சர்ப்பத்தின் வித்து —எப்படி அம்பலமானது?
“உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்.”—ஆதியாகமம் 3:15.
1. (அ) யெகோவா ஏன் நித்தியானந்த தேவனாக இருக்கிறார்? (ஆ) அவருடைய சந்தோஷத்தை நாம் பகிர்ந்துகொள்ள முடிவதற்காக அவர் என்ன செய்திருக்கிறார்?
யெகோவா நித்தியானந்த தேவன்; நல்ல காரணத்துடன்தான் அவர் அவ்வாறு இருக்கிறார். நல்ல காரியங்களைக் கொடுப்பதில் அவரே மிகப் பெரிய, பிரதான கொடையாளராக இருக்கிறார்; அவருடைய நோக்கங்கள் நிறைவேறுவதைத் தடைசெய்யக்கூடியது எதுவும் இல்லை. (ஏசாயா 55:10, 11; 1 தீமோத்தேயு 1:11; யாக்கோபு 1:17) அவருடைய ஊழியர்களும் அவருடைய சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டுமென்று அவர் விரும்புகிறார்; அவர்கள் அவ்வாறு செய்வதற்கு நியாயமான காரணங்களையும் அளிக்கிறார். இதன் காரணமாக, மனித வரலாற்றிலேயே மிகவும் இருண்ட சமயங்களில் ஒன்றின்போது—ஏதேனில் கலகம் ஏற்பட்டபோது—எதிர்காலத்தை நம்பிக்கையுடன் நோக்குவதற்கான அடிப்படையை அவர் நமக்கு அளித்தார்.—ரோமர் 8:19-21.
2. ஏதேனில் கலகக்காரர்மீது தீர்ப்பு வழங்குகையில், ஆதாம் ஏவாளின் சந்ததியாருக்கு யெகோவா எப்படி நம்பிக்கைக்கான அடிப்படையை அளித்தார்?
2 யெகோவாவின் ஆவிக்குரிய குமாரரில் ஒருவன், கடவுளை பழிதூற்றுவதன் மூலமும், எதிர்ப்பதன் மூலமும், அப்போதுதான் தன்னைத்தானே பிசாசாகிய சாத்தானாக ஆக்கியிருந்தான். முதல் மனிதர்களாகிய ஏவாளும், பின்னர் ஆதாமும், அவனுடைய செல்வாக்கின்கீழ் வந்திருந்து, தெளிவாகச் சொல்லப்பட்ட யெகோவாவின் சட்டத்தை மீறியிருந்தார்கள். அவர்கள் சரியாகவே மரண தண்டனை விதிக்கப்பட்டார்கள். (ஆதியாகமம் 3:1-24) இருந்தாலும், இந்தக் கலகக்காரரின்மீது தீர்ப்பு வழங்குகையில், ஆதாம் ஏவாளின் சந்ததியார் நம்பிக்கை கொண்டிருப்பதற்கு யெகோவா ஓர் அடிப்படையை அளித்தார். எவ்விதத்தில்? ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டபடி, யெகோவா சொன்னார்: “உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய்.” அந்தத் தீர்க்கதரிசனம், முழு பைபிளையும், அதோடுகூட உலகத்தையும் யெகோவாவின் ஊழியர்களையும் உள்ளிட்ட கடந்தகால மற்றும் தற்போதைய சம்பவங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவுகிற ஒரு குறிப்பாக இருக்கிறது.
அந்தத் தீர்க்கதரிசனம் எதை அர்த்தப்படுத்துகிறது
3. ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்டிருக்கிற (அ) சர்ப்பம், (ஆ) “ஸ்திரீ,” (இ) சர்ப்பத்தின் “வித்து,” (ஈ) ஸ்திரீயின் “வித்து” ஆகியோரை அடையாளம் காண்க.
3 அதன் முக்கியத்துவத்தை மதித்துணருவதற்கு, அந்தத் தீர்க்கதரிசனத்தின் பல்வேறு அம்சங்களைத் தாமே கவனியுங்கள். ஆதியாகமம் 3:15 யாரிடம் சொல்லப்பட்டதென்றால் சர்ப்பத்திடமே—தாழ்நிலையிலுள்ள பாம்பிடம் அல்ல ஆனால் அதைப் பயன்படுத்தியவனிடமே—சொல்லப்பட்டது. (வெளிப்படுத்துதல் 12:9) அந்த “ஸ்திரீ” ஏவாள் அல்ல, ஆனால் யெகோவாவின் பரலோக அமைப்பு, பூமியிலுள்ள அவருடைய ஆவியால்-அபிஷேகம் செய்யப்பட்ட ஊழியர்களுக்குத் தாய். (கலாத்தியர் 4:26) சர்ப்பத்தின் “வித்து,” சாத்தானின் வித்து, அவனுடைய சந்ததியார்—சாத்தானின் பண்புகளை வெளிக்காட்டுவதும் ஸ்திரீயின் ‘வித்தினிடமாக’ பகைமையைக் காட்டுவதுமான பேய்களும் மனிதர்களும் மனித அமைப்புகளும். (யோவான் 15:19; 17:15, NW) ஸ்திரீயின் “வித்து” முக்கியமாக இயேசு கிறிஸ்து ஆவார்; அவர் பொ.ச. 29-ல் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டார். ‘ஜலத்தினாலும் ஆவியினாலும் மறுபடியும் பிறந்தவர்களும்’ கிறிஸ்துவுடன்கூட பரலோக ராஜ்யத்தின் சுதந்தரவாளிகளாயும் இருக்கும் 1,44,000 பேர், வாக்குப்பண்ணப்பட்ட அந்த வித்தின் துணை பாகமாக இருக்கின்றனர். இவர்கள் பொ.ச. 33, பெந்தெகொஸ்தேயிலிருந்து தொடங்கி அந்த ஸ்திரீயின் வித்தினுடைய பாகமாகச் சேர்க்கப்பட்டு வந்தனர்.—யோவான் 3:3, 5; கலாத்தியர் 3:16, 29.
4. பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுபட்ட மக்களால் நிரப்பப்பட்ட பூமி ஒரு பரதீஸாவதுடன் ஆதியாகமம் 3:15 எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது?
4 மனிதவர்க்கம் பரதீஸை இழப்பதற்கு யாருடைய வஞ்சகம் வழிநடத்தியதோ, அவனாலேயே ஏதேனில் சொல்லர்த்தமான பாம்பு, பேசுவதற்கான ஏதுவாகப் பயன்படுத்தப்பட்டது. தன் காரியத்தைச் சாதிக்க அந்தச் சர்ப்பத்தைச் சூழ்ச்சியுடன் பயன்படுத்தியவன் நசுக்கப்படும் காலத்தை ஆதியாகமம் 3:15 சுட்டிக் காண்பித்தது. அப்போது, கடவுளின் மனித ஊழியர்கள், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களாய் பரதீஸில் குடியிருப்பதற்காக மீண்டும் வழி திறக்கப்பட்டிருக்கும். என்னே ஒரு சந்தோஷமான காலமாக அது இருக்கும்!—வெளிப்படுத்துதல் 20:1-3; 21:1-5.
5. பிசாசின் ஆவிக்குரிய சந்ததியை தனிப்படுத்தி காட்டும் பண்புகள் யாவை?
5 ஏதேனில் நடந்த கலகத்தைத் தொடர்ந்து, பிசாசாகிய சாத்தானுடையதைப் போன்ற பண்புகளை—கலகத்தனம், பொய் சொல்லுதல், பழிதூற்றுதல், கொலை செய்தல் ஆகியவற்றுடன்கூட யெகோவாவின் சித்தத்திற்கும் அவரை வணங்குகிறவர்களுக்கும் எதிர்ப்பை—வெளிக்காட்டிய தனி நபர்களும் அமைப்புகளும் தோன்ற ஆரம்பித்தனர். அந்தப் பண்புகள், பிசாசின் சந்ததியை, அவனுடைய ஆவிக்குரிய பிள்ளைகளை அடையாளம் காட்டின. இவர்களுக்குள் காயீனும் இருந்தான்; காயீனின் வணக்கத்திற்குப் பதிலாக ஆபேலுடையதை யெகோவா ஏற்றுக்கொண்டபோது ஆபேலைக் கொலை செய்தவன் இவன். (1 யோவான் 3:10-12) நிம்ரோத் என்பவன், அவனது பெயரில்தானே ஒரு கலகக்காரனாக அடையாளம் காட்டப்பட்டவன்; யெகோவாவுக்கு விரோதமாக ஒரு பலத்த வேட்டைக்காரனாகவும் ஆட்சியாளனாகவும் ஆனவன் அவன். (ஆதியாகமம் 10:9) மேலுமாக, அரசால் ஆதரவளிக்கப்பட்ட, பொய்யில் ஊன்றப்பட்டிருந்த மதங்களுடன்கூட, பாபிலோன் உள்ளிட்ட பண்டைய ராஜ்யங்கள் ஒன்றையொன்று பின்தொடர்ந்து வந்தன; இவை யெகோவாவின் வணக்கத்தாரைக் கொடூரமாக ஒடுக்கின.—எரேமியா 50:29.
‘உனக்கும் ஸ்திரீக்கும் பகை’
6. சாத்தான் என்ன வழிகளில் யெகோவாவின் ஸ்திரீயினிடமாக பகையைக் காட்டியிருக்கிறான்?
6 இந்தக் காலப்பகுதி முழுவதிலும், சர்ப்பத்துக்கும் யெகோவாவின் ஸ்திரீக்கும் இடையே, பிசாசாகிய சாத்தானுக்கும் உண்மையுள்ள ஆவி சிருஷ்டிகளாலான யெகோவாவின் பரலோக அமைப்புக்கும் இடையே பகை இருந்தது. யெகோவாவை நிந்தித்து, தேவதூதர்கள் தங்களுக்குரிய சரியான வாசஸ்தலத்தை விட்டுவிடும்படி அவர்களைக் கவர்ந்திழுத்து யெகோவாவின் பரலோக அமைப்பைக் குலைப்பதற்கு முயற்சித்தபோது சாத்தானின் பகை காண்பிக்கப்பட்டது. (நீதிமொழிகள் 27:11; யூதா 6) யெகோவாவால் அனுப்பப்பட்ட தேவதூதர்களைக் குறுக்கிடும்படியாக சாத்தான் தன் பேய்தூதர்களைப் பயன்படுத்தியபோது இது வெளிக்காட்டப்பட்டது. (தானியேல் 10:13, 14, 20, 21) மேசியானிய ராஜ்யத்தை, அதன் பிறப்பிலேயே அழிக்கும்படி சாத்தான் முயன்ற இந்த 20-ம் நூற்றாண்டில் அது குறிப்பிடத்தக்கவகையில் தெளிவாகத் தெரிந்தது.—வெளிப்படுத்துதல் 12:1-4.
7. அடையாளப்பூர்வமான சர்ப்பத்தினிடமாக யெகோவாவின் உண்மைப்பற்றுறுதியுள்ள தேவதூதர்கள் ஏன் பகை உணர்வைக் கொண்டிருந்தார்கள், இருந்தாலும் என்ன கட்டுப்பாட்டை அவர்கள் காண்பித்திருக்கிறார்கள்?
7 உண்மைப்பற்றுறுதியுள்ள தேவதூதர்களின் தொகுதியாகிய யெகோவாவின் ஸ்திரீக்கும், அடையாளப்பூர்வமான சர்ப்பத்திடமாக பகை இருந்தது. கடவுளுடைய நற்பெயரை சாத்தான் பழிதூற்றியிருந்தான்; எல்லா தேவதூதர்களும் உட்பட, கடவுளுடைய புத்திக்கூர்மையுள்ள சிருஷ்டிகள் ஒவ்வொருவரின் உத்தமத்தைக் குறித்தும் அவன் கேள்வி எழுப்பி, கடவுளிடமான அவர்களுடைய உத்தமத்தைக் கெடுப்பதற்கு மும்முரமாக முயற்சித்துக் கொண்டிருந்தான். (வெளிப்படுத்துதல் 12:4அ) பிசாசாகவும் சாத்தானாகவும் தன்னைத் தானே ஆக்கிக்கொண்டவனிடமாக உண்மையுள்ள தூதர்கள், கேருபீன்கள், மற்றும் சேராபீன்கள், ஒரு வெறுப்புணர்ச்சியைக் கொண்டிருப்பதைத்தவிர வேறெதையும் செய்ய முடியவில்லை. இருந்தாலும் அவர்கள், யெகோவா தம்முடைய சொந்த நேரத்திலும் வழியிலும் காரியங்களைக் கையாளும்படி அவருக்காகக் காத்திருந்திருக்கிறார்கள்.—யூதா 9-ஐ ஒப்பிடுக.
கடவுளுடைய ஸ்திரீயினிடமாகப் பகைமை
8. சாத்தான் யாருக்காகக் கருத்தாகக் கவனித்துக் கொண்டிருந்தான்?
8 இதற்கிடையில், சர்ப்பத்தைத் தலையில் நசுக்குவார் என்பதாக யெகோவா சொன்ன, முன்னுரைக்கப்பட்ட ஸ்திரீயின் வித்து யார் என்பதைக் காண சாத்தான் கருத்தாகக் கவனித்துக் கொண்டிருந்தான். பெத்லகேமில் பிறந்திருந்த இயேசுவே, “கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர்” என்பதாகப் பரலோகத்திலிருந்து வந்த தேவதூதன் அறிவித்தபோது, முன்னறிவிக்கப்பட்ட ஸ்திரீயின் வித்தாகப்போவது அவர்தான் என்பதற்கு இது பலமான உறுதியளிப்பாக இருந்தது.—லூக்கா 2:10, 11.
9. இயேசுவின் பிறப்பிற்குப் பின், சாத்தான் எவ்வாறு கடுமையான பகையை வெளிக்காட்டினான்?
9 சாத்தான், புறமத வானசாஸ்திரிகளை முதலில் எருசலேமிலுள்ள ஏரோது அரசனிடமும் பின்னர் பெத்லகேமில் இளம் சிறுவனாகிய இயேசுவும் அவருடைய தாயாகிய மரியாளும் இருந்த வீட்டிற்கும் கொண்டுசென்ற ஒரு பணியை வஞ்சகமாக மேற்கொள்ள வைத்ததிலிருந்து அவனுடைய கடுமையான பகை சீக்கிரத்தில் காண்பிக்கப்பட்டது. அதற்குச் சற்று பின்னர் பெத்லகேமின் சுற்றுவட்டாரத்தில் இருந்த இரண்டு வயது மற்றும் அதற்குட்பட்ட எல்லா ஆண் பிள்ளைகளும் கொல்லப்படும்படி ஏரோது அரசன் கட்டளையிட்டான். இதில், ஏரோது அந்த வித்தினிடமாக சாத்தானிய பகையைக் காண்பித்தான். தெளிவாகவே, மேசியாவாக இருக்கப்போகிறவரின் உயிரைத் தான் கொல்ல முயற்சித்துக் கொண்டிருந்தான் என்பதை ஏரோது நன்கு அறிந்திருந்தான். (மத்தேயு 2:1-6, 16) ஏரோது அரசன், பழிபாவங்களுக்கு அஞ்சாத, தந்திரமுள்ள, கொலைகார தன்மையுள்ள ஒருவன் என்பதாக வரலாறு சான்றளிக்கிறது—உண்மையிலேயே சர்ப்பத்தின் வித்தில் ஒருவன்.
10. (அ) இயேசுவின் முழுக்காட்டுதலைத் தொடர்ந்து, வாக்குப்பண்ணப்பட்ட வித்தைப் பற்றிய யெகோவாவின் நோக்கத்தைக் குலைக்க சாத்தான் எப்படி தனிப்பட்டவனாக முயன்றான்? (ஆ) சாத்தான் தன்னுடைய இலக்குகளைத் தொடருவதற்காக எவ்வாறு யூத மதத் தலைவர்களைப் பயன்படுத்தினான்?
10 பொ.ச. 29-ல் இயேசு பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, இயேசு தம்முடைய குமாரன் என்பதை ஒத்துக்கொள்பவராய் யெகோவா பரலோகத்திலிருந்து பேசிய பின்னர், இயேசுவைச் சோதனையின்கீழ் இணங்கிவிடச் செய்யும்படி சாத்தான் மீண்டும்மீண்டும் முயன்றான்; இவ்வாறு செய்வதன் மூலம் யெகோவா தம்முடைய குமாரனைப் பற்றி வைத்திருந்த நோக்கத்தை முறியடிக்க முயன்றான். (மத்தேயு 4:1-10) அதில் தவறியபோது, தன்னுடைய இலக்குகளை அடைவதற்காக மனித ஏதுக்களை மேலுமாகப் பயன்படுத்தும் வழிமுறையை நாடினான். இயேசுவின் நற்பெயரைக் கெடுக்கும் முயற்சியில் பயன்படுத்தப்பட்டவர்களில் மாய்மால மதத் தலைவர்களும் இருந்தனர். சாத்தானால் தானே பயன்படுத்தப்பட்ட வகையான முறைகளாகிய பொய் மற்றும் பழிதூற்றலை அவர்களும் கையாண்டனர். இயேசு ஒரு திமிர்வாதக்காரனிடம், “திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது,” என்று சொன்னபோது, அந்த வேதபாரகர், அந்த மனிதன் உண்மையிலேயே குணமடைந்திருக்கிறானா என்பதைப் பார்க்கக் காத்திராமல், இயேசுவை தேவதூஷணம் சொல்பவராகத் தீர்த்தனர். (மத்தேயு 9:2-7) ஓய்வுநாளில் மக்களை இயேசு குணப்படுத்தியபோது, ஓய்வுநாள் சட்டத்தை அவர் மீறியதாக பரிசேயர் அவரைக் கண்டனம் செய்து, அவரைக் கொலைசெய்யும்படி ஆலோசனைபண்ணினார்கள். (மத்தேயு 12:9-14; யோவான் 5:1-18) இயேசு பேய்களைத் துரத்தியபோது, ‘பேய்கள் தலைவனான பெயல்செபூலுடன்’ அவர் தொடர்புகொண்டிருந்ததாக பரிசேயர் குற்றஞ்சாட்டினர். (மத்தேயு 12:22-24, தமிழ்க் கத்தோலிக்க பைபிள்) லாசரு மரித்தோரிலிருந்து உயிருடன் எழுப்பப்பட்ட பிறகு, அநேக மக்கள் இயேசுவில் விசுவாசம் வைத்தனர்; ஆனால் பிரதான ஆசாரியரும் பரிசேயரும் அவரைக் கொல்லும்படி மீண்டும் ஆலோசனைபண்ணினார்கள்.—யோவான் 11:47-53.
11. இயேசுவின் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்னர், சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக அவர் யாரை அடையாளம் காட்டினார், ஏன்?
11 பொ.ச. 33-ல், நிசான் 11 அன்று, இயேசு, அவர்கள் எவ்விதமான சதித்திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள் என்பதை நன்கு அறிந்திருந்தபோதிலும், எருசலேமில் ஆலய பகுதிக்கு உள்ளே பயமின்றி நேராகச் சென்று, அங்கு பகிரங்கமாக அவர்கள்மீது நியாயத்தீர்ப்பை அறிவித்தார். ஒரு தொகுதியாக, வேதபாரகரும் பரிசேயரும் தாங்கள் என்ன வகையான மக்கள் என்பதை நிலையாக வெளிக்காட்டியிருந்தார்கள்; ஆகவே இயேசு சொன்னார்: “மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, மனுஷர் பிரவேசியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதுமில்லை, பிரவேசிக்கப் போகிறவர்களைப் பிரவேசிக்க விடுகிறதுமில்லை.” பின்வருமாறு சொல்வதன்மூலம், அவர்கள் சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமானவர்கள் என்பதை இயேசு குறிப்பாக அறிவித்தார்: “சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்?” (மத்தேயு 23:13, 33) ஆதியாகமம் 3:15-லுள்ள தீர்க்கதரிசனத்தின் மொழிநடையை அது நினைவுக்குக் கொண்டுவருகிறது.
12, 13. (அ) பிரதான ஆசாரியர்களும் வேதபாரகரும் தங்களுடைய ஆவிக்குரிய பிதா யார் என்பதற்கு மேலுமான அத்தாட்சியை எவ்விதமாகக் காண்பித்தார்கள்? (ஆ) அவர்களுடன் சேர்ந்துகொண்டது யார்? (இ) ஆதியாகமம் 3:15-ன் நிறைவேற்றமாக, ஸ்திரீயின் வித்து எவ்வாறு குதிங்காலில் நசுக்கப்பட்டது?
12 இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டபோது, அவர்கள் தங்கள் இருதயத்தில் உறுத்தப்பட்டவர்களாகி, அதன் காரணமாக கடவுளிடமிருந்து இரக்கத்திற்காக மன்றாடினார்களா? தங்கள் பொல்லாப்பிலிருந்து மனந்திரும்பினார்களா? இல்லை! அதற்கடுத்த நாளே, பிரதான ஆசாரியனின் முற்றத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், “பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் [இயேசுவைத்] தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்,” என்று மாற்கு 14:1 அறிவிக்கிறது. கொலைபாதகனாய் இருப்பதாக இயேசு ஏற்கெனவே விவரித்திருந்த சாத்தானின் கொலைகார உணர்வை அவர்கள் தொடர்ந்து வெளிக்காட்டினர். (யோவான் 8:44) விசுவாச துரோகியாகும்படியாக சாத்தான் தூண்டிவிட்ட யூதாஸ் காரியோத்தும் சீக்கிரத்தில் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். யூதாஸ், கடவுளுடைய ஸ்திரீயின் குற்றமற்ற வித்தை விட்டுவிட்டு சர்ப்பத்தின் வித்தோடு சேர்ந்துகொண்டான்.
13 நிசான் 14-ன் விடியற்காலையில், யூத மத ஆலோசனை சங்கத்தின் அங்கத்தினர்கள் இயேசுவை ஒரு சிறைக்கைதியாக ரோம ஆட்சியாளரிடம் கொண்டு சென்றனர். இப்போது அவர் மரத்தில் அறையப்படும்படியாக சத்தமிடுவதில் முன்நின்றவர்கள் பிரதான ஆசாரியர்களே. “உங்களுடைய ராஜாவை நான் மரத்தில் அறையலாமா” என்று பிலாத்து கேட்டபோது, “இராயனேயல்லாமல் எங்களுக்கு வேறே ராஜா இல்லை,” என்று பதிலளித்தவர்கள் பிரதான ஆசாரியர்களே. (யோவான் 19:6, 15, NW) உண்மையில், அவர்கள் எல்லா வகையிலும் சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக இருப்பதாய் நிரூபித்தார்கள். ஆனால் அவர்கள் நிச்சயமாகவே தனியாக இல்லை. மத்தேயு 27:24, 25-லுள்ள ஏவப்பட்ட பதிவு இந்த அறிக்கையை அளிக்கிறது: ‘பிலாத்து தண்ணீரை அள்ளி, ஜனங்களுக்கு முன்பாகக் கைகளைக் கழுவினான்.’ அப்போது அந்த மக்கள் எல்லாரும் இவ்வாறு சொன்னார்கள்: “இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்கள் பிள்ளைகள்மேலும் இருப்பதாக.” இவ்வாறு அந்தச் சந்ததியைச் சேர்ந்த அநேக யூதர்கள் தங்களை சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக அடையாளம் காட்டியிருக்கின்றனர். அந்த நாள் முடிவடைவதற்கு முன்பு, இயேசு மரணமடைந்தார். சாத்தான், தன்னுடைய காணக்கூடிய வித்தைப் பயன்படுத்தி, கடவுளுடைய ஸ்திரீயின் வித்தைக் குதிங்காலில் நசுக்கியிருந்தான்.
14. ஸ்திரீயின் வித்தினுடைய குதிங்காலை நசுக்குவது ஏன் சாத்தானுக்கு வெற்றியைக் குறிக்கவில்லை?
14 சாத்தான் வெற்றி அடைந்துவிட்டானா? எவ்விதத்திலும் இல்லை! இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை ஜெயித்திருந்து, அதன் அதிபதியின்மீது வெற்றி சிறந்திருந்தார். (யோவான் 14:30, 31; 16:33) யெகோவாவிடமான தம்முடைய உண்மைப்பற்றுறுதியை அவர் மரணம் வரையாகக் காத்துக்கொண்டார். ஒரு பரிபூரண மனிதனாக அவருடைய மரணம், ஆதாமால் இழக்கப்பட்ட ஜீவ உரிமைகளை மீண்டும் வாங்குவதற்குத் தேவையான மீட்பு கிரயத்தை அளித்தது. ஆகவே அந்த ஏற்பாட்டில் விசுவாசம் வைத்து கடவுளுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கு அவர் நித்திய ஜீவனுக்கான வழியைத் திறந்து வைத்தார். (மத்தேயு 20:28; யோவான் 3:16) யெகோவா, இயேசுவை பரலோகத்தில் அழியாமையுள்ள வாழ்க்கைக்கு மரித்தோரிலிருந்து எழுப்பினார். யெகோவாவின் உரிய நேரத்தில், சாத்தான் இராதபடிக்கு இயேசு அவனை நசுக்கிப்போடுவார். ஆதியாகமம் 22:16-18-ல், அந்த உண்மைப்பற்றுறுதியான வித்தின் மூலமாக தங்களை ஆசீர்வதித்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கிற பூமியிலுள்ள எல்லா குடும்பங்களின்மீதும் யெகோவா ஆதரவு வழங்கப்போவதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருக்கிறது.
15. (அ) இயேசுவின் மரணத்திற்குப் பின்னர், அவருடைய அப்போஸ்தலர் எவ்வாறு சர்ப்பத்தின் வித்தை தொடர்ந்து அம்பலப்படுத்தினார்கள்? (ஆ) நம்முடைய நாள் வரையாக, மேலுமான என்ன பகைமை சர்ப்பத்தின் வித்தால் வெளிக்காட்டப்பட்டிருக்கிறது?
15 இயேசுவின் மரணத்திற்குப் பின், ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள், தங்கள் ஆண்டவர் செய்தது போலவே, சர்ப்பத்தின் வித்தை தொடர்ந்து அம்பலப்படுத்தினார்கள். பரிசுத்த ஆவியால் தூண்டப்பட்டவராய், அப்போஸ்தலன் பவுல் ‘அக்கிரம மனுஷனுக்கு’ விரோதமாக எச்சரித்தார்; அவனுடைய வந்திருத்தல் “சாத்தானுடைய செயலின்படி” இருக்கும். (2 தெசலோனிக்கேயர் 2:3-10, NW) இந்தக் கூட்டுத்தொகுப்பான “மனுஷன்” கிறிஸ்தவமண்டலத்தின் மதகுருத் தொகுதியாக நிரூபித்திருக்கிறான். சர்ப்பத்தின் வித்து, முறையே, இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களைக் கடுமையாகத் துன்புறுத்தியது. வெளிப்படுத்துதல் 12:17-ல் பதிவுசெய்யப்பட்ட தீர்க்கதரிசனத்தில், கடவுளுடைய ஸ்திரீயின் வித்தினுடைய மீதியானவர்களுக்கு விரோதமாக நம்முடைய நாள் வரையாக சாத்தான் தொடர்ந்து யுத்தம் செய்வான் என்று அப்போஸ்தலன் யோவான் முன்னறிவித்தார். சரியாக அதுவே நடந்திருக்கிறது. பல நாடுகளில், யெகோவாவின் சாட்சிகள், கடவுளுடைய ராஜ்யத்துக்காகவும் அவருடைய நீதியுள்ள வழிகளுக்காகவும் எடுக்கும் உறுதியான நிலைநிற்கையின் காரணமாக, தடைவிதிக்கப்பட்டும், கும்பல்களால் தாக்கப்பட்டும், சிறையிலடைக்கப்பட்டும், அல்லது சித்திரவதை முகாம்களுக்குள் தள்ளப்பட்டும் இருக்கின்றனர்.
சாத்தானின் வித்தினுடைய நவீன நாளைய அம்பலப்படுத்தல்
16. நவீன காலங்களில், சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாய் இருப்பதாக அம்பலப்படுத்தப்பட்டிருப்பது யார், மேலும் எவ்வாறு?
16 இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களாக, உண்மை கிறிஸ்தவர்கள், சாத்தானையும் அவனுடைய வித்தையும் பயமின்றி அம்பலப்படுத்துவதில் தளர்ந்துபோகவில்லை. 1917-ல், பைபிள் மாணாக்கர்கள் என்று அப்போது அறியப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகள், நிறைவேறித்தீர்ந்த இரகசியம் (ஆங்கிலம்) என்ற புத்தகத்தைப் பிரசுரித்தனர்; கிறிஸ்தவமண்டல மதகுருக்களின் மாய்மாலத்தை அவர்கள் அதில் வெளிப்படையாக எடுத்துக் காண்பித்தார்கள். 1924-ல், குருமார் குற்றம்சாட்டப்படுதல் (ஆங்கிலம்) என்ற தலைப்பை உடைய அச்சிடப்பட்ட தீர்மானம் ஒன்று இதைத் தொடர்ந்தது. ஐந்து கோடி பிரதிகள் சர்வதேச அளவில் விநியோகிக்கப்பட்டன. 1937-ல், உவாட்ச் டவர் சொஸைட்டியின் அப்போதைய தலைவர் ஜே. எஃப். ரதர்ஃபர்ட், “அம்பலப்படுத்துதல்,” “மதமும் கிறிஸ்தவமும்” ஆகிய தலைப்புகளை உடைய பேச்சுக்களில் சாத்தானின் வித்தைப் பற்றி பலமாக அம்பலப்படுத்தினார். அதற்கடுத்த வருடம், பல்வேறு தேசங்களில் கூடியிருந்த 50 மாநாடுகளிலுள்ள அவையோர் செவிகொடுத்து கேட்கையில், “உண்மைகளை எதிர்ப்படுங்கள்” என்ற பேச்சை இங்கிலாந்திலுள்ள லண்டனிலிருந்து ரேடியோடெலிஃபோன் மூலமாக அவர் கொடுத்தார். ஒரு மாதம் கழித்து, “பாசிஸமா அல்லது சுயாதீனமா” என்ற பேச்சை ஐக்கிய மாகாணங்களிலிருந்த விரிவான ரேடியோ வலைப்பின்னல் அமைப்பு ஒன்று எடுத்துச் சென்றது. பகைவர்கள், மதம் ஆகியவற்றைப் போன்ற ஆங்கில புத்தகங்களிலும் பகிரங்கமாக்கப்பட்டது என்ற சிறிய ஆங்கில புத்தகத்திலும் பலமான அம்பலப்படுத்தல்களும் இவற்றோடு இணைந்து வெளியாயின. 1920-களிலிருந்து பிரசுரிக்கப்பட்டவற்றிற்கு இசைவாக, தற்போது 65 மொழிகளில் அச்சிடப்பட்ட வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது!,a என்ற புத்தகம், ஊழல்மிக்க அரசியல் ஆட்சியாளர்களையும் பேராசையுள்ள, நெறி தவறிய சட்டவிரோதமான வர்த்தகர்களையும், சர்ப்பத்தின் காணக்கூடிய வித்தின் பிரதானமான அங்கத்தினர்களில் உட்பட்டிருப்பதாக அடையாளம் காட்டுகிறது. அரசியல் தலைவர்கள் தங்கள் குடிமக்களைத் தவறாக வழிநடத்துவதற்காகப் பொய்யை நாடுவதையும், இரத்தத்தின் பரிசுத்தத்தன்மைக்கு எவ்வித மதிப்பையும் காண்பிக்காமல் இருப்பதையும், (கடவுளுடைய ஸ்திரீயின் வித்துக்கு பகைமையைக் காண்பிப்பவர்களாய்) யெகோவாவின் ஊழியர்களைத் துன்புறுத்துவதையும் பழக்கமாக்கி இருக்கும்போது, அவர்கள் சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக இருக்கிறார்கள் என்பதை நிச்சயமாகவே அடையாளம் காட்டுகிறார்கள். சட்டவிரோதமான வர்த்தகர்களைக் குறித்ததிலும் இதுவே உண்மையாக இருக்கிறது; மனச்சாட்சியின் எவ்வித உறுத்தலுமின்றி அவர்கள், பொருளாதார லாபத்திற்காக பொய் சொல்லுகிறவர்களாகவும், நோயை உண்டாக்கும் என்று அறியப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறவர்களாகவும் அல்லது விற்கிறவர்களாகவும் இருக்கிறார்கள்.
17. உலகின் ஒழுங்குமுறையிலிருந்து வெளியே வரக்கூடிய பிரபலமான நபர்களுக்கு இன்னும் என்ன வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டிருக்கிறது?
17 உலகப்பிரகாரமான மதம், அரசியல், அல்லது வர்த்தகத்தால் கறைபடுத்தப்பட்ட ஒவ்வொரு நபரும் சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக இருப்பதாய் முடிவில் கருதப்பட மாட்டார். இப்படிப்பட்டவர்களில் சில ஆண்களும் பெண்களும் யெகோவாவின் சாட்சிகளை விரும்பி பாராட்டுகிறவர்களாக ஆகியிருக்கின்றனர். அவர்களுக்கு உதவிசெய்ய தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்துகின்றனர்; காலப்போக்கில் உண்மை வணக்கத்தைத் தழுவுகின்றனர். (ஒப்பிடுக: அப்போஸ்தலர் 13:7, 12; 17:32-34.) அப்படிப்பட்ட அனைவருக்கும், இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது: “இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள். பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள். குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.” (சங்கீதம் 2:10-12) உண்மையில், யெகோவாவுடைய தயவைப் பெற விரும்புகிற அனைவரும், பரலோக நியாயாதிபதி, வாய்ப்பின் கதவை இழுத்து அடைப்பதற்கு முன்னர், இப்போதே செயல்படுவது இன்றியமையாதது!
18. ஸ்திரீயின் வித்தினுடைய பாகமாக இல்லாவிட்டாலும்கூட, யெகோவாவின் வணக்கத்தாராக இருப்பது யார்?
18 பரலோக ராஜ்யத்தை இணைந்து உருவாக்குகிறவர்கள் மட்டுமே அந்த ஸ்திரீயின் வித்தினுடைய பாகமாக இருக்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கையில் ஒருசிலரேயாவர். (வெளிப்படுத்துதல் 7:4, 9) என்றாலும், திரள் கூட்டமான மற்றவர்கள், ஆம், அவர்களில் இலட்சக்கணக்கானோர் இருக்கிறார்கள்; அவர்கள் யெகோவாவை வணங்குகிறவர்களாக, ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனை எதிர்நோக்கி இருக்கின்றனர். சொல்லாலும் செயலாலும் அவர்கள் யெகோவாவின் அபிஷேகம் செய்யப்பட்டவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்கள்: “தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்; ஆகையால் உங்களோடே கூடப் போவோம்.”—சகரியா 8:23.
19. (அ) எல்லா மக்களும் என்ன தெரிவைச் செய்ய வேண்டும்? (ஆ) வாய்ப்பு இன்னும் இருக்கையிலேயே, ஞானமாக நடந்துகொள்ளும்படியாக குறிப்பாக யாருக்கு அக்கறையுள்ள வேண்டுகோள் விடுக்கப்படுகிறது?
19 மனிதவர்க்கத்தினர் அனைவரும் ஒரு தெரிவைச் செய்வதற்கான காலம் இதுவே. அவர்கள் யெகோவாவை வணங்கி அவருடைய உன்னத அரசதிகாரத்தை ஆதரிக்க விரும்புகிறார்களா, அல்லது சாத்தானைப் பிரியப்படுத்தும் காரியங்களைச் செய்து, அவனைத் தங்களுடைய ஆட்சியாளனாக இருக்க அனுமதிப்பார்களா? ஸ்திரீயின் வித்தினுடைய மீதியானவர்களாகிய ராஜ்ய சுதந்தரவாளிகளுடன்கூட, எல்லா தேசங்களிலிருந்தும் வந்த சுமார் 50 லட்சம் மக்கள் யெகோவாவின் பக்கமாக தங்கள் நிலைநிற்கையை எடுத்திருக்கிறார்கள். இன்னும் எண்பது லட்சம்பேர் அவர்களுடன் பைபிளைப் படிப்பதில் அல்லது கூட்டங்களுக்கு ஆஜராவதில் அக்கறை காண்பித்திருக்கிறார்கள். இப்படிப்பட்ட அனைவரிடமும் யெகோவாவின் சாட்சிகள் சொல்லுகிறார்கள்: வாய்ப்பின் கதவு இன்னும் திறந்திருக்கிறது. சந்தேகமற்றவர்களாய் யெகோவாவின் பக்கத்தில் உங்கள் நிலைநிற்கையை எடுங்கள். வாக்குப்பண்ணப்பட்ட வித்தாக கிறிஸ்து இயேசுவை ஏற்றுக்கொள்ளுங்கள். யெகோவாவின் காணக்கூடிய அமைப்புடன் சந்தோஷமாக கூட்டுறவுகொள்ளுங்கள். அரசராகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக அவர் அளிக்கும் எல்லா ஆசீர்வாதங்களையும் நீங்கள் பகிர்ந்துகொள்வீர்களாக.
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ ஆதியாகமம் 3:15-ல் குறிப்பிடப்பட்ட சர்ப்பம் யார்? மேலும் ஸ்திரீ யார்?
◻ சர்ப்பத்தின் வித்தை தனிப்படுத்திக் காட்டும் பண்புகள் யாவை?
◻ சர்ப்பத்தின் வித்தை இயேசு எவ்வாறு அம்பலப்படுத்தினார்?
◻ நவீன காலங்களில் அந்தச் சர்ப்பத்துடைய வித்தின் பாகமாக யார் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்?
◻ சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாக அடையாளம் காணப்படுவதைத் தவிர்ப்பதற்கு என்ன அவசர நடவடிக்கை தேவைப்படுகிறது?
[பக்கம் 10-ன் படம்]
மாய்மாலமான மதத் தலைவர்கள் சர்ப்பத்தின் வித்தினுடைய பாகமாய் இருப்பதாக இயேசு அம்பலப்படுத்தினார்