ஒளிப் பிரகாசங்கள்—பெரியவையும் சிறியவையும் பகுதி இரண்டு
“உம்முடைய வெளிச்சத்திலே வெளிச்சம் காண்கிறோம்.”—சங்கீதம் 36:9.
1. வெளிப்படுத்துதல் புத்தகத்தின் அடையாளக்குறிப்புகளைப் புரிந்துகொள்வதற்கு என்ன ஆரம்ப முயற்சி எடுக்கப்பட்டது?
பைபிள் புத்தகமாகிய வெளிப்படுத்துதல், பூர்வ காலங்களிலிருந்தே கிறிஸ்தவர்களுக்கு ஆவலைத்தூண்டுவதாய் இருந்திருக்கிறது. சத்தியத்தின் ஒளி எவ்வாறு அதிக பிரகாசம் அடைந்துகொண்டே போகிறது என்பதற்கு அது ஒரு நல்ல உதாரணத்தை அளிக்கிறது. 1917-ல், நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில் யெகோவாவின் மக்கள், வெளிப்படுத்துதலுக்கு ஒரு விளக்கத்தைப் பிரசுரித்தனர். கிறிஸ்தவமண்டலத்தின் மத மற்றும் அரசியல் தலைவர்களை அது பயமின்றி அம்பலப்படுத்தியது; ஆனால் அதன் விளக்கங்களில் பல, பல்வேறு மூலங்களிலிருந்து எடுக்கப்பட்டிருந்தன. இருந்தாலும், யெகோவா பயன்படுத்திக்கொண்டிருந்த காணக்கூடிய செயல்துணையின் பேரில் பைபிள் மாணாக்கர்கள் காட்டிய உண்மைப்பற்றுறுதியைச் சோதிக்க நிறைவேறித்தீர்ந்த இரகசியம் ஒரு சோதனையாக அமைந்தது.
2. “அந்தத் தேசத்தின் பிறப்பு” என்ற கட்டுரை, வெளிப்படுத்துதல் புத்தகத்தைப் பற்றி என்ன புரிந்துகொள்ளுதலை அளித்தது?
2 மார்ச் 1, 1925-ன் ஆங்கில காவற்கோபுரத்தில் “அந்தத் தேசத்தின் பிறப்பு” என்ற கட்டுரை பிரசுரிக்கப்பட்டபோது, வெளிப்படுத்துதல் புத்தகத்தின் பேரில் குறிப்பிடத்தக்க பிரகாசமான ஒளி வீசியது. வெளிப்படுத்துதல் 12-ம் அதிகாரத்தில் உள்ள ஆண் பிள்ளையானது போப்பின் ஆட்சிமுறையைப் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், அந்த அதிகாரம் புறமத ரோம பேரரசாட்சிமுறைக்கும் ரோம போப்பின் ஆட்சிமுறைக்கும் மத்தியிலுள்ள ஒரு போரை விளக்குவதாகவும் எண்ணப்பட்டிருந்தது. ஆனால் 12-ம் அதிகாரத்தின் அர்த்தத்தோடு வெளிப்படுத்துதல் 11:15-18 தொடர்புடையதாக இருந்தது என்று அந்தக் கட்டுரை காண்பித்தது; கடவுளுடைய ராஜ்யத்தின் பிறப்போடு இது தொடர்புடையது என்பதைக் குறிப்பிடுவதாய் இது இருந்தது.
3. வெளிப்படுத்துதலைப் பற்றி என்ன பிரசுரங்கள் அதிகப்படியான வெளிச்சத்தை அளித்தன?
3 இதெல்லாம் வெளிப்படுத்துதலை அதிக தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு வழிநடத்தியது; 1930-ல், வெளிச்சம் (ஆங்கிலம்) என்ற பிரசுரம் இரு தொகுப்புகளாகப் பிரசுரிக்கப்பட்டபோது அந்தப் புரிந்துகொள்ளுதல் கிடைத்தது. “மகா பாபிலோன் விழுந்தது!” கடவுளுடைய ராஜ்யம் ஆளுகிறது! (ஆங்கிலம், 1963) மற்றும் “அப்போது தெய்வ இரகசியம் நிறைவேறித்தீர்ந்தது” (ஆங்கிலம், 1969) ஆகியவற்றில் இன்னும் அதிக தெளிவான விளக்கங்கள் இருந்தன. இருந்தாலும், தீர்க்கதரிசன புத்தகமாகிய வெளிப்படுத்துதலிலிருந்து கற்றுக்கொள்வதற்கு இன்னும் அதிகமிருந்தது. வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது! (ஆங்கிலம்) என்ற பிரசுரம் பிரசுரிக்கப்பட்டபோது 1988-ல் அதன்மீது அதிக பிரகாசமான ஒளி வீசியது. 1914-ல் தொடங்கிய ‘கர்த்தருடைய நாளுடன்’ வெளிப்படுத்துதல் தீர்க்கதரிசனம் பொருந்துகிறது என்ற உண்மைதானே, இந்தப் படிப்படியான அறிவொளியூட்டுதலுக்குத் திறவுகோல் என்பதாகச் சொல்லப்படலாம். (வெளிப்படுத்துதல் 1:10) ஆகவே அந்த நாள் முன்னேறுகையில், வெளிப்படுத்துதல் புத்தகம் அதிக தெளிவாகப் புரிந்துகொள்ளப்படும்.
‘உயரதிகாரங்கள்’ தெளிவாக்கப்பட்டன
4, 5. (அ) ரோமர் 13:1-ஐ பைபிள் மாணாக்கர்கள் எப்படி கருதினார்கள்? (ஆ) ‘உயரதிகாரங்களை’ பற்றிய வேதப்பூர்வ நிலைநிற்கை என்னவென்று பின்னர் கண்டறியப்பட்டது?
4 “ஒவ்வொருவரும் உயரதிகாரத்தில் இருப்பவர்களுக்கு [“மேலான அதிகாரமுள்ளவர்களுக்கு”] கீழ்ப்பட்டிருக்கவேண்டும்,” (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) என்று சொல்லப்பட்டுள்ள ரோமர் 13:1-ன் தொடர்பாக ஒரு பிரகாசமான ஒளி 1962-ல் காணப்பட்டது. அங்கு குறிப்பிடப்பட்டுள்ள ‘உயரதிகாரங்கள்,’ உலகப்பிரகாரமான அதிகாரங்களைக் குறிப்பதாக ஆரம்பகால பைபிள் மாணாக்கர்கள் புரிந்துகொண்டிருந்தனர். போர்காலத்தில் ஒரு கிறிஸ்தவன் அழைக்கப்பட்டால், அவர் சீருடை அணிந்து, துப்பாக்கியைத் தாங்கி, படைவரிசைகளில் மறைகுழிகள் வரையாகச் செல்ல கடமைப்பட்டிருப்பதை அந்த வசனம் அர்த்தப்படுத்துவதாக புரிந்துகொண்டார்கள். கிறிஸ்தவர் ஒருவர் உடன் மனிதர் ஒருவரைக் கொல்லமுடியாது என்பதால், மிகவும் மோசமான சூழ்நிலையின்கீழ் அவர் தன் துப்பாக்கியை மேல்நோக்கி சுடும் கட்டாயத்தில் இருப்பார்.a
5 “இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்,” என்று மத்தேயு 22:21-லுள்ள இயேசுவின் வார்த்தைகளைக் குறித்து கலந்தாலோசிக்கையில், நவம்பர் 15 மற்றும் டிசம்பர் 1, 1962-ன் ஆங்கில காவற்கோபுர பிரதிகள் இவ்விஷயத்தின் மேல் தெளிவான ஒளியை வீசச் செய்தன. அப்போஸ்தலர் 5:29-லுள்ள வார்த்தைகளும் பொருத்தமாக இருந்தன: “மனுஷருக்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.” கிறிஸ்தவர்கள் இராயனுக்கு—“உயரதிகாரத்தில் இருப்பவர்களுக்கு”—கீழ்ப்பட்டிருக்கவேண்டும்; கிறிஸ்தவன் கடவுளுடைய சட்டத்திற்கு முரண்பட்டுச் செயல்படுவதை அவசியப்படுத்தாதவரை மட்டுமே அவர்கள் அதன் கீழிருக்கிறார்கள். இராயனுக்குக் கீழ்ப்பட்டிருப்பது சம்பந்தப்பட்ட ஒன்று, முழுமையானதல்ல என்பது காணப்பட்டது. கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களுக்கு முரணாக இல்லாதவற்றை மட்டுமே கிறிஸ்தவர்கள் இராயனுக்குச் செலுத்துகிறார்கள். அந்தக் காரியத்தின்பேரில் தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெற்றது எவ்வளவு திருப்திகரமாய் இருந்தது!
ஒழுங்கமைப்பு சம்பந்தமான காரியங்களில் ஒளிப் பிரகாசங்கள்
6. (அ) கிறிஸ்தவமண்டலத்தில் பரவியிருக்கும் அதிகாரப் படிநிலை அமைப்பிலிருந்து விடுபடுவதற்கு என்ன நியமம் ஏற்றுக்கொள்ளப்பட்டது? (ஆ) சபையில் கண்காணிப்பைச் செய்பவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான சரியான முறை என்னவென்று கடைசியில் கண்டறியப்பட்டது?
6 சபைகளில் மூப்பர்களாகவும் டீக்கன்களாகவும் யார் சேவை செய்ய வேண்டும் என்ற கேள்வி எழும்பியது. கிறிஸ்தவமண்டலத்தில் பரவியிருக்கிற அதிகாரப் படிநிலை அமைப்புமுறையைத் தவிர்க்கும்படி, ஒவ்வொரு சபையிலுள்ள அங்கத்தினரும் வாக்களிப்பதன்மூலமாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதாக முடிவு செய்யப்பட்டது. ஆனால், வாக்களிப்பு மூலம் மூப்பர்களைத் தேர்ந்தெடுப்பது வேதப்பூர்வ ஆதாரமற்றது என்று செப்டம்பர் 1 மற்றும் அக்டோபர் 15, 1932-ன் ஆங்கில காவற்கோபுர பிரதிகளில் இருந்த அதிகப்படியான புரிந்துகொள்ளுதல் காண்பித்தது. ஆகவே இவர்கள், ஒரு ஊழியக் குழுவால் மாற்றீடு செய்யப்பட்டனர்; சங்கத்தால் ஒரு ஊழிய இயக்குநர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
7. சபையில் ஊழியர்கள் நியமிக்கப்பட்ட முறையில், ஒளிப் பிரகாசங்களின் காரணமாக என்ன முன்னேற்றங்கள் விளைந்தன?
7 சபையிலுள்ள ஊழியர்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களாக அல்ல, ஆனால் நியமிக்கப்படுகிறவர்களாக, அதாவது, தேவாட்சிக்குரிய விதத்தில் நியமிக்கப்படுகிறவர்களாக இருக்க வேண்டும் என்ற ஒளிப் பிரகாசங்களை ஜூன் 1 மற்றும் ஜூன் 15, 1938-ன் ஆங்கில காவற்கோபுர பிரதிகள் கொண்டிருந்தன. ஒவ்வொரு சபையும், சபை ஊழியர் ஒருவரால் மட்டும் இயக்கப்பட வேண்டியதாக இல்லை என்று மற்றொரு பிரகாசமான ஒளி 1971-ல் காண்பித்தது. மாறாக, யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழுவால் நியமிக்கப்பட்ட மூப்பர்களால், அல்லது கண்காணிகளாலான ஒரு குழுவை ஒவ்வொன்றும் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, சுமார் 40-க்கும் அதிகமான வருடங்களாக அதிகரித்து வந்த ஒளியால், மூப்பர்களும் தற்போது உதவி ஊழியர்கள் என்று அறியப்படுகிற டீக்கன்களும் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையால்’ அதன் நிர்வாகக் குழுவால் நியமிக்கப்படவேண்டும் என்பது தெளிவானது. (மத்தேயு 24:45-47, NW) இது அப்போஸ்தலர் காலத்தில் என்ன நடந்ததோ அதை ஒத்திருந்தது. தீமோத்தேயு, தீத்து போன்றவர்கள் முதல் நூற்றாண்டின் நிர்வாகக் குழுவால் கண்காணிகளாக நியமிக்கப்பட்டார்கள். (1 தீமோத்தேயு 3:1-7; 5:22; தீத்து 1:5-9) இதெல்லாம் ஏசாயா 60:17-ன் முனைப்பான நிறைவேற்றமாக இருக்கிறது: “நான் வெண்கலத்துக்குப் பதிலாகப் பொன்னையும், இரும்புக்குப் பதிலாக வெள்ளியையும், மரங்களுக்குப் பதிலாக வெண்கலத்தையும், கற்களுக்குப் பதிலாக இரும்பையும் வரப்பண்ணி, உன் கண்காணிகளைச் சமாதானமுள்ளவர்களும், உன் தண்டற்காரரை நீதியுள்ளவர்களுமாக்குவேன்.”
8. (அ) ஒளி அதிகரித்துவரும் சத்தியம் காரணமாக, சங்கம் செயல்பட்ட முறையில் என்ன முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது? (ஆ) நிர்வாகக் குழுவின் செயற்குழுக்கள் யாவை, அவை செயல்படுகிற அல்லது கண்காணிப்பு செய்கிற சம்பந்தப்பட்ட பகுதிகள் யாவை?
8 உவாட்ச் டவர் சொஸைட்டி செயல்பட்ட முறையைக் குறித்த விஷயமும் இருந்தது. அநேக வருடங்களாக, யெகோவாவின் சாட்சிகளுடைய நிர்வாகக் குழு என்பதும் உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் பென்ஸில்வேனியாவின் இயக்குநர் குழு என்பதும் ஒன்றையே அர்த்தப்படுத்தின; மேலும், காரியங்கள் பெரும்பாலும் சொஸைட்டியின் பிரஸிடென்ட்டைச் சார்ந்தே இருந்தன. யெகோவாவின் சாட்சிகளின் வருடாந்தரப் புத்தகம் 1977 (ஆங்கிலம், பக்கங்கள் 258-9)-ல் காண்பிக்கப்பட்டுள்ளபடி, 1976-ல் நிர்வாகக் குழு, ஆறு குழுக்களுடன் செயல்பட ஆரம்பித்தது; உலகளாவிய வேலையின் குறிப்பிட்ட அம்சங்களைக் கவனிக்கும்படி அவற்றில் ஒவ்வொன்றும் நியமிப்பளிக்கப்பட்டன. அலுவலர் ஆலோசனைக் குழு, உலகளாவிய பெத்தேல் குடும்பத்தில் சேவை செய்யும் எல்லாருடைய அக்கறைகளும் உட்பட, அலுவலருடைய காரியங்களைக் கையாளுகிறது. பிரசுர ஆலோசனைக் குழு, சொத்து, அச்சடிப்பு போன்ற உலகப்பிரகாரமான மற்றும் சட்டப்பூர்வமான எல்லா காரியங்களையும் கையாளுகிறது. ஊழிய ஆலோசனைக் குழு, சாட்சி பகரும் வேலையைக் கவனிக்கிறது; பயணக் கண்காணிகள், பயனியர்கள், மற்றும் சபை பிரஸ்தாபிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்கிறது. போதனா ஆலோசனைக் குழு, சபை கூட்டங்கள், விசேஷ மாநாட்டு தினங்கள், வட்டார மாநாடுகள், மாவட்ட மற்றும் சர்வதேச மாநாடுகள் ஆகியவற்றிற்கும் கடவுளுடைய மக்களின் ஆவிக்குரிய கல்விக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் பொறுப்புள்ளதாய் இருக்கிறது. எழுத்து ஆலோசனைக் குழு, எல்லா வகையான பிரசுரங்களின் தயாரிப்பையும் மொழிபெயர்ப்பையும் மேற்பார்வை செய்கிறது; எல்லாமே வேத வசனங்களுக்கு இசைவாக இருப்பதை நிச்சயப்படுத்திக்கொள்கிறது. அக்கிராசனர் ஆலோசனைக் குழு, நெருக்கடி நிலையிலுள்ள தேவைகளையும், மற்ற அவசரமான தேவைகளையும் கவனித்துக்கொள்கிறது.b மேலுமாக 1970-களில், உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளை அலுவலகங்கள் ஒரு கண்காணியால் இயக்கப்படுவதற்கு பதிலாக ஒரு குழுவால் இயக்கப்பட ஆரம்பித்தன.
கிறிஸ்தவ நடத்தையைக் குறித்த ஒளி
9. உலகின் அரசாங்கங்களுடன் கிறிஸ்தவர்களுக்குள்ள தொடர்பை சத்தியத்தின் ஒளி எவ்வாறு பாதித்தது?
9 அநேக ஒளிப் பிரகாசங்கள் கிறிஸ்தவ நடத்தையைப் பற்றியவை. உதாரணமாக, நடுநிலை வகிப்பைப் பற்றிய விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நவம்பர் 1, 1939, ஆங்கில காவற்கோபுர பிரதியில் காணப்படும் “நடுநிலை வகிப்பு” என்ற கட்டுரையில், இந்தப் பொருளின்பேரில் குறிப்பாக பிரகாசமான ஒரு ஒளி வீசியது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்திற்குச் சற்று பின்னர்தானே இது வருவது எவ்வளவு சமயோசிதமானதாய் இருந்தது! அந்தக் கட்டுரை, நடுநிலை வகிப்பை விளக்கி, கிறிஸ்தவர்கள் அரசியல் விவகாரங்களிலோ தேசங்களுக்கிடையிலுள்ள சண்டை சச்சரவுகளிலோ ஈடுபடக் கூடாது என்று காண்பித்தது. (மீகா 4:3, 5; யோவான் 17:14, 16) எல்லா ஜனங்களாலும் அவர்கள் பகைக்கப்படுவதற்கு இது ஒரு காரணமாக இருக்கிறது. (மத்தேயு 24:9) மத்தேயு 26:52-ல் இயேசு தெளிவாக்கிய விதமாகவே, பண்டைய இஸ்ரவேலின் யுத்தங்கள், கிறிஸ்தவர்களுக்கு மாதிரியாக இல்லை. மேலுமாக, பண்டைய இஸ்ரவேலைப் போல, இன்று எந்த ஒரு அரசியல் தேசமும் தேவாட்சியாக, கடவுளால் ஆட்சி செய்யப்படுவதாக இல்லை.
10. கிறிஸ்தவர்கள் இரத்தத்தை எவ்வாறு கருத வேண்டும் என்பதைக் குறித்து ஒளிப் பிரகாசங்கள் எதை வெளிப்படுத்தின?
10 இரத்தத்தின் புனிதத் தன்மையைக் குறித்தும் ஒளிப் பிரகாசித்தது. அப்போஸ்தலர் 15:28, 29-ல் கொடுக்கப்பட்டுள்ள இரத்தத்திற்கான தடைவிதிப்பு, யூத கிறிஸ்தவர்களுக்கே வரையறுக்கப்பட்டது என்று சில பைபிள் மாணாக்கர்கள் நினைத்தனர். என்றபோதிலும், அப்போஸ்தலருடைய காலங்களில், புறஜாதியாரிலிருந்து விசுவாசிகளான அனைவருக்கும் இந்தக் கட்டளை பொருந்தியதாக அப்போஸ்தலர் 21:25 காண்பிக்கிறது. ஆகவே, ஜூலை 1, 1945 ஆங்கில காவற்கோபுரம் காண்பித்தபடி, இரத்தத்தின் புனிதத் தன்மை எல்லா கிறிஸ்தவர்களுக்கும் பொருந்துகிறது. இரத்தம் கலந்த உணவுப் பொருட்களில் மிருக இரத்தத்தை சாப்பிட மறுப்பதை மட்டுமல்லாமல், இரத்தமேற்றுதலைக் குறித்ததில் மனித இரத்தத்திலிருந்து விலகியிருத்தலையும் அது அர்த்தப்படுத்தும்.
11. புகையிலையைப் பயன்படுத்துதலைக் குறித்து, கிறிஸ்தவர்களுடைய நோக்கின் சம்பந்தமாக என்ன கண்டறியப்பட்டது?
11 அதிகரிக்கும் ஒளியின் விளைவாக, ஆரம்பத்தில் வெறுமனே விரும்பத்தகாதவையென அற்பமாக விடப்பட்ட பழக்கங்கள், பின்னர் கடுமையான குற்றமாகக் கையாளப்பட்டன. இதற்கு ஒரு உதாரணம், புகையிலையைப் பயன்படுத்துவதைப் பற்றியதாகும். ஆகஸ்ட் 1, 1895-ன் சீயோனின் காவற்கோபுரத்தில் (ஆங்கிலம்) சகோதரர் ரஸல், 1 கொரிந்தியர் 10:31 மற்றும் 2 கொரிந்தியர் 7:1-க்குக் கவனத்தைத் திருப்பி, இவ்வாறு எழுதினார்: “புகையிலையை எந்தவொரு உருவிலும் பயன்படுத்துவது, எப்படி கடவுளுடைய மகிமைக்காக அல்லது எந்தவொரு கிறிஸ்தவனின் சொந்த நன்மைக்காக இருக்கும் என்று என்னால் காணமுடியவில்லை.” புகையிலையைப் பயன்படுத்தும் எவரும் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருக்க முடியாது என்று 1973 முதல் தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. எந்தவொரு சாட்சியும் சூதாட்ட அமைப்பு ஒன்றில் வேலையும் செய்துகொண்டு, சபையிலும் இருக்க முடியாது என்பது 1976-ல் தெளிவாக்கப்பட்டது.
மற்ற திருத்தங்கள்
12. (அ) பேதுருவிடம் ஒப்படைக்கப்பட்ட ராஜ்யத்தின் திறவுகோல்களின் எண்ணிக்கையைக் குறித்து ஒரு பிரகாசமான ஒளி எதை வெளிப்படுத்தியது? (ஆ) பேதுரு ஒவ்வொரு திறவுகோலைப் பயன்படுத்தியபோதும் சூழ்நிலைகள் என்னவாக இருந்தன?
12 இயேசு பேதுருவுக்கு அளித்த அடையாள அர்த்தமுள்ள திறவுகோல்களின் எண்ணிக்கையிலும் அதிகப்படியான புரிந்துகொள்ளுதல் இருந்திருக்கிறது. மக்கள் ராஜ்ய சுதந்தரவாளிகளாகும்படி வழியைத் திறப்பதற்கு பேதுரு இரண்டு திறவுகோல்களை—பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று யூதர்களுக்காக பயன்படுத்திய ஒன்றையும் புறஜாதிகளுக்காக, பொ.ச. 36-ல் பேதுரு கொர்நேலியுவுக்குப் பிரசங்கித்தபோதும் பயன்படுத்தப்பட்ட மற்றொன்றையும்—பெற்றதாக பைபிள் மாணாக்கர்கள் கருதினர். (அப்போஸ்தலர் 2:14-41; 10:34-48) மூன்றாவது தொகுதியான சமாரியர்களும் உட்பட்டிருந்தது காலப்போக்கில் தெரிய வந்தது. அவர்களுக்கு ராஜ்யத்திற்குரிய வாய்ப்பை அளித்தபோது, பேதுரு இரண்டாம் திறவுகோலைப் பயன்படுத்தினார். (அப்போஸ்தலர் 8:14-17) இவ்வாறாக, பேதுரு கொர்நேலியுவிடம் பிரசங்கித்தபோது, மூன்றாவது திறவுகோலைப் பயன்படுத்தனார்.—ஆங்கில காவற்கோபுரம், அக்டோபர் 1, 1979, பக்கங்கள் 16-22, 26.
13. யோவான் 10-ம் அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்டுத் தொழுவங்களைப்பற்றி ஒளிப் பிரகாசங்கள் எதை வெளிப்படுத்தின?
13 இயேசு, வெறும் இரண்டு அல்ல, ஆனால் மூன்று ஆட்டுத் தொழுவங்களைக் குறிப்பிட்டார் என்று மற்றொரு ஒளிக் கதிரிலிருந்து தெரிய வந்தது. (யோவான், 10-ம் அதிகாரம்) இவை (1) முழுக்காட்டுபவராகிய யோவான் வாசலைக் காக்கிறவராக இருந்த யூத ஆட்டுத்தொழுவம், (2) அபிஷேகம் செய்யப்பட்ட ராஜ்ய சுதந்தரவாளிகளாலான தொழுவம், மற்றும் (3) பூமிக்குரிய நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ‘வேறே ஆடுகளின்’ தொழுவம்.—யோவான் 10:2, 3, 15, 16; ஆங்கில காவற்கோபுரம், பிப்ரவரி 15, 1984, பக்கங்கள் 10-20.
14. மாதிரிப்படிவ யூபிலியின் தொடக்கம் சம்பந்தமாக, அதிகப்படியான வெளிச்சம் எவ்வாறு காரியங்களைத் தெளிவுபடுத்தியது?
14 மாதிரிப்படிவமான யூபிலியைப் பற்றிய புரிந்துகொள்ளுதலும் சற்றுத் தெளிவான விளக்கத்தைப் பெற்றது. நியாயப்பிரமாணத்தின்கீழ், ஒவ்வொரு 50-வது ஆண்டும் மகத்தான யூபிலியாக இருந்தது; அதில், உடைமைகள், முதலில் யாருக்குச் சொந்தமாய் இருந்தனவோ, அவர்களிடமே திரும்ப கொடுக்கப்பட்டன. (லேவியராகமம் 25:10) இது ஆயிர ஆண்டு ஆட்சியை முன்னிழலாகக் குறித்ததாக நெடுங்காலமாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்தது. என்றபோதிலும், பொ.ச. 33-ல் பெந்தெகொஸ்தே அன்று, ஊற்றப்பட்ட பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டவர்கள் மோசேயின் நியாயப்பிரமாண உடன்படிக்கைக்குரிய கட்டிலிருந்து விடுவிக்கப்பட்டபோதுதானே, மாதிரிப்படிவ யூபிலி உண்மையில் தொடங்கியதாக மிக சமீபத்திய காலங்களில் கண்டறியப்பட்டது.—காவற்கோபுரம், ஜூன் 1, 1987, பக்கங்கள் 16-26.
பதங்களின்பேரில் அதிகப்படியான வெளிச்சம்
15. “திட்டம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்படுவதைக் குறித்து என்ன ஒளிப் பிரகாசித்தது?
15 “இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்கப் பிரசங்கி வகைதேடினான். எழுதின வாக்கியங்கள் [“வார்த்தைகள்,” NW] செவ்வையும் சத்தியமுமானவைகள்.” (பிரசங்கி 12:10) தற்போது நம்முடைய பொருளுக்கும் இந்த வார்த்தைகளை நன்கு பொருத்தலாம்; ஏனென்றால், கோட்பாடு, நடத்தை போன்ற முக்கியமான விஷயங்களின்பேரில் மட்டுமல்லாமல், கிறிஸ்தவ பதங்கள் மற்றும் அவற்றின் திருத்தமான அர்த்தம் ஆகியவற்றின்பேரிலும் ஒளிப் பிரகாசித்திருக்கிறது. உதாரணமாக, பைபிள் மாணாக்கர்களால் மிகவும் விரும்பப்பட்ட பிரசுரங்களில் ஒன்று வேதாகமங்களின்பேரில் ஆராய்வுகள் (ஆங்கிலம்) என்பதன் முதல் தொகுப்பாகிய காலங்களைக் குறித்த தெய்வீக திட்டம் (ஆங்கிலம்) என்ற தலைப்பையுடைய பிரசுரமாகும். என்றபோதிலும், மனிதர்கள் மட்டுமே திட்டங்கள் போடுவதாக கடவுளுடைய வார்த்தை சொல்லுகிறது என்பது காலப்போக்கில் புரிந்துகொள்ளப்பட்டது. (நீதிமொழிகள் 19:21) யெகோவா திட்டமிடுவதாக வேதவசனங்கள் ஒருபோதும் சொல்வதில்லை. அவர் திட்டமிடவேண்டிய அவசியம் இல்லை. எபேசியர் 1:9, 10-ல், ‘காலங்கள் நிறைவேறும்போது விளங்கும் நியமத்தின்படி, தமக்குள்ளே தீர்மானித்திருந்த தம்முடைய தயவுள்ள சித்தம்,’ என்று நாம் வாசிக்கிறபடி, அவர் எதைச் செய்ய நோக்கம் கொண்டிருந்தாலும் அவருடைய அளவற்ற ஞானம் மற்றும் வல்லமை காரணமாக அது நிச்சயமாக வெற்றி அடையும். ஆகவே, யெகோவாவைக் குறித்துப் பேசுகையில், ‘நோக்கம்’ என்ற பதம் அதிக பொருத்தமானதாக இருப்பது படிப்படியாகக் காணப்பட்டது.
16. லூக்கா 2:14-ன் சரியான புரிந்துகொள்ளுதல் என்னவென்று படிப்படியாகக் காணப்பட்டது?
16 லூக்கா 2:14-ஐப் பற்றி மேலும் தெளிவான புரிந்துகொள்ளுதலைப் பெறும் விஷயமும் இருந்தது. கிங் ஜேம்ஸ் வர்ஷன்படி, அது இவ்வாறு வாசிக்கிறது: “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷரிடம் நற்பிரியமும் உண்டாவதாக.” இது சரியான கருத்தை வெளிப்படுத்தவில்லை என்பது காணப்பட்டது; ஏனென்றால், கடவுளுடைய நற்பிரியம் துன்மார்க்கரிடமாக வெளிக்காட்டப்படுவதில்லை. இதனால், கடவுளிடம் நற்பிரியமுள்ளவர்களாக இருக்கும் மனிதருக்குச் சமாதானம் என்ற அர்த்தத்தில் சாட்சிகள் இதைக் கருதினர். ஆகவே, பைபிளில் அக்கறை காண்பிப்பவர்களை நற்பிரியமுள்ள மனிதர் என்று அவர்கள் குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால், உட்பட்டிருந்தது என்னவென்றால் நற்பிரியம், மனிதருடைய பாகத்தில் அல்ல, ஆனால் கடவுளுடைய பாகத்திலேயே என்பது பின்னர் புரிந்துகொள்ளப்பட்டது. இவ்வாறாக, புதிய உலக மொழிபெயர்ப்பு, லூக்கா 2:14-ன் அடிக்குறிப்பில் “[கடவுள்] அங்கீகரிக்கிற மனிதர்” பற்றி பேசுகிறது. தங்களுடைய ஒப்புக்கொடுத்தலின் பொருத்தனைக்கு இசைவாக வாழும் எல்லா கிறிஸ்தவர்களும் கடவுளுடைய நற்பிரியத்தைக் கொண்டிருக்கிறார்கள்.
17, 18. யெகோவா எதை நியாயநிரூபணம் செய்வார், எதைப் பரிசுத்தப்படுத்துவார்?
17 அதேவிதமாகவே, யெகோவாவின் பெயர் நியாயநிரூபணம் செய்யப்படுவதைப்பற்றி சாட்சிகள் நெடுங்காலமாகப் பேசினார்கள். ஆனால் சாத்தான், யெகோவாவின் பெயரைப் பற்றி சந்தேகத்தை எழுப்பினானா? அந்தக் காரியத்தைப் பொறுத்த வரையிலும், யெகோவாவுக்கு அந்தப் பெயருக்கான உரிமை இல்லாததுபோல் அவனுடைய பிரதிநிதிகள் எவரேனும் கேள்வி எழுப்பினார்களா? இல்லை, நிச்சயமாக இல்லை. சவால் எழுப்பப்பட்டதால், நியாயநிரூபணம் செய்யப்படவேண்டியது யெகோவாவின் பெயர் அல்ல. அதன் காரணமாகவே, உவாட்ச் டவர் சொஸைட்டியின் சமீபத்திய பிரசுரங்கள், யெகோவாவின் பெயர் நியாயநிரூபணம் செய்யப்படுவதாகப் பேசுவதில்லை. அவை யெகோவாவின் அரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதாகவும் அவருடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படுவதாகவும் பேசுகின்றன. நாம் எவ்வாறு ஜெபிக்கவேண்டும் என்று இயேசு கற்றுக்கொடுத்தாரோ அதற்கு இசைவாக இது இருக்கிறது: “உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக.” (மத்தேயு 6:9) தம்முடைய பெயரைப் பரிசுத்தப்படுத்தப் போவதாக யெகோவா அடிக்கடி கூறினார்; இஸ்ரவேலர் அந்தப் பெயரை சவாலிடவில்லை, ஆனால் பரிசுத்த குலைச்சலாக்கினர்.—எசேக்கியேல் 20:9, 14, 22; 36:23.
18 அக்கறைக்குரியவிதத்தில், 1971-ல், ‘நானே யெகோவா என்று தேசங்கள் அப்பொழுது அறிந்துகொள்வார்கள்’—எப்படி? என்ற ஆங்கில புத்தகம் இந்த வேறுபாட்டை உண்டுபண்ணியது: “யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதற்கும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்துவதற்கும் . . . இயேசு கிறிஸ்து போராடுகிறார்.” (பக்கங்கள் 364-5) 1973-ல், கடவுளுடைய ஆயிர வருட ராஜ்யம் நெருங்கிவிட்டது இவ்வாறு சொன்னது: “வரப்போகும் ‘மகா உபத்திரவம்,’ சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா, தம்முடைய சர்வலோகப் பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்வதற்கும் தம்முடைய போற்றத்தக்க பெயரைப் பரிசுத்தப்படுத்துவதற்குமான சமயமாக இருக்கிறது.” (பக்கம் 409) பின்னர், 1975-ல், உலக இக்கட்டிலிருந்து மனிதனின் இரட்சிப்பு சமீபித்துள்ளது! (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிட்டது: “சர்வலோக சரித்திரத்தின் மிகப் பெரிய சம்பவமாகிய, யெகோவாவின் சர்வலோக பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்தலும் அவருடைய பரிசுத்த பெயரை பரிசுத்தப்படுத்துதலும் சாதிக்கப்பட்டிருக்கும்.”—பக்கம் 281.
19, 20. ஆவிக்குரிய ஒளியின் பிரகாசங்களைக் குறித்து நம்முடைய போற்றுதலை நாம் எவ்வாறு காண்பிக்கலாம்?
19 இந்த ஆவிக்குரிய ஒளியில் திளைத்துக்கொண்டிருக்க யெகோவாவின் மக்கள் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய் இருக்கிறார்கள்! இதற்கு முற்றிலும் மாறாக, கிறிஸ்தவமண்டல தலைவர்கள் எப்படிப்பட்ட ஆவிக்குரிய இருளில் தங்களைக் காண்கிறார்கள் என்பதை ஒரு குருவின் இந்தக் கூற்று விளக்குவதாய் இருக்கிறது: “பாவம் ஏன் இருக்கிறது? ஏன் துன்பம்? பிசாசு ஏன் இருக்கிறான்? நான் பரலோகத்திற்குப் போகும்போது கர்த்தரிடம் இந்தக் கேள்விகளைக் கேட்க விரும்புகிறேன்.” ஆனால் யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு ஏன் என்று சொல்ல முடியும்: யெகோவாவுடைய பேரரசுரிமையின் சரியானத்தன்மையைப் பற்றிய விவாதம் மற்றும் பிசாசின் எதிர்ப்பின்மத்தியிலும் மனித சிருஷ்டிகள் கடவுளுக்கு உண்மைத்தன்மையைக் காத்துக்கொள்வார்களா என்ற கேள்வியின் காரணமாகவுமே.
20 வருடங்களினூடே, பெரியவையும் சிறியவையுமான ஒளிப் பிரகாசங்கள், யெகோவாவின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களின் பாதைக்கு வெளிச்சம் காட்டிக்கொண்டு வந்திருக்கின்றன. சங்கீதம் 97:11 மற்றும் நீதிமொழிகள் 4:18 போன்ற வேதவசனங்களின் நிறைவேற்றமாக இது இருந்துவந்திருக்கிறது. ஆனால், வெளிச்சத்தில் நடப்பது என்பது, அதிகப்படியான வெளிச்சத்திற்குப் போற்றுதல் காண்பிப்பதையும் அதற்கு இசைவாக வாழ்வதையும் அர்த்தப்படுத்துகிறது என்பதை நாம் ஒருபோதும் மறக்கக்கூடாது. நாம் பார்த்திருக்கிறபடி, இந்த அதிகப்படியான வெளிச்சம் நம்முடைய நடத்தையையும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பிரசங்க வேலையையும் உட்படுத்துகிறது.
[அடிக்குறிப்புகள்]
a இந்தக் கருத்துக்குப் பிரதிபலிப்பாக, ஜூன் 1 மற்றும் ஜூன் 15, 1929-ன் ஆங்கில காவற்கோபுர பிரதிகள், யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் ‘உயரதிகாரங்களாக’ விவரித்தன. அடிப்படையாக இந்த நிலைதான் 1962-ல் திருத்தப்பட்டது.
b எஸ்றாவின் நாட்களில் நிதனீமியர் இருந்ததற்கு ஒப்பாக, விசேஷமாக ‘வேறே ஆடுகளிலிருந்து’ தேர்ந்தெடுக்கப்பட்ட சகோதரர்கள், நிர்வாகக் குழுவின் குழுக்களுக்கு உதவும்படி நியமிக்கப்பட்டிருப்பதாக ஏப்ரல் 15, 1992 காவற்கோபுரம் அறிவித்தது.—யோவான் 10:16; எஸ்றா 2:58.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ‘உயரதிகாரங்களுக்கு’ கீழ்ப்பட்டிருத்தலைக் குறித்து என்ன ஒளிப் பிரகாசித்திருக்கிறது?
◻ ஒளிப் பிரகாசங்கள், அமைப்பு சம்பந்தமான என்ன வளர்ச்சிகளை விளைவித்திருக்கின்றன?
◻ அதிகப்படியான வெளிச்சம் எப்படி கிறிஸ்தவ நடத்தையைப் பாதித்திருக்கிறது?
◻ குறிப்பிட்ட வேதப்பூர்வ குறிப்புகளைப் புரிந்துகொள்வதில் என்ன திருத்தங்களை ஆவிக்குரிய வெளிச்சம் கொண்டுவந்திருக்கிறது?
[பக்கம் 25-ன் படங்களுக்கான நன்றி]
Keys on page 24: Drawing based on photo taken in Cooper-Hewitt, National Design Museum, Smithsonian Institution