நீங்கள் “முதிர்ச்சி வாய்ந்த” கிறிஸ்தவரா?
நாம் அனைவரும் ஒரு காலத்தில் குழந்தைகளாக இருந்தோம். ஆனால் எடுப்பார் கை குழந்தையாகவே இருந்துவிட்டோமா? இல்லவே இல்லை. “நான் குழந்தையாய் இருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன்; குழந்தையின் மனநிலையை பெற்றிருந்தேன்; குழந்தையைப் போல எண்ணினேன். நான் பெரியவனானபோது குழந்தைக்குரியவற்றை அறவே விட்டுவிட்டேன்” என்று தன் வளர்ச்சியை அப்போஸ்தலன் பவுல் விளக்கினார்.—1 கொரிந்தியர் 13:11, பொது மொழிபெயர்ப்பு.
இந்த உண்மை ஆன்மீகத்திற்கும் பொருந்தும். ஆன்மீகத்தில் குழந்தையாக இருந்த நாம் படிப்படியாக வளர்ச்சி அடைகிறோம். காலப்போக்கில் நாம் அனைவருமே “இறை மகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட நிறைவைப் பெறுமளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.” (எபேசியர் 4:13, பொ.மொ) அதனால்தான், 1 கொரிந்தியர் 14:20-ல் (பொ.மொ) நமக்கு பின்வரும் புத்திமதி கொடுக்கப்பட்டிருக்கிறது: “சிந்திப்பதில் நீங்கள் சிறுபிள்ளைகள்போல் இராதீர்கள். தீங்கு செய்வதில் குழந்தைகள் போலவும் சிந்திப்பதில் முதிர்ச்சி அடைந்தவர்கள் போலவும் இருங்கள்.”
உண்மைக் கடவுளை வணங்கும் மக்கள் இன்று அதிகரித்துக்கொண்டே இருக்கின்றனர். எனவே அவர்கள் மத்தியில் அநேக புதியவர்களை காணமுடியும். இந்தக் கூட்டத்தில் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் இருப்பது பெரிய ஆசீர்வாதமே. முதிர்ச்சி வாய்ந்தவர்கள் சபைக்கு உறுதியை அளிக்கும் தூண்களாக செயல்படுகின்றனர். ஏனெனில், சபை ஏதாவது ஓர் அம்சத்தில் பீடு நடை போடுவதற்கு இவர்களுடைய உதாரணம் அனைவருக்கும் உதவுகிறது.
ஒரு குழந்தை பெரியவனாக வளருவது சாதாரண விஷயமே, அதில் அதிசயம் இல்லை. ஆனால், அவன் வளராமல் குழந்தையாக இருந்தால்தான் கவலை ஏற்படும். ஆன்மீக வளர்ச்சி, சரீர வளர்ச்சியைப் போலவே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. அதற்கு சற்று காலமெடுக்கும்; முயற்சியும் அவசியம். எனவேதான் பவுல் வாழ்ந்த காலத்திலிருந்த சில கிறிஸ்தவர்கள், பல வருடங்களாக கடவுளை சேவித்தும் முதிர்ச்சியடையவில்லை என்பதாகக் குறிப்பிடுகிறார். இது நமக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? இல்லவே இல்லை. (எபிரெயர் 5:12; 6:1) இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி? நீங்கள் கடவுளை பல வருடங்களாக சேவித்திருந்தாலும் சரி அல்லது சில வருடங்களாக கடவுளுக்கு சேவை செய்தாலும் சரி உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்வது நல்லது. (2 கொரிந்தியர் 13:5) பக்குவமானவர், முதிர்ச்சியடைந்த கிறிஸ்தவர் என்பதாக உங்களை மற்றவர்கள் எடைபோடுகிறார்களா? அப்படியில்லை என்றால் நீங்கள் எவ்வாறு முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவராக மாறலாம்?
சரி எது தவறு எது என்று சரியாக புரிந்துகொள்வது
ஆன்மீகத்தில் குழந்தையாக இருப்பவர் ‘மனிதர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும், தவறுக்கு வழிநடத்தும் ஏமாற்று வழிகளையும் நம்பி, அவர்களுடைய போதனைகள் என்னும் காற்றால் அடித்துச் செல்லப்பட்டு அங்குமிங்கும் அலைக்கழிக்கப் படுவார்.’ அதனால்தான் பவுல் பின்வரும் புத்திமதியை அளித்தார்: ‘தலையாகிய கிறிஸ்துவைப் போன்று எல்லாவற்றிலும் நாம் வளர வேண்டும்.’ (எபேசியர் 4:14, 15, பொ.மொ) இப்படி வளருவதற்கு என்ன செய்ய வேண்டும்? எபிரெயர் 5:14, (பொ.மொ) பின்வரும் பதிலை அளிக்கிறது: “முதிர்ச்சி அடைந்தோருக்கு ஏற்றது திட உணவு, அவர்கள் நன்மை தீமையைப் பகுத்தறிவதற்கான ஆற்றல்களைப் பயன்படுத்தப் பயிற்சி பெற்றவர்கள்.”
இந்த வசனம் விளக்குகிறபடி, முதிர்ச்சி அடைந்தவர்கள் தங்களிடம் இருக்கும் பகுத்தறிவதற்கான ஆற்றல்களை பயன்படுத்துகின்றனர். இதை வேறு வார்த்தைகளில் சொன்னால் பைபிள் நியமங்களை பொருத்துவதில் அவர்களுக்கு அனுபவம் இருக்கிறது. யாரும் விதைத்தவுடன் கனியை எதிர்பார்ப்பதில்லை, அதைப்போலவே எவரும் ஒரே நாளில் ஆன்மீக விஷயங்களில் முதிர்ச்சியடைந்து விடுவதில்லை. இருந்தாலும், இப்படிப்பட்ட ஆன்மீக வளர்ச்சிக்காக தனிப்பட்ட படிப்பின் மூலம் உங்கள் உள்ளத்தை பண்படுத்தலாம். இதற்கு கடவுளுடைய ஆழமான எண்ணங்களை அசைபோடுவது அவசியம். சமீபத்திய காவற்கோபுர பத்திரிகைகளில் இப்படிப்பட்ட ஆழமான விஷயங்கள் அலசி ஆராயப்பட்டன. இந்தக் கட்டுரைகளில் ‘புரிந்துகொள்வதற்கு கடினமான’ சில விஷயங்கள் வந்திருக்கின்றன என்பதற்காக முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் இவற்றை வேண்டாம் என்று விலக்குவதில்லை. (2 பேதுரு 3:16) அவர்களைப் பொருத்தவரை அப்படிப்பட்ட ஆன்மீக திட உணவு, ‘தீயும் பயிருக்கு பெய்யும் மழையாகவே’ இருக்கிறது!
பிரசங்கிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் வைராக்கியம்
இயேசு தம் சீஷர்களுக்கு பின்வரும் கட்டளையை கொடுத்தார்: “நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) நீங்கள் பிரசங்க வேலையில் வைராக்கியமாக ஈடுபட்டால் உங்கள் ஆன்மீக முன்னேற்றமும் துரிதமாக இருக்கும். முயற்சி திருவினையாக்கும் என்பதை உண்மையாக்கும் அளவுக்கு ஊழியத்தில் ஈடுபடலாமே?—மத்தேயு 13:23
இன்றுள்ள பிரச்சினைகளுக்கு மத்தியில் பிரசங்கம் செய்வதற்கு நேரத்தை கண்டுபிடிப்பது குதிரைக்கொம்புதான். இருந்தாலும், நீங்கள் பிரசங்கிப்பதற்காக ‘வருந்தி முயலும்போது’ “நற்செய்திக்கு” எவ்வளவு முக்கிய இடத்தை உங்கள் வாழ்க்கையில் வைத்திருக்கிறீர்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறீர்கள். (லூக்கா 13:24; ரோமர் 1:16, பொ.மொ.) இதன் மூலம் நீங்கள் ‘விசுவாசிகளுக்கு மாதிரியாக’ இருக்க முடியும்.—1 தீமோத்தேயு 4:12.
உத்தமர்களாக நடப்பது
முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்களாக வளர வேண்டும் என்றால் உத்தமர்களாக நடக்க கடும் முயற்சி செய்ய வேண்டும். சங்கீதம் 26:1-ல் (NW) தாவீது இவ்வாறு சொல்கிறார்: “யெகோவா தேவனே நீரே என்னை நியாயம் தீர்ப்பீராக, நான் உத்தமமாக நடந்திருக்கிறேன்.” உத்தமத்தன்மை என்பது ஒழுக்கமாக நடப்பது அல்லது நேர்மையாக நடப்பதைக் குறிக்கிறது. இவ்வாறு விவரிக்கப்பட்டாலும் அது பரிபூரணத்தை அர்த்தப்படுத்தாது. தாவீது அநேக பாவங்களை செய்திருக்கிறார். இருந்தாலும் தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு திருந்தி வாழ்ந்ததால் தனக்கு எல்லாமே யெகோவா தேவன்தான் என்பதை நிரூபித்தார். (சங்கீதம் 26:2, 3, 6, 8, 11) அப்படியென்றால், இதயம் நிறைந்த தெய்வ பக்தியின் முழுமையைத்தான், உத்தமத்தன்மை என்பதாக பைபிள் விளக்குகிறது. இதனால்தான் தாவீது தன் குமாரனாகிய சாலமோனிடம் பின்வருமாறு குறிப்பிட்டார்: ‘நீ உன் பிதாவின் தேவனை அறிந்து, அவரை உத்தம இருதயத்தோடு சேவி.’—1 நாளாகமம் 28:9.
உத்தமமாக சேவிப்பது என்று சொல்லும்போது நீங்கள் ‘உலகத்தின் பாகமாக’ இருக்கக்கூடாது என்பதையும் இந்த உலகத்தின் அரசியல், போர் ஆகியவற்றில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும். (யோவான் 17:16) விபச்சாரம், வேசித்தனம், போதை மருந்துகளை உபயோகிப்பது போன்ற மோசமான பழக்கங்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். (கலாத்தியர் 5:19-21) இவற்றை செய்யாமல் இருந்துவிட்டால் உத்தமமாக நடப்பதாகிவிடுமா? இல்லை. சாலோமோன் கொடுக்கும் பின்வரும் எச்சரிக்கையை கவனிப்போமாக: “கலத்திலிருக்கும் நறுமணத்தைலம் முழுவதையும் செத்த ஈக்கள் முடைநாற்றம் வீசும்படி செய்து விடும். அதுபோல், சிறிய மதிகேடும் மேன்மையான ஞானத்தைக் கெடுத்து விடும்” (பிரசங்கி 10:1, பொ.மொ.) ‘சொற்ப மதியீனம்கூட’ ஒருவருடைய “மேன்மையான ஞானத்தை” கெடுத்துவிடும். உதாரணத்திற்கு, ஜோக்ஸ் என்ற போர்வையில் எல்லைகளை மீறுவது அல்லது எதிர்பாலாரிடத்தில் கண்ணியமின்றி நடப்பது போன்ற மதிகெட்ட செயல்களால் பெயரும் புகழும் குட்டிச்சுவராகிவிடும். (யோபு 31:1) ஆகவே நீங்கள் முதிர்ச்சி அடைந்தவர்தான் என்பதை நிரூபிக்க உங்கள் நடத்தையில் கண்ணியத்தை கடைபிடியுங்கள், ‘பொல்லாங்காய்த் தோன்றுகிறவற்றையும்’ நீங்கள் அறவே தவிர்க்க வேண்டும்.—1 தெசலோனிக்கேயர் 5:22.
உண்மை மாறா பற்றுறுதி
முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர் உண்மை மாறா பற்றுறுதி மிக்கவராக இருப்பார். இதனால்தான் எபேசியர் 4:24-ல் (பொ.மொ) அப்போஸ்தலன் பவுல் இப்படிப்பட்ட புத்திமதி அளிக்கிறார்: “கடவுளது சாயலாகப் படைக்கப்பட்ட புதிய மனிதருக்குரிய இயல்பை அணிந்துகொள்ளுங்கள். அவ்வியல்பு உண்மையான நீதியிலும் தூய்மையிலும் வெளிப்படும்.” தூய்மை, நீதி, பயபக்தி போன்ற வார்த்தைகள் கிரேக்க வேதாகமத்தில் வரும் “உண்மை மாறாத பற்றுறுதி” என்ற எண்ணத்தை விளக்குகின்றன. இப்படிப்பட்ட பற்றுறுதி உள்ளவர் சமயப்பற்று மிக்கவராயிருப்பார்; தேவனுக்கு தான் செய்ய வேண்டிய கடமைகளை ஜாக்கிரதையாக செய்வார்.
இப்படிப்பட்ட பற்றுறுதியை எவ்வாறு வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு ஒரு வழி உங்கள் சபை மூப்பர்கள் சொல்லும் விஷயங்களுக்கு கீழ்ப்படிவதாகும். (எபிரெயர் 13:17) கிறிஸ்துதான் சபைக்குத் தலைவர் என்பதை முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் நன்கு அறிந்திருப்பதால் ‘தேவனுடைய சபையை மேய்ப்பவர்களுக்கு’ ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் அவர்கள் பற்றுறுதியைக் காட்டுகின்றனர். (அப்போஸ்தலர் 20:28) மாறாக, மூப்பர்களது அதிகாரத்தை மதிக்காமல் அவர்களிடம் எதிர்த்துப் பேசுவது அல்லது அவர்களை திட்டமிட்டு சிக்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது வேதனைக்குரியது! ‘ஏற்ற வேளையில் ஆவிக்குரிய உணவை’ அளிக்கும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமை வகுப்பாரிடமும்’ அவர்கள் உபயோகிக்கும் அமைப்பிடமும் பற்றுறுதியை காட்டுவது அவசியம். (மத்தேயு 24:45) ஆகவே, காவற்கோபுரம் போன்ற பிரசுரங்களில் வரும் புத்திமதிகளை சொந்த வாழ்க்கையில் பொருத்தவில்லை என்றால் ஏட்டுச்சுரைக்காய் கதையாகிவிடும் என்பதை மறக்கக்கூடாது.
அன்பை நடத்தையில் காட்டுவது
நீங்களெல்லாரும் ஒருவரிலொருவர் வைத்திருக்கிற அன்பு அதிகரித்திருக்கிறது’ என்று தெசலோனிக்காவில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதினார். (2 தெசலோனிக்கேயர் 1:3, NW) ஒருவர் அன்பு காட்டுவதில் வளர்ந்தால்தான் ஆன்மீகத்தில் வளர முடியும். இதைப் பற்றி இயேசு, யோவான் 13:35-ல் (பொ.மொ.) “நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்துகொள்வர்” என்று குறிப்பிட்டார். இப்படிப்பட்ட சகோதர அன்பு வெறும் உணர்ச்சி ததும்பும் வார்த்தைகளால் காட்டப்படுவதல்ல. காரியம் பெரியதா வீரியம் பெரியதா என்ற கேள்விக்கு வைன்ஸ் எக்போசிடரி டிக்ஷனரி ஆஃப் ஓல்ட் அண்ட் நியூ டெஸ்டமென்ட் வோர்ட்ஸ் அளிக்கும் பதிலை கவனியுங்கள்: “வார்த்தைகளால் அல்ல ஒருவர் உள்ளப்பூர்வமாக செய்யும் செயல்களால் மட்டுமே அவருடைய அன்பை அறிந்துகொள்ள முடியும்.” இந்த விஷயத்தைப் பொருத்தவரை நீங்கள் முதிர்ச்சியை நோக்கி முன்னேறுகிறீர்களா இல்லையா என்பதை நிரூபிப்பதற்கு உங்கள் அன்பை செயலில் காட்டுவதே ஒரே வழி.
உதாரணத்திற்கு ரோமர் 15:7-ல் (NW) ‘நீங்கள் மற்றவர்களை வரவேற்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டதை எடுத்துக்கொள்ளலாம். நீங்கள் சபைக்கூட்டங்களுக்கு வரும் விசுவாசிகளையும், புதியவர்களையும் அன்போடு வரவேற்கலாம், அதன் மூலம் உங்கள் அன்பை செயலில் காட்ட முடியும்! நீங்கள் அவர்களோடு பழகி அவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளலாம். மற்றவர்களிடம் ‘தனிப்பட்ட அக்கறை’ காட்டுங்கள் என்பது பைபிளின் ஆலோசனை. (பிலிப்பியர் 2:4, NW) எனவே, அவர்களில் சிலரை உங்கள் வீட்டிற்கு அழைத்து உபசரிக்கலாம். (அப்போஸ்தலர் 16:14, 15) நீங்கள் மற்றவர்களிடம் வைத்திருக்கும் அன்பின் ஆழம் என்ன என்பது சில சமயம் சோதிக்கப்படும். எப்படி? அவர்கள் மனித அபூரணத்தின் காரணமாக உங்களை எரிச்சலூட்டும்போது உங்கள் அன்பு புடமிடப்படும். ‘அன்பின் அடிப்படையில் ஒருவரையொருவர் பொறுத்துக் கொள்வதற்கு கற்றுக்கொள்ளும்போது’ நீங்கள் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர் என்பதை வெட்டவெளிச்சமாக்குகிறீர்கள்.—எபேசியர் 4:2, NW.
உங்கள் பொக்கிஷங்களை உண்மை வணக்கத்திற்காக பயன்படுத்துதல்
முந்தைய காலங்களில் யெகோவாவின் ஆலயம்தான் உண்மை வணக்கத்தின் மையமாக இருந்தது. கடவுளுடைய ஜனங்கள் அந்த ஆலயத்தை ஆதரிப்பதற்கு பொருட்செல்வங்களை அளித்தனர். ஆனால் எல்லாருமே பொறுப்பாக நடந்துகொள்ளவில்லை. எனவே, கடவுள் தம்முடைய தீர்க்கதரிசிகளான ஆகாய், மல்கியா போன்றோரை அந்த ஜனங்களிடம் அனுப்பி ஆலயத்தைக் கட்டும் பணிகளில் ஈடுபட தூண்டினார். (ஆகாய் 1:2-6; மல்கியா 3:10) இன்று, முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் தங்கள் செல்வங்களை யெகோவாவின் வணக்கத்திற்காக சந்தோஷமாக செலவிடுகின்றனர். 1 கொரிந்தியர் 16:1, 2-ல் கொடுக்கப்பட்டிருக்கும் நியமத்தின் அடிப்படையில் அவர்கள் செயல்படுகின்றனர். அதன்படி அவர்கள் ‘எதையாகிலும் தன்னிடத்தில் சேர்த்துவைத்து’ சபையில் அதை நன்கொடையாக அளித்து இதன் மூலம் யெகோவாவின் சாட்சிகளின் உலகளாவிய வேலைக்கு ஆதரவளிக்கின்றனர். கடவுளுடைய வார்த்தை கொடுக்கும் வாக்குறுதி இதோ: “நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்.”—2 கொரிந்தியர் 9:6, (பொ.மொ.)
உங்களிடமுள்ள நேரமும் சக்தியும்கூட பொக்கிஷம்தான் என்பதை மறக்க வேண்டாம். எனவே, அற்ப விஷயங்களுக்காக செலவிடும் நேரத்தை முக்கியமான விஷயங்களுக்காக ‘விலைகொடுத்து வாங்க வேண்டும்.’ (எபேசியர் 5:15, 16; பிலிப்பியர் 1:10, NW) நீங்கள் நேரத்தை திறம்பட்ட முறையில் செலவிட கற்றுக்கொள்ள வேண்டும். ராஜ்ய மன்றத்தை பராமரிப்பது அல்லது ரிப்பேர் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபடுவதற்கு நீங்கள் ‘விலைகொடுத்து வாங்கிய’ நேரம் கைகொடுக்கும். உங்கள் சொத்துக்களை இவ்வாறு செலவிடும்போது, நீங்கள் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்தான் என்பதை நிரூபிக்கிறீர்கள்.
முதிர்ச்சியை நோக்கி முன்னேறுங்கள்!
கீழ்க்காணும் நல்ல பண்புகளை உடைய ஆண்களையும் பெண்களையும் போற்றுவதற்கு வார்த்தைகளே இல்லை. இவர்கள் கடுமையாக உழைப்பவர்கள், அதேசமயம் அறிவாளிகள்; பிரசங்கிப்பதில் வைராக்கியம் உள்ளவர்கள், உத்தமராக நடப்பவர்கள், அன்பானவர்கள், பற்றுறுதி மிக்கவர்கள், ராஜ்ய வேலைக்கு தங்களையே அளிக்கவும் தங்கள் பொக்கிஷங்களை அள்ளி வழங்கவும் தயங்காதவர்கள். இப்படிப்பட்டவர்கள் நம்மோடு இருப்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வாதம். இதனால்தான் அப்போஸ்தலன் பவுல் பின்வரும் புத்திமதியை அளிக்கிறார்: “ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு . . . பூரணராகும்படி கடந்துபோவோமாக.”—எபிரெயர் 6:1, 2.
இப்போதுதான் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது, நீங்கள் முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவரா? அல்லது நீங்கள் இன்னும் ஆன்மீகத்தில் குழந்தையைப்போல் சிலசமயம் நடந்துகொள்கிறீர்களா? (எபிரெயர் 5:13) தற்சமயம் நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி, தனிப்பட்ட படிப்பு, பிரசங்க வேலை, சகோதரர்களிடம் அன்பு காட்டுவது போன்றவற்றில் புருவத்தை உயர்த்தும் அளவுக்கு வைராக்கியமாக இருங்கள். முதிர்ச்சி வாய்ந்தவர்கள் எந்த ஆலோசனையை அளித்தாலும் அதை ஆவலோடு ஏற்றுக்கொள்ளுங்கள். (நீதிமொழிகள் 8:33) கிறிஸ்தவ வாழ்க்கையில் சுமக்க வேண்டிய எல்லா சுமைகளையும் ஏற்றுக்கொண்டால் உங்களால் நன்றாக காலூன்ற முடியும். “நாம் எல்லாரும் இறை மகனைப்பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும் ஒருமைப்பாட்டை அடைவோம்” என்ற வாக்குறுதியை அப்போஸ்தலன் பவுல் அளித்திருக்கிறார். எனவே காலம் செல்லச்செல்ல, நீங்களும் அதிக முயற்சி எடுத்துக்கொள்ளும்போது முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவராக மாற முடியும்.—எபேசியர் 4:13, பொ.மொ.
[பக்கம் 27-ன் சிறு குறிப்பு]
முதிர்ச்சி வாய்ந்தவர்கள் சபைக்கு உறுதியை அளிக்கும் தூண்களாக செயல்படுகின்றனர். ஏனெனில், சபை ஏதாவது ஓர் அம்சத்தில் பீடு நடை போடுவதற்கு இவர்களுடைய உதாரணம் அனைவருக்கும் உதவுகிறது.
[பக்கம் 29-ன் படங்கள்]
முதிர்ச்சி வாய்ந்த கிறிஸ்தவர்கள் சபையினரிடம் அன்போடும் நட்போடும் இருப்பதால் சபையே களைகட்டுகிறது