ராஜ்ய நம்பிக்கையில் களிகூருங்கள்!
அது சந்தோஷம் பொங்கி வழிந்த சமயம். தேதி மார்ச் 10, 2001. எண்ணிக்கையில் அதிகமாக உள்ள பெத்தேல் குடும்பத்தினர் உபயோகிக்கும் நியூ யார்க் மாநகரத்திலுள்ள மூன்று கட்டடங்களில் 5,784 பேர் கூடிவந்திருந்தனர். அது, 110-வது வகுப்பு கிலியட் மிஷனரி மாணவர்களின் பட்டமளிப்பு நிகழ்ச்சி ஆகும்.
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான கேரி பார்பர் அனைவரையும் வரவேற்று நிகழ்ச்சிநிரலை ஆரம்பித்து வைத்தார். “110 வகுப்புகளைச் சேர்ந்த கிலியட் மாணவர்கள் மிஷனரிகளாக பயிற்சியளிக்கப்பட்டு பூமியெங்கும் உள்ள பிராந்தியங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதை அறிவது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என அவருடைய அறிமுகத்தில் கூறினார்.
தொடர்ந்து சந்தோஷத்தை காத்துக்கொள்ளுதல்
சகோதரர் பார்பரின் அறிமுக பேச்சிற்குப் பிறகு, “யெகோவாவின் ஆசீர்வாதம் நம்மை ஐசுவரியவான்கள் ஆக்கும்” என்ற தலைப்பில் டான் ஆடம்ஸ் பேசினார். பட்டம் பெறவிருந்த 48 மாணவர்களும் அந்த அவையோரில் இருந்தனர். அவருடைய பேச்சு நீதிமொழிகள் 10:22-ன் அடிப்படையில் இருந்தது. ராஜ்யம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுக்கும்போது யெகோவா தம்முடைய ஊழியர்களை ஆதரித்து ஆசீர்வதிக்கிறார் என்பதை அவையோருக்கு நினைப்பூட்டினார். ‘மக்கெதோனியாவுக்கு வந்து உதவும்படி’ அழைக்கப்பட்டபோது அப்போஸ்தலன் பவுல் காண்பித்த அதே மனப்பூர்வமான மனநிலையோடு தங்களுடைய புதிய நியமிப்பை ஏற்றுக்கொள்ளும்படி மாணவர்களை உற்சாகப்படுத்தினார். (அப்போஸ்தலர் 16:9) அநேக இடையூறுகள் இருந்தபோதிலும், பிரசங்கிக்கும்படி அனுப்பப்பட்ட இடத்திற்கு பவுல் தயங்காமல் சென்றதால் சந்தோஷமான பல நன்மைகள் கிடைத்தன.
பட்டம் பெறப் போகிறவர்கள், மிஷனரி ஊழியத்திற்கு தயாராகும் வண்ணம் ஐந்து மாத பைபிள் படிப்பையும் பயிற்சியையும் முடித்திருந்தனர். என்றாலும், அவர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினர் டானியல் சிட்லிக் உற்சாகப்படுத்தினார். “உண்மையான சீஷராய் இருங்கள்” என்ற தலைப்பில் பேசிய அவர், “சீஷனாக இருப்பது இயேசுவின் வார்த்தைகளுக்கு தொடர்ந்து கீழ்ப்படிவதை அர்த்தப்படுத்துகிறது. அவருடைய வார்த்தைகளுக்கும், செய்திக்கும், போதகத்திற்கும் செவிகொடுக்க எப்போதும் தயாராக இருப்பதை அது உட்படுத்துகிறது” என்று கூறினார். தங்கள் எஜமானுடைய வார்த்தையை கேட்காமல் கிறிஸ்துவின் சீஷர்கள் எந்த தீர்மானங்களையும் செய்ய மாட்டார்கள், ஏனெனில் கிறிஸ்துவின் வாழ்க்கையில்தான் தேவ ஞானம் அடங்கியிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டினார். (கொலோசெயர் 2:3) இயேசுவின் வார்த்தைகளை ஒருமுறை கேட்டுவிட்டு அவரை நன்கு தெரியும் என நம்மில் எவருமே சொல்ல முடியாது. எனவே பட்டம் பெறுகிறவர்கள், விடுதலைக்கு வழிநடத்தும் கிறிஸ்தவ சத்தியத்தை தொடர்ந்து கற்கவும், கடைப்பிடிக்கவும், போதிக்கவும் வேண்டும் என சகோதரர் சிட்லிக் கூறினார்.—யோவான் 8:31, 32.
கடவுளுடைய சேவையில் தொடர்ந்து சந்தோஷம் காண ஒருவர் சிட்சையையும் திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராயிருக்க வேண்டும். “உங்கள் உள்ளிந்திரியங்கள் உங்களை திருத்துமா?” என்ற கேள்வியை கிலியட் போதகரான லாரன்ஸ் போவன் எழுப்பினார். அடையாள அர்த்தமுள்ள உள்ளிந்திரியங்கள் ஒருவரின் ஆழ்ந்த யோசனைகளையும் உணர்ச்சிகளையும் குறிக்க பைபிளில் உபயோகிக்கப்பட்டிருப்பதை அவர் குறிப்பிட்டார். கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஏவப்பட்ட ஆலோசனை ஒருவருடைய ஆள்தன்மையின் ஆழம் வரை ஊடுருவியிருந்தால் அவை அவரை திருத்தலாம். (சங்கீதம் 16:7; எரேமியா 17:10) அவர் உண்மையோடு வாழ்வது யெகோவா மீதும் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். நீதிமொழிகள் 23:15, 16-ஐ வாசித்த பிறகு பேச்சாளர் இவ்வாறு கேட்டார்: “உங்கள் உள்ளிந்திரியங்கள் உங்களை திருத்துமா?” அவர் தொடர்ந்து கூறியதாவது: “அவை உங்களை திருத்துவதாக. அப்போது யெகோவாவின் இருதயம் பேரானந்தம் அடைய நீங்கள் காரணமாக இருப்பீர்கள். அவருடைய உள்ளான உணர்ச்சிகளை நீங்கள் தூண்டிவிடுவீர்கள். உங்களுடைய நியமிப்புகளில் உண்மையோடு நிலைத்திருக்கையில் கடவுளுடைய உள்ளிந்திரியங்களை மகிழ செய்வீர்கள்.”
கிலியட் போதகராவதற்கு முன்பு கென்யாவில் மிஷனரியாக சேவித்து வந்த மார்க் நியூமர், நிகழ்ச்சியின் இந்தப் பகுதியின் கடைசி பேச்சை கொடுத்தார். “கண்களால் காண்பதே நலம்” என்ற தலைப்பில் அவர் கொடுத்த பேச்சு திருப்தியை வளர்த்துக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தியது. பிரசங்கி 6:9-க்கு இசைவாக சகோதரர் நியூமர் பின்வருமாறு கூறினார்: “நிஜத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதுவே ‘கண்களால் காண்பதாகும்.’ நீங்கள் செய்ய விரும்பும் ஆனால் செய்யாமல் இருப்பதைப் பற்றி கனவு காண்பதை விட்டுவிட்டு உங்களுடைய தற்போதைய சூழ்நிலையை அனுகூலப்படுத்திக் கொள்வதில் கவனம் செலுத்துங்கள். கனவுலகில் வாழ்ந்தால், நியாயமற்ற எதிர்பார்ப்புகள் வைத்திருந்தால் அல்லது உங்கள் நியமிப்பின் சாதகமற்ற விஷயங்களையே யோசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் சந்தோஷமில்லாதவர்களாகவும் திருப்தியற்றவர்களாகவும் ஆகிவிடுவீர்கள்.” ஆம், எந்த சூழ்நிலையில் நாம் எங்கே இருந்தாலும் சரி, நம் சூழ்நிலைக்கு ஏற்ப தெய்வீக திருப்தியை வளர்த்துக் கொண்டால் சந்தோஷமான மனநிலையோடு நமது மகத்தான சிருஷ்டிகரை சேவிக்க முடியும்.
ராஜ்ய சேவையிலும் கிலியடிலும் சந்தோஷமான அனுபவங்கள்
பேச்சுகளிலிருந்து நடைமுறையான ஆலோசனைகளைப் பெற்ற பிறகு மாணவர்கள் ஐந்து மாத காலத்தில் வெளி ஊழியத்தில் எதிர்ப்பட்ட சில அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். கிலியட் பள்ளி பதிவாளரான வாலஸ் லிவ்ரன்ஸின் தலைமையில், கடவுளுடைய ஊழியர்களாக தங்களை விளங்க பண்ணின விதத்தை பட்டம் பெறவிருந்த மாணவர்கள் கூறினர். (2 கொரிந்தியர் 4:2) கடவுள் கொடுத்த மனசாட்சியை உபயோகிக்க சிலருக்காவது அவர்களால் உதவ முடிந்தது. தெருவில், வீட்டுக்கு வீடு ஊழியத்தில், மற்ற சந்தர்ப்பங்களில் சந்தித்த நல்மனம் உள்ளவர்களோடு பைபிள் படிப்புகள் ஆரம்பிக்கப்பட்டதை மாணவர்களின் அனுபவங்கள் சுட்டிக் காட்டின. யெகோவாவின் அமைப்பு வெளியிடும் பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களில் சத்தியம் இருப்பதாக அக்கறை காண்பித்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கூறினர். குறிப்பிட்ட பைபிள் வசனத்தை கேட்ட வீட்டுக்காரர் ஒருவர் செய்திக்கு ஆர்வத்தோடு செவிசாய்த்தார். இப்போது அவர் யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளை படித்து வருகிறார்.
அடுத்ததாக, ஜோயெல் ஆடம்ஸ் முன்னாளைய கிலியட் பட்டதாரிகளை பேட்டி கண்டார். “கற்பதை நிறுத்தாதீர்கள், யெகோவாவை சேவிப்பதை விட்டுவிடாதீர்கள்” என்பதே அவருடைய பேச்சின் தலைப்பு. பேட்டி கொடுத்தவர்கள் புதிய மிஷனரிகளுக்கு காலத்திற்கேற்ற ஆலோசனைகளை வழங்கினர். கிலியட் பள்ளியின் 26-வது வகுப்பைச் சேர்ந்த ஹாரி ஜான்சன், கிலியடிலிருந்த சமயத்தை நினைவுகூருபவராக இவ்வாறு கூறினார்: “யெகோவா தம்முடைய ஜனங்களை எப்போதுமே வழிநடத்தியிருக்கிறார், இனியும் வழிநடத்துவார் என்று எங்களுக்கு கற்பிக்கப்பட்டது. அதில் நம்பிக்கை வைத்ததே இத்தனை வருடங்களாக எங்களுக்கு உற்சாகமளித்து வந்திருக்கிறது.” 53-வது கிலியட் வகுப்பைச் சேர்ந்த வில்லியம் நான்கீஸ் பட்டதாரிகளுக்கு பின்வரும் ஆலோசனை அளித்தார்: “எல்லாவற்றிற்கும் மேலாக பைபிள் நியமங்களை மனதில் வைத்திருங்கள்; உங்கள் வாழ்க்கையில் இப்போதும் எப்போதும் செய்யும் எல்லா தீர்மானங்களிலும் அவற்றை கடைப்பிடியுங்கள். அப்போது உங்கள் நியமிப்பை விடாமல் பற்றியிருக்க முடியும். யெகோவாவின் அபரிமிதமான ஆசீர்வாதங்களும் உங்களுக்கு கிடைக்கும்.”
“யெகோவாவின் சித்தத்தை செய்ய பலப்படுதல்” என்பதே ரிச்சர்ட் ரையன் கையாண்ட பகுதியின் தலைப்பு. அவர் பேட்டி கண்டவர்களுள், 30-வது வகுப்பில் பட்டம் பெற்று 41 வருடங்களுக்கும் அதிகமாக ஸ்பெய்னில் மிஷனரியாக இருந்த ஜான் குர்ட்ஸும் ஒருவர். கிலியட் பாட திட்டத்தைப் பற்றி கேட்டபோது சகோதரர் குர்ட்ஸ் இவ்வாறு கூறினார்: “பைபிளே முக்கிய பாட புத்தகம். அதை புரிந்துகொள்வதற்கு பைபிள் உதவி புத்தகங்களும் உள்ளன. இவை அனைவருக்குமே கிடைக்கின்றன. இரகசியமான எந்த தகவலும் கிலியடில் கற்றுக் கொடுக்கப்படுவது கிடையாது. இதை நான் எப்போதுமே வலியுறுத்துவேன். ஏனெனில், கிலியடில் கற்றுக் கொடுக்கப்படும் தகவல் எல்லாருக்கும் கைமேல் கிடைக்கிறதே.”
யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழு அங்கத்தினரான சகோதரர் ஜெரிட் லாஷ், “யெகோவாவின் செட்டைகளிலும் அதன் கீழும்” என்ற தலைப்பில் பேசி அந்த ஆவிக்குரிய நிகழ்ச்சியை நிறைவு செய்தார். கடவுள் தமது உண்மையுள்ள ஊழியர்களை பாதுகாத்து ஆதரிப்பதை பைபிள் எவ்வாறு கழுகின் செட்டைகளுக்கு ஒப்பிட்டு பேசுகிறது என்பதை அவர் விவரித்தார். (உபாகமம் 32:11, 12; சங்கீதம் 91:4) சில சமயம், குஞ்சுகளை பாதுகாப்பதற்காக பெரிய கழுகு பல மணிநேரம் சிறகுகளை விரித்து வைத்திருக்கும். குளிர் காற்றிலிருந்து குஞ்சுகளை பாதுகாக்க தாய் கழுகு சில சமயங்களில் தன் சிறகுகளால் அவற்றை அணைத்துக் கொள்ளும். அதைப் போலவே யெகோவாவும் தம்முடைய நோக்கத்திற்கு இசைவாக தமது உண்மையுள்ள ஊழியர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறார், முக்கியமாக ஆவிக்குரிய சோதனைகளை எதிர்ப்படுகையில் அவர்களை பாதுகாக்கிறார். யெகோவா, தமது ஊழியர்கள் தாங்க முடிந்த அளவிற்கும் அதிகமாக சோதிக்கப்பட ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்; மாறாக அதை சகிப்பதற்கு தேவையான வழிவகைகளையும் செய்வார். (1 கொரிந்தியர் 10:13) சகோதரர் லாஷ் இவ்வாறு கூறி முடித்தார்: “தொடர்ந்து ஆவிக்குரிய பாதுகாப்பை பெற நாம் எப்போதும் யெகோவாவின் செட்டைகளின் கீழ் இருக்க வேண்டும். அதாவது, சுதந்திர மனப்பான்மையை தவிர்க்க வேண்டும். நாம் எப்போதும் யெகோவாவுக்கும் தாய்போன்ற அவருடைய அமைப்பிற்கும் அருகிலேயே இருப்போமாக. அவர்கள் கொடுக்கும் வழிநடத்துதலிலிருந்தும் அன்பான ஆலோசனைகளிலிருந்தும் விலகிச் செல்லாதிருப்போமாக.”
பிறகு, உலகம் முழுவதிலுமிருந்து வந்த டெலிகிராம்களையும் வாழ்த்து மடல்களையும் சேர்மென் வாசித்தார். அதற்கு பிறகு பட்டமளிப்பு இடம்பெற்றது. ஐந்து வருட காலப்பகுதியில் சில வகுப்புகளையே நடத்தும் திட்டத்தோடுதான் கிலியட் பள்ளி ஸ்தாபிக்கப்பட்டது. ஆனால் அந்த பள்ளி 58 வருடங்கள் தொடரும்படி யெகோவா ஆசீர்வதித்திருக்கிறார். சகோதரர் பார்பர் தனது அறிமுகத்தில் கூறியது போலவே: “1943-ல் கிலியட் துவங்கப்பட்ட சமயத்திலிருந்தே கிலியட் பட்டதாரிகள் என்னே அருமையான பதிவை ஏற்படுத்தி இருக்கின்றனர்! அவர்கள் அனைவரின் முயற்சிகள் காரணமாக பூமியிலுள்ள லட்சக்கணக்கானோரை யெகோவாவின் மகத்துவமுள்ள அமைப்பிற்குள் சேர்க்க முடிந்திருக்கிறது.” ஆம், இந்த மிஷனரி பள்ளியின் விளைவாக லட்சக்கணக்கானோர் ராஜ்ய நம்பிக்கையில் களிகூர்ந்திருக்கின்றனர்.
[பக்கம் 24-ன் பெட்டி]
வகுப்பின் புள்ளிவிவரங்கள்
பிரதிநிதித்துவம் செய்யப்பட்ட நாடுகள்: 8
அனுப்பப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை: 18
மாணவர்களின் எண்ணிக்கை: 48
சராசரி வயது: 34
சத்தியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 18
முழுநேர ஊழியத்தில் இருக்கும் சராசரி ஆண்டுகள்: 13
[பக்கம் 25-ன் படம்]
உவாட்ச்டவர் கிலியட் பைபிள் பள்ளியில் பட்டம் பெறும் 110-வது வகுப்பு
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலில், வரிசை எண்கள் முன்னிருந்து பின்னோக்கியும், பெயர்கள் ஒவ்வொரு வரிசையிலும் இடமிருந்து வலமும் கொடுக்கப்பட்டுள்ளன.
(1) வெசிக், ஈ.; மாட்லன், எல்.; ஈவான்ஸ், ஜீ.; வாடானாபீ, கே. (2) ட்ராஃபர்ட், பீ.; டர்ஃபா, ஜே.; வில்சன், பீ.; வில்லியம்ஸ், ஆர்.; வேபர், ஏ. (3) ஜான்சன், டீ.; ஹானாவ், கே.; மார்லூ, எஃப்.; ஷார்பன்டியே, எஃப்.; பெக்கம், ஆர்.; ஆன்டர்ஸாஃப், பீ. (4) சீகர்ஸ், டீ.; சீகர்ஸ், டீ.; பெய்லீ, பீ.; பெய்லீ, எம்.; மாட்லன், கே.; லிப்போல்டு, ஈ.; லிப்போல்டு, டீ. (5) ஈவான்ஸ், என்.; கோல்ட், ஆர்.; போல்மன், ஐ.; வெசிக், ஆர்.; யுன்ஜீன், ஜே.; வில்சன், என். (6) டர்ஃபா, ஜே.; ஸுடீமா, எல்.; ஸுடீமா, ஆர்.; பேங்ட்சன், சீ.; பேங்ட்சன், ஜே.; கலானோ, எம்.; கலானோ, எல். (7) பெக்கம், டீ.; மார்லூ, ஜே.; ஷார்பன்டியே, சீ.; கோல்ட், எம்.; போல்மன், ஆர்.; யுன்ஜீன், எஃப். (8) வேபர், ஆர்.; ஜான்சன், பீ.; ஹானாவ் டீ.; வாடானாபீ, ஒய்.; வில்லியம்ஸ், ஆர்.; ட்ராஃபர்ட், ஜீ.; ஆன்டர்ஸாஃப், டீ.