‘நல்லவர் கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுகிறார்’
அனைத்து ஜீவராசிகளையும் படைத்தவர் யெகோவா தேவன். (சங்கீதம் 36:9) ஆம், “அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப்போஸ்தலர் 17:28) அவருடன் நெருங்கிய உறவை வைத்திருப்போருக்கு அவர் அருளும் ஆசீர்வாதத்தை எண்ணிப் பார்க்கையில் நம்முடைய இருதயம் நன்றிப் பெருமிதத்தால் பொங்கி வழிகிறதல்லவா? ‘தேவனுடைய கிருபை வரமான நித்திய ஜீவனே’ அந்த ஆசீர்வாதம். (ரோமர் 6:23) அப்படியானால், யெகோவாவின் அங்கீகாரத்தை நாடுவது எவ்வளவு முக்கியம்!
‘கடவுள் கிருபையை [“தயவை,” NW] அருளுவதாக’ சங்கீதக்காரன் நமக்கு உறுதியளிக்கிறார். (சங்கீதம் 84:11) ஆனால் அதை அவர் யாருக்கு அருளுகிறார்? இன்று மக்கள் பெரும்பாலும் படிப்பு, பணம், நிறம், குலம், போன்றவற்றை அடிப்படையாக வைத்தே தயவு காட்டுகிறார்கள். ஆனால் கடவுள் யாருக்குத் தயவு காட்டுகிறார்? பூர்வ இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் இதற்குப் பதிலளிக்கிறார்: “நல்லவன் கர்த்தரிடத்தில் தயை [“அங்கீகாரம்,” NW] பெறுவான்; துர்ச்சிந்தனைகளுள்ள மனுஷனை அவர் ஆக்கினைக்குட்படுத்துவார்.”—நீதிமொழிகள் 12:2.
நல்லவர், அதாவது நற்பண்புள்ளவர் யெகோவாவுக்குப் பிரியமானவர் என்பது தெளிவாக தெரிகிறது. சுயசிட்சை, பட்சபாதமின்மை, மனத்தாழ்மை, இரக்கம், முன்னெச்சரிக்கை போன்ற பண்புகள் நல்லவரிடம் காணப்படும். அப்படிப்பட்டவரின் எண்ணங்கள் நீதியானவை, வார்த்தைகள் உற்சாகப்படுத்துபவை, செயல்கள் நியாயமும் பயனுமுள்ளவை. பைபிளில் நீதிமொழிகள் புத்தகத்தின் 12-ம் அதிகாரத்தின் முற்பகுதி, அன்றாட வாழ்க்கையில் நற்குணத்தை நாம் எப்படி வெளிக்காட்டலாம், அதனால் என்ன பயன்கள் என்பதைக் காட்டுகிறது. அதிலுள்ளதை ஆராய்ந்தால், நாம் ‘நன்மை செய்வதற்கு உட்பார்வையை’ கொடுக்கும். (சங்கீதம் 36:3, NW) அதன் ஞானமான புத்திமதியைப் பின்பற்றுவது கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற நமக்கு உதவும்.
சிட்சை முக்கியம்
“புத்திமதிகளை [“சிட்சையை,” NW] விரும்புகிறவன் அறிவை விரும்புகிறான்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவனோ மிருக குணமுள்ளவன்.” (நீதிமொழிகள் 12:1) தனிப்பட்ட விதத்தில் முன்னேற்றம் செய்ய விருப்பமிருப்பதால் நல்லவர் சிட்சையை ஆவலுடன் ஏற்றுக்கொள்கிறார். கிறிஸ்தவ கூட்டங்களில் அல்லது மற்றவர்களுடன் உரையாடுகையில் கேட்கும் புத்திமதியை உடனுக்குடன் பின்பற்றுகிறார். பைபிள் வசனங்களிலும், பைபிள் அடிப்படையிலான பிரசுரங்களிலும் உள்ள புத்திமதிகள், அவரை சரியான பாதையில் செல்ல தூண்டும் தாற்றுக்கோல்கள் போல் உள்ளன. அவர் அறிவை ஆர்வமாய் நாடுகிறார், தன் பாதையை சரிப்படுத்த அதைப் பயன்படுத்துகிறார். ஆம், சிட்சையை விரும்புகிறவர், அறிவையும் விரும்புகிறார்.
உண்மை வணக்கத்தாருக்கு சிட்சை, குறிப்பாக சுயசிட்சை எவ்வளவு அவசியம்! கடவுளுடைய வார்த்தையின் ஆழ அகலங்களில் கரைகண்டவர்களாகத் திகழ நாம் ஆசைப்படலாம். கிறிஸ்தவ ஊழியத்தில் அதிக பயனுள்ளவர்களாக, கடவுளுடைய வார்த்தையைப் போதிப்பதில் சிறந்து விளங்குபவர்களாக இருக்க விரும்பலாம். (மத்தேயு 24:14; 28:19, 20) ஆனால் அத்தகைய ஆசைகள் நிறைவேற சுயசிட்சை தேவைப்படுகிறது. வாழ்க்கையின் மற்ற அம்சங்களிலும் சுயசிட்சை தேவை. உதாரணமாக, வக்கிர ஆசைகளை உசுப்பிவிடும் ஏதுக்களே இன்று நாலா புறமும் குவிந்து கிடக்கின்றன. ஆபாச காட்சிகளைக் காணாதிருக்கும்படி கண்களைக் கட்டுப்படுத்த சுயசிட்சை தேவையல்லவா? மேலும், “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயது தொடங்கி பொல்லாததாயிரு”ப்பதால் ஒழுக்கக்கேடான எண்ணம் உள்மனதிலிருந்து எட்டிப் பார்ப்பது நிச்சயம். (ஆதியாகமம் 8:21) அப்படிப்பட்ட எண்ணத்தை மனதில் அசைபோடாதிருக்க சுயசிட்சை தேவை.
மறுபட்சத்தில் சிட்சையை வெறுப்பவன், சிட்சையையும்சரி அறிவையும்சரி, இவ்விரண்டையுமே விரும்புவதில்லை. சிட்சையை எதிர்க்கும் பாவமுள்ள மனித சுபாவத்திற்கு அவன் இடங்கொடுக்கையில் ஒழுக்க நெறிகள் இல்லாத மிருகம் போல ஆகிவிடுகிறான்; சிந்திக்கத் தெரியாத மிருகத்தின் தாழ்ந்த நிலைக்கு சென்றுவிடுகிறான். இச்சுபாவத்தை நாம் உறுதியாய் எதிர்க்க வேண்டும்.
“வேரோ அசையாது”
உண்மைதான், நல்லவன் அநீதியுள்ளவனாக அல்லது அநியாயம் செய்பவனாக இருக்க முடியாது. ஆகவே யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற நீதியும் அவசியம். “கர்த்தாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, காருணியம் என்னுங் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்துகொள்ளுவீர்” என தாவீது ராஜா பாடினார். (சங்கீதம் 5:12) நீதிமானின் நிலைமையை துன்மார்க்கனுடையதோடு வேறுபடுத்திப் பார்ப்பவராக சாலொமோன் சொல்கிறார்: “துன்மார்க்கத்தினால் மனுஷன் நிலைவரப்படான்; நீதிமான்களுடைய வேரோ அசையாது.”—நீதிமொழிகள் 12:3.
துன்மார்க்கன் செல்வ செழிப்போடிருப்பதாக தோன்றலாம். சங்கீதக்காரனாகிய ஆசாப்பின் அனுபவத்தைக் கவனியுங்கள். “என் கால்கள் தள்ளாடுதலுக்கும், என் அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பிற்று” என்கிறார். காரணம் என்ன? ஆசாப் இவ்வாறு பதிலளிக்கிறார்: “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.” (சங்கீதம் 73:2, 3) ஆனால் அவர் கடவுளுடைய ஆலயத்துக்கு வந்த போதோ, அவர்களை யெகோவா சறுக்கலான இடங்களில் நிறுத்தியிருப்பதை உணர்ந்துகொண்டார். (சங்கீதம் 73:16-18) துன்மார்க்கனுக்கு வெற்றி மேல் வெற்றி கிடைப்பது போல் தோன்றுவதெல்லாம் நிலையானதல்ல, தற்காலிகமானதே. அப்படியிருக்கையில் அவர்களைப் பார்த்து ஏன் பொறாமைப்பட வேண்டும்?
மாறாக, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்றவர் நிலைத்திருக்கிறார். இதை ஒரு மரத்தின் உறுதியான வேருடன் உருவகப்படுத்தி, “நீதிமான்களுடைய வேரோ அசையாது” என சாலொமோன் சொல்கிறார். (நீதிமொழிகள் 12:3) கலிபோர்னியாவின் செக்கோயா போன்று கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் மரத்தின் மறைவான வேர்கள், பல ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கும்; பெருவெள்ளத்தின் போதும், கடும் புயற்காற்றின் போதும் அது அசையாது. பயங்கரமான பூமியதிர்ச்சி வந்தாலும் வானளாவிய செக்கோயா மரம் தாக்குப்பிடித்து நிற்கும்.
வளமான மண்ணில் பிடிப்பை ஏற்படுத்திக் கொண்ட அத்தகைய வேர்களைப் போல, நம்முடைய மனமும் இருதயமும் கடவுளுடைய வார்த்தையில் உள்ள தகவலை கவனமாக ஆராய்வதற்கு நாலா புறமும் வேர் பரப்பி, ஜீவனளிக்கும் தண்ணீரை ஊறிஞ்ச வேண்டும். இவ்வாறு நம்முடைய விசுவாசம் ஆழமாக வேரூன்றப்பட்டு பலமாகும்; நம்முடைய நம்பிக்கை நிச்சயமானதாகவும், உறுதியானதாகவும் ஆகும். (எபிரெயர் 6:19) அப்போது, “[பொய்] போதகமாகிய பலவித காற்றினாலே . . . அலைகிறவர்களாய்” இருக்க மாட்டோம். (எபேசியர் 4:14) ஆனால் நிச்சயமாக, சீறிவரும் புயலைப் போன்ற சோதனைகளின் பாதிப்பை நாம் உணருவோம், துன்பத்தை எதிர்ப்படுகையில் கலங்கவும் செய்வோம். ஆனால் நம் “வேரோ அசையாது.”
“திறமையுள்ள மனையாள் கணவனின் கிரீடம்”
“ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு நல்ல பெண் இருக்கிறாள்” என்பது அநேகர் அறிந்த பொன்மொழி. மனைவியின் ஆதரவு எந்தளவுக்கு தேவை என்பதைக் குறிப்பிடுபவராக சாலொமோன் இவ்வாறு சொல்கிறார்: “திறமையுள்ள மனையாள் கணவனின் கிரீடம், இலச்சை வருவிப்பவள் அவன் எலும்புருக்கி.” (நீதிமொழிகள் 12:4, தி.மொ.) “திறமையுள்ள” என்ற வார்த்தையில் நற்குணத்தின் பல அம்சங்கள் அடங்கியுள்ளன. நீதிமொழிகள் 31-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளதைப் போல நல்ல மனைவியின் பண்புகளில் கடும் உழைப்பு, உண்மைத் தன்மை, ஞானம் ஆகியவையும் அடங்கும். இந்தப் பண்புகளை பெற்ற பெண் தன் கணவனுக்கு கிரீடமாக இருக்கிறாள்; காரணம், அவளுடைய நன்னடத்தை அவருக்கு மதிப்பும் மரியாதையும் அளித்து, மற்றவர் பார்வையில் அவரை உயர்த்திக் காட்டுகிறது. பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு அவள் கணவரை ஓரங்கட்டி, முண்டியடித்து முன்னேற முயல மாட்டாள் அல்லது அவரோடு போட்டி போட மாட்டாள். மாறாக கணவரின் குறைநிறைகளை பூர்த்தி செய்யும் உதவியாளாக இருப்பாள்.
தலைகுனிவை ஏற்படுத்தும் அளவுக்கு ஒரு பெண் எப்படி நடந்துகொள்ள முடியும், அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? சண்டை போடுவது முதற்கொண்டு விபசாரம் வரை எந்தச் செயலும் இந்தத் தலைகுனிவை ஏற்படுத்தலாம். (நீதிமொழிகள் 7:10-23; 19:13) மனைவியின் இத்தகைய செயல்கள் அவளுடைய கணவனுக்கு கெடுதலையே ஏற்படுத்தும். அவள் “அவன் எலும்புருக்கி” ஆகிறாள்; அதாவது ஒரு புத்தகம் சொல்வது போல், “ஒருவருடைய உருவத்தையே உருக்குலைக்கும் வியாதியைப் போல் அவள் அவருக்கு சீர்குலைவை ஏற்படுத்துகிறாள்.” “இன்று இதை விவரிக்க ‘புற்றுநோய்’ என்ற பதத்தை பயன்படுத்தலாம்; அதாவது மெல்ல மெல்ல தீவிரமடைந்து ஒருவரின் சக்தி முழுவதையும் படிப்படியாக உறிஞ்சிக் கொள்ளும் ஒரு வியாதி எனலாம்” என மற்றொரு புத்தகம் குறிப்பிடுகிறது. திறமையுள்ள மனைவிக்குரிய நற்பண்புகளை வெளிக்காட்டுவதன் மூலம் கடவுளின் அங்கீகாரத்தைப் பெற கிறிஸ்தவ மனைவிகள் முயலுவார்களாக.
எண்ணங்களால் செயல்களும், செயல்களால் விளைவுகளும்
எண்ணங்கள் செயல்களுக்கு வழிநடத்துகின்றன, செயல்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. நீதிமானையும் துன்மார்க்கனையும் ஒப்பிடுகையில் எண்ணங்கள் செயல்களாக மாறுவதை பின்வருமாறு சாலொமோன் அடுத்து விவரிக்கிறார். “நீதிமான்களுடைய நினைவுகள் [“எண்ணங்கள்,” NW] நியாயமானவைகள்; துன்மார்க்கருடைய ஆலோசனைகளோ சூதானவைகள். துன்மார்க்கரின் வார்த்தைகள் இரத்தஞ்சிந்தப் பதிவிருப்பதைப் பற்றியது; உத்தமர்களுடைய வாயோ அவர்களைத் தப்புவிக்கும்” என கூறுகிறார்.—நீதிமொழிகள் 12:5, 6.
நல்லவர்களின் எண்ணங்கள் ஒழுக்கநெறிக்கு இசைவானவை, பாரபட்சமில்லாத, நியாயமான காரியங்களிடம் வழிநடத்துபவை. கடவுளிடமும் மற்றவர்களிடமும் உள்ள அன்பு நீதிமான்களைத் தூண்டுவதால் அவர்களுடைய உள்நோக்கங்கள் நல்லவை. ஆனால் துன்மார்க்கரோ சுயநல தூண்டுதலால் செயல்படுகிறார்கள். எனவே அவர்கள் திட்டங்கள், அதாவது ஏதோவொன்றை அடைவதற்கு அவர்கள் வகுக்கும் வழிகள் மோசம் போக்குபவை, அவர்களுடைய செயல்களோ வஞ்சகமானவை. அப்படிப்பட்டவர்கள் பழிபாவமற்றவர்கள்மீது நீதிமன்றத்தில் பொய் குற்றஞ்சாட்டுவதன் மூலம் அவர்களுக்கு வலை விரிக்கவும் தயங்க மாட்டார்கள். குற்றமற்றவர்களுக்குக் கெடுதல் செய்யவே விரும்புவதால் அவர்களுடைய வார்த்தைகள் எப்போதும் ‘இரத்தம் சிந்தப் பதிவிருக்கின்றன.’ நீதிமான்களோ துன்மார்க்கரின் தந்திரங்களை அறிந்திருப்பதாலும் ஜாக்கிரதையாக இருக்க ஞானத்தைப் பெற்றிருப்பதாலும் இந்த வலைக்குள் சிக்காமல் தப்ப முடிகிறது. அதுமட்டுமல்ல, அஜாக்கிரதையுள்ளவரையும் அவர்கள் எச்சரிக்கலாம், துன்மார்க்கரின் சதித்திட்டங்களிலிருந்தும் அவர்களைக் காப்பாற்றலாம்.
நீதிமானுக்கும் துன்மார்க்கனுக்கும் இறுதியில் என்ன ஏற்படும்? “துன்மார்க்கர் கவிழ்க்கப்பட்டு ஒழிந்துபோவார்கள்; நீதிமான்களுடைய வீடோ நிலைநிற்கும்” என சாலொமோன் பதிலளிக்கிறார். (நீதிமொழிகள் 12:7) வீடு என்பது வீட்டிலுள்ளவர்களையும், திருப்தியாக வாழ ஒருவருக்கு உதவுகிற அனைத்தையும், அவர் நெஞ்சார நேசிக்கும் ஒவ்வொன்றையும் குறிக்கிறது” என ஓர் ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது, அது அந்த நீதிமானுடைய குடும்பத்தையும் அவருடைய சந்ததியாரையும்கூட குறிக்கலாம். எப்படியிருந்தாலும், நீதிமொழிகள் சொல்லும் குறிப்பு தெளிவானது: நீதிமான் கஷ்ட காலத்திலும் உறுதியாக நிலைத்திருப்பார்.
தாழ்மையுள்ளவர் நல்ல நிலையில் இருப்பார்
விவேகத்தின் மதிப்பை வலியுறுத்தி, இஸ்ரவேலின் ராஜா இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தன் புத்திக்குத்தக்கதாக [“விவேகத்துக்கிசைய,” NW] மனுஷன் புகழப்படுவான்; மாறுபாடான இருதயமுள்ளவனோ இகழப்படுவான்.” (நீதிமொழிகள் 12:8) விவேகமுள்ளவர் சிந்திக்காமல் வார்த்தைகளைக் கொட்ட மாட்டார். யோசித்துப் பேசுவார், தன் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்க ‘விவேகம்’ வழிநடத்துவதால் மற்றவர்களுடன் சுமுகமான உறவை அனுபவிக்கிறார். முட்டாள்தனமான அல்லது ஊகித்து பதிலளிக்க வேண்டிய கேள்விகளை எதிர்ப்படுகையில் விவேகமுள்ளவர் தன் ‘வார்த்தைகளை அடக்குகிறார்.’ (நீதிமொழிகள் 17:27) அப்படிப்பட்டவர் புகழப்படுவார், அவரில் யெகோவாவும் பிரியப்படுவார். மாறுபட்ட கருத்துக்களைக் கொட்டும் ‘மாறுபாடான இருதயமுள்ளவரிலிருந்து’ இவர் எவ்வளவு வித்தியாசமானவர்!
விவேகி பாராட்டப்படுகிறார், ஆனால் நீதிமொழிகளின் அடுத்த வசனம் மனத்தாழ்மையின் மதிப்பை நமக்குப் புகட்டுகிறது. “ஆகாரமில்லாதவனாயிருந்தும், தன்னைத்தான் கனம் பண்ணிக்கொள்ளுகிறவனைப் பார்க்கிலும், கனமற்றவனாயிருந்தும் பணிவிடைக்காரனுள்ளவன் உத்தமன்” என அது சொல்கிறது. (நீதிமொழிகள் 12:9) சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்வதற்காக அத்தியாவசிய தேவைகளுக்குரிய பணத்தை வாரியிறைக்கும் ஒருவரைவிட, பணங்காசு இல்லாவிட்டாலும் ஒரேவொரு பணிவிடைக்காரனோடு இருக்கும் மனத்தாழ்மையுள்ள ஒருவர் மேலானவர் என சாலொமோன் சொல்வதாக தெரிகிறது. உள்ளதைக் கொண்டு திருப்தியாக இருக்கும்படி சொல்லும் எப்பேர்ப்பட்ட பயனுள்ள புத்திமதி இது!
நற்பண்பைப் பற்றி பண்ணை வாழ்க்கை கற்பிக்கும் பாடங்கள்
பண்ணை வாழ்க்கையை உதாரணமாக பயன்படுத்தி சாலொமோன் நற்குணம் சம்பந்தமாக இரண்டு பாடங்களைக் கற்பிக்கிறார். “நீதிமான் தன் மிருக ஜீவனைக் காப்பாற்றுகிறான்; துன்மார்க்கருடைய இரக்கமும் கொடுமையே.” (நீதிமொழிகள் 12:10) நீதிமான் தன் மிருக ஜீவன்களை தயவோடு நடத்துகிறார். அவற்றின் தேவைகளை அறிந்திருக்கிறார், அவற்றின் நலனில் அக்கறை காட்டுகிறார். துன்மார்க்கனும் மிருக ஜீவன்கள் மீது அக்கறை காட்டுவதாக சொல்கிறான், ஆனால் அவற்றின் தேவைக்கு உண்மையில் சிரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அவனுடைய உள்நோக்கங்கள் சுயநலமிக்கவை, அந்த மிருகங்களை வைத்து லாபம் சம்பாதிப்பதன் அடிப்படையிலேயே அவற்றை அவன் நடத்துகிறான். அத்தகையவனுக்கு, மிருக ஜீவன்களை நன்கு பராமரிப்பது என்பது உண்மையில் கொடூரமாக நடத்துவதையே அர்த்தப்படுத்தலாம்.
மிருக ஜீவன்களை அன்போடு நடத்துவது என்பது செல்லப் பிராணிகளைக் கவனிப்பதற்கும் பொருந்துகிறது. செல்லப் பிராணிகள் என்ற பெயரில் மிருகங்களுக்கு அடைக்கலம் கொடுத்து, அவற்றை கண்டுகொள்ளாமலோ, மோசமாக நடத்தியோ அவற்றை இம்சிப்பது எத்தனை கொடூரமானது! மோசமான வியாதியாலோ காயத்தாலோ வேதனை தாங்க முடியாமல் ஒரு மிருகம் துடியாய் துடிக்கையில் அதைக் கொன்றுவிடுவதே ஜீவகாருண்யமாக இருக்கலாம்.
பண்ணை வாழ்க்கையின் மற்றொரு அம்சம் நிலத்தைப் பண்படுத்துதல்; அதைக் குறித்து சாலொமோன் சொல்வதாவது: “தன் நிலத்தைப் பயிரிடுகிறவன் ஆகாரத்தினால் திருப்தியடைவான்.” நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த பாடுபட்டு உழைக்கையில் உண்மையிலேயே நல்ல பலனை அறுவடை செய்ய முடியும். ஆனால் “வீணானவற்றை தேடியலைவோர் அறிவு அற்றவர்.” (நீதிமொழிகள் 12:11; பொது மொழிபெயர்ப்பு) ஞானமாய் தீர்மானம் செய்யவோ புரிந்துகொள்ளவோ முடியாததால் ‘அறிவு அற்றவன்,’ நேரத்தை வீணடிக்கிற, லாபம் கிடைப்பதாய் தோன்றும் ஆபத்துமிக்க, பயனற்ற வியாபாரத்தில் இறங்குகிறான். இந்த இரண்டு வசனங்களும் கற்பிக்கும் பாடங்கள் தெளிவானவை: இரக்கம் காட்டுங்கள், சுறுசுறுப்பாய் செயல்படுங்கள்.
நீதிமான் தழைப்பார்
“துன்மார்க்கன் துஷ்டருடைய வலையை விரும்புகிறான்” என ஞானியாகிய ராஜா சொல்கிறார். (நீதிமொழிகள் 12:12அ) துன்மார்க்கன் அதை எப்படி வெளிக்காட்டுகிறான்? குறுக்கு வழியில் சம்பாதித்த பொருட்களை விரும்புவதன் மூலம் வெளிக்காட்டுகிறான்.
நல்லவரைப் பற்றி என்ன சொல்லலாம்? அவர் சிட்சையை விரும்புகிறவர், விசுவாசத்தில் ஆழமாக வேரூன்றி இருக்கிறார். அவர் நீதியும் நியாயமுமானவர், விவேகமும் மனத்தாழ்மையும் உள்ளவர், இரக்க குணம் படைத்தவர், உழைப்பாளி. “நீதிமானுடைய வேர் கனி கொடுக்கும்” அல்லது “தழைக்கும்” என சாலொமோன் சொல்கிறார். (நீதிமொழிகள் 12:12ஆ; திருத்திய மொழிபெயர்ப்பு) ஆன் அமெரிக்கன் டிரான்ஸ்லேஷன் பைபிள் அதை இவ்வாறு மொழிபெயர்க்கிறது: “நீதிமானுடைய வேரோ நித்தியத்திற்கும் நிலைத்திருக்கும்.” அத்தகையவர் ஆழமாக வேரூன்றியவர், பாதுகாப்பாக இருப்பவர். சொல்லப்போனால், ‘நல்லவரே கடவுளின் அங்கீகாரத்தைப் பெறுகிறார்.’ எனவே நாம் ‘யெகோவாவை நம்பி நன்மை செய்வோமாக.’—சங்கீதம் 37:3.
[பக்கம் 31-ன் படங்கள்]
நீதிமானின் விசுவாசம் வளமான மரத்தைப் போல் ஆழமாக வேரூன்றியிருக்கும்