இயேசுவின் அற்புதங்கள்—சரித்திரமா கட்டுக்கதையா?
“இரவின் நாலாம் ஜாமத்திலே, இயேசு கடலின்மேல் நடந்து, அவர்களிடத்திற்கு வந்தார்.”—மத்தேயு 14:25.
இயேசு கிறிஸ்து அற்புதங்களை நடப்பித்துக் காட்டினார் என்ற நம்பிக்கை, உலகமுழுவதிலுமுள்ள இலட்சக்கணக்கானோருக்குக் கடவுள் பேரில் கொண்டிருக்கும் நம்பிக்கையைப் போன்றே அத்தனை முக்கியத்துவமுடையதாய் உள்ளது. இயேசு செய்த அற்புதங்களில் 35 அற்புதங்களை சுவிசேஷ எழுத்தாளர்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியோர் விவரிக்கின்றனர். இயற்கைக்கு அப்பாற்பட்ட இன்னும் அநேக வியப்பூட்டும் செயல்களை அவர் நடப்பித்தார் என்று அவர்களுடைய விவரப்பதிவுகள் காண்பிக்கின்றன.—மத்தேயு 9:35; லூக்கா 9:11.
இந்த அற்புதங்கள் பொழுதுபோக்குக்காக செய்யப்படவில்லை. இயேசு தம்மை கடவுளுடைய குமாரன் என்றும் வெகுகாலமாக எதிர்நோக்கியிருந்த மேசியா என்றும் சொன்னதோடு அவை இயல்பானதாய் இருந்தன. (யோவான் 14:11) அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேல் தேசத்தாரை மோசே சந்தித்தபோது, அவர் அற்புதமான அடையாளங்களை நடப்பித்துக் காட்டினார். (யாத்திராகமம் 4:1-9) நியாயமாகவே, மோசேயைக் காட்டிலும் பெரியவராயிருப்பார் என்று முன்னுரைக்கப்பட்டிருந்த மேசியா, தெய்வீக ஆதரவைக் கொண்டிருப்பதற்கான ஏதோவொரு அடையாளத்தைக் காண்பிக்கும்படியும்கூட எதிர்பார்க்கப்பட்டிருப்பார். (உபாகமம் 18:15) “தேவன் உங்களுக்குள்ளே [யூதர்களுக்குள்ளே] பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்,” என்று இயேசுவை பைபிள் அழைக்கிறது.—அப்போஸ்தலர் 2:22.
இயேசுவை அற்புதம் நடப்பிப்பவராக பைபிள் சித்தரிப்பதை, கடந்த காலங்களில் ஜனங்கள் பொதுவாக எந்தவித சந்தேகமுமின்றி ஏற்றுக்கொண்டனர். ஆனால் சமீபத்திய பத்தாண்டுகளில் சுவிசேஷ பதிவுகள் குறைகாண்பவர்களின் திறனாய்வின்கீழ் வந்துள்ளன. பைபிளின் ஏமாற்றல்களும் கட்டுக்கதைகளும் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் லாய்ட் கிரஹாம் என்பவர், இயேசு தண்ணீரில் நடக்கும் பைபிள் பதிவைக் குறிப்பிட்டு இந்த அளவுக்கு அதைக் குறைகூறுகிறார்: “இப்பதிவை சொல்லர்த்தமாக நம்புவதற்கு அதிகப்படியான அறியாமை தேவைப்படுகிறது. இருப்பினும், இப்பதிவு சொல்லர்த்தமானது என்று இலட்சக்கணக்கானோர் நம்புகின்றனர். நம்முடைய உலகத்திற்கு என்னவாகிவிட்டது என்று நாம் ஆச்சரியப்படுகிறோம். அப்படிப்பட்ட அறியாமையிலிருந்து என்ன ஒரு மேம்பட்ட உலகை நீங்கள் எதிர்பார்க்க முடியும்?”
கூடாதகாரியமா?
என்றபோதிலும், இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமானவையல்ல. “அறியப்பட்டிருக்கும் இயற்கை சட்டங்களின் வாயிலாக விளக்கப்பட முடியாத ஓர் சம்பவம்,” என்று தி உவார்ல்ட் புக் என்ஸைக்ளோப்பீடியா இவ்வாறு ஒரு அற்புதத்தை விளக்குகிறது. அந்த விளக்கத்தின்படி, ஒரு கலர் டிவி, செலுலார் தொலைபேசி அல்லது ஒரு லாப்டாப் கம்ப்யூட்டர் போன்றவை வெறும் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு அற்புதங்களாக கருதப்பட்டிருக்கும்! தற்போதைய விஞ்ஞான அறிவுக்கு ஏற்றபடி அதை நாம் விளக்க முடியாததன் காரணமாக, அது செய்ய முடியாத காரியம் என்று பிடிவாதமாக சொல்வது நியாயமானதாக இருக்கிறதா?
சிந்தித்துப் பார்ப்பதற்கு மற்றொரு காரணம்: “புதிய ஏற்பாடு” எழுதப்பட்ட மூல கிரேக்க மொழியில், “அற்புதம்” என்ற சொல்லுக்கு டைனாமிஸ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது—“வல்லமை” என்ற அடிப்படை அர்த்தத்தை உடைய ஒரு சொல். “வல்லமைவாய்ந்த செயல்கள்” அல்லது “திறமை” என்றும்கூட அது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (லூக்கா 6:19; 1 கொரிந்தியர் 12:10, NW; மத்தேயு 25:15) இயேசுவின் அற்புதங்கள் ‘தேவனுடைய மகத்துவத்தின்’ வெளிக்காட்டுதல்களாக இருந்தன என்று பைபிள் உறுதியாக கூறுகிறது. (லூக்கா 9:43) அப்படிப்பட்ட செயல்கள் சர்வவல்லமையுள்ள கடவுளுக்கு—‘மகா வல்லமையுடைய’ ஒருவருக்கு—கூடாதகாரியங்களாக இருக்குமா?—ஏசாயா 40:26.
நம்பத்தக்கத்தன்மைக்கான அத்தாட்சி
நான்கு சுவிசேஷங்களை மிகவும் கவனத்துடன் ஆராய்வது, அவை நம்பத்தக்கவை என்பதற்கு கூடுதலான அத்தாட்சி அளிக்கின்றன. இந்தப் பதிவுகள் கட்டுக்கதைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவையாக இருக்கின்றன என்பது சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம். இயேசு மரித்த பின்பு, தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் இயேசுவைப் பற்றி பரப்பிய பொய்க் கதைகளை உதாரணமாக சிந்தித்துப் பாருங்கள். பைபிளிலிருந்து தள்ளுபடி செய்யப்பட்ட ஆகமமாகிய “தோமாவின் சுவிசேஷம்” இவ்வாறு சொல்கிறது: “இந்தப் பையன் இயேசு ஐந்து வயதாயிருக்கையில் . . . ஒரு கிராமத்துக்குள்ளே சென்றார், அப்போது ஒரு சிறுவன் ஓடி வந்து அவருடைய தோளுக்கு எதிராக மோதினான். இயேசு எரிச்சலடைந்து அவனிடம் இவ்வாறு சொன்னார்: ‘நீ தொடர்ந்து உன்னுடைய வழியில் செல்ல முடியாது,’ அந்தப் பிள்ளை உடனே கீழே விழுந்து மரித்துவிட்டது.” இக்கதையின் மெய்யான தன்மையை அறிந்துகொள்வது கடினமாயில்லை—கற்பனையாக தோற்றுவித்த ஓர் கதை. கூடுதலாக, இங்கு சித்தரிக்கப்பட்டிருக்கும் திடீரென எரிச்சலடையும் மனநிலையுள்ள பிள்ளை, பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் இயேசுவுக்கு எந்த விதத்திலும் ஒப்பாக இல்லை.—லூக்கா 2:51, 52-லுள்ள வேறுபாட்டைக் காண்க.
இப்போது நம்பத்தக்க சுவிசேஷப் பதிவுகளை சிந்தியுங்கள். மிகைப்படுத்திக் கூறுவது, கற்பனைக் கதை போன்ற தன்மை ஆகியவை அவற்றில் இல்லை. மெய்யான தேவையைக் கண்டு இயேசு அற்புதங்களைச் செய்தார், வெறுமனே திடீரென்று எழும் உணர்ச்சிகளைத் திருப்தி செய்வதற்கென்று அல்ல. (மாற்கு 10:46-52) இயேசு தம்முடைய வல்லமைகளை அவருடைய நன்மைக்காக ஒருபோதும் பயன்படுத்தவில்லை. (மத்தேயு 4:2-4) வெளித்தோற்றத்துக்காக அவர் தம் வல்லமைகளை ஒருபோதும் உபயோகிக்கவில்லை. உண்மையில், அறிய அதிக ஆவலாயிருந்த ஏரோது ராஜா ஒரு அற்புதமான “அடையாளத்தை” இயேசு அவருக்காக செய்துகாட்ட வேண்டும் என்று விரும்பியபோது, இயேசு “மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.”—லூக்கா 23:8, 9.
மாயவித்தைக்காரர்கள், மந்திரவாதிகள், விசுவாச சுகமளிப்பவர்கள் போன்றவர்களின் வேலையிலிருந்து இயேசுவின் அற்புதங்கள் முற்றிலும் வித்தியாசமானவையாய் இருக்கின்றன. அவருடைய வல்லமைவாய்ந்த செயல்கள் எப்போதும் கடவுளை மகிமைப்படுத்தின. (யோவான் 9:3; 11:1-4) உணர்ச்சிப்பூர்வமான சடங்குகள், மந்திர உச்சரிப்புகள், பகட்டான வெளித்தோற்றங்கள், தந்திரமான செயல்கள் மற்றும் ஆழ்ந்த அறிதுயில்நிலை போன்றவை அவருடைய அற்புதங்களில் இடம்பெறவில்லை. இயேசு பர்திமேயு என்ற பெயர் கொண்ட குருடனாயிருந்த ஒரு பிச்சைக்காரனை எதிர்ப்பட்டபோது, அவன் “ஆண்டவரே, நான் பார்வையடைய வேண்டும்” என்று சத்தமாய்க் கூப்பிட்டான், இயேசு வெறுமனே அவனிடம் சொன்னார்: “நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது.” உடனே அவன் பார்வையடைந்தான்.—மாற்கு 10:46-52.
விசேஷமாக அமைக்கப்பட்ட மேடை, ஏமாற்றுவதற்கென்று பொருத்தப்பட்ட விளக்குகள் போன்ற உடைமைகள் எதுவுமின்றி இயேசு தம் வல்லமைவாய்ந்த செயல்களை நடப்பித்தார் என்று சுவிசேஷப் பதிவுகள் காண்பிக்கின்றன. கண்கூடாகக் கண்ட திரளான சாட்சிகளுக்கு முன்பாக அநேக சமயங்களில் அவை வெளிப்படையாய் செய்யப்பட்டன. (மாற்கு 5:24-29; லூக்கா 7:11-15) நவீன நாளைய விசுவாச சுகமளிப்போருடைய முயற்சிகள் போல் அவருடையது இல்லை, நோயுற்றோருக்கு விசுவாசம் குறைவுபட்டதாக கருதப்படுவதன் காரணமாக, குணப்படுத்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் ஒருபோதும் தோல்வியடையவில்லை. மத்தேயு 8:16 சொல்கிறது: “பிணியாளிகளெல்லாரையும் சொஸ்தமாக்கினார்.”
கிறிஸ்தவத்தின் அத்தாட்சிகள்: “அநேக தவறா நிலையுடைய சான்றுகள்” (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் கல்விமான் ஆர்த்தர் பீர்சன் கிறிஸ்துவின் அற்புதங்களைப் பற்றி இவ்வாறு சொல்கிறார்: “அவற்றின் எண்ணிக்கை, அவர் உடனடியாகவும் முழுமையாகவும் செய்த அற்புதங்களின் தன்மை, மரித்தோரை உயிர்த்தெழுப்ப எடுத்த முயற்சியிலும்கூட ஒரு தடவையும் தோல்வியடையாமை ஆகியவை இப்படிப்பட்ட அற்புதங்களுக்கும், இந்தச் சகாப்தத்தில் அல்லது வேறு எந்தச் சகாப்தத்திலாவது செய்யப் போவதாக சொல்லப்படும் பாசாங்குத்தனமான அற்புதங்களுக்கும் இடையே பெரும் வேறுபாட்டை உண்டுபண்ணுகின்றன.”
உலகியல் சார்ந்த உறுதிப்பாடு
பீர்சன் இவ்வாறு சொல்வதன் மூலம் சுவிசேஷப் பதிவுகளை ஆதரிக்கும் மற்றொரு விவாதத்தை அளிக்கிறார்: “யூத எதிராளிகள் அவர் அற்புதங்களை செய்தார் என்பதை மறுக்கவில்லை.” இயேசுவின் நற்பெயருக்குக் கேடு விளைவிக்க வேண்டும் என்று யூத தலைவர்களுக்கு அதிக பலமான உள்நோக்கம் இருந்தது, ஆனால் அவருடைய அற்புதங்கள் அவ்வளவு பிரபலமானவையாக இருந்ததால், அவருடைய எதிராளிகள் அவற்றை மறுக்க பயந்தனர். அவர்களால் செய்ய முடிந்ததெல்லாம், அப்படிப்பட்ட வியப்பூட்டும் செயல்கள் பிசாசுகளின் வல்லமையினால் உண்டானவை என்று அவர்கள் சொல்ல முடிந்ததுதான். (மத்தேயு 12:22-24) இயேசு மரித்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் யூத வேதத்தை (தல்மூட்) எழுதியவர்கள் இயேசுவுக்கு அற்புதம் செய்யும் வல்லமை இருந்ததைக் குறித்து தொடர்ந்து மதிப்பு கொடுத்தனர். இயேசுவின் பேரில் யூதர்களின் கருத்து என்ற ஆங்கிலப் புத்தகத்தின்படி, “மந்திர பழக்கவழக்கங்களை பின்பற்றிய” ஒரு நபராக கருதி அவரை அவர்கள் நீக்கிவிட்டனர். இயேசுவின் அற்புதங்களை வெறும் கட்டுக்கதைகளென ஒதுக்கிவிடுவதற்கு கொஞ்சம் சாத்தியம் இருந்திருந்தாலும்கூட அப்படி சொல்லியிருப்பார்களா?
கூடுதலான சான்று நான்காம்-நூற்றாண்டு சர்ச் சரித்திர ஆசிரியரான யூசிபியஸ் என்பவரிடமிருந்து வருகிறது. கிறிஸ்துவிலிருந்து கான்ஸ்டன்டீன் வரை சர்ச்சின் சரித்திரம் என்ற தன் ஆங்கிலப் புத்தகத்தில் குவாட்ரேட்டஸ் என்பவரைப் பற்றி குறிப்பிடுகிறார். அவர் கிறிஸ்தவத்தை ஆதரித்து பேரரசருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். குவாட்ரேட்டஸ் எழுதினார்: “நம்முடைய இரட்சகரின் வேலைகள் உண்மையாய் இருந்தபடியால், அவை எப்போதும் காணத்தக்கவையாய் இருந்தன—குணமாக்கப்பட்ட மக்கள், மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள், அவர்கள் அவ்வாறு குணமாக்கப்பட்டபோது அல்லது உயிர்த்தெழுப்பப்படும்போது மட்டும் காணப்படாமல், அவர்கள் காண்பதற்கு எப்போதும் அங்கு இருந்தனர், நம் மத்தியில் இரட்சகர் இருந்த சமயத்தில் மட்டுமல்லாமல், ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று நீண்டகாலத்துக்குப் பின்னரும்கூட இருந்தனர்; உண்மையில் அவர்களில் சிலர் என் காலம் வரையாகவும்கூட உயிரோடிருந்தனர்.” கல்விமான் வில்லியம் பார்க்லி கூறினார்: “அற்புதங்களினால் அடைந்த நன்மைகளை அனுபவித்தவர்கள் குவாட்ரேட்டஸ் காலம் வரையாக உயிரோடிருந்தனர், அவர்களை அத்தாட்சியாக காண்பிக்கலாம் என்று குவாட்ரேட்டஸ் சொல்கிறார். அது உண்மையாக இல்லாமலிருந்திருந்தால், நேரில் கண்ட சாட்சிகளின் உரிமைபாராட்டல்களைப் பொய் என்று கூறுவது ரோம அரசாங்கத்துக்கு எளிதாக இருந்திருக்கும்.”
இயேசு செய்த அற்புதங்களில் நம்பிக்கை வைப்பது நியாயமானது, அறிவுக்குப் பொருத்தமானது, அத்தாட்சிக்கு முழுவதுமாக இசைவானது. இருப்பினும், இயேசுவின் அற்புதங்கள் இன்று நடைமுறையான முக்கியத்துவம் இல்லாத சரித்திரம் அல்ல. எபிரெயர் 13:8 இவ்வாறு நமக்கு நினைப்பூட்டுகிறது: “இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.” ஆம், இன்று அவர் பரலோகத்தில் உயிரோடு இருக்கிறார், பூமியில் ஒரு மனிதனாக இருந்தபோது செய்ததைக்காட்டிலும் அதிக மகத்தான விதத்தில் அற்புதம் செய்யும் வல்லமையைப் பயன்படுத்தக்கூடியவராய் இருக்கிறார். கூடுதலாக, அவருடைய அற்புதங்களைப் பற்றிய சுவிசேஷப் பதிவுகள் (1) கிறிஸ்தவர்களுக்கு நடைமுறையான பாடங்களை இன்று கற்பிக்கின்றன, (2) இயேசுவின் ஆளுமையின் கவர்ச்சியூட்டும் அம்சங்களை வெளிப்படுத்துகின்றன, (3) சமீப எதிர்காலத்தில் இன்னுமதிக ஆச்சரியமான சம்பவங்கள் நடைபெறும் என்பதைக் குறிப்பிட்டுக் காட்டுகின்றன!
இக்குறிப்புகளை விளக்கிக் காண்பிப்பதற்கு அடுத்த கட்டுரை நன்கு அறியப்பட்டிருக்கும் மூன்று பைபிள் பதிவுகளின் மீது அதன் கவனத்தை ஒருமுகப்படுத்தும்.