யெகோவா தாமதிக்க மாட்டார்
“அது [தரிசனம்] தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”—ஆபகூக் 2:3.
1. யெகோவாவின் சாட்சிகள் எத்தகைய தீர்மானத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள்? இது எதைச் செய்யும்படி அவர்களைத் தூண்டியுள்ளது?
“நான் என் காவலிலே தரித்து” நிற்பேன் இது கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஆபகூக்கின் தீர்மானம். (ஆபகூக் 2:1) இந்த 20-ம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகளும் அதே திடத்தீர்மானத்தை வெளிக்காட்டியிருக்கிறார்கள். செப்டம்பர் 1922-ல் நடந்த வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாநாட்டில் பின்வரும் அழைப்பு விடுக்கப்பட்டது: “இதுவே நமக்கு பொன்னாள். இதோ, ராஜா ஆட்சிசெய்கிறார்! நீங்களே அவரது பிரதிநிதிகள். ஆகவே ராஜாவையும் அவருடைய ராஜ்யத்தையும் அறிவியுங்கள்! அறிவியுங்கள்! அறிவியுங்கள்!”
2. முதல் உலக யுத்தத்திற்கு பிறகு அபிஷேகம் பண்ணப்பட்ட கிறிஸ்தவர்களை மறுபடியும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்தபோது அவர்களால் எதை அறிவிக்க முடிந்தது?
2 முதல் உலக யுத்தத்திற்கு பிறகு அபிஷேகம் பண்ணப்பட்ட மீதியானோரை யெகோவா மறுபடியும் சுறுசுறுப்பாக இயங்கச் செய்தார். ஆகவே, ஆபகூக்கைப் போன்று அவர்கள் ஒவ்வொருவரும் இவ்வாறு சொல்ல முடிந்தது: “நான் . . . அரணிலே நிலைகொண்டிருந்து, அவர் எனக்கு என்ன சொல்லுவாரென்று கவனித்துப் பார்ப்பேன்.” ‘காவல்,’ ‘கவனித்துப் பார்ப்பது’ போன்ற எபிரெய வார்த்தைகள் அநேக தீர்க்கதரிசனங்களில் திரும்பத் திரும்ப வருகின்றன.
“அது தாமதிப்பதில்லை”
3. நாம் ஏன் விழித்திருக்க வேண்டும்?
3 இன்று யெகோவாவின் மக்கள் அந்த எச்சரிப்பை தொனிக்கச் செய்கையில், இயேசுவின் மிகப் பெரிய தீர்க்கதரிசனத்தின் முடிவான வார்த்தைகளைக் கடைப்பிடிக்க அவர்கள் எப்போதும் கவனமாயிருக்க வேண்டும்: “அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாத வேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறதை எல்லாருக்கும் சொல்லுகிறேன், விழித்திருங்கள்.” (மாற்கு 13:35-37) ஆபகூக்கைப் போலவும் இயேசுவின் வார்த்தைகளுக்கு இசைவாகவும் நாம் தொடர்ந்து விழித்திருக்க வேண்டும்!
4. நம் நாளைய சூழ்நிலையும் பொ.ச.மு. 628-ல் ஆபகூக்கின் நாளில் இருந்த சூழ்நிலையும் எவ்வாறு ஒத்திருக்கிறது?
4 ஆபகூக் தன்னுடைய தீர்க்கதரிசனத்தை ஏறக்குறைய பொ.ச.மு. 628-ல், அதாவது பாபிலோன் வல்லமையுள்ள ஓர் உலக வல்லரசாக ஆவதற்கு முன்பே எழுதியிருக்கலாம். விசுவாசதுரோக எருசலேமை யெகோவா நியாயந்தீர்க்கப்போவதை அநேக வருடங்களாக அறிவித்து வந்தார்கள். ஆனாலும் அந்தத் தண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பதற்கு தெளிவான எந்த அறிகுறியும் இருக்கவில்லை. இன்னும் 21 வருடங்களிலேயே அழிவு வரவிருப்பதையும், அதற்கு பாபிலோனை யெகோவா கருவியாக பயன்படுத்துவதையும் யாரும் கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லையே! அதைப் போலவே இன்றும். இந்த உலக முடிவைக் குறிக்கும் ‘அந்த நாளையும் அந்த நாழிகையையும்’ பற்றி நமக்கு தெரியாது. ஆனால், இயேசு நமக்கு முன்னெச்சரிப்பு கொடுத்திருக்கிறார்: “நீங்கள் நினையாத நாழிகையிலே மனுஷகுமாரன் வருவார்; ஆதலால், நீங்களும் ஆயத்தமாயிருங்கள்.”—மத்தேயு 24:36, 44.
5. ஆபகூக் 2:2, 3-ல் பதிவு செய்யப்பட்டுள்ள கடவுளுடைய வார்த்தைகளில் எது குறிப்பாக ஊக்கமளிக்கிறது?
5 நல்ல காரணத்துடனே யெகோவா ஆபகூக்கிற்கு ஆர்வத்தை தூண்டுகிற இந்தக் கட்டளை கொடுத்தார்: “நீ தரிசனத்தை எழுதி, அதைக் கடந்தோடுகிறவன் வாசிக்கும்படிப் பலகைகளிலே தீர்க்கமாக வரை. குறித்த காலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப்பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.” (ஆபகூக் 2:2, 3) இன்று உலகமுழுவதிலும், துன்மார்க்கமும் வன்முறையும் என்றுமில்லாத அளவுக்கு மோசமாகி வருகின்றன. இவை, “கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நா[ளின்]” விளிம்பில் நாம் நிற்கிறோம் என்பதற்கான அத்தாட்சிகளே. (யோவேல் 2:31) “அது தாமதிப்பதில்லை” என்று யெகோவாதாமே உறுதியளிக்கும் வார்த்தைகள் உண்மையில் உற்சாகமளிக்கின்றன!
6. நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும் நாளில் நாம் எப்படி தப்பிக்கலாம்?
6 அப்படியென்றால், நியாயத்தீர்ப்பு நிறைவேற்றப்படும் அந்நாளில் நாம் எப்படி தப்பிக்கலாம்? நீதிமான்களுக்கும் அநீதிமான்களுக்கும் மத்தியில் வித்தியாசம் காட்டுவதன் மூலம் யெகோவா இதற்கு பதிலளிக்கிறார்: “இதோ, அகங்காரியாயிருக்கிறானே, அவனுடைய ஆத்துமா அவனுக்குள் செம்மையானதல்ல; தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.” (ஆபகூக் 2:4) பெருமையும் பேராசையுமுள்ள ஆட்சியாளர்களும் மக்களும், முக்கியமாக இரண்டு உலக யுத்தங்களிலும் இனக் கலவரங்களிலும், கோடிக்கணக்கான அப்பாவி ஜனங்களின் இரத்தத்தால் நவீன சரித்திரத்தின் பக்கங்களை கறைபடுத்தியிருக்கின்றனர். அதற்கு நேர்மாறாக, சமாதான பிரியர்களாகிய கடவுளுடைய அபிஷேகம் பண்ணப்பட்ட ஊழியர்கள் உண்மைத்தன்மையைக் காத்துக்கொள்ள எல்லாவற்றையும் சகித்திருக்கின்றனர். இவர்கள் “சத்தியத்தைக் கைக்கொண்டுவருகிற நீதியுள்ள ஜாதி [மக்கள்].” இவர்களும், இவர்களது கூட்டாளிகளாகிய “வேறே ஆடுகளும்” பின்வரும் ஆலோசனையை பின்பற்றுகிறார்கள்: “கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யெகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார்.”—ஏசாயா 26:2-4; யோவான் 10:16.
7. ஆபகூக் 2:4-ஐ பவுல் மேற்கோள் காட்டியிருப்பதை மனதில் கொண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்?
7 அப்போஸ்தலன் பவுல், எபிரெய கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில் ஆபகூக் 2:4-ஐ மேற்கோள் காட்டி யெகோவாவின் மக்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் தேவனுடைய சித்தத்தின்படி செய்து, வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதைப் பெறும்படிக்குப் பொறுமை உங்களுக்கு வேண்டியதாயிருக்கிறது. வருகிறவர் இன்னுங்கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம் பண்ணார். விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.” (எபிரெயர் 10:36-38) நம் வேலையில் தளர்ந்துவிடுவதற்கோ, சுகபோகத்தில் மூழ்கியிருக்கும் சாத்தானிய உலகின் பொருளாசைமிக்க வழிகளை பின்பற்றுவதற்கோ இது நேரமல்ல. ஆகவே, மீதமிருக்கும் ‘இன்னுங்கொஞ்சக் காலத்திற்குள்’ நாம் என்ன செய்ய வேண்டும்? பவுலைப்போல, யெகோவாவின் பரிசுத்த தேசத்தாராகிய நாம் ‘பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி நித்தியஜீவன் என்ற இலக்கை நோக்கித் தொடரக்கடவோம்.’ (பிலிப்பியர் 3:13, 14) இயேசுவைப்போல, ‘நமக்குமுன் வைக்கப்பட்டிருக்கிற சந்தோஷத்தின் பொருட்டு நாம் சகித்திருக்க’ வேண்டும்.’—எபிரெயர் 12:2.
8. ஆபகூக் 2:5-ல் விவரிக்கப்பட்டிருக்கும் “மனிதன்” யார்? அவன் ஏன் வெற்றியடைய மாட்டான்?
8 யெகோவாவின் ஊழியர்களுக்கு எதிர்மாறாக, தன் இலக்கை அடையத் தவறும் ‘திறமையுள்ள மனிதனைப்’ பற்றி ஆபகூக் 2:5 விவரிக்கிறது. “தன் ஆத்துமாவைப் பாதாளத்தைப்போல விரிவாக்கி[யும்]” “திருப்தியாகாமல்” இருக்கும் இந்த மனிதன் யார்? ஆபகூக்கின் காலத்திலிருந்த கொடிய பாபிலோனைப்போல் இந்த ‘மனிதன்’ கூட்டு அரசியல் அதிகாரங்களால் ஆனவன். ஃபாசிஸம், நாசிஸம், கம்யூனிஸம் அல்லது மக்களாட்சி என வித்தியாசப்பட்ட பெயர்களால் அழைக்கப்பட்டாலும் ‘அவன்’ தன் எல்லைகளை விரிவாக்க யுத்தங்களில் ஈடுபடுகிறான். அவன் அப்பாவி மக்களை கொன்று குவித்து ஷியோலை, அதாவது கல்லறையை நிரப்புகிறான். தன்னை யாராலும் அசைக்க முடியாது என்ற ஆணவம் கொண்ட இந்தக் கொடிய கூட்டு அரசு ‘மனிதன்’ சாத்தானுடைய உலகை சேர்ந்தவன். இவன் ‘சகல ஜாதிகளையும் தன் வசமாகச் சேர்த்து, சகல ஜனங்களையும் தன்னிடமாகக் கூட்டிக்கொள்ள’ முயற்சிப்பான். ஆனால் எந்த வெற்றியும் பெறமாட்டான். யெகோவா தேவனால் மட்டுமே சகல ஜனங்களையும் ஒன்றுகூட்ட முடியும்; அதைத் தன்னுடைய மேசியானிய ராஜ்யத்தின் மூலமே அவர் நிறைவேற்றுவார்.—மத்தேயு 6:9, 10.
அதிர்ச்சியூட்டும் ஐந்து ஐயோக்களில் முதல் ஐயோ
9, 10. (அ) ஆபகூக் மூலமாக என்ன தொடர்ச்சியான விஷயங்களை யெகோவா அறிவிக்கிறார்? (ஆ) அநியாய லாபத்தை பொறுத்தவரையில் இன்றைய சூழ்நிலை என்ன?
9 யெகோவா, தம்முடைய தீர்க்கதரிசி ஆபகூக் மூலம் தொடர்ச்சியாக ஐந்து ‘ஐயோ’க்களை அறிவிக்கிறார். இவை கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள். இந்தப் பூமியை கடவுளுடைய உண்மை வணக்கத்தார் வாழ்வதற்கேற்ப தயாரிப்பதற்காக நிறைவேற்றப்போகிறார். அப்படிப்பட்ட நீதியுள்ள மக்கள், யெகோவா கூறுவதைப் போன்ற ‘ஒரு பழமொழியை கூறுவார்கள்.’ அதை நாம் ஆபகூக் 2:6-ல் இவ்விதமாக வாசிக்கிறோம்: “தமக்குரியது அல்லாததைத் தமக்கெனக் குவித்துக் கொள்கின்றவருக்கு ஐயோ கேடு! இன்னும் எத்துனைக் காலத்திற்கு இப்படிச் செய்வர்? அவர்கள் தங்கள்மேல் அடைமானங்களையே சுமத்திக் கொள்கின்றார்கள்!”—பொ.மொ.
10 இங்கு அநியாய லாபத்திற்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நம்மை சுற்றியிருக்கும் உலகில் பணக்காரர் இன்னும் பணக்காரராகிறார்கள்; ஏழைகள் அதிக ஏழைகளாகிறார்கள். போதைப்பொருள் விற்பவர்களும் மோசடிக்காரர்களும் ஏராளமான சொத்து சேர்க்கின்றனர். பொதுமக்களோ பட்டினி கிடக்கின்றனர். உலக ஜனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு வறுமை கோட்டிற்கு கீழே வாழ்வதாக கூறப்படுகிறது. அநேக நாடுகளில் வாழ்க்கைத் தரம் மிகவும் மோசமாக உள்ளது. பூமியில் நீதிக்காக ஏங்குகிறவர்கள் இவ்வாறு கூக்குரலிடுகின்றனர்: “இன்னும் எத்துனைக் காலத்திற்கு இந்தத் துன்மார்க்கம் பெருகியிருக்கும்! ஆனாலும் முடிவு வெகு சமீபம்! தரிசனம் “தாமதிக்காது.”
11. மனித இரத்தத்தை சிந்துவதைப் பற்றி ஆபகூக் என்ன சொல்கிறார்? இன்றும் பூமியில் அதிகமாக இரத்தம் சிந்தி, கறைபடிந்திருக்கிறது என்று ஏன் நாம் சொல்ல முடியும்?
11 தீர்க்கதரிசி துன்மார்க்கரிடம் கூறுகிறார்: “நீ அநேகம் ஜாதிகளைக் கொள்ளையிட்டபடியினால் ஜனங்களில் மீதியான யாவரும் நீ சிந்தின மனுஷ ரத்தத்தினிமித்தமும் நீ செய்த கொடுமையினிமித்தமும் உன்னைக் கொள்ளையிடுவார்கள்.” (ஆபகூக் 2:8) இன்று பூமியில் எவ்வளவு இரத்தம் சிந்துதலை நாம் பார்க்கிறோம்! “பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்” என்று இயேசு தெளிவாக கூறினார். (மத்தேயு 26:52) அப்படி கூறியும்கூட, இந்த 20-ம் நூற்றாண்டில் மட்டும் பத்து கோடிக்கும் அதிகமான மனிதர்களை கொன்று குவித்த, தேசங்களும் இனத்தொகுதிகளும் இரத்தக் கறையோடு நிற்கின்றன. இந்தப் படுகொலைகளில் பங்குகொள்கிறவர்களுக்கு ஐயோ!
இரண்டாம் ஐயோ
12. ஆபகூக் பதிவு செய்த இரண்டாம் ஐயோ என்ன? பொல்லாத ஐசுவரியத்தினால் எந்தப் பயனுமில்லை என்று நாம் எப்படி உறுதியாக கூறமுடியும்?
12 ஆபகூக் 2:9-11-ல் பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டாவது ஐயோ, “தீமையின் வல்லமைக்குத் தப்பவேண்டுமென்று தன் கூட்டை உயரத்திலே வைக்கும்படிக்கு, தன் வீட்டுக்குப் பொல்லாத ஆதாயத்தைத் தேடுகிறவனுக்கு” எதிராக நிறைவேறும். பொல்லாத ஆதாயத்தினால் எந்தப் பயனுமில்லை என்பதை சங்கீதக்காரன் தெளிவாக குறிப்பிடுகிறார்: “ஒருவன் ஐசுவரியவானாகி, அவன் வீட்டின் மகிமை பெருகும்போது, நீ பயப்படாதே. அவன் மரிக்கும்போது ஒன்றும் கொண்டுபோவதில்லை; அவன் மகிமை அவனைப் பின்பற்றிச் செல்வதுமில்லை.” (சங்கீதம் 49:16, 17) அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் ஞானமான ஆலோசனை குறிப்பிடத்தகுந்தது: “இவ்வுலகத்திலே ஐசுவரியமுள்ளவர்கள் இறுமாப்பான சிந்தையுள்ளவர்களாயிராமலும், நிலையற்ற ஐசுவரியத்தின்மேல் நம்பிக்கை வையாமலும், நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற ஜீவனுள்ள தேவன்மேல் நம்பிக்கை வைக்கவும் . . . அவர்களுக்குக் கட்டளையிடு.”—1 தீமோத்தேயு 6:17.
13. கடவுளுடைய எச்சரிப்பின் செய்தியை நாம் ஏன் தொடர்ந்து அறிவிக்க வேண்டும்?
13 இன்று கடவுளுடைய நியாயத்தீர்ப்பு செய்திகள் அறிவிக்கப்பட வேண்டியது எவ்வளவு முக்கியம்! “கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற ராஜா” என்று ஜனக்கூட்டத்தார் இயேசுவைப் புகழ்ந்ததைப் பரிசேயர் எதிர்த்தபோது அவர் பின்வருமாறு பதிலுரைத்தார்: “இவர்கள் பேசாமலிருந்தால் கல்லுகளே கூப்பிடும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.” (லூக்கா 19:38-40) அதைப் போலவே இன்று, இந்த உலகத்தின் துன்மார்க்கத்தை கடவுளுடைய மக்கள் வெளிப்படுத்தவில்லை என்றால் ஒரு “கல்லு சுவரிலிருந்து கூப்பிடும்.” (ஆபகூக் 2:11) ஆகவே தைரியத்துடன் எச்சரிப்பைத் தொடர்ந்து கூறிக்கொண்டே இருப்போமாக!
மூன்றாவது ஐயோவும் இரத்தப்பழி வழக்கும்
14. இவ்வுலக மதங்கள் எந்த இரத்தப்பழிக்கு பொறுப்பாளிகள்?
14 ஆபகூக் மூலமாக அறிவிக்கப்பட்ட மூன்றாவது ஐயோ இரத்தப்பழி வழக்கைப் பற்றியே பேசுகிறது: ஆபகூக் 2:12 இவ்வாறு கூறுகிறது: “இரத்தப் பழிகளாலே பட்டணத்தைக் கட்டி, அநியாயத்தினாலே நகரத்தைப் பலப்படுத்துகிறவனுக்கு ஐயோ!” இந்தக் காரிய ஒழுங்குமுறையில் அநியாயமும் இரத்தப்பழியும் அநேகமாக கைகோர்த்துக்கொண்டே செல்கின்றன. குறிப்பிடத்தக்க விதமாக, சரித்திரத்தின் மிகவும் வெறுக்கத்தக்க படுகொலைகளுக்கு உலக மதங்களே காரணமாய் இருந்திருக்கின்றன. உதாரணமாக, பெயர்க் கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த சிலுவைப் போர்கள், ஸ்பெய்ன் மற்றும் லத்தீன் அமெரிக்காவில் நடந்த கத்தோலிக்க கொடூர விசாரணை, புராட்டஸ்டண்டுகளுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் மத்தியில் ஐரோப்பாவில் நடந்த முப்பது வருட யுத்தம், அவை எல்லாவற்றையும்விட கிறிஸ்தவமண்டல பகுதிகளில் ஆரம்பமான, இரத்த ஆறுகளை ஓடவிட்ட இந்த நூற்றாண்டில் நடந்த இரண்டு உலக யுத்தங்களைப் பற்றியும் சொன்னாலே போதுமல்லவா?
15. (அ) சர்ச்சின் ஆதரவோடு அல்லது அனுமதியோடு தேசங்கள் எதை தொடர்ந்து செய்துவருகின்றன? (ஆ) ஐக்கிய நாடுகள் இந்த உலகம் யுத்த கருவிகளால் நிறைந்துவிடாமல் செய்ய முடியுமா?
15 ஐரோப்பாவிலுள்ள லட்சக்கணக்கான யூதர்களின், அப்பாவிகளின் உயிர்களை பறித்த நாசிப் படுகொலை, இரண்டாவது உலக யுத்தத்தின் போது நடந்த எத்தனையோ கொடூர செயல்களில் ஒன்று. லட்சக்கணக்கான பலியாட்கள் நாசி மரண முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டதை கண்டிக்கத் தவறியதாக சமீபத்தில்தான் பிரான்ஸிலுள்ள ரோமன் கத்தோலிக்க குருவர்க்கம் ஒப்புக்கொண்டிருக்கிறது. ஆனாலும், சர்ச் ஆதரவுடன் அல்லது அனுமதியுடன் தேசங்கள் இரத்தஞ்சிந்த தொடர்ந்து தயாராகிக்கொண்டுதான் இருக்கின்றன. ரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சர்ச்சைப் பற்றி டைம் பத்திரிகை (சர்வதேச பதிப்பு) சமீபத்தில் இவ்வாறு கூறியது: “முன்பு கற்பனைக்கூட செய்திராத ஒரு விஷயத்தில், அதாவது ரஷ்ய யுத்த ஏற்பாட்டில் புதுமலர்ச்சியடைந்த சர்ச் பலமாக தன் அதிகாரத்தை செலுத்துகிறது. . . . ஜெட் விமானங்களையும் போர்வீரர் குடியிருப்புகளையும் ஆசீர்வதிப்பது அநேகமாக தினசரி காரியமாகிவிட்டது. நவம்பரில் ரஷ்ய கத்தோலிக்க ஆட்சி முதல்வரின் அதிகார மையமான மாஸ்கோவிலுள்ள டானிலாஃப்ஸ்கீ மடத்தில், ரஷ்ய அணு ஆயுத படைக்கலத்தை ஆசீர்வதிக்கும் அளவுக்கு சர்ச் சென்றது.” பேய்த்தனமான யுத்தக் கருவிகள் இந்த உலகத்தில் மறுபடியும் நிறைந்துவிடாதபடி ஐக்கிய நாடுகளால் தடைசெய்ய முடியுமா? முடியவே முடியாது! சமாதானத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒருவர், இங்கிலாந்திலுள்ள லண்டனின் த கார்டியன் செய்தித்தாளில் கூறினார்: “ஐநா பாதுகாப்பு சபையின் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும், உலகின் ஐந்து முக்கிய ஆயுத விற்பனையாளர்களாக இருப்பதே அதிக வருத்தந்தரும் விஷயமாகும்.”
16. யுத்தவெறிபிடித்த தேசங்களை யெகோவா என்ன செய்வார்?
16 யுத்தவெறி பிடித்த தேசங்கள்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவாரா? ஆபகூக் 2:13 இவ்வாறு குறிப்பிடுகிறது: “இதோ, ஜனங்கள் அக்கினிக்கு இரையாக உழைத்து, ஜனங்கள் விருதாவாக இளைத்துப்போகிறது கர்த்தருடைய [“சேனைகளின் யெகோவாவுடைய,” NW] செயல் அல்லவோ?” “சேனைகளின் யெகோவா!” ஆம், யெகோவாவிடம் பரலோக தேவதூத சேனை உள்ளது. யுத்தப் பிரியரான மக்களையும் தேசங்களையும் அழிப்பதற்கு அவர் அவற்றைப் பயன்படுத்துவார்!
17. வன்முறையான அந்தத் தேசங்களின்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றிய பிறகு இந்தப் பூமி எந்தளவுக்கு யெகோவாவை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்?
17 வன்முறையான அந்தத் தேசங்களின்மீது யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்றிய பிறகு என்ன நடக்கும்? ஆபகூக் 2:14 பதிலளிக்கிறது: “சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தருடைய மகிமையை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.” என்னே ஒரு மகத்தான எதிர்பார்ப்பு! அர்மகெதோனில் யெகோவாவின் உன்னத அரசதிகாரம் நித்திய காலத்திற்கும் நியாய நிரூபணம் செய்யப்படும். (வெளிப்படுத்துதல் 16:16) நாம் வாழும் பூமியாகிய ‘அவருடைய பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவதாக’ அவர் வாக்குக் கொடுக்கிறார். (ஏசாயா 60:13) மனிதவர்க்கம் முழுவதும் கடவுள் காட்டும் ஜீவ வழியில் போதிக்கப்பட்டிருப்பார்கள். அப்போது யெகோவாவின் மகத்துவமான நோக்கங்களைப் பற்றிய அவர்களுடைய அறிவு சமுத்திர பள்ளத்தாக்குகளை நிரப்பும் கடல் நீரைப்போல் இருக்கும்.
நான்காவது, ஐந்தாவது ஐயோக்கள்
18. ஆபகூக் மூலம் அறிவிக்கப்பட்ட நான்காம் ஐயோ என்ன? இது இன்றைய உலகின் ஒழுக்கநிலையை எவ்வாறு சுட்டிக்காட்டுகிறது?
18 ஆபகூக் 2:15-ல் நான்காவது ஐயோ இவ்வாறு விவரிக்கப்படுகிறது: “தன் தோழருக்குக் குடிக்கக் கொடுத்துத் தன் துருத்தியை அவர்களண்டையிலே வைத்து, அவர்களுடைய நிர்வாணங்களைப் பார்க்கும்படிக்கு, அவர்களை வெறிக்கப்பண்ணுகிறவனுக்கு ஐயோ!” இது இன்றைய உலகில் எந்தவித ஒழுக்க தராதரமோ, கட்டுப்பாடோ இன்றி வாழும் சூழ்நிலையை சுட்டிக்காட்டுகிறது. இப்படி மக்கள் மனம்போன போக்கில் வாழ மத அமைப்புகளும் ஆதரவளிக்கிறது. அதனால் ஒழுக்கக்கேடு தலைவிரித்தாடுகிறது. அதோடு, உயர்க்கொல்லி நோய்களான எய்ட்ஸ், பாலுறவு சம்பந்தப்பட்ட நோய்கள் பூமி முழுவதும் பரவிக் கிடக்கின்றன. எதிலும் ‘தான்’ முன்வர வேண்டும் என்ற எண்ணமே இன்றைய சந்ததியிடம் தலையோங்கி நிற்கிறது. இவர்கள் “கர்த்தருடைய மகிமையை” பிரதிபலிப்பதற்கு பதிலாக ஒழுக்கச் சீர்கேட்டில் முன்னேறுகிறார்கள். ஆனால் இவர்களை நோக்கி கடவுளுடைய நியாயத்தீர்ப்பு வேகமாக வந்துகொண்டிருக்கிறது. வழிதவறிய இந்த உலகம், “மகிமையினால் அல்ல, இலச்சையினால் நிரப்பப்ப[ட்டு]” அவருடைய உக்கிரம் என்னும் பாத்திரத்திலிருந்து குடிக்கப்போகிறது. இது, இந்த உலகத்தினிடமாக அவருடைய சித்தத்தைக் குறிக்கிறது. ‘அதன் மகிமையின்மேல் இலச்சை’ வரும்.—ஆபகூக் 2:16.
19. ஆபகூக் அறிவித்த ஐந்தாவது ஐயோவின் ஆரம்ப வார்த்தைகள் எதை விவரிக்கின்றன? இப்படிப்பட்ட வார்த்தைகள் இன்றைய உலகில் ஏன் முக்கியத்துவம் வாய்ந்தவை?
19 ஐந்தாவது ஐயோவைப் பற்றிய தொடக்க வார்த்தைகளே விக்கிரக வணக்கத்திற்கு எதிராக கடுமையாக எச்சரிக்கிறது. இந்த வலிமையான வார்த்தைகளை அறிவிக்கும்படி தீர்க்கதரிசியிடம் யெகோவா கூறுகிறார்: “மரத்தைப் பார்த்து விழியென்றும், ஊமையான கல்லைப் பார்த்து எழும்பு என்றும் சொல்லுகிறவனுக்கு ஐயோ! அது போதிக்குமோ? இதோ, அது பொன்னும் வெள்ளியுமான தகட்டால் மூடப்பட்டிருக்கிறது; அதற்குள்ளே சுவாசம் இல்லையே?” (ஆபகூக் 2:19) இன்றுவரை, கிறிஸ்தவமண்டலமும் புறமதங்களும் சிலுவைகளையும், கன்னி மரியாள் படங்களையும், சிலைகளையும், மனித மற்றும் மிருக உருவங்களையும் வணங்கி வந்திருக்கின்றன. யெகோவா நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற வரும்போது, இவை எதுவும் தங்கள் பக்தர்களை காப்பாற்ற விழிக்காது. நித்திய கடவுளாகிய யெகோவாவின் உன்னதத்தன்மைக்கும், அவருடைய உயிருள்ள சிருஷ்டிகளின் மகிமைக்கும் முன், பொன், வெள்ளி தகடுகளால் மூடியிருக்கும் விக்கிரகங்களின் உண்மை நிலை வெட்டவெளிச்சம் ஆகிவிடும். அவற்றின் மேல் பூசப்பட்ட தங்கமும் வெள்ளியும் முற்றிலும் அர்த்தமற்றவையாக ஆகிவிடும். அவருடைய ஈடிணையற்ற பெயரை நாம் என்றென்றும் மகிமைப்படுத்துவோமாக!
20. எந்த ஆலய ஏற்பாட்டில் நாம் மகிழ்ச்சியுடன் சேவிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறோம்?
20 ஆம், நம் கடவுளாகிய யெகோவா எல்லா துதிக்கும் பாத்திரமானவர். அவரிடம் காட்டும் ஆழ்ந்த பயம் கலந்த மரியாதையுடன் விக்கிரகாராதனைக்கு எதிரான இந்த உறுதியான எச்சரிப்புக்கும் செவிகொடுப்போமாக. ஆனால் கேளுங்கள்! யெகோவா இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்: “கர்த்தரோவென்றால், தமது பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; பூமியெல்லாம் அவருக்கு முன்பாக மெளனமாயிருக்கக்கடவது.” (ஆபகூக் 2:20) சந்தேகமில்லாமல், எருசலேமின் ஆலயமே தீர்க்கதரிசியின் மனதில் இருந்திருக்கும். என்றபோதிலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை பிரதான ஆசாரியராகக் கொண்ட மிகவும் உன்னதமான ஆவிக்குரிய ஆலய ஏற்பாட்டில் வணங்கும் பாக்கியத்தை இன்று நாம் பெற்றிருக்கிறோம். அந்த ஆலயத்தின் பூமிக்குரிய பிரகாரங்களில், நாம் ஒன்றுகூடி, சேவைசெய்து, ஜெபித்து யெகோவாவின் மகிமையுள்ள பெயருக்கு புகழை ஏறெடுத்து வருகிறோம். நம் அன்பான பரலோகத் தகப்பனை இருதயப்பூர்வமாக வணங்குவதில்தான் நமக்கு எத்தனை மகிழ்ச்சி!
நினைவிருக்கிறதா?
• “அது தாமதிப்பதில்லை”—யெகோவாவின் இந்த வார்த்தைகளை நீங்கள் எவ்வாறு கருதுகிறீர்கள்?
• ஆபகூக் மூலம் அறிவிக்கப்பட்ட ஐயோக்களின் நவீன கால முக்கியத்துவம் என்ன?
• யெகோவாவினுடைய எச்சரிப்பின் செய்தியை நாம் ஏன் தொடர்ந்து அறிவிக்க வேண்டும்?
• எந்த ஆலய பிரகாரத்தில் சேவை செய்யும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம்?
[பக்கம் 15-ன் படங்கள்]
ஆபகூக்கைப் போல் இன்றும் யெகோவாவின் ஊழியர்கள், அவர் தாமதிக்க மாட்டார் என்பதை அறிந்திருக்கிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
ஆவிக்குரிய ஆலய பிரகாரத்தில் யெகோவாவை வணங்கும் பாக்கியத்தை நீங்கள் மதிக்கிறீர்களா?
[பக்கம் 16-ன் படத்திற்கான நன்றி]
U.S. Army photo