கிறிஸ்துவுக்கு முன்னிருந்த பிரமாணம்
“உமது பிரமாணத்தை நான் எவ்வளவாய் ஆசிக்கிறேன்! நாளெல்லாம் அதுவே என் தியானம்.”—சங்கீதம் 119:97, திருத்திய மொழிபெயர்ப்பு.
1. விண்வெளிக் கோளங்களின் இயக்கங்களை எது ஆளுகிறது?
குழந்தைப் பருவத்திலிருந்தே ஒருவேளை யோபு, ஆச்சரியத்துடன் நட்சத்திரங்களை அடிக்கடி உற்று நோக்கியிருந்திருப்பார். அந்த மகா நட்சத்திரக் கூட்டங்களுக்குப் பெயர்களையும், வானத்தினூடாக அந்த நட்சத்திரக் கூட்டங்களின் இயக்கத்தை ஆளும் பிரமாணங்களைப்பற்றி தாங்கள் அறிந்தவற்றையும் அவருடைய பெற்றோர் அநேகமாய் அவருக்குக் கற்பித்திருப்பார்கள். பூர்வ காலங்களிலிருந்த ஜனங்கள், பரந்த இந்த நேர்த்தியான நட்சத்திரக் கூட்டங்களின் நிலையான இயக்கங்களை, மாறும் பருவங்களைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தினரே. ஆச்சரிய பிரமிப்புடன் யோபு இவற்றை இவ்வளவு காலங்களாக உற்றுநோக்கியிருந்தபோதிலும், ஒன்றுகூடிய இந்த நட்சத்திர அமைவுகளை, வல்லமைவாய்ந்த எந்தச் சக்திகள் ஒன்றாகக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன என்பதைப் பற்றி அவருக்குத் தெரியவில்லை. ஆகவே, “வானத்துக்குரிய பிரமாணங்களை நீ புரிந்துகொண்டிருக்கிறாயா?” என்று யெகோவா தேவன் யோபைக் கேட்டபோது, அவரால் எந்தப் பதிலும் சொல்ல இயலவில்லை. (யோபு 38:31-33, தி நியூ ஜெருசலெம் பைபிள்) ஆம், நட்சத்திரங்கள் பிரமாணங்களால்—இன்றைய விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதபடிக்கு அவ்வளவு துல்லியமாயும் சிக்கலாயும் உள்ள பிரமாணங்களால்—ஆளப்படுகின்றன.
2. சிருஷ்டிப்பு முழுவதும் பிரமாணத்தால் ஆளப்படுகிறதென்று ஏன் சொல்லலாம்?
2 சர்வலோகத்தில் யெகோவாவே ஈடற்ற உன்னதப் பிரமாணிகர். அவருடைய செயல்களெல்லாம் பிரமாணத்தால் ஆளப்படுகின்றன. அவருடைய மிக நேச குமாரனானவரும், ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவரும்’ சடப்பொருளான சர்வலோகம் உண்டாவதற்கு முன்பே, தம்முடைய பிதாவின் பிரமாணத்துக்கு உண்மையுடன் கீழ்ப்படிந்துகொண்டிருந்தார்! (கொலோசெயர் 1:15) தேவதூதர்களுங்கூட பிரமாணத்தால் வழிநடத்தப்படுகின்றனர். (சங்கீதம் 103:20) மிருகங்களுங்கூட, தங்களுக்குள் தங்கள் சிருஷ்டிகர் திட்டமிட்டமைத்திருக்கிற இயல்புணர்ச்சி கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகையில், பிரமாணத்தால் ஆளப்படுகின்றன.—நீதிமொழிகள் 30:24-28; எரேமியா 8:7.
3. (அ) மனிதவர்க்கத்துக்கு ஏன் பிரமாணங்கள் தேவை? (ஆ) எவற்றைக்கொண்டு யெகோவா இஸ்ரவேல் ஜனத்தை ஆண்டார்?
3 மனிதவர்க்கத்தைப் பற்றியதென்ன? அறிவுத்திறம், ஒழுக்கநெறி, ஆவிக்குரியத் தன்மை போன்ற இத்தகைய பண்புகளை உடையோராக நாம் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறபோதிலும், இந்தத் திறமைகளைப் பயன்படுத்துவதில் நம்மை வழிநடத்துவதற்குக் கடவுளுடைய பிரமாணம் ஓரளவு நமக்கு இன்னும் தேவை. நம்முடைய முதற்பெற்றோரான ஆதாமும் ஏவாளும் பரிபூரணராக இருந்தனர்; ஆகையால் அவர்களை வழிநடத்துவதற்கு ஒருசில பிரமாணங்களே தேவைப்பட்டன. தங்கள் பரலோகத் தகப்பன் மீதிருந்த அன்பு, மகிழ்ச்சியுடன் கீழ்ப்படிய அவர்களுக்குப் போதுமான காரணத்தை அளித்திருக்க வேண்டும். ஆனால் அவர்கள் கீழ்ப்படியாமற்போனார்கள். (ஆதியாகமம் 1:26-28; 2:15-17; 3:6-19) அதன் விளைவாக, அவர்களுடைய சந்ததியார், தங்களை வழிநடத்துவதற்கு மேலும் பல பிரமாணங்கள் தேவைப்பட்ட, பாவிகளான சிருஷ்டிகளாயினர். காலப்போக்கில், யெகோவா அன்புடன் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்தார். நோவா தன் குடும்பத்தினருக்குக் கடத்தும்படி அவர் திட்டமான பிரமாணங்களை அவருக்குக் கொடுத்தார். (ஆதியாகமம் 9:1-7) பல நூற்றாண்டுகளுக்குப் பின், புதிய இஸ்ரவேல் ஜனத்துக்கு நுட்பவிவரமான, எழுதப்பட்ட நியாயப்பிரமாணத் தொகுப்பை, மோசேயின் மூலம் கடவுள் அளித்தார். இதுவே, தேவப்பிரமாணத்தால் ஒரு முழு ஜனத்தையும் யெகோவா ஆண்ட முதல் தடவையாக இருந்தது. அந்த நியாயப்பிரமாணத்தைக் கூர்ந்தாராய்வது, இன்று கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் கடவுளுடைய பிரமாணம் வகிக்கும் இன்றியமையாத பாகத்தைப் புரிந்துகொள்ள நமக்கு உதவிசெய்யும்.
மோசேயின் நியாயப்பிரமாணம்—அதன் நோக்கம்
4. வாக்குக்கொடுக்கப்பட்ட வித்துவைப் பிறப்பிப்பது, தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாமின் சந்ததியாருக்கு ஏன் ஒரு சவாலாக இருக்கும்?
4 நியாயப்பிரமாணத்தைக் கூர்ந்தாராய்ந்த ஒரு மாணாக்கராயிருந்தவரான அப்போஸ்தலன் பவுல், இவ்வாறு கேட்டார்: “அப்படியானால், நியாயப்பிரமாணம் எதற்கு?” (கலாத்தியர் 3:19) பதிலளிப்பதற்கு, சகல தேசத்தாருக்கும் மிகுந்த ஆசீர்வாதங்களைக் கொண்டுவரப்போகிற ஒரு வித்துவை ஆபிரகாமின் குடும்பப் பரம்பரை பிறப்பிக்குமென்று, யெகோவா தம்முடைய சிநேகிதன் ஆபிரகாமுக்கு வாக்களித்ததை நாம் நினைவுக்குக் கொண்டுவர வேண்டும். (ஆதியாகமம் 22:18) ஆனால் இதில் ஒரு சவால் உள்ளது: தெரிந்துகொள்ளப்பட்ட ஆபிரகாமின் சந்ததியாரான இஸ்ரவேலரில் எல்லா தனிப்பட்ட நபர்களும் யெகோவாவை நேசிப்போராக இருக்கவில்லை. காலப்போக்கில், பெரும்பான்மையர் வணங்காக்கழுத்துள்ளோராயும், கலகக்காரராயும் நிரூபித்தனர்—சிலர் பெரும்பாலும் கட்டுப்படுத்தவே முடியாதவர்களாக இருந்தனர்! (யாத்திராகமம் 32:9; உபாகமம் 9:7) அத்தகையோருக்கு கடவுளுடைய ஜனங்கள் மத்தியில் இருந்ததானது, தாங்கள் தெரிந்துகொண்டதனால் அல்ல, வெறுமனே அவர்கள் அதில் பிறந்ததினாலேயாகும்.
5. (அ) மோசேயின் நியாயப்பிரமாணத்தைக் கொண்டு யெகோவா இஸ்ரவேலருக்கு என்ன போதித்தார்? (ஆ) நியாயப்பிரமாணத்தைக் கடைப்பிடிப்போரின் நடத்தையைப் பாதிப்பதற்கு ஏற்ப அது எவ்வாறு வடிவமைக்கப்பட்டது?
5 அத்தகைய ஜனங்கள், எவ்வாறு வாக்குக்கொடுக்கப்பட்ட வித்துவைப் பிறப்பித்து, அவரால் நன்மையடைய முடியும்? அவர்களை இயந்திர மனிதரைப்போல் கட்டுப்படுத்தி ஆளாமல், அதற்கு மாறாக, பிரமாணத்தைக் கொண்டு யெகோவா அவர்களுக்குப் போதித்தார். (சங்கீதம் 119:33-35; ஏசாயா 48:17) உண்மையில், “பிரமாணம்” என்பதற்கான எபிரெயச் சொல்லாகிய டோரா (toh·rahʹ) “போதனை” எனப் பொருள்படுகிறது. அது என்ன போதித்தது? முதலாவதாக, இஸ்ரவேலரை அவர்களுடைய பாவ நிலையிலிருந்து மீட்கப்போகிறவராகிய மேசியாவுக்கான அவர்களுடைய தேவையை அவர்களுக்குப் போதித்தது. (கலாத்தியர் 3:24) தேவ பயத்தையும் கீழ்ப்படிதலையுங்கூட நியாயப்பிரமாணம் போதித்தது. ஆபிரகாமிய வாக்குத்தத்தத்திற்கிசைய இஸ்ரவேலர், மற்ற எல்லா தேசத்தாருக்கும் யெகோவாவின் சாட்சிகளாகச் சேவிக்க வேண்டும். ஆகையால் நியாயப்பிரமாணம், யெகோவாவின்பேரில் நல்லமுறையில் பிரதிபலிக்கும், உயர்ந்த, மேன்மையான நடத்தை நெறியை அவர்களுக்குப் போதிக்க வேண்டியிருந்தது; சுற்றிலுமிருந்த தேசங்களின் ஒழுக்கங்கெட்ட பழக்கச் செயல்களிலிருந்து தங்களைப் பிரித்துவைத்துக்கொள்ள இஸ்ரவேலருக்கு அது உதவி செய்யும்.—லேவியராகமம் 18:24, 25; ஏசாயா 43:10-12.
6. (அ) மோசேயின் நியாயப்பிரமாணத்தில் ஏறக்குறைய எத்தனை சட்டங்கள் அடங்கியிருக்கின்றன, அவை ஏன் மட்டுக்குமீறியவையாகக் கருதப்படக்கூடாது? (அடிக்குறிப்பைக் காண்க.) (ஆ) மோசேயின் நியாயப்பிரமாணத்தை ஆராய்ந்து பார்ப்பதன்மூலம் என்ன உட்பார்வையை நாம் அடையலாம்?
6 அப்படியானால், மோசேயின் நியாயப்பிரமாணம் பல சட்டங்கள்—600-க்கும் மேற்பட்டவை—அடங்கியதாக இருப்பது ஆச்சரியமாயில்லை.a எழுதப்பட்ட இந்தச் சட்டத் தொகுப்பு, வணக்கம், அரசாங்கம், ஒழுக்கநெறிகள், நீதி சம்பந்தப்பட்டவற்றை, உணவுதிட்டத்தையும் உடல் சுகாதாரத்தையும்கூட ஒழுங்குபடுத்தியது. எனினும், இந்த நியாயப்பிரமாணம் வெறும் உணர்ச்சியற்ற பல விதிமுறைகளும் சுருக்கமான கட்டளைகளும் அடங்கிய ஒரு தொகுப்பாகவே இருந்ததென அது பொருள்படுகிறதா? நிச்சயமாகவே இல்லை! இந்த நியாயப்பிரமாண தொகுப்பை ஆராய்ந்து பார்ப்பது, யெகோவாவின் அன்புள்ள ஆளுமைக்குள் மிகுதியான உட்பார்வையை அளிக்கிறது. சில உதாரணங்களைக் கவனியுங்கள்.
இரக்கத்தையும் பரிவையும் வெளிப்படுத்தின நியாயப்பிரமாணம்
7, 8. (அ) நியாயப்பிரமாணம் இரக்கத்தையும் பரிவையும் எவ்வாறு அறிவுறுத்தினது? (ஆ) தாவீதின் காரியத்தில் எவ்வாறு யெகோவா நியாயப்பிரமாணத்தை இரக்கத்துடன் பயன்படுத்தினார்?
7 நியாயப்பிரமாணம் இரக்கத்தையும் பரிவையும், முக்கியமாய் எளியோருக்கு அல்லது உதவியற்றோருக்கு காட்டும்படி அறிவுறுத்தியது. விதவைகளும் திக்கற்ற பிள்ளைகளும் பாதுகாப்புக்காகத் தனிப்பட குறிப்பிடப்பட்டனர். (யாத்திராகமம் 22:22-24) உழைக்கும் மிருகங்கள் கொடூரமாக நடத்தப்படுவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்கப்பட்டன. அடிப்படையான சொத்து உரிமைகள் மதிக்கப்பட்டன. (உபாகமம் 24:10; 25:4) கொலை குற்றத்துக்காக மரண தண்டனை அளிக்கப்படுவதை நியாயப்பிரமாணம் கட்டளையிட்டபோதிலும், அறியாமல் தற்செயலாகக் கொன்றுவிட்ட சமயங்களில் இரக்கம் கிடைப்பதைக் கூடியதாக்கிற்று. (எண்ணாகமம் 35:11) சில குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையின்பேரில், இஸ்ரவேலின் நியாயாதிபதிகள், குற்றஞ்செய்தவனின் மனப்பான்மையைச் சார்ந்து தண்டனை விதிப்பதற்கு வழி இருந்ததென்பது தெளிவாயுள்ளது.—யாத்திராகமம் 22:7-ஐயும் லேவியராகமம் 6:1-7-ஐயும் ஒப்பிடுக.
8 தேவைப்பட்டபோது நியாயப்பிரமாணத்தை உறுதியுடன் பொருத்திப் பயன்படுத்தி, ஆனால் கூடியபோதெல்லாம் இரக்கத்துடன் அவ்வாறு செய்ததன்மூலம், யெகோவா, நியாயாதிபதிகளுக்கு முன்மாதிரியை வைத்தார். விபசாரமும் கொலை குற்றமும் செய்திருந்த அரசனாகிய தாவீது, இரக்கம் காண்பிக்கப்பட்டார். அவர் தண்டிக்காமல் விடப்படவில்லை, எப்படியெனில், அவருடைய பாவத்திலிருந்து தோன்றுகிற பயங்கர விளைவுகளிலிருந்து யெகோவா அவரைத் தடுத்துப் பாதுகாக்கவில்லை. எனினும், ராஜ்ய உடன்படிக்கையின் நிமித்தமாகவும், தாவீது இயல்பாய் இரக்கமுள்ள மனிதராக இருந்ததன் நிமித்தமாகவும், உள்ளார்ந்த மனந்திரும்பின மனநிலை உடையவராக இருந்ததன் நிமித்தமாகவும், அவர் கொல்லப்படவில்லை.—1 சாமுவேல் 24:4-7; 2 சாமுவேல் 7:16; சங்கீதம் 51:1-4; யாக்கோபு 2:13.
9. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் அன்பு என்ன பாகத்தை வகித்தது?
9 கூடுதலாக, மோசேயின் நியாயப்பிரமாணம் அன்பை அறிவுறுத்தியது. இன்றைய தேசங்களில் ஒன்று, உண்மையில் அன்பைத் தேவைப்படுத்தின ஒரு சட்டத் தொகுப்பை உடையதாக இருப்பதாய்க் கற்பனை செய்து பாருங்கள்! இவ்வாறாக கொலை செய்யக்கூடாதென்று மோசேயின் நியாயப்பிரமாணம் தடை செய்ததுமட்டுமல்லாமல், “உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக,” என்றும் அது கட்டளையிட்டது. (லேவியராகமம் 19:18) அந்நியனாகக் குடியிருந்தவனை அநியாயமாக நடத்தக்கூடாதென்று அது தடை செய்ததுமட்டுமல்லாமல், “நீங்கள் உங்களில் அன்புகூருகிறதுபோல அவனிலும் அன்புகூருவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியராயிருந்தீர்களே” என்றும் கட்டளையிட்டது. (லேவியராகமம் 19:34) விபசாரத்தை தடை செய்ததுமட்டுமல்லாமல், கணவன் தன் சொந்த மனைவியைச் சந்தோஷப்படுத்த வேண்டுமென்றும் அது கட்டளையிட்டது! (உபாகமம் 24:5) அன்பின் பண்பைக் குறித்துக்காட்டும் எபிரெயச் சொற்கள், உபாகமம் புத்தகத்தில் மாத்திரம், ஏறக்குறைய 20 தடவைகள் பயன்படுத்தப்படுகின்றன. யெகோவா இஸ்ரவேலருக்கு, கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் தம்முடைய சொந்த அன்பை உறுதியளித்தார். (உபாகமம் 4:37; 7:12-14) மெய்யாகவே மோசேயினுடைய நியாயப்பிரமாணத்தின் மிகப் பெரிய கட்டளை இதுவாக இருந்தது: “நீ உன் கடவுளாகிய யெகோவாவிலே உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு பலத்தோடும் அன்புகூரவேண்டும்.” (உபாகமம் 6:5, தி.மொ.) தன் அயலானில் அன்புகூர வேண்டும் என்ற கட்டளையோடுகூட, இந்தக் கட்டளையில் நியாயப்பிரமாணம் முழுவதும் அடங்கியிருக்கிறதென்று இயேசு சொன்னார். (லேவியராகமம் 19:18; மத்தேயு 22:37-40) சங்கீதக்காரன் இவ்வாறு எழுதினது ஆச்சரியமல்ல: “உமது பிரமாணத்தை நான் எவ்வளவாய் ஆசிக்கிறேன்! நாளெல்லாம் அதுவே என் தியானம்.”—சங்கீதம் 119:97, தி.மொ.
நியாயப்பிரமாணத்தைத் தவறான முறையில் பயன்படுத்தினது
10. பேரளவில் மோசேயின் நியாயப்பிரமாணத்தை யூதர்கள் எவ்வாறு கருதினார்கள்?
10 அப்படியானால், இஸ்ரவேல் ஜனம் மோசேயின் நியாயப்பிரமாணத்தைப் பெரும்பாலும் மதியாமற்போனது எவ்வளவாய் வருந்தத்தக்கது! அந்த ஜனங்கள் நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள், அதை அசட்டை செய்தார்கள் அல்லது அதைப்பற்றி மறந்துபோனார்கள். மற்ற தேசங்களின் அருவருப்பான மத பழக்கவழக்கங்களைக்கொண்டு, தூய்மையான வணக்கத்தை அவர்கள் மாசுபடுத்தினார்கள். (2 இராஜாக்கள் 17:16, 17; சங்கீதம் 106:13, 35-38) மற்ற வழிகளிலுங்கூட நியாயப்பிரமாணத்தை அவர்கள் அவமாக்கினார்கள்.
11, 12. (அ) எஸ்றாவின் நாட்களுக்குப் பின்பு, மதத்தலைவர்களின் குழுக்கள் எவ்வாறு கேடு விளைவித்தன? (பெட்டியைக் காண்க.) (ஆ) ‘நியாயப்பிரமாணத்தைச் சுற்றி வேலியிடுவது’ அவசியமென பூர்வ ரபீக்கள் ஏன் உணர்ந்தனர்?
11 நியாயப்பிரமாணத்தைப் போதிப்போராகவும் பாதுகாப்போராகவும் உரிமை பாராட்டினவர்களாலேயே அதற்கு மிக மோசமான கேடு விளைவிக்கப்பட்டது. பொ.ச.மு. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்த, உண்மையுள்ள வேதபாரகரான எஸ்றாவின் நாட்களுக்குப் பின்பு இது நடந்தது. தூய்மைகெடுக்கும் மற்ற தேசங்களின் செல்வாக்குகளுக்கு எதிராக எஸ்றா கடுமையாய்ப் போராடி, நியாயப்பிரமாணத்தை வாசிப்பதையும் போதிப்பதையும் வலியுறுத்தினார். (எஸ்றா 7:10, தி.மொ.; நெகேமியா 8:5-8) நியாயப்பிரமாண போதகர்களில் சிலர், எஸ்றாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோராக உரிமை பாராட்டி, “பெரிய ஜெபாலயம்” என்று சொல்லப்பட்ட ஒன்றை உருவாக்கினார்கள். “நியாயப்பிரமாணத்தைச் சுற்றி வேலியிடு,” என்ற கட்டளை அதன் கூற்றுகளில் ஒன்றாக இருந்தது. நியாயப்பிரமாணம் மதிப்புமிகுந்த ஒரு தோட்டத்தைப்போல் இருந்ததென்று, இந்தப் போதகர்கள் விவாதித்தனர். அதன் பிரமாணங்களை மீறுவதன்மூலம் இந்தத் தோட்டத்தில் ஒருவரும் வரம்புகடந்து நுழையாதபடி மேலுமான பிரமாணங்களை, “வாய்மொழியான நியாயப்பிரமாணத்தை” அவர்கள் உண்டாக்கினார்கள்; எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தை மீறும் அத்தகைய தவறுக்கு நெருங்கி வராதபடி மக்களைத் தடுப்பதற்கு அவ்வாறு செய்ததாக விவாதித்தனர்.
12 யூதத் தலைவர்கள் இவ்வாறு உணர்ந்தது நியாயமானதே என சிலர் ஒருவேளை விவாதிக்கலாம். எஸ்றாவின் நாட்களுக்குப் பின்பு, யூதர்கள் அந்நிய வல்லரசுகளால், முக்கியமாய் கிரேக்க வல்லரசால் ஆளப்பட்டனர். கிரேக்க தத்துவ மற்றும் கலாச்சார செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதற்கு, மதத் தலைவர்களாலாகிய குழுக்கள் யூதருக்குள் எழும்பின. (பக்கம் 10-ல் உள்ள பெட்டியைக் காண்க.) காலப்போக்கில் இந்தக் குழுக்களில் சில, நியாயப்பிரமாணத்தைப் போதிப்பவையாக லேவிய ஆசாரியத்துவத்துக்கு போட்டியாய் வந்து, மிதமிஞ்சிப் போகவும் செய்தன. (மல்கியா 2:7-ஐ ஒப்பிடுக.) பொ.ச.மு. 200-க்குள், வாய்மொழியான பிரமாணத்தின் தொகுதி, யூத வாழ்க்கைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. முதலில் இந்தப் பிரமாணங்கள், எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்துக்குச் சமமாகக் கருதப்படாதபடி, எழுதப்படக்கூடாதென்று இருந்தன. ஆனால் படிப்படியாக, மனித சிந்தனை கடவுளுடைய சிந்தனைக்கு மேலாக வைக்கப்பட்டது, இவ்வாறாக, முடிவில் இந்த “வேலி” பாதுகாக்கும்படி அது கருதப்பட்ட அந்தத் “தோட்டத்துக்கே” உண்மையில் சேதம் உண்டாக்கியது.
பரிசேயக்கொள்கை செய்த தூய்மைக்கேடு
13. எவ்வாறு யூத மதத் தலைவர்கள், பல விதிமுறைகளை உண்டாக்குவதை நியாயம் என்பதுபோல் காணச் செய்தனர்?
13 டோரா, அல்லது மோசேயின் நியாயப்பிரமாணம், பரிபூரணமாக இருந்ததால், எழும்பக்கூடிய ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு பதிலை அது கொண்டிருக்க வேண்டும் என்று ரபீக்கள் விவாதித்தனர். இந்தக் கருத்து உண்மையில் பயபக்திக்குரியதாக இல்லை. உண்மையில் இது, எல்லா வகையான பிரச்சினைகளின்பேரிலும்—சில தனிப்பட்டவையும், மற்றவை வெறும் அற்பமானவையுமான பிரச்சினைகளின்பேரிலும்—விதிமுறைகளுக்கு, கடவுளுடைய வார்த்தையே ஆதாரமாயிருந்ததாகத் தோன்ற செய்யும்படி, அந்த ரபீக்கள் சாமர்த்தியமாக மனித நியாய விவாதத்தைப் பயன்படுத்த அவர்களுக்குத் தவறான சலுகையளித்தது.
14. (அ) புறஜாதியாரிலிருந்து விலகியிருக்க வேண்டும் என்ற வேதப்பூர்வ கட்டளைகளை, வேதப்பூர்வமல்லாத மட்டுக்குமீறிய அளவுக்கு யூதத் தலைவர்கள் எவ்வாறு விரிவாக்கினர்? (ஆ) ரபீக்களின் விதிமுறைகள் யூத ஜனங்களை, புறமத செல்வாக்குகளிலிருந்து பாதுகாக்கத் தவறினவென்று எது காட்டுகிறது?
14 மறுபடியும் மறுபடியுமாக அந்த மதத் தலைவர்கள் வேத கட்டளைகளை எடுத்து, அவற்றை மட்டுக்குமீறிய அளவுகளுக்கு விரிவுபடுத்தினர். உதாரணமாக, மோசேயின் நியாயப்பிரமாணம் புறஜாதியாரிலிருந்து விலகியிருப்பதை ஊக்குவித்தது, ஆனால் ரபீக்களோவெனில், யூதர் சம்பந்தப்படாத எல்லாவற்றிற்கும் ஒருவகையான நியாயமற்ற வெறுப்பைப் பிரசங்கித்தனர். ஒரு யூதன் தன் ஆடுமாடுகளைப் புறஜாதியாரின் சத்திரத்தில் தங்கவிடக் கூடாது, ஏனெனில் புறஜாதியார் “மிருகப்புணர்ச்சி செய்வோராகச் சந்தேகிக்கப்படுகின்றனர்,” என்று அவர்கள் போதித்தனர். பிரசவவேதனைப்படும் புறஜாதிப் பெண்ணுக்கு உதவிசெய்ய ஒரு யூதப் பெண் அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் அதன்மூலமாக, “விக்கிரக வணக்கத்துக்காக ஒரு பிள்ளை பிறக்கும்படி உதவி செய்பவளாக” அவள் இருப்பாள். உடற்பயிற்சிக் கூடங்களைப் பற்றி ரபீக்கள் சரியாகவே சந்தேகமுடையோராக இருந்தபடியால், விளையாட்டுப் பயிற்சி சார்ந்த எல்லாவற்றிற்குமே அவர்கள் தடைவிதித்தார்கள். இவை யாவும் புறஜாதியாரின் நம்பிக்கைகளிலிருந்து யூதரைப் பாதுகாப்பதற்கு சிறிதேனும் உதவிசெய்யவில்லை என்று சரித்திரம் நிரூபிக்கிறது. உண்மையில் பரிசேயர்தாமே, ஆத்துமா அழியாதது என்ற கிரேக்க கோட்பாட்டைப் போதிப்போரானார்கள்!—எசேக்கியேல் 18:4.
15. சுத்திகரிப்பின்பேரிலும் முறைதகாப் புணர்ச்சியின்பேரிலும் கொடுக்கப்பட்ட பிரமாணங்களை யூத மதத் தலைவர்கள் எவ்வாறு புரட்டினர்?
15 சுத்திகரிப்புக்குரிய பிரமாணங்களையும் பரிசேயர் புரட்டினர். வாய்ப்பளிக்கப்பட்டால், சூரியனைத்தானேயும் பரிசேயர் சுத்திகரிப்பர் என்று சொல்லப்பட்டது. “மலஜலம் கழிப்பதில்” தாமதிப்பது மனிதனைத் தீட்டுப்படுத்தும் என்று அவர்களுடைய பிரமாணம் கூறியது! கைக்கழுவுவதும், எந்தக் கை முதலாவதாகக் கழுவப்பட வேண்டும், எவ்வாறு என்ற கட்டளைகளுடன், சிக்கலான ஓர் ஆசாரமாயிற்று. பெண்கள் முக்கியமாய் தூய்மையற்றவர்களாகக் கருதப்பட்டனர். மாம்ச உறவினர் எவரிடமும் “சேரலாகாது” என்ற வேதப்பூர்வக் கட்டளையின் (உண்மையில், முறைதகாப் புணர்ச்சிக்கு எதிரான ஒரு பிரமாணம்) ஆதாரத்தின்பேரில் ரபீக்கள், ஒரு கணவன் தன் மனைவிக்குப் பின்னால் நடக்கக்கூடாது; சந்தைக்கூடத்தில் அவளுடன் உரையாடக்கூடாது என்று கட்டளை விதித்தனர்.—லேவியராகமம் 18:6.
16, 17. வாராந்தர ஓய்வுநாள் அனுசரிப்புக்குரிய கட்டளையை, வாய்மொழியான பிரமாணம் எவ்வாறு விரிவாக்கினது மற்றும் அதன் விளைவென்ன?
16 முக்கியமாய், ஓய்வுநாள் பிரமாணத்துக்கு வாய்மொழியான பிரமாணம் செய்த ஆவிக்குரிய பரிகாசம் பரவலாக அறியப்பட்டுள்ளது. கடவுள் இந்த எளிய கட்டளையை இஸ்ரவேலுக்குக் கொடுத்தார்: வாரத்தின் ஏழாவது நாளில் எந்த வேலையும் செய்யாதீர்கள். (யாத்திராகமம் 20:8-11) எனினும், தடைசெய்யப்பட்ட வேலையை விவரித்து, ஏறக்குறைய 39 வெவ்வேறு வகைகளான அம்சங்களை வாய்மொழியான பிரமாணம் சேர்த்து விரிவாக்கினது; அவற்றில், ஒரு முடிச்சுப்போடுவது அல்லது அதை அவிழ்ப்பது, இரண்டு தையல்களைத் தைப்பது, இரண்டு எபிரெய எழுத்துக்களை எழுதுவது போன்றவையும் இருந்தன. பின்பு இந்த வேலை வகைகள் ஒவ்வொன்றுக்கும் முடிவற்ற மேலுமான கட்டுப்பாட்டு விதிகள் கொடுக்கப்பட்டன. எந்த முடிச்சுகள் தடைசெய்யப்பட்டன, எவை அனுமதிக்கப்பட்டன? இந்தக் கேள்விகளுக்கு வாய்மொழியான பிரமாணம், நியாயமற்ற விதிகளைக் கொண்டு பதிலளித்தது. சுகப்படுத்துவது தடைசெய்யப்பட்ட வேலையாகக் கருதப்பட்டது. உதாரணமாக, ஓய்வுநாளில், உடைந்த உறுப்புகளை இணைப்பதும் தடைசெய்யப்பட்டது. பல்வலியுள்ள ஒருவன், தன் உணவுக்குச் சுவையளிக்கக் காடியைப் பயன்படுத்தலாம், ஆனால் தன் பற்களின் வழியாக அந்தக் காடியை அவன் உறியக் கூடாது. அது அவனுடைய பல்லைச் சுகப்படுத்திவிடக்கூடுமே!
17 மனிதன் உண்டாக்கிய நூற்றுக்கணக்கான கட்டளைகளின் கீழ் புதைந்துவிட்டதாய், பெரும்பாலான யூதர்களைப் பொறுத்தமட்டில், ஓய்வுநாள் பிரமாணம் அதன் ஆவிக்குரிய அர்த்தத்தை இழந்துவிட்டது. ‘ஓய்வுநாளுக்கு ஆண்டவரான’ இயேசு கிறிஸ்து, ஓய்வுநாளில், கண்களைக் கவர்ந்து இருதயத்தை மகிழ்வித்த அற்புதங்களை நடப்பித்தபோது, வேதபாரகருடைய மற்றும் பரிசேயருடைய மனம் கனிவிக்கப்படவில்லை. அவர்களுடைய விதிகளை அவர் அசட்டை செய்ததாகத் தோன்றினதன்பேரிலேயே கவனமுடையோராக இருந்தனர்.—மத்தேயு 12:8, 10-14.
பரிசேயரின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுதல்
18. மோசேயின் நியாயப்பிரமாணத்துடன் வாய்மொழியான பிரமாணங்களையும் பாரம்பரியங்களையும் கூட்டினதன் பாதிப்பு என்னவாக இருந்தது? உதாரணத்தைக்கொண்டு விளக்குங்கள்.
18 கப்பலின் உடற்பகுதியின்மீது ஒட்டிக்கொள்ளும் அலசிகளைப்போல் (barnacles), மேலுமாகக் கூட்டப்பட்ட இந்தப் பிரமாணங்களும் பாரம்பரியங்களும், மோசேயின் நியாயப்பிரமாணத்துடன் ஒட்டப்பட்டவையாயின என்று நாம் சுருக்கமாகச் சொல்லலாம். கப்பலின் சொந்தக்காரர், தொல்லைதரும் இந்த உயிரினங்களைத் தன் கப்பலிலிருந்து செதுக்கி நீக்குவதற்கு மிகுந்த நேரத்தைச் செலவிட்டு முயற்சியெடுக்கிறார். ஏனெனில், அவை அந்தக் கப்பலின் வேகத்தைக் குறைத்து, துருப்பிடிப்பதைத் தடுக்கும் அதன் பெய்ன்ட்டை அழித்துப்போடுகின்றன. அவ்வாறே, இந்த வாய்மொழியான பிரமாணங்களும் பாரம்பரியங்களும் நியாயப்பிரமாணத்தைப் பாரமானதாக்கி, அதைத் தவறாகப் பயன்படுத்திக் கெடுப்பதற்கு வழிவகுத்தன. எனினும், அதைச் சாராத அத்தகைய புறம்பான பிரமாணங்களை நீக்கிப்போடுவதற்குப் பதிலாக, அந்த ரபீக்கள் அவற்றோடு மேலுமதிகத்தைத் தொடர்ந்து கூட்டிக்கொண்டிருந்தனர். நியாயப்பிரமாணத்தை நிறைவேற்றுவதற்கு மேசியா வந்த காலத்திற்குள்ளாக, “அலசிகள்” அந்தக் “கப்பலில்” அவ்வளவு மிக கெட்டியாய் ஒட்டிக்கொண்டிருந்ததனால் அது பெரும்பாலும் மிதக்க முடியாத நிலையிலிருந்தது! (நீதிமொழிகள் 16:25-ஐ ஒப்பிடுக.) நியாயப்பிரமாண உடன்படிக்கையைப் பாதுகாப்பதற்கு மாறாக, இந்த மதத் தலைவர்கள் அதை மீறும் மடமைக்கே தங்களை உட்படுத்தினர். அப்படியானால், அவர்களுடைய கட்டளைகளாலாகிய “வேலி” ஏன் தோல்வியுற்றது?
19. (அ) ‘நியாயப்பிரமாணத்துக்குச் சுற்றியிருந்த வேலி’ ஏன் தோல்வியடைந்தது? (ஆ) அந்த யூத மதத் தலைவர்களுக்கு உண்மையான விசுவாசம் இருக்கவில்லையென எது காட்டுகிறது?
19 தூய்மைக்கேட்டுக்கு எதிரான போர், சட்டப்புத்தகங்களின் பக்கங்களில் அல்ல, இருதயத்தில் செய்யப்படுகிறதென்பதைப் புரிந்துகொள்ள அந்த யூத மதத் தலைவர்கள் தவறினர். (எரேமியா 4:14) வெற்றிக்கு திறவுகோல் அன்பே—யெகோவாவின்பேரிலும் அவருடைய பிரமாணங்கள் மற்றும் நீதியுள்ள நியமங்களின்பேரிலும் அன்பு. இத்தகைய அன்பு, யெகோவா வெறுப்பவற்றிற்கு, அதைப்போன்ற வெறுப்பை உண்டாக்குகிறது. (சங்கீதம் 97:10; 119:104) இவ்வாறு அன்பினால் நிரப்பப்பட்டிருக்கிற இருதயத்தை உடையோர், இந்தத் தூய்மைக்கெட்ட உலகத்தில், யெகோவாவின் பிரமாணங்களுக்கு உண்மையுள்ளோராக நிலைத்திருக்கின்றனர். அத்தகைய அன்பை முன்னேற்றுவித்து தூண்டுவிக்கும்படி, ஜனங்களுக்குப் போதிப்பதற்குரிய பெரும் சிலாக்கியம் அந்த யூத மதத் தலைவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஏன் அவ்வாறு செய்யத் தவறினர்? அவர்களுக்கு விசுவாசம் இல்லையெனத் தெரிகிறது. (மத்தேயு 23:23, NW, அடிக்குறிப்பு) உண்மையுள்ள மனிதரின் இருதயங்களில் யெகோவாவின் ஆவி செயல்படும் வல்லமையில் அவர்களுக்கு விசுவாசம் இருந்திருந்தால், மற்றவர்களின் வாழ்க்கையின்பேரில் விடாக்கண்டிப்பான கட்டுப்பாட்டைச் செய்வதற்கான தேவையை அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்கள். (ஏசாயா 59:1; எசேக்கியேல் 34:4) விசுவாசமில்லாதவர்களாக, அவர்கள், விசுவாசம் அளிக்கவில்லை; மனிதனால் உண்டாக்கப்பட்ட கட்டளைகளைக்கொண்டு ஜனங்கள்மீது பாரங்களைச் சுமத்தினார்கள்.—மத்தேயு 15:3, 9; 23:4.
20, 21. (அ) பாரம்பரியத்தோடு ஒன்றிய மனப்போக்கு யூத மதத்தின்பேரில் பொதுவாக என்ன விளைவை உண்டாக்கியது? (ஆ) யூத மதத்துக்கு சம்பவித்ததிலிருந்து என்ன பாடத்தை நாம் கற்றுக்கொள்கிறோம்?
20 அந்த யூதத் தலைவர்கள் அன்பை முன்னேற்றுவிக்கவில்லை. அவர்களுடைய பாரம்பரியங்கள், வெளித்தோற்றத்துக்காக இயந்திரத் தன்மையான கீழ்ப்படிதலுடன், மேற்போக்கானவற்றில் கவனம் ஊன்றப்பட்ட ஒரு மதத்தை உண்டாக்கின. அது பாசாங்குத்தனத்தைப் பெருக்கி வளர்க்கும் செழிப்பான இடமாக இருந்தது. (மத்தேயு 23:25-28) அவர்களுடைய கட்டளைகள் மற்றவர்களை நியாயந்தீர்ப்பதற்கு எண்ணற்ற காரணங்களை அளித்தன. இவ்வாறு அந்த அகந்தையான, ஆதிக்கப்பிரியர்களான பரிசேயர்கள், இயேசு கிறிஸ்துவையே குற்றங்கூறுவதில் நியாயமுள்ளவர்களாக உணர்ந்தனர். நியாயப்பிரமாணத்தின் முக்கியமான நோக்கத்தை அவர்கள் மறந்து, ஒரே உண்மையான மேசியாவை ஏற்காமல் தள்ளிவிட்டனர். இதன் விளைவாக, அந்த யூத ஜனத்துக்கு அவர் இவ்வாறு சொல்ல வேண்டியதாயிற்று: “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.”—மத்தேயு 23:38; கலாத்தியர் 3:23, 24.
21 நமக்கு என்ன பாடம் உள்ளது? விடாக்கண்டிப்பான, பாரம்பரியத்தோடு ஒன்றிய மனப்போக்கு, யெகோவாவின் தூய்மையான வணக்கத்தை முன்னேற்றுவிப்பதில்லை என்பது தெளிவாயிருக்கிறது! ஆனால் இது, இன்று யெகோவாவின் வணக்கத்தார், பரிசுத்த வேதாகமத்தில் முக்கியமாக குறிக்கப்பட்டிருந்தால் தவிர வேறு எந்த விதிமுறைகளையும் உடையோராக இருக்கக்கூடாதென்று பொருள்படுகிறதா? இல்லை. முழுமையான பதிலுக்கு, இயேசு கிறிஸ்து, ஒரு புதிய மற்றும் மேம்பட்ட பிரமாணத்தைக் கொண்டு மோசேயின் நியாயப்பிரமாணத்தை எவ்வாறு மாற்றீடு செய்தார் என்பதை நாம் அடுத்தபடியாக ஆலோசிக்கலாம்.
[அடிக்குறிப்பு]
a உண்மைதான், தற்கால தேசங்களின் சட்ட ஒழுங்குமுறைகளுடன் ஒப்பிட அது இன்னும் சொற்ப எண்ணிக்கையானதாகவே உள்ளது. உதாரணமாக, 1990-ன் தொடக்கத்துக்குள், ஐக்கிய மாகாணங்களின் கூட்டரசு சட்டங்கள், 1,25,000-க்கும் மேலான பக்கங்களை நிரப்பின, ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புதிய சட்டங்கள் அவற்றோடு கூட்டப்படுகின்றன.
நீங்கள் விளக்க முடியுமா?
◻ சிருஷ்டிப்பு முழுவதும் எவ்வாறு கடவுளுடைய பிரமாணத்தால் ஆளப்படுகிறது?
◻ மோசேயின் நியாயப்பிரமாணத்தினுடைய முக்கிய நோக்கம் என்னவாக இருந்தது?
◻ மோசேயின் நியாயப்பிரமாணம் இரக்கத்தையும் பரிவையும் அறிவுறுத்தியதென்று எது காட்டுகிறது?
◻ மோசேயின் நியாயப்பிரமாணத்தோடு எண்ணற்ற விதிமுறைகளை யூத மதத் தலைவர்கள் ஏன் கூட்டினர், அதன் விளைவென்ன?
[பக்கம் 10-ன் பெட்டி]
யூத மதத் தலைவர்கள்
வேதபாரகர்: அவர்கள் தங்களை எஸ்றாவின் வாரிசுகளாகவும் நியாயப்பிரமாணத்தை விளக்குவோராகவும் கருதினர். யூதரின் ஒரு சரித்திரம் (A History of the Jews) என்ற ஒரு புத்தகத்தின்படி, “வேதபாரகரில் எல்லாரும் பெருந்தன்மையான ஆட்களல்லர், பிரமாணத்திலிருந்து, மறைந்திருக்கும் அர்த்தங்களை வெளிக்கொண்டுவர அவர்கள் செய்த முயற்சிகள் அர்த்தமற்ற விதிமுறைகளாகவும் மடமையான கட்டுப்பாடுகளாகவும் அடிக்கடி சீர்கெட்டன. இவை, விரைவில் இரக்கம் காட்டாத கொடுங்கோலனாக ஆன பழக்கவழக்கத்தால் உறுதிசெய்யப்பட்டன.”
ஹெஸிடிம்: இந்தப் பெயரின் பொருள் “பக்தியுள்ளவர்கள்” அல்லது “பரிசுத்தவான்கள்” என்பதாகும். இவர்கள், ஏறக்குறைய பொ.ச. 200-ன்போது ஒரு வகுப்பாராக முதல் குறிக்கப்பட்டனர்; அரசியல் சம்பந்தமாக வல்லமைவாய்ந்தவர்களாகவும், கிரேக்க செல்வாக்கின் கொடுங்கோன்மைக்கு எதிராக நியாயப்பிரமாணத்தின் தூய்மையை விடாப்பிடியராகப் பாதுகாப்பவர்களாகவும் இருந்தனர். இந்த ஹெஸிடிம் மூன்று வகுப்பாராகப் பிரிந்தனர்: பரிசேயர், சதுசேயர், மற்றும் எஸ்ஸீன்கள்.
பரிசேயர்: “பிரிக்கப்பட்டவர்கள்” அல்லது “பிரிவினையாளர்” என்பதற்கான சொற்களிலிருந்து இந்தப் பெயர் வருவிக்கப்பட்டதாக அறிஞர்கள் சிலர் நம்புகின்றனர். புறஜாதியாரிலிருந்து பிரிந்திருக்க வேண்டுமென்ற தங்கள் கடும் முயற்சியில் அவர்கள் மெய்யாகவே விடாப்பிடியராக இருந்தனர். ஆனால், வாய்மொழியான பிரமாணத்தின் உட்சிக்கல்களைப்பற்றி அறியாமையிலிருந்த, யூத பொதுமக்களிலிருந்தும் தங்கள் வகையினர் தனிப்பட்டவர்களாக—மேம்பட்டவர்களாக—இருப்போராகவும் கண்டனர். பரிசேயர்களைக் குறித்து சரித்திராசிரியர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “பொதுவாக நோக்குகையில், அவர்கள், சடங்குமுறைகளைக் கைக்கொள்வதன் மிக நுட்ப குறிப்புகளுக்கும் சட்ட உருக்கொடுத்து பொருள் தொகுத்துரைத்து, ஆட்களைச் சிறு பிள்ளைகளைப்போல் நடத்தினார்கள்.” மற்றொரு அறிஞர் இவ்வாறு சொன்னார்: “பரிசேய மதம், எல்லா சூழ்நிலைமைகளையும் உள்ளடக்கும் ஒரு பெருந்திரளான சட்ட விதிகளை உண்டாக்கினது, அற்பமானவற்றையும் தவிர்க்கமுடியாத விளைவுகளுடன் அவை பெரிதாக்கிக் காட்டின. இவ்வாறு செய்ததில் அவர்கள், முக்கியமான காரியங்களைக் கவனியாது விட்டனர்.”
சதுசேயர்: உயர்குடியாட்சியுடனும் ஆசாரியத்துவத்துடனும் நெருங்க இணைக்கப்பட்டோராயிருந்த ஒரு தொகுதியினர். எழுதப்பட்ட நியாயப்பிரமாணத்தின் நேர்மைக்குரிய தகைமையை, வாய்மொழியான பிரமாணம் உடையதாக இல்லை என்று சொல்லி, வேதபாரகரையும் பரிசேயரையும் இவர்கள் மும்முரமாய் எதிர்த்தனர். தங்கள் விவாதப் போராட்டத்தில் அவர்கள் தோல்வியடைந்தனர் என்பது மிஷ்னாவால்தானே தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது: “[எழுதப்பட்ட] நியாயப்பிரமாண வார்த்தைகளை [கைக்கொள்வதைப்] பார்க்கிலும், வேதபாரகரின் வார்த்தைகளுக்கே [கைக்கொள்வதற்கு] மேலுமதிக கண்டிப்பு பொருந்துகிறது.” வாய்மொழிப் பிரமாணத்தின்பேரில் மிகுந்த விளக்கவுரையைச் சேர்த்த, டால்முட், பின்னால் இவ்வாறு சொல்லுமளவுக்கு மீறிச் சென்றுவிட்டது: “டோராவின் வார்த்தைகளைப் பார்க்கிலும் . . . வேதபாரகரின் வார்த்தைகள் அதிக அருமையானவை.”
எஸ்ஸீன்கள்: பிரிக்கப்பட்ட சமுதாயங்களில் இவர்கள் தங்களை ஒதுக்கிவைத்துக்கொண்ட துறவிகளாலாகிய ஒரு தொகுதியினர். தி இன்டெர்பிரெட்டர்ஸ் பைபிள் டிக்ஷ்னரி குறிப்பிடுவதன்படி, இந்த எஸ்ஸீன்கள் பரிசேயரைப் பார்க்கிலுங்கூட அதிக ஒதுக்கித்தள்ளும் பாங்குடையவர்கள், “சில சமயங்களில் பரிசேயரைத்தாமே மிஞ்சிவிடக்கூடியவர்கள்.”
[பக்கம் 8-ன் படம்]
நட்சத்திரக் கூட்டங்களை ஆளும் பிரமாணங்களைப் பற்றி யோபின் பெற்றோர் அவருக்குக் கற்பித்திருக்கலாம்