“உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்”
யெகோவா தயாள குணமே உருவானவர்! ‘நன்மையான எந்த ஈவையும் பூரணமான எந்த வரத்தையும்’ வாரி வழங்குபவரும் அவரே என்று பைபிள் தெள்ளத்தெளிவாக சொல்லுகிறது. (யாக்கோபு 1:17) இப்பொழுது, கடவுளுடைய படைப்புகளின் வனப்பை உங்கள் மனத்திரையில் சற்று ஓடவிடுங்கள். உதாரணமாக, அவர் நமக்கு கொடுத்திருக்கும் உணவு சக்கை மாதிரியா இருக்கிறது? இல்லையே. நாவூறும் அறுசுவை உணவை அளித்திருக்கிறார். மலர்களைப் பற்றியென்ன? மங்கிக் கிடக்கின்றனவா? இல்லையே. கண்கவர் வண்ணங்களில் விழிகளுக்கு விருந்தளிக்கின்றன. சூரிய அஸ்தமனம்? பொலிவற்ற ஒன்றல்லவே. அது கண்கொள்ளா காட்சி! ஆம், யெகோவாவின் ஒவ்வொரு படைப்பும் அவருடைய அன்பையும் தயாளத்தையும் பறைசாற்றுகின்றன. (சங்கீதம் 19:1, 2; 139:14) யெகோவா உற்சாகமாய்க் கொடுப்பவரும்கூட. அவருடைய ஊழியர்களுக்கு நன்மை செய்வதில் அவருக்கு அலாதிப் பிரியம்.—சங்கீதம் 84:11; 149:4.
கடவுளின் இந்த தயாள குணத்தை பின்பற்ற வேண்டும் என்று இஸ்ரவேலருக்கு கட்டளையிடப்பட்டது. ஒருவருக்கொருவர் தயாள குணத்தைக் காட்டவேண்டுமென கட்டளையிடப்பட்டனர். மோசே அவர்களிடம் சொன்னார்: “எளியவனாகிய உன் சகோதரனுக்கு உன் இருதயத்தை நீ கடினமாக்காமலும் உன் கையை மூடாமலும்” இருப்பாயாக. மேலும், “அவனுக்குத் தாராளமாய்க் கொடுப்பாயாக; அவனுக்குக் கொடுக்கும்போது உன் இருதயம் விசனப்படாதிருப்பதாக.” (உபாகமம் 15:7, 10) கொடுத்தல்—இதயத்திலிருந்து வரவேண்டிய செயல். எனவே, இஸ்ரவேலர் தயாள குணத்தைக் காட்டுகையில் மனம் மகிழ வேண்டும்.
கிறிஸ்தவர்களுக்கும் இதே போன்ற புத்திமதி கொடுக்கப்பட்டது. “கொடுப்பதிலேயே மகிழ்ச்சி”—இது இயேசுவின் வார்த்தைகள். (அப்போஸ்தலர் 20:35, NW) உற்சாகமாய்க் கொடுப்பதில் இயேசுவின் சீஷர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்ந்தனர். உதாரணமாக, எருசலேமில் விசுவாசிகளானவர்கள் “காணியாட்சிகளையும் ஆஸ்திகளையும் விற்று, ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக அவைகளில் எல்லாருக்கும் பகிர்ந்துகொடுத்தார்கள்.”—அப்போஸ்தலர் 2:44, 45.
ஆனால், தயாளகுணம் படைத்த இந்த யூதேயர் வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டனர். ஏன் இந்த நிலைமை? காரணத்தை பைபிள் குறிப்பிடுவதில்லை. ஆனால், அப்போஸ்தலர் 11:28, 29-ல் சொல்லப்பட்டுள்ள பஞ்சம் ஒருவேளை இதற்கு காரணமாக இருக்கலாம்—இது சில நிபுணர்களின் கூற்று. எப்படியிருப்பினும், யூதேய கிறிஸ்தவர்கள் வறுமையில் தத்தளித்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய தேவைகள் நிச்சயம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்று பவுல் விரும்பினார். அதை எப்படி செய்தார்?
தேவையில் இருப்போருக்காக பணம் திரட்டுதல்
வெகு தொலைவிலிருந்த மக்கெதோனியா உட்பட பல சபைகளை பவுல் ஊக்குவித்து, உதவியளிக்கும்படி கேட்டார். வறுமையில் வாடிவதங்கிய யூதேய கிறிஸ்தவர்களுக்காக பணம் திரட்ட ஏற்பாடு செய்தார். எனவே, கொரிந்தியர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “நான் கலாத்தியா நாட்டுச் சபைகளுக்குப் பண்ணின திட்டத்தின்படியே [“உத்திரவின்படியே,” NW] நீங்களும் செய்யுங்கள். . . . உங்களில் அவனவன் வாரத்தின் முதல்நாள்தோறும், தன்தன் வரவுக்குத் தக்கதாக எதையாகிலும் தன்னிடத்திலே சேர்த்துவைக்கக்கடவன்.”a—1 கொரிந்தியர் 16:1, 2.
எருசலேமிலுள்ள சகோதரர்களுக்கு விரைவில் பணம் பட்டுவாடா ஆகவேண்டும் என்று பவுல் உத்தேசித்தார். ஆனால் கொரிந்தியர்களோ பவுலின் புத்திமதியை அமல்படுத்த தாமதித்தனர். ஏன்? யூதேய கிறிஸ்தவர்களின் நெருக்கடி நிலைமையை கேள்விப்பட்டும் மனதைக் கல்லாக்கிக்கொண்டனரா? இல்லை. கொரிந்தியர்கள் “விசுவாசத்திலும் போதிப்பதிலும் அறிவிலும் தளரா முயற்சியிலும் பெருகினவர்களாக” இருந்தனர் என்பதை பவுல் அறிந்திருந்தார். (2 கொரிந்தியர் 8:7, NW) பவுலின் முதல் கடிதத்தில் எழுதப்பட்டிருந்த வேறே முக்கியமான விஷயங்களை கவனிப்பதில் ஒருவேளை அவர்கள் ஆழ்ந்திருக்கலாம். ஆனால் எருசலேமின் நிலைமையோ மிகவும் நெருக்கடி. எனவே, கொரிந்தியர்களுக்கு எழுதின அவருடைய இரண்டாவது கடிதத்தில் பவுல் இதைக் குறித்து எழுதினார்.
தாராளகுணத்திற்கு வேண்டுகோள்
முதலாவது, மக்கெதோனியரைப் பற்றி கொரிந்தியருக்கு பவுல் எழுதினார். அவர்களுடைய நிவாரண நடவடிக்கையை மெச்சினார். “அவர்கள் மிகுந்த உபத்திரவத்தினாலே சோதிக்கப்படுகையில், கொடிய தரித்திரமுடையவர்களாயிருந்தும், தங்கள் பரிபூரண சந்தோஷத்தினாலே மிகுந்த உதாரத்துவமாய்க் கொடுத்தார்கள்” என்று பவுல் எழுதினார். கொடுக்கும் விஷயத்தில் மக்கெதோனியரை எவரும் தூண்ட வேண்டிய அவசியமில்லை. அதற்குமாறாக, ‘தங்கள் உபகாரத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளும்படி அவர்கள் எங்களை மிகவும் வேண்டிக்கொண்டார்கள்’ என்று பவுல் சொன்னார். மக்கெதோனியர் ‘கொடிய வறுமையில்’ (NW) தவித்தபோதிலும், உற்சாகமாய்க் கொடுத்தது மிகவும் மெச்சத்தகுந்தது.—2 கொரிந்தியர் 8:2-4.
மக்கெதோனியரை புகழ்ந்து, கிறிஸ்தவர்களுக்கு இடையே போட்டி மனப்பான்மையை தூண்டிவிட பவுல் முயன்றாரா? இல்லவே இல்லை. இப்படி உந்துவிப்பது சரியான முறையல்ல என்று அவருக்குத் தெரியும். (கலாத்தியர் 6:4) அதோடு, கொரிந்தியர்களின் மனதை உறுத்தி சரியானதைச் செய்ய கட்டாயப்படுத்த வேண்டியதில்லை எனவும் அறிந்திருந்தார். யூதேய கிறிஸ்தவர்களை கொரிந்தியர்கள் உயிருக்குயிராக நேசித்தார்கள் என்றும் நிவாரண நடவடிக்கைக்கு நன்கொடையளிக்க விரும்பினார்கள் என்றும் பவுலுக்கு நம்பிக்கை இருந்தது. எனவேதான் பவுல் அவர்களிடம் சொன்னார்: “கடந்த ஆண்டிலிருந்தே நீங்கள் இப்பணியைச் செய்து வருகிறீர்கள்; அது மட்டுமல்ல; இதனை விருப்பத்தோடு தொடங்கியவர்களும் நீங்களே.” (2 கொரிந்தியர் 8:10, பொ.மொ.) நிவாரண நடவடிக்கைக்கான சில அம்சங்களில் கொரிந்தியர்களும்கூட சிறந்த முன்மாதிரிகளே. பவுல் அவர்களிடம் சொன்னார்: “உங்களுக்கு உள்ள ஆர்வம் எனக்குத் தெரிந்ததே. அதைக் குறித்து மாசிதோனிய மக்களிடம் பெருமையோடு பேசியிருக்கிறேன்.” கூடுதலாக, ‘உங்கள் ஆர்வம் பலரைத் தூண்டிவிட்டிருக்கிறது.’ (2 கொரிந்தியர் 9:2, பொ.மொ.) ஆனால், இப்பொழுதோ அவர்கள் தங்களுடைய உற்சாகத்தையும் ஆர்வத்தையும் செயலில்காட்ட வேண்டும்.
எனவே, பவுல் அவர்களிடம் சொன்னார்: “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.” (2 கொரிந்தியர் 9:7) பவுல் கொரிந்தியர்களை வற்புறுத்த நினைக்கவில்லை. ஏனெனில், ஒருவர் கட்டாயப்படுத்தப்படும்போது அவரால் உற்சாகமாய்க் கொடுக்கமுடியாது. கொரிந்தியருக்கு நல்ல உள்நோக்கம் இருந்தது என்றும், கொடுப்பதற்கு ஒவ்வொருவரும் ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர் என்றும் பவுல் நினைத்ததாக தெளிவாய் தெரிகிறது. எனவே, பவுல் அவர்களிடம் சொன்னார்: “ஒருவனுக்கு மனவிருப்பமிருந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும்.” (2 கொரிந்தியர் 8:12) ஆம், ஒருவர் மனவிருப்பத்தோடு, அன்பினால் தூண்டப்பட்டு கொடுப்பது எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை தேவன் ஏற்றுக்கொள்கிறார்.—லூக்கா 21:1-4-ஐ ஒப்பிடுக.
இன்று உற்சாகமாய் கொடுப்போர்
யூதேய கிறிஸ்தவர்களின் சார்பாக எடுக்கப்பட்ட நிவாரண நடவடிக்கை நம்முடைய நாட்களுக்கு தலைசிறந்த எடுத்துக்காட்டு. இன்று யெகோவாவின் சாட்சிகள் உலகளாவிய பிரசங்கிப்பு வேலையை செய்துவருகின்றனர். இது ஆவிக்குரிய பஞ்சத்தில் பரிதபிக்கும் கோடானு கோடிபேருக்கு போஷாக்கு அளிக்கிறது. (ஏசாயா 65:13, 14) இயேசுவின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இதைச் செய்கின்றனர்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.”—மத்தேயு 28:19, 20.
இந்தக் கட்டளையை நிறைவேற்றுவது சுலபமான காரியமல்ல. இது மிஷனரி இல்லங்களையும் உலகம் முழுவதும் நூற்றுக்கும் அதிகமான கிளை அலுவலகங்களை நிர்வகிப்பதையும் உட்படுத்துகிறது. மேலும், யெகோவாவின் வணக்கத்தார் ஒன்றுகூடி ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துவதற்கு ஏற்ற இடங்களான ராஜ்ய மன்றங்களையும் மாநாட்டு மன்றங்களையும் கட்டுவதை அவசியப்படுத்துகிறது. (எபிரெயர் 10:24, 25) இயற்கை சீற்றத்தால் சீரழிந்த இடங்களுக்கு உதவிப் பொருட்களையும் யெகோவாவின் சாட்சிகள் அனுப்புகின்றனர்.
பத்திரிகைகள், புத்தகங்கள் அச்சிட செலவாகும் இமாலய தொகையை எண்ணிப்பாருங்கள். ஒவ்வொரு வாரமும், சராசரியாக, 2,20,00,000-க்கும் அதிகமான காவற்கோபுர பிரதிகளும் சுமார் 2,00,00,000 விழித்தெழு! பிரதிகளும் அச்சிடப்படுகின்றன. இவை ஆவிக்குரிய ஆகாரத்தை தவறாமல் வழங்குகின்றன. இதுமட்டுமா? ஒவ்வொரு வருடமும் கோடிக்கணக்கான புத்தகங்களும், சிற்றேடுகளும், ஆடியோ கேஸட்டுகளும், வீடியோ கேஸட்டுகளும் தயாரிக்கப்படுகின்றன.
இவற்றிற்கு பணம் எங்கிருந்து வருகிறது? மனமுவந்த நன்கொடையின் மூலமே. இவை தன்னல நோக்கத்திற்காகவோ விளம்பரத்திற்காகவோ கொடுக்கப்படுகிறதில்லை. ஆனால், உண்மை வணக்கத்தை முன்னேற்றுவிப்பதற்காகவே. எனவே, இது கொடுப்போருக்கு கடவுளுடைய ஆசீர்வாதத்தோடு மகிழ்ச்சியையும் தருகிறது. (மல்கியா 3:10; மத்தேயு 6:1-4) யெகோவாவின் சாட்சிகளுடைய பிள்ளைகளும்கூட தாராளமாயும் உற்சாகமாயும் கொடுக்கின்றனர். உதாரணமாக, அமெரிக்க மாகாணங்களின் ஒரு பகுதி கடும் சூறைக்காற்றால் சின்னாபின்னமடைந்ததை கேள்விப்பட்ட நான்கு வயது அலிசன் 2 டாலரை நன்கொடையாக அளித்தாள். “என் உண்டியல்ல நான் சேத்துவைச்ச பணம் பூராவும் இவ்வளவுதான்” என்று எழுதியிருந்தாள். மேலும், “பிள்ளைங்களோட புஸ்தகம், பொம்மை, விளையாட்டு சாமானெல்லாம் அழிஞ்சிபோயிருக்கும். இந்த பணத்துல என்னமாதிரி குட்டிப் பொண்ணுக்கு ஒரு புக் வாங்கிக் குடுங்க” என்றும் எழுதியிருந்தாள். இந்தக் கடும்புயலில் சகோதரர்களில் யாரும் இறக்கவில்லை என்பதை அறிந்து சந்தோஷப்பட்டதாக எட்டு வயது மக்ளீன் எழுதினான். மேலும் அவன் இவ்வாறு எழுதினான்: “என் டாடியோட சேந்து கார் சாமானை வித்ததுல 17 டாலரை சேத்தேன். இந்தக் காசுல ஏதாவது வாங்கலாம்னு இருந்தேன். ஆனால், அப்ப எனக்கு நம்ம பிரதர்ஸோட ஞாபகம் வந்துது.”—மேலேயுள்ள பெட்டியைக் காண்க.
எல்லா வயதினரும் அவர்களுடைய ‘செல்வத்தைக்கொண்டு அவரை [யெகோவாவை] போற்றுகிறார்கள்.’ இவ்விதத்தில் ராஜ்ய அக்கறைகளை முதலிடத்தில் வைக்கின்றனர். இது, யெகோவாவின் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. (நீதிமொழிகள் 3:9, 10, பொ.மொ.) இருப்பினும், நாம் கொடுத்து யெகோவாவை செல்வந்தராக்க முடியாது. ஏனென்றால், அனைத்தும் அவருடையவையே. (1 நாளாகமம் 29:14-17) ஆனால், பிரசங்க வேலைக்கு ஆதரவு தருவது மிகப் பெரிய பாக்கியம். யெகோவா மீதுள்ள அன்பை அவருடைய வணக்கத்தார் நிரூபிக்க இது வாய்ப்பளிக்கிறது. தங்களுடைய இதயப்பூர்வமான ஆதரவை இந்த வகையில் காண்பிக்கும் ஒவ்வொருவருக்கும் எங்கள் உளங்கனிந்த நன்றி.
[அடிக்குறிப்புகள்]
a பவுல் ‘உத்தரவிட்டபோதிலும்,’ அவருடைய சுயவிருப்பத்திற்கேற்ப கட்டாயப்படுத்திக் கேட்டார் என்று இது அர்த்தப்படுத்துகிறதில்லை. அதற்கு பதிலாக, பணம் சேகரிக்கப்படுவதை பவுல் மேற்பார்வைதான் செய்தார். ஏனெனில், இதில் அநேக சபைகள் உட்பட்டிருந்தன. மேலும், “தன்தன் வரவுக்குத் தக்கதாக” அவனவன் “தன்னிடத்திலே” சேர்த்துவைத்ததை கொடுக்கக்கடவன் என்று பவுல் சொன்னார். அதாவது, ஒவ்வொருவரும் தாங்களாகவே மனமுவந்து கொடுக்கவேண்டும். எவரும் கட்டாயப்படுத்தப்படவில்லை.
[பக்கம் 26, 27-ன் பெட்டி]
இதோ, சிலர் கொடுக்க விரும்பும் வழிகள்! உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள்
அநேகர் திட்டமிட்டு, நன்கொடைக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகின்றனர். அதை “சங்கத்தின் உலகளாவிய வேலைக்காக நன்கொடைகள்—மத்தேயு 24:14” என்று குறிப்பிடப்பட்டிருக்கும் நன்கொடை பெட்டிகளில் போடுகிறார்கள். இத்தொகையை சபைகள் ஒவ்வொரு மாதமும் உள்ளூர் கிளை அலுவலகத்திற்கு அனுப்பிவைக்கின்றன.
மனப்பூர்வமாக அளிக்கப்படும் நன்கொடை பணத்தை நேரடியாக பொருளாளர் அலுவலகம், Watch Tower, H-58 Old Khandala Road, Lonavla 410 401, Mah., India, என்ற விலாசத்திற்கு அனுப்பி வைக்கலாம். நகைகள் அல்லது மற்ற விலைமதிப்புள்ள பொருட்களும் நன்கொடையாக அளிக்கப்படலாம். இவையனைத்தும் எவ்வித நிபந்தனையுமின்றி அளிக்கப்பட்ட அன்பளிப்பு என்பதைக் குறிப்பிடும் சுருக்கமான கடிதத்தோடு அனுப்பிவைக்கப்பட வேண்டும்.
திட்டமிட்ட நன்கொடை
நிபந்தனையற்ற பண நன்கொடைகள், நிபந்தனையோடுகூடிய பண நன்கொடைகள் தவிர, உலகளாவிய ராஜ்ய சேவைக்கு உதவ மற்ற முறைகளும் இருக்கின்றன. அவை:
இன்ஷுரன்ஸ்: ஆயுள் காப்புறுதி பத்திரம் அல்லது ஓய்வூதிய திட்டத்தில் உவாட்ச் டவர் சொஸைட்டியை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
வங்கி பண இருப்பு: வங்கி பண இருப்புகள், டெபாஸிட் சர்டிஃபிகேட்டுகள், அல்லது தனிநபரின் ஓய்வூதிய கணக்குகள் உவாட்ச் டவர் சொஸைட்டி டிரஸ்டில் வைக்கலாம், அல்லது மரணத்திற்கு பிறகு அதற்கு கொடுக்கும்படி உள்ளூர் வங்கி விதிமுறைகளுக்கு இசைவாக எழுதிவைக்கப்படலாம்.
பங்குகளும் பாண்டுகளும்: பங்குகளும் பாண்டுகளும் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு நிபந்தனையற்ற நன்கொடையாக அளிக்கப்படலாம். அல்லது அதிலிருந்து கிடைக்கும் வருவாயை தொடர்ந்து அவருக்கே செலுத்தும்படி ஓர் ஏற்பாட்டை செய்யலாம்.
நிலம், வீடு: விற்கக்கூடிய நிலம், வீடு முதலியவற்றை நிபந்தனையற்ற நன்கொடையாக அல்லது அதை அளிப்பவர் உயிரோடிருக்கும் வரையில் அவற்றை அனுபவித்து, அவருடைய மரணத்துக்குப்பின் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு உரியதாகும்படி செய்யலாம். இதில் எவற்றையாவது சட்டப்படி பத்திரம் எழுதுவதற்குமுன் அவர் சங்கத்துடன் தொடர்புகொள்ள வேண்டும்.
உயில்களும் டிரஸ்டுகளும்: சொத்து அல்லது பணத்தை உயில்கள் மூலம் உவாட்ச் டவர் சொஸைட்டிக்கு சேரும்படி எழுதிவைக்கப்படலாம் அல்லது டிரஸ்டின்மூலம் சங்கத்தை அனுபவ பாத்தியதையாக குறிப்பிடலாம்.
“திட்டமிட்ட நன்கொடை” என்ற பதம், இவ்விதமான நன்கொடைகளை அளிப்பவர் அதற்காக முன்கூட்டியே நன்கு திட்டமிட வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது.
[பக்கம் 28-ன் பெட்டி]
சிறார்களும் உற்சாகமாய்க் கொடுக்கின்றனர்!
எங்களுக்கு இன்னும் நிறைய புஸ்தகங்கள் வர்றதுக்கு இதை அனுப்பறேன். எங்க டாடியோட சேந்து வேல செஞ்சி இதை சம்பாதிச்சேன். உங்களோட முயற்சி எல்லாத்துக்கும் ரொம்ப நன்றி.—ஏழு வயது சிறுமி, பமேலா.
6.85 டாலரை நான் அனுப்பறேன். ராஜ்ய மன்றங்கள் நிறைய கட்டறதுக்கு இது உதவும். இந்த சம்மர்ல எலுமிச்சம்பழ ஜூஸ் வித்ததுல இந்தக் காசு கிடைச்சுது.—செலேனா-ஆறு வயது சிறுமி.
நான் கோழி ஒண்ணு வளத்துட்டு வந்தேன். அது குஞ்சு பொரிச்சப்போ ஒரு சேவலும் கோழியும் இருந்துது. இந்தக் கோழிய யெகோவாவுக்குன்னு அர்ப்பணிச்சேன். இது மூணு குஞ்சு பொரிச்சுது. அதை வித்தப்ப கிடைச்ச பணத்த யெகோவாவோட வேலைக்காக அனுப்பறேன்.—எட்டு வயது சிறுவன் டையரீ.
இதோ 21 டாலர். எங்கிட்ட இருக்க பணமே இவ்வளவுதான்! பணத்தை சேமிக்கறது ரொம்ப சிரமமா இருக்கு. அதனால, தயவுசெஞ்சி இதை பாத்துபாத்து கவனமா செலவு பண்ணுங்க—பத்து வயது சிறுமி சேரா.
எனக்கு ஸ்கூல்ல ஃபஸ்ட் பிரைஸ் கிடைச்சுது. அதனால வட்டார அளவிலான போட்டிக்கு போக வேண்டியதாயிடுச்சி. அதுல ஃபஸ்ட் பிரைஸூம் மாவட்ட அளவு இறுதிப் போட்டில ரெண்டாவது பிரைஸூம் கிடைச்சிது. இந்தப் பிரைஸ் தொகைல கொஞ்சத்தை சங்கத்துக்கு அனுப்பறேன். தேவராஜ்ய ஊழியப்பள்ளி கொடுத்த பயிற்சினாலதான் இந்தப் பிரைஸெல்லாம் எனக்கு கிடைச்சுது. போட்டில நடுவருக்கு முன்னால தைரியமா என்னால பேச முடிஞ்சுது—ஆறாம் வகுப்பு மாணவி, அம்பர்.
யெகோவாவுக்காக இதை கொடுக்க நான் ஆசைப்படறேன். இதுல என்ன பண்ணறதுன்னு அவரு சொல்லுவாரு. யெகோவாவுக்கு எல்லாம் தெரியும்.—ஆறு வயது சிறுமி, கேரன்.
[பக்கம் 25-ன் படங்கள்]
யெகோவாவின் சாட்சிகளுடைய வேலைகள் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் ஆதரிக்கப்படுகின்றன