ஆரஜன்—அவரது போதனை சர்ச்சை எப்படி பாதித்தது?
“அப்போஸ்தலருக்குப்பின் சர்ச்சின் பெரும் மதிப்புமிக்க தலைவர்” என மூன்றாம் நூற்றாண்டு இறையியலாளர் ஆரஜனை, லத்தீன் வல்கேட் பைபிளின் மொழிபெயர்ப்பாளராகிய ஜெரோம் புகழ்ந்தார். ஆனாலும் எல்லாரும் ஆரஜனை அவ்வளவு உயர்ந்த மதிப்புடன் கருதவில்லை. சர்ச்சுக்கு முரணான பல கருத்துகள் உருவாவதற்கு அவரே காரணமானவர் என சிலர் கருதினர். “பெரும்பாலும் அவருடைய கோட்பாடுகள் அர்த்தமற்றவை, கேடு விளைவிப்பவை, விஷப்பாம்பின் நச்சு போன்றவை; அவற்றை அவர் உலகில் உமிழ்ந்தார்.” ஆரஜனைக் குறைகூறியவர்கள் இவ்வாறு சொன்னதாக 17-ம் நூற்றாண்டின் எழுத்தாளர் ஒருவர் எழுதினார். சொல்லப்போனால், அவருடைய இறப்புக்கு சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்குப்பின் அவர் சர்ச்சுக்கு முரணான கோட்பாடுடையவர் என பகிரங்கமாக அறிவிக்கப்பட்டது.
ஆ ரஜன் ஏன் மற்றவர்களுடைய பாராட்டையும் வெறுப்பையும் ஒருங்கே சம்பாதித்தார்? சர்ச் கோட்பாட்டின் வளர்ச்சியில் அவருடைய பங்கு என்ன?
சர்ச்சுக்காக வைராக்கியம்
ஆரஜன் சுமார் பொ.ச. 185-ல் எகிப்திய நகரமாகிய அலெக்ஸாந்திரியாவில் பிறந்தார். கிரேக்க இலக்கியத்தை நன்கு கற்றார். வேதாகமத்தைப் படிப்பதற்கும் அவ்வாறே முயற்சி செய்யும்படி அவருடைய தந்தை லியோநீடிஸ் வற்புறுத்தினார். ஆரஜனுக்கு 17 வயதானபோது, மதம் மாறுவது சட்டப்படி குற்றம் என ரோம பேரரசர் ஆணை பிறப்பித்தார். ஆரஜனின் தந்தை கிறிஸ்தவராகியிருந்ததற்காக சிறையில் தள்ளப்பட்டார். இளமைக்குரிய வைராக்கியம் நிறைந்தவராய் ஆரஜன், சிறைவாசத்திலும் உயிர்த்தியாகத்திலும் அவருடன் சேர்ந்துகொள்ள தீர்மானமாய் இருந்தார். இதைப் பார்த்த ஆரஜனின் அம்மா, அவர் வீட்டை விட்டு போய்விடக் கூடாது என்பதற்காக அவருடைய துணிமணிகளை ஒளித்து வைத்தார். “எங்களுக்காக எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் மனதை மாற்றிக்கொள்ளாதீர்கள்” என்பதாக கடிதம் வாயிலாக ஆரஜன் தன் அப்பாவிடம் கெஞ்சினார். லியோநீடிஸ் உறுதியாக இருந்தார்; அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டார்; ஆதரவின்றி தவிக்கும்படி தன் குடும்பத்தை விட்டுச்சென்றார். ஆரஜனோ இதற்குள் தன் படிப்பில் மிகவும் முன்னேறியிருந்தார். கிரேக்க இலக்கியத்தை கற்பிப்பதன் மூலம் கிடைக்கும் வருவாயில் தன் அம்மாவையும் ஆறு தம்பிகளையும் வைத்து காப்பாற்றும் அளவுக்கு தேறியிருந்தார்.
கிறிஸ்தவம் பரவுவதை நிறுத்துவதே பேரரசனின் எண்ணம். மாணவர்களை மட்டுமல்லாமல் ஆசிரியர்களையும் அவருடைய ஆணை பாதித்ததால் கிறிஸ்தவ மத போதனையாளர்கள் அனைவரும் அலெக்ஸாந்திரியாவைவிட்டு ஓடிப்போனார்கள். வேதப்பூர்வ போதனையை பெற கிறிஸ்தவர் அல்லாதவர்கள் இளம் ஆரஜனை உதவிக்காக கேட்டுக்கொண்டபோது, கடவுளிடமிருந்து பெற்ற ஒரு பொறுப்பாக பாவித்து இந்த வேலையை மிக சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். அவருடைய மாணவர்களில் பலர் உயிர்த்தியாகிகளாய் இறந்தனர்; சிலர் படிப்பை முடிக்கும் முன்பே அவ்வாறு இறந்தனர். தன் மாணவர்கள் நீதிபதிக்கு முன்னிலையிலோ, சிறையிலோ, மரணதண்டனை நிறைவேற்றப்படும் தறுவாயிலோ எங்கிருந்தாலும் ஆரஜன், தன்னையே பணயம் வைத்து வெளிப்படையாக அவர்களை தைரியப்படுத்தினார். அவர்கள் மரண மேடைக்குக் கொண்டுபோகப்படும்போது ஆரஜன் “மிகுந்த தைரியத்துடன், அவர்களை முத்தமிட்டு வழியனுப்பினார்” என்று நான்காம் நூற்றாண்டின் சரித்திராசிரியர் யூஸிபியஸ் தெரிவிக்கிறார்.
கிறிஸ்தவர் அல்லாதவர்கள் அநேகரின் கோபத்துக்கு ஆளானார் ஆரஜன். ஏனென்றால், தங்களுடைய நண்பர்கள் மதம் மாறுவதற்கும் மரணமடைவதற்கும் அவரே பொறுப்பாளி என அவர்கள் கருதினர். கலகக் கும்பல்களின் தாக்குதலிலிருந்தும் கொடூரமான மரணத்திலிருந்தும் அடிக்கடி மயிரிழையில் தப்பினார். தன்னை துரத்தியவர்களிடமிருந்து தப்ப இடம் விட்டு இடம் ஓடவேண்டியிருந்தாலும் ஆரஜன் போதிப்பதில் தளரவில்லை. அப்பேர்ப்பட்ட அஞ்சா நெஞ்சமும் ஈடுபாடும் அலெக்ஸாந்திரியாவின் பிஷப்பாகிய திமீட்ரியாஸை கவர்ந்தது. ஆகவே திமீட்ரியாஸ், பதினெட்டே வயதான ஆரஜனை அலெக்ஸாந்திரியாவிலுள்ள மத கல்விச்சாலையின் தலைவராக நியமித்தார்.
காலப்போக்கில், ஆரஜன் பெயர்பெற்ற அறிஞரானார். புத்தகங்களை எழுதிக் குவித்தார். மிகைப்படுத்திச் சொல்வது போல் தோன்றினாலும் அவர் 6,000 புத்தகங்களை எழுதியதாக சிலர் சொன்னார்கள். எபிரெய வேதாகமத்தின் 50-தொகுதி பதிப்பாகிய பிரமாண்டமான ஹெக்ஸாப்லா-வை உருவாக்கியதற்கு மிகவும் பிரபலமானவர் அவர். இணை வரிசையில் ஆறு பத்திகளாக ஆரஜன் ஹெக்ஸாப்லா-வை அமைத்தார். அவை: (1) எபிரெய மற்றும் அரமேய பதிவு, (2) அதே பதிவின் கிரேக்க எழுத்துப் பெயர்ப்பு, (3) ஆக்கில்லாவின் கிரேக்க மொழிபெயர்ப்பு, (4) ஸிம்மக்கஸின் கிரேக்க மொழிபெயர்ப்பு, (5) எபிரெய பதிவை நெருங்க ஒத்திருக்கும்படியாக ஆரஜன் திருத்தியமைத்த கிரேக்க செப்டவஜின்ட், (6) தியடோடியனின் கிரேக்க மொழிபெயர்ப்பு. “வெவ்வேறு பதிவுகளை ஒன்றுசேர்த்து அமைத்திருப்பதன் மூலம், செப்டவஜின்ட்டை மட்டுமே வைத்திருக்கும் ஒரு கிரேக்க வாசகரை குழப்பும் அல்லது தவறாக புரிந்துகொள்ள வைக்கும் பல பகுதிகளுக்கு தெளிவான அர்த்தம் கிடைக்கும் என ஆரஜன் எதிர்பார்த்தார்” என்பதாக பைபிள் அறிஞர் ஜான் ஹாட் எழுதினார்.
‘எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணுதல்’
இருந்தாலும், மூன்றாம் நூற்றாண்டிலிருந்த குழப்பமான மத நிலவரம், வேதாகமத்தைப் போதிப்பதில் ஆரஜனின் அணுகுமுறையை வெகுவாக பாதித்தது. கிறிஸ்தவமண்டலம் அதன் வளர்ச்சியின் பிஞ்சு பருவத்தில் இருந்தபோதிலும் வேதப்பூர்வமற்ற நம்பிக்கைகளால் ஏற்கெனவே கறைபட்டிருந்தது; சிதறிப்போயிருந்த அதன் சர்ச்சுகள் பல்வகையான கோட்பாடுகளை கற்பித்துக் கொண்டிருந்தன.
இவற்றில் சில வேதப்பூர்வமற்ற கோட்பாடுகளை அப்போஸ்தலரின் போதனை என்று சொல்லி ஆரஜன் ஏற்றுக்கொண்டார். ஆனால் எழுப்பப்பட்ட மற்ற கேள்விகளின்பேரில் இவரே தாராளமாக ஊகித்தார். அவருடைய மாணவர்கள் பலர் அந்நாளைய தத்துவ கருத்துக்களுடன் போராடிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவுவதற்காக, அப்போது இளைஞரின் மனதை உருவமைத்துக் கொண்டிருந்த பல்வேறு தத்துவ கோட்பாடுகளையும் ஆரஜன் கவனமாக ஆராய்ந்தார். தன் மாணவர்களின் தத்துவ சம்பந்தமான கேள்விகளுக்கு திருப்தியளிக்கும் பதில்களை அளிக்க முனைந்தார்.
தத்துவ கோட்பாட்டை பைபிளுடன் ஒத்திசைய வைக்கும் முயற்சியில், வேதவசனங்களுக்கு விளக்கம் அளிக்க அவற்றில் புதைந்துள்ள உட்பொருளை காணும் முறையை பெரிதும் சார்ந்திருந்தார். வேதவசனங்களுக்கு எப்போதுமே ஓர் ஆவிக்குரிய அர்த்தம் உண்டு, ஆனால் சொல்லர்த்தம் இருக்கவேண்டிய அவசியமில்லை என்று அவராக நினைத்துக்கொண்டார். அவர் “பைபிளின் கருத்தை குறிப்பிடத்தக்க முறையில் ஆர்வமாகவும் உண்மையாகவும் எடுத்துரைப்பதாக (மனமார நினைத்துக்கொண்டும்) உரிமைபாராட்டிக்கொண்டும் இருந்தார். ஆனால் தன் சொந்த இறையியல் கோட்பாடுகளுக்கு ஒத்துவரும், பைபிளில் இல்லாத கருத்துக்கள், பைபிளிலேயே புதைந்திருப்பதாக அர்த்தம்கொள்ள” அவருடைய ஊகிப்பு அனுமதித்ததாக ஓர் அறிஞர் குறிப்பிட்டார்.
ஒருமுறை ஆரஜன் தன் மாணவனுக்கு எழுதிய கடிதத்திலிருந்து அவருடைய எண்ணத்தை தெரிந்துகொள்ள முடிகிறது. இஸ்ரவேலர் எகிப்தியரின் தங்கத்தைக் கொண்டு யெகோவாவின் ஆலயத்தில் பயன்படுத்த பாத்திரங்களைச் செய்தனர் என்று ஆரஜன் குறிப்பிட்டார். கிறிஸ்தவத்தைப் போதிக்க அவர் கிரேக்க தத்துவத்தைப் பயன்படுத்துவதற்கு இந்த உதாரணத்தை ஆதாரமாகக் கண்டார். “எகிப்திலிருந்து கொண்டுவரப்பட்ட பொருட்கள் இஸ்ரவேல் சந்ததியாருக்கு எவ்வளவு பயன்பட்டன; எகிப்தியர் அவற்றை சரியாக பயன்படுத்தவில்லை; ஆனால் எபிரெய மக்களோ கடவுளின் ஞானத்தால் வழிநடத்தப்பட்டு, கடவுளுடைய சேவையில் அவற்றைப் பயன்படுத்தினார்கள்” என்று அவர் எழுதினார். “கிறிஸ்தவத்தை புரிந்துகொள்வதற்கு முன்தயாரிப்பாகவோ பாடமாகவோ அமையக்கூடிய எதையும் கிரேக்க தத்துவத்திலிருந்து எடுத்துக்கொள்ள” ஆரஜன் தன் மாணவனுக்கு ஊக்கமளித்தார்.
பைபிளுக்கு விளக்கமளிக்கும் விஷயத்தில் எந்த வரையறையும் இல்லாத இந்த அணுகுமுறை கிறிஸ்தவ கோட்பாட்டுக்கும் கிரேக்க தத்துவத்துக்கும் இடையில் வித்தியாசமே இல்லாததுபோல் ஆக்கிவிட்டது. உதாரணமாக, முதல் கோட்பாடுகளைப் பற்றி என்ற ஆங்கில புத்தகத்தில் ஆரஜன் இயேசுவை ‘ஒரேபேறான குமாரன், எந்த தொடக்கமும் இல்லாமல் பிறந்தார்’ என்று விவரித்தார். அவர் மேலுமாக சொன்னார்: ‘அவருடைய பிறப்பிப்பு என்றென்றைக்கும் உரியது, நித்தியத்திற்கும் உரியது. உயிர் சுவாசத்தைப் பெற்றதால், அதாவது ஏதாவது ஒரு புறதூண்டுதலின் செயலால் அவர் மகனாகவில்லை; ஆனால் கடவுளின் முழு இயல்புடன் அமைந்தவர் அவர்.’
இந்தக் கருத்தை ஆரஜன் பைபிளிலிருந்து பெறவில்லை. ஏனென்றால், யெகோவாவின் ஒரேபேறான குமாரன் ‘சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்’ என்றும் ‘தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமானவர்’ என்றும் வேதவார்த்தைகள் போதிக்கின்றன. (கொலோசெயர் 1:15; வெளிப்படுத்துதல் 3:14) “ப்ளேட்டோவின் கருத்துக்களைப் பற்றி தத்துவ கல்வி” பயின்றதன் மூலமே “நித்திய பிறப்பிப்பு” என்ற கருத்தை ஆரஜன் கொண்டுவந்தார் என்று மத சரித்திராசிரியர் அகஸ்டஸ் நேயான்டர் தெரிவிக்கிறார். இவ்வாறு, ‘எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்ற’ அடிப்படையான வேத நியமத்தை ஆரஜன் மீறினார்.—1 கொரிந்தியர் 4:6.
முரண் கோட்பாடுடையவரென கண்டனம்
அவர் ஆசிரியராக செயல்பட்ட ஆரம்ப வருடங்களில், அலெக்ஸாந்திரிய குருமார் பேரவை ஆரஜனின் குருவர்க்க பதவியை பறித்தது. ஆரஜனின் பேரும்புகழும் ஓங்கியதைக் குறித்து பிஷப் திமீட்ரியாஸ் பொறாமைப்பட்டதே இதற்கு காரணம். ஆரஜன் பலஸ்தீனாவுக்கு குடிபெயர்ந்தார். கிறிஸ்தவ கொள்கையை காப்பதில் பெயர்பெற்றவரென பாராட்டி அவரை அங்கு தங்குதடையின்றி வரவேற்றனர். எந்த வரையறையுமின்றி அங்கு ஒரு குருவாக தொடர்ந்தார். சொல்லப்போனால், கிழக்கில் “சர்ச்சுக்கு முரணான கோட்பாடுகள்” எழும்பியபோது, பாரம்பரியத்தைவிட்டு விலகிச் செல்லும் பிஷப்புகளை சரிப்படுத்த இவருடைய உதவியை நாடினார்கள். பொ.ச. 254-ல் ஆரஜனின் மரணத்துக்குப் பின், அவருடைய பெயர் மிகவும் இகழ்ந்து பேசப்பட்டது. ஏன்?
பெயர் கிறிஸ்தவம் பிரபல மதமானபின், பாரம்பரிய போதனைகள் என்று சர்ச் ஒத்துக்கொண்டவை மிக துல்லியமாக வரையறுக்கப்பட்டன. எனவே பிற்காலங்களில் வந்த இறையியலாளர்கள் ஆரஜனின் பல ஊகிப்புகளையும் தெளிவற்றவையாய் தோன்றிய தத்துவ கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவருடைய போதனைகள் சர்ச்சுக்குள் கசப்பான சர்ச்சைகளை தூண்டிவிட்டன. இந்த விவாதங்களைத் தீர்த்து ஒற்றுமையைக் காத்துக்கொள்வதற்காக ஆரஜன் சர்ச்சுக்கு முரணான கோட்பாடுடையவர் என தீர்ப்பளிக்கப்பட்டார்.
ஆரஜன் மட்டுமே தவறான கொள்கைகளை உடையவர் அல்ல. உண்மையில், கிறிஸ்துவின் தூய போதனைகளிலிருந்து பொதுவாக விலகிச் செல்லும் ஒரு காலம் வருமென்று பைபிள் முன்னறிவித்தது. முதல் நூற்றாண்டின் கடைசியில், இயேசுவின் அப்போஸ்தலருடைய மரணத்திற்குப்பின் விசுவாச துரோகம் செழித்தோங்கியது. (2 தெசலோனிக்கேயர் 2:6, 7) காலம் செல்லசெல்ல, கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக் கொண்ட சிலர் தங்களைத் தாங்களே “ஆர்த்தடாக்ஸ்” அல்லது பாரம்பரியவாதிகள் என்றும் மற்றவர்கள் அனைவரும் “முரண் கோட்பாடுடையவர்கள்” என்றும் அறிவித்தனர். ஆனால் உண்மையில் கிறிஸ்தவமண்டலம் உண்மை கிறிஸ்தவத்தைவிட்டு விலகி வெகுதூரம் சென்றுவிட்டது.
‘ஞானமென்று பொய்யாய் பேர்பெற்றிருப்பது’
ஆரஜன் பல விஷயங்களை ஊகித்தபோதிலும், அவருடைய ஆய்வில் பயன்தரும் விஷயங்களும் உண்டு. உதாரணமாக, கடவுளுடைய பெயர், டெட்ரகிரமட்டன் எனப்படும் அதன் மூல எபிரெய நான்கெழுத்து வடிவில் ஹெக்ஸாப்லாவில் காணப்பட்டது. ஆரம்ப கிறிஸ்தவர்கள் கடவுளுடைய தனிப்பட்ட பெயர் யெகோவா என்பதை அறிந்திருந்தார்கள், அதைப் பயன்படுத்தினார்கள் என்பதற்கு முக்கிய அத்தாட்சியாக இது இருக்கிறது. என்றபோதிலும், ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்கால சர்ச் முதல்வராகிய தியாஃபலஸ் ஒருமுறை இவ்வாறு எச்சரித்தார்: “ஆரஜனின் படைப்புகள் எல்லா வகை பூக்களையும் உடைய பசும்புல்வெளி. அங்கு ஓர் அழகிய பூவைக் கண்டால், அதைப் பறிக்கிறேன்; ஆனால் முட்கள் நிறைந்ததாகத் தோன்றினால் குத்திவிடாதபடி தவிர்த்துவிடுவேன்.”
பைபிள் போதனைகளை கிரேக்க தத்துவஞானத்துடன் கலப்படம் செய்வதன் மூலம் ஆரஜனின் இறையியலில் தவறுகள் இறைந்து கிடந்தன. இதனால் கிறிஸ்தவமண்டலத்துக்கு விபரீதமான விளைவுகளே ஏற்பட்டன. உதாரணமாக, ஆரஜனின் ஆதாரமற்ற ஊகிப்புகள் பின்னர் மறுக்கப்பட்டபோதிலும், கிறிஸ்துவின் “நித்திய பிறப்பிப்பு” பற்றிய அவரது கருத்துக்கள் பைபிள் ஆதாரமற்ற திரித்துவ கோட்பாட்டுக்கு அஸ்திவாரமிட உதவியது. முதல் மூன்று நூற்றாண்டுகளின் சர்ச் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “[ஆரஜனால் அறிமுகப்படுத்தப்பட்ட] தத்துவஞானத்துக்கான ரசனை விரைவில் மறைந்துவிடுவதாக இல்லை.” விளைந்தது என்ன? “கிறிஸ்தவ விசுவாசத்தின் எளிமை கறைபடுத்தப்பட்டது; தவறுகள் கணக்கில்லாமல் சர்ச்சுக்குள் நுழைந்தன.”
ஆரஜன் தன் பாகத்தில் அப்போஸ்தலன் பவுலின் எச்சரிப்புக்கு செவிசாய்த்து, விசுவாசதுரோகத்திற்கு பங்களிக்காமல் இருந்திருக்கலாம். ‘சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும் ஞானமென்று பொய்யாய்ப் பேர்பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகி’ இருந்திருக்கலாம். அதற்கு பதிலாக, அப்படிப்பட்ட ‘ஞானத்தை’ பெரும்பாலும் தன் போதகங்களுக்கு அடிப்படையாக வைத்ததன் மூலம் ஆரஜன் விசுவாசத்திலிருந்து வழிவிலகிப் போனார்.—1 தீமோத்தேயு 6:20, 21; கொலோசெயர் 2:8.
[பக்கம் 31-ன் படம்]
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் கடவுளுடைய பெயர் பயன்படுத்தப்பட்டதென ஆரஜனின் “ஹெக்ஸாப்லா” காட்டுகிறது
[படத்திற்கான நன்றி]
Published by permission of the Syndics of Cambridge University Library, T-S 12.182
[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]
Culver Pictures