நம்மை வழிநடத்துகிறவர் யெகோவா
“செவ்வையான பாதையில் என்னை நடத்தும்.”—சங்கீதம் 27:11.
1, 2. (அ) யெகோவா இன்று தம் ஜனங்களை எவ்வாறு வழிநடத்துகிறார்? (ஆ) கூட்டங்களிலிருந்து முழுமையாக நன்மையடைய என்ன செய்ய வேண்டும்?
யெகோவாவே ஒளிக்கும் சத்தியத்திற்கும் ஊற்றுமூலர் என முந்தின கட்டுரையில் நாம் கற்றோம். செம்மையான பாதையில் நாம் பிரயாணப்படுகையில், கடவுளுடைய வார்த்தை நம் பாதைக்கு ஒளியூட்டுகிறது. அவருடைய வழிகளைப் பற்றி போதிப்பதன்மூலம் யெகோவா நம்மை வழிநடத்துகிறார். (சங்கீதம் 119:105) பூர்வத்தின் சங்கீதக்காரரைப் போலவே நாமும் கடவுளுடைய வழிநடத்துதலை நன்றியோடு போற்றி, ஜெபிப்பதாவது: “கர்த்தாவே [“யெகோவாவே,” NW], உமது வழியை எனக்குப் போதித்து, . . . செவ்வையான பாதையில் என்னை வழிநடத்தும்.”—சங்கீதம் 27:11.
2 யெகோவா இன்று போதிக்கும் ஒரு வழி கிறிஸ்தவ கூட்டங்கள் வாயிலாகவே. (1) தவறாமல் கூட்டங்களுக்கு செல்வதன்மூலம், (2) நிகழ்ச்சிகளை கவனமாக கேட்பதன்மூலம், (3) கலந்தாலோசிப்புகளில் தாராளமாக பதில் சொல்வதன்மூலம் இந்த அன்பான ஏற்பாட்டிலிருந்து முழு நன்மை அடைகிறோமா? மேலும், “செவ்வையான பாதையில்” நிலைத்திருக்க உதவும் ஆலோசனைகளை நாம் பெறும்போது அவற்றை நன்றியோடு ஏற்றுக்கொள்கிறோமா?
நீங்கள் கூட்டங்களுக்கு எப்படி செல்கிறீர்கள்?
3. கூட்டங்களுக்கு தவறாமல் செல்லும் நல்ல பழக்கத்தை முழுநேர ஊழியர் ஒருவர் எப்படி வளர்த்துக்கொண்டார்?
3 சிறுவயது முதற்கொண்டே சில ராஜ்ய அறிவிப்பாளர்கள் கூட்டங்களுக்கு தவறாமல் செல்கின்றனர். “1930-களில், நாங்கள் வளரும் பிராயத்தில், கூட்டங்களுக்கு செல்கிறோமா என எங்கள் பெற்றோரை என்னுடைய அக்காமார்களும் நானும் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. உடம்பு சரியில்லை என்றால் தவிர மற்றபடி நாங்கள் கூட்டங்களுக்கு செல்வோம் என எங்களுக்கு தெரியும். எங்கள் குடும்பம் கூட்டங்களை தவறவிட்டதே கிடையாது” என முழுநேர ஊழியராக இருக்கும் ஒரு யெகோவாவின் சாட்சி சொல்கிறார். தீர்க்கதரிசினியாகிய அன்னாளைப்போல், இந்த சகோதரியும் யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு செல்வதை “ஒருபோதும் தவறவிடுவதேயில்லை.”—லூக்கா 2:36, 37, NW.
4-6. (அ) ராஜ்ய அறிவிப்பாளர்கள் சிலர் ஏன் கூட்டங்களை தவறவிடுகின்றனர்? (ஆ) கூட்டங்களுக்கு செல்வது ஏன் மிக முக்கியம்?
4 கிறிஸ்தவ கூட்டங்களுக்கு தவறாமல் செல்கிறவர்களில் நீங்களும் ஒருவரா அல்லது எப்போதாவது ஒருமுறை செல்கிறவர்களாக ஆகிவிட்டீர்களா? இந்த விஷயத்தில் தங்களிடத்தில் பிரச்சினை ஏதுமில்லை என்று நினைத்த சில கிறிஸ்தவர்கள் அதை நிச்சயப்படுத்திக்கொள்ள தீர்மானித்தனர். சில வாரங்களுக்கு, அவர்கள் சென்ற ஒவ்வொரு கூட்டத்தையும் குறித்துக்கொண்டனர். குறிப்பிட்ட அந்தக் காலப்பகுதி முடிவடைந்ததும், அந்தப் பதிவை அவர்கள் மறுபரிசீலனை செய்தனர். அவர்கள் தவறவிட்ட கூட்டங்களின் எண்ணிக்கையை அறிந்து அவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டனர்.
5 ‘இதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது, மக்களுக்கு இன்று அதிக பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, கூட்டங்களுக்கு தவறாமல் வருவதென்பது அவ்வளவு சுலபமானதல்ல’ என ஒருவர் சொல்லலாம். நெருக்கடிமிக்க காலங்களில்தான் நாம் வாழ்கிறோம் என்பது மெய்யே. பிரச்சினைகள் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் சந்தேகமே இல்லை. (2 தீமோத்தேயு 3:13) கூட்டங்களுக்கு தவறாமல் செல்வதற்கு இதுவே ஒரு முக்கிய காரணமாக இருக்கிறதல்லவா? நாம் தளர்ந்துவிடாமல் இருக்க, சீரான, ஆரோக்கியமான ஆவிக்குரிய உணவு தேவை. இல்லையென்றால், இந்த ஒழுங்குமுறை கொண்டுவரும் பிரச்சினைகளை நம்மால் சமாளிக்கவே முடியாது. நாம் ஒழுங்காக கூட்டுறவு கொள்ளவில்லையென்றால், “நீதிமான்களுடைய பாதை”யை ஒரேயடியாக கைவிட்டுவிட நாம் கவர்ந்திழுக்கப்படலாம்! (நீதிமொழிகள் 4:18) கடின உழைப்பால் களைத்து வீடு வந்து சேரும்போது, கூட்டங்களுக்கு செல்ல வேண்டுமென தோன்றாது. ஆனாலும், நம் களைப்பின் மத்தியிலும் நாம் கூட்டங்களுக்கு செல்லும்போது நாம்தானே நன்மை அடைகிறோம். ராஜ்ய மன்றத்திற்கு வரும் உடன் கிறிஸ்தவர்களையும் நாம் உற்சாகப்படுத்துகிறோம்.
6 கூட்டங்களுக்கு நாம் ஏன் தவறாமல் செல்ல வேண்டுமென்பதற்கான மற்றொரு முக்கியமான காரணத்தை எபிரெயர் 10:25 குறிப்பிடுகிறது. ‘நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்’ கூடிவர வேண்டுமென உடன் கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் அறிவுரை கூறுகிறார். “யெகோவாவின் நாள்” சமீபித்திருக்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடுவதற்கில்லை. (2 பேதுரு 3:12, NW) இந்த ஒழுங்குமுறையின் முடிவுக்கு இன்னும் அதிக காலம் இருக்கிறதென நாம் நினைத்தோமானால், கூட்டங்களுக்கு செல்வது போன்ற முக்கியமான ஆவிக்குரிய செயல்களுக்குப் பதிலாக நம் சொந்தக் காரியங்களுக்கான நாட்டங்களில் ஈடுபட ஆரம்பித்துவிடுவோம். அதன்பின், இயேசு எச்சரித்ததுபோல, நீங்கள் ‘நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வந்துவிடும்.’—லூக்கா 21:34.
நன்கு செவிகொடுப்பவர்களாக இருங்கள்
7. பிள்ளைகள் கூட்டங்களை உன்னிப்பாக கவனிப்பது ஏன் அவசியம்?
7 கூட்டங்களுக்கு வெறுமனே போய்வருவது மாத்திரமே போதாது. கவனமாக செவிகொடுக்க வேண்டும். அங்கு சொல்லப்படுவதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். (நீதிமொழிகள் 7:24) நம் பிள்ளைகளையும் இது உட்படுத்துகிறது. பிள்ளை பள்ளிக்கு செல்லும்போது, ஆசிரியர் சொல்வதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட பாடம் அந்தப் பிள்ளையின் புரிந்துகொள்ளும் சக்திக்கு மிஞ்சியதாய் தோன்றினாலும் அல்லது அந்தப் பிள்ளைக்கு விருப்பமில்லாத பாடமாக இருந்தாலும் அந்தப் பிள்ளை கவனிக்க வேண்டும். பாடத்தை கவனிக்க முயற்சி செய்தால், அதிலிருந்து சிறிதளவாவது அந்த பிள்ளை நன்மையடையும் என்பதை ஆசிரியர் அறிவார். அப்படியென்றால், கூட்டங்கள் ஆரம்பித்ததும் பள்ளி செல்லும் வயதிலுள்ள பிள்ளைகளை தூங்க அனுமதிப்பதற்கு பதிலாக அங்கு கொடுக்கப்படும் போதனைகளுக்கு செவிகொடுக்கும்படி எதிர்பார்ப்பது நியாயமானதல்லவா? வேதவசனங்களில் காணப்படும் மதிப்புமிக்க சத்தியங்களில் ‘சில அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது’ என்பதென்னவோ உண்மைதான். (2 பேதுரு 3:16) ஆனால், கற்பதற்கான பிள்ளையின் திறமையை நாம் குறைவாக எடைபோடக்கூடாது. கடவுள் அப்படி செய்வதில்லை. பைபிள் காலங்களில், இளம் ஊழியர்களும் “தேவனாகிய கர்த்தருக்குப் [“யெகோவாவுக்குப்,” NW] பயந்து, இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளின்படியெல்லாம் செய்ய கவனமாயிருக்கும்படி” கடவுள் கட்டளையிட்டார். அவற்றில் சிலவற்றை புரிந்துகொள்ள பிள்ளைகளுக்கு கடினமாகத்தான் இருந்திருக்கும். (உபாகமம் 31:12; லேவியராகமம் 18:1-30-ஐ ஒப்பிடுக.) இன்று பிள்ளைகளிடமிருந்து அதைவிடக் குறைவாக யெகோவா எதிர்பார்க்கிறாரா?
8. பிள்ளைகள் கூட்டங்களில் நன்கு கவனம் செலுத்த சில பெற்றோர் என்ன செய்கின்றனர்?
8 தங்கள் பிள்ளைகளுடைய ஆவிக்குரிய தேவைகளில் பாதி அவர்கள் கூட்டங்களில் என்ன கற்றுக்கொள்கிறார்களோ அவற்றால் பூர்த்தி செய்யப்படுகிறது என்பதை கிறிஸ்தவ பெற்றோர் உணருகின்றனர். எனவே, கூட்டங்களுக்கு முன் தங்கள் பிள்ளைகளை ஒரு குட்டித்தூக்கம் போட வைக்கின்றனர் சில பெற்றோர். அப்போதுதான் அவர்கள் ராஜ்ய மன்றத்திற்கு புத்துணர்ச்சியோடும் கற்றுக்கொள்ளத் தயாராயும் வருவார்கள். கூட்டங்கள் இருக்கும் நாட்களில், இரவில் டிவி பார்க்கும் நேரத்தை சில பெற்றோர் கட்டுப்படுத்துகின்றனர் அல்லது ஞானமாக பார்க்காமலே இருக்கும்படி செய்கின்றனர். (எபேசியர் 5:15, 16) இப்படிப்பட்ட பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடைய கவனத்தை சிதறடிக்கும் காரியங்களை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைக்கின்றனர். கூட்டங்களில் கவனம் செலுத்தி, கற்றுக்கொள்ள உற்சாகமூட்டுகின்றனர். பிள்ளைகளுடைய வயது, திறமைக்கு ஏற்ப இதைப் பெற்றோர் செய்கின்றனர்.—நீதிமொழிகள் 8:32.
9. செவிகொடுக்கும் நம் திறமையை வளர்க்க எது நமக்கு உதவக்கூடும்?
9 “நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்” என சொல்லும்போது இயேசு பெரியவர்களிடம் பேசிக்கொண்டிருந்தார். (லூக்கா 8:18) இன்றைய நாட்களில், இது சொல்வதற்குத்தான் சுலபம். உன்னிப்பாய் கவனிப்பதென்பது கடினம் என்பது ஒத்துக்கொள்ள வேண்டியதே. ஆனால், இந்த திறமையை வளர்த்துக்கொள்ளலாம். நீங்கள் ஒரு பைபிள் பேச்சையோ அல்லது கூட்டத்தில் ஒரு பகுதியையோ கவனித்துக்கொண்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள். முக்கியமான கருத்துக்களை தனிப்படுத்த முயலுங்கள். பேச்சாளர் அடுத்ததாக என்ன சொல்லப்போகிறார் என்பதை யோசியுங்கள். உங்கள் ஊழியத்திலோ அல்லது உங்கள் வாழ்க்கையிலோ நடைமுறைப்படுத்தக்கூடிய குறிப்புகளுக்கு கவனம் செலுத்துங்கள். பேச்சில் சொல்லப்படும் ஒவ்வொரு குறிப்புகளையும் அவை கலந்தாலோசிக்கப்படும்போதே மனதிற்குள்ளேயே சிந்தித்துப்பாருங்கள். சுருக்கமான குறிப்புகளை எடுத்துக்கொள்ளுங்கள்.
10, 11. தங்கள் பிள்ளைகள் நன்கு செவிகொடுப்பவர்களாக ஆவதற்கு சில பெற்றோர் எப்படி உதவியிருக்கின்றனர், என்ன முறைகள் உங்களுக்கு உதவின?
10 நன்கு செவிகொடுக்கும் பழக்கத்தை சிறந்த முறையில் கற்றுக்கொள்ளும் பருவம் சிறுவயதே. எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொள்வதற்கு முன்னரே, கூட்டங்களில் “குறிப்புகள்” எடுக்கும்படி சில சின்னஞ்சிறார்கள் தங்கள் பெற்றோரால் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். “யெகோவா,” “இயேசு,” அல்லது “ராஜ்யம்” போன்ற பரிச்சயமான வார்த்தைகள் வரும்போது, பேப்பரில் ஒரு கோடு போடுகின்றனர். இந்த வகையில், மேடையிலிருந்து சொல்லப்படும் காரியங்களுக்கு கவனம் செலுத்த பிள்ளைகள் கற்றுக்கொள்ளலாம்.
11 கவனம் செலுத்துவதற்கான உற்சாகமூட்டுதல் பெரிய பிள்ளைகளுக்கும்கூட சில சமயங்களில் தேவை. கிறிஸ்தவ மாநாட்டின்போது, தன் பதினோரு வயது மகன் பகல்கனவு காண்பதை அவனுடைய அப்பா கவனித்தார். உடனே ஒரு பைபிளை மகனிடம் கொடுத்தார். பேச்சாளர் வசனங்களை சொல்ல சொல்ல அதை பைபிளில் பார்க்கும்படி மகனிடம் சொன்னார். தகப்பன் பேச்சிலிருந்து குறிப்புகளை எடுக்க, மகன் பைபிள் வசனத்தை எடுத்தான். அதன்பின், மாநாடு நிகழ்ச்சிகளை மகன் ஆர்வத்தோடு கவனித்தான்.
உங்கள் குரல் தொனிக்கட்டும்
12, 13. சபையோடு சேர்ந்து பாடுவது ஏன் இன்றியமையாதது?
12 “யெகோவாவே, துதியின் சத்தத்தை தொனிக்கப்பண்ணி, உம்முடைய பீடத்தைச் சுற்றிவருவேன்” என தாவீது ராஜா பாடினார். (சங்கீதம் 26:6, 7, NW) நம் விசுவாசத்தை உரக்க அறிவிக்க யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்கள் சிறந்த வாய்ப்பளிக்கின்றன. சபையாக பாடுவதில் சேர்ந்துகொள்வதன்மூலம் இதை நாம் செய்யலாம். நம் வணக்கத்தின் முக்கிய பாகம் இது. ஆனால், இது எளிதில் புறக்கணிக்கப்படலாம்.
13 ஒவ்வொரு வாரமும் கூட்டங்களில் பயன்படுத்தப்படும் ராஜ்ய பாட்டுகளின் வரிகளை, வாசிக்கத் தெரியாத சிறு பிள்ளைகள்கூட மனப்பாடமாக சொல்கின்றனர். பெரிய பிள்ளைகளோடு சேர்ந்து பாடுவதில் அவர்கள் குதூகலம் அடைகின்றனர். என்றாலும், பிள்ளைகள் வளர வளர, ராஜ்ய பாட்டுகளைப் பாடுவதில் சேர்ந்துகொள்ள அந்தளவு விருப்பம் காட்டாதிருக்கலாம். கூட்டங்களில் பாடுவதைப் பற்றி பெரியவர்களில் சிலர் தயக்கம் காட்டலாம். எனினும், பாடுவது நம் வணக்கத்தின் பாகம். வெளி ஊழியம் எப்படி நம் வணக்கத்தின் பாகமோ அப்படியே பாடுவதும். (எபேசியர் 5:19) ஊழியத்தில் யெகோவாவை துதிக்க நம்மால் ஆன எல்லாவற்றையும் செய்கிறோம். அதைப்போலவே, இனிமையாக இருக்கிறதோ இல்லையோ, நம் குரல்களை உயர்த்தி, இருதயப்பூர்வமான துதியின் பாடல்களைப் பாடுவதன்மூலம் அவரை மகிமைப்படுத்தலாமல்லவா?—எபிரெயர் 13:15.
14. சபை கூட்டங்களில் நாம் படிக்கும் காரியங்களை ஏன் முன்னதாகவே கவனமாக தயாரிக்க வேண்டும்?
14 கலந்தாலோசிப்புகளின்போது, உற்சாகமூட்டும் பதில்களைத் தருவதன்மூலமும் நாம் கடவுளை துதிக்கிறோம். இது தயாரிப்பை தேவைப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தையின் ஆழமான காரியங்களை ஆழ்ந்து சிந்திக்க நேரம் தேவை. கடவுளுடைய வார்த்தையின் ஆர்வமுள்ள மாணவராகிய அப்போஸ்தலனாகிய பவுல் இதை உணர்ந்திருந்தார். அவர் எழுதினார்: “ஆ! தேவனுடைய ஐசுவரியம், ஞானம், அறிவு என்பவைகளின் ஆழம் எவ்வளவாயிருக்கிறது!” (ரோமர் 11:33) குடும்பத் தலைவர்களே, பைபிளில் காணப்படும் கடவுளுடைய ஞானத்தை ஆராய்ந்து கண்டடைய குடும்ப அங்கத்தினர் ஒவ்வொருவருக்கும் உதவ வேண்டியது மிக அவசியம். குடும்ப பைபிள் படிப்பின்போது, கடினமான குறிப்புகளை விளக்கவும், கூட்டங்களுக்காக உங்கள் குடும்பம் தயாரிக்க உதவுவதற்கும் நேரத்தை ஒதுக்குங்கள்.
15. கூட்டங்களில் பதில் சொல்ல என்ன ஆலோசனைகள் ஒருவருக்கு உதவலாம்?
15 கூட்டங்களில் நன்றாக பதில் சொல்ல நீங்கள் விரும்பினால், நீங்கள் சொல்ல விரும்புவதை ஏன் முன்னதாகவே தயாரிக்கக்கூடாது? நீண்ட, விளக்கமான பதில்கள் அவசியமில்லை. பொருத்தமான ஒரு பைபிள் வசனத்தை நம்பிக்கையோடு வாசிப்பதோ அல்லது இருதயத்திலிருந்து சொல்லப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளோ போதுமானது. குறிப்பிட்ட பத்தியில் வரும் முதல் குறிப்பை தங்களை கேட்கும்படி சில பிரஸ்தாபிகள் படிப்பு நடத்துபவரிடம் முன்னதாகவே சொல்லிவிடுகின்றனர். இப்படியாக, தங்கள் விசுவாசத்தை அறிக்கையிடும் வாய்ப்பை அவர்கள் தவறவிடுவதில்லை.
பேதைகளும் ஞானியாகுதல்
16, 17. மூப்பர் ஒருவர், உதவி ஊழியர் ஒருவருக்கு கொடுத்த ஆலோசனை என்ன, அது ஏன் பயனுள்ளதாய் இருந்தது?
16 கடவுளுடைய வார்த்தையை தினமும் வாசிக்கும்படி நாம் அடிக்கடி யெகோவாவின் சாட்சிகளுடைய கூட்டங்களில் ஞாபகப்படுத்தப்படுகிறோம். அவ்வாறு செய்வது புத்துணர்ச்சியூட்டுகிறது. ஞானமான தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. நம் குணங்களில் இருக்கும் குறைகளை திருத்திக்கொள்ள உதவுகிறது. சோதனைகளை எதிர்க்க உதவுகிறது. தவறான திசையில் சென்றுவிட்டால், ஆவிக்குரிய நிதானத்தை மறுபடியும் பெற உதவுகிறது.—சங்கீதம் 19:7.
17 நம் தேவைகளுக்கு ஏற்ப பைபிள் புத்திமதிகளைத் தர அனுபவமுள்ள மூப்பர்கள் தயாராக இருக்கின்றனர். நாம் செய்ய வேண்டியதெல்லாம், பைபிள் அடிப்படையிலான அவர்களுடைய ஆலோசனைகளை நாடுவதன்மூலம், அவற்றை “மொண்டெடுப்ப”தே. (நீதிமொழிகள் 20:5) சபையில் இன்னும் அதிக உதவியாக இருக்க என்ன செய்ய வேண்டுமென ஆர்வமுள்ள ஓர் இளம் உதவி ஊழியர் மூப்பரிடம் ஒரு நாள் ஆலோசனை கேட்டார். அந்த இளம் ஊழியரை மூப்பருக்கு நன்றாக தெரியும். எனவே, அவர் தன் பைபிளைத் திறந்து 1 தீமோத்தேயு 3:3-ல் உள்ள, உதவி ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்கள் “நியாயமானவருமாக” இருக்க வேண்டும் என்ற குறிப்பைக் காட்டினார். மற்றவர்களோடு உள்ள தொடர்புகளில் அந்த இளம் ஊழியர் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும் என்பதை மூப்பர் கனிவோடு சுட்டிக்காட்டினார். மூப்பர் கொடுத்த வெளிப்படையான ஆலோசனையால் அந்த இளம் சகோதரர் புண்பட்டாரா? இல்லவே இல்லை! “மூப்பர் பைபிளிலிருந்து எடுத்து சொன்னார். அதனால், அந்த ஆலோசனை யெகோவாவிடமிருந்து வந்ததென புரிந்துகொண்டேன்” என அவர் விளக்கினார். அந்த ஆலோசனையை உதவி ஊழியர் நன்றியோடு ஏற்றுக்கொண்டு, நடைமுறைப்படுத்தினார். நல்ல முன்னேற்றமும் காண்கிறார்.
18. (அ) பள்ளியில் எதிர்ப்பட்ட சோதனைகளை சமாளிக்க ஓர் இளம் கிறிஸ்தவ சகோதரிக்கு எது உதவியது? (ஆ) சோதனைகளை எதிர்ப்படும்போது எந்த பைபிள் வசனங்களை நீங்கள் ஞாபகப்படுத்திக்கொள்கிறீர்கள்?
18 “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு விலகியோ[ட]” கடவுளுடைய வார்த்தை இளைஞர்களுக்கு உதவுகிறது. (2 தீமோத்தேயு 2:22) ஓர் இளம் சாட்சி (சகோதரி) சமீபத்தில்தான் உயர்நிலைப் பள்ளி படிப்பை முடித்தாள். பள்ளிப் பருவம் முழுவதும் எதிர்ப்பட்ட எல்லா சோதனைகளையும் அவளால் சமாளிக்க முடிந்தது. பைபிள் வசனங்கள் சிலவற்றை தியானித்து, அவற்றை பொருத்துவதன்மூலம் அவளால் சோதனைகளை எதிர்க்க முடிந்தது. நீதிமொழிகள் 13:20-ல் உள்ள, “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்” என்ற ஆலோசனையை அவள் அடிக்கடி நினைத்துக்கொண்டாள். அதன் காரணமாக, பைபிள் நியமங்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுபவர்களோடு மாத்திரமே நட்பை வளர்த்துக்கொள்வதில் ஜாக்கிரதையாக இருந்தாள். “நானும் மற்றவர்களைப்போல் சாதாரணமானவள்தான். கெட்ட சகவாசம் வைத்திருந்தால், அவர்களைப் பிரியப்படுத்தவே விரும்பியிருப்பேன். அது பல பிரச்சினைகளில் என்னை மாட்டிவிட்டிருக்கும்” என அவள் சொல்கிறாள். 2 தீமோத்தேயு 1:8-ல் பதிவு செய்யப்பட்டுள்ள பவுலின் ஆலோசனையும் அவளுக்கு மிகவும் உதவிற்று. பவுல் எழுதினார்: ‘கர்த்தரைப்பற்றிய சாட்சியைக்குறித்து வெட்கப்படாமல், . . . சுவிசேஷத்திற்காக தீங்கனுபவி.” அந்த ஆலோசனைக்கு இசைய, பொருத்தமான சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய பைபிள் அடிப்படையிலான நம்பிக்கைகளை தன் சகமாணவ மாணவியர்களிடம் அவள் தைரியமாக சொன்னாள். வகுப்பில் ஏதாவது அறிக்கை கொடுக்க வேண்டுமென எப்போதெல்லாம் சொல்லப்பட்டதோ அப்போதெல்லாம், கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றி சாதுரியமாக சாட்சி கொடுக்க சந்தர்ப்பம் அளிக்கும் ஒரு பொருளை அவள் தேர்ந்தெடுத்தாள்.
19. இந்த உலகின் அழுத்தங்களை, ஓர் இளைஞரால் ஏன் எதிர்க்க முடியவில்லை, ஆனால் அவருக்கு ஆவிக்குரிய பலத்தை எது கொடுத்தது?
19 “நீதிமான்களுடைய பாதை”யிலிருந்து நாம் விலக நேரிட்டாலும், நம் நடையை சரிசெய்துகொள்ள கடவுளுடைய வார்த்தை உதவுகிறது. (நீதிமொழிகள் 4:18) ஆப்பிரிக்காவில் உள்ள ஓர் இளைஞர் இதை அனுபவப்பூர்வமாக கற்றுக்கொண்டார். யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் அவரை சந்தித்தபோது, ஒரு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டார். என்ன கற்றுக்கொண்டு வந்தாரோ அதில் அவர் சந்தோஷம் அடைந்தார். ஆனால் வெகு விரைவில், பள்ளியில் கெட்ட சகவாசத்தை வளர்த்துக்கொண்டு அதில் வீழ்ந்துபோனார். காலப்போக்கில், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கைப் பாணியைப் பின்பற்ற ஆரம்பித்தார். “என் மனசாட்சி என்னைக் குத்திக்கொண்டே இருந்தது. அதனால், கூட்டங்களுக்கு செல்வதை நான் நிறுத்த வேண்டியதாயிற்று” என அவர் ஒத்துக்கொள்கிறார். பின்னர், மறுபடியும் கூட்டங்களுக்கு வர ஆரம்பித்தார். அந்த இளைஞர் சொல்லும் வெளிப்படையான குறிப்பு இதே: “ஆவிக்குரிய விதமாக நான் பட்டினியாக இருந்ததே நடந்த எல்லாவற்றிற்கும் முக்கிய காரணம். தனிப்பட்ட படிப்பை கைவிட்டுவிட்டேன். அதனால்தான் சோதனைகள் வந்தபோது என்னால் எதிர்த்து நிற்க முடியவில்லை. பிறகு, காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிக்க ஆரம்பித்தேன். படிப்படியாக என்னுடைய ஆவிக்குரிய பலத்தை மறுபடியும் பெற்றேன். என்னுடைய வாழ்க்கையையும் சரிப்படுத்தினேன். நான் செய்த மாற்றங்களை கவனித்தவர்களுக்கு இது ஒரு நல்ல சாட்சியாக விளங்கியது. நான் முழுக்காட்டுதல் பெற்று, இப்போது சந்தோஷமாக இருக்கிறேன்.” தன்னுடைய மாம்ச பலவீனங்களை மேற்கொள்ளும் பலத்தை எது அந்த இளைஞருக்கு கொடுத்தது? ஒழுங்கான, தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலமாகத்தான் அவர் தன்னுடைய ஆவிக்குரிய பலத்தை மீண்டும் பெற்றார்.
20. சாத்தானின் தாக்குதல்களை ஓர் இளைஞர் எப்படி எதிர்த்தார்?
20 கிறிஸ்தவ இளைஞர்களே, நீங்கள் இன்று தாக்கப்படுகிறீர்கள்! சாத்தானின் தாக்குதல்களை நீங்கள் எதிர்க்க வேண்டுமானால், ஆவிக்குரிய உணவை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும். இளைஞராக இருந்த சங்கீதக்காரர் இதைப் புரிந்துகொண்டார். ‘வாலிபன் தன் வழியை சுத்தம் பண்ண’ அவருடைய வார்த்தையை கொடுத்ததற்காக யெகோவாவுக்கு அவர் நன்றி சொன்னார்.—சங்கீதம் 119:9.
கடவுள் எங்கெல்லாம் வழிநடத்துகிறாரோ, அங்கெல்லாம் நாம் செல்வோமாக
21, 22. சத்தியத்தின் பாதை மிகக் கடினமானதென்கிற முடிவுக்கு நாம் ஏன் வரக்கூடாது?
21 இஸ்ரவேல் தேசத்தாரை எகிப்திலிருந்து மீட்டு வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் யெகோவா வழிநடத்தினார். மனித கண்ணோட்டத்தில் பார்க்கப்போனால், அவர் தெரிந்தெடுத்த பாதை அநாவசியமான, கடினமான ஒன்றாக தோன்றலாம். மத்தியதரைக் கடலோரம் நெடுக சென்ற நேர்ப்பாதையை, அதாவது சுலபமான வழியாக தோன்றிய ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு மாறாக, யெகோவா தம் மக்களை சிக்கலான வனாந்தர மார்க்கமாக வழிநடத்தினார். எனினும், இது கடவுளின் பங்கில் உண்மையிலேயே அவர்கள் மேலிருந்த கரிசனையைக் காட்டுகிறது. குறைந்த தூரமாக இருந்தபோதிலும், கடல் மார்க்கம் இஸ்ரவேல் ஜனங்களை கொடூரமான பெலிஸ்தர்களின் தேசம் வழியாக கொண்டு சென்றிருக்கும். ஆனால், வேறு பாதையை தேர்ந்தெடுப்பதன்மூலம், பயணத்தின் துவக்கத்திலேயே பெலிஸ்தர்களோடு மோத வேண்டியதிலிருந்து யெகோவா தம் மக்களை காத்தார்.
22 அதைப் போலவே, இன்றும் யெகோவா நம்மை வழிநடத்திச் செல்லும் பாதை சில சமயங்களில் கடினமான ஒன்றாக தோன்றலாம். சபை கூட்டங்கள், தனிப்பட்ட படிப்பு, வெளி ஊழியம் உட்பட கிறிஸ்தவ நடவடிக்கைகளுக்கான முழுமையான அட்டவணை ஒவ்வொரு வாரமும் நமக்கு இருக்கிறது. மற்ற வழிகள் ஒருவேளை சுலபமாக தோன்றலாம். ஆனால், கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றினால்தான், நாம் சென்று சேர்வதற்காக கடினமாக உழைக்கும் அந்த இடத்தை அடைய முடியும். எனவே, யெகோவாவிடமிருந்து வரும் முக்கியமான போதனைகளை தொடர்ந்து ஏற்றுக்கொண்டு, “செவ்வையான பாதை”யில் என்றுமாக நிலைத்திருப்போமாக!—சங்கீதம் 27:11.
உங்களால் விளக்க முடியுமா?
• விசேஷமாக கிறிஸ்தவ கூட்டங்களுக்கு நாம் ஏன் தவறாமல் செல்ல வேண்டும்?
• தங்கள் பிள்ளைகள் கூட்டங்களில் கவனம் செலுத்த பெற்றோர் என்ன செய்யலாம்?
• நன்கு செவிகொடுப்பவராக இருப்பதில் என்ன அடங்கியுள்ளது?
• கூட்டங்களில் பதில் சொல்ல எது நமக்கு உதவுகிறது?
[பக்கம் 16,17-ன் படம்]
யெகோவாவின் நாளை நம் மனதில் வைக்க கூட்டங்கள் உதவுகின்றன
[பக்கம் 18-ன் படங்கள்]
கிறிஸ்தவ கூட்டங்களில் யெகோவாவை துதிக்க பல வழிகள் இருக்கின்றன