யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வையுங்கள்
“உமது நாமத்தை அறிந்தவர்கள் உம்மை நம்பியிருப்பார்கள்.”—சங்கீதம் 9:10.
1. நம்முடைய நவீனகாலத்திலும்கூட நாம் ஏன் யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் இன்னும் நம்பிக்கை வைக்கலாம்?
இந்தத் தற்கால உலகத்தில், கடவுளிலும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிலும் நம்பிக்கை வைக்கும்படியான அழைப்பு, செயல்படுத்த முடியாததாகவும் மெய்ம்மைக்குப் பொருந்தாததாகவும் தோன்றலாம். எனினும், கடவுளுடைய ஞானம் அத்தகையதாக நெடுங்காலம் நிரூபித்து வந்திருக்கிறது. மனிதனையும் மனுஷியையும் படைத்த சிருஷ்டிகரே திருமணத்தையும் குடும்பத்தையும் தொடங்கி வைத்தவர், வேறு எவருக்கும் மேலாக அவரே நம்முடைய தேவைகளை நன்றாக அறிந்திருக்கிறார். மனிதரின் அடிப்படையான தேவைகள் மாறியிராததைப் போல், அந்தத் தேவைகளை நிரப்புவதற்குரிய அடிப்படையான வழிகளும் மாறாமல் நிலைத்திருக்கின்றன. பைபிளின் ஞானமான அறிவுரை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக எழுதிவைக்கப்பட்டபோதிலும், வாழ்க்கையில் வெற்றிகாண்பதற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மிகச் சிறந்த வழிநடத்துதலை இன்னும் அளிக்கிறது. அதற்குச் செவிகொடுப்பது—நாம் வாழும் சொகுசியல்பான, விஞ்ஞான உலகத்திலும்கூட—மிகுந்த அளவான மகிழ்ச்சியில் பலன்தருகிறது!
2. (அ) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதானது யெகோவாவின் ஜனங்களுடைய வாழ்க்கையில் என்ன நல்ல பலன்களைத் தந்திருக்கிறது? (ஆ) தமக்கும் தம்முடைய வார்த்தைக்கும் கீழ்ப்படிவோருக்கு யெகோவா மேலும் என்ன வாக்களிக்கிறார்?
2 யெகோவாவில் நம்பிக்கை வைப்பதும் பைபிள் நியமங்களைப் பொருத்திப் பயன்படுத்துவதும் செயல்முறைக்கு உகந்த நன்மைகளை ஒவ்வொரு நாளும் கொண்டுவருகின்றன. இதற்குரிய நிரூபணம், பைபிளின் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு உறுதியான நம்பிக்கையும் தைரியமுமுள்ளோராக இருந்திருக்கிற, உலகெங்கும் இருந்துவரும் லட்சக்கணக்கானோரான யெகோவாவின் சாட்சிகளின் வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டப்படுகிறது. சிருஷ்டிகரிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வைத்தது அவர்களுக்கு மிக நன்மையாக நிரூபித்திருக்கிறது. (சங்கீதம் 9:9, 10) கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதானது, சுத்தம், நேர்மை, சுறுசுறுப்பான உழைப்பு, மற்றவர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் மதிப்புக் கொடுத்தல், உணவிலும் பானத்திலும் மிதமாயிருத்தல் ஆகியவற்றைக் குறித்ததில் அவர்களை மேம்பட்ட மக்களாக்கியிருக்கிறது. குடும்ப வட்டாரத்துக்குள்—உபசரிக்கும் தன்மையுள்ளோராயும், பொறுமையுள்ளோராயும், இரக்கமுள்ளோராயும், மன்னிப்போராயும்—இவற்றோடு இன்னும் மிகப் பலவற்றை உடையோராயும் இருக்கும்படி—தகுந்த அன்புக்கும் பயிற்றுவிப்புக்கும் இது வழிநடத்தியிருக்கிறது. கோபம், பகை, கொலை, பொறாமை, பயம், சோம்பல், தற்பெருமை, பொய்ச் சொல்லுதல், பழிதூற்றுதல், ஒழுங்கற்றத் தன்மை, ஒழுக்கக்கேடு ஆகியவற்றின் கெட்ட விளைவுகளைப் பேரளவில் தவிர்க்கக்கூடியோராக அவர்கள் இருந்திருக்கின்றனர். (சங்கீதம் 32:10) ஆனால் கடவுள், தம்முடைய கட்டளைகளைக் கைக்கொள்கிறவர்களுக்கு ஒரு நல்ல பலனை வாக்களிப்பதைப் பார்க்கிலும் அதிகத்தைச் செய்கிறார். கிறிஸ்தவ வழியைப் பின்பற்றுவோர் “இப்போது இந்தக் காலப்பகுதியில் நூறத்தனையாகவும், . . . தாய்களையும் பிள்ளைகளையும் வயல்களையும், துன்புறுத்தல்களோடுகூடவும், வரவிருக்கும் காரிய ஒழுங்குமுறையில் நித்திய ஜீவனையும்” பெறுவார்கள் என்று இயேசு சொன்னார்.—மாற்கு 10:29, 30, NW.
உலக ஞானத்தில் நம்பிக்கை வைப்பதைத் தவிருங்கள்
3. யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் தொடர்ந்து நம்பிக்கை வைத்து வருவதில், என்ன பிரச்சினைகளைக் கிறிஸ்தவர்கள் சில சமயங்களில் எதிர்ப்படுகின்றனர்?
3 அபூரண மனிதருக்கு இருக்கும் ஒரு பிரச்சினையானது, கடவுள் கட்டளையிடுபவற்றைக் குறைக்கும் அல்லது மறக்கும் போக்காகும். தங்களுக்கு மிக நன்றாய்த் தெரியும் அல்லது இந்த உலகத்தின் கற்றறிந்தோர் வகுப்பாரிடமிருந்து வரும் ஞானம் கடவுளுடைய ஞானத்தைவிட மேம்பட்டது, அதுவே காலத்தோடொட்டிய புதுப்பாணியானது என்று அவர்கள் எளிதில் சிந்திக்கத் தொடங்குகின்றனர். கடவுளுடைய ஊழியரும்கூட, இந்த உலகத்தின் மத்தியில் வாழ்பவராக, இந்த மனப்பான்மையை வளர்க்கக்கூடும். ஆகவே, தம்முடைய அறிவுரைக்குச் செவிகொடுக்கும்படி அன்புள்ள அழைப்பைக் கொடுப்பதில், நம்முடைய பரலோகத் தகப்பன் தகுந்த எச்சரிக்கைகளையும் சேர்க்கிறார்: “என் மகனே, என் போதகம் மறவேல், உன் இருதயம் என் கட்டளையைக் காப்பதாக. நெடுநாள் வாழ்வு, தீர்க்காயுள், சமாதானம், மென்மேலும் அவை உனக்குத் தரும். உன் உணர்வில் சாயாதே உன் முழு நெஞ்சோடும் யெகோவாவை நம்பு. உன் எல்லா வழியிலும் அவரை நினை. அப்போதவர் உன் பாதையை நேராக்குவார். உன்னையே புத்திமானென்று எண்ணாதே, யெகோவாவுக்குப் பயந்து தீமைக்கு விலகு.”—நீதிமொழிகள் 3:1, 2, 5-7, தி.மொ.
4. “இந்த உலகத்தின் ஞானம்” எவ்வளவாய்ப் பரவும் பாங்குள்ளதாக இருக்கிறது, அது ஏன் ‘கடவுள் முன் மடமையாக’ இருக்கிறது?
4 இந்த உலகத்தின் ஞானம் பல மூலாதாரங்களிலிருந்து மிகுதியாய்க் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. கல்வி நிறுவனங்கள் பல உள்ளன, “அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை.” (பிரசங்கி 12:12) இப்போது, கம்ப்யூட்டர் உலகத்தின் இன்ஃபர்மேஷன் சூப்பர்ஹைவே என்றழைக்கப்படுவது ஏறக்குறைய எந்த விஷயத்தின்பேரிலும் மட்டற்ற தகவல்களை அளிக்குமென வாக்குக் கொடுக்கிறது. ஆனால் இந்த எல்லா அறிவும் கிடைக்கக்கூடியதாக இருப்பது இவ்வுலகத்தை மேலுமதிக ஞானமுள்ளதாக்குகிறதோ அல்லது அதன் பிரச்சினைகளைத் தீர்ப்பதோ இல்லை. மாறாக, இந்த உலக நிலைமை நாளுக்குநாள் மிக மோசமாகிக்கொண்டே போகிறது. புரிந்துகொள்ளக்கூடியதாக, “இவ்வுலகத்தின் ஞானம் கடவுள் முன் மடமைதானே” என்று பைபிள் நமக்குச் சொல்கிறது.—1 கொரிந்தியர் 3:19, 20, தமிழ் கத்தோலிக்க பைபிள்.
5. ‘இந்த உலகத்தின் ஞானத்தைக்’ குறித்து என்ன எச்சரிக்கைகளை பைபிள் கொடுக்கிறது?
5 கடைசி நாட்களின் இந்த முடிவு பாகத்தின்போது, தலைமை வஞ்சனைக்காரனாகிய பிசாசான சாத்தான், பைபிளின் சத்தியத் தன்மையில் நம்பிக்கை வைப்பதை மறைசூழ்ச்சியால் அழிப்பதற்காக முயற்சி செய்பவனாய்ப் பேரளவான பொய்களைத் தொடங்கி வைப்பான் என்பதை எதிர்பார்க்க வேண்டியதே. பைபிளின் அதிகாரப்பூர்வ மற்றும் நம்பத்தக்கத் தன்மையை எதிர்த்துரைக்கும் ஊகச் சிந்தனைக்குரிய பெருக்கமான புத்தகங்களை நுட்ப திறனாய்வாளர் உண்டாக்கியிருக்கின்றனர். பவுல் தன் உடனொத்த கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “ஓ தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும், ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு. சிலர் அதைப் பாராட்டி, விசுவாசத்தைவிட்டு வழுவிப்போனார்கள்.” (1 தீமோத்தேயு 6:20, 21) பைபிள் மேலுமாக எச்சரிப்பதாவது: “தத்துவசாஸ்திரம் மாயமான வஞ்சகம் இவற்றினால் ஒருவனும் உங்களைக் கொள்ளைகொண்டுபோகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; அவை மனுஷரின் பாரம்பரை முறைமைக்கும் உலகத்தின் பாலபோதனைகளுக்கும் இசைந்தவைகளே யன்றிக் கிறிஸ்துவுக்கு இசைந்தவைகளல்ல.”—கொலோசெயர் 2:8, தி.மொ.
சந்தேகிக்கும் மனப்போக்கை எதிர்த்துப் போராடுங்கள்
6. சந்தேகங்கள் இருதயத்தில் வேர்கொள்வதைத் தவிர்ப்பதற்கு ஏன் விழிப்பு அவசியம்?
6 பிசாசின் மற்றொரு மறைமுகத் தந்திர சூழ்ச்சியானது, மனதில் சந்தேகங்களை விதைப்பதாகும். விசுவாசத்தில் எதோ ஒரு பலவீனத்தைக் கண்டு அதைப் பயன்படுத்திக்கொள்ள அவன் எப்போதும் விழிப்புடன் காத்திருக்கிறான். சந்தேகங்களை அனுபவிக்கிற எவரும், அத்தகைய சந்தேகங்களுக்குப் பின்னால் இருப்பவன், ஏவாளுக்குப் பின்வருமாறு சொன்னவனே என்று நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ”? சோதனைக்காரன் அவளுடைய மனதில் சந்தேகத்தை ஒருமுறை நாட்டின பின்பு, அடுத்தப்படியானது அவளிடம் பொய்ச் சொன்னதாக இருந்தது, அதை அவள் நம்பினாள். (ஆதியாகமம் 3:1, 4, 5) ஏவாளின் விசுவாசத்துக்கு நடந்ததுபோல் நம்முடைய விசுவாசம் சந்தேகத்தால் அழிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு நாம் விழிப்புள்ளோராக இருக்க வேண்டும். யெகோவாவையோ, அவருடைய வார்த்தையையோ அல்லது அவருடைய அமைப்பையோ பற்றி ஏதோ மிகச் சிறிதளவு சந்தேகம் உங்கள் இருதயத்தில் தயங்கி நிற்கத் தொடங்கினால், அது உங்கள் விசுவாசத்தை அழிக்கக்கூடிய புண்ணாவதற்கு முன்பாக அதை அகற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுங்கள்.—1 கொரிந்தியர் 10:12-ஐ ஒப்பிடுக.
7. சந்தேகங்களை அகற்றுவதற்கு என்ன செய்யலாம்?
7 என்ன செய்யலாம்? மறுபடியுமாக பதிலானது, யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வையுங்கள் என்பதே. “உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாயிருந்தால் அவன் கடவுளிடங் கேட்கக்கடவன், அவனுக்குக் கொடுக்கப்படும்; அவர் உதாரத்துவமாய்க் கொடுக்கிறவர், கடிந்துகொள்ளாதவர். ஆயினும், அவன் ஒன்றுக்குஞ் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கவேண்டும். சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலலைக்கு ஒப்பானவன்.” (யாக்கோபு 1:5, 6, தி.மொ.; 2 பேதுரு 3:17, 18) ஆகையால் யெகோவாவிடம் ஊக்கமாய் ஜெபிப்பது முதல் படியாகும். (சங்கீதம் 62:8) பின்பு, சபையிலுள்ள அன்பான கண்காணிகளிடமிருந்து உதவி கேட்பதற்குத் தயங்காதீர்கள். (அப்போஸ்தலர் 20:28; யாக்கோபு 5:14, 15; யூதா 22) உங்கள் சந்தேகங்களின் மூலகாரணத்தைக் கண்டுபிடிக்க அவர்கள் உங்களுக்கு உதவிசெய்வார்கள், அவை ஒருவேளை தற்பெருமை அல்லது ஏதோ தவறான சிந்தனையின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம்.
8. விசுவாசதுரோக சிந்தனை எவ்வாறு அடிக்கடி தொடங்குகிறது, அதற்குப் பரிகாரம் என்ன?
8 விசுவாசதுரோக எண்ணங்களை அல்லது உலகப்பிரகாரமான தத்துவஞானத்தை வாசிப்பது அல்லது அவற்றிற்குச் செவிகொடுத்துக் கேட்பது நச்சுத்தன்மையான சந்தேகங்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றனவா? ஞானமாய், பைபிள் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னைத் தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்.” (2 தீமோத்தேயு 2:15-17) விசுவாசதுரோகத்துக்கு இரையாகியிருப்போர் பலர், யெகோவாவின் அமைப்பில் தாங்கள் எவ்வாறு நடத்தப்பட்டு வந்தார்கள் என்பதாகத் தாங்கள் உணர்ந்ததை முதலாவதாகக் குறைகூறுவதன் மூலம் தவறான போக்கில் தொடங்கினர் என்பது கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. (யூதா 16) நம்பிக்கைகளில் குற்றம் கண்டுபிடிப்பது பின்னால் வந்தது. தசையழுகலை வெட்டி விலக்க அறுவை மருத்துவர் விரைவில் செயல்படுவதுபோல், கிறிஸ்தவ சபையில் காரியங்கள் செய்யப்படுகிற விதத்தைக் குறித்ததில் திருப்தியற்று, குறைகூறும் எந்தப் போக்கையும் மனதிலிருந்து பெயர்த்தொழிப்பதற்கு விரைவில் செயல்படுங்கள். (கொலோசெயர் 3:13, 14) அத்தகைய சந்தேகங்களையூட்டும் எதையும் தறித்துப்போடுங்கள்.—மாற்கு 9:43.
9. ஒரு நல்ல தேவராஜ்ய வழக்கமுறை எவ்வாறு விசுவாசத்தில் உறுதியாயிருக்கும்படி நமக்கு உதவிசெய்யும்?
9 யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விடாது நெருங்கப் பற்றியிருங்கள். “ஆண்டவரே, யாரிடத்தில் போவோம், நித்தியஜீவ வசனங்கள் உம்மிடத்தில் உண்டே” என்று திடத்தீர்மானத்துடன் கூறின பேதுருவின் மாதிரியை உண்மையான பற்றுறுதியுடன் பின்பற்றுங்கள். (யோவான் 6:52, 60, 66-68) “பொல்லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங்களையெல்லாம் அவித்துப்போடத்தக்க” ஒரு பெரிய கேடகத்தைப்போல், உங்கள் விசுவாசத்தை உறுதியாக வைத்துக்கொள்ளும்படி, யெகோவாவின் வார்த்தையைப் படிப்பதற்கு ஒரு நல்ல திட்டத்தை வைத்திருங்கள். (எபேசியர் 6:16) ராஜ்ய செய்தியை மற்றவர்களோடு அன்புடன் பகிர்ந்துகொண்டு, கிறிஸ்தவ ஊழியத்தில் சுறுசுறுப்பாய்ச் செயல்படுங்கள். யெகோவா உங்களை எவ்வாறு ஆசீர்வதித்திருக்கிறார் என்பதன்பேரில் நன்றியுணர்வுடன் ஒவ்வொரு நாளும் ஆழ்ந்து சிந்தனை செய்யுங்கள். சத்தியத்தைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருப்பதற்காக நன்றியுடன் இருங்கள். இவற்றையெல்லாம் நல்ல கிறிஸ்தவ வழக்கமுறையாகச் செய்துவருவது, மகிழ்ச்சியாயிருக்கவும், சகித்துநிலைத்திருக்கவும், சந்தேகங்களுக்கு விலகியிருக்கவும் உங்களுக்கு உதவிசெய்யும்.—சங்கீதம் 40:4; பிலிப்பியர் 3:15, 16, NW; எபிரெயர் 6:10-12.
மணவாழ்க்கையில் யெகோவாவின் வழிநடத்துதலைப் பின்பற்றுதல்
10. கிறிஸ்தவ மணவாழ்க்கையில் வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் நோக்குவது ஏன் தனிப்பட்ட முறையில் முக்கியமானது?
10 மணம் செய்த தம்பதிகளாக ஆணும் பெண்ணும் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஏற்பாடு செய்ததில், போதியளவு பூமியை நிரப்புவதற்கு மட்டுமல்லாமல் அவர்களுடைய மகிழ்ச்சியை மிகுதிப்படுத்தவும்கூட யெகோவா நோக்கங்கொண்டார். எனினும், பாவமும் அபூரணமும் மண உறவுக்குள் வினைமையானப் பிரச்சினைகளைக் கொண்டுவந்திருக்கின்றன. கிறிஸ்தவர்கள் இவற்றிலிருந்து விலக்கப்பட்டவர்களாக இல்லை, ஏனெனில், அவர்களும் அபூரணராக இருக்கிறார்கள் மற்றும் இந்நாளைய வாழ்க்கையின் நெருக்கடிகளை அனுபவிக்கிறார்கள். இருப்பினும், யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் அவர்கள் நம்பிக்கை வைக்குமளவாகக் கிறிஸ்தவர்கள், மணவாழ்க்கையிலும் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும் நல்ல வெற்றி காணலாம். உலகப் பழக்கவழக்கங்களுக்கும் நடத்தைக்கும் கிறிஸ்தவ மணவாழ்க்கையில் இடமில்லை. கடவுளுடைய வார்த்தை நமக்கு இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.”—எபிரெயர் 13:4.
11. மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதில், மணத்துணைவர்கள் இருவரும் எதை அறிந்துகொள்ள வேண்டும்?
11 பைபிளின் அறிவுரையின்படி நடத்தும் மணவாழ்க்கை, அன்பு நிலவுவதாயும், பொறுப்பு நிறைவேற்றப்படுவதாயும், பாதுகாப்புடையதாயும் உள்ளது. கணவனும் மனைவியுமான இருவருமே தலைமை வகிப்பு நியமத்தை உணர்ந்து மதிக்கின்றனர். இக்கட்டுகள் எழும்புகையில், அவற்றின் காரணம், பைபிளின் அறிவுரையைப் பயன்படுத்துவதில் ஏதோ கவனக்குறைவாக இருந்ததாகவே அடிக்கடி இருக்கின்றன. நீடிக்கும் ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதில், மணத்துணைவர்கள் இருவரும் அந்தப் பிரச்சினை உண்மையில் என்னவென்பதன்பேரில் நேர்மையுடன் ஒருமுகமாய்க் கவனத்தைச் செலுத்தி, அறிகுறிகளைப் பார்க்கிலும் காரணங்களைக் கையாளுவது முக்கியமாயிருக்கிறது. சமீபத்தில் கலந்துபேசினவை ஒப்புரவாகுதலுக்கு வழிநடத்துவதற்கு அதிகம் எதுவும் செய்யவில்லையெனில், அன்புள்ள கண்காணி ஒருவரிடமிருந்து நடுநிலையான உதவிக்காக அந்தத் தம்பதிகள் கேட்கலாம்.
12. (அ) மணவாழ்க்கையில் ஏற்படும் என்ன பொதுவான பிரச்சினைகளின்பேரில் பைபிள் ஆலோசனை கொடுக்கிறது? (ஆ) காரியங்களை யெகோவாவின் வழியில் செய்வது ஏன் மணத்துணைவர் இருவர் பங்கிலும் தேவைப்படுகிறது?
12 அந்தப் பிரச்சினை, பேச்சுத் தொடர்போ, ஒருவர் மற்றவருடைய உணர்ச்சிகளை மதிப்பதோ, தலைமை வகிப்பை மதிப்பதோ, அல்லது தீர்மானங்கள் செய்யும் முறையையோ உட்பட்டதாக இருக்கிறதா? பிள்ளைகளை வளர்ப்பது சம்பந்தப்பட்டதாக, அல்லது பாலுறவு தேவைகளில் சமநிலை தேவைப்படுவதாக அது இருக்கிறதா? அல்லது அது குடும்ப வரவுசெலவுத் திட்டம், பொழுதுபோக்கு, கூட்டுறவு, மனைவி சம்பாத்தியம் செய்ய வேண்டுமா, அல்லது நீங்கள் எங்கே வாழ்வது ஆகியவற்றில் ஏதாவது சம்பந்தப்பட்டதா? பிரச்சினை என்னவானாலும், பைபிள், நேர்முகமாகப் பிரமாணங்களைக் கொண்டோ, மறைமுகமாக நியமங்களைக் கொண்டோ ஆலோசனை கொடுக்கிறது. (மத்தேயு 19:4, 5, 9; 1 கொரிந்தியர் 7:1-40; எபேசியர் 5:21-23, 28-33; 6:1-4; கொலோசெயர் 3:18-21; தீத்து 2:4, 5; 1 பேதுரு 3:1-7) மணத்துணைவர் இருவரும் தன்னலத் தேவைகளை வற்புறுத்துவதைத் தவிர்த்து, அன்பே தங்கள் மண வாழ்க்கையில் அதன் முழு உணர்ச்சி பாங்கையும் வெளிப்படுத்துவதற்கு அனுமதிக்கும்போது, அதிகப்படியான மகிழ்ச்சியில் பலன் தருகிறது. தேவைப்பட்ட மாற்றங்களைச் செய்வதற்கும், காரியங்களை யெகோவாவின் வழியில் செய்வதற்கும், மணத்துணைவர் இருவரின் பங்கிலும் மனமார்ந்த ஆவல் இருக்க வேண்டும். “ஒரு காரியத்தில் உட்பார்வையைக் காட்டுகிறவன் நல்லதைக் கண்டடைவான், யெகோவாவில் நம்பிக்கை வைக்கிறவன் மகிழ்ச்சியுள்ளவன்.”—நீதிமொழிகள் 16:20, NW.
இளைஞரே—கடவுளுடைய வார்த்தைக்குச் செவிகொடுங்கள்
13. யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் உறுதியான விசுவாசத்துடன் வளருவது கிறிஸ்தவ இளைஞருக்கு ஏன் எளிதாக இல்லை?
13 கிறிஸ்தவ இளைஞரைச் சுற்றிலும் பொல்லாத உலகம் இருக்கையில், விசுவாசத்தில் உறுதியுள்ளவர்களாக வளருவது அவர்களுக்கு எளிதாக இல்லை. ஒரு காரணமானது, “உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள்,” பிசாசாகிய சாத்தானுக்குள் “கிடக்கிறது.” (1 யோவான் 5:19) கெட்டதை நல்லதாகக் காணச் செய்யக்கூடிய இந்தக் கொடிய பகைவனின் தாக்குதலின்கீழ் இளைஞர் இருக்கின்றனர். நான்-முதல் மனப்பான்மைகள், தன்னல பேராசைகள், ஒழுக்கக்கேடும் குரூரமுமானதற்கான ஆவல், இயல்புகடந்த முறையில் இன்பங்களை நாடித் தொடருதல்—இவை யாவும், ‘கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற . . . ஆவி’ என்று பைபிளில் விவரிக்கப்பட்டிருக்கிற ஒரே பொது, முனைப்பான சிந்தனை மாதிரிக்குள் ஒன்றாகச் சேருகின்றன. (எபேசியர் 2:1-3) பள்ளிப் பாடபுத்தகங்களிலும், கிடைக்கக்கூடிய பெரும்பான்மையான இசைபாடல்களிலும், போட்டி விளையாட்டுகளிலும், மற்ற பொழுதுபோக்கு வகைகளிலும் சாத்தான் இந்த ‘ஆவியைத்’ தந்திரமாய் ஊக்குவித்திருக்கிறான். பெற்றோர், தங்கள் பிள்ளைகள் யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வைத்திருப்போராய் வளரும்படி அவர்களுக்கு உதவிசெய்வதன் மூலம் அத்தகைய செல்வாக்குகளைத் தடுத்து விலக்க எதிர்ச் செல்வாக்கு செலுத்துவதற்கு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
14. எவ்வாறு இளைஞர் ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோடலாம்’?
14 பவுல் தன்னுடைய இளம் துணைவனான தீமோத்தேயுவுக்குத் தகப்பன் தருவதைப்போன்ற இந்த அறிவுரையைக் கொடுத்தார்: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.” (2 தீமோத்தேயு 2:22) ‘பாலியத்துக்குரிய எல்லா இச்சைகளும்’ அவற்றில்தாமே கெட்டவையாக இல்லை. இருந்தபோதிலும், பக்திவிருத்திக்கான காரியங்களுக்கு, அப்படியே ஒதுக்கிவைத்தாலும், சிறிதுநேரத்தையே ஒதுக்கிவைக்கும்படி செய்யுமளவுக்கு அவை மனதை ஆட்கொள்ள விட்டுவிடாதபடி இளைஞர் அவற்றிற்கு ‘விலகியோட’ வேண்டும். உடலை கட்டுறுதியாக்குதல், போட்டி விளையாட்டுகள், இசை, பொழுதுபோக்கு, விருப்பத்தொழில்கள், இன்பப் பயணம் ஆகியவை அவற்றில்தாமே தவறாக இராவிடினும், வாழ்க்கையில் அவையே முக்கிய காரியங்களாக ஆகிவிட்டால் கண்ணியாக இருக்கக்கூடும். நோக்கமற்ற உரையாடலிலிருந்தும், சோம்பித் திரிவதிலிருந்தும், பாலினத்தில் இயல்புகடந்த கவர்ச்சியடைவதிலிருந்தும், சலிப்புற்றுச் சோம்பி உட்கார்ந்து நேரம் கழிப்பதிலிருந்தும், உங்கள் பெற்றோர் உங்களைப் புரிந்துகொள்வதில்லையெனக் குறைகூறிக்கொண்டு இருப்பதிலிருந்தும் முற்றிலும் விலகியோடுங்கள்.
15. இளைஞர் இரட்டை வாழ்க்கையை நடத்துவதற்கு ஆதரவாயிருக்கிற என்ன காரியங்கள் வீட்டின் தனிமை ஒதுக்கிடத்தில் நடக்கலாம்?
15 வீட்டின் தனிமை ஒதுக்கிடத்திலும்கூட, இளைஞருக்கு ஆபத்து காத்திருக்கக்கூடும். ஒழுக்கக்கேடான அல்லது வன்முறையான டெலிவிஷன் காட்சிகளையும் வீடியோக்களையும் பார்த்துக்கொண்டிருந்தால், கெட்ட காரியங்களைச் செய்யும்படியான ஆவல் உள்ளத்தில் புகுத்தப்படக்கூடும். (யாக்கோபு 1:14, 15) “யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையைப் பகையுங்கள்,” என்று பைபிள் அறிவுரை கூறுகிறது. (சங்கீதம் 97:10, தி.மொ.; 115:11) இருவகையான வாழ்க்கையை வாழ எவராவது முயற்சி செய்தால் யெகோவா அதை அறிவார். (நீதிமொழிகள் 15:3) கிறிஸ்தவ இளைஞரே, உங்கள் அறையைச் சுற்றி பார்வை செலுத்துங்கள். போட்டி விளையாட்டு அல்லது இசை உலகத்தில் தலைசிறந்தவர்களாகப் பொதுமக்களுடைய உள்ளம்கவர்ந்த ஒழுக்கக்கேடானவர்களின் படங்களைச் சுவரில் காட்சிப்படுத்துகிறீர்களா, அல்லது நல்ல நினைப்பூட்டுதல்களாக இருக்கிற நன்மைக்குகந்த காரியங்களைக் காட்சிப்படுத்துகிறீர்களா? (சங்கீதம் 101:3) உங்கள் பெட்டகத்தில் அடக்கமான உடைகள் இருக்கின்றனவா, அல்லது உங்கள் உடைகள் சில, இந்த உலகத்தின் மிதமீறிய நாகரிகப்பாங்குகளைப் பிரதிபலிக்கின்றனவா? தீயதை மாதிரியாகத் தெரிந்தெடுக்கும்படியான சோதனைக்கு நீங்கள் இடமளித்தால், பிசாசானவன் தந்திரமான வழிகளில் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தக்கூடும். பைபிள் ஞானமாய் இவ்வாறு அறிவுரை கூறுகிறது: “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.”—1 பேதுரு 5:8.
16. இளைஞன் ஒருவனைக் குறித்து, மதிப்புக்குரியவர்கள் எல்லோரும் பெருமையுள்ளோராக இருப்பதற்கு பைபிள் அறிவுரை எவ்வாறு அவனுக்கு உதவி செய்யலாம்?
16 உங்கள் கூட்டுறவைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கும்படி பைபிள் உங்களுக்குச் சொல்லுகிறது. (1 கொரிந்தியர் 15:33, தி.மொ.) யெகோவாவுக்குப் பயப்படுவோரே உங்கள் கூட்டாளிகளாக இருக்க வேண்டும். இணையானோரின் வற்புறுத்தலுக்கு இடம்கொடுத்து விடாதீர்கள். (சங்கீதம் 56:11; நீதிமொழிகள் 29:25) கடவுள்-பயமுள்ள உங்கள் பெற்றோருக்குக் கீழ்ப்படியுங்கள். (நீதிமொழிகள் 6:20-22; எபேசியர் 6:1-3) வழிநடத்துதலுக்காகவும் ஊக்கமூட்டுதலுக்காகவும் மூப்பரிடம் நோக்குங்கள். (ஏசாயா 32:1, 2) உங்கள் மனதையும் கண்களையும் ஆவிக்குரிய மதிப்புகள் மற்றும் இலக்குகளின்பேரில் ஊன்றவைத்திருங்கள். ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கும் சபை நடவடிக்கைகளில் பங்குகொள்வதற்கும் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக ஆவலுடன் காத்திருங்கள். உங்கள் கைகளால் காரியங்களைச் செய்வதற்குக் கற்றுக்கொள்ளுங்கள். விசுவாசத்தில் உறுதியும் ஆரோக்கியமுமுள்ளவர்களாக வளருங்கள், அப்போது நீங்கள் உண்மையில் குறிப்பிடத்தக்கவர்களாக—யெகோவாவின் புதிய உலகத்தில் ஜீவனடைய தகுந்தவர்களாக நிரூபிப்பீர்கள்! நம்முடைய பரலோகத் தகப்பன் உங்களைக் குறித்து பெருமையுள்ளவராக இருப்பார். பூமிக்குரிய உங்கள் பெற்றோர் உங்களில் பெருமகிழ்ச்சியடைவர், மற்றும் உங்கள் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் உங்களால் ஊக்கப்படுத்தப்படுவார்கள். அதுவே முக்கியமானது!—நீதிமொழிகள் 4:1, 2, 7, 8.
17. யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வைப்போருக்கு என்ன நன்மைகள் உண்டாகின்றன?
17 சங்கீதக்காரர் செய்யுள் நடையில் இவ்வாறு எழுதும்படி தேவாவியால் ஏவப்பட்டார்: “யெகோவா . . . நேர்மையாய் நடக்கிறவர்களுக்கு நன்மையான எதையும் மறுக்கமாட்டார். சேனைகளின் யெகோவா, உம்மில் நம்பிக்கைவைத்திருக்கிற மனுஷன் பாக்கியவான்.” (சங்கீதம் 84;11, 12, தி.மொ.) ஆம், யெகோவாவிலும் அவருடைய வார்த்தையாகிய பைபிளிலும் நம்பிக்கை வைப்போர் யாவருக்கும், ஏமாற்றமும் தோல்வியும் அல்ல, மகிழ்ச்சியும் வெற்றியுமே உண்டாகும்.—2 தீமோத்தேயு 3:14, 16, 17.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ கிறிஸ்தவர்கள் ஏன் ‘இவ்வுலகத்தின் ஞானத்தில்’ தங்களுடைய நம்பிக்கையை வைக்கக்கூடாது?
◻ ஒருவர் சந்தேகப்படுகிறாரென்றால் என்ன செய்ய வேண்டும்?
◻ மணவாழ்க்கையில் காரியங்களை யெகோவாவின் வழியில் செய்வதானது எவ்வாறு வெற்றியையும் மகிழ்ச்சியையும் கொண்டுவருகிறது?
◻ ‘பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோட’ பைபிள் எவ்வாறு இளைஞருக்கு உதவிசெய்கிறது?
[பக்கம் 23-ன் படங்கள்]
கிறிஸ்தவர்கள், ‘இவ்வுலகத்தின் ஞானத்தை’ மடமையாகத் தள்ளிவிட்டு, யெகோவாவிடமும் அவருடைய வார்த்தையிடமும் திரும்புகின்றனர்
[பக்கம் 25-ன் படங்கள்]
யெகோவாவிலும் அவருடைய வார்த்தையிலும் நம்பிக்கை வைக்கிற குடும்பங்கள் நல்ல வெற்றியும் மகிழ்ச்சியும் உடையோராக இருக்கின்றனர்