நீதி ஒரு தேசத்தை உயர்த்துகிறது
பல நாட்கள் மழை பெய்தபின்பு, மேகங்கள் இல்லாத வானத்தில் சூரியன் பிரகாசிப்பதைக் காண எழுந்திருப்பது என்னே இன்பமாக இருக்கும்! பூமி புதுவலுவூட்டப்பட்டுள்ளது, இப்போது தாவரங்கள் செழிப்பாக வளர முடியும். நீதியான ஆட்சியின் ஆசீர்வாதங்களை விளக்கிக் காண்பிப்பதற்கு யெகோவா தேவன் ஒருசமயம் அப்படிப்பட்ட காட்சி ஒன்றை உபயோகித்தார். தாவீது ராஜாவிடம் அவர் சொன்னார்: “நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம் பண்ணுகிறவர் இருப்பார். அவர் காலையில் மந்தாரமில்லாமல் உதித்து, மழைக்குப் பிற்பாடு தன் காந்தியினால் புல்லைப் பூமியிலிருந்து முளைக்கப்பண்ணுகிற சூரியனுடைய விடியற்கால வெளிச்சத்தைப்போல இருப்பார்.”—2 சாமுவேல் 23:3, 4.
தாவீதின் மகனாகிய சாலொமோன் ராஜாவின் நீதியான ஆட்சியின்போது கடவுளுடைய வார்த்தைகள் உண்மையென நிரூபிக்கப்பட்டன. பைபிள் அறிக்கையிடுகிறது: “சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:25.
பண்டைய இஸ்ரவேல் கடவுளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தேசமாக இருந்தது. அவர்களுக்கு தம்முடைய சட்டங்களை அவர் கொடுத்திருந்தார், அவர்கள் அவருடைய சத்தத்திற்குச் செவிகொடுத்தால், ‘பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் மேன்மையாக வைப்பதாக’ அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (உபாகமம் 28:1) இஸ்ரவேலின் சொந்த நீதி அவர்களை உயர்த்தாமல், யெகோவாவின் நீதிதானே அவர்களை உயர்த்தியது. கடவுள் அவர்களுக்குக் கொடுத்திருந்த கட்டளைகள், அவர்களைச் சுற்றியிருந்த தேசங்களுடைய சட்டங்களைக் காட்டிலும் மிகவும் உயர்ந்தவையாய் இருந்தன. ஒரு தேசமாக, அவர்கள் மற்ற எல்லா தேசத்தாரைப் போலவே அபூரணராய் இருந்தனர். எனவே, அவர்கள் எல்லா தேசங்களுக்கும் மேலாக உயர்த்தப்பட்டதற்கான புகழ், யெகோவாவின் உயர்வான சட்டத்தையும் அதை அவர்கள் கண்டிப்பாக கடைப்பிடித்ததையுமே சார்ந்திருந்தது. அவர்கள் யெகோவாவின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோது, அவருடைய தயவையும் ஆசீர்வாதத்தையும் அனுபவித்தனர். இதை சாலொமோன் ராஜா தன் ஆட்சியின்போது அனுபவித்தார். “நீதி ஜனத்தை உயர்த்தும்” என்று அவரால் சொல்ல முடிந்தது, “பாவமோ எந்த ஜனத்துக்கும் இகழ்ச்சி,” என்று அவர் எச்சரித்தார்.—நீதிமொழிகள் 14:34.
விசனகரமாக, அடிக்கடி கீழ்ப்படியாமல் போனதன் காரணமாக இஸ்ரவேல் தேசம் ஒரு தாழ்வான நிலைக்கு கொண்டுவரப்பட்டது. அவர்கள் தேசிய அளவில் அவமானத்தை அனுபவித்தனர். இது இறுதியில் அவர்கள் நிரந்தரமாக நிராகரிக்கப்படுவதற்கும் ஒரு புதிய ஆவிக்குரிய தேசத்தை ஏற்றுக்கொள்வதற்கும் வழிநடத்தியது.—மத்தேயு 21:43.
ஆவிக்குரிய இஸ்ரவேல்
‘தேவன் புறஜாதிகளினின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தைத் தெரிந்துகொள்ளும்படி தம் கவனத்தைத் திருப்பியிருக்கிறார்’ என்று எருசலேமில் நடந்த கிறிஸ்தவ ஆளும் குழுவின் கூட்டம் ஒன்றில் யூதகுலத்தில் பிறந்த யாக்கோபு பரிசுத்த ஆவியினுடைய ஏவுதலினால் சொன்னார். (அப்போஸ்தலர் 15:14, NW) அப்போஸ்தலனாகிய பவுல் இந்தப் புதிய கிறிஸ்தவ தேசத்தை ‘தேவனுடைய இஸ்ரவேல்’ என்று அழைத்தார். (கலாத்தியர் 6:16) அவர்கள் அழைக்கப்பட்டதன் நோக்கத்தைக் குறித்து பேதுரு எழுதினார்: “நீங்களோ உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்.” (1 பேதுரு 2:9) கடவுளுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களாக, அவர்கள் இந்த உலகத்தில் ஒளிகளாகப் பிரகாசிக்க வேண்டியவர்களாய் இருந்தனர். யெகோவாவின் நீதி அவர்களை உயர்வாக வைக்கும்.—பிலிப்பியர் 2:14, 15.
இந்த ஆவிக்குரிய இஸ்ரவேலரை தேர்ந்தெடுப்பதை, நிலத்தில் வைரத்தை தோண்டி எடுப்பதற்கு ஒப்பிடலாம். வைரத்தைக் கொண்டிருக்கும் வளமான தாது மேற்பரப்பிற்கு கொண்டுவரப்படும்போது, அது 3 டன் எடையுள்ள மண் 1 காரட் (200 மில்லிகிராம்) வைரத்தை மட்டுமே கொடுக்கும். வைரத்தை பிரித்தெடுப்பதற்கு, தாதுவை தண்ணீரோடு கலந்து, பிறகு அந்தக் கலவையை மசகெண்ணெய் டேபிள்கள் மீது பாய வைக்கும் முறை ஒரு சமயம் பயன்படுத்தப்பட்டது. வைரங்கள் தண்ணீரை தடுத்து நிறுத்தும் ஆற்றலுடையவை, அவை மசகெண்ணையோடு ஒட்டிக்கொண்டன, தேவைப்படாத பொருட்கள் கழுவப்பட்டன. இந்த நிலையில் வைரங்கள் சொரசொரப்பாக இருந்தன. இருப்பினும், அதை வெட்டி மெருகேற்றியபோது, அவை எல்லா திசைகளிலும் வெளிச்சத்தை பிரதிபலித்தன.
அவற்றைச் சுற்றியிருக்கும் பருப்பொருளின் பாகமாயிராத, தண்ணீரில் ஒட்டாத வைரத்தைப் போல, யெகோவாவின் ஜனங்கள் இந்த உலகிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். (யோவான் 17:16) முதலாவது அவர்கள் வெளிச்சத்தினிடமாக கவர்ந்திழுக்கப்பட்டபோது, அவர்கள் பளபளப்பில் குறைவுபட்டிருக்கக்கூடும். ஆனால் யெகோவாவின் வார்த்தையும் ஆவியும் அவர்களுக்குள்ளே ஒரு புதிய ஆள்தன்மையை உருவாக்கி, இப்போது அவர்கள் இந்த உலகில் ஒளிகளாக பிரகாசிக்கின்றனர். யெகோவாவினுடைய நீதியின் காரணமாக அவர்கள் உயர்வாக வைக்கப்பட்டு, ராஜ்ய சத்தியத்தின் மகிமையான ஒளியை எல்லா திசைகளிலும் பிரதிபலிக்கின்றனர், தங்களுடைய சொந்த நீதியின் காரணமாக அல்ல.
இருப்பினும், பொ.ச. முதல் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து சபைகளுக்குள் விசுவாசதுரோகம் மெல்ல மெல்ல புகுந்து அநேகரை பாதித்தது. கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள் உலகின் தேசங்களோடு இணைந்துவிட்டிருந்தனர், அவர்களைச் சுற்றியிருந்த உலகிலிருந்து அவர்கள் வேறுபட்டவர்களாய் இருக்கவில்லை.
இன்று ஆவிக்குரிய இஸ்ரவேலரின் உண்மையுள்ள மீதியானோர் யெகோவாவின் தயவுக்குள் திரும்பவும் கொண்டுவரப்பட்டிருக்கின்றனர். அவர்கள் தங்களை இந்த உலகிலிருந்து பிரித்துக்கொண்டு, “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க” தங்களைச் சுத்திகரித்துக் கொண்டிருக்கின்றனர். (2 கொரிந்தியர் 7:1) யெகோவாவுக்கு முன்பாக சுத்தமும் நேர்மையுள்ளவர்களுமாய் இருந்து, அவருடைய நீதியை அவர்கள் கடைப்பிடிக்கின்றனர். இது அவர்களை உலகின் எல்லா தேசங்களுக்கும் மேலாக ஒரு அனுகூலமான ஸ்தானத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. அவர்கள் ராஜ்யத்தின் நற்செய்தியை வைராக்கியமாக பிரசங்கிப்பதன் காரணமாக, ஒரு பெரும் சர்வதேச ஜனங்கள் அடங்கிய கூட்டம் ஒன்று யெகோவாவிடமாக கவர்ந்திழுக்கப்பட்டு, அக்கூட்டம் அவருடைய ஜனத்தின் பாகமாக ஆகியுள்ளது.—வெளிப்படுத்துதல் 7:9, 10.
வித்தியாசத்தை உலகால் காணமுடிகிறது
உலக அதிகாரிகள் சில சமயங்களில் கடவுளுடைய ஊழியர்களின் நடத்தையைப் புகழ்ந்து பேசுகின்றனர். சிறிது காலத்துக்கு முன்பு, தென் ஆப்பிரிக்காவில் உள்ள ப்ரிட்டோரியா கண்காட்சி மைதானங்களுக்கு தலைமை பாதுகாப்பு அலுவலராக இருந்தவர், எல்லா இனங்களிலிருந்தும் வரும் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் வருடாந்தர மாநாடுகளுக்காக அந்த வசதிகளை உபயோகித்தபோது அவர்களுடைய நடத்தையைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் குறிப்பிட்ட மற்ற காரியங்களோடுகூட இதையும் சேர்த்து எழுதினார்: “எல்லாருமே மரியாதையோடு இருந்தனர், இருக்கின்றனர், ஜனங்கள் ஒருவரோடொருவர் அன்பாக பேசிக்கொண்டு, கடந்த சில நாட்களாக வெளிக்காட்டிய மனநிலை—இவை யாவும் உங்கள் சங்கத்தின் அங்கத்தினர்களுடைய சிறப்பையும் எல்லாரும் ஒரே சந்தோஷமான குடும்பத்தைப் போல் ஒன்றாக சேர்ந்து வாழ்கின்றனர் என்பதையும் வெளிக்காட்டுகிறது.”
யெகோவாவின் ஜனங்கள் அப்படிப்பட்ட பெரிய கூட்டங்களில் மட்டுமல்லாமல் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும்கூட அவருடைய தேசத்தின் நீதிக்கு பங்களிக்கலாம். உதாரணமாக, உவாட்ச் டவர் சொஸைட்டியின் தென் ஆப்பிரிக்க கிளை, ஜோஹன்ஸ்பர்க்கில் இருக்கும் ஒரு பெண்ணிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெற்றது. அது சொன்னதாவது: “சென்ற வாரம் நான் என் பையை காரின் மேல் வைத்து ஓட்டிச்சென்றேன். அது யான் ஸ்மட்ஸ் அவென்யுவில் கீழே விழுந்துவிட்டது, அப்போது உங்களுடைய சபை அங்கத்தினர் ஒருவர், மிஸ்டர் ஆர்—, அதை அப்படியே அதற்குள்ளிருந்த பொருள்களோடு எடுத்து வைத்திருந்தார். பின்னர் தொலைபேசியின் மூலம் என்னிடம் பேசி அதை என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டார். . . . நான் இந்த நேர்மைத்தன்மையை மிகவும் போற்றுகிறேன், இந்த குணத்தை தற்போதைய காலங்களில் பார்ப்பது மிகவும் அரிது. அப்படிப்பட்ட நியமங்களை வைத்திருப்பதற்காக உங்களுடைய சபையை நான் போற்றுகிறேன். உங்களுடைய அங்கத்தினர்கள் அதைக் கடைப்பிடிக்கின்றனர்.”
ஆம், யெகோவாவின் நீதியான நியமங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம், அவருடைய ஜனங்கள் உலகிலிருந்து வித்தியாசமாக இருக்கும்படி செய்யப்படுகின்றனர். இவர்கள் யெகோவாவின் நீதியை வெளிப்படுத்திக் காண்பிப்பதன் காரணமாக, நேர்மை இருதயமுள்ள ஜனங்கள் கிறிஸ்தவ சபையினிடமாக கவர்ந்திழுக்கப்படுகின்றனர். சுத்தமாகவும் மாசற்றதாகவும் இருக்கும் ஒன்றினிடமாக கவர்ந்திழுக்கப்படுவது இயல்பானதே. உதாரணமாக, ஒரு சமயம் ஸ்விட்ஸர்லாந்தில் உள்ள சூரிச்சில் ஒரு அந்நியர் யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டம் ஒன்றுக்கு வந்து சபையின் ஒரு அங்கத்தினராக ஆக வேண்டும் என்று கூறினார். அவருடைய சகோதரி ஒழுக்கக்கேட்டுக்காக சபைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக விளக்கினார், மேலும் “கெட்ட நடத்தையை சகித்துக்கொள்ளாத” ஒரு அமைப்போடு தான் சேர விரும்பியதாக கூறினார். யெகோவாவின் சாட்சிகள் “உலகிலேயே நன்னடைத்தையுள்ள தொகுதிகளில் ஒன்று” என அறியப்பட்டிருப்பதாக நியூ கேத்தலிக் என்ஸைக்ளோப்பீடியா கூட ஒப்புக்கொள்கிறது.
நீதி உயர்வைக் கொண்டுவந்தபோதிலும், பாவம் ஒருவருடைய நற்பெயரின் மீது அவமதிப்பை கொண்டுவரக்கூடும், விசேஷமாக வினைமையான பாவம் சமுதாயத்தில் வெளிப்படையாக ஆகும்போது அவ்வாறு நேரிடும். தனிப்பட்ட அங்கத்தினர்கள் வினைமையான பாவத்தை செய்யும்போது, சில சமயங்களில் கிறிஸ்தவ சபை அதன் மீது குவிக்கப்படும் வெட்கத்தைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. புரிந்துகொள்ளத்தக்க விதத்தில், தவறுசெய்தவர் இரக்கமானவிதத்தில், அதாவது, வேதாகம நியமங்களுக்கு இசைவாக சிட்சிக்கப்பட்டிருக்கிறார் என்பதை காண்பிப்பதன் மூலம் சபையின் உண்மையுள்ள அங்கத்தினர்கள் சபையின் நற்பெயரைப் பாதுகாக்கலாம். எவராவது ஒருவர் பாவத்தை பழக்கமாக செய்து மனந்திரும்பாமல் இருந்தால், அவர் சபையிலிருந்து நீக்கப்படுவார்—சபைநீக்கம் செய்யப்படுவார்.—1 கொரிந்தியர் 5:9-13.
சிலர் சபைநீக்கம் செய்யப்படுவதற்கான காரணம்
ஒவ்வொரு வருடமும் சில ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவ சபையிலிருந்து சபைநீக்கம் செய்யப்பட்டபோதிலும், இது உலகிலுள்ள சுமார் 50 இலட்சம் சாட்சிகளில் ஒரு சிறிய சதவீதமே. கிறிஸ்தவ சபையில் ஒருவருக்கு எதிராக ஏன் அப்படிப்பட்ட கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும்? நிர்ணயிக்கக்கூடிய காரணங்களில் ஒன்று, செய்த தவறின் தன்மையாகும். ஆனால் அந்த தவறைச் செய்தவர் தான் செய்த வினைமையான தவறின் பேரில் உண்மையிலேயே மனந்திரும்பியிருக்கிறாரா என்பதுதான் அதிமுக்கியமான காரணம். அவர் உண்மையிலேயே குற்றத்தை உணர்ந்து வருத்தப்பட்டு யெகோவாவிடம் இருதயப்பூர்வமான ஜெபத்தை ஏறெடுத்து, அவருக்கு விரோதமாக செய்த பாவத்துக்காக மன்னிப்பை கெஞ்சிக்கேட்டு, சபையிலுள்ள உத்தரவாதமுள்ள ஆண்களின் உதவியை நாடினால், அவர் கடவுளுடைய தயவை மறுபடியும் பெற்றுக்கொண்டு, சபையின் ஒரு பாகமாக தொடர்ந்திருக்க உதவிசெய்யப்படலாம்.—நீதிமொழிகள் 28:13; யாக்கோபு 5:14, 15.
தன் தகப்பனோடு நல்ல ஆரோக்கியமான உறவை வைத்திருக்கும் பிள்ளை, தகப்பனை விசனப்படுத்துகிற ஏதோவொன்றைச் செய்துவிட்டால், இருவருமே அந்த அருமையான உறவை திரும்பவும் நிலைநாட்டிக்கொள்ள விரைவாக செயல்பட வேண்டும். அதே போல், நம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கும்போது, நாம் அவரோடு ஒரு அருமையான உறவுக்குள் பிரவேசிக்கிறோம். எனவே, அவரை விசனப்படுத்தும் ஏதோவொன்றை நாம் செய்தோம் என்றால், நம்முடைய பரலோக தகப்பனோடு கொண்டுள்ள அந்த உறவை மறுபடியும் நிலைநாட்டிக்கொள்வதற்கு நாம் விரைவாக செயல்பட வேண்டும்.
மகிழ்ச்சிதரும் விதத்தில், சபைநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இருந்த சிலர் கெட்ட குமாரனைப் பற்றிய உவமையை மனதில் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். அங்கு யெகோவா ஒரு அன்பான தகப்பனுக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறார், மனந்திரும்பிய பாவி தன் வழியை விட்டு கடவுளுடைய மன்னிப்பை நாடும்போது அவரை ஏற்றுக்கொள்வதற்கு யெகோவா தயாராயிருக்கிறார். (லூக்கா 15:11-24) உண்மையாக இருதயப்பூர்வமாய் மனஸ்தாபப்பட்டு, கெட்டதைச் செய்வதிலிருந்து விலகிச்செல்வது, யெகோவாவின் தயவுக்கும் கிறிஸ்தவ சபைக்கும் திரும்புவதற்கு வழியாக இருந்திருக்கிறது. தவறுசெய்து மனந்திரும்பிய சிலர், தங்கள் குற்ற உணர்ச்சியின் பாரத்தின் காரணமாக நொறுக்கப்பட்டு, மனந்திரும்புவதற்கு உந்தப்பட்டு கிறிஸ்தவ சபையின் அன்பான சூழலுக்குள் திரும்புவதற்கு படிகள் எடுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் ஏசாயா 57:15-ல் உள்ள யெகோவாவின் வார்த்தைகளை போற்றுகின்றனர்.
யெகோவாவின் அன்பான கவனிப்புக்குள் திரும்பி வரும் நபர்களை தடுப்பதற்கு, செய்யப்பட்ட தவறுகளுக்கு மன்னிப்பு இல்லை என்று சாத்தான் பாசாங்கு செய்ய விரும்புவான். ஆனால் கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பலி மனந்திரும்பும் எவருடைய பாவத்தையும் மன்னிப்பதற்கு போதுமானதாயிருக்கிறது—ஆம், சுதந்தரிக்கப்பட்ட ‘சர்வலோகத்தின்’ பாவங்களுக்கும்கூட போதுமானதாயிருக்கிறது. (1 யோவான் 2:1, 2) கடவுளுடைய பரிசுத்த ஆவிக்கு விரோதமாக செய்யப்படும் பாவமே, மீட்கும் பலியால் மன்னிக்கப்பட முடியாத ஒரு பாவம். கடவுளுடைய ஆவியின் செயல்பாட்டுக்கு விரோதமாக வேண்டுமென்றே கலகம் செய்வதற்கு அது இணையாகும். யூதாஸ்காரியோத்து மற்றும் அநேக வேதபாரகர்கள், பரிசேயர்கள் போன்றவர்களின் படுமோசமான பாவங்கள் அப்படிப்பட்டவை.—மத்தேயு 12:24, 31, 32; 23:13, 33; யோவான் 17:12.
யெகோவாவின் நீதியை உறுதியாகக் கடைப்பிடித்தல்
1919-ல் ஆவிக்குரிய இஸ்ரவேலரின் மீதியானோர் யெகோவாவின் தயவுக்குள் திரும்பவும் நிலைநாட்டப்பட்ட சமயத்திலிருந்து, அவர்கள் தங்களைச் சுற்றியிருக்கும் உலகிலிருந்து அதிகமதிகமாக உயர்த்தப்பட்டிருக்கின்றனர். இது அவர்களிடமிருக்கும் நற்குணத்தின் காரணமாக அல்ல, ஆனால் யெகோவாவின் சட்டங்களுக்கும் தராதரங்களுக்கும் அவர்கள் மனமுவந்து கீழ்ப்படிவதன் காரணமாக அப்படியுள்ளது. அதன் காரணமாக, கிறிஸ்துவின் லட்சக்கணக்கான “வேறே ஆடுகள்” ஆவிக்குரிய இஸ்ரவேலோடு உண்மையான தோழர்களாக கூட்டுறவுகொள்வதற்கு கவர்ந்திழுக்கப்படுகின்றனர். (யோவான் 10:16) கடவுளுடைய நீதியான தராதரங்களிலிருந்து தூரமாக விலகியிருக்கும் ஒரு உலகில் இப்படிப்பட்ட ஜனங்கள் யெகோவாவுக்கு கனமும் மகிமையும் கொண்டு வருகின்றனர். ஆளுமை என்ற தென் ஆப்பிரிக்க பத்திரிகை ஒன்று ஒரு சமயம் சொன்னது போலவே அது இருக்கிறது: “யெகோவாவின் சாட்சிகள் நல்ல குணங்களால் நிரம்பி வழிவதைப் போலும், கெட்ட குணங்களிலிருந்து ஏறக்குறைய முற்றிலுமாக விடுபட்டிருப்பதைப் போலும் தோன்றுகிறது.”
இந்த தேவபக்தியற்ற உலகில் உயர்வான ஸ்தானத்தை காத்துக்கொள்வதற்கு, கிறிஸ்தவ சபையின் ஒவ்வொரு தனிப்பட்ட அங்கத்தினரும் ஒரு சுத்தமான, நேர்மையான வாழ்க்கையை யெகோவாவுக்கு முன்பாக வாழ வேண்டும். பைபிளில் யெகோவாவின் பரலோக அமைப்பு சுத்தமான காரியங்களால் படமாக காண்பிக்கப்பட்டுள்ளது. அது சூரியனை அணிந்து பாதங்களின் கீழே சந்திரனைக் கொண்டிருக்கும் ஒரு அழகான பெண்ணாக காணப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 12:1) புதிய எருசலேம் ஒரு பரிசுத்த நகரமாக, தோற்றத்தில் அழகானதாக விவரிக்கப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 21:2) கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் உண்மைத்தன்மையுள்ள அங்கத்தினர்களுக்கு “சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய வஸ்திரம்” கொடுக்கப்படுகிறது. (வெளிப்படுத்துதல் 19:8) திரள்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் ‘வெள்ளை அங்கிகளைத் தரித்திருப்பதாக’ காணப்படுகின்றனர். (வெளிப்படுத்துதல் 7:9) நீதியின் சார்பாக மனச்சாய்வுள்ள ஜனங்கள் ஒரு சுத்தமான அமைப்புக்குள் கவர்ந்திழுக்கப்படுகின்றனர். அதற்கு நேர் எதிர்மாறாக, சாத்தானின் அமைப்பு அசுத்தமானதாக உள்ளது. அவனுடைய மத அமைப்பு ஒரு வேசியாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது, பரிசுத்த நகரத்துக்கு வெளியே இருப்பவர்கள் அழுக்காகவும், அசுத்தமாகவும் இருப்பதாக விவரிக்கப்பட்டிருக்கின்றனர்.—வெளிப்படுத்துதல் 17:1; 22:15.
நீதிமான்களுக்கு நித்திய ஜீவன் வாக்களிக்கப்பட்டுள்ளது. யெகோவாவின் நீதியை கடைப்பிடிக்கும் கூட்டிச்சேர்க்கப்பட்டிருக்கும் ஜனங்கள், இந்த பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைக்கும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கின்றனர். “எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்,” என்று நீதிமொழிகள் 1:33-ல் கடவுள் வாக்களிக்கிறார்.
அந்த புதிய உலகின் மீது பெரிய சாலொமோனாகிய கிறிஸ்து இயேசு, யெகோவாவுக்குப் பயப்படும் பயத்தில் நீதியோடு ஆட்சிசெய்கையில் எவ்வளவு பூரிப்பாய் இருக்கும்! (2 பேதுரு 3:13) அது சூரியன் ஒளிவீசுகையில் உண்டாகும் காலை வெளிச்சத்தைப் போன்றும், மேகங்கள் இல்லாத காலைநேரத்தைப் போன்றும் இருக்கும். அவனவன் தன்தன் திராட்சச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் உட்கார்ந்திருப்பதைப் போல் பூமியின் எல்லா குடிமக்களும் பாதுகாப்போடு வாசம்பண்ணுவார்கள். நீதியான மனித சமுதாயம் பூமியை அழகுபடுத்தும், மேலும், பூமி நம்முடைய கடவுளாகிய யெகோவாவுக்கு நித்திய துதி உண்டாகும் விதத்தில் இப்பிரபஞ்சத்தில் அதன் சரியான இடத்தை வகிக்கும்.—மீகா 4:3, 4; ஏசாயா 65:17-19, 25-ஐயும் காண்க.