‘ஆவியில்’ கடவுளை தொழுதுகொள்ளுங்கள்
“யாருடைய சாயலாய் ஆண்டவரை ஆக்குவீர்கள்? எந்த உருவத்தை அவருக்கு அமைப்பீர்கள்?”—இசையாஸ் ஆகமம் [ஏசாயா] 40:18, தமிழ் “கத்தோலிக்க பைபிள்”
கடவுளை வணங்குகையில் உருவப் படங்களை பயன்படுத்துவதை அவர் ஏற்றுக்கொள்வார் என்று ஒருவேளை நீங்கள் மனதார நம்பலாம். மேலும், ஜெபத்தைக் கேட்கிறவர் பார்க்க முடியாதவராக இருப்பதாலும், தெளிவாக அறியவும் புரிந்துகொள்ளவும் முடியாதவராக தோன்றுவதாலும் உருவங்களை வைத்து வணங்குகையில் அவரிடம் நீங்கள் நெருங்கிச் செல்வதாக உணரலாம்.
ஆனால் கடவுளை அணுகுவதற்கு ஒரு முறையை நம் இஷ்டப்படி தேர்ந்தெடுத்து பின்பற்ற முழு சுதந்திரம் இருக்கிறதா? எது சரி எது தவறு என்பதைச் சொல்வதற்கு முழு அதிகாரம் கடவுளுக்கு அல்லவா இருக்கிறது? இவ்விஷயத்தில் கடவுளின் நோக்குநிலையை இயேசு இவ்வாறு விளக்கினார்: “நானே வழியும் உண்மையும் உயிரும். என் வழியாயன்றி எவனும் தந்தையிடம் வருவதில்லை.” (அருளப்பர் [யோவான்] 14:6)a உருவப் படங்களையோ வேறு எந்தப் புனித பொருட்களையோ பயன்படுத்துவதை தடை செய்வதற்கு இந்த வார்த்தைகளே போதுமானவை.
ஆம், குறிப்பிட்ட ஒரு வகை வணக்கத்தையே யெகோவா தேவன் ஏற்றுக்கொள்கிறார். அது எது? மற்றொரு சந்தர்ப்பத்தில் இயேசு இதை இவ்வாறு விளக்கினார்: “நேரம் வருகின்றது—ஏன், வந்தேவிட்டது;—அப்பொழுது மெய்யடியார்கள் ஆவியிலும் உண்மையிலும் பரம தந்தையைத் தொழுவார்கள். ஏனெனில், தம்மைத் தொழும்படி தந்தை இத்தகையோரையே தேடுகிறார். கடவுள் ஆவியானவர்; ஆதலால் அவரைத் தொழுபவர்கள் ஆவியிலும் உண்மையிலும்தான் அவரைத் தொழுதல் வேண்டும்.”—அருளப்பர் [யோவான்] 4:23, 24.
“ஆவி”யாக இருக்கும் ஒரு கடவுளை சடப்பொருளில் செய்யப்பட்ட ஒரு உருவத்தால் பிரதிநிதித்துவம் செய்ய முடியுமா? முடியாது. ஒரு உருவப் படம் எவ்வளவு அழகாக இருந்தாலும் அது கடவுளின் மகிமைக்கு ஒருபோதும் நிகராகாது. ஆகவே கடவுளை சித்தரிக்கும் ஓர் உருவப் படம் ஒருபோதும் அவருடைய உண்மையான உருவமாக இருக்க முடியாது. (உரோமையர் [ரோமர்] 1:22, 23) ஒருவர் மனிதனின் கைவண்ணத்தில் உருவான ஏதோவொரு உருவப் படத்தை வைத்து கடவுளை அணுகினால் அது அவரை ‘உண்மையில் தொழுவதாக’ இருக்குமா?
தெளிவான ஒரு பைபிள் போதனை
வணங்குவதற்கு உருவங்களை உண்டாக்குவதை கடவுளுடைய நியாயப்பிரமாணம் தடை செய்தது. பத்துக் கட்டளைகளில் இரண்டாவது கட்டளை இவ்வாறு சொன்னது: “மேலே வானத்திலும் கீழே பூமியிலும் பூமியின் கீழுள்ள தண்ணீரிலும் உள்ளவைகளுக்கு ஒப்பான ஓர் உருவத்தையேனும் யாதொரு விக்கிரகத்தையேனும் உனக்கு நீ உண்டாக்கிக் கொள்ள வேண்டாம். அவைகளை வணங்கித் தொழவும் வேண்டாம்.” (யாத்திராகமம் 20:4, 5) ஆவியின் ஏவுதலால் எழுதப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க வேதாகமமும் இதையே சொல்கிறது: “என் அன்புக்குரியவர்களே, சிலை வழிபாட்டை விட்டு விலகுங்கள்.”—1 கொரிந்தியர் 10:14.
உண்மைதான், தாங்கள் வணக்கத்தில் உருவங்களை உபயோகித்தாலும் அது விக்கிரகாராதனை இல்லை என்று அநேகர் வாதாடுகிறார்கள். உதாரணமாக, ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் உருவப் படங்களுக்கு முன் தலைகுனிந்து, முழங்கால் போட்டு, பிரார்த்தனை செய்தாலும், தாங்கள் உண்மையில் அவற்றை வணங்குவதில்லை என்று மறுப்பார்கள். ஒரு ஆர்த்தடாக்ஸ் பாதிரி இவ்வாறு எழுதினார்: “அவை புனித பொருட்களாக இருப்பதாலும் அவை பிரதிநிதித்துவம் செய்கிறவற்றை வணங்குவதாலும் அவற்றுக்கு மரியாதை செலுத்துகிறோம்.”
ஆனால் இந்தக் கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை: நேரடியாக இல்லாமல் இப்படி மறைமுகமாக வழிபட்டாலும் உருவப் படங்களை உபயோகிப்பதைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா? பைபிள் எந்த இடத்திலும் இப்படிப்பட்ட ஒரு பழக்கத்தை ஆதரிப்பதில்லை. இஸ்ரவேலர் யெகோவாவை வணங்குவதற்கென்று ஒரு கன்றுக்குட்டியின் உருவத்தை செய்தபோது அவர் வெகுண்டெழுந்தார். அவர்கள் துரோகம் செய்ததாக சொன்னார்.—யாத்திராகமம் 32:4-7.
மறைந்திருக்கும் ஆபத்து
வணங்குவதற்கு உருவப் படங்களைப் பயன்படுத்துவது ஆபத்தான ஒரு பழக்கம். அது பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லப்படும் அந்தக் கடவுளை வணங்குவதற்குப் பதிலாக அந்தப் பொருளையே வணங்கும்படி மக்களை எளிதில் திசை திருப்பிவிடலாம். வேறு வார்த்தைகளில் சொன்னால், விக்கிரக வணக்கத்தில் அந்த உருவப் படம் முக்கிய பொருளாகலாம்.
இஸ்ரவேலரின் நாட்களில் பல பொருட்கள் வணக்கத்துக்குரியவையாக ஆயின. உதாரணமாக, அவர்கள் வனாந்தரத்தில் பயணிக்கையில் மோசே ஒரு வெண்கல சர்ப்பத்தை உண்டுபண்ணினார். ஆரம்பத்தில், கம்பத்தின் மீதிருந்த சர்ப்பத்தின் உருவம், குணப்படுவதற்கு ஒரு வழியாக விளங்கியது. சர்ப்பம் தீண்டி தண்டிக்கப்பட்டவர்கள் வெண்கலச் சர்ப்பத்தை ஏறெடுத்துப் பார்த்து கடவுளுடைய உதவியைப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் குடியேறிய பின்பு, அடையாளமாக விளங்கிய அந்தக் கம்பத்தை ஒரு விக்கிரகமாகவே மாற்றிவிட்டனர். வெண்கல சர்ப்பத்துக்கே குணப்படுத்தும் சக்தி இருப்பதாக எண்ணினர். அதற்கு அவர்கள் தூபங்காட்டி நிகுஸ்தான் என்ற பெயரையும் சூட்டினர்.—எண்ணாகமம் 21:8, 9; 2 இராஜாக்கள் 18:4.
இஸ்ரவேலர் உடன்படிக்கைப் பெட்டியை அவர்களுடைய சத்துருக்களுக்கு எதிராக மந்திர சக்தி படைத்த ஒரு பொருளாகக்கூட பயன்படுத்த முயன்றனர். இதனால் பயங்கரமான விளைவுகளை சந்தித்தனர். (1 சாமுவேல் 4:3, 4; 5:11) எரேமியாவின் நாளில், எருசலேமின் குடிமக்கள் தாங்கள் வணங்கி வந்த கடவுளைவிட அங்கிருந்த தேவாலயத்திற்கே அதிக அக்கறை காட்டினர்.—எரேமியா 7:12-15.
கடவுளுக்குப் பதிலாக பொருட்களை வழிபடும் மனச்சாய்வு இன்றும் பிரபலமாக உள்ளது. ஆய்வாளர் விட்டாலி இவான்யிச் பெட்ரன்கோ இவ்வாறு சொன்னார்: “உருவப் படங்கள் . . . வணக்கத்துக்குரியவையாக, விக்கிரகங்களாக மாறும் ஆபத்து இருக்கிறது . . . உருவப் படங்களை வைத்து வணங்குவது பிரபல நம்பிக்கைகளின் அடிப்படையில் புறமதத்திலிருந்து வந்த பழக்கமே என்பதை ஒருவர் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.” அதேவிதமாகவே கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பாதிரி தீமீட்ரீயோஸ் கான்ஸ்டான்ட்டிலோஸ் கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச்சை புரிந்துகொள்ளுதல் (ஆங்கிலம்) என்ற தன் புத்தகத்தில் இவ்வாறு கூறுகிறார்: “உருவப் படங்களை வணக்கத்துக்குரிய பொருளாக ஒரு கிறிஸ்தவனால் மாற்ற முடியும்.”
வணங்குவது கடவுளைத்தான், அதற்கு உதவும் கருவிகள் மட்டுமே உருவப் படங்கள் என்று சொல்வது பெரும் சர்ச்சைக்குரியது. ஏன்? வெகு காலத்திற்கு முன்பு மரித்துவிட்ட மரியாள் அல்லது “புனிதர்”களின் நினைவாகவே உருவப் படங்கள் செய்யப்பட்டுள்ளன; அப்படியிருக்க, அவர்களை பிரதிநிதித்துவம் செய்யும் சில உருவப் படங்கள் மட்டும் மற்றவற்றைவிட அதிக பக்திக்குரியவையாக அல்லது விசேஷ சக்திக்குரியவையாக கருதப்படுவது உண்மையல்லவா? உதாரணமாக, கிரீஸில் டீனோஸ் என்ற இடத்தில் காணப்படும் மரியாளின் உருவப் படத்திற்கு ஆர்த்தடாக்ஸ் மக்கள் பேராதரவு அளிக்கின்றனர். மறுபட்சத்தில், கிரீஸின் வடபகுதியில் உள்ள சுமேலா துறவி மடத்திலுள்ள மரியாளின் உருவப் படத்திற்கும் பக்தர் கூட்டம் இருக்கிறது. இரண்டு இடங்களில் உள்ளவர்களும் தாங்கள் வணங்கும் மரியாளின் உருவப் படம்தான் மேம்பட்டது என்றும், மற்றதைக் காட்டிலும் பெரிய அற்புதங்களையெல்லாம் செய்யும் சக்தி படைத்தது என்றும் நம்புகின்றனர்; ஆனால் இரண்டுமே வெகு காலத்திற்கு முன்பு மரித்த அதே மரியாளைத்தான் பிரதிநிதித்துவம் செய்பவை. ஆகவே உண்மையைச் சொன்னால், சில உருவப் படங்களுக்கு விசேஷித்த சக்தியிருப்பதாக மக்கள் நம்புகின்றனர், அவற்றை வணங்கவும் செய்கின்றனர்.
மரியாளிடம் அல்லது “புனிதர்”களிடம் ஜெபிப்பதா?
ஆனால் மரியாள் அல்லது “புனிதர்”களை தொழுவதைப் பற்றி என்ன சொல்லலாம்? சாத்தானின் சோதனைக்குப் பதிலளிக்கையில், உபாகமம் 6:13-ஐ குறிப்பிட்டு இயேசு இவ்வாறு சொன்னார்: “உன் கடவுளாகிய ஆண்டவரை [“யெகோவாவை,” NW] வணங்கி அவரை மட்டுமே ஆராதிப்பாயாக.” (மத்தேயு 4:10) அதன் பிறகு அவர், உண்மை வணக்கத்தார் “பரம தந்தையை” தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார்கள் என்று கூறினார். (அருளப்பர் [யோவான்] 4:23) இதனால்தான், அப்போஸ்தலன் யோவான் ஒரு தேவதூதனை வணங்க முற்பட்டபோது “வேண்டாம், வேண்டாம்; . . . கடவுளையே தொழுதல் வேண்டும்” என்று கூறி அந்தத் தூதன் அவரை கடிந்துகொண்டார்.—திருவெளிப்பாடு [வெளிப்படுத்துதல்] 22:9.
நமக்காக கடவுளிடம் பரிந்துபேசும்படி இயேசுவின் பூமிக்குரிய தாயாகிய மரியாளிடம் அல்லது சில “புனிதர்”களிடம் விண்ணப்பிப்பது சரியா? பைபிளின் நேரடி பதில் இதோ: “கடவுளையும் மனிதரையும் இணைப்பவரும் ஒருவரே. இவர் மனிதனான இயேசு கிறிஸ்துவே.”—1 தீமோத்தேயு 2:5.
கடவுளோடு உங்கள் உறவைக் காத்துக்கொள்ளுங்கள்
வணக்கத்தில் உருவப் படங்களைப் பயன்படுத்துவது பைபிளின் தெளிவான போதனைக்கு விரோதமானதால், கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டு இரட்சிப்படைவதற்கு அது உதவ முடியாது. அதற்கு மாறாக, நாம் நித்திய ஜீவனைப் பெறுவதென்பது ஒரே மெய்க் கடவுளைப் பற்றிய அறிவைப் பெற்று வருவதை சார்ந்துள்ளது. ஈடிணையற்ற அவருடைய ஆளுமையையும், அவருடைய நோக்கங்களையும், மனிதரோடு அவருடைய நடவடிக்கைகளையும் அறிந்துகொள்வதை அது சார்ந்துள்ளது. (அருளப்பர் [யோவான்] 17:3) பார்க்கவும் உணரவும் பேசவும் முடியாத உருவப் படங்கள், கடவுளை அறிந்துகொள்ளவும் அவர் அங்கீகரிக்கும் முறையில் வணங்கவும் நமக்கு உதவா. (சங்கீதங்கள் 115:4-8) அதிமுக்கியமான அந்தக் கல்வி, கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளை படிப்பதால் மட்டுமே கிடைக்கும்.
உருவப் படங்களை வணங்குவதால் எந்த நன்மையும் இல்லை என்றாலும் அது ஆன்மீக ரீதியில் ஆபத்தானதும்கூட. எப்படி? மிக முக்கியமாக, யெகோவாவுடன் வைத்திருக்கும் உறவில் ஒரு விரிசலை அது ஏற்படுத்திவிடலாம். “அந்நிய தேவர்களை வணங்கியதனாலே . . . அருவருப்பானவைகளால் அவரது கோபத்தைத் தூண்டிவிட்ட” இஸ்ரவேலரைக் குறித்து கடவுள் இவ்வாறு முன்னுரைத்தார்: “எனது முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்வேன்.” (இணைச் சட்டம் [உபாகமம்] 32:16, 20, பொது மொழிபெயர்ப்பு.) அவர்கள் கடவுளோடு கொண்டுள்ள உறவை புதுப்பித்துக்கொள்வதற்கு, ‘பாவத்திற்குக் காரணமான சிலைகளை தூக்கி தொலைவில் எறிந்து’விட வேண்டியிருந்தது.—இசையாஸ் ஆகமம் [ஏசாயா] 31:6, 7.
அப்படியென்றால், ‘அன்புக் குழந்தைகளே, பொய்த் தேவர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’ என்ற பைபிளின் அறிவுரை எவ்வளவு பொருத்தமானது!—1 அருளப்பர் [யோவான்] 5:21.
[அடிக்குறிப்பு]
a மற்றபடி குறிப்பிடப்பட்டிருந்தால் தவிர எல்லா வேதவசனங்களும் தமிழ் கத்தோலிக்க பைபிளிலிருந்து எடுக்கப்பட்டிருக்கின்றன.
[பக்கம் 6-ன் பெட்டி]
‘ஆவியில்’ வணங்குவதற்கு உதவப்பட்டார்கள்
ஆலீவிரா என்பவர் அல்பேனியாவில் ஓர் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் மதப்பற்றுள்ள உறுப்பினராக இருந்தார். 1967-ல் அந்தத் தேசத்தில் மதத்திற்கு தடை விதிக்கப்பட்டது. ஆலீவிரா தன் மதத்தை இரகசியமாக கடைப்பிடித்து வந்தார். அவருக்குக் கிடைத்த அற்பசொற்ப ஓய்வூதியத்தில் பெரும் பாகத்தை, தங்கத்திலும் வெள்ளியிலும் உருவப் படங்களையும், கற்பூரத்தையும், மெழுகுவர்த்திகளையும் வாங்குவதற்கே செலவு செய்தார். இவற்றை யாரும் பார்த்துவிடக் கூடாது, திருடிவிடக் கூடாது என்ற பயத்தில் இவற்றை தன் படுக்கையின் அடியில் மறைத்து வைத்து, அதன் பக்கத்தில் ஒரு நாற்காலியைப் போட்டு அதில் அமர்ந்து உறங்குவார். 1990-களின் ஆரம்பத்தில் யெகோவாவின் சாட்சிகள் அவரை சந்தித்தனர். பைபிளிலுள்ள சத்தியத்தையே அவர்கள் சொல்கிறார்கள் என்பதை ஆலீவிரா புரிந்துகொண்டார். உண்மை வணக்கத்தார் எவ்வாறு ‘ஆவியில்’ வணங்குகிறார்கள் என்பதையும் உருவப் படங்களை உபயோகிப்பதை எவ்வாறு கருதுகிறார்கள் என்பதையும் கற்றுக்கொண்டார். (அருளப்பர் [யோவான்] 4:24, தமிழ் கத்தோலிக்க பைபிள்) ஆலீவிராவின் வீட்டிற்கு வரும் ஒவ்வொரு சமயமும் வீட்டிலிருந்த உருவப் படங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதை அவரோடு பைபிள் படிப்பு நடத்திய சாட்சி கவனித்தார். கடைசியில் ஒன்றுகூட இல்லை. முழுக்காட்டப்பட்ட பின்பு ஆலீவிரா இவ்வாறு சொன்னார்: “இன்று, ஒன்றுக்கும் உதவாத உருவப் படங்கள் என்னிடம் இல்லை, ஆனால் யெகோவாவின் பரிசுத்த ஆவி இருக்கிறது. உருவப் படங்களின் உதவி இல்லாமலே அவருடைய ஆவியை என்னால் பெற முடிவதற்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்.”
கிரீஸிலுள்ள லெஸ்வாஸை சேர்ந்த அதீனா ஒரு காலத்தில் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சில் மிகுந்த ஈடுபாடுமிக்கவர். சர்ச் பாடகர் குழுவில் இருந்ததோடு உருவப் படங்களை பயன்படுத்துவது உட்பட மத சம்பந்தமான எல்லா பாரம்பரிய பழக்கங்களையும் தவறாது கடைப்பிடித்து வந்தார். அவருக்கு கற்பிக்கப்பட்ட எல்லா விஷயங்களும் பைபிள் சொல்வதற்கு இசைவாக இல்லை என்பதைப் புரிந்துகொள்ள யெகோவாவின் சாட்சிகள் அவருக்கு உதவினார்கள். அது உருவப் படங்களையும் சிலுவைகளையும் பயன்படுத்துவதையும் உட்படுத்தியது. மதசம்பந்தமான இந்தப் பொருட்கள் எப்போது முதல் உபயோகத்திற்கு வந்தன என்பதைக் குறித்து தானே ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். பல்வேறு புத்தகங்களையும் முழுமையாக படித்து ஆராய்ந்த பின்பு, இந்தப் பொருட்கள் கிறிஸ்தவத்தில் ஆரம்பத்தில் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதியாக தெரிந்துகொண்டார். கடவுளை ‘ஆவியில்’ தொழுதுகொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு ஏற்பட்டதால், உருவப் படங்களின் விலைமதிப்பையும் பொருட்படுத்தாமல் அவற்றை தூக்கி எறிந்தார். என்றபோதிலும், கடவுளை ஆவியில் சுத்தமாகவும் அவர் ஏற்றுக்கொள்ளத்தக்க விதத்திலும் வணங்குவதற்கு எந்த நஷ்டத்தையும் ஆதீனா ஏற்க தயாராக இருந்தார்.—அப்போஸ்தலர் பணி [அப்போஸ்தலர்] 19:19, கத்.பை.
[பக்கம் 7-ன் பெட்டி/படம்]
உருவப் படங்கள் வெறும் கலைப்பொருட்களா?
சமீப ஆண்டுகளில், ஆர்த்தடாக்ஸ் மத உருவப் படங்களை உலகெங்குமுள்ள மக்கள் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு சேகரிப்பவர்கள் இவற்றை மத சம்பந்தப்பட்ட புனித பொருட்களாக கருதாமல், பைசான்டியன் கலாச்சாரத்தை படம்பிடித்துக் காட்டும் கலைப்பொருட்களாகவே கருதுகின்றனர். நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவரின் வீட்டிலோ அலுவலகத்திலோ இப்படிப்பட்ட மத உருவப் படங்கள் அலங்கார பொருட்களாக காட்சியளிப்பது சகஜம்.
ஆனால் உண்மை கிறிஸ்தவர்கள் உருவப் படத்தின் முக்கிய நோக்கத்தை மறந்துவிடுவதில்லை. அது வழிபாட்டுக்குரிய ஒரு பொருள். உருவப் படங்களை வைத்திருக்க மற்றவர்களுக்கு இருக்கும் உரிமையில் கிறிஸ்தவர்கள் தலையிடாத போதிலும் அவர்கள் அவற்றை கலைப்பொருட்களாகக்கூட சேகரிப்பதில்லை. இது உப ஆகமம் 7:26-ல் (தமிழ் கத்தோலிக்க பைபிள்) கூறப்பட்டுள்ள நியமத்துக்கு இசைவாக உள்ளது: “அந்த விக்கிரகங்களைப் போல் நீ சாபத்துக்கு உள்ளாகாதபடிக்கு, அவைகளில் யாதொன்றையும் உன் வீட்டிற்குக் கொண்டு போகத் துணியாதே. அது சாபத்திற்கேற்ற பொருளாதலால், நீ விக்கிரகத்தை அசுத்தமென்றும், தீட்டுள்ள அழுகலென்றும் வெறுத்து, அருவருத்துப் புறக்கணிக்கக்கடவாய்.”
[பக்கம் 7-ன் படம்]
வணக்கத்தில் உருவங்களை பயன்படுத்துவதை கடவுள் பொறுத்துக்கொள்ளவில்லை
[பக்கம் 8-ன் படம்]
பைபிள் அறிவு கடவுளை ஆவியில் தொழுதுகொள்ள நமக்கு உதவுகிறது