நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுளை சேவித்தல்
கிமோன் ப்ரோகாக்கிஸ் சொன்னபடி
அது 1955-ஆம் வருடத்தில் கடுங்குளிராயிருந்த ஒரு மாலை நேரம். செய்தித்தாள் விற்பனை கடையில் வேலை செய்துகொண்டிருந்த எங்கள் 18 வயது மகன் யோர்காஸ் வீடு திரும்பாமல் இருந்ததைக் குறித்து நானும் என் மனைவி யனூலாவும் கவலைப்பட ஆரம்பித்தோம். எதிர்பாராதவிதமாய், ஒரு போலீஸ்காரர் எங்கள் வீட்டுக் கதவை தட்டினார். “உங்கள் மகன் சைக்கிளில் வீடு திரும்புகையில் ஒரு வாகனம் மோதியதால் இறந்துவிட்டான்,” என்று அவர் சொன்னார். பிறகு அவர் முன்பக்கம் சாய்ந்து மெல்ல இரகசியமாக சொன்னார்: “அது ஒரு விபத்து என்று அவர்கள் உங்களிடம் சொல்வார்கள், ஆனால் அவன் கொலை செய்யப்பட்டான் என்று நான் சொல்வதை நம்புங்கள்.” உள்ளூர் பாதிரியும் சில இராணுவ துணைப்படை தலைவர்களும் ஒன்றுகூடிச் சதிசெய்து அவனைக் கொலை செய்தனர்.
அந்த வருடங்களின்போது, சண்டைகளும் துன்பங்களும் நிறைந்திருந்த காலங்களிலிருந்து கிரீஸ் முன்னிலைமைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருப்பது ஆபத்தான காரியமாக இருந்தது. கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் மற்றும் இராணுவ துணைப்படை அமைப்புகளின் பலத்தை நான் நேரில் கண்ட அனுபவமிருக்கிறது, ஏனென்றால் 15 வருடங்களுக்கும் மேலாக நான் அவற்றில் சுறுசுறுப்பான அங்கத்தினனாக இருந்திருக்கிறேன். 40 வருடங்களுக்கு முன்பு எங்கள் குடும்பத்தில் நடந்த இந்தச் சோக நிகழ்ச்சிக்கு வழிநடத்திய சம்பவங்களைப் பற்றி நான் உங்களுக்கு சொல்லுகிறேன்.
கிரீஸில் வளர்ந்து வருதல்
நான் கிரீஸில் கல்கிஸ் என்ற பட்டணத்துக்கு அருகே ஒரு சிறியகிராமத்தில் செல்வமிக்க குடும்பத்தில் 1902-ல் பிறந்தேன். என் தந்தை உள்ளூர் அரசியலில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார், எங்கள் குடும்பம் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் பக்தியுள்ள அங்கத்தினர்களாக இருந்தனர். என் தேசத்து மக்களில் பெரும்பாலானோர் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்த சமயத்தில் நான் அரசியல் மற்றும் மத புத்தகங்களை ஆர்வத்தோடு வாசிப்பவனாக ஆனேன்.
20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மிகவும் பரவலாயிருந்த வறுமையும் அநீதியும், மேம்பட்ட நிலைமைகளையுடைய ஒரு உலகை உருவாக்க வேண்டும் என்ற விருப்பத்தை எனக்குள் ஏற்படுத்தின. என் தேசத்து மக்களின் வருந்தத்தக்க நிலையை மதம் மேம்படுத்த வேண்டும் என்று நான் நினைத்தேன். மதசம்பந்தமான விஷயங்களில் எனக்கு மனவிருப்பம் இருந்ததால், எங்கள் சமுதாயத்தின் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியாக நான் ஆகவேண்டும் என்று என் கிராமத்தில் இருந்த முக்கியத்துவம்வாய்ந்த நபர்கள் தங்கள் கருத்தை தெரிவித்தனர். இருப்பினும், நான் அநேக துறவிமடங்களுக்குச் சென்று பிஷப்புகளோடும் மடாதிபதிகளோடும் நீண்ட கலந்தாலோசிப்புகளை கொண்டிருந்தபோதிலும், அப்படிப்பட்ட பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு நான் தயாராக உணரவோ அல்லது விரும்பவோ இல்லை.
உள்நாட்டுப் போரின் மத்தியில்
பல வருடங்களுக்குப் பின், ஏப்ரல் 1941-ல் கிரீஸ் நாசி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. கொலைகள், பஞ்சம், இழப்புகள், சொல்லமுடியாத மானிட துன்பங்கள் அடங்கிய துயர்மிகுந்த காலப்பகுதியை இது ஆரம்பித்து வைத்தது. ஒரு பலமான எதிர்ப்பு இயக்கம் உருவானது, படையெடுத்துவந்த நாசிக்களோடு சண்டையிட்ட ஒரு கொரில்லா தொகுதியோடு நான் சேர்ந்துகொண்டேன். அதன் காரணமாக, என் வீட்டுக்கு பல தடவை தீ வைத்தனர், துப்பாக்கி வெடிப்பினால் நான் காயமடைந்திருக்கிறேன், என் பயிர்கள் அழிக்கப்பட்டன. 1943-ன் ஆரம்பத்தில் நானும் என் குடும்பமும் கரடுமுரடான மலைகளுக்கு ஓடிப்போவதைத் தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை. அக்டோபர் 1944-ல் ஜெர்மன் குடியிருப்பாட்சியின் முடிவு வரை நாங்கள் அங்கு இருந்தோம்.
ஜெர்மானியர்கள் அவ்விடத்தை விட்டுச் சென்றபின்பு, உள்நாட்டு அரசியல் மற்றும் உள்நாட்டுக் கலகங்கள் எழ ஆரம்பித்தன. நான் சேர்ந்திருந்த கொரில்லா எதிர்ப்பு தொகுதி உள்நாட்டுப் போரில் பெரிய சண்டையிடும் படைகளில் ஒன்றாக ஆனது. நீதி, சமத்துவம், தோழமை போன்ற கம்யூனிஸ குறிக்கோள்கள் என்னைக் கவர்ந்தபோதிலும், அவற்றின் உண்மையான நிலை இறுதியில் என்னை முழுவதுமாக ஏமாற்றமடையச் செய்தது. அந்தத் தொகுதியில் எனக்கு உயர்வான ஸ்தானம் இருந்ததால், அதிகார பீடத்தில் ஏறியவுடன் ஆட்களை அது எவ்வாறு மோசமாக்கும் போக்கை உடையதாய் இருக்கிறது என்பதை நான் நேரடியாக பார்த்தேன். மேலீடாகத் தோன்றுவதற்கு மெச்சத்தகுந்த கோட்பாடுகளும் குறிக்கோள்களும் இருந்தபோதிலும், சுயநலமும் அபூரணமும் மிகச்சிறந்த அரசியல் நோக்கங்களை கெடுத்துவிடுகின்றன.
உள்நாட்டுப் போரின் பல்வேறு கட்சிகளில், ஆர்த்தடாக்ஸ் குருமார் தங்கள் சொந்த மதத்தினரையே கொலை செய்வதற்கு போராயுதங்களை எடுத்துக்கொண்டது எனக்கு விசேஷமாக அதிர்ச்சியூட்டியது! ‘“பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று எச்சரித்திருந்த இயேசு கிறிஸ்துவை பிரதிநிதித்துவம் செய்வதாக இந்த குருமார் எப்படி சொல்லலாம்?’ என்று நான் நினைத்துக் கொண்டேன்.—மத்தேயு 26:52.
1946-ல் ஏற்பட்ட உள்நாட்டுப் போரின்போது, மத்திப கிரீஸில் உள்ள லாமினா என்ற பட்டணத்துக்கு அருகே நான் ஒளிந்துகொண்டிருந்தேன். என் உடைகள் முழுவதும் கந்தலாய்ப் போய்விட்டன, ஆகையால் நான் வேற்றுடை அணிந்துகொள்ள தீர்மானித்து, பட்டணத்தில் இருந்த ஒரு தையற்காரனிடம் சில புதிய ஆடைகள் தைப்பதற்காக சென்றேன். நான் அங்கு சென்றபோது, பரபரப்பான தர்க்கம் நடந்துகொண்டிருந்தது, விரைவில் நான் அரசியலைப் பற்றியல்ல, ஆனால் முன்பு நான் பெரிதும் நேசித்திருந்த மதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். விவரமறிந்த என் கருத்துக்களை கவனித்து, பார்த்துக்கொண்டிருந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட ‘இறைமையியல் பேராசிரியரிடம்’ நான் பேசும்படி ஆலோசனை கூறினார்கள். உடனடியாக அவர்கள் அவரை அழைத்துவர சென்றார்கள்.
நம்பத்தக்க நம்பிக்கையைக் கண்டுபிடித்தல்
அதைப் பின்தொடர்ந்து வந்த கலந்தாலோசிப்பில், என் நம்பிக்கைகளுக்கு ஆதாரம் என்ன என்று அந்தப் “பேராசிரியர்” கேட்டார். “பரிசுத்தமான குருமாரும் திருச்சபை சார்ந்த குருமார் சபையுமே,” என்று நான் பதிலளித்தேன். அதை மறுத்துப்பேசுவதற்கு பதிலாக, அவர் தன் சிறிய பைபிளை மத்தேயு 23:9, 10-க்குத் திருப்பி இயேசுவின் வார்த்தைகளை வாசிக்கும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்: “பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். நீங்கள் குருக்கள் என்றும் அழைக்கப்படாதிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குக் குருவாயிருக்கிறார்.”
அது எனக்கு தெளிவு தரும் விஷயமாக இருந்தது! இந்த மனிதர் உண்மையைச் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை நான் உணர்ந்துகொண்டேன். அவர் தன்னை யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக அடையாளப்படுத்திக் கொண்டபோது, வாசிப்பதற்கு சில பிரசுரங்களை கொடுக்கும்படி அவரிடம் கேட்டேன். அவர் என்னிடம் வெளிச்சம் என்ற ஆங்கில புத்தகத்தை கொண்டுவந்து கொடுத்தார், அதில் பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதலின் பேரில் விளக்கவுரை இருந்தது, அதை நான் மறுபடியும் என் மறைவிடத்துக்கு எடுத்துச் சென்றேன். வெளிப்படுத்துதலில் குறிப்பிடப்பட்டிருக்கும் மூர்க்க மிருகங்கள் எனக்கு நீண்ட காலமாக இரகசியமாக இருந்திருக்கின்றன, ஆனால் இவை நம்முடைய 20-ஆம் நூற்றாண்டில் இருக்கும் அரசியல் அமைப்புகளைப் பிரதிநிதித்துவம் செய்தன என்பதை நான் இப்போது கற்றறிந்து கொண்டேன். நம்முடைய காலங்களுக்கு பைபிள் நடைமுறையான அர்த்தத்தை உடையதாயிருக்கிறது என்பதையும் நான் அதைப் படித்து அதிலுள்ள சத்தியங்களின்படி என் வாழ்க்கையை மாற்றியமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் நான் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.
கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டேன்
அதற்குப் பிறகு கொஞ்ச காலத்துக்குள், நான் ஒளிந்திருந்த இடத்துக்குள் படைவீரர்கள் திடீரென நுழைந்து என்னைக் கைது செய்தார்கள். நான் ஒரு இருட்டறைக்குள் போடப்பட்டேன். கொஞ்ச காலமாக நாடு கடத்துவதற்காக என்னை தேடிக்கொண்டிருந்தபடியால், எனக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படும் என்று நான் எதிர்பார்த்தேன். அங்கே என்னிடம் முதலில் பேசிய சாட்சி என்னை வந்து சிறையில் சந்தித்தார். யெகோவாவின் மீது முழுமனதோடுகூடிய நம்பிக்கை வைக்கும்படி அவர் என்னை உற்சாகப்படுத்தினார், நான் அவ்வாறே செய்தேன். நான் நிக்காரியா என்ற ஏஜியன் தீவுக்கு ஆறு மாதங்களுக்கு நாடு கடத்தப்படும்படி தீர்ப்பளிக்கப்பட்டேன்.
நான் வந்து சேர்ந்தவுடனேயே, என்னை ஒரு கம்யூனிஸ்ட்டாக அல்ல, ஆனால் ஒரு யெகோவாவின் சாட்சியாக அடையாளம் காண்பித்துக்கொண்டேன். பைபிள் சத்தியங்களைக் கற்றுக்கொண்ட மற்றவர்களும்கூட நாடுகடத்தப்பட்டிருந்தனர், ஆகையால் நான் அவர்களைக் கண்டுபிடித்தேன், நாங்கள் ஒன்றுசேர்ந்து ஒழுங்காக பைபிளைப் படித்தோம். வேதாகமத்திலிருந்து கூடுதலான அறிவையும் நம்முடைய நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுளாகிய யெகோவாவை நன்றாக புரிந்துகொள்ளவும் அவர்கள் எனக்கு உதவி செய்தனர்.
1947-ல் என் தண்டனை முடிவுற்றபோது, நான் அரசாங்கக் குற்ற விசாரணை வழக்கறிஞரின் அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டேன். அவர் என் நடத்தையால் கவரப்பட்டதாகவும், நான் மறுபடியும் நாடு கடத்தப்பட்டால் என்னுடைய குணநலன்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவருடைய பெயரை உபயோகிக்கலாம் என்றும் அவர் என்னிடம் கூறினார். நான் நாடு கடத்தப்பட்டிருந்த சமயத்தில் என் குடும்பம் ஆதென்ஸுக்கு வந்து சேர்ந்தது, அப்போது நான் யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன், விரைவில் யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்ததன் அடையாளமாக முழுக்காட்டப்பட்டேன்.
மதம் மாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டேன்
மதம் மாற்றுவதை தடைசெய்து, 1938 மற்றும் 1939-ல் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் அடிப்படையில் பல ஆண்டுகளாக கிரீஸ், யெகோவாவின் சாட்சிகளுக்கு தண்டனை அளித்தது. இவ்வாறு, 1938 முதல் 1992 வரை, கிரீஸில் 19,147 சாட்சிகள் கைது செய்யப்பட்டனர், மொத்தமாக 753 வருடங்கள் அடங்கிய தண்டனைகளை நீதிமன்றம் விதித்தது, அதில் 593 வருடங்கள் உண்மையில் தண்டனை அனுபவித்துத் தீர்க்கப்பட்ட வருடங்களாக இருந்தன. தனிப்பட்டவிதமாக, கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்ததற்காக நான் 40 தடவைக்கு மேல் கைது செய்யப்பட்டேன், மொத்தமாக பல்வேறு சிறைகளில் 27 மாதங்கள் தண்டனை அனுபவித்தேன்.
சால்சிசில் இருந்த கிரேக்க ஆர்த்தடாக்ஸ் குருமார் ஒருவருக்கு நான் எழுதியிருந்த கடிதத்தின் விளைவாக, ஒரு சமயம் நான் கைது செய்யப்பட்டேன். கிறிஸ்தவமண்டலமா அல்லது கிறிஸ்தவமா—எது “உலகத்தின் ஒளி?” என்ற ஆங்கிலத்திலுள்ள சிறு புத்தகத்தை எல்லா குருமாருக்கும் அனுப்பும்படி 1955-ல் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் ஊக்குவிக்கப்பட்டிருந்தன. நான் எழுதியிருந்த உயர்பதவியிலிருந்த குருமாரில் ஒருவர் நான் மதம் மாற்றுவதாக என்மீது வழக்குத்தொடுத்தார். விசாரணையின்போது யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராயிருந்த சட்டத்துறை தலைவரும் உள்ளூர் வழக்கறிஞரும், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை மெய்க் கிறிஸ்தவர்கள் பிரசங்கிக்க வேண்டிய கடமையை விளக்கி குற்றச்சாட்டுக்கு எதிராக மிகச்சிறந்த முறையில் வழக்காடினார்கள்.—மத்தேயு 24:14.
“அந்தக் கடிதத்தையும் சிறு புத்தகத்தையும் நீங்கள் வாசித்தீர்களா?” என்று நீதிமன்றத்தில் தலைமைதாங்கி நடத்தும் நீதிபதி திருச்சபை முதல்வரை (பிஷப்புக்கு கீழே இருந்த ஒரு சர்ச் உயர்பதவியாளர்) கேட்டார்.
“இல்லை, நான் அந்த உறையை திறந்தவுடனேயே அவற்றைக் கிழித்து எறிந்துவிட்டேன்!” என்று அவர் ஆவேசத்தோடு பதிலளித்தார்.
“அப்படியென்றால் இந்த மனிதர் உங்களை மதம் மாற்றினார் என்று நீங்கள் எப்படி சொல்லமுடியும்?” என்று தலைமைதாங்கி நடத்தும் நீதிபதி கேட்டார்.
அடுத்து, முழு குவியலாக இருந்த புத்தகங்களைப் பொது நூலகங்களுக்கு அன்பளிப்பாக அளித்த பேராசிரியர்கள் மற்றும் இன்னும் சிலருடைய உதாரணங்களை எங்கள் சட்டத்துறை தலைவர் எடுத்துக் காண்பித்தார். “அந்த ஜனங்கள் மற்றவர்களை மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள் என்று நீங்கள் சொல்வீர்களா?” என்று கேட்டார்.
தெளிவாகவே, அப்படிப்பட்ட நடவடிக்கை மதம் மாற்றுவதாக இருக்கவில்லை. “குற்றமற்றவர்” என்ற தீர்ப்பை கேட்டபோது நான் யெகோவாவுக்கு நன்றி கூறினேன்.
என் மகனின் மரணம்
ஆர்த்தடாக்ஸ் குருமார் பின்னின்று தூண்டிவிட்டதால் என் மகன் யோர்காஸும்கூட தொடர்ந்து வழக்கமாய் அலைக்கழிக்கப்பட்டான். கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதில் அவன் இளமை வலுவோடு வைராக்கியமாக இருந்ததால் அவனும்கூட பல தடவை கைதுசெய்யப்பட்டான். இறுதியில், எதிராளிகள் அவனைக் கொலை செய்வதற்குத் தீர்மானித்தனர், அதே சமயத்தில், பிரசங்கிப்பதை நிறுத்தும்படி எஞ்சியிருந்த எங்களை மிரட்டி எச்சரித்து செய்தி அனுப்பினர்.
எங்கள் மகனைக் கொலை செய்வதற்கு உள்ளூர் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரியும் சில இராணுவ துணைப்படை தலைவர்களும் ஒன்றுசேர்ந்து சதிசெய்திருந்ததாக யோர்காஸின் மரணத்தைக் குறித்து அறிக்கை செய்வதற்கு எங்கள் வீட்டுக்கு வந்த போலீஸ்காரர் கூறினார். அப்படிப்பட்ட “விபத்துக்கள்” அந்த இக்கட்டான காலங்களில் சர்வசாதாரணமாய் இருந்தன. அவனுடைய மரணம் துக்கத்தை ஏற்படுத்தியபோதிலும், பிரசங்க வேலையில் சுறுசுறுப்பாகவும் யெகோவாவின் பேரில் முழுமையான நம்பிக்கை வைக்கவும் நாங்கள் எடுத்த தீர்மானம் பலப்படவே செய்தது.
யெகோவா மீது நம்பிக்கை வைக்கும்படி மற்றவர்களுக்கு உதவுதல்
மத்திப 1960-களில், ஆதென்ஸிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்த ஸ்காலா ஆரோப்பெஸ் என்ற கடலோர கிராமத்தில் என் மனைவியும் பிள்ளைகளும் கோடை மாதங்களை செலவழிப்பார்கள். அந்தச் சமயத்தில் சாட்சிகள் அங்கு வசித்துக்கொண்டில்லை, ஆகையால் நாங்கள் அயலாரிடம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தோம். உள்ளூர் விவசாயிகள் சிலர் சாதகமாக பிரதிபலித்தனர். பகல் வேளையின்போது ஆண்கள் நீண்ட மணிநேரங்கள் தங்கள் வயல்களில் வேலை செய்ததால், நாங்கள் அவர்களோடு பொழுதுசென்ற பிறகு இரவில் பைபிள் படிப்புகளை நடத்தினோம், அவர்களில் அநேகர் சாட்சிகளாக ஆனார்கள்.
யெகோவா எவ்வாறு எங்கள் முயற்சிகளை சுமார் 15 வருடங்களாக ஆசீர்வதித்தார் என்பதைக் கண்டபோது, அக்கறை காண்பித்த ஆட்களோடு பைபிள் படிப்புகளை நடத்துவதற்காக நாங்கள் அங்கு ஒவ்வொரு வாரமும் பயணம் செய்தோம். அங்கு எங்களோடு படித்துக்கொண்டிருந்த ஏறக்குறைய 30 நபர்கள் முழுக்காட்டுதல் பெறுமளவிற்கு முன்னேறியிருக்கின்றனர். ஆரம்பத்தில், ஒரு படிப்பு தொகுதி அமைக்கப்பட்டது, கூட்டங்களை நடத்துவதற்கு நான் நியமிக்கப்பட்டேன். பின்னர் அந்தத் தொகுதி ஒரு சபையாக ஆனது, இன்று அந்தப் பிராந்தியத்தில் நூறுக்கும் மேலான சாட்சிகள் மலக்காசா சபையை உண்டுபண்ணுகின்றனர். நாங்கள் உதவிசெய்த நபர்களில் நான்கு பேர் இப்போது முழு நேர ஊழியர்களாக சேவை செய்து வருவதைக் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
சுதந்தரித்துக்கொண்ட செழிப்பான சொத்து
நான் யெகோவாவுக்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்து சிறிது காலத்துக்குப் பிறகு, என் மனைவி ஆவிக்குரியப் பிரகாரமாய் முன்னேற்றமடைய ஆரம்பித்து முழுக்காட்டப்பட்டாள். துன்புறுத்தல் நிறைந்த கடினமான காலப்பகுதியின்போது, அவளுடைய விசுவாசம் பலமாக நிலைத்திருந்தது, அவள் தன்னுடைய உத்தமத்தன்மையில் உறுதியாகவும் தடுமாற்றமடையாமலும் இருந்தாள். நான் அடிக்கடி சிறையிலடைக்கப்பட்டதன் விளைவாக அனுபவித்த அநேக இன்னல்களைக் குறித்து அவள் ஒருபோதும் குறைகூறவேயில்லை.
கடந்த பல வருடங்களாக நாங்கள் அநேக பைபிள் படிப்புகளை ஒன்றுசேர்ந்து நடத்தினோம், அவள் தன்னுடைய எளிய மற்றும் உற்சாகமிகுந்த அணுகுமுறையின் மூலம் அநேகருக்கு திறம்பட்டவிதத்தில் உதவி செய்தாள். தற்போது, அவள் பத்திரிகை மார்க்கத்தில் ஈடுபட்டு வருகிறாள், அதில் டஜன்கணக்கில் ஆட்களுக்கு ஒழுங்காக காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளித்துவருவது உட்பட்டிருக்கிறது!
என் அன்புள்ள துணைவியின் ஆதரவின் காரணமாக பெரும்பாலும் எங்கள் ஆறு பேரப்பிள்ளைகளும் நான்கு கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உட்பட, உயிரோடிருக்கும் எங்கள் மூன்று பிள்ளைகளும் அவர்களுடைய குடும்பங்களும் யெகோவாவின் சேவையில் சுறுசுறுப்பாக இருக்கிறார்கள். நானும் என் மனைவியும் எதிர்ப்பட்ட துன்புறுத்தலையும் கசப்பான எதிர்ப்பையும் அவர்கள் சமாளிக்க வேண்டியதில்லாமல் இருந்தாலும், அவர்கள் யெகோவாவின் பேரில் முழு நம்பிக்கை வைத்து, அவருடைய வழியிலே தொடர்ந்து நடக்கின்றனர். உயிர்த்தெழுதலில் எங்கள் அன்பான யோர்காஸ் திரும்பி வருகையில் அவரோடு மறுபடியும் ஒன்றுசேர்ந்து இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கும்!
யெகோவாவின் மீது நம்பிக்கை வைப்பதற்கு தீர்மானமாயிருத்தல்
கடந்து சென்ற வருடங்களின் போதெல்லாம், யெகோவாவின் ஆவி அவருடைய ஜனங்களின் மீது செயல்படுவதை நான் பார்த்திருக்கிறேன். மானிடர்களுடைய முயற்சிகளின் மீது நாம் நம்பிக்கை வைக்க முடியாது என்பதைக் காண அவருடைய ஆவியால் வழிநடத்தப்படும் அமைப்பு எனக்கு உதவியிருக்கிறது. மேம்பட்ட எதிர்காலம் வரும் என்பதற்கான அவர்களுடைய வாக்குறுதிகள் பயனற்றவையாய் இருக்கின்றன, உண்மையில் அவை வெறும் ஒரு பெரிய பொய்.—சங்கீதம் 146:3, 4.
வயதாகிக்கொண்டே செல்வதும் கடுமையான உடல்நல பிரச்சினைகளும் இருந்தபோதிலும், என் கண்கள் ராஜ்ய நம்பிக்கையின் மெய்ம்மையின் மீது ஒருமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. பொய் மதத்தின் பேரில் ஈடுபாடு கொண்டு நான் செலவழித்த ஆண்டுகளைக் குறித்தும் அரசியல் மூலமாக மேம்பட்ட நிலைமைகளைக் கொண்டு வர முயற்சி எடுத்ததை குறித்தும் நான் உண்மையிலேயே வருந்துகிறேன். நான் மறுபடியும் என் வாழ்க்கையை வாழ நேரிட்டால், கேள்விக்கிடமின்றி, நம்பிக்கைக்குப் பாத்திரமான கடவுளாகிய யெகோவாவை சேவிக்க மறுபடியும் தீர்மானம் செய்வேன்.
(கிமோன் ப்ரோகாக்கிஸ் சமீபத்தில் மரணத்தில் நித்திரையடைந்தார். அவர் பூமிக்குரிய நம்பிக்கையைப் பெற்றிருந்தார்.)
[பக்கம் 26-ன் படம்]
கிமோன் தன் மனைவி யனூலாவோடு சமீபத்தில் எடுத்த புகைப்படம்