ராஜ்ய அறிவிப்பாளர் அறிக்கை
காங்கோ ஜனநாயக குடியரசில் இளைஞர் கடவுளைத் துதிக்கின்றனர்
நூற்றாண்டுகளுக்கு முன்பாக சங்கீதக்காரன் நித்தியத்தின் ராஜாவைத் துதிப்பதில் சேர்ந்துகொள்ளுமாறு இளைஞர்களுக்கு அன்பாக அழைப்பு கொடுத்தார்: “இளைஞரே, கன்னியரே, முதியோர்களே, பிள்ளைகளே, . . . யெகோவாவின் நாமத்தைத் துதியுங்கள்; அவருடைய நாமம் மாத்திரம் உயர்ந்தது.” (சங்கீதம் 148:12, 13, NW) காங்கோ ஜனநாயக குடியரசிலிருந்து வரும் பின்வரும் அனுபவங்கள் ஈடிணையற்ற இந்தச் சிலாக்கியத்தை உயர்த்திக்காண்பிக்கின்றன.
● ஒரு விசேஷித்தப் பயனியர் வசித்துவந்த வீட்டின் சொந்தக்காரரை யெகோவாவின் சாட்சிகளுடைய நடத்தை கவர்ந்தது. இதன் காரணமாக தன்னுடைய ஐந்து வயது மகள் ஃபிஃபியோடு சாட்சிகள் பைபிளைப் படிப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தார். என்னுடைய பைபிள் கதை புத்தகம்,a படிப்பதில் அவளுடைய முன்னேற்றத்தைக் கவனித்தப்பிறகு, அவளுடைய அப்பா ராஜ்ய மன்றத்தில் கூட்டங்களுக்குச் செல்ல அவளை அனுமதித்தார். அங்கே சிறுமி ஃபிஃபி சாட்சிகளுடைய பாட்டு புத்தகத்திலிருந்து ராஜ்ய பாடல்களைப் பாட கற்றுக்கொண்டாள். அவளுக்கு விசேஷமாக பிடித்திருந்தது “பரதீஸ் பற்றிய தேவ வாக்கு” என்ற தலைப்புடைய 4-வது பாடலாகும்.
ஒரு நாள் ஃபிஃபியின் அப்பா அவளைத் தன்னுடைய சர்ச்சுக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்தார். சர்ச் பாடல்களை பாட ஃபிஃபி மறுத்தபோது எல்லாருக்கும் அது ஆச்சரியமாக இருந்தது. ஏன்? ஏனென்றால் அவளுடைய அப்பாவின் சர்ச்சில் பாடப்பட்ட பாடல்கள் தன்னுடைய பைபிள் படிப்பில் தான் கற்றுக்கொண்டவற்றிற்கு இணக்கமாக இல்லை என்பதாக அவள் நினைத்தாள். தைரியமாக, அதற்கு பதிலாக தனக்கு விருப்பமாயிருந்த ராஜ்ய பாடலைப் பாடினாள்.
அவளுடைய மனதை மாற்ற செய்யப்பட்ட பல முயற்சிகளும் தோல்வியடைந்தப் பின்பு, சர்ச் தலைவர்கள் ஐந்து வயதுள்ள ஃபிஃபியை சர்ச்சிலிருந்து விலக்கிவிட தீர்மானித்தனர்! இவ்வளவு படுமோசமாக நடத்தப்பட்ட போதிலும் அவளுடைய அப்பா அமைதியாகவே இருந்தார். தான் நம்பின காரியத்திற்காக அவள் உறுதியான நிலைநிற்கை எடுத்தது அவருக்குப் பெருமையாக இருந்தது. ஃபிஃபியின் அம்மா அப்பா ஆகிய இருவருமே அவள் தொடர்ந்து யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ள வேண்டும் என விரும்புகிறார்கள்.
● லுக்கோடி என்ற பெயருள்ள ஒரு பருவவயது பையன் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கத் தீர்மானித்தபோது அவனுடைய அப்பா அதை கடுமையாக எதிர்த்தார். ஒரு சமயம் ராஜ்ய மன்றத்தில் ஒரு கூட்டத்துக்குச் செல்வதற்காக லுக்கோடி தயாராகிக் கொண்டிருக்கும்போது அவனுடைய அப்பா ஒரு வெட்டுக்கத்தியைக் காட்டிக்கொண்டு அவனை மிரட்டினார். மற்றொரு சமயம் லுக்கோடியின் அப்பா அவனை ஒரு கம்பினால் அடித்து அவன் முதுகில் பெரிய காயமேற்படுத்திவிட்டார். கடுமையான எதிர்ப்பு இருந்தபோதிலும் லுக்கோடி யெகோவாவின் சாட்சிகளில் ஒருவனாக வேண்டும் என்ற தன் தீர்மானத்தில் உறுதியாக இருந்தான். அவன் தொடர்ந்து முன்னேற்றம் செய்து முழுக்காட்டப்பட்டான். இப்பொழுது அவன் ஒரு ஒழுங்கான பயனியராக சேவைசெய்கிறான்.
லுக்கோடியின் தங்கை சோனாவை அவளுடைய அண்ணனின் நிலைநிற்கை வெகுவாக கவர்ந்ததால் அவளும்கூட யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் படிப்பதைத் தடைசெய்வதற்காக அவர்களுடைய அப்பா சாட்சிகளே இல்லாத வேறொரு கிராமத்தில் உள்ள பள்ளிக்கு அவளை அனுப்பிவிட்டார். இருந்தபோதிலும் சோனா தான் கற்றுக்கொண்டிருந்தக் காரியங்களைப்பற்றி மற்றவர்களிடம் பேசுவதை ஒரு பழக்கமாக்கிக் கொண்டாள். இதன் விளைவாக அவளுடைய உறவினரில் மற்றொரு பெண்ணும்கூட அக்கறைக் காட்ட ஆரம்பித்தாள்.
பக்கத்து கிராமத்திலிருந்த சாட்சிகள் சோனாவின் பிரசங்க வேலையைப் பற்றி கேள்விப்பட்டபோது அவர்கள் அவளை போய் பார்த்து முறையாக ஒரு வீட்டு பைபிள் படிப்பை அவளுக்கு ஏற்பாடு செய்தார்கள். அவள் தொடர்ந்து முன்னேறி சீக்கிரத்தில் ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்பட்ட ஒரு யெகோவாவின் சாட்சியாக தன் அண்ணனோடு சேர்ந்துகொண்டாள். மேலுமாக, அவளுடைய உறவுக்காரப் பெண் இப்பொழுது ஒரு முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாக இருக்கிறாள்; இந்தக் கிராமத்தில் புத்தக படிப்பு ஒன்று நடத்தப்படுகிறது.
யெகோவாவின் நாமத்தைத் துதிப்பதில் இளைஞர் சேர்ந்துகொள்கையில் அது எத்தனை சிறப்பானதாகவும் இதமளிப்பதாகவும் உள்ளது!
[அடிக்குறிப்பு]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் வெளியிடப்பட்டது.