கரிஸ்மா—மனிதனுக்குப் புகழா கடவுளுக்கு மகிமையா?
ஒரு ஆட்சியாளர் தன் குடிமக்களைக் காட்டிலும் மிகச் சிறந்தவராய் இருக்கவேண்டும்; அதாவது, உண்மையிலேயே அவர்களைக் காட்டிலும் மேலானவராக மட்டுமல்லாமல், அவர்களை வசீகரிக்கும் ஆற்றலையும் பெற்றிருக்க வேண்டும்” என்று ஸெனோஃபன் என்ற ஒரு புகழ்பெற்ற கிரேக்க தளபதி எழுதினார். இன்று அநேகர் அந்த “வசீகரிக்கும் ஆற்றலை” கரிஸ்மா (charisma) என்று அழைப்பர்.
உண்மையில் எல்லா மனித ஆட்சியாளர்களுமே கரிஸ்மாவைப் பெற்றில்லை. ஆனால் அதை பெற்றிருப்போர், பக்தியை ஏற்படுத்துவதற்காகவும் தங்கள் தனிப்பட்ட குறிக்கோள்களுக்காக சூழ்ச்சித்திறத்தோடு பொதுமக்களை கைக்குள் போட்டுக்கொள்வதற்காகவும் அதை பயன்படுத்துகின்றனர். சமீப காலங்களில் மிகவும் கெட்ட பெயரெடுத்த அடால்ஃப் ஹிட்லரை இதற்கு உதாரணமாய் சொல்லலாம். “[1933-ல்] பெரும்பாலான ஜெர்மானியர்களுக்கு ஹிட்லர், உண்மையிலேயே வசீகரிக்கும் ஆற்றல்கொண்ட தலைவராகும் தன்மையை பெற்றிருந்தார்—அல்லது சீக்கிரத்தில் பெறவிருந்தார்” என்று வில்லியம் எல் ஷிரர் நாசி ஜெர்மன் குடியரசின் எழுச்சியும் வீழ்ச்சியும் என்ற தன் ஆங்கில புத்தகத்தில் எழுதுகிறார். “அவர் ஏதோ தெய்வீக மதிப்பீட்டை பெற்றிருந்ததுபோல அவர்கள் அவரை அடுத்த பன்னிரண்டு கடுங்கொந்தளிப்பான ஆண்டுகள் குருட்டுத்தனமாய் பின்பற்றினர்.”
மத சரித்திரத்திலும்கூட வசீகரிக்கும் ஆற்றலை உடைய தலைவர்கள் அதிகமாக உள்ளனர், மக்கள் தங்களையே அவர்களுக்கு அர்ப்பணிக்கும்படி தூண்டியெழுப்பினர்; ஆனால் தங்களைப் பின்பற்றியவர்கள்மீது பெரும் அழிவையும் அவர்கள் கொண்டுவந்தனர். “ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்” என இயேசு எச்சரித்தார். (மத்தேயு 24:4, 5) மக்களை வசீகரித்த பொய் கிறிஸ்துக்கள் முதல் நூற்றாண்டில் மட்டுமே தோன்றவில்லை. 1970-களில் ஜிம் ஜோன்ஸ் என்பவர் தன்னை “மக்களுடைய ஆலயத்தின் மேசியா” என்று அறிவித்துக்கொண்டார். அவர் “மக்கள்மீது அற்புதமான செல்வாக்கு செலுத்தி அவர்களைக் கவர்ந்திழுத்த சர்ச் குரு” என்று விவரிக்கப்பட்டார், மேலும் 1978-ல் சரித்திரத்திலேயே மிகப்பெரிய எண்ணிக்கையான மக்களை தற்கொலை செய்துகொள்ளும்படி அவர் தூண்டிவிட்டார். a
கரிஸ்மா ஆபத்தான வரமாக இருக்கலாம் என்பது தெளிவாய் தெரிகிறது. இருப்பினும், பைபிள், ஒரு வித்தியாசமான வரம் அல்லது வரங்களைப் பற்றி பேசுகிறது, அது எல்லாருடைய நன்மைக்கென்றும் எல்லாருக்கும் கிடைக்கக்கூடியதாய் கடவுளிடமிருந்து வருகிறது. இந்த வரத்திற்கான கிரேக்க வார்த்தை காரிஸ்மா (khaʹri·sma), அது பைபிளில் 17 தடவை காணப்படுகிறது. ‘அது ஒரு இலவசமான தகுதியற்ற வரம், அதற்காக உழைக்காத தகுதியில்லாத ஒரு மனிதனுக்கு அளிக்கப்படும் ஏதோவொன்று, கடவுளுடைய இரக்கத்தின் காரணமாக கிடைக்கும் ஏதோவொன்று, ஒரு மனிதனுடைய சொந்த முயற்சியினால் கிடைக்கப்பெற்ற அல்லது உடைமையாகப் பெற்ற ஒன்றாக ஒருபோதும் இருக்கமுடியாது’ என்று ஒரு கிரேக்க கல்விமான் அதற்கு விளக்கம் தருகிறார்.
ஆகையால் வேதாகம நோக்குநிலையிலிருந்து, காரிஸ்மா என்பது கடவுளுடைய தகுதியற்ற தயவின் காரணமாக பெற்றுக்கொள்ளப்பட்ட வரம். கடவுள் நமக்கு தயவாய் அளித்திருக்கும் இந்த வரங்களில் சில யாவை? அவருக்கு துதியைக் கொண்டுவர நாம் எவ்வாறு அவற்றை பயன்படுத்தலாம்? இந்த கிருபையுள்ள வரங்களில் மூன்றை நாம் சிந்திப்போம்.
நித்திய ஜீவன்
நித்திய ஜீவன் என்ற வரமே எல்லாவற்றைக் காட்டிலும் மிகச்சிறந்த வரம் என்பதில் சந்தேகமில்லை. பவுல் ரோம சபைக்கு இவ்வாறு எழுதினார்: “பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ [காரிஸ்மா] நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.” (ரோமர் 6:23) “சம்பளம்” (மரணம்) என்பது, நம்முடைய பாவ தன்மையின் காரணமாக நமக்கு விருப்பமில்லாதபோதிலும் நாம் சம்பாதித்திருக்கும் ஏதோவொன்று என்பதை மனதில் வைப்பது நல்லது. மறுபட்சத்தில், கடவுள் கிடைக்கச்செய்யும் நித்திய ஜீவன் என்பது, நம்முடைய சொந்த தகுதியின் காரணமாய் ஒருபோதும் சம்பாதிக்கவே முடியாத முற்றிலும் தகுதியற்ற ஒன்று.
நித்திய ஜீவன் என்ற வரத்தை மதிப்புடன் போற்றி பகிர்ந்துகொள்ள வேண்டும். யெகோவாவை அறியவும், அவரை சேவிக்கவும், அதன் மூலம் நித்திய ஜீவன் என்ற வரத்தை பெற்றுக்கொள்ளவும் நாம் ஜனங்களுக்கு உதவி செய்யலாம். வெளிப்படுத்துதல் 22:17 சொல்கிறது: “ஆவியும் மணவாட்டியும் வா என்கிறார்கள்; கேட்கிறவனும் வா என்பானாக; தாகமாயிருக்கிறவன் வரக்கடவன்; விருப்பமுள்ளவன் ஜீவத்தண்ணீரை இலவசமாய் வாங்கிக்கொள்ளக்கடவன்.”
நாம் எப்படி மற்றவர்களை இந்த ஜீவனை அளிக்கும் தண்ணீரிடமாக வழிநடத்தலாம்? நம்முடைய ஊழியத்தில் முக்கியமாய் பைபிளை பலனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவதன் மூலமே. இவ்வுலகின் சில பாகங்களில் ஜனங்கள் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி வாசிப்பதோ சிந்திப்பதோ அபூர்வம் என்பது உண்மையே; இருப்பினும், எவராவது ஒருவருடைய ‘செவியை கவனிக்கச்செய்வதற்கு’ எப்போதும் வாய்ப்புகள் இருக்கின்றன. (ஏசாயா 50:4) இந்த விஷயத்தில் நாம் பைபிளின் உந்துவிக்கும் சக்தியில் நம்பிக்கையோடு இருக்கலாம், ஏனென்றால் “தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும் . . . இருக்கிறது.” (எபிரெயர் 4:12) பைபிளின் நடைமுறையான ஞானம், அது அளிக்கும் ஆறுதல் மற்றும் நம்பிக்கை, அல்லது வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அதன் விளக்கம், இவற்றில் எதுவாக இருந்தாலும் கடவுளுடைய வார்த்தை இருதயத்தை தொட்டு ஜீவனுக்குப் போகும் பாதைக்கு மக்களை வழிநடத்தக்கூடும்.—2 தீமோத்தேயு 3:16, 17.
கூடுதலாக, பைபிளை அடிப்படையாகக் கொண்ட பிரசுரங்கள் “வா” என்று சொல்வதற்கு நமக்கு உதவக்கூடும். இந்த ஆவிக்குரிய இருளின் காலத்தின்போது, தம் ஜனங்கள்மீது “யெகோவா உதிப்பார்” என்று ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தார். (ஏசாயா 60:2, தி.மொ.) யெகோவாவிடமிருந்து வரும் இந்த ஆசீர்வாதத்தை உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்கள் வெளிப்படுத்திக் காண்பிக்கின்றன, ஒவ்வொரு வருடமும் அவை ஆயிரக்கணக்கான ஆட்களை ஆவிக்குரிய அறிவொளிக்கு ஊற்றுமூலராய் இருக்கும் யெகோவாவிடம் வழிநடத்துகின்றன. அந்தப் பிரசுரங்கள் எவற்றிலும் தனிப்பட்ட நபர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. காவற்கோபுர பத்திரிகையின் முன்னுரை விளக்குகிறபடி, “காவற்கோபுர பத்திரிகையின் நோக்கம் யெகோவா தேவன் இந்தச் சர்வலோகத்தின் கர்த்தராகிய பேரரசர் என்பதை மேன்மைப்படுத்துவதாகும். . . . கடவுள் நியமித்து, இப்பொழுது ஆளுகிற அரசர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்க இது உற்சாகப்படுத்துகிறது; அவர் சிந்தின இரத்தம் மனிதவர்க்கம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழியைத் திறக்கிறது.”
பல வருடங்கள் குறிப்பிடத்தக்கவிதத்தில் தன் ஊழியத்தில் வெற்றியடைந்திருக்கும் ஒரு முழுநேர கிறிஸ்தவ ஊழியர், கடவுளிடம் நெருங்கிவர ஜனங்களுக்கு உதவிசெய்வதில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளின் மதிப்பைக் குறித்து இவ்வாறு சொல்கிறார்: “என் பைபிள் மாணாக்கர் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை வாசித்து மகிழ ஆரம்பிக்கையில் விரைவாக முன்னேற்றம் செய்கின்றனர். இப்பத்திரிகைகள் ஜனங்கள் யெகோவாவை அறிந்துகொள்வதற்கு உதவிசெய்வதில் விலைமதிக்க முடியாதவையாக நான் காண்கிறேன்.”
ஊழிய சிலாக்கியங்கள்
விசேஷ கவனத்திற்கு தகுதி பெற்றிருந்த மற்றொரு வரம் அளிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ சீஷன் தீமோத்தேயு ஆவார். அப்போஸ்தலனாகிய பவுல் அவரிடம் இவ்வாறு சொன்னார்: “மூப்பராகிய சங்கத்தார் உன்மேல் கைகளை வைத்தபோது தீர்க்கதரிசனத்தினால் உனக்கு அளிக்கப்பட்ட வரத்தைப் [காரிஸ்மா] பற்றி அசதியாயிராதே.” (1 தீமோத்தேயு 4:14) இந்த வரம் என்னவாயிருந்தது? அது தீமோத்தேயு ஒரு பயணக் கண்காணியாக நியமனம் செய்யப்பட்டதை உட்படுத்தியது, அது அவர் பொறுப்போடு கவனிக்க வேண்டிய ஒரு ஊழிய சிலாக்கியமாய் இருந்தது. அதே பகுதியில் பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு புத்திமதி கூறினார்: “வாசிக்கிறதிலும் புத்திசொல்லுகிறதிலும் உபதேசிக்கிறதிலும் ஜாக்கிரதையாயிரு. உன்னைக்குறித்தும் உபதேசத்தைக் குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.”—1 தீமோத்தேயு 4:13, 16.
இன்றுள்ள மூப்பர்களும்கூட தங்கள் ஊழிய சிலாக்கியங்களை மதித்துப் போற்றுதல் காண்பிக்க வேண்டும். பவுல் குறிப்பிட்டுக் காட்டுகிறபடி, அவர்கள் இதை செய்வதற்கு ஒரு வழி, ‘தங்கள் உபதேசத்தைக் குறித்து எச்சரிக்கையாய்’ இருப்பதன் மூலமே. வசீகரிக்கும் ஆற்றலை உடைய உலகப்பிரகாரமான தலைவர்களைப் பார்த்து பின்பற்றுவதற்கு பதிலாக, அவர்கள் கடவுளிடமாக கவனத்தைத் திருப்புகின்றனர், தங்களிடமாக அல்ல. அவர்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் இயேசு, வசீகரிக்கும் ஆற்றலைப் பெற்றிருந்த முதன்மைவாய்ந்த போதகராய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை, அப்படி இருந்தாலும் அவர் மனத்தாழ்மையோடு தம் தகப்பனுக்கு மகிமையைக் கொடுத்தார். “என் உபதேசம் என்னுடையதாயிராமல், என்னை அனுப்பினவருடையதாயிருக்கிறது,” என்று அவர் அறிவித்தார்.—யோவான் 5:41; 7:16.
இயேசு கடவுளுடைய வார்த்தையை தம் போதனைக்கு ஆதாரமாக பயன்படுத்துவதன் மூலம் தம் பரலோக தகப்பனை மகிமைப்படுத்தினார். (மத்தேயு 19:4-6; 22:31, 32, 37-40) கண்காணிகள் ‘போதிக்கப்பட்டதற்கேற்ற உண்மையான வசனத்தை நன்றாய்ப் [“உறுதியாய்,” NW] பற்றிக்கொள்ளுகிறவனுமாயிருக்க வேண்டியதன்’ அவசியத்தை பவுல் அதேபோல் அழுத்திக் காண்பித்தார். (தீத்து 1:9) பைபிள்மீது தங்கள் பேச்சுக்களை உறுதியாய் அமைப்பதன் மூலம், உண்மையில் மூப்பர்கள் இயேசு சொன்னதைப் போல் சொல்வார்கள்: “நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை.”—யோவான் 14:10.
மூப்பர்கள் எவ்வாறு ‘உண்மையான வசனத்தை உறுதியாய்ப் பற்றிக்கொள்ளலாம்’? அவர்களுடைய பேச்சுக்களிலும், கூட்டத்தில் கையாளும் நியமிப்புகளிலும் கடவுளுடைய வார்த்தையை அடிப்படையாய் வைத்து, அவர்கள் பயன்படுத்தும் வசனங்களை விளக்கி அழுத்திக் காண்பிப்பதன் மூலமே. உணர்ச்சி ததும்பும் உதாரணங்கள் அல்லது வேடிக்கையான சம்பவங்கள், விசேஷமாக மிகைப்படுத்தி சொல்லப்பட்டால், கடவுளுடைய வார்த்தையிலிருந்து சபையாரின் கவனத்தைத் திருப்பி பேச்சாளரின் சொந்த திறமைக்கு கவனத்தை இழுக்கலாம். மறுபட்சத்தில், பைபிளில் உள்ள வசனங்களே இருதயத்தை சென்றெட்டி சபையாரை உந்துவிக்கும். (சங்கீதம் 19:7-9; 119:40; ஒப்பிடுக: லூக்கா 24:32.) அப்படிப்பட்ட பேச்சுக்கள் மனிதருக்கு குறைவான கவனத்தையும் கடவுளுக்கு அதிகமான மகிமையையும் கொண்டுவரும்.
மூப்பர்கள் அதிக திறம்பட்ட போதகர்களாக ஆவதற்கு மற்றொரு வழி, ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதன் மூலமே. பவுல் தீமோத்தேயுவுக்கு உதவிசெய்தது போல, ஒரு மூப்பர் மற்றொரு மூப்பருக்கு உதவி செய்யலாம். “இரும்பை இரும்பு கருக்கிடும்; அப்படியே மனுஷனும் தன் சிநேகிதனுடைய முகத்தைக் கருக்கிடுகிறான்.” (நீதிமொழிகள் 27:17; பிலிப்பியர் 2:3) மூப்பர்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்துகொள்வதன் மூலம் பயனடைகின்றனர். சமீபத்தில் நியமிக்கப்பட்ட மூப்பர் ஒருவர் விளக்கினார்: “அனுபவமுள்ள மூப்பர் ஒருவர், பொதுப் பேச்சில் எவ்வாறு தான் பல குறிப்புகளை ஒன்றுசேர்ந்து பேச்சை தயாரித்தார் என்பதை எனக்கு காண்பிக்க நேரம் எடுத்துக்கொண்டார். அவருடைய தயாரிப்பில், அவர் அறிவினாக்கள், உவமைகள், உதாரணங்கள், அல்லது சிறு அனுபவங்கள் அதோடுகூட அவர் கவனமாய் ஆராய்ச்சிசெய்த பைபிள் பகுதிகள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்வார். சலிப்பூட்டுகிற ஆர்வமில்லாத பேச்சை தவிர்ப்பதற்கு என் பேச்சுக்களில் எவ்வாறு பல்வகை அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை நான் அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன்.”
ஊழிய சிலாக்கியங்களை அனுபவிக்கும் நாம் அனைவரும், மூப்பர்களாகவோ, உதவி ஊழியர்களாகவோ, அல்லது பயனியர்களாகவோ இருந்தாலும், நம்மிடமுள்ள வரத்தை மதிப்புடையதாய் வைத்துப் போற்றுதல் அவசியம். பவுல் தன் மரணத்திற்கு சற்றுமுன்பு, ‘உனக்கு உண்டான தேவ வரத்தை [காரிஸ்மா] நீ அனல்மூட்டி எழுப்பிவிடு’ என்று தீமோத்தேயுவுக்கு நினைப்பூட்டினார், அது தீமோத்தேயுவின் விஷயத்தில் ஆவியினால் உண்டான விசேஷித்த வரமாக இருந்தது. (2 தீமோத்தேயு 1:6) இஸ்ரவேலருடைய வீடுகளில், தீ பெரும்பாலும் செந்தணல்களாகவே இருந்தன. தீக்கொழுந்துகளையும் கூடுதலான வெப்பத்தையும் உண்டாக்குவதற்கு அவற்றை ‘அனல்மூட்டி எழுப்புவது’ கூடியகாரியமாயிருந்தது. இவ்வாறு நம்முடைய நியமிப்புகளைச் செய்கையில் நம் முழு மனதையும் ஈடுபடுத்தி, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள ஆவிக்குரிய வரம் எதுவாக இருந்தாலும் தீயைப் போல் கொழுந்துவிட்டு எரியும்படி தூண்டிவிட நாம் உற்சாகப்படுத்தப்படுகிறோம்.
பகிர்ந்துகொள்ளவேண்டிய ஆவிக்குரிய வரங்கள்
ரோமில் இருந்த சகோதரர்கள் மீது பவுலுக்கு இருந்த அன்பு, இவ்வாறு எழுதும்படி அவரைத் தூண்டியது: ‘நீங்கள் ஸ்திரப்படுவதற்காக ஆவிக்குரிய சில வரங்களை [காரிஸ்மா] உங்களுக்குக் கொடுக்கும்படிக்கும், உங்களிலும் என்னிலுமுள்ள விசுவாசத்தினால் உங்களோடேகூட நானும் ஆறுதலடையும்படிக்கும், உங்களைக் காண வாஞ்சையாயிருக்கிறேன்.’ (ரோமர் 1:10, 11) நாம் மற்றவர்களுடன் பேசுவதன் மூலம் அவர்களுடைய விசுவாசத்தை பலப்படுத்துவதற்கு நமக்கிருக்கும் திறமையை ஆவிக்குரிய வரம் என்று பவுல் கருதினார். அப்படிப்பட்ட ஆவிக்குரிய வரங்களை பரிமாறிக்கொள்வது, விசுவாசத்துக்கு ஆதாரம் கொடுப்பதாயும் பரஸ்பர முறையில் உற்சாகம் அளிப்பதிலும் விளைவடையும்.
இது நிச்சயமாகவே தேவைப்படுகிறது. இந்த பொல்லாத ஒழுங்குமுறையில் வாழும் நாம் அனைவரும் ஏதாவது ஒருவிதத்தில் அழுத்தத்தை எதிர்ப்படுகிறோம். இருப்பினும், தவறாமல் உற்சாகத்தை பரிமாறிக்கொள்வது விடாது நிலைத்திருப்பதற்கு நமக்கு உதவிசெய்யும். பரிமாறிக்கொள்வது என்ற கருத்து—கொடுப்பதும் பெற்றுக்கொள்வதும்—ஆவிக்குரிய பலத்தை காத்துவருவதற்கு முக்கியம். நம் அனைவருக்கும் அவ்வப்போது உற்சாகம் தேவை என்பது உண்மை, ஆனால் நாம் அனைவரும் ஒருவரையொருவர் கட்டியெழுப்பவும்கூட செய்யலாம்.
மனம் வாடிப்போயிருக்கும் உடன் விசுவாசிகளை கவனிப்பதற்கு நாம் விழிப்புள்ளவர்களாய் இருந்தால், ‘தேவனால் நமக்கு அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாம் ஆறுதல்செய்ய’ முடியும். (2 கொரிந்தியர் 1:3-5) ஆறுதல் என்பதற்கான கிரேக்க வார்த்தை (பாராக்லீஸிஸ்) “ஒருவரிடமாக அழைத்தல்” என்று சொல்லர்த்தமாக பொருள்படுகிறது. தேவைப்படும்போது, நம் சகோதரருக்கோ அல்லது சகோதரிக்கோ உதவிசெய்ய நாம் அருகில் இருந்தால், நாம் தேவையில் இருக்கும்போது, நாமும்கூட அதே அன்பான ஆதரவை பெற்றுக்கொள்வோம் என்பதில் சந்தேகமில்லை.—பிரசங்கி 4:9, 10; ஒப்பிடுக: அப்போஸ்தலர் 9:36-41.
மூப்பர்களின் அன்பான மேய்க்கும் சந்திப்புகளும்கூட மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். சில சமயங்களில் கவனத்தை தேவைப்படுத்தும் விஷயத்தைப் பற்றி பைபிள் புத்திமதியைக் கொடுப்பதற்காக சந்திப்புகள் செய்யப்பட்டாலும், பெரும்பாலான மேய்க்கும் சந்திப்புகள் உற்சாகப்படுத்துவதற்காக, ‘இருதயங்களைத் தேற்றுவதற்கான’ சமயங்களாக இருக்கின்றன. (கொலோசெயர் 2:2) கண்காணிகள் அப்படிப்பட்ட விசுவாசத்தை பலப்படுத்தும் சந்திப்புகளை செய்யும்போது, அவர்கள் உண்மையிலேயே ஆவிக்குரிய வரத்தை பகிர்ந்தளிக்கின்றனர். பவுலைப் போல் இந்த தனிச்சிறப்புவாய்ந்த கொடுத்தலை பலனளிப்பதாக காண்பார்கள், தங்கள் சகோதரர்களைக் காண ‘வாஞ்சையாயிருப்பார்கள்.’—ரோமர் 1:11.
பின்வரும் அனுபவத்தைக் கூறும் ஸ்பெய்னில் உள்ள ஒரு மூப்பரின் விஷயத்தில் இது உண்மையாய் இருந்தது: “ரிக்கார்டோ என்னும் ஒரு 11 வயது சிறுவன் கூட்டங்களிலும், பொதுவாக சபை விஷயங்களிலும் சிறிதளவே அக்கறை காண்பித்ததாக தோன்றியது. ஆகையால் அவர்களுடைய மகனை சந்திப்பதற்கு அனுமதி கொடுக்கும்படி ரிக்கார்டோவின் பெற்றோரை நான் கேட்டேன், அதற்கு அவர்கள் உடனடியாக ஒத்துக்கொண்டார்கள். என் வீட்டிலிருந்து சுமார் ஒரு மணிநேரம் பயணம் செய்யும் தூரத்திலிருந்த மலைகளில் அவர்கள் வசித்து வந்தனர். நான் அவனிடத்தில் காண்பித்த அக்கறையைப் பார்த்து ரிக்கார்டோ சந்தோஷப்பட்டு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்தான். அவன் சீக்கிரத்தில் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபியாகவும் சபையின் ஒரு சுறுசுறுப்பான அங்கத்தினராகவும் ஆனான். அவனுடைய கூச்சமுள்ள சுபாவம் அதிக சந்தோஷமான, சிநேகபான்மையான சுபாவமாக மாறியது. சபையில் இருந்த அநேகர் ‘ரிக்கார்டோவுக்கு என்ன ஆனது?’ என்று கேட்டார்கள். முதல் முறையாக அவர்களது கவனம் அவன்மேல் திரும்பியதுபோல் தோன்றியது. அந்த முக்கியமான மேய்க்கும் சந்திப்பை சிந்தித்துப் பார்க்கையில், ரிக்கார்டோவைக் காட்டிலும் நான் அதிகம் பயனடைந்திருப்பதாக உணருகிறேன். அவன் ராஜ்ய மன்றத்திற்குள் நுழையும்போது, அவனுடைய முகம் பிரகாசிக்கிறது, எனக்கு வணக்கம் தெரிவிப்பதற்கு அவன் ஆவலோடு விரைந்து வருகிறான். அவனுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பார்ப்பது மகிழ்ச்சியாய் இருந்திருக்கிறது.”
இதைப் போன்ற மேய்க்கும் சந்திப்புகள் மிகவும் அதிகமாய் ஆசீர்வதிக்கப்படுகின்றன என்பதில் சந்தேகமில்லை. இப்படிப்பட்ட சந்திப்புகள் இயேசுவின் பின்வரும் வேண்டுகோளுக்கு இசைவாய் இருக்கின்றன: “என் ஆடுகளை மேய்ப்பாயாக.” (யோவான் 21:16) இப்படிப்பட்ட ஆவிக்குரிய வரங்களை பகிர்ந்து அளிப்பவர்கள் மூப்பர்கள் மட்டுமல்ல. சபையில் இருக்கும் ஒவ்வொருவரும் மற்றவர்களை அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் தூண்டியெழுப்பலாம். (எபிரெயர் 10:23, 24) மலையின் மீது ஏறுகிறவர்கள் கயிறுகளால் இணைக்கப்பட்டிருப்பது போல, நாம் ஆவிக்குரிய கட்டுகளால் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம். தவிர்க்கமுடியாதவகையில், நாம் செய்வதும் சொல்வதும் மற்றவர்களை பாதிக்கிறது. நம்மை ஒன்றிணைக்கும் கட்டுகளை புண்படுத்தும் பேச்சு அல்லது கடுமையான குறைகூறல் பலவீனப்படுத்தலாம். (எபேசியர் 4:29; யாக்கோபு 3:8) மறுபட்சத்தில், நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உற்சாகமூட்டும் வார்த்தைகளும் அன்பான உதவியும் சகோதரர்கள் தங்கள் கஷ்டங்களை மேற்கொள்வதற்கு உதவக்கூடும். இந்த விதத்தில் நிரந்தரமான மதிப்பையுடைய ஆவிக்குரிய வரங்களை நாம் பகிர்ந்துகொள்வோம்.—நீதிமொழிகள் 12:25.
கடவுளுடைய மகிமையை முழுமையான விதத்தில் பிரதிபலித்தல்
ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஓரளவு கரிஸ்மா அல்லது வரங்களைப் பெற்றிருக்கிறார் என்பது தெளிவாய் தெரிகிறது. நித்திய ஜீவன் என்னும் விலைமதிப்பற்ற நம்பிக்கை நமக்கு அருளப்பட்டிருக்கிறது. நாம் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஆவிக்குரிய வரங்களையும் பெற்றிருக்கிறோம். நாம் மற்றவர்களை சரியான இலக்குகளிடமாக ஏவுவதற்கு அல்லது உந்துவிப்பதற்கு முயற்சி செய்யலாம். சிலர் ஊழிய சிலாக்கியங்கள் என்ற வடிவில் கூடுதலான வரங்களைப் பெற்றிருக்கின்றனர். இந்த வரங்கள் அனைத்தும் கடவுளுடைய தகுதியற்ற தயவின் அத்தாட்சி. நாம் பெற்றிருக்கும் எந்த வரமும் கடவுளிடமிருந்து நாம் பெற்றிருப்பதால் அதைக் குறித்து பெருமை பாராட்ட நிச்சயமாகவே நமக்கு எந்த காரணமுமில்லை.—1 கொரிந்தியர் 4:7.
கிறிஸ்தவர்களாக, நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்வது நல்லது, ‘“நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்” அளிக்கும் யெகோவாவுக்கு மகிமையைக் கொண்டுவர என்னிடமிருக்கும் எந்தளவு கரிஸ்மாவையும், அல்லது வரங்களையும் நான் பயன்படுத்துவேனா? (யாக்கோபு 1:17) என்னுடைய திறமைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இயேசுவை பார்த்து பின்பற்றி மற்றவர்களுக்கு ஊழியம் செய்வேனா?’
இந்த விஷயத்தைக் குறித்ததில் நம் பொறுப்பை அப்போஸ்தலனாகிய பேதுரு இவ்வாறு சுருக்கி உரைக்கிறார்: “அவனவன் பெற்ற வரத்தின்படியே [காரிஸ்மா] நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர் போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். ஒருவன் போதித்தால் தேவனுடைய வாக்கியங்களின்படி போதிக்கக்கடவன்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி செய்யக்கடவன்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாய்த் தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக.”—1 பேதுரு 4:10, 11.
[அடிக்குறிப்பு]
a ஜிம் ஜோன்ஸ் உட்பட மொத்தம் 913 பேர் இறந்துவிட்டனர்.
[பக்கம் 23-ன் படத்திற்கான நன்றி]
Corbis-Bettmann
UPI/Corbis-Bettmann