அறுப்பின் பண்டிகைகள் கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா?
உயரமாக குவித்து வைக்கப்பட்ட மணமும் ருசியும் மிகுந்த பழங்களும், கண்கவர் காய்கறிகளும், செழிப்பான சோளக்கட்டுகளும் கவர்ச்சியான ஒரு காட்சியாக அமைகின்றன. இப்படிப்பட்ட காட்சிகள் அறுவடை காலங்களில் இங்கிலாந்து முழுவதிலுமுள்ள சர்ச்சுகளின் பலிபீடங்களையும் பிரசங்க மேடைகளையும் அலங்கரிக்கின்றன. மற்ற இடங்களில் இருப்பது போலவே, ஐரோப்பாவிலும் அறுவடை காலத்தின் ஆரம்பத்தையும் முடிவையும் குறித்துக்காட்டும் எண்ணிலடங்கா விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
மண்ணை நம்பியே பிழைப்பை நடத்துகிறவர்கள் விசேஷமாக நிலத்தின் விளைச்சலுக்காக நன்றியுள்ளவர்களாக இருக்கின்றனர். ஆம், அறுவடையோடு நெருங்கிய வண்ணம் தொடர்புடைய மூன்று வருடாந்தர பண்டிகைகளைக் கொண்டாடும்படியாக பண்டைய இஸ்ரவேல் தேசத்தாருக்கு கடவுள் சொல்லியிருந்தார். வசந்த காலத்தின் ஆரம்பத்தில், புளிப்பில்லா அப்பப்பண்டிகையின்போது, இஸ்ரவேலர்கள் வாற்கோதுமை அறுவடையின் முதற்பலனாகிய கதிர்க்கட்டை கடவுளுக்குச் செலுத்தினார்கள். வசந்தகாலத்தின் பிற்பகுதியில் வாரங்களின் பண்டிகையின்போது (அல்லது பெந்தெகோஸ்தே) கோதுமை அறுவடையின் முதற்பலனிலிருந்து செய்யப்பட்ட அப்பத்தைச் செலுத்தினார்கள். இலையுதிர்காலத்தில் இஸ்ரவேலரின் வேளாண்மை ஆண்டின் முடிவைக் குறித்துக்காட்டிய சேர்ப்புக்கால பண்டிகை வந்தது. (யாத்திராகமம் 23:14-17) இந்தப் பண்டிகைகள் ‘பரிசுத்த சபை கூடிவருதலாக’ சந்தோஷமாயிருப்பதற்கான சமயங்களாக இருந்தன.—லேவியராகமம் 23:2; உபாகமம் 16:16.
அப்படியென்றால், நவீன நாளைய அறுப்பின் கொண்டாட்டங்களைப் பற்றி என்ன? அவை கடவுளைப் பிரியப்படுத்துகின்றனவா?
புறமத தொடர்புகள்
இங்கிலாந்திலுள்ள கார்ன்வாலில் ஆங்கலிக்கன் பாதிரியார் ஒருவர், இக்கொண்டாட்டத்தோடு சம்பந்தப்பட்ட பாரம்பரிய அறுப்புக்கால விருந்தையும் குடிவெறியையும் அவற்றின் உலகியல் சார்ந்த தன்மையையும்கண்டு கலங்கிப்போன அவர், 1843-ல் வரலாற்றின் இடைநிலைக் கால அறுவடை பழக்கத்தை புதுப்பிக்க தீர்மானித்தார். முதற்பலனாக அறுவடைசெய்யப்பட்ட தானியத்தில் கொஞ்சத்தை எடுத்து அதிலிருந்து தன்னுடைய சர்ச்சில் கம்யூனியன் ஆராதனைக்கு அப்பத்தைச் செய்தார். அப்படிச் செய்கையில், அறுவடைத் திருநாளை, அதாவது லாமாஸ் திருநாளை அவர் தொடர்ந்து கொண்டாடுவதற்கு வழிசெய்தார். லூக் என்ற கெல்டிக் கடவுளின் பண்டைய வணக்கத்தில் ஆரம்பித்த இதை ஒரு “கிறிஸ்தவ” கொண்டாட்டம் என்பதாக சிலர் சொல்கின்றனர்.a இவ்வாறாக, நவீன காலத்திய ஆங்கலிக்கன் அறுப்பு பண்டிகை புறமதத்திலிருந்து வந்தது.
அறுப்பு காலத்தின் முடிவில் நடக்கும் மற்ற கொண்டாட்டங்களைப் பற்றி என்ன? என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா-வின் பிரகாரம், இந்த விழாக்களின் அம்சங்களாக இருக்கும் அநேக பழக்கவழக்கங்கள், “சோள [தானிய] ஆவி அல்லது சோளத் தாய்மீது இருக்கும் ஆன்மவாத நம்பிக்கை”யிலிருந்து வருகிறது. ஒருசில பகுதிகளில், அறுவடை செய்யப்படவிருந்த கடைசி தானிய அரிக்கட்டில் ஆவி ஒன்று குடிகொண்டிருந்ததாக விவசாயிகள் நம்பினார்கள். அந்த ஆவியை விரட்டியடிப்பதற்காக, அவர்கள் அரிக்கட்டை தரையில்போட்டு அடிக்கிறார்கள். மற்ற இடங்களில் சோள தாள்கள் சிலவற்றை சேர்த்து ஒரு “சோள பொம்மை”யை செய்து அதைத் தொடர்ந்து வருகின்ற வருடத்தில் விதை விதைப்பதற்கு “அதிர்ஷ்டத்துக்காக” பத்திரப்படுத்தி வைக்கிறார்கள். பிறகு புதிய விளைச்சலை இந்தக் கதிர்கள் ஆசீர்வதிக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் மறுபடியுமாக இவற்றை மண்ணுக்குள் போட்டு உழுதுவிடுகிறார்கள்.
சில பழங்கதைகள் கருவள தேவதை இஷ்டாரின் கணவனான பாபிலோனிய தம்முஸ் கடவுளின் வணக்கத்தோடு அறுவடை காலத்தை இணைக்கின்றன. கதிரின் மேற்பகுதியை வெட்டி எறிவது தம்முஸ்-ன் அகால மரணத்துக்கு இணையாக கருதப்பட்டது. மற்ற பழங்கதைகள் அறுவடை காலத்தை மனித பலிகளோடு சம்பந்தப்படுத்தி பேசுகின்றன. இது யெகோவா தேவனுக்கு அருவருப்பாயிருக்கும் ஒரு பழக்கம்.—லேவியராகமம் 20:2; எரேமியா 7:30, 31.
கடவுளுடைய கருத்து என்ன?
உயிரின் படைப்பாளரும் ஊற்றுமூலருமாயிருக்கும் யெகோவா தம்முடைய வணக்கத்தாரிடமிருந்து தனிப்பட்ட பக்தியை வற்புறுத்தினார் என்பதை, பண்டைய இஸ்ரவேலரோடு அவருக்கிருந்த செயல்தொடர்புகள் தெளிவாக காண்பிக்கின்றன. (சங்கீதம் 36:9; நாகூம் 1:2) எசேக்கியேல் தீர்க்கதரிசியின் நாளில், தம்முஸ் கடவுளுக்காக புலம்பும் பழக்கம் யெகோவாவின் பார்வையில் ‘மிகப் பெரிய அருவருப்பான காரியமாக’ இருந்தது. இதுவும் மற்ற பொய் மத சடங்குகளும் சேர்ந்து, அந்த பொய் வணக்கத்தாரின் ஜெபங்களுக்கு கடவுள் தம் காதுகளை மூடிக்கொள்ளும்படியாகச் செய்தன.—எசேக்கியேல் 8:6, 13, 14, 18.
அறுவடையின் சம்பந்தமாக யெகோவா தேவன் இஸ்ரவேலரை கடைப்பிடிக்கும்படியாக சொன்னவற்றோடு இதை வேறுபடுத்திப் பாருங்கள். சேர்ப்பின் பண்டிகையின்போது, இஸ்ரவேலர் பரிசுத்தமான சபைகூடிவருதலை நடத்தினார்கள், அந்தச் சமயத்தில் இளைஞரும் வயதானவர்களும், பணக்காரரும் ஏழைகளும் மிக அழகான விருட்சங்களின் செழிப்பான இலைகளால் அலங்காரம் செய்யப்பட்ட தற்காலிகமான குடியிருப்புகளில் வசித்தார்கள். இது அவர்கள் அதிகமாக களிகூருவதற்கான காலமாக இருந்தது, ஆனால் அவர்களுடைய முன்னோர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த சமயத்தில் கடவுள் அவர்களுக்கு அருளியிருந்த விடுதலையைக் குறித்து சிந்தித்துப்பார்ப்பதற்கும்கூட இது ஒரு காலமாக இருந்தது.—லேவியராகமம் 23:40-43.
இஸ்ரவேலருடைய பண்டிகைகளின்போது, ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவுக்கு பலிகள் செலுத்தப்பட்டன. (உபாகமம் 8:10-20) முன்கூறப்பட்ட ஆன்மவாத நம்பிக்கையைப் பொருத்தவரையில், கோதுமையின் அரிக்கட்டு போன்ற விளைபொருளுக்கு ஒரு ஆத்துமா இருப்பதாக எந்த இடத்திலும் பைபிள் பேசுவதில்லை.b உருவங்கள் உயிரற்றவையாக, பேசவோ, பார்க்கவோ, கேட்கவோ, நுகரவோ, உணரவோ அல்லது தங்களுடைய வணக்கத்தாருக்கு எந்த உதவியையும் அளிக்கவோ இயலாதவையாக இருப்பதை வேதவாக்கியங்கள் தெளிவாக காண்பிக்கின்றன.—சங்கீதம் 115:5-8; ரோமர் 1:23-25.
கடவுள் பண்டைய இஸ்ரவேல் தேசத்தோடு செய்துகொண்ட நியாயப்பிரமாண உடன்படிக்கையின்கீழ் இன்று கிறிஸ்தவர்கள் இல்லை. ஆம், கடவுள் ‘அதை இயேசுவின் கழுமரத்தின்மேல் ஆணியடித்து அதை நடுவிலிராதபடிக்கு எடுத்துப் போட்டுவிட்டார்.’ (கொலோசெயர் 2:14, 15, NW) யெகோவாவின் நவீன நாளைய ஊழியர்கள் “கிறிஸ்துவினுடைய பிரமாணத்”தின்படி வாழ்ந்து கடவுள் அளித்துவரும் எல்லாவற்றிற்கும் போற்றுதலோடு பிரதிபலிக்கிறார்கள்.—கலாத்தியர் 6:2.
அப்போஸ்தலன் பவுல் யூத பண்டிகைகள் “வருங்காரியங்களுக்கு நிழலாயிரு”ப்பதாக சொல்லிவிட்டு அதோடு “அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது,” என்பதாக மேலுமாக சொல்லுகிறார். (கொலோசெயர் 2:16, 17) இதன் காரணமாக, உண்மைக் கிறிஸ்தவர்கள் வேதப்பூர்வமான இந்தக் காரணத்தை ஏற்றுக்கொள்கிறார்கள்: ‘அஞ்ஞானிகள் பலியிடுகிறவைகளை தேவனுக்கு அல்ல, பேய்களுக்கே பலியிடுகிறார்கள் . . . நீங்கள் கர்த்தருடைய [யெகோவாவுடைய] பாத்திரத்திலும் பேய்களுடைய பாத்திரத்திலும் பானம்பண்ணக்கூடாதே.’ (1 கொரிந்தியர் 10:20, 21) மேலுமாக “அசுத்தமானதைத் தொடாதிரு”க்கும்படியான கட்டளைக்கும் கிறிஸ்தவர்கள் கீழ்ப்படிகிறார்கள். உங்களுடைய சுற்றுவட்டாரத்தில் கொண்டாடப்படும் அறுப்பின் பண்டிகைகள் எவ்விதத்திலாவது புற அல்லது பொய் மதத்துடன் தொடர்புடையவையா? அப்படியானால், கறைப்படிந்த இத்தகைய வணக்கத்தில் எந்தவித ஈடுபாடும் கொள்வதை மறுப்பதன் மூலம் யெகோவாவைக் கோபப்படுத்துவதை உண்மைக் கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள்.—2 கொரிந்தியர் 6:17.
போற்றுதலுள்ள ஒரு பிள்ளை தன்னுடைய தந்தையிடமிருந்து ஒரு பரிசைப் பெற்றுக்கொள்ளும்போது அவன் யாருக்கு நன்றிசொல்லுகிறான்? முற்றிலும் அந்நியராயிருக்கும் ஒருவருக்கா அல்லது அவனுடைய தந்தைக்கா? இருதயப்பூர்வமாக செய்யும் ஜெபங்களின் மூலமாக கடவுளுடைய வணக்கத்தார் அவர்களுடைய பரலோக தந்தையாகிய யெகோவாவுக்கு அவருடைய அபரிமிதமான உதார குணத்துக்காக தினந்தோறும் நன்றிசெலுத்துகிறார்கள்.—2 கொரிந்தியர் 6:18; 1 தெசலோனிக்கேயர் 5:17, 18.
[அடிக்குறிப்புகள்]
a “லாமாஸ்” என்ற வார்த்தை “லோப்ஃ-மாஸ்” [“அப்பப் பூசை”] என்று பொருள்படும் பழைய ஆங்கில வார்த்தையிலிருந்து பெறப்பட்டது.
b வேதவாக்கியங்களின் பேரில் உட்பார்வை இவ்வாறு சொல்கிறது: “நெபெஷ் (ஆத்துமா) மூன்றாவது சிருஷ்டிப்பு நாளில் (ஆதி. 1:11-13) அல்லது அதற்குப் பின் நிகழ்ந்த தாவர உயிர்களின் படைப்பின் சம்பந்தமாக பயன்படுத்தப்படுவதில்லை, ஏனென்றால் தாவரங்களில் இரத்தமில்லை.”—உவாட்ச்டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி வெளியிட்டுள்ளது.