ரோம சரித்திரம் புகட்டும் பாடம்
“நான் எபேசுவிலே துஷ்டமிருகங்களுடனே போராடினேனென்று மனுஷர் வழக்கமாய்ச் சொல்லுகிறேன்.” 1 கொரிந்தியர் 15:32-லுள்ள அந்த வார்த்தைகள் ரோம விளையாட்டு அரங்கில் சண்டையிடும்படி அப்போஸ்தலன் பவுல் தண்டிக்கப்பட்டதை அர்த்தப்படுத்துவதாக சிலர் நினைக்கிறார்கள். அவர் அப்படி தண்டிக்கப்பட்டாரோ இல்லையோ, அந்தச் சமயத்தில் விளையாட்டு அரங்குகளில் சாகும் வரை போராடுவது சகஜமானதாக இருந்தது. விளையாட்டு அரங்குகளையும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் பற்றி சரித்திரம் நமக்கு என்ன சொல்கிறது?
நவீன பொழுதுபோக்குகள் சம்பந்தமாக தீர்மானங்கள் எடுக்க உதவியாக, கிறிஸ்தவர்களாகிய நாம் யெகோவாவின் சிந்தனைக்கு ஏற்ப நம்முடைய மனசாட்சியை மாற்றியமைத்துக் கொள்ள விரும்புகிறோம். உதாரணமாக, “வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே” என்ற வார்த்தைகளில் வெளிப்படும் வன்முறை பற்றிய கடவுளுடைய எண்ணத்தை சற்று சிந்தித்துப் பாருங்கள். (நீதிமொழிகள் 3:31, பொ.மொ.) ரோம கேளிக்கை அரங்குகளில் நடைபெற்ற போட்டிகளைக் குறித்து ஆர்வம் காட்டிய ஆட்கள் மத்தியில் வாழ்ந்த ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்ட அந்தப் புத்திமதி கொடுக்கப்பட்டது. அத்தகைய நிகழ்ச்சிகளில் நடந்தவற்றை கலந்தாலோசிக்கையில் இன்று கிறிஸ்தவர்களுக்கு என்ன பாடம் தெள்ளத் தெளிவாக உள்ளது என்பதை நாம் கவனிப்போமாக.
ரோம அரங்கில் ஆயுதங்களுடன் இரண்டு சண்டை வீரர்கள் நேருக்கு நேர் மோதுகிறார்கள். கேடகத்தில் ஆரம்ப வீச்சுகள் விழுந்ததும் வெறிபிடித்த பார்வையாளர்கள் தங்கள் ஆதரவாளரை உற்சாகப்படுத்தும் விதத்தில் குரலெழுப்புகிறார்கள். அது கடும் மோதலாக இருக்கிறது. சீக்கிரத்தில், படுகாயமுற்ற, இனியும் தொடர்ந்து சண்டையிட முடியாத அவ்வீரர்களில் ஒருவன் தன் ஆயுதங்களை தூர வீசிவிட்டு நிராயுதபாணியாக மண்டியிடுகிறான்; இவ்வாறு தன் தோல்வியை ஒப்புக்கொண்டு, இரக்கம் காட்டும்படி கெஞ்சுகிறான். இப்போது பார்வையாளர்கள் போடும் கோஷம் உச்சக்கட்டத்தை எட்டுகிறது. கூட்டத்தாரில் சிலர் உயிர் பிச்சை அளிக்கும்படி கத்துகிறார்கள், மற்றவர்களோ கொல்லும்படி கூப்பாடு போடுகிறார்கள். எல்லாருடைய கண்களும் பேரரசரின் மீது பதிந்துள்ளது. கூட்டத்தாரின் விருப்பப்படி அவர் தோல்வியைத் தழுவிய வீரனை விடுதலை செய்யலாம் அல்லது கட்டைவிரலை கீழ்நோக்கி காட்டுவதன் மூலம் அவனுக்கு மரணத்தீர்ப்பு அளிக்கலாம்.
ரோமர்களுக்கு கேளிக்கை அரங்க காட்சிகளைக் காண்பதில் தீராத மோகம். அத்தகைய சண்டைகள் ஆரம்பத்தில் முக்கியப் பிரமுகர்களின் சவ அடக்கங்களில் நடைபெற்றதை அறிகையில் நீங்கள் ஆச்சரியப்படலாம். இன்றைய மத்திய இத்தாலியில் அன்று வாழ்ந்த ஆஸ்கன் அல்லது சம்நைட் இனத்தாரின் நரபலி பழக்கத்திலிருந்து இந்த போட்டிகள் ஆரம்பமானதாக நம்பப்படுகிறது. மரித்தோரின் ஆவிகளை சாந்தப்படுத்துவதற்காக அந்தப் பலிகள் செலுத்தப்பட்டன. அத்தகைய சண்டை, மூனுஸ் அல்லது “காணிக்கை” (பன்மை, மூனிரா) என அழைக்கப்பட்டது. ரோமில் முதலாவதாக பதிவாகியுள்ள விளையாட்டு பொ.ச.மு. 264-ல் நடைபெற்றது; அப்போது எருது சந்தையில் மூன்று ஜோடி வீரர்கள் மோதிக்கொண்டார்கள். மார்கஸ் ஏமைலிஸ் லெபடஸ் என்பவரின் சவ அடக்கத்தின் போது 22 ஜோடிகள் சண்டையிட்டனர். பியூப்ளியஸ் லைசினியஸின் சவ அடக்கத்தின் போது 60 ஜோடிகள் மோதிக்கொண்டனர். பொ.ச.மு. 65-ல், ஜூலியஸ் சீசர் சண்டையிடும்படி 320 ஜோடிகளை விளையாட்டு அரங்கிற்கு அனுப்பினார்.
“முக்கிய பிரமுகர்களின் சவ அடக்கங்கள் அரசியல் ஆதாயத்துக்காகவே நடத்தப்பட்டன; சவ அடக்க விளையாட்டுகள் வாக்காள பெருமக்களின் மத்தியில் பிரபலமாக இருந்ததால் . . . அரசியலுக்கு அவற்றோடு நெருங்கிய தொடர்பிருந்தது. புகழை நாடிய ஆளும் வர்க்கத்தின் முக்கிய பிரமுகர்கள் மத்தியில் நிலவிய அரசியல் போட்டா போட்டியே, விளையாட்டு அரங்க நிகழ்ச்சிகள் அதிக பிரபலமடைவதற்கு உண்மையில் காரணமாயின” என சரித்திராசிரியர் கீத் ஹாப்கின்ஸ் சொல்கிறார். அகஸ்டஸின் (பொ.ச.மு. 27 முதல் பொ.ச. 14 வரை) ஆட்சியில், பெரும் கூட்டத்தாரின் பொழுதுபோக்கிற்காக மூனிரா, வாரிவழங்கும் காணிக்கைகளாக ஆனது; பணம் படைத்த அரசாங்க அதிகாரிகள் தங்கள் அரசியல் பதவி எனும் ஏணியில் ஏறுவதற்கு அப்படி வாரியிறைத்தார்கள்.
போட்டியாளர்களும் பயிற்சியும்
‘யார் இந்த சண்டை வீரர்கள்?’ என நீங்கள் கேட்கலாம். அவர்கள் அடிமைகளாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளாக, போர் கைதிகளாக இருந்தார்கள் அல்லது ஆர்வத்தையோ பேரையும் புகழையும் பணங்காசையும் எதிர்பார்த்தோ வந்த சாதாரண ஜனங்களாக இருந்தார்கள். அவர்கள் அனைவரும் சிறைச்சாலைக்கு ஒத்த பள்ளிகளில் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். பயிற்சி பெறும் சண்டை வீரர்கள் “காவலர்களால் எப்போதும் கண்காணிக்கப்பட்டார்கள்; கடும் ஒழுங்கு, கட்டுப்பாடுமிக்க சட்டங்கள், முக்கியமாக கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டார்கள். . . . அவர்கள் இப்படி நடத்தப்பட்டது பெரும்பாலும் தற்கொலைக்கும், புரட்சிக்கும், கலகத்துக்கும் வழிநடத்தின” என ஜோகி யி ஸ்பெக்டாகலி (விளையாட்டுகளும் அரங்க காட்சிகளும்) என்ற புத்தகம் அறிக்கை செய்கிறது. ரோமின் அரங்க காட்சிகளுக்கான மிகப் பெரிய பயிற்சி பள்ளியில் சுமார் ஆயிரம் பேர் தங்குவதற்கு சிறிய அறைகள் இருந்தன. அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் பிரத்தியேக திறமை இருந்தது. சிலர் கவசம், கேடகம், வாள் ஆகியவற்றுடனும், மற்றவர்கள் வலை, மூன்று கவைமுட்கள் உடைய ஈட்டி ஆகியவற்றை வைத்தும் போரிட்டார்கள். இன்னும் சிலர் வேட்டையாடுதல் என்றழைக்கப்படும் மற்றொரு பிரபலமான நிகழ்ச்சியில் கொடிய மிருகங்களுடன் சண்டையிட பயிற்றுவிக்கப்பட்டார்கள். உண்மையில் இத்தகைய ஒரு நிகழ்ச்சியைப் பற்றியே பவுல் குறிப்பிட்டிருப்பாரோ?
நிகழ்ச்சியின் அமைப்பாளர்கள் இதை நடத்துபவர்களின் உதவியை நாடலாம்; அவர்கள் 17, 18 வயதுள்ளவர்களை சண்டை வீரர்களாக தேர்ந்தெடுத்து பயிற்சியளிப்பார்கள். மனித உயிர்களை வியாபாரம் செய்வது கொள்ளை லாபம் தந்தது. மாபெரும் ஒரு நிகழ்ச்சியில், போரின் வெற்றியைக் கொண்டாட 10,000 சண்டை வீரர்களையும் 11,000 மிருகங்களையும் டிரேஜன் கொடுத்தான்.
விளையாட்டு அரங்கில்—ஒருநாள்
விளையாட்டு அரங்கில் எப்போதும் காலை நேரம் வேட்டையாடுதலுக்கு ஒதுக்கப்பட்டது. எல்லா விதமான கொடிய மிருகங்களும் வலுக்கட்டாயமாக விளையாட்டு அரங்கிற்குள் கொண்டுவரப்படலாம். முக்கியமாய் காளையும் கரடியும் மோதுவதை பார்வையாளர்கள் பெரிதும் வரவேற்றார்கள். பெரும்பாலும் இந்த இரண்டு மிருகங்களும் சண்டையிட்டு அதில் ஒன்று சாகும்படி ஒன்றோடொன்று சேர்த்து கட்டப்பட்டிருக்கும்; உயிர் தப்பிய மிருகமோ பின்னர் வேட்டைக்காரனின் கையில் மடியும். பிரபலமான மற்ற போட்டிகளில், புலிகளை எதிர்த்து சிங்கங்கள் அல்லது கரடிகளை எதிர்த்து யானைகள் சண்டையிட்டன. பேரரசின் மூலை முடுக்கெல்லாம் போய், பண செலவைப் பாராமல் கொண்டு வந்த அரிய வேற்று நாட்டு மிருகங்களை—சிறுத்தைகள், காண்டாமிருகங்கள், நீர்யானைகள், ஒட்டகச்சிவிங்கிகள், கழுதைப்புலிகள், ஒட்டகங்கள், ஓநாய்கள், காட்டுப் பன்றிகள், மான்கள் போன்றவற்றை—கொன்று குவிப்பதில் வேட்டைக்காரர்கள் தங்கள் கைவரிசைகளைக் காட்டினார்கள்.
இயற்கை சூழல் போன்ற காட்சிகளை அமைத்தது அந்த வேட்டைகளை மறக்க முடியாதவை ஆக்கின. காடுகள் போல் காட்சியளிக்க பாறைகள், குளங்கள், மரங்கள் ஆகியவை அமைக்கப்பட்டன. சில காட்சி அரங்குகளில் மாயாஜாலத்தால் மிருகங்கள் தோன்றுவது போல காட்ட நிலத்தடி எலிவேட்டர்கள் மற்றும் பொறிக்கதவுகள் வழியாக அவை கொண்டுவரப்பட்டன. முன்கணிக்க முடியாத மிருகத்தின் சேஷ்டைகள் ஆர்வத்தைக் கிளறின. ஆனால் கொடூரமே அந்த வேட்டைகளை அதிக ஆர்வமுள்ளதாக்கியதாக தோன்றுகிறது.
நிகழ்ச்சியில் அடுத்து இடம் பெற்றவை மரணதண்டனைகள். இவை எதார்த்தமாய் இருப்பதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கட்டுக்கதை சார்ந்த நாடகங்கள் நடத்தப்பட்டன, அவற்றில் நடிகர்கள் நிஜமாகவே மரித்தனர்.
பொதுவாக பிற்பகல் நேரத்தில், வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்த சண்டை வீரர்கள், வித்தியாசமான ஆயுதங்களை ஏந்தியவர்களாக, மாறுபட்ட உத்திகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்களாக ஒருவரோடொருவர் சண்டையிட்டார்கள். பிணங்களை அரங்கிற்கு வெளியே இழுத்துச் சென்ற ஆட்கள் சிலர் கீழுலக தெய்வத்தைப் போல் உடுத்தியிருந்தனர்.
பார்வையாளர்களின் மீதான பாதிப்பு
சண்டையைப் பார்ப்பதற்கான பார்வையாளர்களின் தாகம் தணியாததாக இருந்தது; எனவே ஆர்வத்துடன் சண்டையிடாதவர்கள் சாட்டைகளால் அடிக்கப்பட்டு, சூடான இரும்புகளால் சூடுபோடப்பட்டு தூண்டுவிக்கப்பட்டார்கள். பார்வையாளர்கள் இப்படியாக கூப்பாடு போட்டார்கள்: “ஏன் பயந்தாங்கொள்ளி போல வாள் போர் புரிகிறான்? ஏன் சக்தியே இல்லாத நோஞ்சான்போல் தாக்குகிறான்? ஏன் சாக[முன்வர]வில்லை? நல்லா சண்டை போட சாட்டையால் விளாசுங்கள்! திறந்த மார்புகளில் வெட்டுக்கு பதில் வெட்டு வாங்கிக்கொள்ளட்டும்!” இடைவேளையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பைப் பற்றி செனிகா என்ற ரோம அரசியல் அறிஞர் இவ்வாறு எழுதுகிறார்: “இடைவேளையின் போது கொஞ்சம் கொலைகள் நிகழும், எனவே அப்போதும் சில நிகழ்ச்சிகளை அனுபவிக்கலாம்!”
“அதிக கொடூரமானவராக, மனிதத்தன்மை அற்றவராக” வீடு திரும்பியதாக செனிகா ஒத்துக்கொள்வதில் ஆச்சரியமேதுமில்லை. அந்தப் பார்வையாளர் வெளிப்படையாக ஒப்புக்கொண்ட அந்த உண்மை நாம் ஆழ்ந்து சிந்திப்பதற்கு உகந்தது. இன்றைய விளையாட்டு நிகழ்ச்சிகள் சிலவற்றை பார்க்கும் பார்வையாளர்கள் அதேபோல் பாதிக்கப்பட்டு, ‘இன்னும் கொடூரமானவர்களாக, மனிதத்தன்மை அற்றவர்களாக’ மாறுவார்களா?
தாங்கள் பத்திரமாக வீடு திரும்ப முடிந்ததை எண்ணி சிலர் சந்தோஷப்பட்டிருக்கலாம். டொமிஷியனை பற்றி ஒரு பார்வையாளர் நகைச்சுவையாக ஏதோ சொல்லிவிட்டதால் அவரை இருக்கையிலிருந்து தரதரவென இழுத்து சென்று நாய்களிடம் எறியும்படி செய்தார் அந்த பேரரசர். கொல்லுவதற்குப் போதுமான குற்றவாளிகள் இல்லாததால் பார்வையாளர்களின் ஒரு பகுதியினரைப் பிடித்து மிருகங்களிடம் வீசும்படி கலிக்யலா ஆணை பிறப்பித்தார். கிளாடியஸ் விரும்பியது போல் மேடையிலிருந்த இயந்திரம் இயங்காதபோது அதற்குப் பொறுப்பேற்றிருந்த மெக்கானிக்குகளை காட்சி அரங்கின் சண்டை களத்தில் இறங்கும்படி அவர் கட்டளையிட்டார்.
பார்வையாளர்களின் வெறிச்செயல்களும் பேரழிவுகளுக்கும் கலகங்களுக்கும் வழிநடத்தின. வடக்கு ரோமில், வட்ட வடிவுள்ள ஓர் அரங்கம் தரைமட்டமானது, ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததாக அறிக்கை செய்யப்பட்டது. பொ.ச. 59-ல், பாம்ப்பேயில் ஒரு நிகழ்ச்சியின் இடையே கலவரம் தலைதூக்கியது. உள்ளூர்க்காரர்களுக்கும் பக்கத்து ஊர் போட்டியாளர்களுக்கும் இடையே வாய் சண்டை ஆரம்பித்தது, பின் சரமாரியாக கற்கள் பறந்தன, அதன் பின் இறுதியில் வாள்கள் பேசத் தொடங்கின என டாசிட்டஸ் அறிக்கை செய்கிறார். அநேகர் முடமாக்கப்பட்டார்கள் அல்லது காயமுற்றார்கள், பலர் கொலை செய்யப்பட்டார்கள்.
தெள்ளத் தெளிவான பாடம்
ரோமில் கொலோசியத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கண்காட்சி (சங்குயி யி அரேனா, “இரத்தமும் மணலும்”) மூனிரா-வுக்கு இணையாக இன்று இருப்பவற்றை நினைப்பூட்டியது. காளை சண்டை, தொழில்முறை குத்துச்சண்டை, ஆட்டோ மற்றும் மோட்டார்-சைக்கிள் பந்தயத்தில் நிகழ்ந்த பயங்கரமான விபத்துகள், விளையாட்டுகளில் பயிற்சி பெற்ற வீரர்களின் மூர்க்கத்தனமான சண்டைகள், பார்வையாளர்களின் ஆர்ப்பாட்ட கைகலப்புகள் போன்றவற்றை சித்தரிக்கும் வீடியோ காட்சி தொகுப்புகள் அதில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. வானிலிருந்து எடுக்கப்பட்ட கொலோசியத்தின் படத்துடன் அந்த வீடியோ காட்சி முடிவடைந்தது. பார்வையாளர்கள் என்ன முடிவுக்கு வந்திருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? எவ்வளவு பேர் அதிலிருந்து பாடத்தைக் கற்றுக்கொண்டிருப்பார்கள்?
நாய் சண்டைகள், கோழி சண்டைகள், காளை சண்டைகள், வன்முறைமிக்க போட்டி விளையாட்டுகள் இன்றும் சில நாடுகளில் சர்வசாதாரணமாக நடைபெறுகின்றன. திரண்டு வந்திருக்கும் பார்வையாளர்களை மயிர்க்கூச்செறிய வைக்க உயிரையே பணயம் வைத்து மோட்டார் ரேஸில் ஆட்கள் துணிந்திறங்குகிறார்கள். தினசரி டெலிவிஷன் நிகழ்ச்சிகளை சற்று சிந்தித்துப் பாருங்கள். சாதாரணமாக டிவி பார்க்கும் ஒரு பிள்ளை பத்து வயதாவதற்குள் 10,000 கொலைகளையும், 1,00,000 வன்முறை செயல்களையும் பார்த்திருப்பான் என மேற்கத்திய நாடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டின.
அத்தகைய காட்சிகளால் கிடைக்கும் சந்தோஷம் “உண்மை மதத்துடனும் உண்மை கடவுளுக்கான உண்மையான கீழ்ப்படிதலுடனும் ஒத்துப் போவதில்லை” என மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளர் டெர்ட்டுலியன் சொன்னார். அதைப் பார்க்கப் போனவர்கள், கொலைகளை செய்தவர்களுக்கு உடந்தையாக இருந்ததாய் அவர் கருதினார். இன்றைய நிலை என்ன? ‘டிவியிலோ இன்டர்நெட்டிலோ வரும் இரத்தம், மரணம் அல்லது வன்முறை காட்சிகளைப் பார்த்து சந்தோஷப்படுகிறேனா?’ என ஒருவர் கேட்டுக்கொள்ளலாம். சங்கீதம் 11:5 (பொ.மொ.) இவ்வாறு சொல்வதை நினைவில் வைப்பது பயனுள்ளதாய் இருக்கும்: “ஆண்டவர் [யெகோவா] நேர்மையாளரையும் பொல்லாரையும் சோதித்தறிகின்றார்; வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கின்றார்.”
[பக்கம் 28-ன் பெட்டி]
“மரித்தோரை சாந்தப்படுத்த” சண்டைகள்
கேளிக்கை அரங்கில் நடைபெற்ற சண்டைகள் பிறந்த கதையைப் பற்றி மூன்றாம் நூற்றாண்டு எழுத்தாளர் டெர்ட்டுலியன் இவ்வாறு சொல்கிறார்: “அந்த நிகழ்ச்சியை மாற்றியமைத்து அக்கொடூரத்திற்கு நவநாகரிக முலாம் பூசி, இதன் மூலம் மரித்தவருக்கு தாங்கள் சேவை செய்ததாக முன்னாளைய மக்கள் எண்ணினார்கள். பண்டைய காலத்தில், மரித்தவர்களின் ஆத்துமாவை மனித இரத்தத்தால் சாந்தப்படுத்துவதாக நம்பி, வாங்கப்பட்ட கைதிகளையோ நோஞ்சான் அடிமைகளையோ சவ அடக்கங்களின் போது பலிகொடுத்தார்கள். பின்னர் இந்தச் செயலை மகிழ்வூட்டும் செயலாக்குவதன் மூலம் தங்கள் பாவத்தை மறைப்பது நல்லதாக பட்டது. எனவே ஆட்களை சேகரித்து, அன்றிருந்த ஆயுதங்களை பயன்படுத்த முடிந்தளவு திறம்பட்ட விதத்தில் அவர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்; அது அவர்களே கொலை செய்யப்படுவதற்கான பயிற்சி! பின்னர் குறிப்பிட்ட சவ அடக்க நாளில் கல்லறைகளில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இவ்வாறு, மரித்தோருக்கான ஆறுதலை அவர்கள் கொலையில் கண்டடைந்தார்கள். இதுவே மூனுஸ் பிறந்த கதை. ஆனால் கொஞ்ச காலத்திற்குப் பிறகு, நிகழ்ச்சியை நவநாகரிக முறையில் மாற்றம் செய்து எந்தளவுக்கு முன்னேறினார்களோ, அதே அளவுக்கு கொடூரத்தின் தன்மையிலும் முன்னேறினார்கள்; மனித உடல்களை குதறியெடுப்பதில் மூர்க்கம் நிறைந்த மிருகங்கள் தங்கள் கைவரிசையைக் காட்டாவிட்டால் அந்த விடுமுறை நாளின் மகிழ்ச்சி முழுமையடையாததாக கருதினார்கள். மரித்தோரை சாந்தப்படுத்த செலுத்தப்பட்ட காணிக்கை அந்திமச் சடங்காக கருதப்பட்டது.”
[பக்கம் 27-ன் படம்]
பூர்வ காட்சி அரங்க சண்டை வீரனின் தலைக் கவசமும் கால் கவசமும்
[பக்கம் 29-ன் படங்கள்]
ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் வன்முறை நிறைந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஏற்கத்தகாததாக கருதினார்கள். நீங்கள்?
[படங்களுக்கான நன்றி]
குத்துச்சண்டை: Dave Kingdon/Index Stock Photography; கார் மோதல்: AP Photo/Martin Seppala
[பக்கம் 26-ன் படத்திற்கான நன்றி]
Phoenix Art Museum, Arizona/Bridgeman Art Library