உங்கள் முன்னேற்றத்தை வெளிக்காட்டுங்கள்
“நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:15.
1. ஒரு பழம் சாப்பிடும் அளவுக்கு பழுத்திருக்கிறது என நீங்கள் எப்பொழுது சொல்வீர்கள்?
உங்களுக்கு மிகவும் பிடித்தமான பழத்தை—கொய்யா, வாழை, மா போன்ற ஏதாவதொன்றை—மனதில் கற்பனை செய்து கொள்ளுங்கள். சாப்பிடும் அளவுக்கு அது எப்பொழுது பழுத்திருக்கிறது என்பதை உங்களால் சொல்ல முடியுமா? நிச்சயம் முடியும். அதன் வாசனையும், நிறமும், தொட்டு பார்க்கையில் கனிந்திருப்பதும் வாயில் நீர் சுரக்கச் செய்து சாப்பிடும் வேளையை ஆசையோடு எதிர்பார்க்க வைக்கலாம். அதில் ஒரு துண்டை வாயில் போட்டதுமே திருப்தியை வெளிப்படுத்துவீர்கள். சாறுதான் எத்தனை இனிமை! எத்தனை ருசி! அது உங்களுக்கு பெரும் இன்பத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
2. முதிர்ச்சி எவ்வாறு வெளிக்காட்டப்படுகிறது, தனிப்பட்ட உறவுகளில் அது என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது?
2 இந்தச் சாதாரண ஆனால் சந்தோஷ அனுபவம், வாழ்க்கையின் மற்ற அம்சங்களுக்கும் பொருந்தும். உதாரணமாக, பழம் பழுத்திருப்பது எளிதில் தெரிவதைப் போல் ஒருவரின் ஆவிக்குரிய முதிர்ச்சியும் பல்வேறு வழிகளில் வெளியே தெரிகிறது. பகுத்தறிவு, உட்பார்வை, ஞானம் போன்ற குணங்களை ஒருவரிடம் காண்கையில் அவருடைய முதிர்ச்சியை நாம் புரிந்துகொள்கிறோம். (யோபு 32:7-9) தங்கள் மனப்பான்மைகளிலும் செயல்களிலும் இத்தகைய குணங்களை வெளிக்காட்டுகிறவர்களோடு பழகுவதும் வேலை செய்வதும் நிச்சயமாகவே பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.—நீதிமொழிகள் 13:20.
3. தம்முடைய நாளில் இருந்த ஜனங்களைப் பற்றிய இயேசுவின் விவரிப்பு, முதிர்ச்சியைப் பற்றி எதை வெளிப்படுத்தியது?
3 மறுபட்சத்தில், ஒருவருக்கு சரீர வளர்ச்சி இருக்கலாம். ஆனால் அவர் உணர்ச்சி சம்பந்தமாகவும் ஆவிக்குரிய விதமாகவும் முதிர்ச்சியற்றவராக இருப்பதை அவருடைய பேச்சும் செயலும் காட்டிக் கொடுத்துவிடும். உதாரணமாக, தம்முடைய நாளில் இருந்த தான்தோன்றித்தனமான சந்ததியாரைப் பற்றி இயேசு கிறிஸ்து இவ்வாறு சொன்னார்: “யோவான் போஜனபானம் பண்ணாதவனாய் வந்தான்; அதற்கு அவர்கள்: அவன் பிசாசுபிடித்திருக்கிறவன் என்றார்கள். மனுஷகுமாரன் போஜனபானம் பண்ணுகிறவராய் வந்தார்; அதற்கு அவர்கள்: இதோ, போஜனப்பிரியனும் மதுபானப்பிரியனுமான மனுஷன், . . . என்கிறார்கள்.” அந்த ஜனங்களுக்கு சரீர வளர்ச்சி இருந்தபோதிலும், சிறு ‘பிள்ளைகளைப்’ போல் முதிர்ச்சியற்றவர்களாய் நடந்துகொண்டார்கள் என இயேசு சொன்னார். இவ்வாறு, “எவ்வாறாயினும் ஞானமானது அதன் கிரியைகளால் நீதியுள்ளதாக நிரூபிக்கப்படுகிறது” எனவும் அவர் சொன்னார்.—மத்தேயு 11:16-19; NW.
4. எந்த வழிகளில் முன்னேற்றமும் முதிர்ச்சியும் வெளியே தெரிகின்றன?
4 ஒருவரிடம் மெய் ஞானம், அதாவது முதிர்ச்சியின் தெளிவான அடையாளம் இருப்பதை அவருடைய செயல்களும் அதன் விளைவுகளும் காட்டிக் கொடுத்துவிடும் என்பதை இயேசுவின் வார்த்தைகளில் காண்கிறோம். இதைக் குறித்து தீமோத்தேயுவுக்கு அப்போஸ்தலன் பவுல் கொடுத்த அறிவுரையைக் கவனியுங்கள். தீமோத்தேயு நாடித் தொடர வேண்டிய காரியங்களைப் பற்றி வரிசையாக குறிப்பிட்ட பின்னர், “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி [“வெளியே தெரியும்படி,” NW] இவைகளையே சிந்தித்துக்கொண்டு, இவைகளிலே நிலைத்திரு” என பவுல் சொன்னார். (1 தீமோத்தேயு 4:15) ஆம், ஒரு கிறிஸ்தவர் முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவது ‘வெளியே தெரிகிறது,’ அல்லது அதை தெளிவாக காண முடிகிறது. கிறிஸ்தவ முதிர்ச்சி பிரகாசிக்கும் ஒளியைப் போன்றது, அது காண முடியாத அல்லது மறைவான பண்பல்ல. (மத்தேயு 5:14-16) ஆகையால், நம் முன்னேற்றமும் முதிர்ச்சியும் வெளியே தெரியும் இரண்டு முக்கிய வழிகளைச் சிந்திப்போம்: (1) அறிவிலும் புரிந்துகொள்ளுதலிலும் ஞானத்திலும் வளருதல்; (2) ஆவியின் கனிகளை வெளிக்காட்டுதல்.
விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாடு
5. முதிர்ச்சியை எவ்வாறு விளக்கலாம்?
5 முதிர்ச்சி என்பது பருவ நிறைவு, முழு வளர்ச்சியடைந்திருப்பது, முடிவான நிலையை அல்லது விரும்பப்பட்ட தராதரத்தை எட்டியிருப்பது என அநேக அகராதிகள் விவரிக்கின்றன. முன்பு குறிப்பிட்டபடி, ஒரு பழம் இயல்பான வளர்ச்சியடைகையில் முதிர்கிறது அல்லது கனிகிறது; அது தோற்றத்திலும், நிறத்திலும், வாசனையிலும், சுவையிலும் விரும்பத்தக்க நிலையை அடைகிறது. எனவே, முதிர்ச்சி என்பது முதன்மைநிலை, பூர்த்தி என அர்த்தம் தருவதோடு பரிபூரணத்தையும் குறிக்கும்.—ஏசாயா 18:5; மத்தேயு 5:45-48; யாக்கோபு 1:4.
6, 7. (அ) தம்முடைய வணக்கத்தார் அனைவரும் ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதில் யெகோவா அதிக அக்கறையுடையவராக இருப்பதை எது காட்டுகிறது? (ஆ) ஆவிக்குரிய முதிர்ச்சியோடு எது நெருங்க தொடர்புடையது?
6 தம்முடைய வணக்கத்தார் அனைவரும் ஆவிக்குரிய முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதில் யெகோவா தேவன் அதிக அக்கறையுடையவராக இருக்கிறார். அதற்காக, கிறிஸ்தவ சபையில் அருமையான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி [“ஒருமைப்பாட்டை அடைந்து,” NW], கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும் பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். நாம் இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப்போல அடிபட்டு அலைகிறவர்களாயிரா[தபடிக்கு] . . . அப்படிச் செய்தார்.”—எபேசியர் 4:11-15.
7 சபையில் இத்தகைய அபரிமிதமான ஆவிக்குரிய ஏற்பாடுகளை கடவுள் செய்திருப்பதற்கு அநேக காரணங்களை பவுல் விளக்கினார்; அவற்றில், எல்லாரும் ‘விசுவாசத்திலும் திருத்தமான அறிவிலும் ஒருமைப்பாட்டை அடைந்தவர்களாகவும்,’ ‘பூரண புருஷராகவும்,’ ‘கிறிஸ்துவினுடைய வளர்ச்சியின் அளவுக்குத்தக்கவர்களாக’ இருப்பதையும் இந்த வசனங்களில் அவர் விளக்கினார். அப்போதுதான் நாம் ஆவிக்குரிய குழந்தைகளைப்போல், பொய் அபிப்பிராயங்களாலும் போதகங்களாலும் அலைக்கழிக்கப்படாமல் காக்கப்படுவோம். இவ்வாறு, கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கும், ‘தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை அடைவதற்கும்’ இடையேயுள்ள நெருங்கிய தொடர்பை நாம் காண்கிறோம். நம் இருதயத்தில் ஏற்று நடக்க வேண்டிய பல குறிப்புகள் பவுலின் அறிவுரையில் உள்ளன.
8. விசுவாசத்திலும் திருத்தமான அறிவிலும் ‘ஒருமைப்பாட்டை’ அடைய என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
8 முதலாவதாக, ‘ஒருமைப்பாட்டை’ காத்துக்கொள்வது அவசியமாதலால், விசுவாசத்தையும் அறிவையும் பொருத்ததில் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் தன் உடன் விசுவாசிகளிடம் ஒற்றுமையோடு முழு ஒத்திசைவோடும் நடந்துகொள்ள வேண்டும். பைபிளைப் புரிந்துகொள்ளும் விஷயத்தில், சொந்த அபிப்பிராயங்களை அல்லது திட்டவட்டமான தனிப்பட்ட கருத்துக்களை வலியுறுத்தி வாதாடவோ வற்புறுத்தவோ மாட்டார். மாறக, யெகோவா தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமும், ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமை’ வகுப்பார் மூலமும் வெளிப்படுத்துகிற சத்தியத்தில் அவர் முழு நம்பிக்கை வைக்கிறார். கிறிஸ்தவ பிரசுரங்கள், கூட்டங்கள், அசெம்பிளிகள், மாநாடுகள் வாயிலாக “ஏற்றவேளையிலே” அளிக்கப்படுகிற ஆவிக்குரிய உணவைத் தவறாமல் உட்கொள்வதன் மூலம், விசுவாசத்திலும் அறிவிலும் உடன் கிறிஸ்தவர்களோடு ‘ஒருமைப்பாட்டை’ காத்துக்கொள்வோம் என்பதில் நிச்சயமாயிருக்கலாம்.—மத்தேயு 24:45, NW.
9. எபேசியருக்கு எழுதின இந்த நிருபத்தில் பவுல் பயன்படுத்தின ‘விசுவாசம்’ என்ற வார்த்தையின் அர்த்தத்தை விளக்குங்கள்.
9 இரண்டாவதாக, ‘விசுவாசம்’ என்ற வார்த்தை, தனிப்பட்ட ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் காணப்படும் நம்பிக்கையைக் குறிக்காமல், மொத்தத்தில் நம் நம்பிக்கையின் ‘அகலத்தையும், நீளத்தையும், ஆழத்தையும், உயரத்தையும்’ குறிக்கிறது. (எபேசியர் 3:18; 4:5; கொலோசெயர் 1:23; 2:7) சொல்லப்போனால், ‘விசுவாசத்தின்’ ஏதோவொரு அம்சத்தை மாத்திரமே கிறிஸ்தவர் ஒருவர் நம்புகிறார் அல்லது ஏற்றுக்கொள்கிறார் என்றால் அவர் உடன் விசுவாசிகளுடன் எப்படி ஒற்றுமையுடன் இருக்க முடியும்? பைபிளின் அடிப்படை போதகங்களை மாத்திரமே அறிந்திருப்பதுடன், அல்லது சத்தியத்தைப் பற்றி மேலோட்டமான அல்லது அரைகுறையான அறிவுடன் நாம் திருப்தி அடைந்துவிடக் கூடாது என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. மாறாக, தம்முடைய வார்த்தையை ஆழமாக ஆராய்வதற்கு யெகோவா தம்முடைய அமைப்பின் மூலமாக செய்திருக்கும் எல்லா ஏற்பாடுகளையும் பிரயோஜனப்படுத்திக் கொள்வதில் நாம் ஆர்வம் காட்ட வேண்டும். கடவுளுடைய சித்தத்தையும் நோக்கத்தையும் முடிந்த வரையில் திருத்தமாகவும் முழுமையாகவும் புரிந்துகொள்ள நாம் முயல வேண்டும். இது, பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் வாசிப்பதற்கும் படிப்பதற்கும் நேரம் செலவிடுவதையும், கடவுளுடைய உதவிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் அவரிடம் ஜெபிப்பதையும், கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்வதையும், ராஜ்யத்தை பிரசங்கிப்பதிலும், சீஷராக்குவதிலும் முழுமையாக பங்கெடுப்பதையும் உட்படுத்துகிறது.—நீதிமொழிகள் 2:1-5.
10. ‘நாம் அனைவரும் . . . அடையும் வரைக்கும்’ என எபேசியர் 4:11-லுள்ள வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
10 மூன்றாவதாக, மூன்று பகுதிகளடங்கிய இலக்கை விவரிக்கையில் ‘நாம் அனைவரும் . . . அடையும் வரைக்கும்’ என்ற வார்த்தைகளோடு பவுல் ஆரம்பித்தார். “நாம் அனைவரும்” என்ற சொற்றொடருக்கு, “மொத்தமாக அல்ல, ஒவ்வொருவராக, தனித்தனியே, ஆனால் எல்லாரும் ஒன்றாக” என ஒரு பைபிள் விளக்க புத்தகம் அர்த்தம் தருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால், முழு சகோதரத்துவத்தோடு சேர்ந்து கிறிஸ்தவ முதிர்ச்சியின் இலக்கை தொடர நாம் ஒவ்வொருவரும் நியாயமானளவு முயற்சி எடுக்க வேண்டும். தி இன்டெர்பிரெட்டர்ஸ் பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சரீரத்தின் ஒரு அங்கம் தானாகவே முதிர்ச்சி நிலையை அடைய முடியாது, அதற்கு முழு சரீரமும் தொடர்ந்து ஆரோக்கியத்துடன் வளருவது அவசியம். அதைப் போலவே ஆவிக்குரிய நிறைவு என்ற இலக்கை ஒருவர் தனித்து நின்று அடைய முடியாது.” “சகல பரிசுத்தவான்களோடுங்கூட” விசுவாசத்தின் முழு அளவையும் புரிந்துகொள்ள பிரயாசப்பட வேண்டும் என பவுல் எபேசிய கிறிஸ்தவர்களுக்கு நினைப்பூட்டினார்.—எபேசியர் 3:18அ.
11. (அ) ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வது எதை அர்த்தப்படுத்தாது? (ஆ) முன்னேறுவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?
11 ஆவிக்குரிய முன்னேற்றம் என்பது அறிவினாலும் அதிக படிப்பினாலும் நம் மனதை வெறுமனே நிரப்புவதை அர்த்தப்படுத்தவில்லை என்பதை பவுலின் வார்த்தைகள் தெளிவாக காட்டுகின்றன. முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர் தன் அறிவுத்திறமையால் மற்றவர்களை கவர முயற்சி செய்ய மாட்டார். மாறாக, “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” என பைபிள் சொல்லுகிறது. (நீதிமொழிகள் 4:18) ஆம், ‘அதிகமதிகமாய்ப் பிரகாசிப்பது,’ அந்த “பாதை”தான், தனிப்பட்டவரல்ல. யெகோவா தம்முடைய மக்களுக்கு அருளும், அதிகரித்து வரும் கடவுளுடைய வார்த்தையைப் பற்றி தெளிவான புரிந்துகொள்ளுதலை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தளராது முயற்சி செய்கையில் நாமும் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறுவோம். இங்கு உடனுக்குடன் தெரிந்துகொள்வது என்ற வார்த்தை முன்னேறுவதைக் குறிக்கிறது; அது நாம் அனைவரும் செய்ய முடிந்த ஒன்று.—சங்கீதம் 97:11; 119:105.
‘ஆவியின் கனிகளை’ வெளிக்காட்டுங்கள்
12. ஆவிக்குரிய முன்னேற்றத்தை நாம் நாடுவதில் ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவது ஏன் முக்கியம்?
12 ‘விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பாட்டை’ அடைவது முக்கியமாக இருக்கையில், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் கடவுளுடைய ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவதும் அதே அளவுக்கு முக்கியம். ஏன்? ஏனென்றால் நாம் ஏற்கெனவே பார்த்தபடி, முதிர்ச்சியானது காண முடியாத அல்லது மறைவான பண்பல்ல; ஆனால் மற்றவர்களை ஊக்குவித்து பலப்படுத்தும், தெளிவாக காண முடிந்த பண்புகளால் வெளிக்காட்டப்படுகிறது. ஆவிக்குரிய முன்னேற்றத்தை நாம் நாடுவது, நிச்சயமாகவே, தங்களைப் பண்பட்டவர்களாக காட்டிக் கொள்வதற்கு அல்லது செயற்கையான பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கு எடுக்கும் முயற்சி அல்ல. மாறாக, கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுக்கு இசைய ஆவிக்குரிய விதத்தில் வளருகையில், நம்முடைய மனப்பான்மைகளிலும் செயல்களிலும் சிறந்த மாற்றம் ஏற்படும். “ஆவிக்கேற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—கலாத்தியர் 5:16.
13. என்ன மாற்றம் முன்னேற்றத்திற்கு தெளிவான அத்தாட்சி அளிக்கிறது?
13 ஏராளமானவையாகவும் ‘வெளியரங்கமாகவும்’ உள்ள ‘மாம்சத்தின் கிரியைகளை’ பவுல் வரிசையாக குறிப்பிட்டார். கடவுள் எதிர்பார்ப்பவற்றின் மதிப்பை ஒருவர் புரிந்துகொள்வதற்கு முன்பு, அவருடைய வாழ்க்கை இந்த உலகின் போக்கிலும், “விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், வெறிகள், களியாட்டுகள்” என பவுல் குறிப்பிட்ட சிலவற்றாலும் ஒருவேளை நிறைந்திருக்கலாம். (கலாத்தியர் 5:19-21) ஆனால் அவர் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்கையில், இந்த விரும்பத்தகாத ‘மாம்சத்தின் கிரியைகளை’ மெல்ல மெல்ல ஒதுக்கி, அந்த இடத்தை ‘ஆவியின் கனிகளால்’ நிரப்புகிறார். வெளியில் தெரியும் இந்த மாற்றம், அவர் கிறிஸ்தவ முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்குத் தெளிவான அத்தாட்சி அளிக்கிறது.—கலாத்தியர் 5:22.
14. “மாம்சத்தின் கிரியைகள்,” ‘ஆவியின் கனிகள்’ என்ற இந்த இரண்டு சொற்றொடர்களையும் விளக்குங்கள்.
14 “மாம்சத்தின் கிரியைகள்,” ‘ஆவியின் கனிகள்’ என்ற இந்த இரண்டு சொற்றொடர்களுக்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். “கிரியைகள்” ஒருவருடைய செயல்களின் விளைவுகளாக இருக்கின்றன. வேறு வார்த்தைகளில் சொன்னால், மாம்சத்தின் கிரியைகள் என பவுல் பட்டியலிட்டவை ஒருவர் வேண்டுமென்றே செய்தவற்றின் விளைவுகள் அல்லது மனித அபூரணத்தின் செல்வாக்கினால் ஏற்பட்ட விளைவுகள். (ரோமர் 1:24, 28; 7:21-25) மறுபட்சத்தில் ‘ஆவியின் கனிகள்,’ பட்டியலிடப்பட்ட அந்த பண்புகள், குணங்களிலோ ஆள்தன்மையிலோ முன்னேற்றம் என்ற பெயரில் செய்யப்படும் முயற்சிகளால் விளைபவை அல்ல; ஆனால் ஒருவரிடம் கடவுளுடைய ஆவி செயல்படுவதால் விளைபவையே. ஒரு மரத்தை பேணி பராமரிக்கையில் கனி தருவதுபோல், ஒருவருடைய வாழ்க்கையில் பரிசுத்த ஆவி தடையின்றி செயல்படுகையில் அவர் ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவார்.—சங்கீதம் 1:1-3.
15. ‘ஆவியின் கனிகள்’ எல்லாவற்றிற்கும் கவனம் செலுத்துவது ஏன் முக்கியம்?
15 தான் குறிப்பிட்ட எல்லா விரும்பத்தக்க பண்புகளையும் தொகுத்து ‘கனிகள்’ என்ற வார்த்தையைப் பவுல் பயன்படுத்தினது கவனிக்க வேண்டிய மற்றொரு குறிப்பு. நமக்கு விருப்பமானதை தேர்ந்தெடுக்கும்படி ஆவி பல விதமான கனிகளைப் பிறப்பிப்பதில்லை. அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம் இச்சையடக்கம் என பவுல் பட்டியலிட்ட எல்லா பண்புகளும் சம அளவில் முக்கியமானவை, அவை எல்லாம் சேர்ந்து புதிய கிறிஸ்தவ ஆள்தன்மையை சாத்தியமாக்குகின்றன. (எபேசியர் 4:24; கொலோசெயர் 3:10) ஆகையால், நம் தனிப்பட்ட ஆள்தன்மை மற்றும் மனச்சாய்வுகளின் காரணமாக இப்பண்புகளில் சில நம் வாழ்க்கையில் அதிகமாக வெளியே தெரிகையில் பவுல் குறிப்பிட்ட மற்ற பண்புகளுக்கும் நாம் கவனம் செலுத்துவது முக்கியம். அவ்வாறு செய்வதன்மூலம், கிறிஸ்துவைப் போன்ற ஆள்தன்மையை வாழ்க்கையில் நாம் முழுமையாக வெளிக்காட்டலாம்.—1 பேதுரு 2:12, 21.
16. கிறிஸ்தவ முதிர்ச்சியை நாடுவதில் நம் நோக்கம் என்ன, அதை எவ்வாறு அடையலாம்?
16 கிறிஸ்தவ முதிர்ச்சியை நாடுவதில் நம் நோக்கம், அதிகப்படியான அறிவையும் கல்வியையும் பெறுவதோ மேம்பட்ட பண்பியல்புகளை வளர்த்துக்கொள்வதோ அல்ல என்ற முக்கிய பாடத்தை பவுலின் கலந்தாலோசிப்பிலிருந்து கற்றுக்கொள்கிறோம். நம் வாழ்க்கையில் கடவுளுடைய ஆவி தடையில்லாமல் செயல்பட வேண்டுமென்பதே நோக்கம். கடவுளுடைய ஆவியின் வழிநடத்துதலுக்கு நம் சிந்தனையும் செயல்களும் எந்தளவுக்கு இணக்கமாக இருக்கிறதோ அந்தளவுக்கு நாம் ஆவிக்குரிய முதிர்ச்சியை அடைவோம். இந்த இலக்கை நாம் எவ்வாறு அடையலாம்? நம்முடைய இருதயத்திலும் மனதிலும் கடவுளுடைய ஆவி செல்வாக்கு செலுத்த அனுமதிக்க வேண்டும். இது, கிறிஸ்தவக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு, பங்கெடுப்பதை உட்படுத்துகிறது. மேலும், கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் படித்து, தியானிக்க வேண்டும், மற்றவர்களுடன் பழகும் விஷயங்களிலும், நாம் செய்யும் தெரிவுகளிலும் தீர்மானங்களிலும் அதன் நியமங்கள் நம்மை வழிநடத்த அனுமதிக்க வேண்டும். அப்போது, நிச்சயமாகவே நம் முன்னேற்றம் தெளிவாக தெரியும்.
கடவுளுடைய மகிமைக்காக முன்னேற்றம் செய்யுங்கள்
17. முன்னேற்றம் செய்வது எவ்வாறு நம் பரம தகப்பனை மகிமைப்படுத்துவதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
17 கடைசியாக, நம் முன்னேற்றத்தை வெளிக்காட்டுவது, மகிமையையும் துதியையும் நமக்கல்ல, ஆனால் நம் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு உதவிய நம் பரம தகப்பனாகிய யெகோவாவுக்குக் கொண்டு வருகிறது. தாம் கொல்லப்படுவதற்கு முந்தின இரவில் இயேசு தம் சீஷர்களிடம் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.” (யோவான் 15:8) ஆவியின் கனிகளை வெளிக்காட்டுவதன் மூலமும் ஊழியத்தில் ராஜ்ய கனிகளை உண்டுபண்ணுவதன் மூலமும் சீஷர்கள் யெகோவாவுக்கு மகிமை சேர்த்தார்கள்.—அப்போஸ்தலர் 11:4, 18; 13:48.
18. (ஆ) என்ன சந்தோஷமான அறுவடை இன்று நடந்தேறுகிறது? (ஆ) இந்த அறுவடை என்ன சவாலை முன் வைக்கிறது?
18 இன்று, உலகளாவிய ஆவிக்குரிய அறுவடையில் ஈடுபடுகையில், யெகோவாவின் ஆசீர்வாதம் அவருடைய ஜனங்கள் மீது இருக்கிறது. இப்போது பல ஆண்டுகளாக, ஒவ்வொரு ஆண்டும் ஏறக்குறைய சுமார் 3,00,000 புதியவர்கள் யெகோவாவுக்குத் தங்களை ஒப்புக்கொடுத்து, அதை தண்ணீர் முழுக்காட்டுதல் மூலம் அடையாளப்படுத்துகிறார்கள். இது நம்மைச் சந்தோஷப்படுத்துகிறது, சந்தேகமில்லாமல் யெகோவாவுக்கும் சந்தோஷத்தை அளிக்கிறது. (நீதிமொழிகள் 27:11) எனினும், இது எப்போதும் சந்தோஷத்தையும் துதியையும் யெகோவாவுக்கு சேர்க்க, அந்தப் புதியவர்கள் அனைவரும், ‘அவருக்குள் [“கிறிஸ்துவுக்குள்,” NW] வேர்கொண்டவர்களாகவும், அவர்மேல் கட்டப்பட்டவர்களாகவும், அவருக்குள் நடந்துகொண்டு, . . . விசுவாசத்தில் உறுதிப்பட’ வேண்டும். (கொலோசெயர் 2:6, 7) இது, கடவுளுடைய ஜனங்களுக்கு இரண்டு விதமான சவாலை முன் வைக்கிறது. ஒன்று, நீங்கள் புதிதாக முழுக்காட்டப்பட்டவராக இருந்தால், ‘நீங்கள் தேறினது யாவருக்கும் விளங்கும்படிக்கு’ அதை வெளிக்காட்டும் சவாலை ஏற்பீர்களா? மற்றொன்று, நீங்கள் சத்தியத்தில் சில காலமாக இருந்து வருகிறீர்களென்றால், புதியவர்களின் ஆவிக்குரிய நலத்தைக் கவனிக்கும் பொறுப்புக்கு தோள்கொடுக்கும் சவாலை ஏற்பீர்களா? இந்த இரண்டு விஷயத்திலும் முதிர்ச்சியை நோக்கி முன்னேறுவதற்கான தேவை தெளிவாக தெரிகிறது.—பிலிப்பியர் 3:16; எபிரெயர் 6:1, 2.
19. முன்னேற்றத்தை விளங்க செய்கையில் என்ன சிலாக்கியமும் பொன்னான வாய்ப்பும் உங்களுக்கு காத்திருக்கின்றன?
19 தங்கள் முன்னேற்றத்தை வெளிக்காட்ட கடினமாக உழைக்கும் எல்லோருக்கும் அருமையான ஆசீர்வாதங்கள் காத்திருக்கின்றன. முன்னேற்றம் செய்யும்படி தீமோத்தேயுவை ஊக்குவித்த பின்பு சொன்ன பவுலின் இந்த வார்த்தைகளை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்: “உன்னைக்குறித்தும் உபதேசத்தைக்குறித்தும் எச்சரிக்கையாயிரு, இவைகளில் நிலைகொண்டிரு, இப்படிச் செய்வாயானால், உன்னையும் உன் உபதேசத்தைக் கேட்பவர்களையும் இரட்சித்துக்கொள்ளுவாய்.” (1 தீமோத்தேயு 4:16) உங்கள் முன்னேற்றத்தை விளங்கச் செய்ய கடுமையாய் உழைப்பதன் மூலம், கடவுளுடைய பெயரை மகிமைப்படுத்தி அவருடைய ஆசீர்வாதங்களை அனுபவித்து மகிழும் பொன்னான வாய்ப்பை நீங்களும் பெறலாம்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• ஆவிக்குரிய முதிர்ச்சி என்ன வழிகளில் வெளிக்காட்டப்படலாம்?
• என்ன வகையான அறிவும் புரிந்துகொள்ளுதலும் முதிர்ச்சியைப் வெளிப்படுத்துகின்றன?
• ‘ஆவியின் கனிகளை’ வெளிக்காட்டுவது ஆவிக்குரிய முன்னேற்றத்தை எவ்வாறு குறிக்கிறது?
• முதிர்ச்சியை நோக்கி முன்னேறுகையில் என்ன சவாலை நாம் ஏற்க வேண்டும்?
[பக்கம் 13-ன் படம்]
கனிந்திருப்பதை அல்லது முதிர்ச்சியை தெளிவாக கண்டுகொள்ள முடியும்
[பக்கம் 15-ன் படம்]
படிப்படியாய் வெளிப்படுத்தப்படும் சத்தியத்தை உடனுக்குடன் தெரிந்துகொள்வதன் மூலம் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்கிறோம்
[பக்கம் 17-ன் படம்]
‘ஆவியின் கனிகளை’ வெளிக்காட்ட ஜெபம் நமக்கு உதவுகிறது