உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ளலாம்
“அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய்.”—மத்தேயு 18:15.
1, 2. தவறுகளைக் கையாளுவதைப் பற்றிய என்ன நடைமுறையான புத்திமதியை இயேசு கொடுத்தார்?
இயேசுவிற்கு தம்முடைய ஊழியத்தை முடிக்க ஒரு வருடத்திற்கும் குறைந்த காலப்பகுதியே இருந்தது; அச்சமயத்தில் தம்முடைய சீஷர்களுக்கு முக்கியமான பாடங்களை அவர் கற்பிக்க வேண்டியிருந்தது. அவற்றை நீங்கள் மத்தேயு 18-ம் அதிகாரத்தில் வாசிக்கலாம். அவற்றில் ஒன்று, நாம் சிறுபிள்ளைகளைப்போல் மனத்தாழ்மையோடு இருக்க வேண்டியதன் அவசியமாகும். அடுத்தபடியாக, ‘இந்தச் சிறியரில் ஒருவனை’ இடறலடையச் செய்வதிலிருந்து நாம் விலகியிருக்க வேண்டும் என்றும் வழிதவறிய ‘சிறியரை’ அழிவிலிருந்து பாதுகாக்கும்படி நாம் அவர்களை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர முயல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் எழும் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவும் மதிப்புமிக்க, நடைமுறையான புத்திமதியையும் இயேசு அதன்பின் அளித்தார்.
2 “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால் [“பாவம் செய்தால்,” NW], அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய். அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ. அவர்களுக்கும் அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் [“புறதேசத்தானைப் போலவும், வரிவசூலிப்பவனைப் போலவும்,” NW] இருப்பானாக” என்ற அவருடைய வார்த்தைகள் உங்கள் நினைவுக்கு வரலாம். (மத்தேயு 18:15-17) இந்தப் புத்திமதியை நாம் எப்போது பின்பற்ற வேண்டும், அதைச் செய்கையில் நம்முடைய நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?
3. மற்றவர்கள் தவறுகள் செய்கையில் என்ன வழியை நாம் பின்பற்ற வேண்டும்?
3 நாம் அனைவரும் அபூரணர்கள், தவறு செய்யும் மனச்சாய்வுடையவர்கள் என்பதால் மன்னிப்பதற்குப் பழக வேண்டும் என முந்தின கட்டுரை வலியுறுத்தியது. அதுவும் முக்கியமாய் உடன் கிறிஸ்தவர் சொன்னதோ செய்ததோ மனசங்கடத்தை ஏற்படுத்துகையில் அது அவசியம். (1 பேதுரு 4:8) எப்போதுமே பிரச்சினையைப் பொருட்படுத்தாமல் கடந்துபோக விடுவது சிறந்த வழி; அது மன்னித்து மறக்கும் வழி. கிறிஸ்தவ சபையில் சமாதானத்திற்கு பங்களிக்கும் எண்ணத்தில் நாம் இதை செய்யலாம். (சங்கீதம் 133:1; நீதிமொழிகள் 19:11, NW) எனினும், உங்களை புண்படுத்திய சகோதரனிடமோ சகோதரியிடமோ கண்டிப்பாக பிரச்சினையைப் பேசி தீர்த்துக்கொள்ள நீங்கள் விரும்பும் சந்தர்ப்பமும் வரலாம். அப்படிப்பட்ட சமயத்தில் மேற்குறிப்பிடப்பட்ட இயேசுவின் வார்த்தைகள் வழிகாட்டியாய் அமையும்.
4. மற்றவர்களுடைய தவறுகளைக் கையாளுவதில் அடிப்படையாக மத்தேயு 18:15-ஐ எப்படி பின்பற்றலாம்?
4 ‘நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து’ என இயேசு புத்திமதி சொன்னார். அது முத்தான ஆலோசனை. அவருடைய குற்றத்தை, “நான்கு கண்களே அறிய” அதாவது உங்களுடைய கண்களும் அவருடைய கண்களும் மட்டுமே அறிய உணர்த்து என சில ஜெர்மானிய மொழிபெயர்ப்புகள் அவ்வார்த்தைகளை மொழிபெயர்க்கின்றன. தனித்திருக்கையில் பிரச்சினையைக் குறித்து அன்பாக பேசுவது, பொதுவாகவே அதைத் தீர்ப்பதற்கு எளிதாய் அமையும். ஒரு சகோதரர், அவமரியாதையாக அல்லது கடுமையாக நடந்துகொண்டதை அல்லது சொன்ன ஏதோவொன்றை நீங்கள் தனித்திருக்கும்போது எளிதில் ஒப்புக்கொள்வார். மற்றவர்கள் கவனிக்கிறார்கள் என்றால் தன் தவறை ஒப்புக்கொள்ள மறுப்பார் அல்லது தான் செய்தது சரி என வாதாடுவார்; இப்படி முயலுவது மனித இயல்பே. நீங்கள் “நான்கு கண்களே அறிய” பிரச்சினையைப் பேச விரும்புகையில், அது பாவமும் அல்ல வேண்டுமென்றே செய்த தவறும் அல்ல எல்லாம் தவறாக புரிந்துகொண்டதால் வந்த வினையே என்பது வெட்டவெளிச்சமாகும். அது தவறாக புரிந்துகொண்டதன் விளைவே என நீங்கள் இருவரும் ஒப்புக்கொண்டால் அத்தோடு அதை முடித்து முற்றுப்புள்ளி வைத்துவிடுங்கள்; ஒன்றுமில்லாத பிரச்சினை உங்கள் உறவையே பாதிக்குமளவுக்கு வேர்விட்டு மரம் போல் வளர அனுமதிக்காதீர்கள். எனவே, நித்தம் நித்தம் தலைதூக்கும் சிறு சிறு தவறுகளைத் தீர்த்துக்கொள்வதற்கும் மத்தேயு 18:15-லுள்ள நியமத்தைப் பின்பற்றலாம்.
அவர் எதை அர்த்தப்படுத்தினார்?
5, 6. சூழமைவின் அடிப்படையில் மத்தேயு 18:15 எப்படிப்பட்ட பாவங்களைப் பற்றி பேசுகிறது, எது அதை குறித்துக் காட்டுகிறது?
5 நியாயப்படி, இயேசு அளித்த புத்திமதி அதிக வினைமையான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு மட்டுமே பொருந்தும் என சொல்லலாம். “உன் சகோதரன் உனக்கு விரோதமாக பாவம் செய்தால்” என இயேசு சொன்னார். அதன் விரிவான கருத்தில் ‘பாவம்’ என்பது ஏதோவொரு குற்றமாக அல்லது தவறாக இருக்கலாம். (யோபு 2:10; நீதிமொழிகள் 21:4; யாக்கோபு 4:17) எனினும் இயேசு குறிப்பிட்ட பாவம் வினைமையான ஒன்றைக் குறிக்கிறதென சூழமைவு காட்டுகிறது. தவறுசெய்தவரை, “புறதேசத்தானைப் போலவும், வரிவசூலிப்பவனைப் போலவும்” கருதும்படி செய்ததென்றால் அது உண்மையாகவே வினைமையானதுதான். இந்தச் சொற்றொடர் எதை அர்த்தப்படுத்துகிறது?
6 தங்கள் நாட்டவர் புறமதத்தினரோடு சம்பந்தம் வைத்துக்கொள்ள மாட்டார்கள் என்ற விஷயம் இந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த இயேசுவின் சீஷர்கள் நன்கறிந்த ஒன்றே. (யோவான் 4:9; 18:28; அப்போஸ்தலர் 10:28) யூதர்களாகப் பிறந்து ஆனால் மனிதர்களை மோசமாக நடத்துபவர்களாக மாறிய வரிவசூலிப்பவர்களை அவர்கள் மனமறிந்து தவிர்த்தனர். ஆகவே, உங்களால் எளிதில் மன்னித்து மறந்துவிடக்கூடிய தனிப்பட்ட குற்றங்களையோ மனவருத்தங்களையோ அல்ல, வினைமையான பாவங்களைப் பற்றியே திட்டவட்டமாக மத்தேயு 18:15-17 குறிக்கிறது.—மத்தேயு 18:21, 22. a
7, 8. (அ) எப்படிப்பட்ட பாவங்கள் மூப்பர்களால் கையாளப்பட வேண்டும்? (ஆ) மத்தேயு 18:15-17-க்கு இசைய என்ன வகை பாவங்கள் இரு கிறிஸ்தவர்களுக்கிடையே தீர்த்துக் கொள்ளப்பட வேண்டும்?
7 நியாயப்பிரமாணத்தின்படி, தவறுசெய்தவர் சில பாவங்களுக்காக தன் பங்கில் மன்னிப்பைப் பெறுவதோடு இன்னும் அதிகத்தை செய்ய வேண்டியிருந்தது. தூஷணம், விசுவாச துரோகம், விக்கிரகாராதனை ஆகியவையும் பாலியல் பாவங்களான விபச்சாரம், வேசித்தனம், ஓரினப்புணர்ச்சி ஆகியவையும் அறிக்கை செய்யப்பட வேண்டியவையும் மூப்பர்களால் (அல்லது ஆசாரியர்களால்) கையாளப்பட வேண்டியவையுமாய் இருந்தன. கிறிஸ்தவ சபையைப் பொருத்ததிலும் இது உண்மை. (லேவியராகமம் 5:1; 20:10-13; எண்ணாகமம் 5:30; 35:12; உபாகமம் 17:9; 19:16-19; நீதிமொழிகள் 29:24) எனினும் இயேசு இங்கு குறிப்பிட்ட வகையான பாவங்கள் இரண்டு நபர்களுக்கிடையில் தீர்த்துக்கொள்ள முடிந்தவை என்பதைக் கவனியுங்கள். உதாரணங்கள்: தன் சகதோழனை கோபத்தால் அல்லது பொறாமையால் பழிதூற்றுகிறார் ஒருவர். குறிப்பிட்ட கட்டுமான பொருள்களை உபயோகித்து ஒரு கட்டிடத்தை கட்டுவதாகவும் ஒரு குறிப்பிட்ட தேதியில் முடித்துக் கொடுப்பதாகவும் ஒப்பந்தம் செய்கிறார் ஒருவர். வாங்கிய பணத்தை உரிய காலத்தில் அல்லது சொன்ன தேதியில் திருப்பித் தருவதாக ஒத்துக்கொள்கிறார் ஒருவர். தன்னுடைய முதலாளி தனக்கு வேலையில் பயிற்சியளித்தால், தான் (வேறு வேலைக்கு மாறினாலும்கூட) போட்டியிட மாட்டார்; அல்லது தன் முதலாளியின் வாடிக்கையாளர்களை, ஒப்புக்கொண்ட குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது குறிப்பிட்ட ஏரியாவில் வாழ்பவர்களையோ தம்முடையவர்களாக்கி கொள்ளமாட்டார் என வாக்குறுதி அளிக்கிறார் ஒருவர். b ஒரு சகோதரர் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் அல்லது இப்படிப்பட்ட தவறுகளைக் குறித்து மனம்வருந்தாதவராக இருந்தால் அது உண்மையிலேயே வினைமையான ஒன்றுதான். (வெளிப்படுத்துதல் 21:8) ஆனால் அத்தகைய தவறுகள் சம்பந்தப்பட்ட இருவருக்குள்ளேயே தீர்த்துக்கொள்ளப்படலாம்.
8 எனினும் பிரச்சினையை எப்படித் தீர்த்துக் கொள்ள நீங்கள் முயலுவீர்கள்? ஒன்றன்பின் ஒன்றாக பின்பற்றத்தக்க மூன்று படிகளாக இயேசுவின் வார்த்தைகள் எப்போதும் கருதப்பட்டிருக்கின்றன. அவை ஒவ்வொன்றையும் நாம் இப்போது கலந்தாலோசிப்போம். வளைந்து கொடுக்காத, சட்ட விதிமுறைகளாக அவ்வார்த்தைகளை நாம் கருதாமல் அவற்றின் கருத்தைப் புரிந்துகொள்ளவும் உங்கள் அன்பான இலக்கை மறந்துவிடாமலிருக்கவும் முயலுவோம்.
உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ள முயலுங்கள்
9. மத்தேயு 18:15-ஐப் பொருத்துகையில் எதை நாம் மனதில் வைக்க வேண்டும்?
9 “உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றஞ்செய்தால் [“பாவம் செய்தால்,” NW], அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனித்திருக்கையில், அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக் கொண்டாய்” என இயேசு ஆரம்பித்தார். ஏதோ சந்தேகத்தின் அடிப்படையில் எழுந்த பிரச்சினைக்கு எடுக்க வேண்டிய படி அல்ல இது என்பது தெளிவானதே. உங்கள் சகோதரர் தவறு செய்திருக்கிறார் என்பதையும் காரியங்களைச் சரிசெய்ய வேண்டிய தேவையிருக்கிறது என்பதையும் அவர் காண உதவுவதற்கு தக்க ஆதாரமோ அல்லது குறிப்பிட்ட தகவலோ உங்களிடத்தில் இருக்க வேண்டும். விஷயம் கைமீறிப் போவதற்குள் அல்லது மற்றவருடைய மனநிலை கடினப்பட்டுப் போவதற்குள், காலந்தாழ்த்தாமல் செயல்படுவது நல்லது. மேலும், அதைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது உங்களையும் பாதிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் இருவர் மட்டுமே தனிமையில் பேசித் தீர்த்துக்கொள்ளப் போவதால் மற்றவர்களின் பரிவிரக்கத்தைப் பெறுவதற்காக அல்லது உங்கள் பேரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக முன்கூட்டியே அதைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதை தவிர்த்திடுங்கள். (நீதிமொழிகள் 12:25; 17:9) ஏன்? எல்லாம் உங்கள் இலக்கை நிறைவேற்றத்தான்.
10. நம்முடைய சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ள எது நமக்கு உதவும்?
10 உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்வதுதான் உங்கள் நோக்கம்; அவரைத் தண்டிப்பதோ, அவமானப்படுத்துவதோ, அல்லது பாழ்ப்படுத்துவதோ அல்ல. அவர் உண்மையிலேயே தவறு செய்திருப்பார் என்றால் யெகோவாவுடனான அவருடைய உறவு ஆபத்திலிருக்கிறது. தொடர்ந்து அவரை உங்கள் கிறிஸ்தவ சகோதரராக தக்க வைத்துக்கொள்ளவே நீங்கள் விரும்புகிறீர்கள். நீங்கள் இருவரும் தனித்திருந்து கலந்து பேசுகையில் அமைதியாக இருப்பது, கோபாவேசமான வார்த்தைகளைத் தவிர்ப்பது, அல்லது குற்றஞ்சாட்டும் தொனியில் பேசாதிருப்பது ஆகியவை உங்கள் இலக்கை அடைவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும். இந்த அன்பான சந்திப்பில் நீங்கள் இருவரும் அபூரணர்கள், பாவம் செய்யும் ஆட்கள் என்பதை நினைவில் வையுங்கள். (ரோமர் 3:23, 24) அவரைக் குறித்து நீங்கள் வீண்பேச்சுப் பேசாததையும் அவருக்கு உண்மையாகவே உதவ விரும்புவதையும் அவர் உணருகையில் பிரச்சினை சீக்கிரத்திலேயே சுமுகமாக முடிவடையலாம். உங்கள் இருவர் பேரிலுமே ஓரளவு தவறிருக்கிறது அல்லது பிரச்சினையின் மூலகாரணமே தவறாக புரிந்துகொண்டதுதான் என்பது உறுதியானால் இப்படிப்பட்ட, அன்பான, வெளிப்படையான அணுகுமுறை முக்கியமாய் ஞானமான போக்காக இருக்கும்.—நீதிமொழிகள் 25:9, 10; 26:20; யாக்கோபு 3:5, 6.
11. தவறுசெய்தவர் நமக்குச் செவிகொடுக்கவில்லை என்றாலும் நாம் என்ன செய்யலாம்?
11 தவறு நடந்திருக்கிறது, அதுவும் வினைமையான ஒன்று என்பதை அவர் புரிந்துகொள்ள நீங்கள் உதவினால் அது அவரை மனந்திரும்ப தூண்டலாம். எனினும், உண்மையில் பெருமையே முட்டுக்கட்டையாக இருக்கலாம். (நீதிமொழிகள் 16:18; 17:19) ஒருவேளை ஆரம்பத்தில் அவர் தன் தவறை ஒப்புக்கொண்டு மனந்திரும்பாவிட்டாலும் அடுத்த படியை எடுக்க முயலுவதற்கு முன் கொஞ்சம் பொறுங்கள். ‘அவரிடத்தில் ஒரேவொரு முறை போய், . . . அவர் குற்றத்தை அவருக்கு உணர்த்தும்படி’ இயேசு சொல்லவில்லை. நீங்கள் தீர்த்துக்கொள்ள முடிந்த பாவமாக அது இருப்பதால், கலாத்தியர் 6:1-ல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு இசைய, “நான்கு கண்களே அறிய” அவரை மீண்டும் அணுக முயற்சி செய்யவும். வெற்றி உங்கள் பக்கம் இருக்கலாம். (யூதா 22, 23-ஐ ஒப்பிடுக.) ஆயினும், தவறு நடந்திருக்கிறது, அவர் எதற்கும் ஒத்துவரமாட்டார் என்பது உறுதியானால் என்ன செய்வது?
அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை நாடுதல்
12, 13. (அ) தவறுகளைக் கையாளுகையில் எந்த இரண்டாவது படியை இயேசு குறிப்பிட்டார்? (ஆ) இந்தப் படியைப் பின்பற்றுவதற்கான பொருத்தமான அறிவுரைகள் யாவை?
12 நீங்கள் வினைமையான பாவம் செய்திருந்தால், மற்றவர்கள் நம்பிக்கையிழந்து சீக்கிரத்தில் உங்களை கைவிட்டுவிடவிரும்புவீர்களா? அதை விரும்ப மாட்டீர்கள். அப்படியானால், அவர் உங்களுடனும் மற்றவர்களுடனும் ஐக்கியப்பட்டு, கடவுளை ஏற்கத்தக்க விதத்தில் வணங்குவதற்கு உங்கள் சகோதரரை நீங்கள் ஆதாயப்படுத்திக் கொள்ளும் முதல் படியை எடுத்தபின் நம்பிக்கை இழந்துவிடக்கூடாது என்பதை இயேசு காட்டினார். இயேசு குறிப்பிட்ட இரண்டாவது படி: “அவன் செவிகொடாமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே சங்கதிகளெல்லாம் நிலைவரப்படும்படி, இரண்டொருவரை உன்னுடனே கூட்டிக்கொண்டு போ.”
13 “இரண்டொருவரை” கூட்டிச் செல்லும்படி அவர் சொன்னார். முதல் படியை எடுத்தபின் நீங்கள் அப்பிரச்சினையைக் குறித்து எத்தனை பேரிடம் வேண்டுமானாலும் பேசலாம், பயணக் கண்காணியோடு அது குறித்து தொடர்பு கொள்ளலாம் அல்லது இப்பிரச்சினையைக் குறித்து சகோதரர்களுக்கு எழுதலாம் என அவர் சொல்லவில்லை. அக்குற்றத்தைக் குறித்து நீங்கள் தெளிவாக அறிந்திருந்தாலும் அது தவறுதான் என உண்மையில் முழுமையாய் நிரூபிக்கப்படவில்லை. உங்கள் பாகத்தில் நீங்கள் பழிதூற்றுபவராய் ஆகிவிடாதபடிக்கு தவறான தகவலை பரப்புவதற்கு நீங்கள் விரும்ப மாட்டீர்கள். (நீதிமொழிகள் 16:28; 18:8) ஆனால் இரண்டொருவரை கூட்டிச் செல்லும்படி இயேசு சொன்னார். ஏன்? யாரைக் கூட்டிச் செல்வது?
14. இரண்டாவது படியை எடுக்கையில் யாரை உடன் அழைத்து செல்ல வேண்டும்?
14 பாவம் நிகழ்ந்திருப்பதைக் குறித்து தெளிவுபடுத்தி, உங்களோடும் கடவுளோடும் நட்பில் நிலைக்கும்படிக்கு மனந்திரும்ப தூண்டுவதன் மூலம் உங்கள் சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்ள நீங்கள் முயலுகிறீர்கள். அதை செய்ய, அந்தப் பாவத்திற்கு சாட்சியான ‘இரண்டொருவர்’ இருப்பது சூழ்நிலைக்கு உகந்தது. ஒருவேளை அவர்கள் அச்சம்பவத்திற்கு கண்கண்ட சாட்சிகளாகவோ அல்லது வியாபார சம்பந்தமான பிரச்சினையில் என்ன நடந்தது (அல்லது என்ன நடக்கவில்லை) என்பதற்கு ஆதாரப்பூர்வமான தகவலை தருபவர்களாகவோ இருக்கலாம். அப்படி சாட்சிகள் இல்லாதிருந்தால், நீங்கள் அழைத்து வருபவர்கள் பிரச்சினைக்குரிய விஷயங்களின் நுணுக்கங்களை அறிந்தவர்களாகவும், அதன் மூலம் சம்பவித்தது உண்மையிலேயே தவறா என்பதை நிரூபிக்க முடிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும், பின்னர் தேவைப்பட்டாலும் என்ன சொல்லப்பட்டது என்பதற்கு அவர்கள் சாட்சிகளாக இருந்து அளிக்கப்பட்ட உண்மைகளையும் எடுக்கப்பட்ட முயற்சிகளையும் உறுதிப்படுத்துபவர்களாக இருக்க வேண்டும். (எண்ணாகமம் 35:30; உபாகமம் 17:6) எனவே அவர்கள் வெறுமனே நடுநிலை வகிப்பவர்களோ, நடுவர்களோ மட்டுமல்ல; அவர்கள் அங்கு வந்திருப்பதற்குக் காரணம் உங்களுக்கும் அவர்களுக்கும் சகோதரராக இருப்பவரை ஆதாயப்படுத்திக் கொள்வதுதான்.
15. நாம் இரண்டாவது படியை எடுக்க வேண்டி வந்தால் கிறிஸ்தவ மூப்பர்கள் ஏன் உதவியாய் இருக்கலாம்?
15 நீங்கள் சபையிலுள்ள மூப்பர்களைத்தான் அழைத்து செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எனினும் அனுபவம் மிக்க மூப்பர்கள் தங்கள் ஆவிக்குரிய தகுதிகளினால் உதவிடலாம். அத்தகைய மூப்பர்கள், “காற்றுக்கு ஒதுக்காகவும், பெருவெள்ளத்துக்குப் புகலிடமாகவும், வறண்ட நிலத்துக்கு நீர்க்கால்களாகவும், விடாய்த்த பூமிக்குப் பெருங்கன்மலையின் நிழலாகவும்” இருக்கிறார்கள். (ஏசாயா 32:1, 2) நியாயங்காட்டிப் பேசுவதிலும் சகோதர சகோதரிகளை சீர்பொருந்தப் பண்ணுவதிலும் அவர்கள் அனுபவம் பெற்றவர்கள். இத்தகைய ‘மனுஷர்களில் வரங்களை’ c போன்றவர்களின் மேல் நம்பிக்கை வைக்க தவறுசெய்தவர் தயங்கமாட்டார். (எபேசியர் 4:8, 11, 12, NW) இத்தகைய முதிர்ந்தவர்கள் முன்னிலையில் பிரச்சினைகளைக் கலந்து பேசுவதும் அவர்களோடு ஜெபத்தில் பங்குகொள்வதும் சூழ்நிலையையே மாற்றியமைக்கும்; தீர்வே காணமுடியாது என தோன்றின பிரச்சினையையும் தீர்த்து வைக்கும்.—ஒப்பிடுக: யாக்கோபு 5:14, 15.
அவரை ஆதாயப்படுத்திக் கொள்ள கடைசி முயற்சி
16. இயேசு குறிப்பிட்ட அந்த மூன்றாவது படி எது?
16 அந்தப் பிரச்சினையைத் தீர்க்க எடுத்த இரண்டாவது படியும் தோல்வியடைகையில், நிச்சயமாக சபை கண்காணிகள் இந்த மூன்றாவது படியில் உட்படுகின்றனர். “அவர்களுக்கும் [இரண்டொருவருக்கும்] அவன் செவிகொடாமற்போனால், அதைச் சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடாதிருப்பானானால், அவன் உனக்கு அஞ்ஞானியைப்போலவும் ஆயக்காரனைப்போலவும் இருப்பானாக.” இது எதை உட்படுத்துகிறது?
17, 18. (அ) ‘அதைச் சபைக்குத் தெரியப்படுத்துவதன்’ அர்த்தத்தை புரிந்துகொள்ள எந்த உதாரணம் நமக்கு உதவுகிறது? (ஆ) இன்று அந்தப் படியை நாம் எப்படி பின்பற்றுகிறோம்?
17 அந்தக் குறிப்பிட்ட பாவத்தை அல்லது தவற்றை வழக்கமாக நடைபெறும் கூட்டத்திலோ அல்லது விசேஷித்த கூட்டத்திலோ சபை முழுவதற்கும் தெரியப்படுத்தும்படி கொடுத்த கட்டளையாக அதை நாம் கருதுவதில்லை. கடவுளுடைய வார்த்தையிலிருந்து பொருத்தமான விதிமுறைகளை நாம் அறிந்துகொள்ள முடியும். அடங்காதவன், பெருந்தீனிக்காரன், குடிகாரன் உட்பட்ட வழக்கில் பூர்வ இஸ்ரவேலில் என்ன செய்யப்பட வேண்டியிருந்தது என்பதைக் காண்க: “தன் தகப்பன் சொல்லையும் தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத துஷ்டப்பிள்ளை ஒருவனுக்கு இருந்தால், அவன் தகப்பனும் அவன் தாயும் அவனைப் பிடித்து, அவன் இருக்கும் பட்டணத்தின் மூப்பரிடத்துக்கும் அவ்விடத்து வாசலுக்கும் அவனைக் கொண்டுபோய்: எங்கள் மகனாகிய இவன் அடங்காத துஷ்டனாயிருக்கிறான்; எங்கள் சொல்லைக் கேளான்; பெருந்தீனிக்காரனும் குடியனுமாயிருக்கிறான் என்று பட்டணத்தின் மூப்பரோடே சொல்லுவார்களாக. அப்பொழுது அவன் சாகும்படி அந்தப் பட்டணத்து மனிதரெல்லாரும் அவன்மேல் கல்லெறியக்கடவர்கள்.”—உபாகமம் 21:18-21.
18 ஜனத்தார் அனைவரின் முன்னிலையில் அல்லது அவனுடைய கோத்திரத்தார் அனைவர் முன்னிலையில் அவனுடைய தவறு பேசப்படவும் நியாயந்தீர்க்கப்படவும் இல்லை. மாறாக, சபையின் பிரதிநிதிகளாக, தகுதிவாய்ந்த ‘மூப்பர்கள்’ அதைக் கையாண்டனர். (‘அக்காலத்தில் இருந்த ஆசாரியர்களும் நியாயாதிபதிகளும்’ கையாண்ட ஒரு வழக்கை காண உபாகமம் 19:16, 17-ஐ ஒப்பிடுக.) அதே போல இன்றும், மூன்றாவது படியை எடுக்க நேர்ந்தால் சபையைப் பிரதிநிதித்துவம் செய்யும் மூப்பர்கள் அப்பிரச்சினையைக் கையாளுவார்கள். முடிந்த மட்டும் அந்தக் கிறிஸ்தவ சகோதரரை ஆதாயப்படுத்திக் கொள்வதே அவர்களுடைய இலக்கும்கூட. அப்பிரச்சினையைக் குறித்து முன்னதாகவே தீர்மானிக்காமல் அல்லது பாரபட்சம் காட்டாமல், நியாயமாக செயல்படுவதன்மூலம் அதை அவர்கள் வெளிக்காட்டுகிறார்கள்.
19. பிரச்சினையை கேட்டு சரிசெய்யும்படி நியமிக்கப்பட்ட மூப்பர்கள் என்ன செய்ய முயற்சி செய்வார்கள்?
19 உண்மைகளை தீர ஆராய்ந்து, பாவம் உண்மையிலேயே நிகழ்ந்திருக்கிறதா (அல்லது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறதா) என்பதை அவர்கள் கண்டறிய சாட்சி சொல்ல வந்தவர்களின் தரப்பையும் கேட்டறிவார்கள். சபை கறைபடாதபடி காக்கவும் உலகத்தின் மனநிலை செல்வாக்கு செலுத்தாதபடி விலக்கவும் அவர்கள் விரும்புகின்றனர். (1 கொரிந்தியர் 2:12; 5:7) அவர்களுடைய வேதப்பூர்வ தகுதிகளுக்கு இணங்க, “ஆரோக்கியமான உபதேசத்தினாலே புத்திசொல்லவும், எதிர்பேசுகிறவர்களைக் கண்டனம் பண்ணவும்” அவர்கள் முயற்சி செய்வார்கள். (தீத்து 1:9) “நான் கூப்பிட்டும் நீங்கள் மறு உத்தரவு கொடுக்கவில்லை; நான் பேசியும் நீங்கள் கேட்கவில்லை; என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, எனக்குப் பிரியமல்லாததைத் தெரிந்துகொண்டீர்கள்” என யெகோவாவின் தீர்க்கதரிசி எழுதிய இஸ்ரவேலர்களைப் போல் தவறுசெய்தவர் இருக்க மாட்டார் என நம்புகிறோம்.—ஏசாயா 65:12.
20. பாவி செவிகொடுக்கவும் மனந்திரும்பவும் மறுத்தால் என்ன சம்பவிக்கும் என இயேசு சொன்னார்?
20 எனினும், ஏதோ சில வழக்குகளில் பாவம் செய்தவர் அப்படிப்பட்ட மனநிலையையே வெளிக்காட்டுகிறார். அப்படிப்பட்டவர்களைக் குறித்ததில் இயேசுவின் வழிகாட்டுதல் தெளிவாயிருக்கிறது: “அவன் உனக்கு புறதேசத்தானைப் போலவும், வரிவசூலிப்பவனைப் போலவும் இருப்பானாக.” மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்ளும்படி அல்லது வேண்டுமென்றே தீங்கிழைக்கும்படி கர்த்தர் சொல்லவில்லை. இருப்பினும், மனந்திரும்பாத பாவிகளை சபையிலிருந்து நீக்கவேண்டும் என்ற அப்போஸ்தலனாகிய பவுலின் கருத்தில் எந்தவித ஐயப்பாட்டுக்கும் இடமில்லை. (1 கொரிந்தியர் 5:11-13) இதுவும் பாவம் செய்தவரை ஆதாயப்படுத்திக் கொள்ளும் இலக்கை அடைவதில் போய் முடியலாம்.
21. சபையிலிருந்து விலக்கப்பட்ட ஒருவருக்கு என்ன எதிர்கால வாய்ப்பு இன்னும் திறந்திருக்கிறது?
21 அதற்கு வாய்ப்பிருப்பதை, கெட்ட குமாரனைப் பற்றிய இயேசுவின் உவமையிலிருந்து நாம் அறிகிறோம். தன்னுடைய குடும்பத்தாரின் அன்பான கூட்டுறவின்றி கொஞ்ச காலம் வாழ்ந்து தவித்த பிறகு அந்தப் பாவிக்கு ‘புத்தி தெளிந்தது’ என அந்த உவமையில் குறிப்பிடப்பட்டது. (லூக்கா 15:11-18) பாவம் செய்த சிலர், ‘பிசாசின் கண்ணியிலிருந்து தப்பி மறுபடியும் தெளிவடையத்தக்கதாக’ காலப்போக்கில் மனந்திரும்பி வருவார்கள் என பவுல் தீமோத்தேயுவிடம் குறிப்பிட்டார். (2 தீமோத்தேயு 2:24-26, தி.மொ.) மனந்திரும்பாமல் தொடர்ந்து பாவம் செய்யும் எவரும் சபையிலிருந்து விலக்கப்பட வேண்டும். அப்படிப்பட்டவர்கள், கடவுளுடைய அங்கீகாரத்தையும் அன்பான தோழமையையும் உண்மைத் தன்மையுள்ள கிறிஸ்தவர்களோடு கூட்டுறவையும் இழப்பர். இந்த இழப்பே அவர்களை மீண்டும் மனத்தெளிவடையச் செய்யும் என நாம் நிச்சயம் நம்பலாம்.
22. இப்போதும் நம்முடைய சகோதரரை எப்படி ஆதாயப்படுத்திக் கொள்ள முடியும்?
22 புறதேசத்தாரையும் வரிவசூலிப்போரையும் மீட்கமுடியாத நிலையில் இருப்பவர்களாக இயேசு கருதவில்லை. வரிவசூலிப்பவராய் இருந்த உண்மையாய் மனந்திரும்பிய லேவியனாகிய மத்தேயு ‘இயேசுவைப் பின்பற்றினார்’; அவர் அப்போஸ்தலர்களில் ஒருவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (மாற்கு 2:15, NW; லூக்கா 15:1) அவ்வாறே, பாவம் செய்தவர் தற்போது, ‘சபைக்கும் செவிகொடாதிருந்து’ அதிலிருந்து நீக்கப்பட்டிருப்பாரானால் கால ஓட்டத்தில் மனந்திரும்பி, தன் தவறான போக்கை மாற்றிக்கொண்டு வருவதைக் காண நாம் பொறுத்திருக்கலாம். அவர் அதைச் செய்து மீண்டும் சபையின் அங்கத்தினராகையில் நம்முடைய சகோதரரை உண்மை வணக்கத்தின் அரவணைப்பில் மீண்டும் ஆதாயப்படுத்திக் கொண்டதற்கு சந்தோஷப்படுவோம்.
[அடிக்குறிப்புகள்]
a மெக்ளின்டாக், ஸ்ட்ராங் என்பவர்களின் சைக்ளோப்பீடியா சொல்கிறதாவது: “புதிய ஏற்பாட்டில் குறிப்பிட்டுள்ள, பூர்வ ரோமர்களிடம் சேவித்த யூத வரிவசூலிப்பவர்கள் [ஆயக்காரர்கள்], காட்டிக்கொடுப்பவர்கள், விசுவாச துரோகிகள் என்றும், புறமதத்தினரோடு எப்போதும் கலந்திருப்பதால் தங்களை அசுத்தப்படுத்திக் கொண்டவர்கள் என்றும், ஒடுக்குபவர்களின் கைப்பாவைகள் என்றும் கருதப்பட்டார்கள். அவர்கள் பாவம் செய்தவர்களோடு வகைப்படுத்தப்பட்டனர் . . . புறக்கணிக்கப்பட்டவர்களாய் இருந்ததால் நல்ல குடும்பத்தில் பிறந்த எவரும் வரிவசூலிப்பவர்களோடு சம்பந்தம் வைத்துக் கொள்ளாதிருந்தனர்; அவர்களுடைய உற்ற நண்பர்களாகவோ தோழர்களாகவோ இருந்தவர்கள் அவர்களைப் போலவே தள்ளி வைக்கப்பட்டிருந்த நபர்களே.”
b வியாபார அல்லது பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஓரளவு ஏமாற்றுதல், மோசடி அல்லது தந்திரங்கள் உட்பட்டிருந்தால் அவை இயேசு குறிப்பிட்ட வகை பாவத்தில் அடங்கும். மத்தேயு 18:15-17-லுள்ள வழிமுறையைக் குறிப்பிட்டபின், கடன்பட்டு செலுத்த முடியாமல் போன ஊழியக்காரர்களைப் (வேலையாட்களைப்) பற்றிய உவமையை இயேசு அவர்களுக்குச் சொன்னது அதைக் குறிப்பால் உணர்த்துகிறது.
c “குறிப்பாக, தன்னுடன் கருத்துவேறுபாடு உடைய ஒரு நபருடைய புத்திமதியைக் கேட்பதைக் காட்டிலும் இரண்டு அல்லது மூன்று பேருடைய (அதிலும் அவர்கள் மதிப்புக்குரியவர்களாய் இருந்தால்) பேச்சுக்குச் செவிசாய்க்க தவறுசெய்தவர் மனமுள்ளவராக இருப்பது சிலசமயங்களில் தெரிய வருகிறது” என பைபிள் கல்விமான் ஒருவர் குறிப்பிட்டார்.
நினைவிருக்கிறதா?
◻ முக்கியமாக, எப்படிப்பட்ட பாவத்திற்கு மத்தேயு 18:15-17-லுள்ள நியமத்தைப் பின்பற்ற வேண்டும்?
◻ முதல் படியை நாம் எடுக்க நேர்ந்தால் எதை நினைவில் வைக்க வேண்டும்?
◻ இரண்டாவது படியை எடுக்க வேண்டி வந்தால் யார் நமக்கு உதவியாய் இருப்பர்?
◻மூன்றாவது படியை எடுக்கையில் எவர் உட்பட்டிருப்பர், இருப்பினும், நம் சகோதரரை நாம் எப்படி ஆதாயப்படுத்திக் கொள்ளலாம்?
[பக்கம் 18-ன் படம்]
யூதர்கள் வரிவசூலிப்போரைத் தவிர்த்தனர். மத்தேயு தன்னை மாற்றிக்கொண்டு இயேசுவைப் பின்பற்றினார்
[பக்கம் 20-ன் படம்]
எப்போதும் “நான்கு கண்களே அறிய” நாம் பிரச்சினைகளைத் தீர்க்கலாம்