ஈக்குவிடோரியல் கினீயில் வளர்ச்சிக்குரிய ஒரு சூழல்
ஒரு பயணியின் விமானம், ஈக்குவிடோரியல் கினீ சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்குகையில், வளம் ததும்பிய வளர்ச்சி என்பதே அந்தப் பயணியின் மனதில் ஏற்படும் முதல் அபிப்பிராயமாக இருக்கிறது. விமான ஓடுபாதை, விமான நிலைய கட்டடங்களைக் குட்டையாகத் தோன்றச் செய்யும் கம்பீரமான தோற்றமுள்ள மரங்களால் சூழப்பட்டிருக்கிறது. மத்திப 80-களில், மிகுதியான மழை மற்றும் வருடம் முழுவதுமாகக் காணப்படும் வெப்பநிலையால் தூண்டப்பட்டு, கடற்கரையிலிருந்து மலை உச்சிகள் வரையாக வளம் நிறைந்த தாவர வளர்ச்சி செழித்தோங்குகிறது.
ஈக்குவிடோரியல் கினீயில் வேறு வகையான விறுவிறுப்பான வளர்ச்சியும் நடந்துவருகிறது, ‘கடவுள் கொடுக்கிற வளர்ச்சி.’ (கொலோசெயர் 2:18, NW) பிலிப்புவின் உதவியை நாடிய எத்தியோப்பிய அதிகாரியைப் போலவே, இங்கிருக்கிற அநேகர் வேதவசனங்களைப் புரிந்துகொள்ள ஆவலோடு இருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 8:26-39) தெருவில் யாராவது ஒருவர், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரை அணுகி ஒரு பைபிள் படிப்பு நடத்தும்படி கேட்பது அபூர்வமானதாக இல்லை. ஈக்குவிடோரியல் கினீயில் இருக்கும் சுமார் 325 சாட்சிகள் ஓராயிரத்துக்கும் அதிகமான பைபிள் படிப்புகளை நடத்துகிறார்கள்.
ஆரம்ப நாட்களில் விதை விதைத்தல்
ஆப்பிரிக்காவில் உள்ளதிலேயே மிகவும் சிறிய நாடாகிய ஈக்குவிடோரியல் கினீ, நைஜீரியாவுக்கும் காமரூனுக்கும் தெற்கே அமைந்திருக்கிறது. (மேப்பைப் பார்க்கவும்.) கோகோ தோட்டங்களில் வேலை தேடி வந்த நைஜீரிய சாட்சிகளால் இங்கு நற்செய்தி முதலில் கொண்டுவரப்பட்டது. ஆங்கிலம் பேசும் சபைகள் பல உருவாக்கப்பட்டபோதிலும், இந்தச் சகோதரர்கள் நைஜீரியாவுக்குத் திரும்பிச் செல்ல வேண்டியதாக இருந்தபோது அவை பின்னர் கலைக்கப்பட்டன. என்றபோதிலும், 1968-ல் இந்த நாட்டிற்குச் சுதந்திரம் அளிக்கப்பட்டதும், உவாட்ச்டவரைச் சேர்ந்த மூன்று மிஷனரி தம்பதிகள் இங்கு அனுப்பப்பட்டனர். அரசியல் பிரச்சினைகள் காரணமாக அவர்களால் அங்கு அதிக காலம் இருக்க முடியவில்லை, ஆனால் அவர்களுடைய சாட்சிகொடுத்தல் சிறந்த பலன்களை அளித்தது.
மிஷனரிகளில் ஒருவராகிய ஸான்டியாகோ, உள்ளூர்வாசிகளால் சூப்பர்மேன் என்று அழைக்கப்பட்ட நெட்டையான, உடல் தசையுறுதியுள்ள ஒரு மனிதனாகிய ப்வெனவென்டூரா என்பவரைச் சந்தித்தார். அவர் பைபிளை மதித்த, மதப்பற்றுள்ள ஒரு மனிதன், என்றாலும் கோபாவேசமான சுபாவமுள்ளவர். அவர் லேசாக அவமதிக்கப்பட்டாலே போதும்; ஒருவரை அடித்துவிடும்படி அது அவரைத் தூண்டிவிடும். ஒரு பாரில் அவர் கோபப்பட்டால், அங்கிருக்கிற அனைவரும் கலைந்துபோய்விடுவார்கள், அவருடைய அடிகளிலிருந்து தப்புவதற்காக ஜன்னல்கள் வழியாக ஏறிகூட வெளியே போய்விடுவார்கள். உண்மையில், அவர் ஸான்டியாகோ சொல்வதைக் கேட்டுக்கொண்டிருக்கையில், தான் சொன்ன காரியங்களுக்கு நம்பத்தக்க வேதப்பூர்வ சான்றை அவரால் அளிக்க முடியவில்லையென்றால் அவரை முரட்டுத்தனமாக அடித்துவிட உத்தேசித்தார். ‘சூப்பர்மேனை யாரும் ஏமாற்ற முடியாது,’ என்று அவர் தனக்குத்தானே சொல்லிக்கொண்டார். அவர் கேட்ட காரியங்களால், முக்கியமாக ஒரு பரதீஸான பூமியில் என்றென்றுமாக வாழும் நம்பிக்கையால் கவரப்பட்டார்; ஆகையால் ஒரு பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார்.
படிப்பு முன்னேறிக்கொண்டிருந்தபோது, பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கான ப்வெனவென்டூராவின் ஆசை அதிக பலமடைந்து வந்தது; மேலும் அப்படிப்பட்ட ஒரு பரிசைப் பெறுவதற்கு, தன் வாழ்க்கையைக் கடவுளுடைய தராதரங்களுக்கு இசைவாக அமைக்க வேண்டும் என்று அவர் கற்றறிந்தார். உண்மை கிறிஸ்தவர்கள் ‘தீமைக்குத் தீமை செய்ய’ கூடாது என்பதை உணர்ந்தவராய், அவர் தன் கோபத்தைக் கட்டுப்படுத்துவதற்காக ஊக்கமான முயற்சி எடுக்கத் தொடங்கினார்.—ரோமர் 12:17.
ஒரு நாள் ஒரு பாரில், வாடிக்கையாளர் ஒருவரின் க்ளாஸை இவர் தெரியாமல் தட்டிவிட்டபோது உண்மையான சோதனை ஏற்பட்டது. அந்த ஆள் கோபமடைந்து இவரை அடித்துவிட்டார். ஒரு தகராறு எழும்பும் என நினைத்து, அந்தப் பாரிலிருந்த மற்றவர்கள் உடனடியாகக் கலைந்துவிட்டார்கள். ஆனால் ப்வெனவென்டூரா சாந்தமாக இருந்து உடைந்த க்ளாஸுக்குப் பணத்தைக் கட்டிவிட்டு, அந்த ஆளுக்கு குடிப்பதற்கான பானத்தை வாங்கிக்கொடுத்து, தான் மோசமாக நடந்துகொண்டதற்காக மன்னிப்புக் கேட்டார். பைபிளைப் படிப்பது அப்பேர்ப்பட்ட மாற்றங்களை அவரில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அக்கம்பக்கத்தார் கண்டபோது, பலர் அவருடன் படிக்க மனமுள்ளவர்களாக இருந்தனர். ப்வெனவென்டூரா முழுக்காட்டுதல் பெறும்போது, அதற்குள் அவர் ஏற்கெனவே ஐந்து பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். கடந்த ஐந்து வருடங்களாக அவர் ஒரு மூப்பராக சேவை செய்திருக்கிறார்; இன்னும் மக்கள் அவரை சூப்பர்மேன் என்று அழைக்கிறார்கள் என்றாலும், இப்போது வேடிக்கையாகவே அவ்வாறு செய்கிறார்கள்.
“ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையோர்”
1970-களில் ஒருசில உள்ளூர் சாட்சிகள் தங்களால் முடிந்த அளவுக்கு தொடர்ந்து பிரசங்கிக்கவும் ஒன்றாக கூடிவரவும் செய்தார்கள். பின்னர், பல ஸ்பானிஷ் மிஷனரி தம்பதிகள் உதவி செய்யும்படி வந்தார்கள். ஈக்குவிடோரியல் கினீயில் 12 வருடங்களாக சேவை செய்து வந்த ஆன்ட்ரேஸ் போட்டேயா, அங்கு வந்து சேர்ந்ததும், அந்த மக்கள் எந்தளவுக்கு உண்மையிலேயே ‘ஆவிக்குரிய தேவையைக்குறித்து உணர்வுடையோராக’ இருந்தனர் என்பதால் தான் கவரப்பட்டதை நினைவுகூருகிறார். (மத்தேயு 5:3, NW) “அப்பேர்ப்பட்ட போற்றுதல் மனப்பான்மையுள்ள மக்களுடன் பைபிளைப் படிப்பது நிஜமாகவே இன்பகரமானதாய் இருந்திருக்கிறது,” என்கிறார் அவர்.
மேரி என்ற ஒரு ஸ்பானிஷ் சகோதரி, மாரீயா என்ற ஓரிளம் பெண்ணுடன் பைபிளைப் படித்தார்; தன்னுடைய பெற்றோராகிய ஃப்ரான்ஸிஸ்கோவும் ஃபாஸ்டாவும்கூட படிப்பதற்கு விருப்பப்படுவதாக அவள் கூறினாள். மேரி 15 படிப்புகளை நடத்திக்கொண்டிருந்ததாலும், மாரீயாவின் பெற்றோர் கொஞ்சம் தொலைவில் வசித்ததாலும், அவர் அவர்களைச் சந்திக்கச் செல்வதற்குள் பல வாரங்கள் கடந்துவிட்டன.
மேரியும் அவரது கணவனாகிய ஸேராஃபின்னும் கடைசியாக அந்தப் பெற்றோரைச் சந்திக்கையில், அவர்கள் ஏற்கெனவே நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்a புத்தகத்தையும் ஒரு பைபிளையும் வைத்திருந்தார்கள்; மேலும் படிக்கத் தொடங்குவதற்கு ஆவலாக இருந்தார்கள். ஆகவே அவர்கள் உடனடியாகத் தொடங்கிவிட்டார்கள். மாரீயாவின் பெற்றோர் படிக்கும் காரியங்களை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதை ஸேராஃபின் கவனித்தார். இரண்டாம் சந்திப்பில், இரண்டாம் அதிகாரத்தைப் படிக்கையிலும் அவ்வாறே நிகழ்ந்தது. “ஏறக்குறைய இரண்டு முழுக்காட்டப்பட்ட சாட்சிகளுடன் படிப்பதுபோல அது இருந்தது,” என்று ஸேராஃபின் நினைவுகூருகிறார். மூன்றாவது சந்திப்பில், படிக்கும் விஷயத்தை அவர்கள் அவ்வளவு நன்றாய் அறிந்திருந்ததாகத் தோன்றியதால், அவர்கள் உண்மையில் எவ்வளவு புரிந்துகொண்டார்கள் என்று தீர்மானிப்பதற்காக ஒரு கேள்வி-பதில் அமர்வை (session) வைக்கலாம் என்று ஸேராஃபின் ஆலோசனை கூறினார். ஃப்ரான்ஸிஸ்கோவும் ஃபாஸ்டாவும் முழு புத்தகத்தையும் தாங்களாகவே படித்திருந்தார்கள் என்பதாகக் கண்டுபிடித்தார்!
புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அவர்களுடைய அறிவு அவர்களை எப்படி பாதித்தது? அவர்கள் கற்றுக்கொண்டிருப்பவற்றிற்கு இசைவாக, ஆவியுலகத் தொடர்பு கூட்டங்களுக்குச் செல்வதை ஏற்கெனவே நிறுத்தியிருந்தார்கள்; மேலும் கத்தோலிக்க சர்ச்சுடன் அவர்களுக்கு இருந்த பிணைப்பை முறித்துவிட்டிருந்தார்கள். மேலுமாக, ஃபிரான்ஸிஸ்கோ புகைத்தலை நிறுத்தியிருந்தார், இரத்தம் சரியாக நீக்கப்படாத இறைச்சியை அவர்கள் இனியும் உண்பதில்லை. அவர்கள் கற்றிருந்த அனைத்தையும் பொருத்திப் பயன்படுத்தியது தெளிவாக இருந்ததால், அவர்களுடைய அறிவை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளத் தொடங்கும்படி அவர்களுக்கு உற்சாகம் அளிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் தங்கள் அயலாரிடம் பிரசங்கிக்கத் தொடங்கினார்கள். மூன்றே மாதங்களில், முழுக்காட்டுதல் பெற தகுதி பெற்றனர். தற்போது ஃபிரான்ஸிஸ்கோ ஒரு உதவி ஊழியராக இருக்கிறார்; அவர்களுடைய சிறந்த முன்மாதிரி மற்றும் பிரசங்கத்தில் அவர்களுடைய வைராக்கியத்தின் காரணமாக, அவர்களுடைய மகள்களில் மூவர் தற்போது சாட்சிகளாக இருக்கிறார்கள், இரண்டு மகன்கள் கூட்டங்களுக்குச் செல்கிறார்கள், வேறு ஆறு உறவினர்கள் படிக்கிறார்கள்.
முழுகாட்டுதல் பெற்றபின் அதிக காலம் செல்வதற்குள், தன்னுடைய சர்ச்சில் சாக்ரிஸ்டனாகப் பணியாற்றிய பக்திமிக்க கத்தோலிக்கராகிய பாப்லோவைச் சந்தித்தார் ஃப்ரான்ஸிஸ்கோ. பாதிரியார் வராதபோதெல்லாம் பாப்லோ பிரசங்கத்தைக் கொடுத்து வந்தார். சர்ச் அங்கத்தினர் ஒருவருக்கு சுகமில்லையென்றால், அவர் சந்திக்கச் சென்றார்; சர்ச்சுக்கு யாராவது வரவில்லையென்றால், உற்சாகமளிக்கும்படி பாப்லோ அவரைச் சந்திப்பார்; யாராவது ஒருவர் இறந்துவிட்டால், அந்தக் குடும்பத்துக்கு ஆறுதலளிப்பதற்காக தன்னால் இயன்றதை எல்லாம் அவர் செய்தார். புரிந்துகொள்ளத்தக்க விதமாகவே, அந்தத் திருச்சபை வட்டாரத்திலுள்ள அனைவராலும் பாப்லோ மிகவும் நேசிக்கப்பட்டார்.
பைபிள் பேரில் பாப்லோவுக்கு ஆழ்ந்த மதிப்பு இருந்ததால், ஃப்ரான்ஸிஸ்கோ அவரோடு ஒரு பைபிள் படிப்பைக் கொண்டிருக்க முன்வந்தபோது அதை உடனடியாக ஏற்றுக்கொண்டார். பைபிள் செய்தி எவ்வளவு நியாயமானது என்பதை பாப்லோ விரைவில் கண்டுகொண்டார்; ஒருசில படிப்புகளுக்குப் பின்னர், அவர் கற்றிருந்த வேதவசனங்களில் சிலவற்றை, நோய்வாய்ப்பட்ட சர்ச் அங்கத்தினர் ஒருவரைச் சந்திக்க செல்லும் அவருடைய “மேய்ப்பு சந்திப்புகள்” ஒன்றில் பயன்படுத்த தீர்மானித்தார். அதற்குப்பின் விரைவில், அவருடைய ஞாயிற்றுக்கிழமை பிரசங்கங்கள் ஒன்றில், கடவுளுடைய பெயராகிய யெகோவா என்பதைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விக்கிரகங்களை நாம் ஏன் பயன்படுத்தக்கூடாது என்பதையும் பற்றி பாப்லோ விவரித்தார்.
அவர் தயக்கமின்றி உடனடியாக சத்தியத்தை ஏற்றுக்கொண்டதால், அவருடைய சர்ச்சிலுள்ள மற்ற அங்கத்தினர்களும் அதேவிதமாக பிரதிபலிப்பார்கள் என்பதாக அவர் எதிர்பார்த்தார். ஆனால் பைபிள் அடிப்படையிலான இதுபோன்ற இரண்டோ மூன்றோ பிரசங்கங்களுக்குப் பின், அவர் அளித்துவந்த தகவலை மக்கள் விரும்பவில்லை என்பதை பாப்லோ கவனித்தார். ஆகவே அவர் சர்ச்சை விட்டுவிடவும் யெகோவாவின் சாட்சிகளோடு ஒழுங்காகக் கூட்டுறவுகொள்ளவும் தீர்மானித்தார். ஒருசில மாதங்களுக்குள் அவர் முழுக்காட்டுதல் பெற தகுதி பெற்றார்; தற்போது அவர் நற்செய்தியின் வைராக்கியமான பிரசங்கிப்பாளர். முழுநேரமாகப் பிரசங்கிக்க முடியவில்லை என்றாலும், அவர் தற்போது பத்து பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.
ஒன்றுகூடிவருவதன்மூலம் வளர்ச்சியை முன்னேற்றுவித்தல்
ஈக்குவிடோரியல் கினீயிலுள்ள சாட்சிகள், ஒன்றுகூடிவருவதை விட்டுவிடாமல் இருப்பதைப் பற்றிய பைபிளின் கட்டளையை முக்கியமானதாகக் கருதுகிறார்கள். (எபிரெயர் 10:25) 1994 முதல், சாட்சிகளின் வேலைக்கு மீண்டும் அரசால் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் கொடுக்கப்பட்டபோது, தகுந்த ராஜ்ய மன்றங்களை வாங்குவதில் சகோதரர்கள் ஆவலாக இருந்தனர். உண்மையில், பெரும்பாலான சபைகள் தங்கள் சொந்த மன்றங்களைக் கட்டியிருக்கின்றனர் அல்லது கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டங்களுக்கு ஆஜராகிறவர்களின் எண்ணிக்கை, அடிக்கடி, ராஜ்ய பிரஸ்தாபிகளைவிட இரண்டரை மடங்கு அதிகம் வரை எட்டும் மங்காமாவில், கூடுவதற்காக ஒரு பெரிய இடத்தைக் கட்டுவதற்காக சபை கடினமாக உழைத்து வந்திருக்கிறது. மங்காமாவிலுள்ள மற்ற மதங்கள் வழக்கமாக தங்கள் சர்ச்சுகளைக் கட்டுவதற்கு வேலையாட்களைக் கூலிக்கு அமர்த்துகின்றனர்; ஆகையால், உள்ளூர் சாட்சிகளின் வேலை கவனிக்கப்படாமல் போகவில்லை. கடினமாக உழைக்கும் இந்தப் பணியாளர்களுக்கு எவ்வளவு கூலி கொடுக்கிறார் என்று மூப்பர் ஒருவரிடம் கேட்கும்படி, இக்லீஸியா நுயேவா அப்போஸ்டோலிகா (புதிய அப்போஸ்தல சர்ச்) என்பதன் பாஸ்டர் ஒரு நாள் அங்கு சென்றார். தன்னுடைய சர்ச் அங்கத்தினர்களாக இருந்த கொத்தனார்களை வேலைக்கு அமர்த்தியிருந்தபோதிலும், வேலை மிகவும் மெதுவாக நடந்தது என்று அந்த பாஸ்டர் சொன்னார். ராஜ்ய மன்றத்தைக் கட்டிக்கொண்டிருந்தவர்களை அவர் கூலிக்கு அமர்த்திக்கொள்ள முடியுமா என்று அவர் யோசனை பண்ணினார். ஆனால் எல்லா சாட்சிகளும் இலவசமாக வேலை செய்கிறார்கள் என்று சொல்லப்பட்டதும் அவர் வாயடைத்துப் போய்விட்டார்.
ராஜ்ய மன்றத்திலிருந்து தொலைவில் வாழ்கிறவர்களுக்கு, கூட்டங்களுக்குச் செல்வது குறிப்பிடத்தக்க அளவு தியாகத்தைத் தேவைப்படுத்தக்கூடும். 1994-ல் முழுக்காட்டுதல் பெற்ற ஓர் இளைஞனாகிய க்வான், இந்த நிலைமையை எதிர்ப்பட்டார். காபோனில் அவர் சத்தியத்தைப் பற்றி கேள்விப்பட்டார்; அங்கு அவர் என்றும் வாழலாம் புத்தகத்தின் முதல் பாதியைப் படித்தார். பின்னர் அவர் ஈக்குவிடோரியல் கினீக்கு, மங்காமாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவிலிருந்த தன்னுடைய சொந்த கிராமத்துக்குத் திரும்பினார். படிப்பைத் தொடருவதற்கு இது அவருக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியது. ஆனால் அவர் ஊக்கம் தளரவில்லை. ஒவ்வொரு மாதமும், அவர் சைக்கிளில் மங்காமாவுக்கு எட்டு மணிநேர பயணத்தை மேற்கொண்டார்; அங்கு உள்ளூர் மூப்பர்களில் ஒருவராகிய ஸான்டியாகோ அவருடன் ஒரு படிப்பை நடத்தினார். அவன் ஒருசில நாட்கள் மங்காமாவிலேயே தங்கி, அங்கு தங்கும்போது மூன்று அல்லது நான்கு முறை படித்தார். இவ்வாறு அவர் படிப்பை முடித்து, முழுக்காட்டுதலுக்குத் தகுதி பெற முடிந்தது.
மற்ற கிறிஸ்தவர்களுடன் அவ்வளவு குறைவான கூட்டுறவைக் கொண்டிருந்தும், க்வான் எப்படி ஆவிக்குரிய விதத்தில் தன்னை பலமுள்ளவராக வைத்துக்கொள்கிறார்? எல்லாவற்றிற்கும் மேலாக, நற்செய்தியின் வைராக்கியமான பிரசங்கிப்பாளராக இருப்பதன் மூலமே. தன்னுடைய கிராமத்திலுள்ள எல்லா மக்களிடமும் அவர் பிரசங்கித்திருக்கிறார்; முழுக்காட்டுதல் எடுக்கும்போது, அவர் 13 பைபிள் படிப்புகளை நடத்திக்கொண்டிருந்தார். அவருடைய மாணவர்களில் ஆறு பேர் அவருடைய முழுக்காட்டுதலைப் பார்ப்பதற்காக மங்காமாவில் நடந்த விசேஷ மாநாட்டு தினத்திற்கு அவருடன் சென்றனர். அவருடைய பகுதியிலுள்ள அக்கறை காண்பிக்கிறவர்களிடம் அவர் தற்போது ஓர் ஒழுங்கான காவற்கோபுர படிப்பை நடத்துகிறார்; வழக்கமாக சுமார் 20 பேர் அங்கு ஆஜராகிறார்கள்.
விதைக்குப் பொறுமையாக நீர்ப்பாய்ச்சுதல்
எல்லா ஆவிக்குரிய வளர்ச்சியும் விரைவாக நடப்பதில்லை. சில சமயங்களில், அந்த விதை முடிவில் கனிகொடுப்பதைப் பார்ப்பதற்கு அதிகப்படியான பொறுமை தேவைப்படுகிறது. 1984-ல் முதல்முதலாக நற்செய்தியைக் கேட்ட பாக்காவின் விஷயத்தில் இது உண்மையாக இருந்தது; ஏடீட்டா என்ற ஒரு பயனியர் சகோதரி, அவருக்கு சந்தையில் வைத்து சாட்சிகொடுத்தார். ஏடீட்டா அதற்கடுத்த வாரம் பாக்காவை அவருடைய வீட்டில் சந்தித்தபோது, பாக்கா ஒரு பைபிள் படிப்புக்கு ஒத்துக்கொண்டார். அவர் அதிகப்படியான முன்னேற்றத்தைச் செய்யாதபோதிலும், பாக்காவிடம் நல்ல பண்புகள் இருப்பதை உணர்ந்ததால் ஏடீட்டா விடாமல் தொடர்ந்தார். “அவர் செம்மறியாட்டைப் போன்ற ஒருவராகத் தோன்றினார்; அவருடைய இருதயத்தை யெகோவா திறக்க வேண்டும் என்று நான் ஜெபித்தேன்,” என்று ஏடீட்டா விவரிக்கிறார்.
பாக்கா நான்கரை வருடங்களாக தன் படிப்பை விட்டுவிட்டுத் தொடர்ந்தார்; ஆனால் இன்னும் மிகக் குறைந்த முன்னேற்றத்துடனேயே. ஆகவே அவர்கள் என்றும் வாழலாம் புத்தகத்தை முடித்தபோது, சத்தியத்தை முக்கியமானதாகக் கருதுவதன் முக்கியத்துவத்தைக் குறித்து பாக்காவிடம் வெளிப்படையாகப் பேசினார் ஏடீட்டா. பாக்காவின் இருதயத்தைச் சென்றெட்டுவதற்கான முயற்சியில், ஏடீட்டா கண்ணீர்விடவும் செய்தார்.
“அந்த மனமார்ந்த ஆலோசனை உண்மையிலேயே என்னை நெகிழ்வித்தது,” என்று நினைவுகூருகிறார் பாக்கா. “அப்போது முதல் என் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யத் தொடங்கினேன். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்துகொண்டேன்; அதே வருடம் நான் முழுக்காட்டப்படாத ஒரு பிரஸ்தாபியானேன். கடைசியாக நான் முழுக்காட்டுதல் பெற்ற நாளே, என் வாழ்விலேயே மிகவும் மகிழ்ச்சியான நாளாக இருந்தது!” பாக்காவின் இப்போதைய ஆர்வம் அவரது முன்னாள் ஆர்வமின்மைக்கு முரணானதாக இருக்கிறது. இப்போது அவர் 13 பைபிள் படிப்புகளை நடத்துகிறார்; விரைவான முன்னேற்றத்தைக் காண்பிக்காதவர்களிடம் அவர் நிச்சயமாகவே பொறுமையாக இருக்கிறார்.
தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள மக்களுக்கு உதவுதல்
பைபிள் தராதரங்களுக்கு இசைவாக வாழ்வதன்மூலம், ஈக்குவிடோரியல் கினீயிலுள்ள யெகோவாவின் சாட்சிகள், நேர்மைக்கும் கண்ணியத்திற்கும் பெயர்பெற்றவர்களாய் இருக்கிறார்கள். தெளிவாகவே அவர்களுடைய நடத்தையால் கவரப்பட்டிருந்த ஒருவர், பாட்டா சபையின் மூப்பர் ஒருவரை அணுகி இவ்வாறு கேட்டார்: “உங்களிடம் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம் இருக்கிறதா?b உலகப்பிரகாரமான ஓர் ஆளாக இருப்பது எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக ஆக விரும்புகிறேன்!”
மாலாபோ சபையில் ஒரு உதவி ஊழியராக இருக்கிற ஆன்டோனியோ, உலகப்பிரகாரமான ஒருவர் ஒரு சாட்சியாக மாறியதற்கு ஒரு சிறந்த உதாரணம். அவர் பைபிளைப் படித்ததற்கு முன்பு, ஒழுக்கக் கட்டுப்பாடற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடிகாரம் சரிசெய்பவராக அவர் சம்பாதித்ததில் அதிகப்படியான பணத்தை மது அருந்துவதில் செலவிட்டார்; மேலும் அவர் ஒழுக்கக்கேடான வாழ்க்கையையும் வாழ்ந்து வந்தார். தன்னுடைய வாழ்க்கை பாணியை மாற்றுவதற்கு அவருக்கு எது உதவியது? 1 கொரிந்தியர் 6:9, 10-ல் ஆணித்தரமாகச் சொல்லப்பட்டிருப்பது அவர் மனதில் ஆழ்ந்த பதிவை ஏற்படுத்தியது: “வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசி மார்க்கத்தாரும், . . . வெறியரும், . . . தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.” கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். அதற்காக அவர் தன் கூட்டுறவைக் குறித்து கவனமாக இருக்க தொடங்கினார். (நீதிமொழிகள் 13:20) மது அருந்தப்போவதற்காக பழைய நண்பர்கள் அவரை அழைக்கையில், அவர்களுடைய அழைப்பை ஏற்க மறுத்து அதற்குப் பதிலாக அவர்களுக்கு சாட்சி கொடுத்தார். சீக்கரத்தில் அவர்கள் அவரைத் தொந்தரவு செய்வதை நிறுத்திவிட்டார்கள்.
அத்தனை முயற்சிக்கும் பலன் கிடைத்ததா? “என் வாழ்க்கை முறையை மாற்றியிருப்பதால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்,” என்று ஆன்டோனியோ விவரிக்கிறார். “எனக்கு 60-க்கு மேல் வயதாகியும், என் உடல்நிலை இப்போது மிக நன்றாக இருக்கிறது; அதே நேரத்தில் என் பழைய நண்பர்கள், இறந்துவிட்டார்கள் அல்லது மோசமான உடல்நிலையால் கஷ்டப்படுகிறார்கள். அடுத்த முறை தாங்கள் குடிக்கும்போது தங்களுக்காக பணம்செலுத்துவதற்காக மட்டும் ஒரு கூட்டாளியைத் தேடியவர்களுக்கு மாறாக இப்போது எனக்கு உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நான் கடவுளுடன் ஒரு நல்ல உறவைக் கொண்டிருக்கிறேன். இப்போது நான் ஓர் ஒழுங்கான பயனியராக இருக்கிறேன்; குடிப்பழக்க பிரச்சினையையுடைய ஒருவருக்கு பைபிள் படிப்பு எடுக்கிறேன்; ஆகையால் அவருக்கு உதவிசெய்ய நான் என்னுடைய அனுபவத்தைப் பயன்படுத்த முடியும்.”
கடவுளுக்கு அடிமைகளாதல்
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு, ஈக்குவிடோரியல் கினீயின் கரையோர மக்கள் ஒன்றுதிரட்டப்பட்டு, அடிமைகளாக அமெரிக்காக்களுக்கு அனுப்பப்பட்டார்கள். இன்று அநேகர் மனமுவந்து அடிமைகளாக—கடவுளுக்கு அடிமைகளாக—ஆகிறார்கள். இந்த வகையான அடிமைத்தனம் அவர்களை பாபிலோனிய கோட்பாடுகளிலிருந்தும் ஆவியுலக பழக்கங்களிலிருந்தும் விடுவித்து, அவர்களுக்கு உண்மையான சுதந்திரத்தைக் கொண்டுவந்திருக்கிறது. திருப்திகரமான பலன்தரத்தக்க வாழ்க்கையை வாழ்வது எப்படி என்றும் இது அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. இயேசு வாக்களித்ததை அவர்கள் அனுபவிக்கிறவர்களாக ஆகியிருக்கிறார்கள்: “சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.”—யோவான் 8:32.
1995-ல் நினைவு ஆசரிப்புக்கு 1,937 பேர்—அந்த நாட்டிலுள்ள பிரஸ்தாபிகளைவிட கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகமானோர்—ஆஜரானதால், மேலுமான ஆவிக்குரிய வளர்ச்சிக்கு மிகச்சிறந்த வாய்ப்புகள் இருக்கின்றன. ஈக்குவிடோரியல் கினீயிலுள்ள சாட்சிகள் தொடர்ந்து வைராக்கியமாக சத்தியத்தின் விதையை நட்டுக்கொண்டும் நீர்ப்பாய்ச்சிக்கொண்டும் இருக்கையில், ‘அதை தேவன் தொடர்ந்து விளையச் செய்வார்,’ என்று அவர்கள் நிச்சயமாய் இருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 3:6, NW) சந்தேகமின்றி, ஈக்குவிடோரியல் கினீயில் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு உசிதமான ஒரு சூழல் இருக்கிறது!
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.
b உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.