பசிபிக் தீவுகளுக்கு உழைக்க!
ஆஸ்திரேலியாவிலுள்ள பிரிஸ்பேன், சிட்னி சர்வதேச விமான நிலையங்கள் படுபிஸியாக இருந்தன. காரணம்? விமானத்திற்காக பயணிகள் காத்திருக்கும் இடத்தில் சூழ்நிலை வழக்கத்தைவிட மிக பரபரப்பாக இருந்தது. வெயில் சுட்டெரிக்கும் சமோவா என்ற இடத்திற்கு செல்ல 46 பயணிகள் ஆவலோடே காத்திருந்தனர். அங்கே, நியூஸிலாந்து, ஹவாய், ஐக்கிய மாகாணங்களில் இருந்து வரும் இன்னும் 39 பேர் இவர்களோடு சேர்ந்துகொள்வார்கள். இவர்கள் எல்லாரும் சேர்ந்து மனதை கொள்ளைகொள்ளும் பசிபிக் தீவிற்கு செல்கின்றனர். உல்லாசமாக நேரத்தைக் கழிக்கவா? இல்லை. அவர்கள் கொண்டு செல்லும் பொருட்களே அதற்கு சாட்சி. அவர்களுடைய பெட்டிகளில் இருந்தவை சுத்திகள், ரம்பங்கள், துளையிடும் கருவிகள். அவர்கள் செல்லும் நோக்கம் உண்மையிலேயே மிக அருமையானது.
தங்கள் சொந்த செலவில் பயணம் செய்யும் இவர்கள், அங்கு சுமார் இரண்டு வாரங்கள் தங்கப்போகிறார்கள். ஏன்? அங்கு நடக்கும் கட்டிட திட்டங்களுக்குத் தங்கள் சேவையை அர்ப்பணிக்கவே. இந்த வேலை யெகோவாவின் சாட்சிகளுடைய ஆஸ்திரேலியா கிளையிலுள்ள மண்டல பொறியியல் அலுவலகத்தின் மேற்பார்வையின்கீழ் நடக்கிறது. இந்தக் கட்டிட திட்டம் மனமுவந்து அளிக்கப்படும் நன்கொடைகளால் நடத்தப்படுகிறது. ராஜ்யமன்றங்கள், அசெம்பிளி ஹால்கள், மிஷனரி இல்லங்கள், அலுவலக கட்டிடங்கள் அல்லது மொழிபெயர்ப்பாளர்களுக்கான அலுவலகங்கள் போன்றவற்றை கட்டுவது இத்திட்டத்தில் அடங்கும். பசிபிக் தீவுகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகள் படுவேகமாக வளர்ந்து வருவதால் இப்படிப்பட்ட வேலைகளும் அதிகரிக்கின்றன. இந்த வேலைகளை செய்வதற்காக சென்றவர்களில் சிலரை சந்திப்போமா! இவர்களில் சிலர் தங்கள் நாடுகளில் உள்ள ராஜ்யமன்ற கட்டுமான குழுக்களிலும் வேலை செய்தவர்கள்.
மாக்ஸ். இவர் ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸிலுள்ள கெளரா என்ற பட்டணத்தைச் சேர்ந்தவர். கட்டிடங்களுக்கு கான்கிரீட் போடுவது அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் போடுவதே இவரது தொழில். இவர் மணமானவர்; ஐந்து பிள்ளைகளை உடையவர். ஆர்னல்ட் ஹவாயைச் சேர்ந்தவர். இவர் முழுநேர ஊழியர். இவரும் மணமானவர், இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே சபையில் மூப்பர்களாக சேவிக்கின்றனர். கட்டிடத் திட்டத்தில் இருக்கும் மற்றவர்களைப் போலவே இவர்களும் மனமுவந்து சேவை செய்கின்றனர். ஆனால் இவர்கள் வாலண்டியர்கள் அல்ல. இருந்தாலும், இவர்களும்சரி இவர்களுடைய குடும்பங்களும்சரி தங்களால் முடிந்ததை செய்ய வேண்டுமென விரும்புகின்றனர்.
பன்னாட்டு வாலண்டியர்களின் சேவை
இந்த வாலண்டியர்களின் சேவை தேவைப்படும் ஓர் இடம் துவாலூ. பூமத்திய ரேகைக்கும் வடமேற்கு சமோவாவுக்கும் அருகிலிருக்கும் ஒன்பது பவளத்தீவுகள் அடங்கியதே இந்த பசிபிக் தீவுக்கூட்டம். இதன் மக்கள் தொகை சுமார் 10,500. இந்த தீவுகள் ஒவ்வொன்றின் பரப்பளவும் சராசரியாக சுமார் 2.5 சதுர கிலோமீட்டராகும். 1994-க்குள், அங்கிருந்த சாட்சிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்தது. எனவே, புதிய ராஜ்ய மன்றமும் பெரிய மொழிபெயர்ப்பு அலுவலகமும் கட்ட வேண்டிய தேவை ஏற்பட்டது.
சூறாவளிகளும் புயல்களும் இந்த வெப்பமண்டல பகுதிக்கே பிரத்தியேகமானவை. இவையனைத்திற்கும் ஈடுகொடுக்கும் விதத்தில் கட்டிடங்கள் வடிவமைக்கப்பட்டு கட்டப்பட வேண்டும். ஆனால், அதற்கேற்ற கட்டிடப் பொருட்கள் இந்த தீவுகளில் அரிதுதான். என்ன செய்வது? கட்டிடத்தின் கூரைக்கு உதவும் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட் முதல் மரச்சாமான்கள், திரைச்சீலைகள், டாய்லெட்டுக்கு தேவையான உபகரணங்கள், குளியலறை சாதனங்கள், ஆணி, திருகு ஆணி என எல்லா பொருட்களும் ஆஸ்திரேலியாவிலிருந்து கப்பலில் கொண்டு வரப்பட்டது.
இந்தப் பொருட்கள் அனைத்தும் வந்திறங்குவதற்கு முன்னமே, ஒரு சிறிய குழு அங்கு சென்று, அந்த இடத்தை சுத்தப்படுத்தி அஸ்திவாரமும் போட்டனர். அதன் பிறகு சர்வதேச வாலண்டியர்கள் வந்திறங்கினர். கட்டிடத்தை முடித்து, பெயிண்ட் அடித்து, அதில் தேவையான எல்லா சாதனங்களையும் பொருத்தினர்.
துவாலூவில் நடந்த இவை எல்லாம் அங்கிருந்த பாதிரியின் கண்களுக்கு தப்பவில்லை. இது அவருடைய கோபத்தை கிளறியது. எனவே, சாட்சிகள் ஒரு “பாபேல் கோபுரத்தை” எழுப்புகின்றனரென ரேடியோவில் அறிவித்தார். ஆனால், உண்மை என்ன? “பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் பாபேல் கோபுரத்தை கட்டியபோது, கடவுள் அவர்களுடைய பாஷையை தாறுமாறாக்கியதால் ஒருவர் பேசியதை மற்றொருவர் புரிந்துகொள்ள முடியவில்லை. அதனால், அவர்கள் ஆரம்பித்த அந்த கோபுரத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள். (ஆதியாகமம் 11:1-9) ஆனால் இந்த திட்டமோ முற்றிலும் மாறானது. யெகோவா தேவனுக்காக வேலை செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியே தனி. என்னதான் பாஷையிலும் கலாச்சாரத்திலும் வித்தியாசங்கள் இருந்தாலும், சாட்சிகள் எடுக்கும் எல்லா திட்டங்களும் எப்போதுமே முழுமையாக முடிக்கப்படுகின்றன” என வாலண்டியராக சேவை செய்ய வந்த க்ரேமீ என்பவர் சொல்கிறார். துவாலூ திட்டமும் அதில் ஒன்று. அது இரண்டே வாரங்களில் முடிக்கப்பட்டது. அது கட்டி முடிக்கப்பட்டு, பிரதிஷ்டை செய்யப்பட்டபோது, அந்நாட்டின் பிரதம மந்திரியின் மனைவி உட்பட 163 பேர் வந்திருந்தனர்.
அத்திட்டத்தை மேற்பார்வை செய்த சகோதரர் டக் என்பவர் தன் அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்: “மற்ற நாடுகளிலிருந்து வரும் வாலண்டியர்களோடு சேர்ந்து வேலை செய்வது ஆனந்தமாக இருக்கிறது. வித்தியாசமான பாஷைகள், ஒரு வேலையை செய்ய வித்தியாசமான முறைகள், ஏன் அளக்கும் முறையிலும்கூட வித்தியாசம் இருந்தது. ஆனால், இது எதுவுமே எங்களுக்கு பிரச்சினையாக இருக்கவில்லை.” இதுபோன்ற பல திட்டங்களில் வேலை செய்த அவர் சொல்கிறார்: “யெகோவாவின் உதவியோடு, இந்த பூமியில் எந்த மூலை முடுக்காயிருந்தாலும்சரி அவருடைய மக்களால் சேர்ந்து வேலை செய்ய முடியும். எவ்வளவுதான் ஒதுக்குப்புறமாக இருந்தாலும்சரி அல்லது எவ்வளவுதான் கடினமான வேலையாக இருந்தாலும்சரி அவருடைய ஜனங்களால் சாதிக்க முடியும் என்ற உறுதியை எனக்கு தருகிறது. வேலையில் திறமைசாலிகள் நிறைய பேர் எங்களுடைய குழுவில் இருக்கிறார்கள். என்றாலும், எல்லாவற்றையும் முற்றும்முடிய நிறைவேற்றுவது யெகோவாவின் ஆவியே.”
அந்த தீவுகளில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளில் சிலர் ஏழ்மையில் இருந்தபோதிலும், அங்கு வந்த வாலண்டியர்களுக்கு சாப்பாடும் தங்குவதற்கு இடமும் அளித்து உதவினர். இவ்வாறு உதவியளிக்க அவர்களைத் தூண்டியது கடவுளுடைய ஆவியே. இந்த உதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் அதை மிகவும் பாராட்டினார்கள். ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்னைச் சேர்ந்த கென் என்பவர், தென் பசிபிக் பெருங்கடலில் பரவிக்கிடக்கும் தீவுகளில் இதேமாதிரி ஒரு திட்டத்தில் சேவை செய்தவர். அவர் சொல்லும் வார்த்தைகளை சற்று கேளுங்கள்: “நாங்கள் அடிமைகளைப்போல வந்தோம், ஆனால் ராஜாக்களை போன்ற உபசரிப்பும் மரியாதையும் எங்களுக்கு கிடைத்தது.” எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் உள்ளூர் சாட்சிகளும் கட்டிட வேலையில் உதவினார்கள். சாலமன் தீவுகளில், பெண்கள் கையாலேயே கான்கிரீட்டை கலந்தார்கள். நூறு ஆண்களும் பெண்களும், மழை பெய்து சொதசொதவென்று ஊறிப்போன மலைமீது ஏறி, 40 டன்னுக்கும் அதிகமான மரக்கட்டைகளை கீழே சுமந்து வந்தனர். இளைஞர் மட்டும் இதற்கெல்லாம் சளைத்தவர்களா என்ன! நியூஸிலாந்திலிருந்து வந்த ஒரு சாட்சி சொல்கிறார்: “இந்தத் தீவைச் சேர்ந்த இளம் சகோதரர், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று சிமெண்ட் மூட்டைகளை தூக்கி வந்தார். வெயிலோ, மழையோ சலிப்பின்றி ஜல்லியை வாரிவாரி கொட்டினார்.”
உள்ளூர் சாட்சிகள் இந்தக் கட்டிட திட்டத்தில் வேலை செய்தது இன்னொரு நன்மையையும் அவர்களுக்கு அளித்தது. இதைப் பற்றி உவாட்ச்டவர் சொஸைட்டியின் சமோவா கிளை அலுவலகம் இவ்வாறு தெரிவிக்கிறது: “இந்தத் தீவைச் சேர்ந்த சகோதரர்கள் தொழில் திறமைகளை கற்றுக்கொண்டனர். அந்தத் திறமைகளை பயன்படுத்தி அவர்களே இனிமேல் ராஜ்ய மன்றங்களை கட்டலாம். அதுமட்டுமல்ல, புயலுக்கு பேர்போன இந்த இடத்தில், அந்தமாதிரி இயற்கை நாசங்களுக்குப் பிறகு பழுதுபார்த்தல், புதுப்பித்துக் கட்டுதல் போன்ற வேலைகளையும் இனிமேல் அவர்களே செய்யலாம். அதோடு பிழைப்புக்கும் இந்த திறமைகள் அவர்களுக்கு உதவும்.”
கட்டிட திட்டம்—சிறந்த சாட்சி
காலின் என்பவர் ஹோனியாராவில் இருந்த சமயத்தில், சாலமன் தீவுகளில் அசெம்பிளி ஹால் கட்டுவதைப் பார்த்தார். அது அவர் மனதை மிகவும் கவர்ந்தது. எனவே, ஒரு பாராட்டுக் கடிதத்தை வாட்ச்டவர் சொஸைட்டியின் உள்ளூர் கிளை அலுவலகத்திற்கு பிட்கின் ஆங்கிலத்தில் எழுதினார்: “எல்லாரும் ஒத்துமையா இருக்காங்க; அவங்கள்ல யாருமே சிடுசிடுன்னு இல்ல; ஒரே குடும்பம் போல இருக்காங்க.” இதற்குப்பின் சிறிது நாட்களில், அங்கிருந்து 40 கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஆரூலீகோவிலுள்ள தன் கிராமத்திற்கு அவர் திரும்பினார். அங்கே, அவரும் அவருடைய குடும்பமும் சேர்ந்து ஒரு ராஜ்யமன்றத்தைக் கட்டினர். அதன்பிறகு, அலுவலகத்திற்கு அவர் மற்றொரு கடிதம் எழுதினார்: “பேச்சாளருக்கான போடியம் உட்பட எங்கள் ராஜ்யமன்றம் தயாராக இருக்கிறது. நாங்கள் இங்கே கூட்டங்களை நடத்தலாமா?” என அக்கடிதத்தில் கேட்டிருந்தார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது, 60-க்கும் அதிகமானோர் இப்போது தவறாமல் கூட்டங்களுக்கு வருகின்றனர்.
துவாலூவில் கட்டப்பட்ட திட்டத்தைப் பார்த்த யூரோப்பியன் யூனியனின் ஆலோசகர் இவ்வாறு சொல்கிறார்: “எல்லாருமே உங்களுக்கு பாராட்டு மழை பொழிவார்கள் என எனக்கு தெரியும். இருந்தாலும், என்னைப் பொருத்தவரையில் இது ஓர் அதிசயம்தான்!” டெலிஃபோன் எக்ஸ்சேஞ்சில் வேலை பார்க்கும் ஒரு பெண், “இங்கே வெயில் இப்படி சுட்டுப் பொசுக்குகிறதே! நீங்கள் எல்லாரும் எப்படி இவ்வளவு சந்தோஷமாய் வேலை செய்கிறீர்கள்?” என வாலண்டியர் சகோதரர் ஒருவரைக் கேட்டார். கிறிஸ்தவம் இப்படி தன்னலமற்ற செயல்களில் காண்பிக்கப்படுவதை அவர்கள் இதுவரை பார்த்ததே இல்லை.
செய்த தியாகங்களுக்காக வருத்தமே இல்லை
“பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான்” என பைபிள் 2 கொரிந்தியர் 9:6-ல் சொல்கிறது. வாலண்டியர்களும் அவர்கள் குடும்பங்களும் சபைகளும், பசிபிக்கிலுள்ள உடன் சாட்சிகளுக்கு உதவ தொடர்ந்து பெருக விதைத்துவருகிறார்கள். “பயணச் செலவில் முக்கால்வாசிக்கு மேல் என் சபையே நன்கொடையாக அளித்தது. என்னோடு வந்த என் மைத்துனர் இன்னும் 500 டாலரை நன்கொடையாக அளித்தார்” என சிட்னிக்கு அருகிலுள்ள கீன்கம்பர் சபையைச் சேர்ந்த ராஸ் என்பவர் சொல்கிறார். தன் பயணச் செலவுக்காக தன்னுடைய காரை விற்றார் இன்னொரு வாலண்டியர். இன்னொருவர், தன் நிலத்தை விற்றார். கெவினுக்கு தேவைப்பட்டதோ இன்னும் 900 டாலர். எனவே, தன்னுடைய இரண்டு வயது புறாக்கள் பதினாறை விற்க தீர்மானித்தார். தெரிந்தவர் ஒருவர் மூலம், அந்த பதினாறு புறாக்களையும் 900 டாலருக்கு வாங்கும் ஒருவர் அகப்பட்டார். அவருக்குத் தேவைப்பட்ட அதே 900 டாலர்!
“பயணச்செலவு, வாலண்டியர் வேலைக்காக சென்றதால் இழந்த வருமானம் எல்லாம் சேர்த்து மொத்தத் தொகை 6,000 டாலர். இந்த செலவு உண்மையிலேயே பிரயோஜனமானதா?” இந்தக் கேள்வி டேனியிடமும் ஷெரிலிடமும் கேட்கப்பட்டது. அவர்களது பதில்: “சந்தேகமே இல்லை! இப்போது ஆன செலவைவிட இரண்டு மடங்கு ஆகியிருந்தாலும்கூட அது மிக மிக பிரயோஜனமாகத்தான் இருந்திருக்கும்.” நியூஸிலாந்திலுள்ள நெல்சன் என்ற இடத்தைச் சேர்ந்த ஆலன் சொன்னார்: “நான் துவாலூவிற்கு சென்ற பணத்தில், ஐரோப்பாவே சென்று வந்திருக்க முடியும். அதுபோக கையிலும் மிச்சம் இருந்திருக்கும். ஆனால், இந்த ஆசீர்வாதங்களை நான் பெற்றிருக்க முடியுமா? பல கலாச்சாரத்திலிருந்து வந்தவர்களை நண்பர்களாக்கியிருக்க முடியுமா? எனக்காகவே எல்லாவற்றையும் செய்வதற்கு பதிலாக மற்றவர்களுக்கு ஏதாவது நன்மை செய்திருக்க முடியுமா? முடியவே முடியாது! அந்த தீவிலிருக்கும் சகோதரர்களுக்கு என்னவெல்லாம் நான் செய்தேனோ, அதைவிட பல மடங்கு அவர்கள் எனக்கு செய்தார்கள்.”
இந்த திட்டம் வெற்றி அடைந்ததற்கு மற்றோர் காரணம் குடும்பத்தினர் தந்த ஆதரவே. இவ்வாறு வாலண்டியர்களாக வந்தவர்களில் சிலருடைய மனைவிமார்களால்தான் தங்கள் கணவரோடு வர முடிந்தது. வேலையிலும் உதவி செய்ய முடிந்தது. ஆனால், மற்றவர்களுக்கோ அப்படி வர முடியவில்லை. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் இருந்தனர், அல்லது தொழிலை கவனிக்க வேண்டியிருந்தது. “நான் வாலண்டியர் வேலைக்காக போயிருந்தபோது, பிள்ளைகளை கவனித்துக்கொண்டு, வீட்டுக்காரியங்களையும் சமாளித்துக்கொண்ட என் மனைவி செய்ததுதான் நான் செய்ததைவிட பெரிய தியாகம்” என க்ளே சொன்னார். தங்கள் மனைவிகளை கூட்டிச் செல்ல முடியாத எல்லா கணவன்மார்களுமே க்ளே சொன்னதற்கு “ஆமாமாம்” என நிச்சயம் ஆமோதிப்பார்கள்!
துவாலூவில் இந்த திட்டம் முடிந்தபின், ஃபிஜி, டோங்கா, பாபுவா நியூ கினி, நியூ கலிடோனியா போன்ற பல இடங்களில் ராஜ்யமன்றங்கள், அசெம்பிளி ஹால்கள், மிஷனரி இல்லங்கள், மொழிபெயர்ப்பு அலுவலகங்கள் போன்றவற்றை வாலண்டியர்கள் கட்டியுள்ளனர். தென்கிழக்கு ஆசியாவின் சில இடங்கள் உட்பட, இன்னும் அநேக திட்டங்களுக்கு பிளான்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அவை எல்லாவற்றையும் முடிக்க போதிய வாலண்டியர்கள் இருப்பார்களா?
அது ஒரு பிரச்சினையே கிடையாது. ஹவாய் கிளை அலுவலகம் இப்படியாக குறிப்பிடுகிறது: “இன்னொரு திட்டத்திற்காக பிளான் பண்ணும்போதே அதற்கும் தங்களுடைய சேவை தயார் என சர்வதேச கட்டிட திட்டத்தில் வாலண்டியர்களாக சேவை செய்த அனைவருமே சொல்லியிருக்கின்றனர். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பி சென்ற உடனே அடுத்த பயணத்திற்காக சேமிக்க ஆரம்பித்து விடுகின்றனர்.” தன்னலமற்ற இந்த சேவைக்கு யெகோவாவின் அளவிலா ஆசீர்வாதம் இருக்கும்போது, இந்தக் கட்டிட திட்டம் வெற்றியடையாமல் போகுமா?
[பக்கம் 9-ன் படம்]
கட்டுமான பொருட்கள்
[பக்கம் 9-ன் படங்கள்]
கட்டும் இடத்தில் வேலை செய்யும் குழு
[பக்கம் 10-ன் படங்கள்]
திட்டங்கள் முடிவடைகையில், கடவுளுடைய ஆவி சாதித்தவற்றிற்காக நாங்கள் களிகூர்ந்தோம்