நாத்திகத்தின் வேர்கள்
நெருக்கடி நிறைந்த ஒரு கோளத்தில் நாம் வாழ்ந்துவருகிறோம்; ஒவ்வொரு நாளும் செய்தித்தாளின் தலைப்புச்செய்திகளைக் கணநேரம் நோக்குவது அந்த உண்மையை ஊர்ஜிதப்படுத்துவதாக உள்ளது. நம்முடைய உலகின் நம்பிக்கையற்ற நிலை கடவுள் இருப்பதைப் பற்றி அநேகரைச் சந்தேகிக்கும்படியாகச் செய்திருக்கிறது. நாத்திகர் என்பதாக உரிமைபாராட்டிக்கொண்டு சிலர், அவர் இருப்பதை மறுக்கவும்கூட செய்கின்றனர். உங்களைப் பற்றியதில் அது உண்மையாக இருக்கிறதா?
கடவுளில் நம்பிக்கை அல்லது அவநம்பிக்கை எதிர்காலத்தைப்பற்றிய உங்களுடைய நோக்குநிலையை ஆழமாகப் பாதிக்கக்கூடும். கடவுள் இல்லாவிட்டால், மனித இனம் தொடர்ந்து உயிர்பிழைத்திருப்பது முற்றிலும் மனிதனின் கைகளில் இருக்கிறது—அழிப்பதற்கு மனிதனுக்கிருக்கும் திறமையைச் சிந்தித்துப் பார்க்கையில் இது சோர்வுதரும் ஓர் எண்ணம். கடவுள் இருக்கிறார் என்று நீங்கள் நம்பினால், இந்தக் கிரகத்தில் வாழ்க்கைக்கு ஒரு நோக்கமிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்—முடிவாக நிறைவேறவிருக்கும் ஒரு நோக்கம்.
வரலாறு முழுவதிலும் கடவுள் இருப்பதைப் பற்றிய உண்மை அங்குமிங்குமாகவே மறுக்கப்பட்டிருந்தாலும், நாத்திகம் சமீப நூற்றாண்டுகளில்தாமே பொதுமக்களின் மத்தியில் வெகுவாக பரவியுள்ளது. ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?
வேர்களைக் கண்டுகொள்ளுதல்
உயரமான ஒரு மரம் கண்கவரும் காட்சியாக இருக்கிறது. என்றாலும், கண் வெறுமனே இலைகளையும் கிளைகளையும் அடிமரத்தையும் மாத்திரமே காண்கிறது. வேர்கள்—மரத்தின் உயிர் மூலம்—நிலத்தின் ஆழத்தில் மறைந்திருக்கின்றன.
நாத்திகத்தின் விஷயத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. கம்பீரமான ஒரு மரத்தைப் போல, கடவுள் இருக்கும் உண்மையை ஏற்க மறுப்பது, 19-வது நூற்றாண்டுக்குள் கருத்தைக் கவரும் வகையில் வளர்ந்துவிட்டது. இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒரு முதற்காரணமின்றியே உயிரும் பிரபஞ்சமும் இருக்க இயலுமா? இப்படிப்பட்ட ஒரு படைப்பாளரை வணங்குவது நேரத்தை விரயம் செய்வதாக இருக்கிறதா? 19-ம் நூற்றாண்டின் முதன்மையான தத்துவ ஞானிகளின் பதில்கள் அழுத்தமாயும் தெளிவாயும் இருந்தன. “ஒழுக்க சட்டத் தொகுப்பு ஒன்று நமக்கு இனிமேலும் அவசியமில்லாதது போலவே, மதமும் நமக்கு அவசியமில்லை,” என்பதாக ஃபிரெட்டிரிக் நிட்ஷி அறிவித்தார். “மதம் மனித மனதின் கனவு,” என்று லுட்விக் ஃபாயர்பேக் உறுதியாகச் சொன்னார். கார்ரல் மாக்ஸின் காலத்தைத் தொடர்ந்து வரவிருந்த பத்தாண்டுகளில், அதிகமாக செல்வாக்குச் செலுத்தவிருந்த அவருடைய எழுத்துக்கள் துணிவோடு இவ்விதமாகச் சொன்னது: “மதத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மனதின் சுதந்திரத்தை அபிவிருத்திசெய்ய நான் விரும்புகிறேன்.”
திரளானோர் மனம் கவரப்பட்டனர். என்றபோதிலும் அவர்கள் கண்டது வெறுமனே நாத்திகத்தின் இலைகளும் கிளைகளும் அடிமரமுமாகவே இருந்தது. 19-வது நூற்றாண்டு ஆரம்பிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்னரே வேர்கள் அங்கே இருந்து தளிர்த்துக்கொண்டிருந்தன. ஆச்சரியமூட்டும் வகையில், நாத்திகத்தில் நவீன நாளைய வளர்ச்சிக்குத் துணைபுரிந்தது கிறிஸ்தவமண்டல மதங்களே! எவ்விதமாக? அவற்றினுடைய ஊழலின் காரணமாக, இந்த மத நிறுவனங்கள் அதிகளவான ஏமாற்றத்தையும் கிளர்ச்சியையும் தூண்டிவிட்டிருக்கின்றன.
விதைகள் விதைக்கப்பட்டன
வரலாற்றின் இடைநிலைக் காலத்தில், கத்தோலிக்க சர்ச் அதன் குடிமக்கள்மீது ஆதிக்கப்பிடியைக் கொண்டிருந்தது. “குருக்களாட்சி மக்களின் ஆவிக்குரிய தேவைகளைக் கவனித்துக்கொள்ள ஆயத்தமாக இல்லை,” என்பதாக தி என்ஸைக்ளோப்பீடியா அமெரிக்கானா குறிப்பிடுகிறது. “உயர்ந்த பதவியிலிருந்த குருமார்கள், குறிப்பாக ஆயர்கள், உயர்குடிமக்களிலிருந்து வேலையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர், இவர்கள் தங்களுடைய பதவியை முக்கியமாக அந்தஸ்தையும் அதிகாரத்தையும் அளிக்கும் ஒன்றாகவே கருதினர்.”
ஜான் கால்வின் மற்றும் மார்டின் லூதர் போன்ற ஒரு சிலர் சர்ச்சை சீர்திருத்த முயன்றனர். என்றபோதிலும், அவர்கள் கையாண்ட வழிகள் எப்போதும் கிறிஸ்துவைப் போன்றிருக்கவில்லை; சகிப்புத்தன்மை இல்லாமையும் இரத்தஞ்சிந்துதலும் சர்ச் சீர்திருத்தத்தைத் தனிப்படுத்திக் காட்டின. (மத்தேயு 26:52-ஐ ஒப்பிடவும்.) ஒருசில தாக்குதல்கள் அத்தனை கொடியதாக இருந்தபடியால், மூன்று நூற்றாண்டுகளுக்குப் பின்னர், ஐக்கிய மாகாணங்களின் மூன்றாவது ஜனாதிபதி தாமஸ் ஜெஃப்பர்சன் இவ்விதமாக எழுதினார்: “கடவுளுக்கு இருப்பதாக கால்வின் சொல்லும் கொடிய பண்புகளால் அவரைத் தூஷிப்பதைக் காட்டிலும் எந்தக் கடவுளிலும் நம்பிக்கை வைக்காதிருப்பதை அதிகமாக மன்னித்துவிடலாம்.”a
சர்ச் சீர்திருத்தம் மெய் வணக்கத்தை திரும்ப ஸ்தாபிக்கவில்லை என்பது தெளிவாக இருக்கிறது. என்றாலும் அது கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரத்தைக் குறைத்துவிட்டது. மக்களின் மத விசுவாசத்தின் மீது தனிப்பட்ட கட்டுப்பாட்டை இனிமேலும் வாடிகன் கொண்டிருக்கவில்லை. அநேகர் புதிதாக உருவான புராட்டஸ்டன்ட் மதப் பிரிவுகளைச் சேர்ந்துகொண்டனர். மதத்தால் ஏமாற்றமடைந்த மற்றவர்கள் மனித மனதை வணக்கத்துக்குரிய வஸ்துவாக ஆக்கினர். இதன் விளைவாக ஏற்பட்ட கட்டுப்பாடற்ற மனப்பான்மை கடவுளைப் பற்றிய பல்வேறு கருத்துக்களுக்கு இடமளித்தது.
ஐவுறவுவாதம் தளிர்க்கிறது
18-வது நூற்றாண்டுக்குள், உலகப் பிரச்சினைகளுக்கு அறிவுப்பூர்வமான சிந்தனையே சர்வரோக நிவாரணி என்பதாக பொதுவாக புகழ்ந்து பேசப்பட்டது. வழிநடத்துதலுக்காக அரசியலையும் மதத்தையும் மனிதன் சார்ந்திருப்பது அவனுடைய முன்னேற்றத்தைத் தடைசெய்கிறது என்பதாக ஜெர்மன் தத்துவஞானி இம்மேன்யுல் கான்ட் ஆணித்தரமாகச் சொன்னார். “நன்றாக கற்றுணர்ந்தவனாயிருக்க துணிச்சலுள்ளவனாயிரு!” என்று அவர் துரிதப்படுத்தினார். “உன்னுடைய சொந்த அறிவுக்கூர்மையைப் பயன்படுத்த தைரியமுள்ளவனாயிரு!”
இந்த மனப்பான்மையே அறிவொளியூட்டலின், பகுத்தறிவு சகாப்தம் என்றும்கூட அறியப்பட்டிருந்ததின் தனிச்சிறப்பாய் இருந்தது. 18-வது நூற்றாண்டு முழுவதிலுமாக நீடித்திருந்த இந்தக் காலப்பகுதி மனதை ஆக்ரமித்துக்கொண்ட அறிவுக்கான வேட்கையால் குறிக்கப்பட்டிருந்தது. “கண்மூடித்தனமான விசுவாசத்தின் இடத்தை ஐயுறவுவாதம் பிடித்துக்கொண்டது,” என்பதாக வரலாற்றின் மைல்கற்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. “பழைய பாரம்பரியமான நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் பற்றி சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.”
நுணுக்கமாக ஆராயப்படவிருந்த ‘பழைய பாரம்பரியமான நம்பிக்கை’களில் ஒன்று மதமாக இருந்தது. “மனிதர்கள் மதத்தைப் பற்றிய நோக்குநிலைகளை மாற்றிக்கொண்டுவிட்டனர்,” என்பதாக உலகின் சர்வலோக வரலாறு (ஆங்கிலம்) என்ற புத்தகம் சொல்கிறது. “பரலோகத்தில் நற்பலன்களைப் பற்றிய வாக்குறுதியினால் அவர்கள் இனிமேலும் திருப்தியடையவில்லை; அவர்கள் பூமியில் மேம்பட்ட ஒரு வாழ்க்கையை வற்புறுத்திக் கேட்டனர். இயற்கைக்கு அப்பாற்பட்டவரில் தங்களுடைய விசுவாசத்தை அவர்கள் இழக்க ஆரம்பித்தார்கள்.” ஆம், அறிவொளியூட்டப்பட்ட தத்துவஞானிகளில் பெரும்பாலானவர்கள் மதத்தை இகழ்ச்சியாக கருதினர். குறிப்பாக, மக்களை அறியாமையில் வைத்திருப்பதற்காக அவர்கள் கத்தோலிக்க சர்ச்சின் அதிகார பசியுடைய தலைவர்களைக் குறைகூறினார்கள்.
மதத்தில் அதிருப்தியடைந்தவர்களாய், இந்தத் தத்துவஞானிகளில் பலர் இயற்கை மதவாதிகளாக மாறினார்கள்; கடவுளில் அவர்கள் நம்பிக்கை வைத்தார்கள், ஆனால் அவருக்கு மனிதனில் அக்கறை எதுவுமில்லை என்பதாக உறுதியாக கூறினார்கள்.b மதம் என்பது “பிரிவினைகளுக்கும் மிதமிஞ்சிய மூட பழக்கங்களுக்கும் குற்றச்செயல்களுக்கும் காரணம்” என்பதாக தெரிவித்த தத்துவஞானி பால் ஹென்ரி திரி ஆல்பேக் போன்ற ஒரு சிலர் வெளிப்படையான நாத்திகர்களாக ஆனார்கள். வருடங்கள் கடந்துசென்ற போது, இன்னும் அநேகர் கிறிஸ்தவமண்டலத்தைக் குறித்து அதிக சலிப்படைந்து ஆல்பேக்கின் கருத்தை ஏற்றுக்கொண்டனர்.
கிறிஸ்தவமண்டலம் நாத்திகத்தின் வளர்ச்சியை ஊக்குவித்தது எத்தனை நகைப்பிற்கிடமாக உள்ளது! “சர்ச்சுகளே நாத்திகத்தை வேரூன்றி வளர்த்த இடங்களாக இருந்தன,” என்பதாக இறையியல் பேராசிரியர் மைக்கேல் ஜே. பக்லே எழுதுகிறார். “ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலுமுள்ள மக்களின் ஒழுக்க உணர்ச்சிகள் வெகுவாக புண்படுத்தப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மதங்கள்மீது வெறுப்புண்டாயிற்று. சர்ச்சுகளும் தனிப் பிரிவுகளும் ஐரோப்பாவை நாசமாக்கி, படுகொலைகளைத் திட்டமிட்டு செய்து, மதசம்பந்தமான எதிர்ப்பு அல்லது புரட்சியை வற்புறுத்தி முடிமன்னர்களைச் சமயவிலக்குச் செய்ய அல்லது பணியிலிருந்து விலக்க முற்பட்டிருக்கின்றன.”
நாத்திகம் அதன் முழு வளர்ச்சியை அடைகிறது
19-ம் நூற்றாண்டுக்குள், கடவுளை ஏற்க மறுப்பது கட்டுப்பாடின்றியும் அதிகமதிகமாகவும் வெளிப்படுத்தப்பட்டது. மனச்சாட்சியின் உறுத்தலின்றி தத்துவஞானிகளும் அறிவியல் அறிஞர்களும் தங்கள் கருத்துக்களைத் தைரியமாக அறிவித்தனர். “நமக்கு சத்துரு கடவுளே,” என்பதாக பேச்சில் துணிச்சலுள்ள ஒரு நாத்திகர் அறிவித்தார். “கடவுளைப் பகைப்பதே ஞானத்தின் ஆரம்பம். மனிதவர்க்கம் மெய்யாக முன்னேறவேண்டுமானால், அது நாத்திகத்தின் அடிப்படையில்தான் இருக்கவேண்டும்.”
என்றபோதிலும், 20-ம் நூற்றாண்டின்போது சூட்சுமமான ஒரு மாற்றம் நிகழ்ந்தது. கடவுள் இருப்பதை ஏற்க மறுப்பதில் தீவிரம் குறைந்துவிட்டது; வித்தியாசமான ஒரு வகை நாத்திகம் பரவி கடவுளை நம்புவதாக உரிமைபாராட்டுபவர்களையும்கூட பாதிக்க ஆரம்பித்தது.
[அடிக்குறிப்புகள்]
a கடிகாரம் செய்பவரைப் போலவே, கடவுள் தம்முடைய படைப்புகளை இயங்கச்செய்துவிட்டு பின்னர் முழுவதுமாக ஒதுங்கிக் கொண்டு, அலட்சியமாக இருந்துவிட்டார் என்பதாக இயற்கை மதவாதிகள் உரிமைபாராட்டினர். நவீன மரபுரிமை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தின்படி, “நாத்திகம் மனமுறிந்துபோன ஆட்களால் உண்டுபண்ணப்பட்ட ஒரு பிழையாகும், ஆனால் கத்தோலிக்க சர்ச்சின் ஆட்சியாதிக்க கொள்கையின் கட்டமைப்பும் அதனுடைய கொள்கையின் விடாகண்டிப்பும் சகிப்புத்தன்மையில்லாமையும் அதைவிட அதிக வருந்தத்தக்கவையாக இருப்பதாக இயற்கை மதவாதிகள் நம்பினர்.”
b சர்ச் சீர்திருத்தத்தின் விளைவாக ஏற்பட்ட புராட்டஸ்டன்ட் மதப் பிரிவுகள் அநேக வேத ஆதாரமற்ற கோட்பாடுகளைத் தக்க வைத்துக்கொண்டன. ஆகஸ்ட் 22, 1989, பக்கங்கள் 16-20 மற்றும் செப்டம்பர் 8, 1989, பக்கங்கள் 23-7 ஆங்கில விழித்தெழு! பிரதிகளைக் காண்க.
[பக்கம் 3-ன் படம்]
கார்ல் மாக்ஸ்
[பக்கம் 3-ன் படம்]
லுட்விக் ஃபாயர்பேக்
[பக்கம் 3-ன் படம்]
ஃபிரெட்டிரிக் நிட்ஷி
[பக்கம் 2-ன் படத்திற்கான நன்றி]
COVER: Earth: By permission of the British Library; Nietzsche: Copyright British Museum (see also page 3); Calvin: Musée Historique de la Réformation, Genève (Photo F. Martin); Marx: U.S. National Archives photo (see also page 3); Planets, instruments, crusaders, locomotive: The Complete Encyclopedia of Illustration/J. G. Heck; Feuerbach: The Bettmann Archive (see also page 3)