அரசர்களின் மாதிரியைப் பின்பற்றுங்கள்
“நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்.”—உபாகமம் 17:20.
1. ஒரு கிறிஸ்தவர் யாரைப் போல் இருக்க விரும்பலாம்?
ஒருவேளை ஒரு ராஜாவாகவோ ராணியாகவோ உங்களை கற்பனை செய்து பார்க்க மாட்டீர்கள். உண்மையுள்ள கிறிஸ்தவராகவும் பைபிள் மாணாக்கராகவும் இருக்கும் யார்தான் விசுவாசமுள்ள ராஜாக்களான தாவீது, யோசியா, எசேக்கியா அல்லது யோசபாத் போல் அரசாளும் அதிகாரம் பெற்றவர்களாக தங்களை கற்பனை செய்து பார்ப்பார்கள்? எனினும் ஒரு விசேஷித்த விதத்திலாவது நீங்கள் அவர்களைப் போல் இருக்கலாம், இருக்கவும் வேண்டும். எந்த விதத்தில்? அந்த விதத்தில் அவர்களைப் போல் நீங்கள் ஏன் இருக்க வேண்டும்?
2, 3. மனித ராஜா சம்பந்தமாக கடவுள் எதை முன்னறிந்திருந்தார், அத்தகைய ராஜா என்ன செய்ய வேண்டியிருந்தது?
2 இஸ்ரவேலர் மனித ராஜாவைக் கொண்டிருக்க கடவுள் அங்கீகரிப்பதற்கு வெகு காலத்துக்கு முன்பு, மோசேயின் நாட்களிலேயே, ஒரு ராஜா தங்களை ஆளும்படி தம்முடைய மக்கள் ஆசைப்படுவார்கள் என்பதை கடவுள் முன்னறிந்திருந்தார். ஆகவே பொருத்தமான அறிவுரைகளை நியாயப்பிரமாண உடன்படிக்கையில் சேர்க்கும்படி மோசேயை அவர் ஏவினார். இவை அரசருக்குரிய அறிவுரைகளும் வழிமுறைகளும் ஆகும்.
3 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, . . . நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; . . . அவன் தன் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும்போது, . . . இந்த நியாயப்பிரமாணத்தின் எல்லா வார்த்தைகளையும், இந்தக் கட்டளைகளையும் கைக்கொண்டு, இவைகளின்படி செய்வதற்காகத் தன் தேவனாகிய கர்த்தருக்குப் பயந்திருக்கும்படி கற்றுக் கொள்ளும்பொருட்டு, . . . நியாயப்பிரமாண நூலைப்பார்த்து, தனக்காக ஒரு பிரதியை எழுதி, தன்னிடத்தில் வைத்துக்கொண்டு, தன் ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்கக்கடவன்” என கடவுள் சொன்னார்.—உபாகமம் 17:14-20.
4. அரசருக்குரிய அறிவுரைகளில் என்னவெல்லாம் உட்பட்டிருந்தன?
4 தம் வணக்கத்தாருக்காக யெகோவா தேர்ந்தெடுத்த ராஜா, பைபிளில் உள்ளவற்றை தனக்காக ஒரு பிரதி எழுதி வைத்திருக்க வேண்டும். அந்தப் பிரதியை ராஜா தினந்தோறும், திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டியிருந்தது. அது நினைவாற்றலை வளர்ப்பதற்கான பயிற்சி அல்ல. அது படிப்பதை அர்த்தப்படுத்தியது, அதற்கு பயனுள்ள நோக்கமும் இருந்தது. சரியான இருதய நிலையை வளர்த்துக்கொள்வதற்கும் காத்துக்கொள்வதற்கும், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றிருந்த ராஜா அவ்வாறு படிப்பது அவசியமாக இருந்தது. வெற்றிகரமான, விவேகமுள்ள அரசராக திகழ்வதற்கும் கடவுளால் ஏவப்பட்டு எழுதப்பட்ட இந்தப் புத்தகங்களை வாசிப்பது அவசியமாக இருந்தது.—2 இராஜாக்கள் 22:8-13; நீதிமொழிகள் 1:1-4.
ராஜாவைப் போல கற்றுக்கொள்ளுங்கள்
5. பிரதி எழுதுவதற்கும் வாசிப்பதற்கும் பைபிளின் எந்தப் புத்தகங்கள் தாவீது ராஜாவுக்கு இருந்தன, இதை அவர் எப்படி கருதினார்?
5 தாவீது இஸ்ரவேலின் ராஜாவாக ஆனபோது என்ன செய்யும்படி அவரிடம் எதிர்பார்க்கப்பட்டது என நினைக்கிறீர்கள்? அவர் ஐந்தாகம புத்தகங்களின் (ஆதியாகமம், யாத்திராகமம், லேவியராகமம், எண்ணாகமம், உபாகமம்) பிரதியைத் தனக்காக எழுத வேண்டியிருந்தது. தாவீது தன் சொந்த கண்களையும் கைகளையுமே பயன்படுத்தி நியாயப்பிரமாணத்தின் ஒரு பிரதியை எழுதியது, அவர் மனதையும் இருதயத்தையும் எவ்வளவாய் தொட்டிருக்கும் என்பதை சற்று எண்ணிப் பாருங்கள். யோபு புத்தகத்தையும் 90-ம், 91-ம் சங்கீதத்தையும்கூட மோசே எழுதியதாக தெரிகிறது. இவற்றையும் தாவீது பிரதி எடுத்திருப்பாரா? எடுத்திருக்கலாம். மேலும், யோசுவா, நியாயாதிபதிகள், ரூத் போன்ற புத்தகங்களும் அவரிடம் இருந்திருக்கலாம். எனவே வாசிப்பதற்கும் கிரகித்துக்கொள்வதற்கும் பைபிளின் பெரும் பகுதி தாவீது ராஜாவின் கைவசம் இருந்ததை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இன்று, சங்கீதம் 19:7-11-ல் காணப்படும் வசனங்களில் கடவுளுடைய நியாயப்பிரமாணத்தைப் பற்றி அவர் சொன்னதைக் கவனிக்கையில் அவ்வாறே வாசிக்கவும் கிரகிக்கவும் செய்திருப்பார் என நம்புவதற்கு நம்மிடம் ஆதாரம் உள்ளது.
6. தம் முற்பிதாவாகிய தாவீதைப் போலவே இயேசுவுக்கு வேத வசனங்களிடம் ஆர்வமிருந்தது நமக்கு எப்படி நிச்சயமாய் தெரியும்?
6 தாவீதின் குமாரனும் பெரிய தாவீதுமாகிய இயேசு இதே மாதிரியைப் பின்பற்றினார். வாரா வாரம் உள்ளூர் தேவாலயத்திற்குச் செல்வது இயேசுவின் வழக்கமாக இருந்தது. அங்கு வேதவசனங்கள் வாசிக்கப்பட்டு, விளக்கப்பட்டதைக் கேட்டார். மேலும், அவ்வப்போது இயேசுவே எல்லாருக்கும் முன்பாக கடவுளுடைய வார்த்தையை சத்தமாக வாசித்து அதன் பொருத்தத்தை விளக்கிக் காட்டினார். (லூக்கா 4:16-21) இதிலிருந்து வேதவசனங்களை அவர் நன்கு அறிந்திருந்ததை நீங்கள் எளிதில் புரிந்துகொள்ளலாம். சுவிசேஷ பதிவுகளை மட்டும் நீங்கள் வாசித்துவிட்டு, ‘எழுதியிருக்கிறது’ என இயேசு அடிக்கடி சொன்னதை அல்லது வேறு விதங்களில் அவர் பைபிளின் பிரத்தியேக பகுதிகளை குறிப்பிட்டு காட்டியதைக் கவனியுங்கள். சொல்லப்போனால், மத்தேயு எழுதி வைத்தபடி, மலைப்பிரசங்கத்தில் இயேசு எபிரெய வேதாகமத்திலிருந்து 21 முறை மேற்கோள் காட்டினார்.—மத்தேயு 4:4-10; 7:29; 11:10; 21:13; 26:24, 31; யோவான் 6:31, 45; 8:17.
7. மதத் தலைவர்களிலிருந்து இயேசு எப்படி வேறுபட்டிருந்தார்?
7 இயேசு, சங்கீதம் 1:1-3-லுள்ள பின்வரும் புத்திமதியைப் பின்பற்றினார்: ‘துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமல், . . . கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான். . . . அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.’ ‘மோசேயினுடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு’ ஆனால் ‘யெகோவாவின் வேதத்தை’ புறக்கணித்த அவருடைய நாட்களில் இருந்த மதத்தலைவர்களோடு ஒப்பிட எவ்வளவாய் அது வேறுபட்டிருந்தது!—மத்தேயு 23:2-4.
8. பைபிளை வாசித்த, படித்த யூத மதத் தலைவர்களுக்கு ஏன் எந்தப் பயனும் கிடைக்கவில்லை?
8 எனினும், பைபிள் படிப்பில் பயனில்லை என இயேசு சொன்னதுபோல் தோன்றும் ஒரு வசனத்தைக் கண்டு சிலர் குழப்பமடையலாம். தம் நாளில் இருந்த சிலரைக் குறித்து இயேசு சொன்னதை யோவான் 5:39, 40-ல் (திருத்திய மொழிபெயர்ப்பு) நாம் வாசிக்கிறோம்: “உங்களுக்கு வேதாகமங்களில் நித்தியஜீவன் உண்டென்றெண்ணி அவைகளை ஆராய்ந்து பார்க்கிறீர்கள்; என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகள் அவைகளே. அப்படியிருந்தும், உங்களுக்கு ஜீவன் உண்டாகும்படி என்னிடம் வர உங்களுக்கு மனதில்லை.” அப்படி சொல்வதன் மூலம் தமக்குச் செவிசாய்த்துக் கொண்டிருந்த யூதர்கள் வேத வசனங்களைப் படிப்பது பயனில்லாதது என இயேசு அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில் அவர்களுடைய மாய்மாலத்தை அல்லது முரண்பாட்டை வெட்டவெளிச்சம் ஆக்கிக்கொண்டிருந்தார். வேதவசனங்கள் தங்களை நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் என அவர்கள் அறிந்திருந்தார்கள், ஆனால் அவர்கள் ஆராய்ந்து வந்த அதே வசனங்களே அவர்களை மேசியாவாகிய இயேசுவிடம் வழிநடத்தியிருக்க வேண்டும். எனினும் அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். இப்படியாக, நேர்மையற்றவர்களாக, கற்றுக்கொள்ள மனமில்லாதவர்களாக இருந்ததால் அவர்களுடைய படிப்பால் எந்தப் பலனையும் அவர்கள் பெறவில்லை.—உபாகமம் 18:15; லூக்கா 11:52; யோவான் 7:47, 48.
9. அப்போஸ்தலர்களும் பூர்வ தீர்க்கதரிசிகளும் என்ன அருமையான முன்மாதிரியை வைத்தார்கள்?
9 அப்போஸ்தலர்கள் உட்பட இயேசுவின் சீஷர்கள் எந்தளவுக்கு வித்தியாசமானவர்களாய் இருந்தார்கள்! “[ஒருவரை] இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை” அவர்கள் படித்திருந்தார்கள். (2 தீமோத்தேயு 3:15) இந்த விஷயத்தில், “கருத்தாய் ஆராய்ந்து பரிசோதனை” செய்த பூர்வ தீர்க்கதரிசிகளைப் போல் அவர்கள் இருந்தார்கள். அந்தத் தீர்க்கதரிசிகள் சில மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்துக்கு தீவிர ஆராய்ச்சியில் ஒரு முறை இறங்கினால் போதுமென கருதவில்லை. அப்போஸ்தலன் பேதுரு சொல்கிறபடி, குறிப்பாக கிறிஸ்துவையும் மனிதகுலத்தை இரட்சிக்கும் அவருடைய பங்கில் உட்பட்டிருந்த மகிமையான காரியங்களையும் அவர்கள் “[“தொடர்ந்து,” NW] ஆராய்ந்தார்கள்.” தனது முதல் கடிதத்தில் பேதுரு, பத்து பைபிள் புத்தகங்களிலிருந்து 34 தடவை மேற்கோள் காட்டினார்.—1 பேதுரு 1:10, 11.
10. பைபிள் படிப்பதில் நாம் ஒவ்வொருவரும் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்?
10 எனவே, பூர்வ இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு, கடவுளுடைய வார்த்தையை கவனமாக படிப்பது கடமையாக இருந்தது தெளிவாக தெரிகிறது. இயேசு இந்த மாதிரியைப் பின்பற்றினார். பரலோகத்தில் கிறிஸ்துவுடன் அரசாளப் போகிறவர்களுக்கும் இதை படிக்க வேண்டிய பொறுப்பு இருந்தது. (லூக்கா 22:28-30; ரோமர் 8:17; 2 தீமோத்தேயு 2:12; வெளிப்படுத்துதல் 5:10; 20:6) அரசர்களின் இந்த மாதிரி, ராஜ்ய ஆட்சியின்போது பூமியில் ஆசீர்வாதங்களைப் பெற இன்று எதிர்நோக்கியிருக்கும் எல்லாருமே பின்பற்ற வேண்டிய ஒன்று.—மத்தேயு 25:34, 46.
ராஜாக்களுக்கும் உங்களுக்குமான பொறுப்புமிக்க பணி
11. (அ) படிப்பு சம்பந்தமாக என்ன ஆபத்து கிறிஸ்தவர்களுக்கு இருக்கிறது? (ஆ) என்ன கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும்?
11 ஒவ்வொரு உண்மை கிறிஸ்தவரும் பைபிளைத் தனிப்பட்ட விதத்தில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாகவும் வெளிப்படையாகவும் சொல்லலாம். யெகோவாவின் சாட்சிகளுடன் முதல் முதலாக நீங்கள் பைபிளைப் படிக்க ஆரம்பித்த போது மட்டுமே அப்படி படிப்பது அவசியமாக இருக்கவில்லை. அப்போஸ்தலன் பவுலின் நாட்களில், தனிப்பட்ட படிப்பை அசட்டை செய்ய ஆரம்பித்த சிலரைப் போல் இல்லாதிருக்க நாம் ஒவ்வொருவரும் தீர்மானமாய் இருக்க வேண்டும். அவர்கள் ‘கிறிஸ்துவைப் பற்றிச் சொல்லிய ஆரம்ப உபதேச வசனங்கள்’ போன்ற “கடவுளினுடைய வாக்கியங்களின் ஆரம்ப பாலபோதனைகளை” கற்றிருந்தார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து படிக்கவில்லை; இவ்வாறு “முதிர்ந்த நிலைமைக்கு முன்னே”றவில்லை. (எபிரேயர் 5:12-6:3, தி.மொ.) எனவே நம்மை நாமே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘கிறிஸ்தவ சபையோடு சமீப காலமாக அல்லது பல காலமாக கூட்டுறவு வைத்திருந்தாலும் கடவுளுடைய வார்த்தையைத் தனிப்பட்ட விதத்தில் படிப்பதை எப்படிக் கருதுகிறேன்? தன்னுடைய நாளிலிருந்த கிறிஸ்தவர்கள் தொடர்ந்து “தேவனை அறிகிற அறிவில் விருத்தியடை[ய]” வேண்டுமென பவுல் ஜெபித்தார். அதே ஆசை எனக்கு இருப்பதை வெளிக்காட்டுகிறேனா?’—கொலோசெயர் 1:9, 10.
12. கடவுளுடைய வார்த்தையிடம் தொடர்ந்து ஆர்வம் காட்டுவது ஏன் அவசியம்?
12 கடவுளுடைய வார்த்தையில் ஆர்வத்தை வளர்த்துக்கொள்வது, நல்ல படிப்பு பழக்கங்களைப் பின்பற்றுவதில் உட்பட்டுள்ள முக்கிய அம்சமாகும். கடவுளுடைய வார்த்தையைத் தவறாமலும் நோக்கமுள்ள விதத்திலும் தியானிக்கையிலேயே அதனிடம் பிரியம் ஏற்படும் என சங்கீதம் 119:14-16 சுட்டிக்காட்டுகிறது. நீங்கள் எவ்வளவு காலமாக கிறிஸ்தவராக இருந்தாலும் இது அவசியம். அதை வலியுறுத்திக் காட்டும் தீமோத்தேயுவின் உதாரணத்தை சற்று எண்ணிப் பாருங்கள். இந்த கிறிஸ்தவ மூப்பர் ஏற்கெனவே “கிறிஸ்து இயேசுவின் நல்ல போர்ச்சேவகனாக” சேவித்து வந்தாலும் ‘சத்திய வசனத்தை நேர்மையாய்ப் போதிக்கிறவராக’ இருப்பதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்படி பவுல் அவரைத் தூண்டுவித்தார். (2 தீமோத்தேயு 2:3, 15, தி.மொ.; 1 தீமோத்தேயு 4:15) உங்களால் ‘முடிந்த அனைத்தையும் செய்வது’ (NW) நல்ல படிப்பு பழக்கங்களைப் பின்பற்றுவதை உட்படுத்துவது தெளிவாக தெரிகிறது.
13. (அ) பைபிள் படிப்புக்கு அதிக நேரத்தை எப்படி கண்டடையலாம்? (ஆ) படிப்பதற்கு நேரத்தைப் பெற என்ன மாற்றங்களைச் செய்ய முடியுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?
13 பைபிள் படிப்புக்கு தவறாமல் நேரத்தை ஒதுக்குவது, நல்ல படிப்பு பழக்கங்களுக்கான ஒரு படியாகும். அதை எந்தளவுக்கு பின்பற்றி வருகிறீர்கள்? உங்களுடைய நேர்மையான பதில் என்னவாக இருந்தாலும், தனிப்பட்ட படிப்பிற்கு இன்னும் அதிக நேரம் செலவழிப்பதிலிருந்து பலன் பெறலாமென நினைக்கிறீர்களா? ‘அதற்கு நேரத்தை எப்படி நான் திட்டமிடலாம்?’ என நீங்கள் யோசிக்கலாம். காலையில் கொஞ்சம் முன்னதாகவே எழுந்திருப்பதன் மூலம் பலன் தரும் பைபிள் படிப்புக்கான நேரத்தை சிலர் அதிகரித்திருக்கிறார்கள். அவர்கள் பைபிளை 15 நிமிடம் வாசிக்கலாம் அல்லது தனிப்பட்ட விதத்தில் ஒன்றன்பேரில் ஆய்வு செய்து படிக்கலாம். மற்றுமொரு வழி இது: உங்களுடைய வாராந்தர அட்டவணையில் கொஞ்சம் மாற்றம் செய்வதைப் பற்றி என்ன சொல்லலாம்? உதாரணமாக, பெரும்பாலான தினங்களில் செய்தித்தாள் வாசிக்கும் அல்லது மாலை நேர செய்தியை டிவியில் காணும் பழக்கமிருந்தால் வாரத்தில் ஒரு நாள் அதைத் தவிர்க்க முடியுமா? அந்த நாளில் அந்த நேரத்தை கூடுதலாக பைபிள் படிக்க நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். வாரத்தில் ஒரு நாளில் செய்தியை அறிவதற்கு செலவிடும் சுமார் 30 நிமிடத்தை தனிப்பட்ட படிப்புக்காக ஒதுக்கினால் வருடத்தில் 25-க்கும் அதிக மணிநேரத்தை பெறுவீர்கள்! கூடுதலாக பைபிள் வாசிப்பதற்கு அல்லது படிப்பதற்கு கிடைக்கும் 25 மணிநேரத்தில் பெறும் பலன்களைப் பற்றி சற்று யோசித்துப் பாருங்கள்! மற்றொரு வழி இதோ: வரும் வாரத்தில் ஒவ்வொரு நாள் முடிவிலும் நீங்கள் செய்த வேலைகளை சற்று அலசிப் பாருங்கள். கூடுதல் பைபிள் வாசிப்புக்கு அல்லது படிப்புக்கு நேரத்தைப் பெறும்படி அதில் எதையாவது தவிர்க்க அல்லது குறைத்துக்கொள்ள முடியுமா என பாருங்கள்.—எபேசியர் 5:15, 16.
14, 15. (அ) தனிப்பட்ட படிப்புக்காக ஏன் இலக்குகள் வைப்பது முக்கியம்? (ஆ) பைபிள் வாசிப்பது சம்பந்தமாக என்ன நியாயமான இலக்குகளை வைக்கலாம்?
14 படிப்பை எளிதானதாகவும் அதிக சுவாரஸ்யமானதாகவும் ஆக்குவது எது? இலக்குகள். படிப்பு சம்பந்தமாக நடைமுறையான என்ன இலக்குகளை நீங்கள் வைக்கலாம்? முழு பைபிளையும் வாசித்து முடிப்பதே அநேகர் எட்ட விரும்பும் போற்றத்தக்க இலக்கு. ஒருவேளை இதுவரையாக அவ்வப்போது பைபிளின் சில பகுதிகளை வாசித்திருப்பீர்கள், அதிலிருந்து பயனடைந்திருப்பீர்கள். முழு பைபிளையும் வாசிக்கும் தீர்மானத்தை இப்போது நீங்கள் ஏற்க முடியுமா? இதைச் செய்வதற்கு, முதல் நான்கு சுவிசேஷங்களை வாசிப்பதை உங்கள் முதல் இலக்காக வைக்கலாம்; பின்பு கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மீதமுள்ள பகுதி முழுவதையும் வாசித்து முடிப்பதை உங்கள் இரண்டாவது இலக்காக வைக்கலாம். உங்களுக்கு திருப்தியும் பலன்களும் கிடைக்கையில் மோசே எழுதிய புத்தகங்களையும், சரித்திரப்பூர்வ விஷயங்கள் அடங்கிய எஸ்தர் வரையுள்ள புத்தகங்களையும் தொடர்ந்து வாசிப்பது உங்கள் அடுத்த இலக்காக இருக்கலாம். அதை முடித்த பின்பு மீதமுள்ள புத்தகங்களையும் முழுமையாக வாசித்து முடிப்பது உங்களுக்கு நடைமுறையானதாக தோன்றும். சுமார் 65 வயதுள்ள ஒரு பெண்மணி கிறிஸ்தவர் ஆனபோது, பைபிளை அவர் வாசிக்க ஆரம்பித்த தேதியையும், வாசித்து முடித்த தேதியையும் அதன் முதல் பக்கத்தில் எழுதி வைத்தார். இதுவரை அவர் ஐந்து முறை அதை வாசித்து முடித்திருப்பதை அந்தத் தேதிகள் காட்டுகின்றன! (உபாகமம் 32:45-47) மேலும் பைபிளை கம்ப்யூட்டர் திரையிலோ அல்லது பிரிண்ட் எடுத்தோ வாசிப்பதற்குப் பதிலாக கைகளில் எடுத்து வாசித்தார்.
15 பைபிளை முழுமையாக வாசித்து முடிக்கும் இலக்கை ஏற்கெனவே எட்டிய சிலர், தாங்கள் தொடர்ந்து படிப்பது பெருமளவு பயனுள்ளதாகவும் பலனளிப்பதாகவும் இருக்க மேலுமான வழிகளை முயன்றிருக்கிறார்கள். ஒவ்வொரு பைபிள் புத்தகத்தையும் வாசிப்பதற்கு முன்பு அது சம்பந்தமாக தேர்ந்தெடுக்கப்பட்ட தகவலை வாசிப்பது அதற்கு ஒரு வழி. ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது,’ வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) ஆகிய புத்தகங்களில் வரலாற்று பின்னணி, மொழிநடை, ஒவ்வொரு பைபிள் புத்தகத்திலிருந்து கிடைக்கும் பயன்கள் சம்பந்தமாக அருமையான தகவலை ஒருவர் பெறலாம்.a
16. பைபிள் படிப்பதில் யாரை பின்பற்றுவதை நாம் தவிர்க்க வேண்டும்?
16 பைபிள் கல்விமான்கள் என சொல்லிக்கொள்ளும் பலரைப் போல் நீங்கள் அதைப் படிக்க முயலாதீர்கள். பைபிளை ஏதோ மனிதன் எழுதியதைப் போல் அதன் பதிவை நுணுக்கமாய் ஆராய்வதில் அவர்கள் பெருமளவு கவனம் செலுத்துகிறார்கள். அவர்களில் சிலர் ஒவ்வொரு புத்தகமும் குறிப்பிட்ட தொகுதியினருக்காகவே எழுதப்பட்டதென தீர்மானிக்க முயலுகிறார்கள் அல்லது அந்த ஒவ்வொரு புத்தகத்தையும் எழுதிய மனித எழுத்தாளருக்கு ஒரு நோக்கமும் திட்டவட்டமான கருத்தும் இருந்திருக்கலாம் என கற்பனை செய்துகொள்கிறார்கள். இவ்வாறு மனித பகுத்தறிவின் அடிப்படையில் ஆராய்வதற்குக் காரணம், அந்த பைபிள் புத்தகங்களை சரித்திரமாக மட்டுமே கருதுகிறார்கள் அல்லது மத வளர்ச்சிக்கான அணுகுமுறையை பிரதிபலிப்பவையாக அவற்றை நோக்குகிறார்கள். பைபிள் புத்தகங்களில் மொழியாராய்ச்சி செய்வதுபோல் இன்னும் சில கல்விமான்கள் வார்த்தைகளை ஆய்வு செய்வதில் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறார்கள். கடவுளுடைய செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு பதிலாக, அவர்கள் மூல வார்த்தைகளை ஆராய்ந்து, எபிரெய, கிரேக்க அர்த்தங்களைக் கண்டுபிடிப்பதில் மூழ்கியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படிப்பு ஆழமான, செயல்பட தூண்டுவிக்கும் விசுவாசத்தை பிறப்பிக்குமென நினைக்கிறீர்களா?—1 தெசலோனிக்கேயர் 2:13.
17. பைபிளில் எல்லாருக்கும் பொதுவான செய்தி இருப்பதாக ஏன் கருத வேண்டும்?
17 கல்விமான்களின் முடிவுகள் சரியானவையா? பைபிளின் ஒவ்வொரு புத்தகத்திலும் ஒரேவொரு முக்கிய விஷயமே இருக்கிறது அல்லது அது ஒரு குறிப்பிட்ட தொகுதியினருக்காகவே எழுதப்பட்டிருக்கிறது என்பது உண்மையா? (1 கொரிந்தியர் 1:19-21) எந்தக் காலத்தில் வாழ்பவர்களுக்கும் எந்த பின்னணியைச் சேர்ந்தவர்களுக்கும் கடவுளுடைய வார்த்தையிலுள்ள புத்தகங்கள் நிரந்தர பலனளிப்பவை என்பது உண்மை. தீமோத்தேயு அல்லது தீத்து என ஒருவருக்காகவோ கலாத்தியர்கள் அல்லது பிலிப்பியர்கள் என ஒரு குறிப்பிட்ட தொகுதியினருக்காகவோ ஆரம்பத்தில் ஒரு புத்தகம் எழுதப்பட்டிருந்தாலும் நாம் அனைவரும் அந்தப் புத்தகங்களைப் படிக்கலாம், படிக்கவும் வேண்டும். நம் ஒவ்வொருவருக்கும் அவை முக்கியமானவை; ஒரு புத்தகம் பல பொருள்களை கலந்தாலோசிக்கலாம், பலதரப்பட்ட வாசகர்களுக்கு பலனளிக்கலாம். பைபிளின் செய்தி உலகிற்கே பொதுவானது என்பதுதான் உண்மை; இது, உலகெங்கும் உள்ள மக்களின் மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவதற்கான காரணத்தை நாம் புரிந்துகொள்ள உதவுகிறது.—ரோமர் 15:4.
உங்களுக்கும் மற்றவர்களுக்கும் கிடைக்கும் பலன்
18. கடவுளுடைய வார்த்தையை வாசிக்கையில் எதைக் குறித்து சிந்திக்க வேண்டும்?
18 நீங்கள் படிக்கையில் பைபிளைப் புரிந்துகொள்ள நாடுவதும், அதிலுள்ள விவரங்கள் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பதை காண முயலுவதும் அதிக பயனுள்ளதாக இருப்பதை அறிவீர்கள். (நீதிமொழிகள் 2:3-5; 4:7) தம்முடைய வார்த்தையின் மூலம் யெகோவா வெளிப்படுத்தியிருப்பவை அவருடைய நோக்கத்துடன் நெருங்கிய தொடர்புடையவை. எனவே நீங்கள் வாசிக்கையில் உண்மைகளையும் புத்திமதிகளையும் அதனுடன் தொடர்புபடுத்திப் பாருங்கள். ஒரு சம்பவம், ஒரு கருத்து, அல்லது ஒரு தீர்க்கதரிசனம் யெகோவாவுடைய நோக்கத்தோடு எப்படி சம்பந்தப்படுகிறது என்பதற்கு கவனம் செலுத்தலாம். உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இது யெகோவாவைப் பற்றி என்ன சொல்லுகிறது? அவருடைய ராஜ்யத்தின் மூலம் நிறைவேறவிருக்கும் அவருடைய நோக்கத்துடன் இது எப்படி சம்பந்தப்பட்டிருக்கிறது?’ இப்படியும் யோசித்துப் பார்க்கலாம்: ‘இந்தத் தகவலை நான் எப்படி பயன்படுத்தலாம்? வேத வசனங்களின் அடிப்படையில் போதிக்கையில் அல்லது புத்திமதி அளிக்கையில் அதை நான் பயன்படுத்த முடியுமா?’—யோசுவா 1:8.
19. நீங்கள் கற்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்கையில் யார் நன்மையடைகிறார்கள்? விளக்கவும்.
19 மற்றவர்கள் மீது அக்கறை காட்டுவது மற்றொரு விதத்திலும் பயனுள்ளதாக இருக்கிறது. நீங்கள் பைபிள் வாசிக்கையிலும் படிக்கையிலும் புதிய காரியங்களைக் கற்றுக்கொள்வீர்கள், விஷயங்களைப் புதிய கோணங்களில் பார்க்க ஆரம்பிப்பீர்கள். உங்கள் குடும்பத்தாரோடும் மற்றவர்களுடனும் உற்சாகமளிக்கும் விதத்தில் உரையாடுகையில் இந்த விஷயங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ள முயலுங்கள். பொருத்தமான சமயங்களில், அடக்கமான முறையில் இப்படி கலந்தாலோசிக்கையில் அவை பலனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. நீங்கள் கற்றதை அல்லது உங்களுக்கு சுவரஸ்யமாக இருந்த அம்சங்களை உண்மையோடும் உற்சாகத்தோடும் சொல்லுகையில் அத்தகைய தகவல் மற்றவர்களின் மனதைத் தொடலாம். அதுமட்டுமல்லாமல், அது தனிப்பட்ட விதத்திலும் பலனளிக்கும். எந்த விதத்தில்? ஒருவர் தான் கற்ற அல்லது படித்த விஷயம் மனதில் பசுமையாக இருக்கும்போதே அதை பயன்படுத்தும்போது அல்லது திரும்ப சொல்லும்போது—உதாரணமாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும்போது—அதை அவர் மறக்காமல் நெடுநாள் நினைவில் வைத்திருப்பார் என நிபுணர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.b
20. திரும்ப திரும்ப பைபிளை வாசிப்பது ஏன் பயனுள்ளது?
20 ஒவ்வொரு முறை பைபிள் புத்தகங்களைப் படிக்கையிலும் புதிய தகவலைக் கற்றுக்கொள்வீர்கள் என்பது நிச்சயம். முன்பு அந்தளவுக்கு உங்கள் மனதைக் கவராதிருந்த பகுதிகள் இப்போது கவர்ந்திழுப்பதைக் காண்பீர்கள். அந்த வசனங்களை இன்னும் நன்கு புரிந்துகொள்ள ஆரம்பிப்பீர்கள். மனிதர் எழுதிய ஏதோ புத்தகம் போல் இல்லாமல் பைபிள் புத்தகங்கள் நீங்கள் திரும்ப திரும்ப படித்து, பலனடைவதற்கு உகந்த பொக்கிஷங்களாய் இருப்பதை இது சிறப்பித்துக் காட்ட வேண்டும். தாவீது ராஜா போன்றோர் ‘ஜீவனுள்ள நாளெல்லாம் அதை வாசிக்க’ வேண்டியிருந்ததை நினைவில் வையுங்கள்.
21. கடவுளுடைய வார்த்தையை இன்னும் அதிகமாக படிக்கையில் நீங்கள் என்ன பலனை எதிர்பார்க்கலாம்?
21 பைபிளை கருத்தூன்றி படிப்பதற்கு நேரத்தை ஒதுக்குபவர்கள் பெருமளவு பயனடைகிறார்கள். அவர்கள் ஆவிக்குரிய இரத்தினங்களையும் உட்பார்வையையும் பெறுகிறார்கள். யெகோவாவுடனான அவர்களுடைய உறவு பலப்படுகிறது, நெருக்கமாகிறது. அவர்கள் குடும்பத்திலுள்ளவர்களுக்கும், கிறிஸ்தவ சபையிலுள்ள சகோதர சகோதரிகளுக்கும் யெகோவாவின் வணக்கத்தாராக இனி ஆகப்போகிறவர்களுக்கும் அதிக மதிப்புமிக்கவர்களாகவும் ஆகிறார்கள்.—ரோமர் 10:9-14; 1 தீமோத்தேயு 4:16.
[அடிக்குறிப்புகள்]
a படிப்புக்கு உதவும் இந்த உபகரணங்கள் யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டவை, பல மொழிகளில் கிடைப்பவை.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இஸ்ரவேலின் ராஜாக்கள் என்ன செய்யும்படி எதிர்பார்க்கப்பட்டார்கள்?
• பைபிள் படிப்பு சம்பந்தமாக இயேசுவும் அப்போஸ்தலர்களும் என்ன முன்மாதிரி வைத்தார்கள்?
• தனிப்பட்ட படிப்புக்குரிய நேரத்தை அதிகரிக்க என்ன மாற்றங்களை நீங்கள் செய்யலாம்?
• என்ன மனநிலையுடன் கடவுளுடைய வார்த்தையை நீங்கள் படிக்க வேண்டும்?
[பக்கம் 15-ன் பெட்டி]
“நம் கைகளில்”
“நமக்கு பைபிள் சொல் விளக்கப்பட்டியல் . . . வேண்டுமென்றால் இன்டர்நெட்டைவிட சிறந்த உபகரணம் வேறெதுவும் இருக்க முடியாது. ஆனால் நாம் பைபிளை வாசிக்கவும், அதைப் படிக்கவும், அதைக் குறித்து சிந்திக்கவும், அதை தியானிக்கவும் விரும்பினால், அது நம் கைகளில் தவழ வேண்டும்; நம்முடைய மனங்களிலும் இதயங்களிலும் அதிலுள்ளவற்றைப் பதிய வைப்பதற்கு அதுவே வழி.”—நியூ யார்க், சிட்டி யுனிவர்சிட்டியின் ஓய்வுபெற்ற பிரபல பேராசிரியை கர்ட்ரூட் ஹிம்மல்ஃபார்ப்.