யெகோவா உங்களைப் பலப்படுத்துவார்
“சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார்.”—ஏசாயா 40:29.
1, 2. யெகோவாவின் மகா பலத்திற்கான சில அத்தாட்சிகள் யாவை?
யெகோவா “மகா பெலமுள்ள” தேவனாயிருக்கிறார். கடவுளுடைய “நித்திய வல்லமை தேவத்துவத்”திற்கான அத்தாட்சியை அவருடைய இயற்கை படைப்பின் மகத்துவத்திலிருந்து நம்மால் காண முடிகிறது. அத்தகைய சிருஷ்டித்துவ வெளிக்காட்டை ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.—சங்கீதம் 147:5; ரோமர் 1:19, 20.
2 விஞ்ஞானிகள், கோடிக்கணக்கான ஒளியாண்டுகளினூடே பரந்திருக்கும் எண்ணிலடங்கா பால்மண்டலங்களைக் கொண்ட இப்பிரபஞ்சத்தைத் துழாவுகையில் யெகோவாவின் பலம் அதிகமாகத் தெளிவாகிறது. இருட்டாயிருந்தாலும் தெளிவான இரவில் வானங்களை உற்றுப்பார்த்து, சங்கீதக்காரனைப்போல உங்களாலும் கிட்டத்தட்ட உணரமுடிகிறதா என்று பாருங்கள்: “உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும் நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது, மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம்.” (சங்கீதம் 8:3, 4) யெகோவா எப்படி அருமையாக மனிதனை, நம்மைக் கவனித்து வந்திருக்கிறார்! முதல் மனிதனுக்கும் மனுஷிக்கும் அழகான பூமிக்குரிய வீட்டை அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். தாவரங்கள் வளர்ந்து, சத்துள்ள, அசுத்தமற்ற உணவை விளையச் செய்ய அதன் நிலத்திற்கு சக்தியும் இருந்தது. மனிதனும் விலங்குகளும் கடவுளுடைய பலத்தின் இந்த வெளிக்காட்டால் உடல் பலத்தை அடைகின்றன[ர்].—ஆதியாகமம் 1:12; 4:12; 1 சாமுவேல் 28:22.
3. இப்பிரபஞ்சத்திலுள்ள இயற்கை பொருட்களைத் தவிர, கடவுளுடைய பலத்தை எதுவும் எடுத்துக்காட்டுகிறது?
3 வானங்கள் கவர்ச்சிகரமாக, பூமியின் தாவரங்களும் விலங்கினங்களும் இன்பகரமாக இருப்பதோடுகூட, கடவுளுடைய பலத்தை அவை நமக்கு வெளிப்படுத்துகின்றன. அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” (ரோமர் 1:20) ஆனால் நம்முடைய கவனத்துக்கும் பாராட்டுதலுக்குமுரிய அவருடைய பலத்தின் இன்னொரு அத்தாட்சி இருக்கிறது. ‘இப்பிரபஞ்சத்தைவிட கடவுளுடைய பலத்தை யார் அதிகப்படியாக வெளிக்காட்டுகிறார்?’ என்று நீங்கள் யோசிக்கலாம். இதற்குப் பதில் இயேசு கிறிஸ்துவானவரே. உண்மையில், பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு அப்போஸ்தலன் பவுல் என்ன சொல்கிறாரென்றால், அறையப்பட்ட கிறிஸ்து ‘தேவபெலமாயும் தேவஞானமாயும்’ இருக்கிறார். (1 கொரிந்தியர் 1:24) ‘ஏன் அப்படி? இப்போது என்னுடைய வாழ்க்கையில் அது என்ன பாதிப்பையுடையதாயிருக்கும்?’ என்று நீங்கள் கேட்கலாம்.
குமாரனின் மூலம் பலம்
4. தம்முடைய குமாரனைக் குறித்ததில் கடவுளுடைய பலம் எவ்வாறு காட்டப்பட்டது?
4 கடவுள் தம்முடைய சாயலில் அவருடைய ஒரேபேறான குமாரனைப் படைத்தபோது அவருடைய பலம் முதன்முதலில் வெளியானது. இந்த ஆவி குமாரன் கடவுளுடைய மகா பலத்தினால் மற்றெல்லா காரியங்களையும் படைத்து, யெகோவாவுக்கு “கைதேர்ந்த வேலையாள்” ஆக சேவித்தார். (நீதிமொழிகள் 8:22, 30, NW) கொலோசெயிலுள்ள கிறிஸ்தவ சகோதரர்களுக்குப் பவுல் எழுதினார்: “அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளு[ம்] . . . சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.”—கொலோசெயர் 1:15, 16.
5-7. (அ) கடந்த காலத்தில், கடவுளுடைய பலத்தின் வெளிக்காட்டுதல்களில் மனிதர்கள் எவ்வாறு உட்பட்டிருந்தனர்? (ஆ) இன்றுள்ள கிறிஸ்தவர்களின் விஷயத்தில் கடவுளுடைய பலம் காண்பிக்கப்படலாம் என்று நம்புவதற்கு என்ன காரணம் இருக்கிறது?
5 நாம் ‘பூலோகத்திலுள்ளவைகளின்’ பாகமாயிருக்கிறோம். ஆகவே மானிடராகிய நமக்குக் கடவுளுடைய பலம் கொடுக்கப்படக்கூடுமா? அபூரண மனிதர்களோடு கடவுள் கொண்ட எல்லா தொடர்புகளிலும் யெகோவா தம்முடைய நோக்கங்களைத் தம்முடைய ஊழியர் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்குக் கூடுதலான பலத்தை அவ்வப்போது அருளியிருக்கிறார். அபூரண மனிதர்கள், சாதாரணமாக, 70 அல்லது 80 ஆண்டுகளே வாழ்கின்றனர் என்பதை மோசே அறிந்திருந்தார். (சங்கீதம் 90:10) மோசேயைப் பற்றியதிலென்ன? அவர் 120 வயது வரை வாழ்ந்தபோதிலும், ‘அவர் கண் இருளடையவுமில்லை, அவர் பெலன் குறையவுமில்லை.’ (உபாகமம் 34:7) அதற்காகக் கடவுள் தம்முடைய ஊழியர் ஒவ்வொருவரையும் அவ்வளவு காலமாக வாழ அனுமதிக்கிறார் என்றோ அந்தளவு சக்தியைக் கொடுக்கிறார் என்றோ பொருட்படாமல், யெகோவாவால் மானிடருக்குப் பலமளிக்க முடியும் என்பதை இது நிரூபித்துக் காட்டுகிறது.
6 ஆபிரகாமின் மனைவிக்கு கடவுள் செய்த காரியம், ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவருடைய பலமளிக்கும் திறமையை மேலுமாகக் காட்டுகிறது. “விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.” அல்லது நியாயாதிபதிகளையும் பிற ஆட்களையும் கடவுள் எவ்வாறு பலமளித்தார் என்பதைக் கவனியுங்கள்: ‘கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களும், தீர்க்கதரிசிகளும் பலவீனத்தில் பலன்கொண்டார்கள்.’—எபிரெயர் 11:11, 32-34.
7 அத்தகைய பலம் நம்முடைய விஷயத்திலுங்கூட கிரியை செய்யக்கூடும். இல்லை, அற்புதம் மூலம் சந்ததி உருவாக நாம் இப்பொழுது எதிர்பார்க்க முடியாது, அல்லது சிம்சோனைப்போன்று வல்லமையை நம்மால் வெளிக்காட்ட முடியாது. ஆனால் கொலோசெயில் உள்ள சராசரி மனிதர்களுக்குப் பவுல் குறிப்பிட்ட பிரகாரம் நாம் பலமுள்ளவர்களாக இருக்கலாம். ஆம், நாம் இன்று சபைகளில் பார்க்கிறதுபோல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும்தாமே பவுல் எழுதினார். மேலுமாக, அவர்கள் “எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்பட” செய்யப்படுகின்றனர் என்று அவர் சொன்னார்.—கொலோசெயர் 1:11.
8 இயேசு பூமியில் ஊழியஞ்செய்தபோது, யெகோவா தம்முடைய பலம் குமாரனின் மூலம் கிரியை செய்வதைத் தெளிவாகக் காட்டினார். உதாரணமாக, கப்பர்நகூமில் பெரும்பான்மையான மக்கள் இயேசுவிடம் திரண்டுவந்த சமயத்தில், “பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாக [யெகோவாவுடைய, NW] வல்லமை விளங்கிற்று.”—லூக்கா 5:17.
8, 9. முதல் நூற்றாண்டில், நம்மைப் போன்ற மனிதர்களுடைய விஷயத்தில் யெகோவாவின் பலம் எவ்வாறு காண்பிக்கப்பட்டது?
9 தம்முடைய உயிர்த்தெழுதலையடுத்து, ‘பரிசுத்தஆவி அவர்களிடத்தில் வரும்போது பெலனடைவார்கள்’ என்று இயேசு தம்மைப் பின்பற்றியவர்களுக்கு உறுதியளித்தார். (அப்போஸ்தலர் 1:8) எவ்வளவு உண்மை! பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தேவுக்கு ஒருசில நாட்களுக்குப் பின்னர் நடந்த சம்பவங்களை ஒரு சரித்திராசிரியன் அறிக்கை செய்கிறார்: “கர்த்தராகிய இயேசுவின் உயிர்த்தெழுதலைக்குறித்து அப்போஸ்தலர்கள் மிகுந்த பலமாய்ச் சாட்சிகொடுத்தார்கள்.” (அப்போஸ்தலர் 4:33) கடவுள் கொடுத்த வேலையை நிறைவேற்றுவதற்கு பவுல்தானே பலமளிக்கப்பட்டவராக இருந்தார். அவர் மதம்மாறி, பார்வையைத் திரும்பப்பெற்றப் பின்பு, ‘அதிகமாக [பலங்கொண்டு, NW] இவரே கிறிஸ்துவென்று திருஷ்டாந்தப்படுத்தி, தமஸ்குவில் குடியிருக்கிற யூதர்களைக் கலங்கப்பண்ணினார்.’—அப்போஸ்தலர் 9:22.
10. பவுலின் விஷயத்தில் கடவுளிடமிருந்து வந்த பலம் எவ்வாறு உதவியாயிருந்தது?
10 நிச்சயமாகவே, ஆயிரக்கணக்கான கிலோமீட்டரை உள்ளடக்கும் மூன்று மிஷனரி பயணங்களை மேற்கொள்வதற்கு வேண்டிய ஆவிக்குரிய மற்றும் மன திடத்தை யோசித்துப் பார்க்கையில், பவுலுக்குக் கூடுதலான பலம் தேவைப்பட்டது. அவர் எல்லாவிதமான துன்பங்களையும் சகித்துக்கொண்டார், சிறைவாசங்களை சகித்து, உயிர்த்தியாகத்தை எதிர்ப்பட்டார். எப்படி? அவர் பதிலளித்தார்: ‘கர்த்தர் எனக்குத் துணையாக நின்று, என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காக, என்னைப் பலப்படுத்தினார்.’—2 தீமோத்தேயு 4:6-8, 17; 2 கொரிந்தியர் 11:23-27.
11. கடவுளுடைய பலம் சம்பந்தமாக, கொலோசெயில் உள்ள உடன் ஊழியருக்கு பவுல் என்ன நம்பிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டினார்?
11 அப்படியானால், பவுல் கொலோசெயில் ‘கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களாயிருக்கிற தம் சகோதரர்களுக்கு’ எழுதுகையில், ‘சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான [யெகோவாவுடைய] வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்படுவார்கள்’ என்று உறுதியளித்தது ஆச்சரியமாயில்லை. (கொலோசெயர் 1:2, 11) அந்த வார்த்தைகள் முக்கியமாக அபிஷேகம்பெற்ற கிறிஸ்தவர்களுக்கு எழுதப்பட்டாலும், கிறிஸ்துவின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிற யாவரும் பவுல் எழுதியதிலிருந்து பெரிதும் பயனடையலாம்.
கொலோசெயில் பலமளிக்கப்படுவது
12, 13. கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தின் பின்னணி என்ன, அதற்குக் கிடைத்த பிரதிபலிப்பு என்னவாயிருந்திருக்கலாம்?
12 ஆசியாவைச்சேர்ந்த ரோம மாகாணத்திலிருக்கும் கொலோசெயிலுள்ள சபையானது, எப்பாப்பிரா என்ற பெயர்கொண்ட உண்மையுள்ள கிறிஸ்தவனுடைய பிரசங்கிப்பினிமித்தமாக உருவாகியிருக்கலாம். சுமார் பொ.ச. 58-ல், ரோமில் பவுல் சிறையிலடைக்கப்பட்டதைக் குறித்து அவர் கேள்விப்பட்டபோது, எப்பாப்பிரா அப்போஸ்தலனைச் சந்தித்து, கொலோசெயில் உள்ள தன் சகோதரர்களின் அன்பையும் உறுதியையும் பற்றி நல்ல அறிக்கையைச் சொல்லி உற்சாகப்படுத்த தீர்மானித்ததாகத் தெரிகிறது. மேலுமாக எப்பாப்பிரா கொலோசெ சபையில், சரிசெய்ய வேண்டியிருந்த சில பிரச்சினைகளைப் பற்றியும் உண்மையான அறிக்கையைக் கொடுத்திருக்கக்கூடும். இதனால் அந்தச் சபைக்கு உற்சாகமும் புத்திமதியும் அடங்கிய கடிதமெழுத பவுல் உந்துவிக்கப்பட்டிருக்கலாம். அந்தக் கடிதத்தின் 1-ம் அதிகாரத்திலிருந்து நீங்களுங்கூட அதிகமான உற்சாகத்தை அடையலாம், ஏனென்றால் யெகோவா எவ்வாறு தம்முடைய ஊழியரைப் பலப்படுத்துவார் என்பதை அது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
13 கொலோசெயில் உள்ள சகோதர சகோதரிகளை ‘கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற சகோதரர்கள்’ என்று பவுல் விவரித்தபோது அவர்கள் எவ்விதமாக உணர்ந்திருப்பார்கள் என்பதை உங்களால் எண்ணிப் பார்க்க முடியும். அவர்கள் ‘பரிசுத்தவான்களெல்லார்மேலுமுள்ள தங்கள் அன்பிற்காகவும்’ கிறிஸ்தவர்களான சமயம் முதல் ‘சுவிசேஷத்தினால் பலன்தருவதாலும்’ போற்றிப் பாராட்டப்பட வேண்டும்! இதே கூற்றுகளை நம்முடைய சபையைப் பொருத்தமட்டில், தனிப்பட்ட நபர்களாகிய நம்மைப் பற்றி சொல்ல முடியுமா?—கொலோசெயர் 1:2-8.
14. கொலோசெயர் சம்பந்தப்பட்டதில் பவுலின் ஆசை என்னவாயிருந்தது?
14 அறிக்கையைக் கேள்விப்பட்டு, செயல்படும்படி மிகவும் தூண்டப்பட்டவராக, பவுல் அவர்களுக்காக இடைவிடாமல் ஜெபம்பண்ணி, ‘எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் [கடவுளுடைய] சித்தத்தை அறிகிற [திருத்தமான, NW] அறிவினால் நிரப்பப்படவும், [யெகோவாவுக்குப், NW] பாத்திரராய் நடந்துகொள்ளவும்’ தான் வேண்டிக்கொள்ளாமல் இருந்ததில்லை என்று கொலோசெயரிடம் சொன்னார். அவர்கள் “சகலவித நற்கிரியைகளுமாகிய கனிகளைத் தந்து, தேவனை அறிகிற [திருத்தமான, NW] அறிவில் விருத்தியடைந்து, . . . சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவதற்கு, மகிமையான அவருடைய வல்லமையின்படி, எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்பட” வேண்டுதல் செய்தார்.—கொலோசெயர் 1:9-11.
இன்றும் பலப்படுத்தப்படுவது
15. கொலோசெயருக்குப் பவுல் எழுதியதில் பிரதிபலித்தது போன்ற அதே மனப்பான்மையை நாம் எவ்வாறு காட்டலாம்?
15 பவுல் என்னே சிறந்த முன்மாதிரியை நமக்கு வைத்தார்! பூமியெங்குமுள்ள நம்முடைய சகோதரர்கள் சகிக்கவும், கஷ்டங்களின் மத்தியில் தங்களுடைய சந்தோஷத்தைக் காத்துக்கொள்ளவும் நம்முடைய ஜெபங்கள் அவசியமாயிருக்கின்றன. வேறொரு சபையிலோ வேறொரு நாட்டிலோ உள்ள சகோதரர்கள் இன்னல்களை அனுபவிக்கிறார்கள் என்று கேள்விப்படும்போது, பவுலைப்போல நாமும் நம்முடைய ஜெபங்களில் குறிப்பாக, அவர்கள் சார்பாக ஜெபிக்க வேண்டும். ஒருவேளை அருகாமையிலுள்ள ஒரு சபை இயற்கை சேதத்தினாலோ ஏதோவொரு ஆவிக்குரிய கஷ்டத்தினாலோ பாதிக்கப்பட்டிருக்கலாம். அல்லது உள்நாட்டுக் கலவரத்தையோ வகுப்புவாத பேதங்களினால் ஏற்படும் படுகொலைகளையோ கிறிஸ்தவர்கள் சகித்துக் கொண்டிருக்கலாம். நம் சகோதரர்கள் “[யெகோவாவுக்குப், NW] பாத்திரராய் நடந்துகொள்ளவும்” சகிக்கையில் ராஜ்ய கனிகளைக் கொடுத்துக்கொண்டிருக்கவும் அறிவில் பெருகவும் அவர்களுக்கு உதவுமாறு கடவுளிடம் நாம் கேட்க வேண்டும். இவ்வாறு கடவுளுடைய ஊழியர் அவருடைய ஆவியின் பலத்தைப் பெற்று, “எல்லா வல்லமையாலும் பலப்படுத்தப்ப”டுகின்றனர். உங்களுடைய பிதா நீங்கள் சொல்வதைக் கேட்டு பதிலளிப்பார் என்று நிச்சயமாயிருக்கலாம்.—1 யோவான் 5:14, 15.
16, 17. (அ) பவுல் எழுதியதுபோல, எதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்? (ஆ) எந்தக் கருத்தில் கடவுளுடைய மக்கள் விடுவிக்கப்பட்டு மன்னிப்பைப் பெற்றிருக்கின்றனர்?
16 ‘ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, தங்களைத் தகுதியுள்ளவர்களாக்கின பிதாவை ஸ்தோத்திரிக்க’ வேண்டும் என்று கொலோசெயருக்கு பவுல் எழுதினார். பரலோகத்திலானாலுஞ்சரி அவருடைய ராஜ்யத்தின் பூமிக்குரிய பகுதியிலானாலுஞ்சரி, அவருடைய ஏற்பாட்டில் நம்மைச் சரியான இடத்தில் வைத்திருப்பதற்காக நாமும் நம்முடைய பரமபிதாவுக்கு நன்றி செலுத்தக்கடவோம். கடவுள் எப்படி அபூரண மனிதர்களைத் தம்முடைய கண்களுக்குத் தகுதியுள்ளவராக்கினார்? அபிஷேகம்பெற்ற தம்முடைய சகோதரர்களுக்குப் பவுல் எழுதினார்: ‘இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்தில் உட்படுத்தி, அவருக்குள், அவருடைய இரத்தத்தினாலே, பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது.’—கொலோசெயர் 1:12-14.
17 நம்முடைய நம்பிக்கை பரலோகத்துக்குரியதானாலும் பூமிக்குரியதானாலும், எதுவாக இருந்தாலுஞ்சரி, இருளடங்கிய இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையிலிருந்து மீட்டதற்காக, கடவுளுக்குத் தினந்தோறும் நாம் நன்றி செலுத்துகிறோம்; யெகோவாவின் அருமையான குமாரனுடைய மீட்கும் பலியாகிய மதிப்புவாய்ந்த ஏற்பாட்டில் விசுவாசம் வைப்பதன் மூலம் இது சாதிக்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 20:28) ஆவியால் அபிஷேகம்பெற்ற கிறிஸ்தவர்கள் விசேஷ விதத்தில் தங்களுக்குப் பொருந்தும் மீட்கும்பொருளிலிருந்து பயனடைந்திருக்கின்றனர்; இப்படியாக அவர்கள் ‘கடவுளுடைய அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு மாற்றப்படலாம்.’ (லூக்கா 22:20, 29, 30) ஆனால் “வேறே ஆடுகளும்” மீட்கும்பொருளிலிருந்து இப்பொழுதுங்கூட பயனடைகின்றனர். (யோவான் 10:16) அவர்கள் கடவுளுடைய நண்பர்களாக அவருக்கு முன்பாக நீதியான நிலைநிற்கையைக் கொண்டிருப்பதற்கு அவருடைய மன்னிப்பைப் பெறலாம். இந்த முடிவு காலத்தில் ‘ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷத்தை’ பிரஸ்தாபிப்பதில் அவர்கள் பெரும் பங்கை உடையவர்களாக இருக்கின்றனர். (மத்தேயு 24:14) மேலுமாக, கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியின் முடிவிற்குள்ளாக, முற்றிலும் நீதிமான்களாகி, மாம்சப்பிரகாரமாகப் பூரணமடையும் மகத்தான நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். வெளிப்படுத்துதல் 7:13-17-ல் உள்ள விவரிப்பை வாசிக்கையில், விடுதலையாக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டிருப்பதற்கு இது நிரூபணமாக இருக்குமென்பதை நீங்களே ஒத்துக்கொள்ளமாட்டீர்களா என்று பாருங்கள்.
18. கொலோசெயரில் குறிப்பிடப்பட்ட என்ன ஒப்புரவாகுதலைக் கடவுள் இன்னும் சாதித்துக்கொண்டிருக்கிறார்?
18 எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதருக்கு எவ்வளவாய் கடன்பட்டிருக்கிறோம் என்பதைக் காண பவுலின் கடிதம் நமக்கு உதவுகிறது. கிறிஸ்து மூலம் கடவுள் எதைச் சாதித்துக் கொண்டிருந்தார்? ‘அவர் சிலுவையில் சிந்தின இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள் யாவையும் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்வதற்காக [அது இருந்தது].’ ஏதேனில் நடந்த கலகத்தனத்திற்கு முன்பாக எப்படியிருந்ததோ அதேபோல சகல சிருஷ்டிப்புகளையும் தம்மோடு திரும்பவும் முழுமையான ஒத்திசைவுக்குள் கொண்டுவருவதே கடவுளுடைய நோக்கமாயிருக்கிறது. எல்லா காரியங்களையும் படைக்க பயன்படுத்தப்பட்டவரே இந்த ஒப்புரவாகுதலையும் சாதிக்க இப்பொழுது பயன்படுத்தப்படுகிறார்.—கொலோசெயர் 1:20.
எந்த நோக்கத்திற்காகப் பலப்படுத்தப்படுவது?
19, 20. பரிசுத்தராகவும் குற்றமற்றவராகவும் இருப்பது எதைச் சார்ந்திருக்கிறது?
19 நம்மில், கடவுளோடு ஒப்புரவான ஆட்களுக்குப் பொறுப்புகள் வருகின்றன. ஒருகாலத்தில் நாம் பாவமுள்ளவர்களாக, கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். இப்பொழுதோ இயேசுவின் பலியில் விசுவாசம் வைப்பவர்களாக, இனிமேலும் பொல்லாத கிரியைகள்மேல் நம்முடைய மனங்களைச் செலுத்தாதவர்களாக, நாம் அடிப்படையில் ‘பரிசுத்த, குற்றமற்ற’ நிலையில், “கண்டிக்கப்படாதவர்களாக [தேவனுக்கு] முன்பாக” நிற்கிறோம். (கொலோசெயர் 1:21) ஆச்சரியகரமாக, பூர்வகால உண்மையுள்ள சாட்சிகளால் கடவுள் எப்படி வெட்கப்படவில்லையோ அதேவிதமாக நம்மைக் குறித்ததிலும் நம்முடைய தேவனென்னப்படுவதில் அவர் வெட்கப்படவே மாட்டார். (எபிரெயர் 11:16) இன்று, அவருடைய புகழ்வாய்ந்த நாமத்தைத் தவறாக அடையாளப்படுத்துகிறோம் என்றோ, பூமியின் எல்லைகளில் அந்த நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்த பயப்படுகிறோம் என்றோ யாராலுமே நம்மைக் குற்றஞ்சாட்ட முடியாது!
20 எனினும், கொலோசெயர் 1:22, 23-ல் பவுல் சேர்த்த எச்சரிப்பைக் கவனியுங்கள்: “நீங்கள் கேட்ட சுவிசேஷத்தினால் உண்டாகும் நம்பிக்கையைவிட்டு அசையாமல், ஸ்திரமாயும் உறுதியாயும் விசுவாசத்திலே நிலைத்திருப்பீர்களானால் அப்படியாகும். அந்தச் சுவிசேஷம் வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரசங்கிக்கப்பட்டுவருகிறது.” யெகோவாவுக்கு உண்மையுள்ளவர்களாக நிலைத்திருப்பதன் பேரிலும் அவருடைய நேச குமாரனுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதன் பேரிலும் இவ்வளவும் சார்ந்திருக்கிறது. யெகோவாவும் இயேசுவும் எவ்வளவு காரியங்களை நமக்குச் செய்திருக்கின்றனர்! பவுலின் அறிவுரையைப் பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கு நம் அன்பைக் காட்டுவோமாக.
21. கிளர்ச்சியூட்டப்பட்டவர்களாக இருப்பதற்கு இன்று ஏன் நமக்கு அதிகப்படியான காரணம் இருக்கிறது?
21 கொலோசெய கிறிஸ்தவர்கள் தாங்கள் ‘கேட்ட சுவிசேஷம்’ ஏற்கெனவே “வானத்தின் கீழிருக்கிற சகல சிருஷ்டிகளுக்கும் பிரங்கிக்கப்பட்டு”விட்டதைக் கேள்விப்படுவதில் கிளர்ச்சியடைந்திருப்பர். இன்று ராஜ்ய நற்செய்தி எந்தளவு பிரசங்கிக்கப்பட்டு வருகிறது என்பதைக் கேள்விப்படுவது இன்னும் ஆர்வத்தைத் தூண்டுவதாயிருக்கிறது. அது 45 லட்சத்துக்கும் மிகவும் அதிகமான சாட்சிகளால் 230-க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரசங்கிக்கப்பட்டு வருகிறது. ஏன், ஒவ்வொரு ஆண்டும் சகல தேசங்களிலிருந்தும் கிட்டத்தட்ட 3,00,000 பேர் கடவுளோடு ஒப்புரவாகி வருகின்றனர்!—மத்தேயு 24:14; 28:19, 20.
22. கஷ்டத்தை அனுபவித்தாலும், கடவுள் நமக்கு என்ன செய்வார்?
22 தெரிந்தவண்ணமாக, கொலோசெயருக்கு இந்தக் கடிதத்தை எழுதுகையில் பவுல் சிறையிலடைக்கப்பட்டிருந்தார். என்றாலும் தன் வாழ்க்கையைக் குறித்து அவர் எவ்விதத்திலும் வருத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக, “இப்பொழுது நான் உங்கள்நிமித்தம் அநுபவிக்கிற பாடுகளில் சந்தோஷமடை”கிறேன், என்று சொன்னார். “சந்தோஷத்தோடே கூடிய எல்லாப் பொறுமையும் நீடியசாந்தமும் உண்டாவ”தென்றால் என்ன என்பதைப் பவுல் அறிந்திருந்தார். (கொலோசெயர் 1:11, 24) ஆனால் தன்னுடைய சொந்த வலிமையால் செய்யவில்லை என்பதை அறிந்திருந்தார். யெகோவா அவரைப் பலப்படுத்தினார்! அவ்வாறேதான் இன்றும்! சிறையிலடைக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான சாட்சிகள் யெகோவாவைச் சேவிப்பதிலிருந்து வரும் சந்தோஷத்தை இழந்துவிடவில்லை. அதற்குப் பதிலாக, ஏசாயா 40:29-31-ல் உள்ள கடவுளுடைய வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அவர்கள் போற்ற ஆரம்பித்திருக்கின்றனர்: “சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடு[க்கிறார்] . . . கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடை”வார்கள்.
23, 24. கொலோசெயர் 1:25-ல் குறிப்பிடப்பட்ட பரிசுத்த இரகசியம் என்ன?
23 கிறிஸ்துவை மையங்கொண்டிருக்கும் இந்த நற்செய்தியைப் பற்றிய ஊழியம் பவுலுக்கு அதிகத்தைக் குறித்தது. மற்ற ஆட்களும் கடவுளின் நோக்கத்தில் கிறிஸ்துவுடைய பங்கின் மதிப்பைப் பாராட்ட வேண்டும் என்று அவர் விரும்பினார். ஆதலால், “ஆதிகாலங்களுக்கும் தலைமுறை தலைமுறைகளுக்கும் மறைவாயிருந்[த] . . . [பரிசுத்த, NW] இரகசியம்” என்று அதை விவரித்தார். என்றாலும், அது இரகசியமாகவே இருக்கவேண்டியதில்லை. பவுல் மேலும் சொன்னார்: ‘இப்பொழுது அவருடைய பரிசுத்தவான்களுக்கு வெளியாக்கப்பட்டது.’ (கொலோசெயர் 1:25) ஏதேனில் கலகத்தனம் எழும்பினபோது, யெகோவா வரவிருக்கும் மேன்மையான காரியங்களைக் குறித்து வாக்களித்தார். ‘ஸ்திரீயின் வித்து சர்ப்பத்தின் தலையை நசுக்கும்’ என்று அவர் முன்னுரைத்தார். (ஆதியாகமம் 3:15) இது எதை அர்த்தப்படுத்தியது? தலைமுறைகளாக, நூற்றாண்டுகளாக, புதிராகவே இருந்தது. பிறகு இயேசு வந்து, “ஜீவனையும் அழியாமையையும் சுவிசேஷத்தினாலே வெளியரங்கமாக்கினார்.”—2 தீமோத்தேயு 1:10.
24 ஆம், அந்தப் “பரிசுத்த இரகசியம்” கிறிஸ்துவையும் மேசியானிய ராஜ்யத்தையும் சுற்றியே மையங்கொண்டு இருக்கிறது. பவுல் “பரலோகத்திலுள்ளவைக”ளை குறிப்பிடுபவராக, கிறிஸ்துவோடு ராஜ்ய ஆட்சியில் பங்குகொள்ளப்போகும் ஆட்களைச் சுட்டிக்காட்டினார். இவர்கள் “பூலோகத்திலுள்ளவைகள்” யாவற்றிற்கும், இங்கேயே நித்திய பரதீஸை அனுபவிப்பவர்களுக்குச் சொல்லமுடியா ஆசீர்வாதங்களைக் கொண்டுவருவதற்கு உபகரணங்களாக இருப்பர். அப்படியானால், இந்த “[பரிசுத்த, NW] இரகசியத்திலுள்ள மகிமையின் ஐசுவரிய”த்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டுப் பேசியது எவ்வளவு பொருத்தமாயிருந்தது என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.—கொலோசெயர் 1:20, 27.
25. கொலோசெயர் 1:29-ல் குறிப்பிட்டுள்ளபடி, இப்போது நம்முடைய மனப்பான்மை என்னவாயிருக்க வேண்டும்?
25 அந்த ராஜ்யத்தில் தன்னுடைய இடத்துக்காகப் பவுல் எதிர்நோக்கியிருந்தார். எனினும் வெறுமனே உட்கார்ந்துகொண்டு நம்பிக்கொண்டிருக்கிற ஒரு விஷயமல்ல என்பதை அவர் உணர்ந்திருந்தார். “அதற்காக நான் எனக்குள்ளே வல்லமையாய்க் கிரியை நடப்பிக்கிற அவருடைய பலத்தின்படி போராடிப் பிரயாசப்படுகிறேன்.” (கொலோசெயர் 1:29) யெகோவா, உயிரைக் காப்பாற்றும் ஊழியத்தை நிறைவேற்ற பவுலைக் கிறிஸ்து மூலம் பலப்படுத்தினார் என்பதைக் கவனியுங்கள். இன்று நமக்கும் யெகோவா அவ்விதமாகச் செய்வார். ஆனால், ‘சத்தியத்தை முதலில் கற்றுக்கொண்டபோது கொண்டிருந்த சுவிசேஷ ஆவியை நான் கொண்டிருக்கிறேனா?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்ள வேண்டும். உங்களுடைய பதில் என்ன? ‘கிரியை நடப்பிக்கிற யெகோவாவின் பலத்தின்படி நாம்தாமே போராடிப் பிரயாசப்பட’ எது நம் ஒவ்வொருவருக்கும் உதவக்கூடும்? அடுத்த கட்டுரை இதே பொருளின் பேரில் இருக்கிறது.
கவனித்தீர்களா?
◻ மனிதர்களின் சார்பாக யெகோவா பலத்தைக் காட்ட முடியும் என்று ஏன் நிச்சயமாயிருக்கலாம்?
◻ கொலோசெயர் 1-ம் அதிகாரத்தில் உள்ள பவுலின் வார்த்தைகளின் பின்னணி என்ன?
◻ கொலோசெயர் 1:20-ல் குறிப்பிடப்பட்ட ஒப்புரவாகுதலைக் கடவுள் எவ்வாறு சாதிக்கிறார்?
◻ அவருடைய பலத்தினால், நம் மூலம் யெகோவாவால் எதைச் சாதிக்க முடியும்?
[பக்கம் 8-ன் வரைப்படம்/படம்]
கொலோசெ