வாசகரிடமிருந்து வரும்கேள்விகள்
இன்று பூமிக்குரிய நம்பிக்கை பெற்றிருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் ஆவியினால் அபிஷேகம்செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் போன்றே அதே அளவு கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கின்றனரா?
இது புதிதான கேள்வி அல்ல. இதே விஷயம் ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1952, இதழில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” பகுதியில் எழுதப்பட்டது. அந்தச் சமயம் முதற்கொண்டு அநேகர் சாட்சிகளாக ஆகியிருக்கின்றனர், ஆகையால் நாம் அந்தக் கேள்வியை மறுபடியும் சிந்தித்துப் பார்க்கலாம், அவ்வாறு சிந்தித்துப் பார்க்கையில், ஆரம்பத்தில் கூறிய தகவலை மறுபார்வை செய்யலாம்.
அடிப்படையில், பதில் ஆம் என்பதே, வேறே ஆடுகள் வகுப்பைச் சேர்ந்த உண்மையுள்ள சகோதரர்களும் சகோதரிகளும் கடவுளுடைய பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்வதில் அபிஷேகம்செய்யப்பட்டவர்களோடு சரிசமமாக பங்குகொள்ளலாம்.—யோவான் 10:16.
இந்த ஆவி எல்லா தனிப்பட்ட நபர்கள் மீதும் ஒரேவிதத்தில் செயல்படுகிறது என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. கிறிஸ்துவுக்கு முன்னான காலங்களிலிருந்த உண்மையுள்ள ஊழியர்களை மறுபடியும் நினைவுக்குக் கொண்டுவாருங்கள்; அவர்கள் நிச்சயமாகவே கடவுளுடைய ஆவியைப் பெற்றிருந்தனர். அவர்களில் சிலர், ஆவியிலிருந்து பெற்ற சக்தியைக்கொண்டு கொடிய மிருகங்களைக் கொன்றனர், நோயுற்றோரைக் குணப்படுத்தினர், மரித்தோரையும்கூட உயிர்த்தெழுப்பினர். ஏவப்பட்டெழுதப்பட்ட பைபிள் புத்தகங்களை எழுதுவதற்கு அவர்களுக்கு ஆவி தேவைப்பட்டது. (நியாயாதிபதிகள் 13:24, 25; 14:5, 6; 1 இராஜாக்கள் 17:17-24; 2 இராஜாக்கள் 4:17-37; 5:1-14) காவற்கோபுரம் கூறியது: “இவர்கள் அபிஷேகம்செய்யப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாய் இல்லையென்றாலும், பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தனர்.”
மற்றொரு நோக்குநிலையிலிருந்து கவனித்தால், முதல் நூற்றாண்டிலிருந்த ஆண்களையும் பெண்களையும் சிந்தித்துப் பாருங்கள், அவர்கள் பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டு, பரலோக நம்பிக்கையுடைய கடவுளின் ஆவிக்குரிய குமாரர்களாக ஆனார்கள். அனைவரும் அபிஷேகம்செய்யப்பட்டிருந்தனர், ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் அனைவர் மீதும் அதே விதத்தில் ஆவி செயல்பட்டது என்பதை அது அர்த்தப்படுத்தாது. அது 1 கொரிந்தியர் 12-ஆம் அதிகாரத்தில் தெளிவாயிருக்கிறது. அங்கு அப்போஸ்தலனாகிய பவுல் ஆவியின் வரங்களைக் குறித்து கலந்தாலோசித்தார். நாம் வசனங்கள் 8, 9, 11-ல் (NW) இவ்வாறு வாசிக்கிறோம்: “எப்படியெனில், ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், . . . இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவி நடப்பித்து, அதன் சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்து கொடுக்கிறது.”
குறிப்பிடத்தக்கவகையில், அந்தச் சமயத்திலிருந்த எல்லா அபிஷேகம்செய்யப்பட்டவர்களும் ஆவியின் அற்புதமான வரங்களைப் பெறவில்லை. 1 கொரிந்தியர் 14-ஆம் அதிகாரத்தில், பவுல் ஒரு சபைக்கூட்டத்தைப் பற்றி குறிப்பிட்டார், அதில் ஒருவர் பாஷைகளை பேசும் வரம் பெற்றிருந்தார், ஆனால் அங்கிருந்த எவரும் மொழிபெயர்க்கும் வரம் பெற்றிருக்கவில்லை. அவ்வாறு இருந்தபோதிலும், அதற்கு முன்பு ஏதாவது ஒரு சமயம் அவர்களில் ஒவ்வொருவரும் ஆவியால் அபிஷேகம்செய்யப்பட்ட அனுபவத்தைப் பெற்றிருந்தனர். பாஷைகளைப் பேசும் வரத்தைப் பெற்றிருக்கும் சகோதரர் அங்கிருந்த மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக ஆவி பெற்றிருந்தார் என்று சொல்வது நியாயமாக இருக்குமா? இல்லை. அபிஷேகம்செய்யப்பட்டிருந்த மற்றவர்கள், பாஷைகளைப் பேசும் வரத்தைப் பெற்றிருந்த சகோதரரைப் போலவே அந்த அளவுக்கு பைபிளை விளங்கிக்கொள்ளமுடியாமலோ அல்லது சோதனைகளை எதிர்ப்பட முடியாமலோ அனுகூலமற்ற நிலையில் இருக்கவில்லை. பல பாஷைகளில் பேசமுடிந்த சகோதரர் மீது ஆவி விசேஷமான விதத்தில் செயல்பட்டது. அப்படியிருந்தாலும், அவரும் மற்றவர்களும் யெகோவாவுடன் நெருங்கி இருக்க வேண்டிய தேவை இருந்தது, பவுல் எழுதியபடி, ‘விடாமல் தொடர்ந்து ஆவியினால் நிறைந்தும்’ இருக்க வேண்டியிருந்தது.—எபேசியர் 5:18.
இன்றுள்ள மீதியானோரைக் குறித்ததில், அவர்கள் நிச்சயமாகவே கடவுளுடைய ஆவியைப் பெற்றிருக்கின்றனர். ஒரு சமயம் அது அவர்கள்மீது விசேஷமான விதத்தில்—அவர்கள் அபிஷேகம் செய்யப்பட்டு ஆவிக்குரிய குமாரர்களாக புத்திரசுவிகாரம் பெற்றபோது செயல்பட்டது. அதற்குப் பிறகு அவர்கள் ‘தொடர்ந்து ஆவியால் நிரப்பப்பட்டு’ வருகின்றனர், பைபிளை மிகவும் தெளிவாக விளங்கிக்கொள்ள நாடுகையிலும், பிரசங்க வேலையைத் தலைமைதாங்கி நடத்துகையிலும் அல்லது தனிப்பட்ட அல்லது அமைப்பு சம்பந்தமான சோதனைகளை எதிர்ப்படுகையிலும் அந்த ஆவியின் உதவியைப் பெற்றுக்கொள்கின்றனர்.
‘வேறே ஆடுகளைச்‘ சேர்ந்த அங்கத்தினர்கள், அபிஷேகம்செய்யப்படும் அனுபவத்தை பெறாதபோதிலும், மற்ற அம்சங்களில் பரிசுத்த ஆவியை நிச்சயமாகவே பெற்றுக்கொள்கின்றனர். ஆங்கில காவற்கோபுரம், ஏப்ரல் 15, 1952, இவ்வாறு குறிப்பிட்டது:
“இன்று ‘வேறே ஆடுகள்’ மீதியானோரைப் போன்றே அதே பிரசங்க வேலையைச் செய்கின்றனர், அதேவிதமான சோதனையான சூழ்நிலைகளின்கீழ் செய்கின்றனர், அதே உண்மைத்தன்மையையும் உத்தமத்தன்மையையும் வெளிக்காட்டுகின்றனர். அவர்கள் அதே ஆவிக்குரிய மேஜையில் அதே உணவை உட்கொண்டு அதே சத்தியங்களை கிரகித்துக்கொள்கின்றனர். பூமிக்குரிய நம்பிக்கைகளும் பூமிக்குரிய விஷயங்களில் மிகுதியான ஆர்வமும் உடையவர்களாய் பூமிக்குரிய வகுப்பைச் சேர்ந்தவர்களாய் இருக்கிறபடியால், புதிய உலகில் இருக்கப்போகும் பூமிக்குரிய நிலைமைகள் சம்பந்தமான வேதவசனங்களில் கூடுதலான ஆர்வத்தை காண்பிக்கலாம்; ஆனால் அபிஷேகம்செய்யப்பட்டவர்களோ, பரலோக நம்பிக்கைகளும் ஆவியின் விஷயங்களில் பலமான தனிப்பட்ட அக்கறையும் உடையவர்களாய் இருக்கிறபடியால், கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் ஆவியின் காரியங்களை மிகவும் ஊக்கமாய் படிக்கலாம். . . . இருப்பினும், உண்மை என்னவெனில், அதே சத்தியங்களும் அதே புரிந்துகொள்ளுதலும் இரண்டு வகுப்பாருக்கும் கிடைக்கக்கூடியவையாய் இருக்கின்றன. தனிப்பட்ட நபர்கள் எந்த அளவுக்கு படிப்பில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கிறார்கள் என்பதே அவர்கள் பெற்றுக்கொள்ளும் பரலோக மற்றும் பூமிக்குரிய காரியங்களை புரிந்துகொள்ளும் திறனை நிர்ணயிக்கிறது. ஆண்டவருடைய ஆவி இரண்டு வகுப்பாருக்கும் சமமான அளவில் கிடைக்கிறது, அறிவும் புரிந்துகொள்ளுதலும் இரண்டு வகுப்பாருக்கும் சமமான அளவில் அளிக்கப்படுகிறது, அதைக் கிரகித்துக்கொள்வதற்கும் சமமான வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.”