அன்புக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புவது—எப்படி?
“அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. . . . ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக இறுதிநாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.” —எபிரேயர் 10:24, 25, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்.
1, 2. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் ஒன்றாகக் கூடிவருவதிலிருந்து ஆறுதலையும் உற்சாகத்தையும் பெறுவது ஏன் முக்கியமாயிருந்தது? (ஆ) பவுலின் எந்த அறிவுரை ஒன்றுகூடி வருவதன் அவசியத்திற்குக் கவனத்தைத் திருப்பியது?
அவர்கள் இரகசியமாக கூடிவந்து, பூட்டப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் நெருக்கமாக ஒன்றுசேர்ந்து கொண்டனர். வெளியே, எங்கும் ஆபத்து மறைந்திருந்தது. அவர்களுடைய தலைவராகிய இயேசு அப்போதுதான் வெளிப்படையாகக் கொல்லப்பட்டிருந்தார், தம்மைப் பின்பற்றுபவர்கள் எவ்விதத்திலும் தம்மைவிட மேலாக நடத்தப்படமாட்டார்கள் என்று அவர்களை எச்சரிக்கவும் செய்திருந்தார். (யோவான் 15:20; 20:19) தங்களுக்குப் பிரியமான இயேசுவைப் பற்றி தாழ்ந்த குரலில் பேசுகையில், ஒன்றாகச் சேர்ந்திருப்பது அவர்களைப் பாதுகாப்பாகக் குறைந்தபட்சம் உணரச் செய்திருக்கும்.
2 வருடங்கள் கடந்துசெல்கையில், கிறிஸ்தவர்கள் எல்லா விதமான சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் எதிர்ப்பட்டனர். அந்த ஆரம்பகால சீஷர்களைப்போல, ஒன்றாகக் கூடி வருவதிலிருந்து ஆறுதலையும் உற்சாகத்தையும் அவர்கள் பெற்றனர். எனவே, அப்போஸ்தலன் பவுல் எபிரேயர் 10:24, 25-ல் (கத்.பை.) எழுதினார்: “அன்பு செய்யவும் நற்பணிகள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருப்போமாக. சிலர் வழக்கமாக நம் கூட்டங்களுக்கு வருவதில்லை. அதைப்போல் நாமும் செய்யலாகாது. ஒருவருக்கொருவர் ஊக்கமூட்டுவோமாக இறுதிநாள் எவ்வளவுக்கு அருகிலிருப்பதாகக் காணப்படுகிறதோ அவ்வளவுக்கு உற்சாகமாக ஊக்கமூட்டுங்கள்.”
3. எபிரேயர் 10:24, 25, கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி வரவேண்டும் என்ற கட்டளையைவிட அதிகத்தைக் குறிக்கிறது என்று நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
3 அந்த வார்த்தைகள் தொடர்ந்து ஒன்றுகூடி வாருங்கள் என்ற கட்டளையைவிட அதிகத்தைக் குறிக்கின்றன. அனைத்து கிறிஸ்தவ கூட்டங்களுக்கும் அவை கடவுளால் ஏவப்பட்டெழுதப்பட்ட தராதரத்தை அளிக்கின்றன—உண்மையில் கிறிஸ்தவர்கள் ஒன்றுசேர்ந்து கூட்டுறவுகொள்ளும் எந்தவொரு நிகழ்ச்சிக்குங்கூட அதை அளிக்கின்றன. என்றுமிருப்பதைக் காட்டிலும் இன்று, யெகோவாவின் நாள் நெருங்கிவருவதை நாம் தெளிவாகக் காண்கையில், நம்முடைய கூட்டங்கள் ஒரு பாதுகாப்பான இடம்போல அமையவும் அனைவருக்கும் பலத்திற்கும் உற்சாகத்திற்குமான ஊற்றுமூலமாக இருக்கவும் இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் அழுத்தங்களும் ஆபத்துக்களும் அவசியப்படுத்துகின்றன. இதை நிச்சயப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? பவுலின் வார்த்தைகளைக் கவனமாக ஆராய்வது நல்லது; பின்வரும் மூன்று முக்கிய கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்: ‘ஒருவருக்கொருவர் கருத்தாயிருப்பது’ என்றாலென்ன? ‘அன்புக்கும் நற்பணிகளுக்கும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவது’ என்றாலென்ன? கடைசியாக, இந்தக் கடினமான காலங்களில் எவ்வாறு நாம் ‘ஒருவருக்கொருவர் உற்சாகமூட்ட’ முடியும்?
‘ஒருவருக்கொருவர் கருத்தாயிருப்பது’
4. ‘ஒருவருக்கொருவர் கருத்தாயிருப்பது’ என்றாலென்ன?
4 ‘ஒருவருக்கொருவர் கருத்தாயிருக்க’ கிறிஸ்தவர்களைத் துரிதப்படுத்துகையில், பவுல் காடாநோயீயோ (ka·ta·no·eʹo) என்ற கிரேக்க வினைச்சொல்லை உபயோகித்தார்; இது பொதுப் பதமாகிய “மனதால் உணர்” என்பதன் செறிவான வடிவமாக இருக்கிறது. ஆங்கில புதிய ஏற்பாட்டின் இறையியல் அகராதி என்ன சொல்கிறதென்றால், “ஒரு காரியத்தினிடம் ஒருவருடைய முழு மனதையும் செலுத்துவது” என்பதை இது அர்த்தப்படுத்தும். டபிள்யூ. இ. வைன் பிரகாரம், “முழுமையாகப் புரிந்துகொள்வது, நெருக்கமாகச் சிந்திப்பது” என்பதையும் அர்த்தப்படுத்தலாம். ஆகவே கிறிஸ்தவர்கள் ‘ஒருவருக்கொருவர் கருத்தாயிருக்கும்போது’ அவர்கள் மேலோட்டமாக மாத்திரம் காண்பதற்கு மாறாக தங்களுடைய எல்லா மனத்திறன்களையும் பயன்படுத்தி ஆழ்ந்து காண முயலுகின்றனர்.—எபிரெயர் 3:1-ஐ ஒப்பிடுக.
5. ஒரு நபரிடம் எளிதில் கண்டுபிடிக்கப்பட முடியாத சில அம்சங்கள் யாவை, இவற்றை நாம் ஏன் கருத்தில் கொள்ளவேண்டும்?
5 ஒருவருடைய வெளிப்புற தோற்றம், செயல்கள் அல்லது ஆளுமையை மேலோட்டமாகப் பார்ப்பதைக் காட்டிலும் ஒருவரிடம் அதிகம் இருக்கிறது என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். (1 சாமுவேல் 16:7) அடிக்கடி ஒரு சாதுவான புறத்தோற்றம், ஆழமான உணர்ச்சிகளையோ சந்தோஷிப்பிக்கும் நகைச்சுவையான உணர்ச்சியையோ மறைத்துப்போடுகிறது. அடுத்தபடியாக, பின்னணிகளும் பெரிதும் வேறுபடுகின்றன. சிலர் தங்களுடைய வாழ்க்கையில் கடுஞ்சோதனைகளை எதிர்ப்பட்டிருக்கின்றனர்; வேறுசிலர் நம்மால் கற்பனை செய்து பார்ப்பதற்குக்கூட கடினமான சூழ்நிலைமைகளை இப்போதுதானேயும் பொறுத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு நபரின் பின்னணியை அல்லது சூழ்நிலைகளைப் பற்றி மேலுமாக அறிய வரும்போது, ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ உள்ள குறிப்பிட்ட ஒரு சுபாவத்தைக் கண்டு நாம் எரிச்சலடைகிற காரியம் மறைந்துபோவது எவ்வளவு அடிக்கடி நேரிடுகிறது.—நீதிமொழிகள் 19:11.
6. ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்வதற்கு இருக்கும் சில வழிகள் யாவை, இதனால் என்ன நன்மை கிடைக்கும்?
6 சந்தேகமில்லாமல், அவரவருக்குரிய தனிப்பட்ட விவகாரங்களில் நாமாகவே வீணாகத் தலையிடுவதை இது அர்த்தப்படுத்துவது கிடையாது. (1 தெசலோனிக்கேயர் 4:11) இருப்பினும், ஒருவர்பேரிலொருவர் தனிப்பட்ட அக்கறையை நாம் கட்டாயமாகக் காட்டலாம். ராஜ்ய மன்றத்தில் பார்த்ததும் வெறுமனே வாழ்த்துதல் சொல்வதைப் பார்க்கிலும் அதிகத்தை இது உட்படுத்துகிறது. நன்றாக அறிந்துகொள்ளவேண்டும் என்று நீங்கள் விரும்புகிற ஒரு நபரைத் தெரிந்தெடுத்து, கூட்டத்திற்கு முன்போ பின்போ ஒருசில நிமிடங்கள் ஏன் சம்பாஷிக்கக்கூடாது? ஏதோ சாதாரணவொரு சிற்றுண்டிக்காக உங்கள் வீட்டிற்கு ஓரிரண்டு நண்பர்களை அழைத்து “உபசரிக்க நாடு”வது இன்னும் நல்லது. (ரோமர் 12:13) அக்கறை காட்டுங்கள். செவிகொடுத்துக் கேளுங்கள். ஒரு நபர் எப்படி யெகோவாவை அறிந்து நேசிக்கலானார் என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்வது அதிகத்தைப் பேசும். இதைத் தவிர, வீட்டுக்குவீடு ஊழியத்தில் சேர்ந்து வேலை செய்வதன் மூலம் நீங்கள் இன்னும் அதிகத்தைத் தெரிந்துகொள்ளலாம். அத்தகைய வழிகளில் ஒருவரையொருவர் கருத்தில்கொள்வது உண்மையான ஒப்புரவுணர்ச்சியை அல்லது ஒற்றுணர்வை வளர்த்துக்கொள்ள நமக்கு உதவும்.—பிலிப்பியர் 2:4; 1 பேதுரு 3:8.
‘ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவது’
7. (அ) இயேசுவின் போதகம் எவ்வாறு மக்களைப் பாதித்தது? (ஆ) அவருடைய போதகத்தை அவ்வளவு ஆற்றல்மிக்கதாகச் செய்தது எது?
7 நாம் ஒருவரையொருவர் குறித்துக் கருத்தாயிருக்கையில், ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, செயல்பட ஊக்குவிப்பதற்கு நன்கு ஆயத்தமுள்ளவர்களாக இருக்கிறோம். இதன் சம்பந்தமாகக் கிறிஸ்தவ மூப்பர்கள் விசேஷமாக முக்கிய பங்கை வகிக்கின்றனர். இயேசு வெளிப்படையாகப் பேசிய சமயத்தைக் குறித்து நாம் வாசிக்கிறோம்: “ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.” (மத்தேயு 7:29) இன்னொரு சந்தர்ப்பத்தில் அவரைக் கைதுசெய்ய அனுப்பப்பட்ட சில சேவகருங்கூட, அவரைவிட்டுத் திரும்பிவந்து, “அந்த மனுஷன் பேசுகிறதுபோல ஒருவனும் ஒருக்காலும் பேசினதில்லை என்றார்கள்.” (யோவான் 7:46) இயேசுவின் போதகத்தை அவ்வளவு ஆற்றல்மிக்கதாகச் செய்தது என்ன? உணர்ச்சிவசப்படுத்தலின் பகட்டு வெளிக்காட்டுதல்களா? இல்லை; இயேசு கண்ணியத்துடன் பேசினார். எனினும், தமக்குச் செவிசாய்ப்பவர்களின் இதயங்களைச் சென்றெட்ட எப்போதும் எண்ணினார். அவர் மக்களைக் கருத்தில் கொண்டதினிமித்தம், அவர்களை எவ்வாறு தூண்டுவது என்பதைத் திருத்தமாய் அறிந்திருந்தார். அன்றாட வாழ்க்கையின் உண்மைநிலைகளைப் பிரதிபலிக்கும் உயிர்ப்புள்ள, எளிய உதாரணங்களை அவர் பயன்படுத்தினார். (மத்தேயு 13:34) அவ்வாறே, நம் கூட்டங்களில் நியமிப்புகளைக் கையாளுபவர்களும் உந்துவிக்கக்கூடிய அனலான, உற்சாகமான பேச்சுக்களைக் கொடுப்பதன் மூலம் இயேசுவைப் பின்பற்ற வேண்டும். இயேசுவைப்போல, நம்முடைய சபையாருக்குப் பொருந்தும் உதாரணங்களைக் கண்டுபிடித்து அவர்களுடைய இதயங்களைச் சென்றெட்டுவதில் மனதை ஈடுபடுத்தலாம்.
8. இயேசு எவ்வாறு தன் முன்மாதிரியின் மூலம் தூண்டியெழுப்பினார், இதன் தொடர்பாக நாம் எவ்வாறு அவரைப் பின்பற்றலாம்?
8 நம் கடவுளைச் சேவிப்பதில், அனைவரும் முன்மாதிரியாய் இருப்பதன் மூலம் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பலாம். இயேசு தமக்குச் செவிசாய்த்தவர்களை நிச்சயமாகத் தூண்டியெழுப்பினார். அவர் கிறிஸ்தவ ஊழிய வேலையை விரும்பி, அவ்வூழியத்தை உயர்த்திப் பேசினார். அது போஜனம்போல இருந்ததாகச் சொன்னார். (யோவான் 4:34; ரோமர் 11:13) அப்படிப்பட்ட உற்சாகம் தொற்றும் தன்மையுடையது. அதேபோல ஊழியத்தில் உங்களுடைய மகிழ்ச்சியைக் காட்ட முடியுமா? கவனத்துடன் தற்புகழ்ச்சியான முறையைத் தவிர்த்து, சபையில் பிறரிடம் உங்களுக்கிருக்கும் நல்ல அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்களோடு ஊழியம் செய்ய நீங்கள் பிற ஆட்களை அழைக்கையில், நம்முடைய மகத்தான படைப்பாளராகிய யெகோவாவைப் பற்றி பிறரிடம் பேசுவதில் உண்மையான சந்தோஷத்தைப்பெற அவர்களுக்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.—நீதிமொழிகள் 25:25.
9. (அ) மற்றவர்களைத் தூண்டியெழுப்புவதில் நாம் தவிர்க்க விரும்புகிற சில முறைகள் யாவை, ஏன்? (ஆ) யெகோவாவின் சேவையில் மனமுவந்தளிக்க எது நம்மை உந்துவிக்க வேண்டும்?
9 என்றாலும், தவறான வழியில் பிறரைத் தூண்டியெழுப்பாதபடிக்கு ஜாக்கிரதையாயிருங்கள். உதாரணமாக, அதிகம் செய்யாததைப் பற்றிய குற்றவுணர்ச்சியில் அவர்களை நாம் தெரியாத்தனமாக ஆழ்த்தக்கூடும். மிகவும் சுறுசுறுப்புள்ளவர்களாக இருக்கிற மற்றவர்களோடு அவர்களைச் சாதகமல்லாத விதத்தில் ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம் நாம் நம்மையே அறியாமல் அவர்களை வெட்கப்படுத்தலாம், அல்லது கண்டிப்பான தராதரங்களை உண்டாக்கி அவற்றை அடைய முடியாதவர்களைச் சிறுமைப்படுத்தவுங்கூடும். இந்த முறைகள் எதுவுமே சிலரைச் சிறிது காலமே செயல்படும்படி உந்துவிக்கக்கூடும், ஆனால் ‘குற்றவுணர்வுக்கும் நற்பணிகளுக்கும் தூண்டியெழுப்புங்கள்’ என்று பவுல் எழுதவில்லை. இல்லை, நாம் அன்புகூரத் தூண்டியெழுப்ப வேண்டும், பிற்பாடு நல்லெண்ணத்தோடு கூடிய செயல்கள் தொடரும். தன்னிடமிருந்து எதிர்பார்க்கிற காரியங்களை வெகுவாகப் பூர்த்திசெய்யவில்லையென்றால் தன்னைப்பற்றி சபையிலுள்ள மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதால் பிரதானமாக எவரும் உந்துவிக்கப்படக்கூடாது.—2 கொரிந்தியர் 9:6, 7-ஐ ஒப்பிடுக.
10. பிறருடைய விசுவாசத்திற்கு நாம் அதிகாரிகளல்ல என்பதை ஏன் நினைவில் வைக்கவேண்டும்?
10 ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவது என்றால் ஒருவரையொருவர் ஆதிக்கம் செலுத்துவதை அர்த்தப்படுத்துவது கிடையாது. தேவனால் தனக்கு அவ்வளவு அதிகாரம் கொடுக்கப்பட்டபோதிலும், அப்போஸ்தலன் பவுல் கொரிந்திய சபையைத் தாழ்மையோடு நினைப்பூட்டினார்: ‘உங்கள் விசுவாசத்திற்கு நாங்கள் அதிகாரிகளல்ல.’ (2 கொரிந்தியர் 1:24) யெகோவாவின் சேவையில் மற்றவர்கள் எவ்வளவு செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதோ வேறுசில தனிப்பட்ட தீர்மானங்களில் அவர்களுடைய மனச்சாட்சியைச் சீரமைப்பதோ நம்முடைய வேலை அல்ல என்று அவரைப்போல நாமும் மிகவும் மனத்தாழ்மையோடு உணர்ந்தோமானால், “மிஞ்சின நீதிமானா”வதையும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் கண்டிப்பானவர்களாகவும் எதிர்மறையான மனப்பான்மை உடையவர்களாகவும் அல்லது எடுத்ததற்கெல்லாம் சட்டம் பேசுகிறவர்களாகவும் இருப்பதைத் தவிர்ப்போம். (பிரசங்கி 7:16) அத்தகைய குணங்கள் தூண்டியெழுப்பாமல் ஒடுக்கவே செய்கின்றன.
11. இஸ்ரவேலின் ஆசரிப்புக் கூடாரக் கட்டுவிப்பு நாட்களில், எது காணிக்கைகளை அளிக்கும்படி தூண்டுவித்தது, அது நம் நாளில் எவ்வாறு உண்மையாயிருக்கும்?
11 பூர்வ இஸ்ரவேலில் ஆசரிப்புக் கூடாரத்தைக் கட்டுவதற்கு காணிக்கைகள் தேவைப்படும்போது காட்டப்பட்ட அதே மனப்பான்மையில், யெகோவாவின் சேவையில் எடுக்கப்படும் சகல முயற்சிகளும் இருக்க நாம் விரும்புகிறோம். யாத்திராகமம் 35:21 (தி.மொ.) வாசிக்கிறது: ‘பின்பு தங்கள் இருதயத்தினால் ஏவப்பட்டவர்களும் தங்கள் ஆவியினால் மனப்பூர்வமாக்கப்பட்டவர்களுமாகிய அனைவரும் திருப்பணிக்கு யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தார்கள்.’ அவர்கள் புறத்தூண்டுதலால் கட்டாயப்படுத்தப்படுவதற்கு மாறாக அகத்தூண்டுதலினால், இருதயத்திலிருந்து ஏவப்பட்டார்கள். உண்மையில் சொல்லப்போனால், அத்தகைய காணிக்கைகளைக் கொடுக்க “எவர்களை அவர்கள் இருதயம் எழுப்பி”யதோ அவர்கள் கொடுத்தார்கள் என்று எபிரெயு இங்கே நேர்பொருளில் வாசிக்கிறது. (நேரெழுத்துக்கள் எங்களுடையவை.) கூடுதலாக, நாம் ஒன்றாகக் கூடிவரும்போதெல்லாம் ஒருவர் மற்றொருவருடைய இருதயத்தை எழுப்ப பிரயாசப்படுவோமாக. யெகோவாவின் ஆவி மற்றதைச் செய்யக்கூடும்.
‘ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுவது’
12. (அ) “உற்சாகம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தையின் சில அர்த்தங்கள் யாவை? (ஆ) யோபின் தேற்றரவாளர்கள் எவ்வாறு அவரை உற்சாகமூட்ட தவறினார்கள்? (இ) ஒருவரையொருவர் குற்றவாளியாகத் தீர்ப்பதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும்?
12 ‘ஒருவருக்கொருவர் உற்சாகமூட்ட’ வேண்டும் என்று பவுல் எழுதுகையில், பாராகாலீயோ (pa·ra·ka·leʹo) என்ற கிரேக்க வார்த்தையின் ஒரு வடிவத்தை அவர் உபயோகித்தார்; இதுவும் ‘பலப்படுத்துவது, ஆறுதலளிப்பது’ என்று அர்த்தப்படுத்தலாம். கிரேக்க செப்டூவஜன்ட் மொழிபெயர்ப்பில் இதே வார்த்தையானது யோபு 29:25-ல் உபயோகிக்கப்பட்டது, அங்கே யோபு துக்கிப்பவர்களைத் தேற்றுகிறவரைப்போல விவரிக்கப்பட்டார். நேரெதிராக யோபுதானே கடுஞ்சோதனையில் இருந்தபோது அவர் அத்தகைய உற்சாகமூட்டுதலைப் பெறவேயில்லை. அவருடைய மூன்று “தேற்றரவாளர்”களும் அவரில் குற்றங்கண்டுபிடித்து, உரையாற்றுவதில் அவ்வளவு மும்முரமாக இருந்ததால், அவரைப் புரிந்துகொள்ளவோ அவருக்காக ஒற்றுணர்வு காட்டவோ தவறினார்கள். உண்மையில் பார்த்தால், அவர்கள் இவ்வளவெல்லாம் பேசுகையில், யோபை ஒரு முறையுங்கூட பெயர்கொண்டு அழைக்கவில்லை. (யோபு 33:1, 31-ல் உள்ள வேறுபாட்டைக் காண்க.) தெளிவாகவே அவர்கள் அவரைத் தொல்லைபிடித்தவராகக் கருதினார்களே ஒழிய ஒரு நபராகக் கருதவில்லை. ஏமாற்றமடைந்தவராக, “நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால்” என்று யோபு அவர்களிடம் உணர்ச்சிவசப்பட்டு சொன்னதில் ஆச்சரியமேயில்லை! (யோபு 16:4) அவ்வாறே இன்றும், யாராவது ஒருவரை நீங்கள் உற்சாகமூட்ட விரும்பினால், ஒற்றுணர்வு காட்டுங்கள்! குற்றவாளியாகத் தீர்க்காதிருங்கள். ரோமர் 14:4 சொல்கிற பிரகாரம், “மற்றொருவனுடைய வேலைக்காரனைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதற்கு நீ யார்? அவன் நின்றாலும் விழுந்தாலும் அவனுடைய எஜமானுக்கே அவன் உத்தரவாதி; அவன் நிலைநிறுத்தப்படுவான்; தேவன் அவனை நிலைநிறுத்த வல்லவராயிருக்கிறாரே.”
13, 14. (அ) நம் சகோதர சகோதரிகளுக்கு ஆறுதலளிக்க எந்த அடிப்படையான சத்தியத்தைக் குறித்து அவர்களை நம்பவைக்க வேண்டியது அவசியம்? (ஆ) தானியேல் எவ்வாறு ஒரு தேவதூதரால் திடப்படுத்தப்பட்டார்?
13 பாராகாலீயோவின் ஒரு வடிவமும் அதன் சம்பந்தப்பட்ட பெயர்ச்சொல்லும் 2 தெசலோனிக்கேயர் 2:16, 17-ல் “ஆறுதல்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன: “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், நம்மிடத்தில் அன்புகூர்ந்து நித்திய ஆறுதலையும் நல்நம்பிக்கையையும் கிருபையாய் நமக்குக் கொடுத்திருக்கிற நம்முடைய பிதாவாகிய தேவனும், உங்கள் இருதயங்களைத் தேற்றி, எல்லா நல்வசனத்திலும் நற்கிரியையிலும் உங்களை ஸ்திரப்படுத்துவாராக.” நம்முடைய இருதயங்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்ற கருத்தை யெகோவா நம்மில் அன்புகூருகிறார் என்ற அடிப்படையான சத்தியத்துடன் பவுல் இணைப்பதைக் கவனியுங்கள். ஆகவே அந்த முக்கியமான சத்தியத்தை உறுதிப்படுத்துவதன் மூலம் ஒருவரையொருவர் உற்சாகமூட்டி ஆறுதலளிப்போமாக.
14 ஒரு சமயம், தானியேல் தீர்க்கதரிசி ஒரு பயமுறுத்தும் தரிசனத்தைக் கண்ட பிறகு மிகவும் கலக்கமுற்றவராய், இவ்வாறு சொன்னார்: “என் உருவம் மாறி வாடிப்போயிற்று; திடனற்றுப்போனேன்.” யெகோவா ஒரு தேவதூதரை அவரிடம் அனுப்பினார்; கடவுளுடைய பார்வையில் தானியேல் “பிரியமான”வராக இருக்கிறார் என்று அநேகந்தரம் அவருக்கு நினைப்பூட்டினார். விளைவு? தானியேல் தேவதூதரிடம், “என்னைத் திடப்படுத்தினீரே” என்றார்.—தானியேல் 10:8, 11, 19.
15. மூப்பர்களும் பயணக் கண்காணிகளும் எவ்வாறு திருத்துதலைப் பாராட்டுதலோடு சமநிலைப்படுத்த வேண்டும்?
15 அப்படியானால், மற்றவர்களை உற்சாகப்படுத்த இங்கே இன்னொரு வழி இருக்கிறது. அவர்களைப் பாராட்டுங்கள்! குறைகாணும், கடினமான மனப்பான்மையில் விழுந்துவிடுவது மிகவும் சுலபம். விசேஷமாக மூப்பர்களிடமிருந்தும் பயணக் கண்காணிகளிடமிருந்தும் திருத்துதல் தேவையாயிருக்கும் சமயங்கள் இருக்கின்றன என்பது ஒத்துக்கொள்ளப்பட வேண்டியதே. ஆனால், குறைகாணும் மனப்பான்மையைக் கொண்டிருப்பதற்குப் பதிலாக அனலான இருதயத்தோடுகூடிய உற்சாகமூட்டுதலுக்கு அவர்கள் நினைவுகூரப்பட்டால் மிகவும் நல்லது.
16. (அ) மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு உற்சாகம் அளிக்கையில் வெறுமனே யெகோவாவின் சேவையில் நிறைய செய்யுங்கள் என்று தூண்டுவது ஏன் எப்போதுமே போதுமானதல்ல? (ஆ) எலியா மனச்சோர்வு அடைந்தபோது யெகோவா எவ்வாறு உதவினார்?
16 குறிப்பாக மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு உற்சாகம் தேவை; உடன் கிறிஸ்தவர்களாக, விசேஷமாய் நாம் மூப்பர்களாக இருந்தால் உதவிக்கான ஊற்றுமூலமாக இருக்க வேண்டுமென்று யெகோவாவும் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். (நீதிமொழிகள் 21:13) நாம் என்ன செய்யலாம்? யெகோவாவின் சேவையில் நிறைய செய்யுங்கள் என்று சொல்வதுபோல அதற்கான பதில் அவ்வளவு எளிதாக இருக்க முடியாது. ஏன்? ஏனென்றால், போதுமானதைச் செய்யாததினாலேயே அவர்களுக்கு மனச்சோர்வு உண்டாயிருக்கிறது என்பதை அது உணர்த்தும். சாதாரணமாக சூழ்நிலைமையானது அப்படியொன்றும் இருப்பதில்லை. ஒரு முறை எலியா தீர்க்கதரிசி, மரிப்பதை விரும்புமளவுக்கு ஆழ்ந்த மனச்சோர்வு அடைந்தார்; அதுவும் யெகோவாவுக்குச் செய்துவரும் சேவையில் மிக மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது இது அவருக்கு ஏற்பட்டது. யெகோவா அவரை எப்படிக் கையாண்டார்? நடைமுறையான உதவியளிக்க தேவதூதரை அனுப்பினார். எலியா, மரித்த தன் முற்பிதாக்களைப்போல மதிப்பற்றவராகவும் தான் செய்த சகல வேலைகளும் வீணானதாகவும் தான் தன்னந்தனியாகவும் உணர்ந்ததாக மனதைத் திறந்து யெகோவாவிடம் வெளிப்படுத்தினார். யெகோவா செவிசாய்த்துக் கேட்டு தம்முடைய வல்லமையின் பிரமாண்டமான வெளிக்காட்டுகளாலும் அவர் உண்மையில் தனியாக இல்லை, தொடங்கின வேலை முற்றுப்பெறும் என்ற உறுதிமொழிகளாலும் அவரைத் தேற்றினார். மேலும் பயிற்சி கொடுக்கவேண்டி எலியாவுக்கு ஒரு கூட்டாளியைக் கொடுப்பதாகவும் யெகோவா வாக்களித்தார்; இவரே எலியாவிற்கு அடுத்து அவருடைய இடத்தைப் பெறப்போகிறவராக இருந்தார்.—1 இராஜாக்கள் 19:1-21.
17. தன்னிடமே அதிகமாகக் குற்றங்காணும் ஒருவரை எவ்வாறு ஒரு மூப்பர் உற்சாகமூட்டலாம்?
17 என்னே ஓர் உற்சாகமூட்டுதல்! அவ்வாறே நம் மத்தியில் உணர்ச்சிப்பூர்வமாகக் கலக்கமுற்றிருக்கும் ஆட்களுக்கு நாமும் உற்சாகமளிப்போமாக. செவிசாய்த்துக் கேட்பதன் மூலம் அவர்களைப் புரிந்துகொள்ள நாடுங்கள்! (யாக்கோபு 1:19) அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்பமைந்த வேதப்பூர்வமான ஆறுதலை அளியுங்கள். (நீதிமொழிகள் 25:11; 1 தெசலோனிக்கேயர் 5:14) தங்களிடமே அதிகமாகக் குற்றங்காண்பவர்களை உற்சாகமூட்ட, யெகோவா அவர்களிடம் அன்புகூர்ந்து மதிப்பாகக் கருதுகிறார் என்பதற்கு மூப்பர்கள் வேதப்பூர்வ அத்தாட்சியை தயவோடு அளிக்கலாம்.a தங்களை மதிப்பற்றவர்களாக உணருபவர்களோடு மீட்கும்பொருளைச் சிந்திப்பதானது, அவர்களை உற்சாகப்படுத்துவதற்கான வல்லமைவாய்ந்த வழிவகையாக இருக்கலாம். கடந்த காலத்தில் செய்த ஏதோவொரு பாவத்தினால் மனம் வருந்துகிற ஒரு நபருக்கு மீட்கும்பொருளானது அவர் உண்மையில் மனந்திரும்பி, அத்தகைய எந்தவொரு பழக்கத்தையும் முற்றிலும் நிராகரித்திருப்பாரேயானால் அவரைச் சுத்திகரித்திருக்கிறது என்பதைக் காட்டவேண்டியது அவசியம்.—ஏசாயா 1:18.
18. மீட்கும் பலி பற்றிய போதனை, கற்பழிப்பு போன்ற காரியத்தினால் இன்னொருவருக்குப் பலியான ஒரு நபரை உற்சாகப்படுத்த எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும்?
18 சந்தேகமின்றி, அந்தப் போதனையைச் சரியாகப் பயன்படுத்துவதற்கு ஒரு மூப்பர் தனிப்பட்ட அந்த நபரைக் குறித்து யோசித்துப் பார்ப்பார். ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: கிறிஸ்துவின் மீட்கும் பலி மோசேயின் நியாயப்பிரமாண மிருக பலிகளால் முன்குறித்துக் காட்டப்பட்டது, இவை சகல பாவங்களுக்கும் பிராயச்சித்தமாகத் தேவைப்பட்டன. (லேவியராகமம் 4:27, 28) என்றாலும் கற்பழிப்புக்குப் பலியான ஒரு நபர் அத்தகைய பாவநிவாரண பலியைச் செலுத்தவேண்டும் என்ற நிபந்தனை இல்லை. நியாயப்பிரமாணம் என்ன சொன்னதென்றால், அவளைத் தண்டிப்பதற்கு அவர்கள் “ஒன்றும் செய்யலாகாது.” (உபாகமம் 22:25-27) ஆகையால், இன்று ஒரு சகோதரி, தான் தாக்கப்பட்டுக் கற்பழிக்கப்பட்டதன் காரணமாகத் தன்னை அசுத்தமானவராகவும் மதிப்பற்றவராகவும் உணர்ந்தால், அந்தப் பாவத்திலிருந்து சுத்திகரிக்கப்பட மீட்கும்பொருளின் அவசியத்தை வலியுறுத்திக் காட்டுவது பொருத்தமானதாக இருக்குமா? நிச்சயமாக இருக்காது. தாக்கப்பட்டதால் அவர் பாவஞ்செய்யவில்லை. கற்பழித்த நபரே பாவஞ்செய்ததால் அவரே சுத்திகரிக்கப்பட வேண்டும். என்றபோதிலும், அவர் இன்னொருவருடைய பாவத்தினால் கடவுளுடைய பார்வையில் அசுத்தமாயிருப்பதற்கு மாறாக யெகோவாவுக்கு அவர் அருமையானவர் என்றும் அவருடைய அன்பில் நிலைத்திருக்கிறார் என்றும் சான்றுபகருவதற்கு மீட்கும்பொருளைத் தந்த யெகோவாவும் கிறிஸ்துவும் காட்டிய அன்பைப் பயன்படுத்தலாம்.—மாற்கு 7:18-23-ஐயும் 1 யோவான் 4:16-ஐயும் ஒப்பிடுக.
19. நம் சகோதர சகோதரிகளிடமுள்ள எல்லா கூட்டுறவுமே உற்சாகமாயிருக்கும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கக்கூடாது, ஆனால் நம்முடைய திடத்தீர்மானம் என்னவாயிருக்க வேண்டும்?
19 ஆம், ஒரு நபருடைய வாழ்க்கை நிலை என்னவாயிருந்தாலும் அவருடைய கடந்த நாட்களை எந்த வேதனைமிக்க சூழ்நிலைமைகள் கறைப்படுத்தினாலும், யெகோவாவின் மக்கள் அடங்கிய சபையில் அவர் உற்சாகத்தைப் பெறக்கூடியவராக இருக்க வேண்டும். கூடிவரும்போதெல்லாம் நாம் ஒவ்வொருவரும் ஒருவர்பேரிலொருவர் கருத்தாயிருந்து, ஒருவரையொருவர் தூண்டியெழுப்பி, ஒருவருக்கொருவர் உற்சாகமூட்ட முயற்சிசெய்தால், அவரும் அதைப் பெறுகிறவராயிருப்பார். என்றாலும் அபூரணராயிருப்பதன் காரணமாக, சில சமயத்தில் நாம் அனைவரும் அவ்வாறு செய்யத் தவறுகிறோம். தவிர்க்கமுடியாமல், ஒருவரையொருவர் நாம் மனக்கசப்படையச் செய்து, அவ்வப்போது ஒருவரையொருவர் புண்படுத்தவும் செய்கிறோம். இதன் சம்பந்தமாக பிறருடைய குறைபாடுகளின்பேரில் கவனத்தை ஊன்றவைக்காமலிருக்க முயற்சி செய்வோமாக. குறைகளின்பேரில் மனதை ஒருமுகப்படுத்தினால், நீங்கள் சபையைப் பற்றி மிதமிஞ்சி குறைகாணும் ஆபத்தில் உள்ளவர்களாக, நாம் தவிர்க்கவேண்டும் என்று பவுல் மிகுந்த ஊக்கமாகக் கூறிய இந்தக் கண்ணியில், அதாவது, சபை கூடிவருதலை விட்டுவிடும் கண்ணியில் தெரியாத்தனமாக விழவுங்கூடும். அவ்வாறு ஒருக்காலும் நேரிடாமலிருப்பதாக! இந்தப் பழைய ஒழுங்குமுறை மிகவும் ஆபத்தானதாகவும் ஒடுக்குகிறதாகவும் மாறிவருகையில், கூட்டங்களில் முடிந்தளவு நம்முடைய கூட்டுறவைக் கட்டியெழுப்புவதாகச் செய்யத் திடத்தீர்மானத்தோடு இருப்போமாக—யெகோவாவின் நாள் நெருங்கிவருவதைப் பார்க்கையில் இன்னும் மிக அதிக உறுதியாயிருப்போமாக!
[அடிக்குறிப்புகள்]
a ஒரு மூப்பர் அப்பேர்ப்பட்ட நபரோடு உற்சாகமூட்டும் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளைப் படிக்க விரும்பலாம்—உதாரணமாக, “தகுதியற்ற தயவிலிருந்து நீங்கள் நன்மையடைவீர்களா?” “மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுவது” போன்றவை.—ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15-ம் மார்ச் 1, 1990-ம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ இந்தக் கடைசி நாட்களில், நம் கூட்டங்களும் கூட்டுறவும் உற்சாகமளிப்பதாயிருப்பது ஏன் அத்தியாவசியம்?
◻ ஒருவருக்கொருவர் கருத்தாயிருப்பது என்றாலென்ன?
◻ ஒருவரையொருவர் தூண்டியெழுப்புவது என்றாலென்ன?
◻ ஒருவருக்கொருவர் உற்சாகமூட்டுவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
◻ மனச்சோர்வடைந்தவர்களையும் மனந்தளர்ந்தவர்களையும் எவ்வாறு உற்சாகமூட்டலாம்?
[பக்கம் 16-ன் படம்]
உபசரிப்புத்தன்மை ஒருவரையொருவர் நன்றாக அறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது
[பக்கம் 18-ன் படம்]
எலியா மனச்சோர்வடைந்தபோது, யெகோவா தயவோடு அவரைத் தேற்றினார்