தரியு—நியாயமான ஒரு ராஜா
முன்னொரு காலத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற ராஜா ஒருவர் தான் கட்டின எல்லாவற்றையும் குறித்து இப்படி பெருமையடித்துக் கொண்டார்: “பாபிலோனின் எல்லைக்குள் கிழக்கே உறுதியான மதிலை நான் கட்டினேன். ஒரு அகழியைத் தோண்டினேன் . . . , நிலக்கீலையும் செங்கற்களையும் வைத்து நான் கட்டிய பெரிய மதில் ஒரு மலையைப் போல அசைக்க முடியாதது.” ஆம், பாபிலோனின் ராஜா நேபுகாத்நேச்சார் மிக பிரமாண்டமான கட்டடங்களைக் கட்டி தன் பேரரசின் தலைநகரில் கோட்டை கொத்தளங்களை எழுப்பி அதை வலுப்படுத்த அரும் பாடுபட்டார். பாபிலோன் நகருக்குள் ஒரு ஈ, காக்காகூட நுழைய முடியாது என ராஜா கற்பனை செய்தார். அந்தோ! அவருடைய கற்பனைக் கோட்டை தவிடுபொடியானது.
அது சம்பவித்தது அக்டோபர் 5, பொ.ச.மு. 539-ல். மேதிய படையோடு வந்த பெர்சிய அரசனாகிய இரண்டாம் கோரேசு, பாபிலோனைக் கைப்பற்றி அதன் கல்தேய அரசனாகிய பெல்ஷாத்சாரைக் கொன்று போட்டார். புதிதாக கைப்பற்றப்பட்ட இந்நகரத்துக்கு இப்பொழுது யார் அரசர்? அது வீழ்ச்சியடைந்தபோது நகரத்திற்குள்ளே இருந்த கடவுளுடைய தீர்க்கதரிசி தானியேல் இவ்வாறு எழுதினார்: “மேதியனாகிய தரியு தன் அறுபத்திரண்டாம் வயதில் ராஜ்யத்தைக் கட்டிக்கொண்டான்.”—தானியேல் 5:30, 31.
தரியு யார்? அவர் எப்படிப்பட்ட அரசர்? 70-க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக பாபிலோனில் நாடு கடத்தப்பட்டிருந்த தானியேல் தீர்க்கதரிசியை அவர் எவ்வாறு நடத்தினார்?
முழுமைப்பெறா வரலாற்றைக்கொண்ட ஒரு ராஜா
மேதியனாகிய தரியுவைப்பற்றிய வரலாறு, கடைசி பக்கங்கள் இல்லாத சரித்திர ஏடுபோல். மேதியர்கள் எழுத்துருவில் எந்தப் பதிவுகளையும் விட்டுச்செல்லவில்லை. மேலும், மத்திய கிழக்கில் தோண்டி எடுக்கப்பட்ட லட்சக்கணக்கான ஆப்பு வடிவ எழுத்துக்களையுடைய பலகைத் துண்டுகளில் காணப்படுவதும் அங்கொன்றும் இங்கொன்றுமாய் தகவலளிக்கும் முழுமைப்பெறாத வரலாறே. எஞ்சியுள்ள மற்ற பழமையான சமய சார்பற்ற எழுத்துக்கள் வெகு சிலவே உள்ளன. இவற்றுக்கும் தரியுவைப் பற்றிய சம்பவங்களுக்கும் இடையே நூறோ அதற்கும் அதிகமான வருடங்களோ இடைவெளி!
மேதியாவின் தலைநகரம் ஹமதான். அதைக் கைப்பற்றிய பின்பு இரண்டாம் கோரேசுவால் மேதியர்களைத் தன் பக்கமாக வளைத்துப் போட்டுக்கொள்ள முடிந்தது. அதன்பின்பு மேதியரும் பெர்சியரும் கோரேசுவின் தலைமையில் ஒற்றுமையாக போரில் ஈடுபட்டார்கள். மேதியரும் பெர்சியரும் என்ற ஆங்கில புத்தகத்தில் அவர்களுக்கிடையே நிலவிய உறவைக் குறித்து ஆசிரியர் ராபர்ட் காலின்ஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மேதியர்கள் சமாதானமாக பெர்சியர்களோடு சம அந்தஸ்தில் இருந்தார்கள். உள்நாட்டு அரசாங்கத்தில் உயர் பதவிகள் வகித்தார்கள், பெர்சிய படைத்துறையில் தலைமைப் பொறுப்புக்களிலும் அமர்த்தப்பட்டார்கள். கைப்பற்றப்பட்டவர்கள், கைப்பற்றினவர்கள் என்ற பாகுபாடின்றி மேதியர், பெர்சியர் என்றே அயல்நாட்டவர் அவர்களை குறிப்பிட்டார்கள்.” இப்படியாக பெர்சியாவோடு மேதியா இணைந்து மேதிய பெர்சிய பேரரசு உருவானது.—தானியேல் 5:28; 8:3, 4, 20.
பாபிலோனை வீழ்த்தியதில் மேதியர்களுக்கும் பெரும் பங்குண்டு. அந்தச் சமயத்தில் பாபிலோனை உள்ளிட்ட மேதிய பெர்சிய பேரரசின் முதல் அரசன் “மேதிய குலத்தானாகிய அகாஸ்வேருவின் புத்திரனான தரியு” என பைபிள் அவரை அறிமுகப்படுத்துகிறது. (தானியேல் 9:1) “மேதியருக்கும் பெர்சியருக்கும் இருக்கிற மாறாத பிரமாணத்தின்படியே” சட்டங்களை ஏற்படுத்துவதற்குரிய அதிகாரமும் இந்த ராஜாவுக்கு இருந்தது. (தானியேல் 6:8) தரியுவைப்பற்றிய பைபிள் விவரங்கள் அவருடைய குணங்களைக் கண்டுகொள்ள உதவிபுரிகின்றன. அது, உலக வரலாற்றில் அவரைப்பற்றிய தகவல் ஏன் இடம்பெறவில்லை என்பதற்கும் தகுந்த காரணத்தைத் தருகிறது.
தானியேலுக்கு தயவு கிடைக்கிறது
பாபிலோனில் தரியு பதவியேற்றவுடன், “ராஜ்யம் முழுவதையும் ஆளும்படிக்குத் தன் ராஜ்யத்தின்மேல் நூற்றிருபது தேசாதிபதிகளையும்” ‘அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்தினார்;’ “இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்” என பைபிள் சொல்லுகிறது. (தானியேல் 6:1, 2) ஆனால் தானியேலின் உயர்ந்த ஸ்தானம் மற்ற அதிகாரிகளுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. அவர் நேர்மையுள்ளவராய் இருந்ததால் முறைகேடுகள் அவ்வளவாக தலைதூக்கவில்லை; இது மனக்கசப்பை உண்டுபண்ணியிருக்கலாம். உயர் அதிகாரிகளுக்கும் இவர்மேல் பொறாமைதான். ஏனென்றால் தானியேலிடம் ராஜா பிரியமாயிருந்து அவரை பிரதம மந்திரியாக்கவும்கூட எண்ணிக்கொண்டிருந்தார்.
இதற்கு முடிவுகட்ட இரண்டு பிரதானிகளும் தேசாதிபதிகளும் சேர்ந்து சதித்திட்டமொன்றைத் தீட்டினார்கள். அவர்கள், 30 நாள்வரைக்கும் தரியுவைத் தவிர ‘எந்த தேவனையாகிலும் மனுஷனையாகிலும் நோக்கி விண்ணப்பம் பண்ணுவதைத்’ தடைசெய்யும் அரசாணையில் கையெழுத்தைப் பெறும்படி ராஜாவிடம் சென்றார்கள். அதை மீறுகிற எவரும் சிங்க கெபியிலே போடப்பட வேண்டும் என்ற ஆலோசனையையும் கொடுத்தார்கள். பதவியிலுள்ள எல்லா அரசாங்க அதிகாரிகளுக்கும் இதில் சம்மதம் என்றும் இந்த யோசனை ராஜாவுக்கு தங்கள் ராஜபக்தியைக் காட்டுவதற்கு ஒரு வாய்ப்பு என்றும் தரியுவை இவர்கள் நம்ப வைத்தார்கள்.—தானியேல் 6:1-3, 6-8.
அந்த ஆணையில் தரியு கையொப்பமிட்டார், அதன் விளைவுகளையும் விரைவிலேயே சந்தித்தார். யெகோவா தேவனிடம் தானியேல் விண்ணப்பம் செய்வதை நிறுத்தாமல் இருந்ததால் ஆணையை மீறின முதல் ஆள் அவரே. (அப்போஸ்தலர் 5:29-ஐ ஒப்பிடுக.) மாற்றமுடியாத அந்தச் சட்டத்தின் தண்டனையிலிருந்து தானியேலைத் தப்புவிக்க ராஜா மனப்பூர்வமாக முயற்சிகள் எடுத்தார். ஆயினும் உண்மையுள்ள தானியேல் சிங்க கெபிக்குள் எறியப்பட்டார். தானியேலின் கடவுள் அந்தத் தீர்க்கதரிசியை உயிரோடே காக்க வல்லவர் என்ற நம்பிக்கை தரியுவுக்கு இருந்தது.—தானியேல் 6:9-17.
இராமுழுவதும் உண்ணாமலும் உறங்காமலும் இருந்த தரியு அதிகாலையில் சிங்க கெபியினிடம் விரைந்தார். எந்த சேதமும் இன்றி தானியேல் உயிரோடிருந்ததைக் கண்டபோது அவர் மெய்சிலிர்த்துப் போனார்! தானியேலை குற்றஞ்சாட்டியவர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் ராஜா உடனடியாக சிங்க கெபிக்குள் போடுவதன் மூலம் அவர்களை நியாயமாக பழிவாங்கினார். ‘தன் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்ற’ கட்டளையையும் பிறப்பித்தார்.—தானியேல் 6:18-27.
தானியேலின் கடவுளையும் அவருடைய மதத்தையும் தரியு உயர்வாக மதித்து, நடந்த தவறுக்கு பிராயச்சித்தம் செய்ய ஆவலாயிருந்தார் என்பது தெளிவாக தெரிகிறது. இருந்தபோதிலும் தானியேலின்மீது குற்றஞ்சாட்டியவர்கள் தண்டிக்கப்பட்டபோது மற்ற அதிகாரிகளுக்கு அது எரிச்சலை ஏற்படுத்தியிருக்க வேண்டும். மேலுமாக ராஜ்யத்திலுள்ள அனைவரும் ‘தானியேலின் கடவுளுக்கு முன்பாக நடுங்கி பயப்பட வேண்டுமென்று’ தரியு செய்த அறிவிப்பு பாபிலோனில் மிகுந்த செல்வாக்குள்ளவர்களாயிருந்த மத குருக்கள் மத்தியில் மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இது எழுத்தாளர்களையும் பாதிக்காமலில்லை; இதன் விளைவாக சமயச் சார்பற்ற பதிவுகள் மாற்றி எழுதப்பட்டு தரியுவைப் பற்றிய தகவல்கள் அழிக்கப்பட்டிருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை. இருந்தாலும், தானியேல் புத்தகத்தில் காணப்படும் சுருக்கமான பதிவு தரியுவை பாரபட்சமில்லாத நியாயமான ராஜாவாக சித்தரிக்கிறது.