ராஜ்ய பிரஸ்தாபிகளின் அறிக்கை
இராஜ்யத்தினுடைய சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும்
மெய் கிறிஸ்தவம் பரவுவதைத் தடை செய்ய பல நூற்றாண்டுகளாக கடவுளின் முக்கிய எதிரி, பிசாசாகிய சாத்தான் தன் முயற்சிகளில் தந்திரமாக அரசாங்கங்களையும் பொய் மதங்களையும் பயன்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த முறைகள் தோல்வியடையும். “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்” என்று இயேசு முன்னறிவித்தார் [“பிரசங்கிக்கப்படலாம்” என்றோ “பிரசங்கிக்கப்படக்கூடும்” என்றோ சொல்லவில்லை].—மத்தேயு 24:14.
சாத்தானின் தோல்வி கிரீஸில் வெளிப்படையாயிற்று. அத்தேசத்தில் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் யெகோவாவின் சாட்சிகள் ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதிலிருந்து தடை செய்ய முயற்சி செய்திருக்கிறது. ஆனால், எதிர்ப்பின் மத்தியிலும் பைபிள் சத்தியங்கள் நேர்மை இருதயமுள்ள ஜனங்களை இறுதியில் எட்டுகின்றன என்பதைப் பின்வரும் அனுபவம் காண்பிக்கிறது.
சுமார் 30 வருடங்களுக்கு முன்பு, ஒரு கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி நற்செய்தியை ஏற்றுக்கொண்டு, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆவதற்கும்கூட விருப்பம் தெரிவித்தார். என்றபோதிலும், அவருடைய உறவினர்கள் அவர் எடுத்த இந்தப் படியை பலமாக எதிர்த்தனர், அவர் யெகோவாவின் சாட்சிகளோடு கொண்டிருந்த கூட்டுறவை விட்டுவிடும்படி அழுத்தம் கொடுத்தனர். அவர் தன் குடும்பத்தை பிரியப்படுத்துவதற்காக, ஒரு பாதிரியாக தன் வேலையை தொடர்ந்து செய்து வந்தார்; இருப்பினும், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு உதவியிருந்தனர் என்பதையும் ஒரு பொய் மதத்தில் முக்கியமான ஸ்தானத்துக்காக அதை விட்டுக்கொடுத்து விட்டார் என்பதையும் அவர் எப்போதும் உணர்ந்தார்.
இருப்பினும், சந்தர்ப்பம் எழும்புகையில் யெகோவாவின் சாட்சிகள் சார்பாக பேசினார். மக்கள் பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொள்ள விரும்பினால், அவர்கள் சாட்சிகளோடு படிக்க வேண்டும் என்று அநேக சமயங்களில் அவர்களுக்குப் புத்திமதி கூறியிருக்கிறார். பல வருடங்களாக உண்மையில் சிலர் அவருடைய பரிந்துரையைப் பின்பற்றியிருக்கின்றனர்.
சமீபத்தில் அந்தப் பாதிரி அதிக நோய்வாய்ப்பட்டார், விரைவில் மரித்துப் போவார் என்பதையும் அறிந்திருந்தார். மருத்துவமனையில் இருக்கையில், அவர் தன் பிள்ளைகளை அழைத்தார், அவர்கள் அனைவரும் அவருடைய கட்டிலருகே கூடினர்.a அவர் மரித்துப் போனால் அவர்கள் அவரை மறுபடியும் பார்க்கக்கூடும் என்று அவர்களிடம் விளக்கினார். இப்பூமியின் மீது பரதீஸில் வாழ்வதற்கு மனிதர்கள் யெகோவாவால் உயிர்த்தெழுப்பப்படுவர் என்ற பைபிள் போதனையைப் பற்றி அவர் அவர்களிடம் பேசினார். ஆனால் அவர்கள் அது சம்பவிப்பதை உண்மையிலேயே பார்க்க விரும்பினால், அவர்கள் பைபிளிலிருந்து சத்தியத்தைக் கற்றறிந்து பொய் மதத்திலிருந்து தங்கள் கூட்டுறவைத் துண்டித்துக்கொள்ள வேண்டும் என்றும் கூறினார். யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவு கொண்டு, மெய்யான கிறிஸ்தவர்களாக ஆவது எப்படி என்பதை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி அவர்களைக் கேட்டுக் கொண்டார்.
அதற்குப் பிறகு சிறிது காலத்துக்குள் அந்தப் பாதிரி இறந்துவிட்டார். இருந்தபோதிலும், தன் பிள்ளைகளை விட்டுப் பிரிவதற்கு முன் அவர்களுக்கு அவர் கொடுத்த புத்திமதி நல்ல விளைவுகளைக் கொண்டு வந்தது. அவருடைய மகள், அவருடைய உறவினர்களில் அநேகரைப் போலவே யெகோவாவின் சாட்சிகளையும் அவர்களுடைய வேலையையும் அதிகமாக எதிர்த்தாள். ஆனால் மரித்துக் கொண்டிருந்த தன் தகப்பனின் உண்மையான வேண்டுகோளை அவளால் புறக்கணிக்க முடியவில்லை. ஆகையால் அவள் யெகோவாவின் சாட்சிகளோடு விரைவில் தொடர்புகொண்டு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். சமீபத்தில் அவள் ஒரு சாட்சியாக ஆனாள், யெகோவா தேவனுக்கு தன் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதலின் மூலம் அடையாளப்படுத்திக் காண்பித்தாள்.
கிரீஸ் தேசத்திலும் அதோடுகூட 230-க்கும் அதிகமான மற்ற தேசங்களிலும் யெகோவாவின் சாட்சிகள் கடவுளின் பரிசுத்த ஆவியின் வல்லமையின் பேரில் சார்ந்திருக்கின்றனர். பரிசுத்த ஆவியின் முழு ஆதரவோடுகூட அவர்கள் இயேசுவின் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தில் பங்குகொள்கின்றனர்: “பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.”—அப்போஸ்தலர் 1:8.
[அடிக்குறிப்புகள்]
a கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் அதன் பாதிரிகளை மணம் செய்துகொள்ள அனுமதிக்கிறது.