அதிக முழுமையாக சேவிக்க நீங்கள் ஏங்குகிறீர்களா?
“நான் யெகோவாவிடம் கோபமாக இருந்தேன்,” என்பதாக லாரா சொல்கிறாள். “நான் பயனியர் சேவையைத் தொடர, எங்களுடைய பொருளாதார பிரச்சினைத் தீர அவர் எங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று நான் இடைவிடாமல் ஜெபித்துக்கொண்டிருந்தேன்—ஆனால் பிரயோஜனமில்லை. கடைசியாக நான் பயனியர் சேவையிலிருந்து விலகிக்கொள்ள வேண்டியதாயிற்று. பயனியர் சேவையை செய்ய முடிகிறவர்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன் என்பதையும்கூட நான் ஒப்புக்கொள்ள வேண்டும்.”
யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் ஒரு உதவி ஊழியராக இருக்கும் மைக்கேலின் விஷயத்தையும்கூட எடுத்துக்கொள்ளுங்கள். அவர் கண்காணியாக சேவிக்க தகுதிபெற முயன்றுகொண்டிருந்தார். (1 தீமோத்தேயு 3:1) பல வருடங்களாக அவருடைய ஆசை நிறைவேறாமல் போனபோது, அவர் அத்தனை மனக்கசப்படைந்தவராய், இனிமேலும் அந்தச் சிலாக்கியத்துக்காக தான் பரிசீலிக்கப்படுவதைக்கூட அவர் விரும்பவில்லை. “ஏமாற்றத்தின் வேதனையை என்னால் இனிமேலும் தாங்கிக்கொள்ள முடிவில்லை,” என்பதாக அவர் சொல்கிறார்.
இதுபோன்ற அனுபவம் உங்களுக்கு இருந்திருக்கிறதா? மிகவும் நேசிக்கும் ஒரு தேவராஜ்ய சிலாக்கியத்தை நீங்கள் துறந்துவிட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறதா? உதாரணமாக, ஒரு பயனியராக, ஒரு முழுநேர ராஜ்ய அறிவிப்பாளராக சேவிப்பதை நிறுத்த வேண்டியதாக இருந்திருக்கிறதா? அல்லது மற்றவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் ஒருசில சபை பொறுப்புகளுக்காக நீங்கள் வாஞ்சையாய் இருக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் பெத்தேலில் அல்லது ஒரு மிஷனரியாக சேவிக்க மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கலாம், ஆனால் உங்களுடைய சூழ்நிலைமை அதை எட்டாத பொருளாக்கலாம்.
“நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்,” என்பதாக நீதிமொழிகள் புத்தகம் ஒப்புக்கொள்கிறது. (நீதிமொழிகள் 13:12) நீங்கள் பெற ஆவலோடு காத்துக்கொண்டிருக்கும் அதே சிலாக்கியங்களை மற்றவர்கள் பெற்றுக்கொள்கையில் முக்கியமாக இந்நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட ஏமாற்றங்களை அனுபவிப்போருக்கு கடவுளுடைய வார்த்தை உட்பார்வையையும் ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறதா? ஆம், அளிக்கிறது. உண்மையில், யெகோவாவின் சேவையின் சம்பந்தமாக அதேவிதமாக நிறைவேறாத ஆசைகளைக் கொண்டிருந்த யெகோவாவின் ஊழியர் ஒருவரின் உணர்வுகளை 84-ஆம் சங்கீதம் வெளிப்படுத்துகிறது.
ஒரு லேவியனின் போற்றுதல்
84-ஆம் சங்கீதத்தை இயற்றினவர்கள், யெகோவாவின் ஆலயத்தில் சேவைசெய்து வந்தவர்களும் தங்கள் ஊழிய சிலாக்கியங்களை உயர்வாக மதித்தவர்களுமான லேவியர்களான கோராகின் புத்திரரே. “உமது வாசஸ்தலங்கள் எவ்வளவு இன்பமானவைகள்!” என்பதாக அவர்களில் ஒருவர் உணர்ச்சிபொங்க கூறுகிறார். “என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.”—சங்கீதம் 84:1, 2.
யெகோவாவின் ஆலயத்தில் சேவிப்பதற்கு இந்த லேவியனுக்கு அத்தனை வாஞ்சை இருந்த காரணத்தால், எருசலேமுக்குப் போகும் வழியில் காணப்பட்ட சாதாரணமான இயற்கைக் காட்சிகள்கூட அவருக்கு கவர்ச்சியாக இருந்தன. “வறண்ட பள்ளத்தாக்கில் அவர்கள் செல்லும்போது, அதை அவர்கள் நீரூற்றாகச் செய்வார்கள்,” என்பதாக அவர் சொல்லுகிறார். (சங்கீதங்கள் 83:6, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஆம், சாதாரணமாக வறட்சியாக இருக்கும் ஒரு பகுதி நீர்பாசன வசதியுள்ள ஒரு இடமாக அவருடைய மனதுக்குத் தோன்றியது.
சங்கீதக்காரன் ஆசாரியரல்லாத லேவியனாக இருந்தபடியால், ஒவ்வொரு ஆறு மாதத்துக்கும் ஒருமுறை ஒரு வாரம் மட்டுமே அவர் ஆலயத்தில் சேவிக்க முடியும். (1 நாளாகமம் 24:1-19; 2 நாளாகமம் 23:8; லூக்கா 1:5, 8, 9) மீதமிருந்த தன் நேரத்தை அவர் லேவிய பட்டணங்கள் ஒன்றில் வீட்டில் செலவழித்தார். ஆகவே அவர் இவ்வாறு பாடினார்: “என் ராஜாவும் என் தேவனுமாகிய சேனைகளின் கர்த்தாவே, உம்முடைய பீடங்களண்டையில் அடைக்கலான் குருவிக்கு வீடும், தகைவிலான் குருவிக்குத் தன் குஞ்சுகளை வைக்கும்கூடும் கிடைத்ததே.” (சங்கீதம் 84:3) குடியிருப்பதற்கு ஆலயத்தில் நிரந்தரமான ஒரு இடத்தைக் கொண்டிருந்த பறவைகளைப் போல லேவியன் இருந்திருந்தால் அவர் எவ்வளவு சந்தோஷமாய் இருந்திருப்பார்!
இன்னும் ஆலயத்தில் அடிக்கடி தன்னால் சேவிக்க முடியாததன் காரணமாக மனக்கசப்படைவது லேவியனுக்கு சாத்தியமே. என்றபோதிலும், அவரால் சேவிக்க முடிந்ததற்காக மகிழ்ச்சியாய் இருப்பதையும், யெகோவாவுக்கு இருதயப்பூர்வமான பக்தியைக் காட்ட முயற்சிப்பது தகுதியானதே என்பதையும் நிச்சயமாகவே உணர்ந்திருந்தார். தன்னுடைய ஊழிய சிலாக்கியங்களைக் குறித்து திருப்தியுள்ளவராக இருப்பதற்கு இந்த உண்மையுள்ள லேவியனுக்கு எது உதவிசெய்தது?
திருப்தியாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்
“ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிராகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது,” என்று லேவியன் சொல்லுகிறார். “ஆகாமியக் கூடாரங்களில் வாசமாயிருப்பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன்.” (சங்கீதம் 84:10) யெகோவாவின் வீட்டில் ஒரு நாளைக் கழிப்பதுகூட ஒப்பற்ற ஒரு சிலாக்கியம் என்பதை அவர் மதித்துணர்ந்தார். மேலும் லேவியனுக்கு ஆலயத்தில் சேவிப்பதற்கு ஒரு நாளைக் காட்டிலும் அதிகம் இருந்தது. தன் சிலாக்கியங்களில் திருப்தி ஏற்பட்டது, சந்தோஷமாய் பாடும்படியாக அவரைத் தூண்டியது.
நம்மைப் பற்றி என்ன? நாம் நம்முடைய ஆசீர்வாதங்களை எண்ணிப்பார்க்கிறோமா அல்லது யெகோவாவின் சேவையில் ஏற்கெனவே நமக்கிருக்கும் சிலாக்கியங்களை மறந்துவிடுகிறவர்களாக இருக்கிறோமா? தம்மிடமாக அவர்கள் கொண்டிருக்கும் பக்தியின் காரணமாக, யெகோவா தம்முடைய ஜனங்களிடம் இன்னும் அதிகமான சிலாக்கியங்களையும் கடமைகளையும் ஒப்படைத்திருக்கிறார். மேற்பார்வை, மேய்ப்புவேலை, போதித்தல், முழுநேர சேவையின் பல்வேறு அம்சங்களின் பாரமான பொறுப்புகளும் இவற்றில் அடங்கும். ஆனால் யெகோவாவின் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற அருமையான காரியங்களையும்கூட அவை உட்படுத்துகின்றன.
உதாரணமாக கிறிஸ்தவ ஊழியத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அப்போஸ்தலன் பவுல் நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்கு நமக்கிருக்கும் சிலாக்கியத்தை ‘மண்பாண்டங்களிலிருக்கும் பொக்கிஷத்துக்கு’ ஒப்பிட்டு பேசுகிறார். (2 கொரிந்தியர் 4:7) இந்தச் சேவையை நீங்கள் மதிப்புமிக்க ஒரு பொக்கிஷமாக கருதுகிறீர்களா? ராஜ்ய பிரசங்க வேலையை முன்நின்று ஆரம்பித்து வைத்த இயேசு கிறிஸ்து, அவ்விதமாக அதைக் கருதி ஒரு மாதிரியை வைத்தார். (மத்தேயு 4:17) “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் . . . , சோர்ந்துபோகிறதில்லை,” என்பதாக பவுல் சொன்னார்.—2 கொரிந்தியர் 4:1.
கிறிஸ்தவ கூட்டங்களும்கூட அற்பமாக கருதப்படக்கூடாத ஒரு பரிசுத்த ஏற்பாடாகும். நம்முடைய கூட்டங்களில், நாம் அத்தியாவசியமான அறிவுரைகளைப் பெற்றுக்கொண்டு தேவையான தோழமையை அனுபவித்து மகிழுகிறோம். கூட்டங்களில் ஒழுங்காக குறிப்புகள் சொல்வதன் மூலமாகவும் மற்ற வழிகளில் நிகழ்ச்சிநிரலில் பங்குகொள்வதன் மூலமாகவும் நம்முடைய விசுவாசத்தையும் நம்பிக்கையையும் குறித்து பகிரங்கமாக அறிக்கை செய்யலாம். (எபிரெயர் 10:23-25) நிச்சயமாகவே நம்முடைய கூட்டங்கள் நாம் வாஞ்சையுடன் போற்றி காக்கவேண்டிய ஓர் ஏற்பாடாகும்.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட மைக்கேல் இந்த ஆசீர்வாதங்களை உயர்வாக மதித்து அவற்றை வெகுவாக போற்றினார். ஆனால் ஒரு மூப்பராக சேவைசெய்ய முடியாமல் போனதால் ஏற்பட்ட அவருடைய ஏமாற்றம், அவற்றுக்கான போற்றுதலை தற்காலிகமாக தணித்துப்போட்டது. மறுபடியுமாக அவற்றின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துவதன் மூலம், அவரால் சமநிலையை பெற்றுக்கொள்ளவும் யெகோவாவுக்காக காத்திருக்கவும் முடிந்தது.
குறிப்பிட்ட ஒரு சிலாக்கியத்தைப் பெற்றுக்கொள்ளாததற்காக அதிருப்தியாக உணருவதற்குப் பதிலாக, சங்கீதக்காரன் செய்ததுபோல, யெகோவா நம்மை ஆசீர்வதித்துவரும் வழிகளை மறுஆய்வு செய்வது நமக்கு நல்லது. a நாம் அதிகத்தைக் காண தவறினால், நம்முடைய சிலாக்கியங்களையும் நம்மை அவர் ஆசீர்வதித்துவரும் வழிகளையும், அவரைத் துதிப்பதற்காக அவர் நம்மைப் பயன்படுத்திவருவதையும் காண நம்முடைய மனக்கண்களைத் திறக்கும்படியாக யெகோவாவிடம் கேட்டு நாம் மறுபடியுமாக அதைப் பரிசீலிப்பது அவசியமாகும்.—நீதிமொழிகள் 10:22.
கண்காணியின் பொறுப்பு போன்ற விசேஷித்த சிலாக்கியங்கள் திட்டவட்டமான தகுதிகளைத் தேவைப்படுத்துவதை உணர்ந்துகொள்வதும்கூட முக்கியமாகும். (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9) ஆகவே எங்கே முன்னேற்றம் செய்யப்பட வேண்டும் என்பதைத் தேடி கண்டுபிடித்து பின்னர் முன்னேறுவதற்கு ஊக்கமாக முயற்சிசெய்து நம்மைநாமே ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.—1 தீமோத்தேயு 4:12-15.
சோர்வடைந்துவிடாதீர்கள்
குறிப்பிட்ட ஒரு ஊழிய சிலாக்கியத்தை நாம் பெறவில்லையென்றால், அதை அனுபவித்து மகிழுகிறவர்களிடமாக யெகோவா அதிக அன்புள்ளவராக இருக்கிறாரென்றோ அல்லது நம்மிடமிருந்து நன்மையானதை விலக்கி வைத்திருக்கிறாரென்றோ நாம் முடிவுசெய்துவிட வேண்டிய அவசியம் இல்லை. நிச்சயமாகவே, தேவராஜ்ய நியமனமாக இல்லாமல் இவர்கள் தங்கள் சிலாக்கியங்களை மனிதரின் தயவால் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பதாக நாம் பொறாமையினால் நினைக்கக்கூடாது. இப்படிப்பட்ட எண்ணங்களில் மனதை அலையவிடுவது பொறாமைக்கும் சண்டைகளுக்கும் முற்றிலுமாக நாம் சோர்ந்துபோவதற்கும்கூட வழிநடத்தலாம்.—1 கொரிந்தியர் 3:3; யாக்கோபு 3:14-16.
ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட லாரா, சோர்ந்துவிடவில்லை. இறுதியாக அவள் தன்னுடைய கோபம் மற்றும் பொறாமை உணர்வுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். பயனியர் சேவையை செய்ய முடியாதிருப்பதைக் குறித்து அவளுக்கிருந்த எதிர்மறையான எண்ணத்தை மாற்றிக்கொள்ளுவதற்கு, உதவிக்காக அவள் திரும்பத் திரும்ப கடவுளிடமாக ஜெபித்தாள். சபையிலுள்ள தகுதியுள்ள மனிதர்களின் உதவியையும்கூட அவள் நாடி, கடவுளுடைய அன்பைக் குறித்து நம்பிக்கையூட்டப்பட்டவளாக உணர்ந்தாள். “யெகோவா எனக்கு மன சமாதானத்தைக் கொடுத்தார். இப்பொழுது என் கணவராலும் என்னாலும் பயனியர் சேவை செய்ய முடியாவிட்டாலும், நாங்கள் அதைச் செய்த காலத்தை மனதில் வைத்துப் போற்றி நாங்கள் எங்களுடைய அனுபவங்களிலிருந்து பலத்தைப் பெற்றுக்கொள்கிறோம். வளர்ந்துவிட்ட எங்கள் மகன் செய்யும் பயனியர் சேவையில் நாங்கள் அவனுக்கு உதவிசெய்கிறோம்,” என்பதாக அவள் சொன்னாள். திருப்தியுள்ளவர்களாக இருப்பதால், லாரா இப்பொழுது பயனியர் சேவையில் “சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படு”கிறாள்.—ரோமர் 12:15.
முயன்று அடையத்தக்க இலக்குகளை வைத்துக்கொள்ளுங்கள்
தற்போது நமக்கிருக்கும் ஊழிய சிலாக்கியங்களில் திருப்தியாக இருப்பதென்பது, இதுவே போதும் மேலுமான தேவராஜ்ய இலக்குகளை வைப்பதை நாம் நிறுத்திக்கொள்கிறோம் என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. பரலோக உயிர்த்தெழுதலைப்பற்றி கலந்துபேசுகையில், பவுல், “முன்னானவைகளை நாடி”ச்செல்வதைப் பற்றி பேசினார். அவர் மேலுமாகச் சொன்னதாவது: “நாம் எதுவரையில் தேறியிருக்கிறோமோ, அதுமுதல் ஒரே ஒழுங்காய் நடந்துகொண்டு, ஒரே சிந்தையாயிருப்போமாக.” (பிலிப்பியர் 3:13-16) தானே தேவராஜ்ய இலக்குகள் முன்னானவற்றை நாடிச் செல்ல நமக்கு உதவிசெய்யும். என்றபோதிலும் அவற்றை நடைமுறைக்கு ஏற்றவையாக வைப்பதே சவாலாக இருக்கிறது.
நடைமுறைக்கு ஏற்ற இலக்குகள் நியாயமானவையாகவும் முயன்று அடையத்தக்கவையாகவும் இருக்கின்றன. (பிலிப்பியர் 4:5) இது பல வருடங்கள் கடினமாக உழைப்பதை உட்படுத்தும் ஒரு இலக்கு நடைமுறைக்கு ஏற்றதல்ல என்பதை அர்த்தப்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட நீண்ட காலத்துக்குப்பின் எட்டக்கூடிய இலக்கை படிப்படியாக பல இடைப்பட்ட இலக்குகளை அல்லது படிகளை வைப்பதன் மூலம் முயன்று அடையலாம். இவை ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு மைல்கற்களாக சேவிக்கலாம். ஒவ்வொரு படியையும் வெற்றிகரமாக எட்டும்போது நெடுகிலுமாக ஏமாற்றத்துக்குப் பதிலாக திருப்தியான ஒரு உணர்வை அது கொடுக்கும்.
சிறந்த ஒருசமநிலை
என்றபோதிலும், நம்முடைய சூழ்நிலைமைகள் மற்றும் குறைபாடுகளின் காரணமாக, ஒருசில சிலாக்கியங்களை நாம் ஒருவேளை பெற்றாமல் போகலாம் என்பதை உணர்ந்துகொள்வது முக்கியமாகும். அவற்றை இலக்குகளாக வைப்பது ஏமாற்றத்துக்கும் விரக்திக்குமே வழிநடத்தும். குறைந்தபட்சம் தற்போதைக்காவது இத்தகைய இலக்குகளை தள்ளிப்போட வேண்டும். கடவுள் கொடுக்கும் மனநிறைவுக்காக நாம் ஜெபம்செய்து யெகோவாவின் சித்தத்தைச் செய்வதை நம்முடைய முக்கிய அக்கறையாக ஆக்கிக்கொள்வோமானால் இதைச் செய்வது கடினமாக இருக்காது. சிலாக்கியங்களை நாம் முயன்று பெறுகையில், நம்முடைய தனிப்பட்ட சாதனைகள் போற்றப்படுவது அல்ல, ஆனால் யெகோவாவின் மகிமையே முக்கியமாக இருப்பதை உணருவோம். (சங்கீதம் 16:5, 6; மத்தேயு 6:33) பைபிள் பொருத்தமாகவே நமக்கு இவ்வாறு சொல்கிறது: “உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி, அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.”—நீதிமொழிகள் 16:3.
84-ஆம் சங்கீதத்தைச் சிந்திக்கையில், சங்கீதக்காரன் ஊழிய சிலாக்கியங்களிடமாக இப்படிப்பட்ட ஒரு மனநிலையைக் காண்பித்ததையும் யெகோவா அவரை வெகுவாக ஆசீர்வதித்ததையும் நாம் காணமுடியும். மேலுமாக, இந்தச் சங்கீதம் யெகோவாவின் மக்களுக்கு இன்றுவரையாக தொடர்ந்து பயனுள்ளதாக இருந்துவருகிறது.
யெகோவாவின்மேல் ஜெபசிந்தையோடு சார்ந்திருப்பதன் மூலமாக, கூடுதலான சிலாக்கியங்களுக்காக உங்களுக்கிருக்கும் வாஞ்சையையும், நீங்கள் ஏற்கெனவே அனுபவித்துவரும் சிலாக்கியங்களில் திருப்தியாக இருப்பதையும் நீங்கள் சமநிலைப்படுத்தலாம். அதிகமாக செய்வதற்கான பேராவல், இப்பொழுது நீங்கள் பெற்றிருப்பவற்றுக்குப் போற்றுதலையும் யெகோவாவை என்றுமாக சேவிப்பதால் வரும் சந்தோஷத்தையும் பறித்துவிட ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். லேவியனின் வார்த்தைகளில் காட்டப்பட்டுள்ளபடியே, யெகோவாவில் நம்பிக்கை வையுங்கள், ஏனென்றால் இது மகிழ்ச்சியில் விளைவடைகிறது: “சேனைகளின் கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிற மனுஷன் பாக்கியவான்.”—சங்கீதம் 84:12.
[அடிக்குறிப்புகள்]
a 1988 ஜூன் 15 தேதியிட்ட காவற்கோபுரம் (ஆங்கிலம்) பிரதியில் “பரிசுத்த காரியங்களை நீங்கள் போற்றுகிறீர்களா?” என்ற கட்டுரையைத் தயவுசெய்து காண்க.
[பக்கம் 11-ன் பெட்டி]
நாம் வைக்கவேண்டிய இலக்குகள்
தினந்தோறும் பைபிளை வாசிப்பது.—யோசுவா 1:8; மத்தேயு 4:4
வேதப்பூர்வமான பயிற்றுவிப்பால் பகுத்துணரும் நம்முடைய ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது.—எபிரெயர் 5:14
கடவுளோடு நெருக்கமான ஒரு உறவை வளர்த்துக்கொள்வது.—சங்கீதம் 73:28
ஆவியின் கனிகளில் ஒவ்வொன்றையும் வளர்த்துக்கொள்வது.—கலாத்தியர் 5:22, 23
நம்முடைய ஜெபங்களின் தரத்தை மேம்படுத்திக் கொள்வது.—பிலிப்பியர் 4:6, 7
பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் அதிக திறமையுள்ளவராக ஆவது.—1 தீமோத்தேயு 4:15, 16
ஒவ்வொரு காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பிரதிகளையும் வாசித்து தியானம் செய்வது.—சங்கீதம் 49:3
[பக்கம் 9-ன் படம்]
தனிப்பட்ட இலக்குகளை வைக்கையில், கடவுளுடைய சித்தத்தைச் செய்வதை முதலாவது வைக்கவும்