யெகோவா யார்?
யெகோவா தம்மை உண்மையாய் வணங்கிவந்த ஒருவரிடம் இவ்வாறு சொன்னார்: “ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிரான்.” (யாத்திராகமம் 33:20, திருத்திய மொழிபெயர்ப்பு) “தேவன் ஆவியாயிருக்கிறார்,” மானிடர்கள் அவரை தங்கள் மாம்சக் கண்களால் காணமுடியாது. (யோவான் 4:24) நடுப்பகலில் சூரியனை நேரடியாக காண்பது எப்படி நம் கண்களுக்கு நாசம் விளைவிக்குமோ, அதுபோலவே நாம் இந்தப் பிரகாசமான சூரியனை மட்டுமல்ல, ஆனால் இப்பிரபஞ்சத்திலுள்ள எண்ணற்ற மற்ற சூரியன்களையும் சிருஷ்டித்த பேராற்றல்வாய்ந்த சக்தியின் ஊற்றுமூலரை காண்பதும்கூட அழிவுண்டாக்குவதாய் இருக்கும்.
மகிழ்ச்சியளிக்கும் விதத்தில், நாம் கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு அவரைப் பார்க்க வேண்டிய அவசியமில்லை. பைபிள், அந்த அதிசயமான பாக்கெட்டாகிய பூமியை நமக்காக தயாரித்தவரை அடையாளம் காண்பிக்கிறது, மேலும் அவருடைய ஆளுமையையும் வெளிப்படுத்துகிறது. ஆகையால் நமக்கு ஜீவனையும், அதனை அனுபவிப்பதற்கென இன்பமான வீட்டையும் தந்த தகப்பனைப் பற்றி கண்டுபிடிப்பதற்கு பைபிளை ஆராய்ந்து பார்ப்பது பயனுள்ளது.
அவருடைய பெயரின் தனிச்சிறப்பு
எல்லா பெயர்களுக்கும் அர்த்தங்கள் உண்டு, இன்று அவற்றைக் குறித்து அநேகர் அறியாமலும்கூட இருக்கலாம். உதாரணமாக, சர்வசாதாரணமாயுள்ள ஆங்கில பெயராகிய டேவிட், “அன்புக்குரியவர்” என்ற அர்த்தத்தை உடைய எபிரெய வார்த்தையிலிருந்து வருகிறது. ஆகவே சிருஷ்டிகருடைய பெயராகிய யெகோவா என்ற பெயருக்கும்கூட ஒரு அர்த்தம் உள்ளது. அது என்ன? பைபிள் எழுதப்பட்ட மூல மொழியாகிய எபிரெயுவில், கடவுளுடைய பெயர் YHWH என்ற நான்கு எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது; இது பைபிளின் எபிரெய பகுதியில் சுமார் 7,000 தடவைகள் காணப்படுகிறது. அந்தக் கடவுளுடைய பெயர் “அவர் ஆகச்செய்கிறவர்” என்ற அர்த்தமுள்ளதாக புரிந்துகொள்ளப்படுகிறது. யெகோவா தம் நோக்கங்களை நிறைவேற்றுவதற்கு என்னவாக ஆக தேவைப்படுகிறாரோ அவ்விதமாய் ஞானமாக தம்மை ஆக்கிக்கொள்கிறார் என்று அது பொருள்படுகிறது. அவர் சிருஷ்டிகர், நியாயாதிபதி, இரட்சகர், உயிரை ஆதரிப்பவர், ஆகையால் அவரால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். இன்னும் கூடுதலாக, எபிரெயுவில் யெகோவா என்ற பெயர், நிறைவேற்றப்பட வேண்டிய வழிமுறையில் உள்ள ஒரு செயலை குறிப்பிட்டுக் காட்டும் வடிவில் உள்ளது. ஆம், யெகோவா தம் நோக்கங்களை நிறைவேற்றுபவராக இருப்பதற்கென இன்னும் தம்மை ஆகச்செய்கிறார். அவர் ஒரு உயிருள்ள கடவுள்!
யெகோவாவின் தனிச்சிறப்பான பண்புகள்
“கர்த்தர், இரக்கமும், கிருபையும், நீடியசாந்தமும், மகா தயையும் சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் [அன்புள்ள இரக்கம், NW] காக்கிறவர்; அக்கிரமத்தையும், மீறுதலையும், பாவத்தையும் மன்னிக்கிறவர்” என்று பைபிள் அவரை விவரிக்கிறது. (யாத்திராகமம் 34:6, 7) “அன்புள்ள-இரக்கம்” என்ற சொற்றொடர் அதிக அர்த்தமுள்ள ஒரு எபிரெய சொல்லை மொழிபெயர்க்கிறது. அது ஒரு பொருளின் பேரில் அதற்கு இருக்கும் நோக்கம் நிறைவேறும் வரையில், அதோடு அன்பாக இணைத்துக்கொள்ளும் இரக்கத்தைக் குறிப்பிடுகிறது. அது “உண்மைப்பற்றுறுதியுள்ள அன்பு” என்றும்கூட மொழிபெயர்க்கப்படலாம். யெகோவாவின் இரக்கம் அவருடைய சிருஷ்டிகளோடு அன்பாக இணைத்துக்கொண்டு அவருடைய அதிசயமான நோக்கத்தை நிறைவேற்றுகிறது. உங்களுக்கு உயிரைக் கொடுத்திருக்கும் ஒருவரிடமிருந்து வரும் அப்படிப்பட்ட அன்பை நீங்கள் நெஞ்சார மதித்துப் போற்றுவீர்கள் அல்லவா?
யெகோவா கோபிப்பதற்கு தாமதிக்கிறவராகவும் நம் தவறுகளை விரைவாக மன்னிக்கிறவராகவும் இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நபரோடு நெருக்கமாய் இருப்பது இதயத்திற்கு அனலூட்டுகிறது. இருந்தபோதிலும், அவர் தவறுகளைப் பாராமல் பொறுத்துக்கொள்வார் என்பதை அது அர்த்தப்படுத்துவதில்லை. அவர் அறிவித்தார்: “கர்த்தராகிய நான் நியாயத்தை விரும்பி, கொள்ளைப் பொருளினால் இடப்பட்ட தகனபலியை வெறுக்கிறேன்.” (ஏசாயா 61:8) ஆகவே, அவர் நியாயமான கடவுளாக இருக்கிறபடியால், வெட்கங்கெட்ட துணிகரமான பாவிகள் தங்கள் துன்மார்க்கத்தில் தொடர்ந்து நிலைத்திருப்பதை அவர் எப்போதுமே சகித்துக்கொண்டிருக்க மாட்டார். ஆகையால் யெகோவா தம்முடைய தகுதியான சமயத்தில் இவ்வுலகிலுள்ள அநீதிகளை திருத்துவார் என்று நாம் நிச்சயமாயிருக்கலாம். அவர் துன்பத்துக்கு ஆளானவர்களை புறக்கணிக்கமாட்டார்.
அன்பு மற்றும் நியாயம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு பரிபூரணமான சமநிலையை காத்துவருவது சுலபமானதல்ல. நீங்கள் ஒரு பெற்றோராய் இருந்தால், உங்கள் பிள்ளைகள் தவறாக நடந்துகொள்ளும்போது, எப்போது, எவ்வாறு, எந்த அளவுக்கு அவர்களைத் திருத்துவது என்று தீர்மானிப்பதை நீங்கள் கடினமாக உணருகிறீர்களா? நியாயத்தை அன்புள்ள இரக்கத்தோடு சமநிலைப்படுத்துவதற்கு பெரும் ஞானம் தேவைப்படுகிறது. அந்தப் பண்பை யெகோவா, மானிடரோடு செயல் தொடர்புகொள்கையில் பெருமளவில் வெளிக்காட்டுகிறார். (ரோமர் 11:33-36) உண்மையில், சிருஷ்டிகரின் ஞானத்தை எல்லா இடங்களிலும், உதாரணமாக, நம்மைச் சுற்றியிருக்கும் சிருஷ்டிப்பின் அதிசயங்களில் காணலாம்.—சங்கீதம் 104:24; நீதிமொழிகள் 3:19.
இருப்பினும், ஞானத்தை மட்டும் பெற்றிருப்பது போதுமானதல்ல. அவருடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கு சிருஷ்டிகருக்கு வல்லமையும்கூட தேவைப்படுகிறது, மேலும் அவர் மிகவும் வல்லமைவாய்ந்தவர் என்று பைபிள் வெளிப்படுத்துகிறது: “உங்கள் கண்களை ஏறெடுத்துப் பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும், அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.” (ஏசாயா 40:26) யெகோவா, ‘மகா வல்லமையினால்’ காரியங்களை செய்துமுடிக்கிறார். அப்படிப்பட்ட பண்பு உங்களை அவரிடமாக கவர்ந்திழுக்கிறதல்லவா?
எல்லா தேசங்களுக்குமுரிய கடவுள்
‘ஆனால் பண்டைய இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா “பழைய ஏற்பாட்டின்” கடவுள்தானே’ என்று நீங்கள் ஒருவேளை யோசிக்கலாம். யெகோவா தம்மை இஸ்ரவேலருக்கு வெளிப்படுத்தினார் என்பது உண்மையே. இருப்பினும், முதல் மானிட தம்பதிகளை சிருஷ்டித்திருப்பதன் காரணமாக, “பூலோகத்திலுள்ள முழுக்குடும்பத்துக்கும் நாமகாரணராயிருக்கும்” கடவுள் யெகோவாவே. (எபேசியர் 3:14) உங்கள் மூதாதையருக்கு மரியாதை கொடுப்பது சரியானதே என்று நீங்கள் நம்பினால், நமக்கு பொதுவாயுள்ள மூதாதையர், அதாவது, முதல் மனிதனுக்கு ஜீவனைத் தந்தவரும் இன்று பூமியிலுள்ள எல்லா வம்சங்களுக்கும் மூலகாரணராயிருப்பவருக்கு தலை வணங்கி மரியாதை செலுத்துவது பொருத்தமானதாய் இருக்குமல்லவா?
மனிதவர்க்கத்தை சிருஷ்டித்தவர் குறுகிய மனப்பான்மையுள்ளவர் அல்ல. ஒரு சமயம் இஸ்ரவேல் தேசத்தோடு அவர் விசேஷ உறவை வைத்திருந்தது உண்மைதான். ஆனால் அப்படியிருந்தபோதிலும், அவருடைய பெயரை நோக்கிக் கூப்பிட்ட எல்லாரையும் அவர் ஆர்வத்தோடு ஏற்றுக்கொண்டார். இஸ்ரவேலின் ஒரு ஞானமான ராஜா யெகோவாவிடம் ஜெபிக்கையில் இவ்வாறு சொன்னார்: “உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேல் ஜாதியல்லாத அந்நிய ஜாதியார் . . . உமது நாமத்தினிமித்தம் தூரதேசத்திலிருந்து வந்து . . . பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு . . . பூமியின் ஜனங்களெல்லாரும் உம்முடைய நாமத்தை அறியத்தக்கதாக அந்த அந்நிய ஜாதியான் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.” (1 இராஜாக்கள் 8:41-43) இன்றுவரையாக, எல்லா தேசத்தைச் சேர்ந்த ஜனங்களும் யெகோவாவை அறிந்து அவரோடு ஓர் அர்த்தமுள்ள உறவைப் பெற்றிருக்க முடியும். ஆனால் அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது?
யெகோவாவை அறிந்திருப்பதனால் வரும் பலன்கள்
முந்தைய கட்டுரையிலுள்ள உதாரணத்தை மறுபடியும் பாருங்கள். நீங்கள் அழகாக பேக் செய்யப்பட்டிருக்கும் ஒரு பாக்கெட்டை பெற்றுக்கொண்டால், அந்த வெகுமதி எதற்காக என்று நீங்கள் இயல்பாகவே அறிந்துகொள்ள விரும்புவீர்கள். அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு கவனித்துக்கொள்ள வேண்டும்? அதேபோல், கடவுள் இந்தப் பூமியை நமக்காக தயாரித்தபோது, அவர் மனதில் எதை வைத்திருந்தார் என்பதை நாம் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். அவர் “வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல்” அதாவது, மானிடரின் ‘குடியிருப்புக்காகச் செய்து படைத்தார்’ என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 45:18.
ஆனால், பெரும்பாலான மனிதர்கள் சிருஷ்டிகரின் வெகுமதியை கவனித்துக் கொள்ளவேயில்லை. யெகோவா அதிக கோபப்படும் வகையில் இந்தப் பூமியை அழிப்பதற்கான பாதையில் அவர்கள் இருக்கின்றனர். இருப்பினும், அவருடைய பெயரின் அர்த்தத்துக்கு பொருத்தமாகவே, யெகோவா மனிதனுக்கும் பூமிக்குமான அவருடைய ஆதி நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு தீர்மானம் உள்ளவராய் இருக்கிறார். (சங்கீதம் 115:16; வெளிப்படுத்துதல் 11:18) அவர் பூமியை பழுதுபார்த்து, அவருடைய கீழ்ப்படிதலுள்ள பிள்ளைகளாக வாழ விருப்பமுள்ளோருக்கு அதை சுதந்தரமாக கொடுப்பார்.—மத்தேயு 5:5.
அது நிகழும்போது காரியங்கள் எப்படி இருக்கும் என்று பைபிளின் கடைசி புத்தகம் இவ்வாறு விவரிக்கிறது: “இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) அப்போது அன்பான ஒருவரின் இழப்பால் எவருமே மனவேதனைப்பட்டு கண்ணீர் சிந்தமாட்டார்கள் அல்லது வருந்தமாட்டார்கள். நம்பிக்கையிழந்த நிலையில் உதவிக்காக எவருமே கதறி அழமாட்டார்கள் அல்லது மரணத்தை விளைவிக்கும் நோய்களின் வலியால் வேதனைப்பட மாட்டார்கள். ‘மரணமும் ஒழிக்கப்பட்டுப்போகும்.’ (1 கொரிந்தியர் 15:26, NW; ஏசாயா 25:8; 33:24) யெகோவா நம்முடைய முதல் மூதாதையர்களை சிருஷ்டித்தபோது, நாம் மகிழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் விரும்பிய வாழ்க்கையை இது விவரிக்கிறது.
உண்மையில், யெகோவாவின் வணக்கத்தார் மத்தியில் இப்போது அப்படிப்பட்ட பரதீஸிய நிலைமைகளின் முற்காட்சியை நீங்கள் காணலாம். அவர் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: “உன் கடவுளாகிய யெகோவா நானே, பிரயோஜனமானவற்றை நான் உனக்குப் போதிக்கிறேன்; நீ செல்லவேண்டிய வழியிலே உன்னை நடத்துகிறேன்.” (ஏசாயா 48:17, தி.மொ.) யெகோவா தயவுள்ள பிதாவாய் இருக்கிறார், அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு வாழ்வதற்கான மிகச்சிறந்த விதத்தை போதிக்கிறார். மானிடர்களுக்கான அவருடைய வழிகாட்டுக் குறிப்புகள் அளவுக்குமீறி கட்டுப்படுத்துவதாய் இல்லை, ஆனால் அன்பானவிதத்தில் நமக்கு அவை பாதுகாப்பளிக்கிறது. எழுதப்பட்டிருப்பது போலவே, அவற்றைப் பின்பற்றுவது மெய்யான சுயாதீனத்திலும் மகிழ்ச்சியிலும் விளைவடையும்: “கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு.” (2 கொரிந்தியர் 3:17) பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுக் குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம், அவருடைய அரசாட்சியை ஏற்றுக்கொள்வோர் இப்போது மன சமாதானத்தை அனுபவிக்கின்றனர், அது ஒரு நாள் மனிதவர்க்க உலகம் முழுவதும் வியாபித்திருக்கும்.—பிலிப்பியர் 4:7.
யெகோவா எப்படிப்பட்ட நற்காரியங்களை செய்யும் கடவுளாக இருக்கிறார்! சிருஷ்டிப்பின் எல்லா அதிசயங்களுக்கும் பின்னால் இருக்கும் ஒருவரைப் பற்றி நீங்கள் அதிகமாக கற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? அவ்வாறு விரும்புவோருக்கு, இப்போதும்கூட கிடைக்கவிருக்கும் நன்மைகள் விலைமதிப்பிட முடியாதவை. எதிர்கால ஆசீர்வாதமோ நித்தியமானவை.
[பக்கம் 5-ன் படம்]
நான்கு எபிரெய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ள கடவுளுடைய பெயரை அநேக பழைய சர்ச்சுகளின் சுவர்களில் காணலாம்