சமீபத்திய அறிக்கையில், இங்கிலாந்து சர்ச்சின் மேற்றிராணியார் இவ்வாறு குறைகூறுவதாக எடுத்துக்காட்டப்பட்டது: “விவாகத்துக்கு புறம்பான பாலுறவு செயலில் ஈடுபடக்கூடாது என்று விடுக்கும் தீர்மானங்கள் நிராகரிக்கப்படுகின்றன. ஓரினச் சேர்க்கையை வழக்கமாக செய்துவருபவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் நல்லதை கெட்டதாகவும் கெட்டதை நல்லதாகவும் செய்திருக்கின்றனர்.”—தி சண்டே டைம்ஸ் மேகஸீன், லண்டன், நவம்பர் 22, 1992.
கோதுமையும் களைகளும்
உண்மை கிறிஸ்தவம் தற்காலிகமாக காட்சியிலிருந்து மறைந்துபோகும் என்று இயேசு கிறிஸ்துதாமே கற்பித்தார். கிறிஸ்தவ சபையின் தோற்றம் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது என்று அவர் சொன்னார். என்றாலும், “அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்,” என்று இயேசு சொன்னார். அந்தக் களைகளை வேருடன் பிடுங்கிப்போட முயல வேண்டுமா என்று அவனுடைய அடிமைகள் கேட்டபோது, நில எஜமான், “வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது, நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்”கிவிடுவீர்கள் என்று சொன்னார். கோதுமையும் களைகளும் எந்தமட்டும் சேர்ந்து வளரும்? நில எஜமான் சொன்னார்: “இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள்.”—மத்தேயு 13:25, 29, 30.
“அறுப்பு” அல்லது ‘காரிய ஒழுங்குமுறையின்’ கடைசி நாட்களின்போது நடக்கக்கூடிய பிரிக்கும் காலம் மட்டும் போலி கிறிஸ்தவர்கள் உண்மை கிறிஸ்தவர்களோடே சேர்ந்து வளர்ந்து வந்தனர். (மத்தேயு 28:20, NW) பிசாசான சாத்தான் ஒரு இழிவான பிரிவினை நிறைந்த போலி கிறிஸ்தவ சபையை உருவாக்குவதற்கு விசுவாசதுரோகிகளைப் பயன்படுத்தினான். (மத்தேயு 13:36-39) உண்மை கிறிஸ்தவத்தின் பழிப்பிற்கிடமான போலியை இவர்கள் உருவாக்கினர். (2 கொரிந்தியர் 11:3, 13-15; கொலோசெயர் 2:8) நூற்றாண்டுகளினூடே சர்ச் வெவ்வேறு பகுதிகளாக பிரிவுறுகையில், உண்மை கிறிஸ்தவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக ஆனது.
புதுப் பிரிவினைகள்
மிகவும் நவீனமான காலங்களில், “[பு]துப் பிரிவினைகள் தோன்றியுள்ளன, விசேஷமாக, தனிப்பட்ட விசுவாசத்தின்பேரிலும் அனுபவத்தின்பேரிலும் கவனத்தை ஊன்றவைக்கக்கூடிய காரிஸ்மாடிக் இயக்கமாகும்,” என்று சர்ச்சுகளின் பரிசோதனை—1932-1982 (The Testing of the Churches—1932-1982) சொல்கிறது. சிலர் பான் அகெய்ன், காரிஸ்மாடிக் இயக்கங்களை புதுப் பிரிவினைகளாகக் கருதுவதற்கு மாறாக, ஆவிக்குரிய மறுமலர்ச்சியின் அடையாளங்களாக நோக்குவது அக்கறையூட்டுவதாயிருக்கிறது. உதாரணமாக, வடக்கு அயர்லாந்து 1850-களில் அத்தகைய மறுமலர்ச்சியை அனுபவித்தது. பெரும் எதிர்பார்ப்புகள் எழும்பின. “பொது ஆட்சிமுறை திருச்சபை உறுப்பினர்கள், வெஸ்லீய உறுப்பினர்கள், தன்னாட்சிக் குழுவைச்சேர்ந்த ஊழியர்களிடையே . . . உள்ள சகோதர ஒற்றுமையைப்” பற்றி ஒரு அறிக்கை சொன்னது. மேலுமாக, “பரவசங்கள், உறக்கங்கள், தரிசனங்கள், சொப்பனங்கள், அற்புதங்கள் ஆகியவற்றைப் பற்றிய புது அறிக்கைகளை ஒவ்வொரு தினமும் கொண்டுவந்தன” என்று கூறினது.—ரிலிஜியஸ் ரிவைவல்ஸ்.
இந்தத் தத்ரூபமான வெளிக்காட்டுதல்களை அநேகர் கடவுள் தம்முடைய சர்ச் மறுமலர்ச்சியடைவதற்கான சான்றுகளாக கருதினர். “கடவுளுடைய சர்ச் அதன் மேன்மையான கருத்தில் இந்தத் துறைகளில் மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது” என்று ஒருவர் கருத்தறிவித்தார். என்றாலும், “அல்ஸ்டரின் மத சரித்திரத்தில் புகழ்வாய்ந்த புதுமையான சகாப்தம்” ஆக இந்தக் குறிப்பிட்ட மறுமலர்ச்சி பிரஸ்தாபப்பட்டபோதிலும் அதுவும் அதுபோன்ற இதர மறுமலர்ச்சிகளும் ஆவிக்குரிய மறுபிறப்பை உரிமைபாராட்டுபவர்களிடையே மத ஒற்றுமையை உண்டுபண்ணவில்லை.
அத்தகைய ஆட்கள் தாங்கள் அடிப்படையான விஷயங்களில் ஒருமித்திருப்பதாக வாதிடுவார்கள். ஆனால் இதேதான் கிறிஸ்தவமண்டலத்திலுள்ள மீதியானோரால் வாதிடப்படுகிறது. இவர்கள் “கிறிஸ்தவர்களை ஒற்றுமைப்படுத்துவதானது தங்களை இப்பொழுதும் பிரிவுபடுத்துகிற விஷயங்களைவிட முன்பே மிகவும் அதிமுக்கியமானதாயிருக்கிறது என்று வாதிடுகின்றனர்.” (சர்ச்சும் ஒருமைப்பாடும்) கிறிஸ்தவமண்டலம் பின்வருமாறு சாதிக்கிறது: “ஒருவருக்கொருவருக்கும் எங்களுடைய எல்லா உடன் கிறிஸ்தவர்களுக்கும் உள்ள எங்களுடைய அடிப்படையான ஒருமைப்பாடு, கிறிஸ்துவில் எடுத்த நம்முடைய முழுக்காட்டுதலில் வேரூன்றியிருக்கிறது.” (ஒருமித்திருக்கும் கிறிஸ்தவர்கள்) என்றாலும், கிறிஸ்துவிலுள்ள பொதுவான விசுவாசத்தின் காரணமாக பிரிவுகள் முக்கியமல்லாதவை என்று சொல்வதானது, உங்களுடைய இருதயம் திடமாக இருக்கிற வரையில் புற்றுநோய் வினைமையானதல்ல என்று சொல்வதைப்போல இருக்கிறது.
அத்தகைய நவீன மத இயக்கங்கள் மேலுமான குழப்பத்தை உண்டுபண்ணி, தன்வசப்படுத்தும் போதகர்கள் தங்களுக்கென்று சீஷர்களைக் கூட்டிச்சேர்த்து ஆவிக்குரிய அராஜகத்தை உருவாக்கியிருப்பதே உண்மை நிலையாகும். ஆயிரக்கணக்கானவர்களைத் தவறாக வழிநடத்திய ஆவிக்குரிய தலைவர்களில் நவீனகால முன்மாதிரிகளாக ஜிம் ஜோன்ஸும் டேவிட் கோரெஷும் இருக்கின்றனர். (மத்தேயு 15:14) பாப்டிஸ்ட் மதப்பிரிவைச் சேர்ந்த ஒரு ஊழியர் மறைநிலை நீக்ரோ எதிர்ப்புச் சங்கத்தின் (Ku Klux Klan) முதன்மையான அங்கத்தினராவார். இவர் வெள்ளையரே உயர்ந்தவர்கள் என்பதற்காகத் தொடுத்த போரை மத மறுமலர்ச்சியோடு இணைத்துப்பேசி, அதில் பங்குகொள்பவர்களுக்கு “உன்னதருடைய அருளின் பலம் கொடுக்கப்படும் என்றும் கல்வாரியில் மரித்தவருடைய [இயேசு கிறிஸ்துவுடைய] தைரியமும் வழங்கப்படும் என்றும்” கூறுகிறார்.
இயேசுவின் பெயரில் செய்யப்படும் பாவனையான அற்புதங்கள், வல்லமையான செயல்கள், அடையாளங்களைப் பற்றியதில் என்ன? “கர்த்தாவே, கர்த்தாவே” என்று சொல்பவர்கள் மாத்திரம் அவருடைய அங்கீகாரத்தைப் பெறாமல், அதற்கு மாறாக ‘பிதாவின் சித்தத்தை செய்பவர்களே’ அங்கீகாரத்தைப் பெறுவார்கள் என்று இயேசு கிறிஸ்து சொன்ன கடும் எச்சரிக்கையை நினைவில் கொள்ளுங்கள். இன்று அநேகருக்கு அவருடைய பிதாவின் பெயர் யெகோவா என்பதுகூட தெரியவில்லை. இயேசு ‘தமது நாமத்தினால் பிசாசுகளைத் துரத்தி, இந்த நாமத்தில் அற்புதங்களைச் செய்த’ ஆட்களைக் குறித்து எச்சரித்தார், எனினும் இவர்கள் “அக்கிரமச் செய்கைக்கார”ராகவே இருப்பார்கள்.—மத்தேயு 7:21-23.
‘என் ஜனங்களே, அவளைவிட்டு வெளியே வாருங்கள்’
நோய்வாய்ப்பட்டிருக்கிற கிறிஸ்தவமண்டலத்துக்கான எதிர்காலம் என்ன? அவலமான நிலை. அவ்வாறெனில், “அதிக அமளி செய்யாமல் [சர்ச்சில்] சேர்ந்துகொண்டு அவளுடைய ஸ்தானநிலைகளில் உள்ளவர்களையே தொடர்ந்து ‘சுத்திகரிப்பதற்கு’ நம்முடைய ஆதரவைத் தரும்படி” சொல்லும் கத்தோலிக்க பிஷப்பாகிய பட்லருடைய ஆலோசனையை ஏற்றுக்கொள்ள வேண்டுமா? வேண்டவே வேண்டாம்! பிரிவினை நிறைந்த பாகுபாடுள்ள கிறிஸ்தவமண்டலம் நீடித்திருக்காது. (மாற்கு 3:24, 25) அவள் மகா பாபிலோன் என்றழைக்கப்படும் பொய் மத உலகப் பேரரசின் பாகமாயிருக்கிறாள். (வெளிப்படுத்துதல் 18:2, 3) இந்த இரத்தம் சிந்திய மத அமைப்பு கடவுளுடைய கரத்தில் சடிதியான அழிவை எதிர்ப்படுகிறது.
உண்மை கிறிஸ்தவர்கள் இந்த இழிவான மத அமைப்பில் தொடர்ந்திருந்துகொண்டு, உள்ளுக்குள்ளிருந்தே அவளைத் திருத்த முயலும்படி பைபிள் ஆலோசனை செய்வது கிடையாது. மாறாக, அது அறிவுறுத்துவதாவது: “என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள். அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்.”—வெளிப்படுத்துதல் 18:4, 5.
“வெளியே வாருங்கள்” எவ்விடத்திற்கு? அறுவடை காலத்தில் உண்மை கிறிஸ்தவர்கள் திரும்பவும் உலகளாவிய ஒருமைப்பாட்டிற்குள் கூட்டிச்சேர்க்கப்படுவர் என்று இயேசு வாக்குரைத்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அத்தகைய கூட்டிச்சேர்ப்பைக் குறித்து இவ்வார்த்தைகளில் மீகா தீர்க்கதரிசியும் முன்னுரைத்தார்: ‘ஆடுகளைக் கிடையில் மடக்குவதுபோல ஒன்றாக அவர்களைக் கூட்டிச் சேர்ப்பேன்.’ (மிக்கேயாஸ் 2:12, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) இது நடந்தேறியிருக்கிறதா?
ஆம்! பூமி முழுவதும் உண்மை கிறிஸ்தவர்கள் இப்போது ஒருமைப்பட்ட சகோதரத்துவத்திற்குள் கூட்டிச்சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்கள் யார்? கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றிய நற்செய்தியை 231 நாடுகளில் ஒற்றுமையோடு பிரஸ்தாபப்படுத்தி வரும் யெகோவாவின் சாட்சிகளடங்கிய கிறிஸ்தவ சபையாரே ஆவர். கிறிஸ்தவமண்டலத்தின் பாகுபாடுள்ள போதனைகளை அவர்கள் வெறுத்தொதுக்கி, கடவுளைத் தம்முடைய வார்த்தையில் காணப்பட்டிருக்கும் சத்தியத்திற்கிணங்க வணங்கும்படி நாடுகின்றனர்.—யோவான் 8:31, 32; 17:17.
அவர்களோடு பேச நீங்கள் அன்போடு அழைக்கப்படுகிறீர்கள். யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி மேலுமாகத் தெரிந்துகொள்ள விரும்பினால், தயவுசெய்து உள்ளூரில் இருப்பவர்களோடு தொடர்புகொள்ளுங்கள். அல்லது இந்தப் பத்திரிகையின் 2-ம் பக்கத்திலுள்ள பொருத்தமான முகவரியில் அவர்களோடு தொடர்புகொள்ளுங்கள்.
[பக்கம் 7-ன் படம்]
“அவளுடைய அநியாயங்களைத் தேவன் நினைவுகூர்ந்தார்”