நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருக்கவேண்டும்’
“யெகோவாவென்னும் உங்கள் கடவுளாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராயிருக்கவேண்டும்.”—லேவியராகமம் 19:2, தி.மொ.
1. பரிசுத்தராக இருப்பதாய் இந்த உலகம் கருதுகிற ஆட்கள் சிலர் யாவர்?
இவ்வுலகத்தின் மதங்களில் பெரும்பான்மையானவை, பரிசுத்தமுள்ளவர்கள் என்று அவை கருதுகிறவர்களை உடையனவாக இருக்கின்றன. இந்தியாவில் புகழ்பெற்ற அன்னை தெரசா, ஏழைகளுக்குக் கவனம் செலுத்துவதில் தன்னையே அர்ப்பணம் செய்திருப்பதன் காரணமாக, பரிசுத்தராக பெரும்பாலும் கருதப்படுகிறார்கள். போப்பாக இருப்பவர் “பரிசுத்த பிதா” என்றழைக்கப்படுகிறார். தற்கால கத்தோலிக்க இயக்கத்தை உருவாக்கியவரான ஒப்பஸ் டேயி, ஹோஸே மாரியா எஸ்க்ரீபா, ‘பரிசுத்தத்திற்கு மாதிரி’ என கத்தோலிக்கர் சிலரால் கருதப்படுகிறார். இந்துமதம் அதன் சுவாமிஜிக்களை, அல்லது பரிசுத்த மனிதரைக் கொண்டிருக்கிறது. காந்தி ஒரு பரிசுத்த மனிதராக உயர்வாய் மதிக்கப்பட்டார். புத்தமதம் அதன் பரிசுத்தத் துறவிகளைக் கொண்டுள்ளது, முகம்மதிய மதம் அதன் பரிசுத்த நபியை உடையதாக இருக்கிறது. ஆனால் பரிசுத்தமாயிருப்பது உண்மையில் எதைக் குறிக்கிறது?
2, 3. (அ) “பரிசுத்தம்” மற்றும் “பரிசுத்தத்தன்மை” என்ற சொற்களின் அர்த்தமென்ன? (ஆ) பதிலளிக்கப்பட வேண்டிய சில கேள்விகள் யாவை?
2 “பரிசுத்தம்” என்ற இந்தச் சொல்லுக்குப் பின்வருமாறு பொருள் தொகுத்துரைக்கப்படுகிறது: “1. . . . தேவ வல்லமை ஒன்றோடு சம்பந்தப்பட்டது; புனிதத் தன்மை. 2. மதிப்புக் கொடுத்தல் அல்லது வணக்கம் அல்லது பயபக்தியுடன் அல்லது அவற்றிற்குத் தகுந்ததாகக் கருதப்பட்டது . . . 3. கண்டிப்பான அல்லது உயர்வாய் ஒழுக்கமுள்ள மத அல்லது ஆவிக்குரிய ஒழுங்குமுறைப்படி வாழ்தல் . . . 4. ஒரு மத நோக்கத்திற்காகத் தனிப்பட குறித்து வைத்தது அல்லது ஒதுக்கி வைத்தது.” பைபிள்பூர்வ சூழமைவில், பரிசுத்தம் என்பது, “மத சுத்தம் அல்லது தூய்மை; புனிதத் தன்மை” என்று அர்த்தப்படுகிறது. வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்), என்ற பைபிள் தகவல் துணையாதார புத்தகத்தின்படி, “மூல எபிரெய [சொல்] கோடெஷ் (qoʹdhesh), கடவுளுக்கென பிரித்து வைக்கும், தனிப்படுத்தி வைக்கும், அல்லது பரிசுத்தப்படுத்தும் கருத்தை அளிக்கிறது, . . . கடவுளுடைய சேவைக்கென ஒதுக்கி வைக்கப்படும் ஒரு நிலை.”a
3 இஸ்ரவேல் ஜனம் பரிசுத்தமாயிருக்கும்படி கட்டளையிடப்பட்டது. கடவுளுடைய நியாயப்பிரமாணம் இவ்வாறு கூறினது: “நான் உங்கள் கடவுளாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; நீங்களும் உங்களைச் சுத்திகரித்துக்கொண்டு பரிசுத்தராயிருங்கள்.” பரிசுத்தத்திற்கு மூலகாரணராக இருந்தவர் யார்? அபூரணரான இஸ்ரவேலர் எவ்வாறு பரிசுத்தராகக்கூடும்? பரிசுத்தமுள்ளோராகும்படி யெகோவா அழைப்பதில் இன்று நாம் என்ன பாடங்களை நமக்குக் காணலாம்?—லேவியராகமம் 11:44, தி.மொ.
பரிசுத்தத்தின் மூலகாரணருடன் இஸ்ரவேலர் எவ்வாறு சம்பந்தப்பட்டனர்
4. இஸ்ரவேலில் யெகோவாவின் பரிசுத்தம் எவ்வாறு விளக்கிக் காட்டப்பட்டது?
4 யெகோவா தேவனை வணங்கின இஸ்ரவேலின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் பரிசுத்தமானதாகக் கருதப்படவும் கையாளப்படவும் வேண்டியதாக இருந்தது. ஏன்? ஏனெனில் யெகோவாதாமே பரிசுத்தத்தின் தொடக்கமும் மூலகாரணருமாக இருக்கிறார். பரிசுத்த ஆசரிப்புக்கூடாரத்தையும் உடைகளையும் அலங்காரங்களையும் ஆயத்தம் செய்ததைப் பற்றிய மோசேயின் விவரம் இந்த வார்த்தைகளோடு முடிகிறது: “பரிசுத்த கிரீடத்தின் பட்டத்தையும் பசும்பொன்னினாலே பண்ணி, கர்த்தருக்குப் [“யெகோவாவுக்குப்,” NW] பரிசுத்தம் என்னும் எழுத்துக்களை அதிலே முத்திரை வெட்டாக வெட்டி”னார்கள். பசும்பொன்னினாலான இந்தப் பிரகாசிக்கும் பட்டகம், பிரதான ஆசாரியனின் தலைப்பாகையில் பொருத்தப்பட்டது. தனிமுறைப்பட்ட பரிசுத்த சேவை ஒன்றுக்கு அவர் தனிப்பட ஒதுக்கி வைக்கப்பட்டாரென இது குறித்துக்காட்டிற்று. இந்த எழுத்துப் பொறிப்பைக் கொண்ட அடையாளம் சூரிய ஒளியில் பிரகாசித்ததை இஸ்ரவேலர் கண்டபோதெல்லாம், யெகோவாவின் பரிசுத்தத்தைப் பற்றி இடைவிடாமல் நினைப்பூட்டப்பட்டு வந்தனர்.—யாத்திராகமம் 28:36; 29:6; 39:30.
5. அபூரண மனிதர் எவ்வாறு பரிசுத்தராகக் கருதப்படக்கூடும்?
5 ஆனால் இஸ்ரவேலர் எவ்வாறு பரிசுத்தராகக்கூடும்? யெகோவாவுடன் தங்கள் நெருங்கிய உறவின் மூலமும், அவரை வணங்கும் தங்கள் தூய்மையான வணக்கத்தின் மூலமும் மாத்திரமேயாகும். பரிசுத்தத்தில், உடல்சம்பந்தமான மற்றும் ஆவிக்குரிய சுத்தத்தில் அவரை வணங்கும்படி, “மகா பரிசுத்தமானவரைப்” பற்றிய திருத்தமான அறிவு அவர்களுக்குத் தேவைப்பட்டது. (நீதிமொழிகள் 2:1-6; 9:10, NW) ஆகவே இஸ்ரவேலர், தூய்மையான உள்நோக்கத்துடனும் தூய்மையான இருதயத்துடனும் கடவுளை வணங்கவேண்டியதாக இருந்தது. எந்த வகையான பாசாங்குத்தன வணக்கமும் யெகோவாவுக்கு அருவருப்பானதாயிருக்கும்.—நீதிமொழிகள் 21:27.
யெகோவா இஸ்ரவேலரை வெளிப்படையாகக் கண்டனம் செய்ததற்கான காரணம்
6. மல்கியாவின் நாளிலிருந்த யூதர்கள் யெகோவாவின் மேசையை எவ்வாறு கருதி செயல்பட்டனர்?
6 இஸ்ரவேலர் இருதய ஆர்வமற்று, ஊனமுள்ள, இழிதரமான பலிகளை ஆலயத்துக்குக் கொண்டுவந்தபோது இது தெளிவாகச் சித்தரித்துக் காட்டப்பட்டது. தம்முடைய தீர்க்கதரிசியாகிய மல்கியாவின்மூலம், யெகோவா, அவர்களுடைய இழிதரமான பலிகளைக் கண்டனம் செய்தார்: “உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; உங்கள் கைகளின் காணிக்கையை நான் அங்கீகரியேன். . . . நீங்களோ என் நாமத்தைப் பரிசுத்தமற்றதுபோலாக்குகிறீர்கள், யெகோவாவின் மேசை விசேஷமற்றது என்றும், அதில் ஆகாரமாகப் படைக்கும் பலன் அசட்டைபண்ணத்தக்கது என்றும் சொல்லுகிறீர்களே. இதோ, என்ன வருத்தமென்று சொல்லி, அதை ஒரு திரணமாய்ப்பேசி, பறித்ததையும் முடமானதையும் நோய்கொண்டதையும் காணிக்கையாகக் கொண்டுவருகிறீர்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்; அதை உங்கள் கைகளில் அங்கீகரித்துக்கொள்வேனோ என்று யெகோவா சொல்லுகிறார்.”—மலாகி 1:10, 12, 13, தி.மொ.
7. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டில் யூதர்கள் பரிசுத்தமற்ற என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டனர்?
7 யூதரின் பாசாங்குத்தன நடவடிக்கைகளை வெளிப்படையாகக் கண்டனம் செய்வதற்கு, பெரும்பாலும் பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டின்போது, மல்கியா கடவுளால் பயன்படுத்தப்பட்டார். ஆசாரியர்கள் இழிவான முன்மாதிரியை வைத்துக்கொண்டிருந்தார்கள், அவர்களுடைய நடத்தை நிச்சயமாகவே பரிசுத்தமாக இருக்கவில்லை. ஜனங்கள் அந்த முன்மாதிரியைப் பின்பற்றி, தங்கள் மனைவிகளை மணவிலக்கு செய்யும் நிலையளவுக்குங்கூட, தங்கள் நியமங்களில் உறுதியற்றவர்களாக இருந்தனர். புறமத இளம் மனைவிகளை ஏற்கும்படி அவர்கள் அவ்வாறு ஒருவேளை செய்திருக்கலாம். மல்கியா இவ்வாறு எழுதினார்: “யெகோவா உனக்கும் உன் இளவயதின் மனைவிக்கும் சாட்சியாயிருந்தார்; உன் தோழியும் உன் உடன்படிக்கையின் மனைவியுமாகிய அவளுக்கு நீ துரோகம்பண்ணினாயே.b . . . ஒருவனும் தன் இளவயதின் மனைவிக்குத் துரோகம் பண்ணாதபடி உங்கள் ஆவிக்குள்ளேயே எச்சரிக்கையாயிருங்கள். மனைவியைத் தள்ளிவிடுவது எனக்கு வெறுப்பு என்று இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா சொல்லுகிறார்.”—மலாகி 2:14-16, தி.மொ.
8. மணவிலக்குவைப் பற்றிய தற்கால கருத்தால், கிறிஸ்தவ சபையிலுள்ள சிலர் எவ்வாறு பாதிக்கப்பட்டிருக்கின்றனர்?
8 தற்காலங்களில், எளிதில் மணவிலக்கு செய்யமுடிகிற நாடுகள் பலவற்றில், மணவிலக்கு வீதம் மிகுதியாய் உயர்ந்துவிட்டிருக்கிறது. கிறிஸ்தவ சபையுங்கூட பாதிக்கப்பட்டிருக்கிறது. இடையூறுகளை மேற்கொள்வதற்கு மூப்பர்களின் உதவியை நாடி, தங்கள் மணவாழ்க்கையை வெற்றிகரமாக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, சிலர் அவசரமாக மணவிலக்கு செய்துகொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் பிள்ளைகளே கடும் உணர்ச்சி சம்பந்தப்பட்ட இக்கட்டுகளை அனுபவிக்கும்படி விடப்படுகின்றனர்.—மத்தேயு 19:8, 9.
9, 10. யெகோவாவை வணங்கும் நம் வணக்கத்தின்பேரில் நாம் எவ்வாறு சிந்தனைசெய்து பார்க்கவேண்டும்?
9 நாம் முன் கண்டபடி, மல்கியாவின் நாளில் இருந்த அந்த வருந்தத்தக்க ஆவிக்குரிய நிலைமையின் காரணமாக, யெகோவா, யூதாவின் ஆழமற்ற மேற்போக்கான வணக்கத்தை வெளிப்படையாய்க் கண்டனம் செய்து, தூய்மையான வணக்கத்தை மாத்திரமே தாம் ஏற்பாரென்று காட்டினார். ஈடற்ற சர்வலோகப் பேரரசரான கர்த்தரும், உண்மையான பரிசுத்தத்தின் மூலகாரணருமான யெகோவா தேவனை வணங்கும் நம் வணக்கத்தினுடைய தன்மையின்பேரில் ஆழ்ந்து சிந்தனை செய்து பார்க்கும்படி இது நம்மைச் செய்விக்க வேண்டுமல்லவா? நாம் உண்மையில் கடவுளுக்குப் பரிசுத்த சேவை செய்கிறோமா? ஆவிக்குரிய சுத்தமான நிலைமையில் நாம் நம்மை வைத்துவருகிறோமா?
10 இது, நாம் பரிபூரணராக இருக்கும்படி கேட்பதில்லை, அது முடியாத காரியம், அல்லது மற்றவர்களோடு நம்மை ஒப்பிட்டுப் பார்க்கும்படியும் கேட்பதில்லை. ஆனால் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆணும் பெண்ணும் தன் தனிப்பட்ட சூழ்நிலைமைகளுக்குள் தன் மிக ஊக்கமான வணக்கத்தைக் கடவுளுக்குச் செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று நிச்சயமாகவே பொருள்படுகிறது. இது நம்முடைய வணக்கத் தன்மையைக் குறிப்பிடுகிறது. நம்முடைய பரிசுத்த சேவை நாம் செய்யும் மிகச் சிறந்ததாக—பரிசுத்த சேவையாக இருக்க வேண்டும். அது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது?—லூக்கா 16:10; கலாத்தியர் 6:3, 4.
தூய்மையான இருதயங்கள் தூய்மையான வணக்கத்திற்கு வழிநடத்துகின்றன
11, 12. பரிசுத்தமற்ற நடத்தை எங்கிருந்து தொடங்குகிறது?
11 இருதயத்திலிருப்பது, ஒருவர் சொல்பவற்றில் அல்லது செய்பவற்றில் வெளியாகிறது என்று இயேசு தெளிவாகக் கற்பித்தார். சுயநீதியுள்ளோராக, எனினும் பரிசுத்தமற்றோராக இருந்த பரிசேயர்களை நோக்கி இயேசு: “விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்,” என்று சொன்னார். பொல்லாதச் செயல்கள், இருதயத்திலுள்ள பொல்லாத நினைவுகளிலிருந்து, அல்லது உள்ளான ஆளிலிருந்து புறப்படுகிறதென்று அவர் பின்னால் காட்டினார். அவர் சொன்னதாவது: “வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்.”—மத்தேயு 12:34; 15:18-20.
12 பரிசுத்தமற்றச் செயல்கள் வெறும் தன்னியல்பாய் அல்லது முந்திய ஆதாரமில்லாமல் தோன்றுகிறதில்லை என்பதைப் புரிந்துகொள்ள இது நமக்கு உதவி செய்கிறது. இருதயத்தில் மறைந்திருக்கிற, கறைப்படுத்தும் சிந்தனைகளின்—இரகசிய இச்சைகளின், ஒருவேளை மனக்கற்பனைகளின்—விளைவாக அவை இருக்கின்றன. அதனிமித்தமே இயேசு இவ்வாறு சொல்ல முடிந்தது: “விபசாரஞ் செய்யாதே என்று உரைத்திருப்பதாகக் கேட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்வதோ, ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று.” வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டுமானால், எந்தச் செயலும் நடப்பதற்கு முன்பாக, வேசித்தனமும் விபசாரமும் இருதயத்தில் ஏற்கெனவே வேர்கொண்டாய்விட்டது. பின்பு, வசதியான சூழ்நிலைமைகள் ஏற்படுகையில், பரிசுத்தமற்ற சிந்தனைகள் பரிசுத்தமற்ற நடத்தையாகிவிடுகின்றன. வேசித்தனம், விபசாரம், ஓரினப்புணர்ச்சி, களவு, தேவதூஷணங்கள், மற்றும் விசுவாச துரோகம் ஆகியவை அவற்றின் வெளிப்படையான சில விளைவுகளாகின்றன.—மத்தேயு 5:27, 28, தி.மொ.; கலாத்தியர் 5:19-21.
13. பரிசுத்தமற்ற சிந்தனைகள் எவ்வாறு பரிசுத்தமற்ற செயல்களுக்கு வழிநடத்தக்கூடும் என்பதற்குச் சில உதாரணங்கள் யாவை?
13 இதைப் பல்வேறு வழிகளில் சித்தரித்துக் காட்டலாம். சில நாடுகளில் பொதுக் கேளிக்கைக் கூடங்கள் ஏராளமாக விரைவில் தோன்றிக்கொண்டிருக்கின்றன. இவ்வாறு, சூதாடுவதற்கான வாய்ப்பு பெருகச் செய்யப்படுகிறது. ஒருவர் தன் பணப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு பரிகாரமாகத் தோன்றும் இதில் ஈடுபடும்படி வசீகரிக்கப்படலாம். வெளித்தோற்றத்துக்குச் சரியாகத் தோன்றுகிற வஞ்சனையான யோசனை, பைபிள் நியமங்களை விட்டுவிட்டு அல்லது அவற்றை அவ்வளவு கருத்தார்ந்து சிந்தியாமல், அதில் ஈடுபடும்படி ஒரு சகோதரனைத் தூண்டுவிக்கலாம்.c மற்றொரு உதாரணமாக, டிவி, வீடியோக்கள், கம்ப்யூட்டர்கள், அல்லது புத்தகங்களின் மூலம் எளிதில் கிடைக்கிற ஆபாசமான தகவல், பரிசுத்தமற்ற நடத்தைக்குட்படும்படி ஒரு கிறிஸ்தவனை வழிநடத்தக்கூடும். அவன் தன் ஆவிக்குரிய போராயுதங்களைக் கவனியாமற்விட வேண்டியதுதான், தான் உணர்வதற்கு முன்பாக ஒழுக்கக்கேட்டு நடத்தைக்குள் விழுந்துவிடுகிறான். ஆனால் பெரும்பான்மையானோரின் காரியங்களில், பாவத்துக்குள் வழுவிச் செல்வது மனதில் தொடங்குகிறது. ஆம், இவற்றைப் போன்ற சந்தர்ப்பங்களில், யாக்கோபின் இவ்வார்த்தைகள் நிறைவேறுகின்றன: “அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்.”—யாக்கோபு 1:14, 15; எபேசியர் 6:11-18.
14. எவ்வாறு பலர் தங்கள் பரிசுத்தமற்ற நடத்தையிலிருந்து திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கின்றனர்?
14 பலவீனத்தில் பாவம் செய்துவிடுகிற கிறிஸ்தவர்கள் பலர், சந்தோஷத்துக்கேதுவாக, உண்மையான மனந்திரும்புதலைக் காட்டுகின்றனர்; மூப்பர்கள் அத்தகையோரை ஆவிக்குரியப் பிரகாரமாகத் திரும்ப நிலைநாட்டக்கூடியோராக இருக்கின்றனர். மனந்திரும்பாததன் காரணமாக சபைநீக்கம் செய்யப்பட்ட பலருங்கூட முடிவில் தங்கள் உணர்வுகளுக்கு வந்து, சபையில் திரும்ப நிலைநாட்டப்படுகின்றனர். பரிசுத்தமற்ற சிந்தனைகள் தங்கள் இருதயத்தில் வேர்கொள்ள தாங்கள் அனுமதித்தபோது, சாத்தான் எவ்வளவு எளிதாகத் தங்களை மேற்கொண்டான் என்பதை அவர்கள் தெரிந்துணருகிறவர்களாகின்றனர்.—கலாத்தியர் 6:1; 2 தீமோத்தேயு 2:24-26; 1 பேதுரு 5:8, 9.
சவால்—நம்முடைய பலவீனங்களை எதிர்ப்படுவதற்கு
15. (அ) நாம் ஏன் நம் பலவீனங்களை எதிர்ப்பட வேண்டும்? (ஆ) நம்முடைய பலவீனங்களை ஒப்புக்கொள்ள எது நமக்கு உதவி செய்யக்கூடும்?
15 நம்முடைய சொந்த இருதயத்தை மெய்ம்மையின்படி அறிய நாம் முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய பலவீனங்களை எதிர்ப்பட்டு, அவற்றை ஒப்புக்கொண்டு, பின்பு அவற்றைப் போக்கி மேற்கொள்ளும்படி உழைப்பதற்கு நாம் மனமுள்ளோராக இருக்கிறோமா? நாம் எவ்வாறு திருந்தி முன்னேறலாமென்று நேர்மையாக நமக்குச் சொல்லக்கூடிய நண்பர் ஒருவரைக் கேட்க மனமுள்ளோராக இருக்கிறோமா, பின்பு அந்த அறிவுரைக்குச் செவிகொடுக்கிறோமா? பரிசுத்தராக நிலைத்திருப்பதற்கு நம்முடைய குறைபாடுகளை நாம் வென்று மேற்கொள்ள வேண்டும். ஏன்? ஏனெனில் சாத்தான் நம்முடைய பலவீனங்களை அறிந்திருக்கிறான். பாவத்துக்கும் பரிசுத்தமற்ற நடத்தைக்கும் உட்படும்படி நம்மைத் தூண்டுவிப்பதற்கு தன் மறைநுட்பமான சூழ்ச்சிகளை அவன் பயன்படுத்துவான். நாம் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும் யெகோவாவின் வணக்கத்திற்குப் பயன்படுபவர்களாயும் இனிமேலும் இராதபடி, கடவுளுடைய அன்பிலிருந்து நம்மைப் பிரித்துப்போடும்படி, தன் தந்திரமானச் செயல்களைக் கொண்டு அவன் முயற்சி செய்கிறான்.—எரேமியா 17:9; எபேசியர் 6:11; யாக்கோபு 1:19.
16. பவுலுக்கு என்ன போராட்டம் இருந்தது?
16 அப்போஸ்தலன் பவுல், ரோமருக்கு எழுதின தன் நிருபத்தில் சாட்சிபகர்ந்தபடி, தன் சொந்த இக்கட்டுகளையும் பரீட்சைகளையும் உடையவராக இருந்தார்: “என்னிடத்தில், அதாவது, என் மாம்சத்தில், நன்மை வாசமாயிருக்கிறதில்லையென்று நான் அறிந்திருக்கிறேன்; நன்மைசெய்ய வேண்டுமென்கிற விருப்பம் என்னிடத்திலிருக்கிறது, நன்மைசெய்வதோ என்னிடத்திலில்லை. ஆதலால் நான் விரும்புகிற நன்மையைச் செய்யாமல், விரும்பாத தீமையையே செய்கிறேன். . . . உள்ளான மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன். ஆகிலும் என் மனதின் பிரமாணத்துக்கு விரோதமாய்ப் போராடுகிற வேறொரு பிரமாணத்தை என் அவயவங்களில் இருக்கக் காண்கிறேன்; அது என் அவயவங்களில் உண்டாயிருக்கிற பாவப் பிரமாணத்துக்கு என்னைச் சிறையாக்கிக் கொள்ளுகிறது.”—ரோமர் 7:18-23.
17. பலவீனங்களோடு போராடின தன் போராட்டத்தில் பவுல் எவ்வாறு வெற்றிபெற்றவராக வெளிவந்தார்?
17 இப்போது பவுலின் காரியத்தில் முக்கியக் குறிப்பானது, அவர் தன் பலவீனங்களை ஒப்புக்கொண்டார் என்பதே. அவை இருந்தபோதிலும், அவர்: “உள்ளான [ஆவிக்குரிய] மனுஷனுக்கேற்றபடி தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்மேல் பிரியமாயிருக்கிறேன்,” என்று சொல்ல முடிந்தது. நன்மையானதை பவுல் விரும்பினார், தீமையானதை வெறுத்தார். எனினும் ஒரு போராட்டம் அவருக்கு இன்னும் இருந்தது. நம் எல்லாருக்கும் இருக்கிற—சாத்தானுக்கும், உலகத்துக்கும், மாம்சத்துக்கும் எதிரான—அதே போராட்டம். ஆகையால் பரிசுத்தராக, இந்த உலகத்திலிருந்தும் அதன் சிந்தனையிலிருந்தும் பிரிக்கப்பட்டவர்களாக, நிலைத்திருப்பதற்கு இந்தப் போராட்டத்தை நாம் எவ்வாறு வெல்ல முடியும்?—2 கொரிந்தியர் 4:4; எபேசியர் 6:12.
நாம் எவ்வாறு பரிசுத்தராக நிலைத்திருக்கலாம்?
18. நாம் எவ்வாறு பரிசுத்தராக நிலைத்திருக்கலாம்?
18 எதிர்ப்பற்ற இலகுவான போக்கை ஏற்பதாலோ, கட்டுப்பாடில்லாமல் விருப்பப்படி இன்பத்தை அனுபவிப்பதாலோ பரிசுத்தம் அடையப் பெறுவதில்லை. அந்த வகையான ஆள் தன் நடத்தைக்கு எப்போதும் சாக்குப்போக்குகளைச் சொல்லி, குற்றப் பொறுப்பை வேறு எதன்மீதாவது திருப்ப முயற்சி செய்வான். குடும்பப் பின்சூழலின் அல்லது பரம்பரை பண்புகளின் காரணமாக விதி தங்களுக்கு விரோதமாக அணிவகுத்ததென்று குற்றஞ்சாட்டுவோரைப்போல் இராமல், நம்முடைய செயல்களுக்கு நாம் பொறுப்புள்ளோராகும்படி கற்றுக்கொள்வது ஒருவேளை தேவைப்படலாம். அந்தக் காரியத்தின் மூலகாரணம் அந்த நபரின் இருதயத்தில் உள்ளது. அவர் அல்லது அவள் நீதியை நேசிக்கிறாரா? பரிசுத்தத்திற்காக முயன்றுழைக்கிறாரா? கடவுளுடைய ஆசீர்வாதத்தை விரும்புகிறாரா? சங்கீதக்காரன் இவ்வாறு சொன்னபோது பரிசுத்தத்திற்கானத் தேவையைத் தெளிவாக்கினார்: “தீமையை விட்டு விலகி, நன்மை செய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள்.” அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.”—சங்கீதம் 34:14; 97:10; ரோமர் 12:9.
19, 20. (அ) நம்முடைய மனதை நாம் எவ்வாறு கட்டியெழுப்பலாம்? (ஆ) பலன்தரும் தனிப்பட்ட படிப்பு எதை அவசியப்படுத்துகிறது?
19 காரியங்களை யெகோவாவின் நோக்குநிலையில் காண்போமானால், மற்றும் கிறிஸ்துவின் சிந்தை நமக்கு இருந்தால், நாம் ‘நன்மையைப் பற்றிக்கொண்டிருக்கலாம்.’ (1 கொரிந்தியர் 2:16) இது எவ்வாறு நிறைவேற்றப்படுகிறது? கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்து அதன்பேரில் தியானித்து வருவதன்மூலமே. இந்த அறிவுரை எவ்வளவு அடிக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது! ஆனால் நாம் அதைப் போதிய உள்ளார்ந்த அக்கறையுடன் ஏற்கிறோமா? உதாரணமாக, கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக, இந்தப் பத்திரிகையை நீங்கள் உண்மையில் படித்து, பைபிள் வசனங்களை எடுத்துப் பார்க்கிறீர்களா? படிப்பதென்றால், ஒவ்வொரு பாராவிலும் ஒருசில சொற்றொடர்களை வெறுமனே அடிக்கோடிடுவதை நாங்கள் கருதுகிறதில்லை. ஒரு படிப்பு கட்டுரையை ஏறக்குறைய 15 நிமிடங்களில் கண்ணோட்டமிட்டு அடிக்கோடிட்டு விடலாம். அது நாம் அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டோமென்று அர்த்தமாகிறதா? ஒவ்வொரு கட்டுரையும் அளிக்கிற ஆவிக்குரிய நன்மையைப் படித்து மனதில் கிரகித்துக்கொள்வதற்கு ஒன்று அல்லது இரண்டு மணிநேரங்கள் எடுக்கலாம் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
20 டிவி பார்ப்பதிலிருந்து ஒவ்வொரு வாரமும் ஒருசில மணிநேரங்கள் விலகி, அவற்றை நம் சொந்த பரிசுத்தத்தின்பேரில் உண்மையில் கவனத்தை ஊன்றவைப்பதற்குச் செலவிடும்படி நம்மைநாமே கட்டுப்படுத்திக்கொள்வது ஒருவேளை அவசியமாக இருக்கலாம். நாம் தவறாமல் ஒழுங்காய்ப் படிப்பது, ஆவிக்குரியப் பிரகாரம் நம்மைக் கட்டியெழுப்பி, சரியானத் தீர்மானங்களை—‘பரிசுத்த நடக்கைக்கு’ வழிநடத்துகிற தீர்மானங்களைச்—செய்வதற்கு நம் மனதைத் தூண்டியெழுப்புகிறது.—2 பேதுரு 3:11; எபேசியர் 4:23, NW; 5:15, 16.
21. என்ன கேள்வி பதிலளிக்கப்படும்படி மீந்திருக்கிறது?
21 இப்போது கேள்வியானது, யெகோவா பரிசுத்தராக இருப்பதுபோலவே, கிறிஸ்தவர்களாக நாம், கூடுதலாக என்ன நடவடிக்கை அம்சங்களிலும் நடத்தையிலும் பரிசுத்தராயிருக்கலாம்? பின்வரும் கட்டுரை, கவனமான சிந்தனைக்குரிய சில காரியங்களை அளிக்கும்.
[அடிக்குறிப்புகள்]
a இந்தத் தகவல் துணையாதார இரு புத்தகத் தொகுதிகளும், உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி பிரசுரித்திருப்பவை.
b “துரோகம்,” எதைக் குறிக்கிறது என்பதைப் பற்றி மேலுமதிக முழுமையாகச் சிந்திப்பதற்கு, விழித்தெழு! (ஆங்கிலம்) பிப்ரவரி 8, 1994, பக்கம் 21-ல், “எந்த வகையான மணவிலக்குவை யெகோவா வெறுக்கிறார்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
c சூதாட்டம் ஏன் பரிசுத்தமற்ற நடத்தை என்பதன்பேரில் மேலுமானத் தகவலைப் பெறுவதற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்ட விழித்தெழு!, ஆகஸ்ட் 8, 1994, பக்கங்கள் 14-15-ஐப் பாருங்கள்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ இஸ்ரவேலில் பரிசுத்தத்துக்கு மூலகாரணர் எவ்வாறு அடையாளங்காட்டப்பட்டார்?
◻ மல்கியாவின் நாளில் இஸ்ரவேலருடைய வணக்கம் என்ன வகைகளில் பரிசுத்தமற்றதாக இருந்தது?
◻ பரிசுத்தமற்ற நடத்தை எங்கே தொடங்குகிறது?
◻ பரிசுத்தராக இருப்பதற்கு, நாம் எதைத் தெரிந்துணர வேண்டும்?
◻ நாம் எவ்வாறு பரிசுத்தராக நிலைத்திருக்கலாம்?