வாழ்க்கை சரிதை
யெகோவாவின் அழைப்புகளை ஏற்பது வெகுமதிகளைத் தருகிறது
மாரீயா டோ செள ஸானார்டி சொன்னபடி
“யெகோவாவுக்குத் தெரியும், அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது. அவர் உனக்கு அழைப்பு கொடுத்தால் அதை மனத்தாழ்மையோடு நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்.” சுமார் 45 வருடங்களுக்கு முன்னால் அப்பா சொன்ன இந்த வார்த்தைகள்தான் முழுநேர ஊழியராக சேவிப்பதற்கு யெகோவாவின் அமைப்பிலிருந்து வந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள எனக்கு உதவி செய்தன. இன்றும் என் அப்பாவின் அந்த அறிவுரைக்காக அவருக்கு நன்றிக் கடன்பட்டிருக்கிறேன், ஏனென்றால் இதுபோன்ற அழைப்புகளை ஏற்றுக்கொண்டது எனக்கு ஏராளமான வெகுமதிகளை அள்ளித் தந்திருக்கிறது.
காவற்கோபுரம் பத்திரிகைக்கு 1928-ல் அப்பா சந்தா செய்தார், பைபிளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. போர்ச்சுகலின் மையப் பகுதியில் இவர் வாழ்ந்து வந்ததால் தபால் மூலமாக பெற்றுக்கொண்ட பிரசுரங்களும் என்னுடைய பாட்டிக்கும் தாத்தாவுக்கும் சொந்தமான ஒரு பைபிளும் மட்டுமே கடவுளுடைய சபையோடு அவருக்கு இருந்த தொடர்பு. 1949-ல் எனக்கு 13 வயதாக இருந்தபோது, அம்மாவின் சொந்த நாடான பிரேஸிலுக்கு சென்று ரியோ டி ஜெனிரோவின் புறநகர் பகுதியில் குடியேறினோம்.
இங்கே எங்கள் வீட்டுக்கு அருகிலிருந்தவர்கள் அவர்களுடைய சர்ச்சுக்கு வரும்படி எங்களை அழைத்தார்கள், நாங்களும் சில தடவை சென்றோம். எரிநரகம், ஆத்துமா, பூமியின் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றிய கேள்விகளுக்கு அவர்களிடமிருந்து பதிலை தெரிந்துகொள்ள அப்பா ஆசைப்பட்டார், ஆனால் அவர்களுக்கு அதற்கெல்லாம் பதில் தெரியவில்லை. “உண்மையான பைபிள் மாணாக்கருக்காக நாம் காத்திருக்க வேண்டியதுதான்” என்று அப்பா அடிக்கடி சொல்வார்.
கண்பார்வை இழந்த ஒருவர் காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை விநியோகிப்பதற்கு ஒரு நாள் எங்களுடைய வீட்டுக்கு வந்தார். அப்பா அதே கேள்விகளை அவரிடமும் கேட்டார், அவர் பைபிளிலிருந்து சரியான பதில்களை அளித்தார். அதற்கடுத்த வாரம் மற்றொரு யெகோவாவின் சாட்சி எங்களை வந்து சந்தித்தார். இன்னும் சில கேள்விகளுக்கு விடையளித்தப்பின் அவர் பிரசங்கிப்பதற்கு செல்ல வேண்டும் என்று மரியாதையுடன் சொல்லிவிட்டு புறப்பட்டார். உலகம் முழுவதிலும் பிரசங்க வேலை செய்யப்பட வேண்டும் என்பதற்காக மத்தேயு 13:38-ஐ எடுத்துக் காட்டினார். “நானும் வரலாமா?” என்று அப்பா கேட்டார். “தாராளமாக வரலாம்” என்று அவர் பதிலளித்தார். பைபிள் சத்தியத்தை மறுபடியும் கண்டுபிடித்துவிட்டதில் நாங்கள் அடைந்த ஆனந்தத்திற்கு அளவே இல்லை! அப்பா அடுத்த மாநாட்டில் முழுக்காட்டுதல் எடுத்தார், அதற்குப்பின் நவம்பர் 1955-ல் நானும் முழுக்காட்டுதல் பெற்றேன்.
முதல் அழைப்பை ஏற்றுக்கொள்ளுதல்
ஒன்றரை ஆண்டுகளுக்குப்பின், ரியோ டி ஜெனிரோவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்திலிருந்து தபாலில் ஒரு பெரிய பிரவுண் கவர் வந்தது. அது முழுநேர பிரசங்க வேலையில் சேர்ந்துகொள்வதற்கான அழைப்பு. அம்மாவின் உடல்நிலை அப்போது ரொம்ப மோசமாக இருந்தது, ஆகவே நான் அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். “யெகோவாவுக்குத் தெரியும், அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பது. அவர் உனக்கு அழைப்பு கொடுத்தால் அதை மனத்தாழ்மையோடு நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று அவர் பளிச்சென்று பதிலளித்தார். இந்த வார்த்தைகள் எனக்கு உற்சாகமளித்தன, விண்ணப்பத்தை பூர்த்திசெய்து முழுநேர சேவையை ஜூலை 1, 1957-ல் தொடங்கினேன். ரியோ டி ஜெனிரோவிலுள்ள டிரேஸ் ரீயூஸ் என்ற டவுனில் என் முதல் நியமிப்பைப் பெற்றேன்.
டிரேஸ் ரீயூஸில் இருந்தவர்கள் நாங்கள் கத்தோலிக்க பைபிளை உபயோகிக்காததால் எங்களுடைய செய்தியைக் கேட்க முதலில் தயங்கினார்கள். தீவிர கத்தோலிக்கராக இருந்த ஷரால்டூ ராமால்யூ என்பவருக்கு பைபிள் படிப்பு நடத்த துவங்கியபோது எங்களுக்கு உதவி கிடைத்தது. அவர் மூலம் உள்ளூர் பாதிரியார் கையெழுத்திட்டிருந்த ஒரு பைபிளை பெற்றுக்கொண்டேன். அப்போதிலிருந்து, ஆட்சேபணை தெரிவிக்கும் எவரிடமும் பாதிரியாரின் கையெழுத்தைக் காட்டினேன். யாரும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. பின்னர் ஷரால்டூ முழுக்காட்டுதல் பெற்றார்.
1959-ல் டிரேஸ் ரீயூஸின் முக்கிய பகுதியில் வட்டார மாநாடு நடந்தது எனக்கு அதிக மகிழ்ச்சியளித்தது. அந்தச் சமயத்தில் பைபிள் படித்துக்கொண்டிருந்த ஒரு போலீஸ் தலைமை அதிகாரி அந்தப் பட்டணம் முழுவதிலும் மாநாட்டிற்கான விளம்பர பேனர்களை வைக்க ஏற்பாடுகளும் செய்து கொடுத்தார். மூன்று ஆண்டுகள் டிரேஸ் ரீயூஸில் ஊழியம் செய்த பின், சாவோ போலோ நகரின் மேற்கே சுமார் 110 கிலோமீட்டர் தொலைவில் இருந்த இட்டூ என்ற புதிய இடத்தில் சேவை செய்ய அழைப்பு கிடைத்தது.
சிவப்பு, நீலம், மஞ்சள் நிற புத்தகங்கள்
தங்குவதற்கு வீடு தேடி நானும் என்னுடைய பயனியர் பார்ட்னரும் அலைந்தோம், கடைசியாக டவுனின் மத்தியில் நல்மனம் படைத்த மாரீயா என்ற ஒரு விதவையின் வீட்டில் தங்குவதற்கு வசதியான ஒரு இடம் கிடைத்தது. மாரீயா தன் சொந்த மகள்களை போல எங்களை கவனித்துக் கொண்டார்கள். சீக்கிரத்தில் இட்டூவின் ரோமன் கத்தோலிக்க பிஷப் அவர்களை வந்து சந்தித்தார், எங்களை அனுப்பிவிடும்படி அவர்களிடம் சொன்னார். ஆனால் அவர்கள் முடியாதென மறுத்துவிட்டார்கள். “என்னுடைய கணவன் மரித்தபோது, எனக்கு ஆறுதலளிக்க நீங்கள் ஒன்றுமே செய்யவில்லை. இந்த யெகோவாவின் சாட்சிகளோ நான் அவர்களில் ஒருத்தியாக இல்லாவிட்டாலும் எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்” என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில்தான், இட்டூவின் கத்தோலிக்க பாதிரிமார்கள் தங்கள் சர்ச்சுக்கு வருவோரிடம், “பிசாசு பற்றி சொல்லும் சிவப்பு நிற புத்தகத்தை” யாரும் வாங்கக்கூடாது என்று தடைவிதித்திருந்தார்களாம்; இதை ஒரு பெண் எங்களுக்கு சொன்னார். அந்த வாரத்தில் நாங்கள் எல்லாருக்கும் விநியோகித்து வந்த “கடவுளே சத்தியபரராக விளங்கச் செய்யுங்கள்” (ஆங்கிலம்) என்ற பைபிள் சார்ந்த புத்தகத்தைப் பற்றித்தான் அவர்கள் சொல்லியிருந்தார்கள். சிவப்பு நிற புத்தகத்தை பாதிரிமார்கள் “தடைசெய்துவிட்டதால்,” நீல நிற புத்தகத்தை (“புதிய வானங்களும் ஒரு புதிய பூமியும்” [ஆங்கிலம்]) அளிப்பதற்கு நாங்கள் தயாரானோம். இந்த மாற்றத்தை குருமார் அறிந்தபோது நாங்கள் மஞ்சள் நிற புத்தகத்தை (மனிதவர்க்கத்துக்கு மதம் என்ன செய்துள்ளது [ஆங்கிலம்]) விநியோகிக்க ஆரம்பித்தோம். இவ்வாறு தொடர்ந்தோம். பல வண்ண அட்டைகளில் பல்வேறு புத்தகங்களை நாங்கள் வைத்திருந்தது எங்களுக்கு வசதியாக இருந்தது!
இட்டூவில் ஒரு வருட காலம் ஓடிவிட்டது. அப்போது ரியோ டி ஜெனிரோவில் ஒரு தேசிய அசெம்பிளி நடக்கவிருந்தது. அதற்காக பெத்தேலில், அதாவது யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகத்தில் தற்காலிகமாக வேலை செய்யும்படி எனக்கு ஒரு தந்தி வந்தது. நான் மகிழ்ச்சியோடு அதை ஏற்றுக்கொண்டேன்.
கூடுதலான நியமிப்புகளும் சவால்களும்
பெத்தேலில் வேலைக்கு பஞ்சமே இல்லை. எந்த வேலையும் செய்ய தயாராக இருந்தேன். ஒவ்வொரு நாள் காலையும் தினவாக்கியத்தை ஆராய்ந்ததும் திங்கட்கிழமை மாலையில் பெத்தேல் குடும்பத்தாரின் காவற்கோபுர படிப்பில் கலந்துகொண்டதும் எத்தனை உற்சாகம் அளித்தது! ஆட்டோ எஸ்டெல்மானும் பெத்தேல் குடும்பத்தின் அனுபவமுள்ள அங்கத்தினர்களும் செய்த இருதயப்பூர்வமான ஜெபங்கள் என்னை மிகவும் நெகிழ வைத்தன.
தேசிய அசெம்பிளி முடிந்தவுடன், பழையபடி இட்டூவுக்குத் திரும்புவதற்காக நான் பேக் செய்துகொண்டிருந்தபோது, கிளை அலுவலக ஊழியர் கிரான்ட் மில்லர், பெத்தேலில் நிரந்தரமாக தங்கி வேலை செய்வதற்கான கடிதத்தை என்னிடம் கொடுத்தார். நான் அப்படியே ஆச்சரியத்தில் உறைந்துபோனேன். சகோதரி ஹோசா யாசட்ஜியானும் நானும் ஒரே அறையில் தங்கினோம். அவர்கள் இன்னும் பிரேஸில் பெத்தேலில்தான் இருக்கிறார்கள். அப்போதெல்லாம் பெத்தேல் குடும்பம் ரொம்ப சிறியது, நாங்கள் 28 பேரே இருந்தோம், ஆகவே எல்லாரும் நெருங்கிய நண்பர்களாக பழகினோம்.
1964-ல், ஷ்வாவ் ஸானார்டி என்ற ஒரு இளம் முழுநேர ஊழியர் பயிற்சி பெறுவதற்காக பெத்தேலுக்கு வந்திருந்தார். அவர் அப்போது அருகிலிருந்த சபைகளுக்கு வட்டார ஊழியராக அல்லது வட்டார கண்காணியாக நியமிக்கப்பட்டிருந்தார். அறிக்கைகளை சமர்ப்பிப்பதற்காக அவர் பெத்தேலுக்கு வந்தபோது நாங்கள் சிலமுறை சந்தித்தோம். திங்கட்கிழமை மாலையில் நடக்கும் குடும்ப படிப்பில் கலந்துகொள்ளவும் கிளை அலுவலக ஊழியர் அவருக்கு அனுமதி கொடுத்திருந்தார். ஆகவே நாங்கள் இருவரும் அதிக நேரத்தை ஒன்றாக செலவழிக்க முடிந்தது. நாங்கள் இருவரும் ஆகஸ்ட் 1965-ல் திருமணம் செய்துகொண்டோம். என் கணவரோடு வட்டார வேலையில் சேர்ந்துகொள்வதற்கான அழைப்பை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டேன்.
அந்தக் காலத்தில் பிரேஸிலின் உள்நாட்டு பகுதிகளில் பிரயாண வேலை செய்ய பல இடர்பாடுகளை சமாளிக்க வேண்டும். மினா ஷரைஸ் மாகாணத்தில், ஆரானா என்ற இடத்தில் இருந்த சாட்சிகளை சந்திக்க சென்றதை என்னால் மறக்கவே முடியாது. கொஞ்ச தூர இரயில் பயணத்திற்குப் பின்பு, சூட்கேஸ்கள், டைப்ரைட்டர், ஸ்லைடு புரொஜக்டர், ஊழிய பைகள், பிரசுரங்கள் என இத்தனையும் சுமந்துகொண்டு மீதமுள்ள தூரத்தை நடந்து செல்ல வேண்டும். வயதான சகோதரர் லுரிவால் ஷான்டால் எங்களுடைய பெட்டிகளை தூக்கிச் செல்வதற்காக, நாங்கள் சென்ற போதெல்லாம் இரயில் நிலையத்தில் காத்திருந்ததைக் கண்டதில் எங்களுக்கு அதிக சந்தோஷம்!
அரனாவில் ஒரு வாடகை வீட்டில் கூட்டங்கள் நடத்தப்பட்டன. பின்னாலிருந்த ஒரு சிறிய அறையில்தான் நாங்கள் தூங்கினோம். அறையின் ஒரு மூலையில் விறகு. சமைப்பதற்கும் சகோதரர்கள் எங்களுக்காக பக்கெட்டுகளில் கொண்டுவந்து கொடுத்த தண்ணீரை கொதிக்க வைப்பதற்கும் இந்த விறகைத்தான் பயன்படுத்தினோம். அருகே மூங்கில் காட்டின் நடுவில் தரையில் இருந்த ஒரு குழிதான் எங்களுக்கு கழிப்பறை. இரவில் சாகஸ் என்ற நோயைப் பரப்பும் பார்பர் பீட்டில் என்ற பூச்சிகளிடமிருந்து தப்பிக்க ஒரு காஸ்லைட் விடிய விடிய எரிந்துகொண்டிருக்கும். காலையில் பார்த்தால் எங்களுடைய நாசியெல்லாம் கன்னங்கரேல் என இருக்கும். சுவாரசியமான அனுபவம் அது!
பாரனா மாகாணத்தில் வட்டார ஊழியம் செய்கையில் மறுபடியும் கிளை அலுவலகத்திலிருந்து ஒரு பெரிய பிரவுண் கவர் வந்தது. யெகோவாவின் அமைப்பிலிருந்து இன்னொரு அழைப்பு—இந்த முறை போர்ச்சுகலில் சேவை செய்வதற்கு! லூக்கா 14:30-லுள்ள நியமத்தின் அடிப்படையில், செல்லும் செலவை கணக்குப் பார்த்துவிட்டு இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளும்படி அந்தக் கடிதத்தில் எங்களுக்கு ஆலோசனை சொல்லப்பட்டிருந்தது. இதற்கு காரணம், நம்முடைய கிறிஸ்தவ வேலை அங்கு தடைசெய்யப்பட்டிருந்தது, போர்ச்சுகல் அரசாங்கம் ஏற்கெனவே அநேக சகோதரர்களை கைதும் செய்திருந்தது.
அப்படிப்பட்ட துன்புறுத்துதலை சந்திக்க அந்தத் தேசத்திற்கு நாங்கள் செல்வோமா? “போர்ச்சுகலில் உள்ள நம்முடைய சகோதரர்களால் யெகோவாவை உண்மையுடன் சேவிக்க முடியுமென்றால், ஏன் நம்மால் முடியாது?” என்று என் கணவர் கேட்டார். என் அப்பா என்னிடம் சொன்ன அந்த உற்சாக வார்த்தைகளும் என் நினைவுக்கு வந்ததால் நானும் ஒத்துக்கொண்டேன்: “யெகோவா நமக்கு ஒரு அழைப்பைக் கொடுத்தால் நாம் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும், அவரை சார்ந்திருக்க வேண்டும்.” ஆகவே சீக்கிரத்தில் நாங்கள் மேலுமான அறிவுரைகளை பெறுவதற்காகவும் பிரயாணத்துக்காக எல்லாவற்றையும் தயார் செய்வதற்காகவும் சாவோ போலோவிலுள்ள பெத்தேலுக்கு வந்தோம்.
ஷ்வாவ் மாரீயா, மாரீயா ஷ்வாவ்
எங்கள் ஏயூஷேன்யூ ஸே என்ற படகு சாவோ போலோ மாகாணத்தின் சான்டோஸ் துறைமுகத்திலிருந்து 1969, செப்டம்பர் 6 அன்று புறப்பட்டது. கடலில் ஒன்பது நாட்கள் பிரயாணம் செய்த பின் நாங்கள் போர்ச்சுகலுக்கு வந்து சேர்ந்தோம். ஆரம்பத்தில் பல மாதங்களுக்கு லிஸ்பன் என்ற பழைய மாவட்டத்தில் அல்ஃபாமா, மோராரியா ஆகிய பகுதிகளில் குறுகலான தெருக்களில் அனுபவமுள்ள சகோதரர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தோம். போலீஸாரின் கையில் எளிதில் சிக்காமல் ஜாக்கிரதையாக இருக்க அவர்கள் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள்.
சபை கூட்டங்கள் சாட்சிகளுடைய வீடுகளில் நடந்தன. அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு சந்தேகம் வருவது போல தெரிந்தால் உடனடியாக கூட்டங்களை வேறு இடத்துக்கு மாற்றிவிடுவோம். இவ்வாறு வீடு சோதனை செய்யப்படுவதையும் சகோதரர்கள் கைது செய்யப்படுவதையும் தவிர்த்தோம். எங்கள் மாநாடுகளை பிக்னிக் என்று அழைத்தோம். அவற்றை நாங்கள் லிஸ்பனின் புறநகர் பகுதியில் இருந்த மான்சான்டூ பூங்காவிலும் கரையோரத்தில் இருந்த காஸ்டா டா காப்பாரிக்கா என்ற காட்டுப் பகுதியிலும் நடத்தினோம். அங்கு சாதாரண உடை அணிந்து சென்றோம். முக்கியமான இடங்களில் கண்காணிப்பதற்காக அட்டென்டன்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பார்கள். சந்தேகப்படும்படி யாராவது வந்தால், ஏதாவது ஒரு விளையாட்டை விளையாட ஆரம்பித்து, பிக்னிக் சூழலை உருவாக்கி, நாட்டுப்புற பாடலை பாட ஆரம்பித்துவிடுவோம்.
பாதுகாப்பு போலீஸார் எங்களை கண்டுபிடிக்காதிருக்க எங்கள் உண்மையான பெயர்களை நாங்கள் உபயோகிக்க மாட்டோம். சகோதரர்கள் எங்களை ஷ்வாவ் மாரீயா, மாரீயா ஷ்வாவ் என்று அறிந்திருந்தார்கள். கடிதங்களிலோ பதிவுகளிலோ எங்களுடைய பெயர்கள் பயன்படுத்தப்படவில்லை. அதற்கு பதிலாக எங்களுக்கு எண்கள் கொடுக்கப்பட்டிருந்தன. சகோதரர்களின் முகவரிகளை மனப்பாடம் செய்யாமலிருக்க தீர்மானமாயிருந்தேன். ஒருவேளை என்னை கைதுசெய்தாலும் அவர்களை காட்டிக்கொடுக்காதிருப்பதற்காக அப்படி செய்தேன்.
இப்படிப்பட்ட கெடுபிடிகள் இருந்தபோதிலும், ஷ்வாவ்வும் நானும் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தப்பவிடாமல் சாட்சி கொடுக்க தீர்மானமாயிருந்தோம். ஏனென்றால் எந்த நேரமும் எங்கள் சுதந்திரம் பறிபோகலாம். நம்முடைய பரம தந்தை யெகோவாமீது சார்ந்திருக்க நாங்கள் கற்றுக்கொண்டோம். எங்கள் பாதுகாப்பாளராக, நாங்கள் “அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல” உணரும் வகையில் தம் தூதர்களை பயன்படுத்தி அவர் எங்களை பாதுகாத்தார்.—எபிரெயர் 11:27.
ஓபோர்டோவில் ஒரு சமயம் வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது ஒருவர் தன் வீட்டிற்குள் வரும்படி எங்களை வற்புறுத்தினார். என்னோடு இருந்த சகோதரி தயங்காமல் உள்ளே சென்றார். வேறு வழியில்லாததால் நானும் சென்றேன். முன் அறையில் இராணுவ சீருடையிலிருந்த ஒருவரின் ஃபோட்டோ இருந்ததை கவனித்தேன். இப்போது என்ன செய்வது? அவர் எங்களை உட்கார வைத்துவிட்டு என்னிடம்: “உங்கள் மகனை இராணுவ சேவைக்கு அழைத்தால் அனுப்புவீர்களா?” என்று கேட்டார். அது மிகவும் தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. மெளனமாக ஜெபித்துவிட்டு, அமைதியாக, “எனக்கு பிள்ளைகள் இல்லை. அப்படி இருப்பதாக ஊகித்துக்கொண்டு பதில் சொல்ல சொன்னால் என் பதிலையே நீங்களும் சொல்வீர்கள் என்று நிச்சயம் தெரியும்” என்றேன். அவர் அமைதியாகிவிட்டார். ஆகவே நான் தொடர்ந்து இவ்வாறு சொன்னேன்: “ஒரு சகோதரனை அல்லது தந்தையை இழப்பது எப்படியிருக்கும் என்று இப்போது நீங்கள் என்னைக் கேட்டால், அதற்கு என்னால் பதில் சொல்ல முடியும், ஏனென்றால் என் தம்பியும் அப்பாவும் இப்போது உயிரோடு இல்லை.” நான் பேசிக்கொண்டிருக்கும் போதே என் கண்கள் குளமாயின, அவர் கண்களிலும் கண்ணீரை கண்டேன். அவர் சமீபத்தில் தன் மனைவியை பறிகொடுத்ததை கூறினார். உயிர்த்தெழுதல் நம்பிக்கையைப் பற்றி அவரிடம் சொன்னபோது அவர் கூர்ந்து கவனித்தார். அதன் பிறகு நாங்கள் பணிவாக அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு, யெகோவாவின் கரங்களில் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டு, பத்திரமாக அங்கிருந்து வெளியேறினோம்.
தடை இருந்தபோதிலும் உண்மை மனமுடைய ஆட்களுக்கு சத்தியத்தின் அறிவு கிடைப்பதற்கு உதவி அளிக்கப்பட்டது. ஓபோர்டோவிலே பிஸினஸ் செய்துகொண்டிருந்த ஓராசியூ என்ற ஒருவருடன் என் கணவர் பைபிள் படிப்பு ஆரம்பித்தார். அவர் மிகவும் வேகமாக முன்னேற்றம் செய்தார். அதன் பிறகு பிரபல டாக்டராக இருந்த அவருடைய மகன் ஏமில்லியூ என்பவரும் யெகோவாவுக்காக நிலைநிற்கை எடுத்து முழுக்காட்டுதல் பெற்றார். யெகோவாவின் பரிசுத்த ஆவியை உண்மையில் எதுவும் தடுத்து நிறுத்த முடியாது.
“யெகோவா எதை அனுமதிப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது”
1973-ல் பெல்ஜியத்தில், ப்ருஸ்ஸெல்ஸில் நடைபெற இருந்த “தெய்வீக வெற்றி” சர்வதேச மாநாட்டுக்கு வரும்படி ஷ்வாவ்வுக்கும் எனக்கும் அழைப்பு வந்தது. ஆயிரக்கணக்கில் ஸ்பானிய, பெல்ஜிய சகோதரர்கள் அங்கே வந்து குவிந்திருந்தார்கள்; மொசாம்பிக், அங்கோலா, கேப் வெர்டே, மடீரா, அஜோர்ஸ் போன்ற இடங்களிலிருந்தும் பிரதிநிதிகள் வந்திருந்தார்கள். நியூ யார்க்கிலுள்ள தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்த சகோதரர் நார் தன் முடிவான குறிப்புகளில் இவ்வாறு அறிவுரை கூறினார்: “யெகோவாவை தொடர்ந்து உண்மையுடன் சேவியுங்கள். யெகோவா எதை அனுமதிப்பார் என்பது உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அடுத்த சர்வதேச மாநாட்டை போர்ச்சுகலில் அனுபவிக்கலாம், யாருக்குத் தெரியும்!”
அடுத்த வருடமே போர்ச்சுகலில் பிரசங்க வேலைக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடைத்துவிட்டது. சகோதரர் நார் சொன்னது போலவே நடந்தது. 1978-ல், நாங்கள் எங்களுடைய முதல் சர்வதேச மாநாட்டை லிஸ்பனில் நடத்தினோம். லிஸ்பன் தெருக்களில் விளம்பர அட்டைகள் பிடித்தும், பத்திரிகைகள் அளித்தும் சாட்சி கொடுத்து, பொதுப் பேச்சுக்கு அழைப்பிதழ்களை விநியோகித்து அணிவகுத்துச் செல்லும்போது நாங்கள் மெய்சிலிர்த்துப் போனோம்! எங்கள் கனவு நனவானது.
போர்ச்சுகீசிய சகோதரர்களை நாங்கள் மிகவும் நேசித்தோம். இவர்களில் அநேகர் கிறிஸ்தவ நடுநிலைமையின் காரணமாக சிறை தண்டனை அனுபவித்திருக்கிறார்கள், அடிகளும் வாங்கியிருக்கிறார்கள். போர்ச்சுகலில் எங்கள் ஊழியத்தைத் தொடரவே ஆசைப்பட்டோம். ஆனால் அது நிராசையானது. 1982-ல் என் கணவருக்கு இருதய நோய் ஏற்பட்டது, பிரேஸிலுக்கு திரும்பும்படி கிளை அலுவலகம் எங்களுக்கு யோசனை அளித்தது.
சோதனை காலம்
பிரேஸில் கிளை அலுவலகத்தில் இருந்த சகோதரர்கள் அதிக அன்பும் ஆதரவும் காட்டினார்கள். சாவோ போலோ மாகாணத்தில், டாவ்பாட்டேயில் கிரிரிங் சபையில் சேவிக்கும்படி நாங்கள் அனுப்பப்பட்டோம். என் கணவரின் உடல்நிலை மோசமானது, கடைசியில் வீட்டிலிருந்து வெளியே இறங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆர்வமுள்ளவர்கள் வீட்டுக்கு வந்து பைபிள் படிப்பு படித்தார்கள், ஒவ்வொரு நாளும் வெளி ஊழியத்திற்கான கூட்டங்கள் வீட்டிலேயே நடைபெற்றன. வாராந்தர சபை புத்தகப் படிப்பும் இங்கேயே நடத்தப்பட்டது. இந்த ஏற்பாடுகள் எங்களுடைய ஆவிக்குரிய தன்மையைக் காத்துக்கொள்ள மிகவும் உதவின.
1985, அக்டோபர் 1-ம் தேதி மரிக்கும் வரை ஷ்வாவ் யெகோவாவின் சேவையில் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வந்தார். எனக்கு அதிக வருத்தமும் சோர்வும் ஏற்பட்டபோதிலும் ஊழியத்தைத் தொடருவதில் தீர்மானமாயிருந்தேன். ஏப்ரல் 1986-ல் கொள்ளையர்கள் என் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து எல்லாவற்றையும் சுருட்டிக்கொண்டு போனது எனக்கு மற்றொரு பேரிடியாக இருந்தது. முதன்முறையாக வாழ்க்கையில் தனிமையை உணர்ந்தேன், எனக்கு பயமாக இருந்தது. ஒரு தம்பதியினர் என்னை கொஞ்ச நாட்களுக்கு அவர்களுடைய வீட்டில் வந்து தங்கும்படி பரிவோடு அழைத்தார்கள். அதற்காக நான் அவர்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
என் கணவரின் மரணமும் வீடு கொள்ளையடிக்கப்பட்டதும் யெகோவாவுக்கு நான் செய்த சேவையையும் பாதித்தன. ஊழியத்தில் எனக்கிருந்த நம்பிக்கையெல்லாம் பறந்துவிட்டது. என் பிரச்சினையைக் குறித்து கிளை அலுவலகத்துக்கு எழுதியபோது, உணர்ச்சிப்பூர்வமாக மறுபடியும் சமநிலையை பெறுவதற்கு பெத்தேலில் கொஞ்ச காலம் தங்கியிருக்கும்படி அழைப்பு வந்தது. அது எவ்வளவு பலப்படுத்துவதாய் இருந்தது!
எனக்கு கொஞ்சம் தெம்பு வந்தபோது, சாவோ போலோ மாகாணத்தில் இப்புவா என்ற ஒரு நகரில் ஊழிய நியமிப்பை ஏற்றுக்கொண்டேன். பிரசங்க வேலையில் மும்முரமாக ஈடுபட்டேன், ஆனால் சில சமயங்களில் சோர்வு என்னை வாட்டியெடுக்கும். அந்தச் சமயங்களில் கிரிரிங்கிலுள்ள சகோதரர்களுக்கு நான் ஃபோன் செய்வேன், ஒரு குடும்பத்தார் சில நாட்களுக்கு என்னோடு தங்கியிருக்க வருவார்கள். அந்த சந்திப்புகள் உண்மையிலேயே எனக்கு உற்சாகம் அளித்தன! இப்புவாவுக்கு நான் சென்ற முதல் ஆண்டில் 38 சகோதர சகோதரிகள் நீண்ட தூரம் பயணப்பட்டு வந்து என்னைப் பார்த்துவிட்டு போனார்கள்.
1992-ல், என் கணவர் மரித்து ஆறு ஆண்டுகளுக்குப்பின், யெகோவாவின் அமைப்பிலிருந்து எனக்கு மற்றொரு அழைப்பு வந்தது, இந்த முறை சாவோ போலோ மாகாணத்தில் ஃபிரான்கா என்ற இடத்துக்கு செல்லும்படி சொல்லப்பட்டேன். இங்கேதான் இன்னமும் முழுநேர சேவையைத் தொடருகிறேன். நல்ல பலன் தரும் பிராந்தியம் இது. 1994-ல் மேயருடன் நான் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன். அந்தச் சமயம் அவர் பிரேஸிலியன் காங்கிரஸ்-ல் ஒரு இடம்பிடிக்க ஆலாய் பறந்துகொண்டிருந்தார். அவருக்கு ஏகப்பட்ட வேலை இருந்தபோதிலும் திங்கட்கிழமை பிற்பகலில் தவறாமல் படித்தார். தொந்தரவு செய்யாதிருக்க அந்தச் சமயத்தில் ஃபோன் அடிக்காதபடி கீழே எடுத்து வைத்துவிடுவார். அரசியலிலிருந்து படிப்படியாக விலகி, சத்தியத்தின் உதவியோடு தன் மண வாழ்க்கையை சீர்படுத்த பிரயாசப்படுவதை பார்த்தபோது நான் பெரிதும் மகிழ்ந்து போனேன்! அவரும் அவருடைய மனைவியும் 1998-ல் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.
என் கடந்த கால வாழ்க்கையை எண்ணிப் பார்க்கையில், முழுநேர ஊழியத்தில் பெற்ற ஆசீர்வாதங்களுக்கும் சிலாக்கியங்களுக்கும் கணக்கே இல்லை. தம்முடைய அமைப்பின் மூலம் யெகோவா விடுத்த அழைப்புகளை ஏற்றுக்கொண்டது உண்மையிலேயே பல வெகுமதிகளை எனக்கு அள்ளித் தந்திருக்கிறது. எதிர்காலத்தில் இனி அழைப்பு வந்தாலும் அதையும் ஏற்றுக்கொள்ள எப்போதும் போல் உறுதியாய் இருக்கிறேன்.
[பக்கம் 25-ன் படங்கள்]
1957-ல் முழுநேர ஊழியத்தை ஆரம்பித்தபோதும், இன்றும்
[பக்கம் 26-ன் படம்]
1963-ல் பிரேஸில் பெத்தேல் குடும்பத்துடன்
[பக்கம் 27-ன் படம்]
ஆகஸ்ட் 1965-ல் எங்கள் திருமணத்தின்போது
[பக்கம் 27-ன் படம்]
வேலை தடைசெய்யப்பட்டிருந்தபோது போர்ச்சுகலில் நடைபெற்ற ஒரு மாநாடு
[பக்கம் 28-ன் படம்]
1978 “வெற்றியுள்ள விசுவாசம்” சர்வதேச மாநாட்டில் லிஸ்பனில் தெரு ஊழியம்