பணமா உயிரா?
கொள்ளைக்காரர்கள் முகத்திற்கு நேராக துப்பாக்கியை நீட்டி, “பணத்தை கொடுக்கிறியா, இல்ல உயிர விடறியா?” என மிரட்டிய சம்பவங்களை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். இன்றும், பணம் பெரிதா உயிர் பெரிதா என தேர்ந்தெடுக்க முடியாத தர்மசங்கடமான சூழ்நிலையை அனைவரும் எதிர்ப்படுகிறோம்—விசேஷமாக பணக்கார நாடுகளில் வாழ்பவர்கள். ஆனால் இதற்கு எந்தக் கொள்ளைக்காரனின் மிரட்டலும் காரணம் அல்ல. காசு பணத்திற்கும், சொத்து சுகத்திற்கும் இந்தச் சமுதாயம் அதிக முக்கியத்துவம் கொடுப்பதே காரணம்.
இப்படி பணம் பணம் என அலைவதால் புதுப்புது பிரச்சினைகளும் கவலைகளும் முளைத்துள்ளன. பணத்திற்கும் பொருளுக்கும் செலுத்த வேண்டிய விலையென்ன? இருப்பதை வைத்து திருப்தியாக வாழ முடியுமா? பொருளாசை என்ற பலிபீடத்தின்மீது மக்கள் “மெய் வாழ்வை” பலிசெலுத்துகிறார்களா? மகிழ்ச்சியான வாழ்வுக்கு ஒரே வழி பணம்தானா?
பண வெறி
மனித ஆசைகளிலும் மோகங்களிலும்—நியாயமோ இல்லையோ—முன்னணியில் நிற்பது பண ஆசையே. பண வெறி என்பது செக்ஸ் வெறியையோ சாப்பாட்டு வெறியையோ போல அல்ல, அதற்கு ஒரு முடிவே இல்லாமல் ஒருவரை சதா பீடித்துக்கொண்டிருக்கலாம். பணப் பித்து தாளாத வயதில் தள்ளாடி நடப்பவர்களையும் விட்டுவைப்பதில்லை. சொல்லப்போனால், நிறைய பேருக்கு வயதாக வயதாகத்தான் பணத்திலும் அதை வைத்து இன்னும் எதை சாதிக்கலாம் என்பதிலும் ஆர்வம் அல்லது அக்கறை அதிகரிக்கிறது.
பேராசை அதிகரித்துக்கொண்டே போவதாக தோன்றுகிறது. பிரபல திரைப்பட கதாநாயகன் இவ்வாறு சொன்னார்: “பேராசை காரியத்தை சாதிக்கிறது. பேராசை பயன் தருகிறது.” 1980-களை பேராசையின் சகாப்தம் என பலர் குறிப்பிட்டபோதிலும், பண ஆசை எப்போதுமே மனிதனை ஆட்டிப்படைத்து வந்திருப்பதைத்தான் அந்தக் காலப்பகுதிக்கு முன்னும் பின்னும் நடந்த சம்பவங்கள் காட்டுகின்றன.
இப்போது அநேக ஜனங்கள் நினைத்த மாத்திரத்தில் அதிகமாக பொருள் சேர்க்க வழிகளை கண்டுபிடிப்பதே ஒருவேளை புதிய மாற்றமாக இருக்கலாம். உலகில் பெரும்பாலானோர் பெரும்பகுதியான நேரத்தையும் சக்தியையும், அதிகமதிகமான பொருட்களை உற்பத்தி செய்வதிலும் வாங்கி உபயோகிப்பதிலுமே செலவிடுவதாக தெரிகிறது. பொருட்களை வைத்திருப்பதும் பணத்தை செலவிடுவதுமே நவீன வாழ்க்கையில் மிகுந்த மோகத்திற்குரிய ஒன்றாக—பெரும்பாலும் புதுமை படைக்கும் ஒன்றாக—ஆகிவிட்டிருப்பதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
ஆனால் இது மக்களின் மகிழ்ச்சியை அதிகரிக்கிறதா? இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையில், ஞானியாகவும் செல்வந்தராகவும் விளங்கிய சாலொமோன் ராஜா 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு எழுதினார்: “பணப்பிரியன் பணத்தினால் திருப்தியடைவதில்லை; செல்வப்பிரியன் செல்வப்பெருக்கினால் திருப்தியடைவதில்லை; இதுவும் மாயையே.” (பிரசங்கி 5:10) தற்கால சமூகவியல் கல்வியும் இதேபோன்ற ஆர்வத்திற்குரிய முடிவிற்குத்தான் வருகிறது.
பணமும் மகிழ்ச்சியும்
பணத்தையும் பொருளையும் எந்தளவுக்கு குவிக்கிறோமோ அந்தளவுக்கு திருப்தியும் மகிழ்ச்சியும் அதிகரிப்பதில்லை என்பதே மனித இயல்பைக் குறித்த மிக ஆச்சரியமான ஒரு கண்டுபிடிப்பு. செல்வத்தை சேர்ப்பதில் ஒரு குறிப்பிட்ட நிலையை ஒருவர் எட்டியபின், அவருக்கு எவ்வளவுதான் பொன்னோ பொருளோ இருந்தாலும் திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைப்பதில்லை என்பதை ஆய்வாளர்கள் பலர் இப்போது உணர்ந்திருக்கிறார்கள்.
இதனால், பணத்தின் மீதும் பொருளின் மீதும் உள்ள கட்டுப்படுத்த முடியாத நாட்டம் அநேகரை இவ்வாறு கேட்கும்படி செய்கிறது: ‘ஒவ்வொரு புதிய பொருளை வாங்கும்போதும் சந்தோஷம் கிடைப்பதுபோல் தோன்றுகிறது. ஆனாலும் கடைசியில் பார்த்தால் இந்த சந்தோஷத்தால் திருப்தி கிடைப்பதாகவே தெரியவில்லையே, ஏன்?’
மகிழ்ச்சியான மக்கள் என்ற ஆங்கில புத்தகத்தில் எழுத்தாளர் ஜோனத்தான் ஃப்ரீட்மன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “ஓரளவு பணம் சம்பாதித்தபின், அதற்குமேல் எவ்வளவுதான் பணம் சம்பாதித்தாலும் சந்தோஷம் கிடைப்பதில்லை. வறுமை கோட்டிற்கு மேலே சென்றுவிட்டால் வருவாய்க்கும் சந்தோஷத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு மிகவும் குறைந்துவிடுகிறது.” ஆன்மீக சொத்துக்களும், வாழ்க்கையில் அர்த்தமுள்ள நாட்டங்களும், தார்மீக நெறிமுறைகளுமே ஒருவரது தனிப்பட்ட மகிழ்ச்சிக்கு வழிவகுக்கின்றன என்பதை பலரும் உணர்ந்திருக்கிறார்கள். மற்றவர்களோடு நல்ல உறவை வைத்திருப்பதும், சந்தோஷத்தைப் பறிக்கும் சண்டை சச்சரவைத் தவிர்ப்பதும்கூட முக்கியம்.
பிரச்சினை உண்மையில் மனதில் இருக்க, செல்வ செழிப்பினால் அதை ஈடுகட்ட முயற்சி எடுக்கப்படுகிறது; இதுவே, தற்போதைய சமுதாயத்தின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணம் என்பதை பலரும் உணருகிறார்கள். அவநம்பிக்கையும் அதிருப்தியும் பொதுவாக நிலவுவதாக சில சமூகவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். பணக்கார சமுதாயங்களில் உள்ள அநேகமநேக மக்கள், சிகிச்சையாளர்களிடம் (therapists) செல்கிறார்கள்; அல்லது வாழ்க்கையின் அர்த்தத்தையும் மன சமாதானத்தையும் தேடி குருக்களிடமும், மதக் குழுவினரிடமும், நிவாரணமளிப்பதாக சொல்லிக்கொள்ளும் தொகுதியினரிடமும் செல்கிறார்கள் என்றும் அந்த ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பொருளுடைமைகள் வாழ்க்கைக்கு உண்மையான அர்த்தத்தைக் கொடுக்காது என்பதற்கு இது அத்தாட்சி அளிக்கிறது.
பணம்—சாதிப்பவை, சாதிக்க முடியாதவை
பணம் பத்தும் செய்யும் என்பது உண்மையே. பணத்தைக் கொண்டு பங்களா வாங்கலாம், அழகிய துணிமணிகள் வாங்கலாம், கண்ணைக் கவரும் பொருட்கள் வாங்கலாம். பணத்தைக் கொடுத்து முகஸ்துதியை வாங்கலாம், பாராட்டு மழையில் நனையலாம், துதிபாடிகள் புடைசூழ வாழலாம், கைக்கொடுக்கும் தற்காலிக நண்பர்கள் சிலரையும்கூட சம்பாதிக்கலாம். ஆனால் இவையாவும் பணம் இருக்கும் வரையில்தான். நமக்கு மிகவும் தேவையானவற்றை பணத்தால் சம்பாதிக்க முடியாது. ஆருயிர் நண்பரின் அன்பு, மனநிம்மதி, மரணப்படுக்கையில் இருக்கும்போது இதயத்திற்கு இதமான ஆறுதல் வார்த்தைகள் என எதையும் விலைகொடுத்து வாங்க முடியாது. படைப்பாளரோடு நெருங்கிய உறவு வைத்திருப்பதை உயர்வாக மதிப்போரைப் பொறுத்தவரை, பணத்தால் கடவுளுடைய அங்கீகாரத்தையும் வாங்க முடியாது.
பணத்தால் எதையெல்லாம் வாங்க முடியுமோ அதையெல்லாம் வாங்கி அனுபவித்த அரசனாகிய சாலொமோன், பொருட் செல்வங்கள் நிலையான மகிழ்ச்சியைத் தராது என்பதை உணர்ந்தார். (பிரசங்கி 5:12-15) வங்கி நொடித்துப்போவதால் அல்லது பணவீக்கத்தால் எப்போது வேண்டுமானாலும் பணம் பறிபோகலாம். பெரும் புயலினால் நிலபுலன்களும், தோட்டம் துரவுகளும் சொத்து சுகங்களும் அழிக்கப்படலாம். இன்சூரன்ஸ் பாலிசிகள் பொருளாதார இழப்பை ஓரளவு ஈடுகட்டினாலும் உணர்ச்சி ரீதியிலான இழப்பை ஈடுகட்டுவதில்லை. பொருளாதார சரிவின் காரணமாக ஒரே நாளில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களின் மதிப்பு குறைந்து விடலாம். இன்று கைநிறைய சம்பாத்தியம் தரும் வேலையும்கூட நாளை இல்லாமல் போய்விடலாம்.
அப்படியானால், பணத்தைக் குறித்ததில் சமநிலையான கருத்தைக் கொண்டிருப்பது எப்படி? நம் வாழ்வில் பணமும் பொருளும் என்ன பங்கை வகிக்க வேண்டும்? உண்மையிலேயே அதிக மதிப்புள்ளதை—“மெய் வாழ்வை”—அடைவது எப்படி என்பதைக் காண தயவுசெய்து தொடர்ந்து படியுங்கள்.
[பக்கம் 4-ன் படங்கள்]
பொருளுடைமைகள் நிலையான மகிழ்ச்சியைத் தராது