“யெகோவா எங்கே?” என்று நீங்கள் கேட்கிறீர்களா?
“என்னைவிட்டு தூர விலகிப்போனார்கள் . . . ‘யெகோவா எங்கே?’ என்றும் அவர்கள் கேட்கவில்லை.”—எரேமியா 2:5, 6, NW.
1. “கடவுள் எங்கே?” என்ற கேள்வியை கேட்கையில் மக்களின் மனதில் என்ன இருக்கலாம்?
“கடவுள் எங்கே?” என்ற கேள்வியை அநேகர் கேட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர், சிருஷ்டிகரைப் பற்றிய ஓர் அடிப்படை உண்மையை மட்டுமே, அதாவது அவர் எங்கே இருக்கிறார் என்பதை மட்டுமே அறிந்துகொள்ள முயன்றிருக்கிறார்கள். மற்றவர்களோ, ஒரு பேரழிவை அல்லது தனிப்பட்ட விதமாக பெருங்கஷ்டத்தை சந்திக்கையில் கடவுள் தங்களை ஏன் காப்பாற்றவில்லை என்பதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறார்கள். இன்னும் சிலர், கடவுள் இருப்பதையே ஏற்க மறுப்பதால் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.—சங்கீதம் 10:4.
2. கடவுளை தேடுவதில் வெற்றி பெற்றிருப்பது யார்?
2 என்றாலும், கடவுள் இருப்பதை நிரூபிக்கும் ஏராளமான அத்தாட்சிகளை அநேகர் ஏற்கிறார்கள். (சங்கீதம் 19:1; 104:24) இவர்களில் சிலர், ஏதாவது ஒரு மதத்தில் இருந்தாலே போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் எல்லா தேசங்களிலும் இருக்கும் லட்சக்கணக்கான மற்றவர்கள், சத்தியத்திற்கான ஆழ்ந்த அன்பின் காரணமாக உண்மை கடவுளை தேடிக் கண்டுபிடிக்க முயன்றிருக்கிறார்கள். “அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்ல” என்பதால் அவர்களுடைய முயற்சி வீண் போகவில்லை.—அப்போஸ்தலர் 17:26-28.
3. (அ) கடவுள் எங்கே வசிக்கிறார்? (ஆ) “யெகோவா எங்கே?” என்ற வேதப்பூர்வ கேள்வியின் அர்த்தம் என்ன?
3 ஒருவர் யெகோவாவை உண்மையில் கண்டுபிடிக்கையில், “தேவன் ஆவியாயிருக்கிறார்,” அதாவது மனித கண்களுக்கு புலப்பட மாட்டார் என்பதை புரிந்துகொள்கிறார். (யோவான் 4:24) உண்மை கடவுளை, ‘பரலோகத்தில் இருக்கிற என் பிதா’ என்று இயேசு குறிப்பிட்டார். அதன் அர்த்தம் என்ன? பூமியைவிட வானம் மிகவும் உயரத்தில் இருப்பதைப்போல நம் பரலோக தகப்பன் வசிக்கும் இடம் ஆவிக்குரிய கருத்தில் மிகவும் உயர்வானது என்பதைக் குறிக்கிறது. (மத்தேயு 12:50; ஏசாயா 63:15) நம் கண்களால் கடவுளை பார்க்க முடியாதபோதிலும் அவரையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி அதிகத்தை அறிந்துகொள்ள அவர் ஏற்பாடு செய்கிறார். (யாத்திராகமம் 33:20; 34:6, 7) வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள உண்மை மனமுள்ளோர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கிறார். வாழ்க்கை சம்பந்தப்பட்ட காரியங்களைப் பொறுத்ததில் அவருடைய நிலைநிற்கையை அறிய உறுதியான ஆதாரத்தை நமக்கு அளிக்கிறார்; அதாவது, அவற்றை அவர் எவ்வாறு நோக்குகிறார் என்றும், நம் விருப்பங்கள் அவருடைய நோக்கங்களுக்கு இசைவாக உள்ளனவா என்றும் அறிந்துகொள்ள உதவுகிறார். அவற்றைப் பற்றி நாம் கேள்வி கேட்க வேண்டும் என்றும், கேள்விகளுக்கான பதில்களைக் கண்டுபிடிக்க ஊக்கமாய் முயல வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். பூர்வ இஸ்ரவேல் தேசத்தார் இதைச் செய்ய தவறியதால் எரேமியா தீர்க்கதரிசி மூலம் யெகோவா அவர்களை கடிந்துகொண்டார். அவர்கள் கடவுளுடைய பெயரை அறிந்திருந்தும், “யெகோவா எங்கே?” என்று கேட்கவில்லை. (எரேமியா 2:6, NW) யெகோவாவின் நோக்கம் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கவில்லை. அவருடைய வழிநடத்துதலை அவர்கள் தேடவில்லை. நீங்கள் பெரிய, சிறிய தீர்மானங்களை செய்வதற்கு முன்பு, “யெகோவா எங்கே?” என்று கேட்கிறீர்களா?
கடவுளுடைய வழிநடத்துதலை நாடியவர்கள்
4. யெகோவாவின் வழிநடத்துதலை தேடும் விஷயத்தில் தாவீதின் உதாரணத்திலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
4 ஈசாயின் குமாரனாகிய தாவீது, இளைஞனாக இருந்தபோதே யெகோவாமீது உறுதியான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டார். யெகோவா ‘ஜீவனுள்ள தேவன்’ என்பதை அவர் அறிந்திருந்தார். யெகோவாவின் பாதுகாப்பை தன் வாழ்க்கையில் அனுபவித்திருந்தார். விசுவாசத்தாலும் ‘யெகோவாவின் பெயருக்கான’ அன்பாலும் தூண்டப்பட்ட தாவீது, அநேக ஆயுதங்கள் வைத்திருந்த பெலிஸ்த ராட்சதனாகிய கோலியாத்தை வீழ்த்தினார். (1 சாமுவேல் 17:26, 34-51) அவ்வாறு வெற்றி பெற்றபோதிலும் தாவீது தன்னம்பிக்கை மிக்கவராக மாறிவிடவில்லை. இனிமேல் எதை செய்தாலும் யெகோவா தனக்கு வெற்றி கொடுப்பார் என்று அவர் நினைக்கவில்லை. பின்னர் வந்த காலம் முழுவதும், தீர்மானங்கள் செய்வதற்கு முன்பு தாவீது திரும்பத் திரும்ப யெகோவாவின் வழிநடத்துதலை நாடினார். (1 சாமுவேல் 23:2; 30:8; 2 சாமுவேல் 2:1; 5:19) “கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும். உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள் முழுதும் காத்திருக்கிறேன்” என அவர் எப்போதும் ஜெபித்து வந்தார். (சங்கீதம் 25:4, 5) நாம் பின்பற்ற எவ்வளவு சிறந்த முன்மாதிரி!
5, 6. வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில் யோசபாத் எவ்வாறு யெகோவாவை தேடினார்?
5 தாவீதின் அரச வம்சத்தில் ஐந்தாவதாக வந்த யோசபாத் ராஜாவின் காலத்தில், மூன்று தேசங்களின் இராணுவங்கள் ஒன்றுசேர்ந்து யூதாவிற்கு எதிராக படையெடுத்து வந்தன. இந்த தேசிய அவசரநிலை ஏற்பட்டபோது யோசபாத் “கர்த்தரைத் தேடுகிறதற்கு ஒருமுகப்பட்”டார். (2 நாளாகமம் 20:1-3) யோசபாத் யெகோவாவை தேடியது இதுவே முதல் தடவை அல்ல. விசுவாச துரோக வட ராஜ்யமான இஸ்ரவேல், பாகால் வணக்கத்தில் மூழ்கியிருந்தபோது ராஜா அதை வெறுத்து ஒதுக்கி யெகோவாவின் வழிகளில் நடக்க தெரிவு செய்திருந்தார். (2 நாளாகமம் 17:3, 4) ஆகவே, இப்போது கடினமான சூழ்நிலையை சந்திக்கையில் யோசபாத் எவ்வாறு ‘கர்த்தரைத் தேடினார்’?
6 இந்த இக்கட்டான சூழ்நிலையில் எருசலேமில் பொது ஜெபம் ஒன்றுக்கு யோசபாத் ஏற்பாடு செய்தார்; யெகோவாவின் சர்வவல்லமையை தான் நினைவுகூர்ந்ததை அதில் குறிப்பிட்டார். அதோடு, யெகோவாவின் நோக்கத்தைப் பற்றியும் அவர் ஆழ்ந்து சிந்தித்தார்; மற்ற தேசத்தாரை துரத்திவிட்டு அவர்களுடைய நிலத்தை இஸ்ரவேலருக்கு சொந்தமாக கொடுப்பதில் யெகோவாவின் நோக்கம் வெளிப்பட்டது. யெகோவாவின் உதவி தனக்கு தேவை என்பதை ராஜா ஒப்புக்கொண்டார். (2 நாளாகமம் 20:6-12) அந்தச் சந்தர்ப்பத்தில், யோசபாத் தம்மை கண்டுபிடிக்க யெகோவா அனுமதித்தாரா? ஆம், அனுமதித்தார். லேவியனாகிய யகாசியேல் மூலம் யெகோவா குறிப்பான வழிநடத்துதல் கொடுத்தார்; அடுத்த நாள் தமது ஜனங்கள் வெற்றி பெற உதவினார். (2 நாளாகமம் 20:14-28) வழிநடத்துதலுக்காக யெகோவாவை தேடுகையில் நீங்களும் அவரைக் கண்டுபிடிக்க அவர் அனுமதிப்பார் என்பதைக் குறித்து எவ்வாறு நிச்சயமாக இருக்கலாம்?
7. யாருடைய ஜெபங்களை கடவுள் கேட்கிறார்?
7 யெகோவா பட்சபாதம் உள்ளவரல்ல. எல்லா தேசத்தாரும் ஜெபத்தில் தம்மை தேடும்படி அழைப்பு விடுக்கிறார். (சங்கீதம் 65:2; அப்போஸ்தலர் 10:34, 35) தம்மிடம் ஜெபிக்கிறவர்களின் இருதயத்தில் இருப்பவற்றை அவர் அறிந்திருக்கிறார். நீதிமான்களின் ஜெபத்தை கேட்பதாக அவர் நமக்கு உறுதியளிக்கிறார். (நீதிமொழிகள் 15:29) ஆரம்பத்தில் தம்மீது கொஞ்சமும் அக்கறையின்றி, ஆனால் இப்போது மனத்தாழ்மையோடு தம் வழிநடத்துதலை தேடும் சிலரும் தம்மை கண்டுபிடிக்க அவர் அனுமதிக்கிறார். (ஏசாயா 65:1) அதே சமயம், தம்முடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிய தவறி, ஆனால் இப்போது மனத்தாழ்மையோடு மனந்திரும்பியிருப்போரின் ஜெபங்களையும் அவர் கேட்கிறார். (சங்கீதம் 32:5, 6; அப்போஸ்தலர் 3:19, 20) இருந்தாலும், ஒருவரின் இருதயம் கடவுளுக்கு கீழ்ப்பட்டு இருக்கவில்லை என்றால் அவருடைய ஜெபங்கள் வீணானவை. (மாற்கு 7:6, 7) சில உதாரணங்களை கவனியுங்கள்.
அவர்கள் ஜெபித்தும் பதில் கிடைக்கவில்லை
8. அரசனாகிய சவுலின் ஜெபங்களை யெகோவா ஏற்காததற்கு காரணம் என்ன?
8 அரசனாகிய சவுல் கீழ்ப்படிய தவறியதால் யெகோவா அவரை நிராகரித்துவிட்டதை சாமுவேல் தீர்க்கதரிசி அவரிடம் சொன்ன பிறகு சவுல் யெகோவாவைப் பணிந்துகொண்டார். (1 சாமுவேல் 15:30, 31) ஆனால் அது வெறும் நடிப்பே. கடவுளுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்றல்ல, ஜனங்கள் முன்பாக மரியாதை பெற வேண்டும் என்றே சவுல் விரும்பினார். பின்னர், இஸ்ரவேலருக்கு எதிராக பெலிஸ்தர்கள் யுத்தம் செய்தபோது சவுல் கடமைக்காக யெகோவாவிடம் விசாரித்தார். என்றாலும், பதில் கிடைக்காத காரணத்தால் குறிசொல்லும் ஒரு பெண்ணை சந்தித்து பேசினார்; இப்பழக்கத்தை யெகோவா கண்டனம் செய்திருப்பதை அறிந்திருந்தும் அதைச் செய்தார். (உபாகமம் 18:10-12; 1 சாமுவேல் 28:6, 7) ‘சவுல் கர்த்தரைத் தேடவில்லை’ என 1 நாளாகமம் 10:13 சுருக்கமாக கூறுகிறது. ஏன்? ஏனெனில், அவர் விசுவாசத்தோடு ஜெபிக்கவில்லை. ஆகவே, அவர் ஜெபித்தும் ஜெபம் செய்யாதது போலவே இருந்தது.
9. யெகோவாவின் வழிநடத்துதலுக்காக சிதேக்கியா கேட்டதில் என்ன தவறு இருந்தது?
9 அதேவிதமாக, யூதா ராஜ்யத்தின் முடிவு நெருங்குகையில் அநேகர் ஜெபித்தார்கள், யெகோவாவின் தீர்க்கதரிசிகளிடமும் விசாரித்தார்கள். என்றாலும், யெகோவாவிற்கு பயப்படுவதாக சொல்லிக்கொண்ட ஜனங்கள் விக்கிரகாராதனையிலும் ஈடுபட்டு வந்தார்கள். (செப்பனியா 1:4-6) கடனுக்கு கடவுளிடம் விசாரித்தபோதிலும் அவருடைய சித்தத்திற்கு உண்மையோடு கீழ்ப்படியவில்லை. யெகோவாவிடம் விசாரிக்கும்படி சிதேக்கியா ராஜா எரேமியாவிடம் கெஞ்சினார். ராஜா என்ன செய்ய வேண்டும் என்பதை யெகோவா ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஆனால், ராஜா விசுவாசத்தில் குறைவுபட்டு மனித பயத்திற்கு அடிபணிந்ததால் யெகோவாவுக்கு கீழ்ப்படியாமல் போய்விட்டார்; எனவே ராஜாவுக்கு விருப்பமான வேறு எந்த பதிலையும் யெகோவா கொடுக்கவில்லை.—எரேமியா 21:1-12; 38:14-19.
10. யோகனான், யெகோவாவிடம் வழிநடத்துதல் கேட்ட விதத்தில் என்ன தவறு இருந்தது, அவருடைய தவறிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
10 எருசலேம் அழிக்கப்பட்டு, பாபிலோனிய படை வீரர்கள் யூத கைதிகளை பிடித்துச் சென்ற பிறகு யூதாவில் மீந்திருந்த சில யூதர்களை கூட்டிக்கொண்டு எகிப்திற்கு செல்ல யோகனான் தயாரானார். அவர்கள் திட்டம் தீட்டி முடித்திருந்தனர்; ஆனால், புறப்படுவதற்கு முன்பு தங்களுக்காக ஜெபிக்கும்படியும் யெகோவாவின் வழிநடத்துதலை கேட்கும்படியும் எரேமியாவிடம் கோரினர். என்றபோதிலும், தாங்கள் விரும்பிய பதில் கிடைக்கவில்லை என்பதால் தங்கள் திட்டப்படியே செயல்பட்டனர். (எரேமியா 41:16–43:7) யெகோவாவை தேடுகையில் அவர் உங்களுக்கு தென்பட நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றிய பயனளிக்கும் பாடங்களை இந்த நிகழ்ச்சிகளிலிருந்து உங்களால் கற்றுக்கொள்ள முடிகிறதா?
“தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்”
11. எபேசியர் 5:10-ஐ நாம் ஏன் பொருத்த வேண்டும்?
11 ஒப்புக்கொடுத்தலுக்கு அடையாளமாக முழுக்காட்டுதல் பெறுவது, சபை கூட்டங்களுக்கு செல்வது, பொது ஊழியத்தில் பங்குகொள்வது ஆகியவை மட்டுமே உண்மை வணக்கத்தில் அடக்கம் அல்ல. நம் முழு வாழ்க்கை முறையுமே உட்பட்டிருக்கிறது. தேவபக்தியுடன் வாழ்வதிலிருந்து நம்மை திசை திருப்பும் அநேக அழுத்தங்களை தினந்தோறும் எதிர்ப்படுகிறோம்; அவற்றுள் சில மறைமுகமானவை, மற்றவையோ நேரடியானவை. இவற்றை எவ்வாறு சமாளிப்போம்? எபேசுவிலிருந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், “கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் அவர்களை உற்சாகப்படுத்தினார். (எபேசியர் 5:10, NW) இதைச் செய்வது எவ்வளவு ஞானமானது என்பதை பைபிளில் பதிவு செய்யப்பட்டுள்ள அநேக நிகழ்ச்சிகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
12. தாவீது, உடன்படிக்கைப் பெட்டியை எருசலேமிற்கு எடுத்துச் செல்கையில் யெகோவா கோபப்பட காரணம் என்ன?
12 உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரவேலரிடம் திருப்பி கொடுக்கப்பட்டு கீரியாத்யாரீமில் பல வருடங்கள் வைக்கப்பட்டிருந்த பிறகு அதை எருசலேமிற்கு எடுத்துச் செல்ல தாவீது ராஜா விரும்பினார். அவர் ஜனங்களின் தலைவர்களோடு ஆலோசனை பண்ணி, ‘அவர்களுக்கு சம்மதமும் யெகோவாவுக்கு சித்தமும் இருந்தால்’ உடன்படிக்கைப் பெட்டியை அங்கிருந்து எடுத்துச் செல்லலாம் என்று கூறினார். இதைப் பற்றிய யெகோவாவின் சித்தத்தை அறிந்துகொள்ள தாவீது போதியளவு ஆராயவில்லை. அப்படி செய்திருந்தால், உடன்படிக்கைப் பெட்டியை வண்டியில் ஏற்றியிருக்கவே மாட்டார்கள். கடவுள் தெளிவாக கூறியிருந்தபடி, கோகாத்திய லேவியர்கள் அதை தங்கள் தோள்களில் சுமந்து சென்றிருப்பார்கள். தாவீது அடிக்கடி யெகோவாவிடம் விசாரித்தபோதிலும் இந்த சந்தர்ப்பத்தில் சரியான விதத்தில் விசாரிக்க தவறினார். அதன் விளைவு படுமோசமாக இருந்தது. “நாம் நம்முடைய தேவனாகிய கர்த்தரை நியாயமானபடியே தேடாதேபோனபடியினாலும், அவர் நமக்குள்ளே அடி விழப்பண்ணினார்” என தாவீதே பின்னர் ஒப்புக்கொண்டார்.—1 நாளாகமம் 13:1-3; 15:11-13; எண்ணாகமம் 4:4-6, 15; 7:1-9.
13. உடன்படிக்கைப் பெட்டி வெற்றிகரமாக எடுத்துச் செல்லப்படுகையில் பாடப்பட்ட பாடலில் என்ன நினைப்பூட்டுதல் அடங்கியிருந்தது?
13 ஒருவழியாக, லேவியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஓபேத்ஏதோமின் வீட்டிலிருந்து எருசலேமிற்கு சுமந்து வந்தபோது தாவீது இயற்றிய ஒரு பாடலை பாடினார்கள். “கர்த்தரையும் அவர் வல்லமையையும் நாடுங்கள்; அவர் சமுகத்தை நித்தமும் தேடுங்கள். அவர் செய்த அதிசயங்களையும் அவருடைய அற்புதங்களையும், அவர் வாக்கின் நியாயத்தீர்ப்புகளையும் நினைவுகூருங்கள்” என்ற உருக்கமான நினைப்பூட்டுதலும் அதில் அடங்கியிருந்தது.—1 நாளாகமம் 16:11, 13.
14. சாலொமோனின் நல்ல உதாரணத்திலிருந்தும் அந்திம காலத்தில் அவர் செய்த தவறுகளிலிருந்தும் நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 மரிப்பதற்கு முன்பு தாவீது தன் மகனாகிய சாலொமோனிடம், “நீ அவரைத் [யெகோவாவை] தேடினால் உனக்குத் தென்படுவார்” என்று அறிவுரை கூறினார். (1 நாளாகமம் 28:9) சாலொமோன் அரியணை ஏறிய பிறகு ஆசரிப்புக் கூடாரமிருந்த கிபியோனுக்கு சென்று யெகோவாவிற்கு பலி செலுத்தினார். அங்கிருக்கையில், “நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள்” என்று சாலொமோனிடம் யெகோவா கூறினார். சாலொமோன் கேட்டுக்கொண்டதற்கு இசைய இஸ்ரவேலை நியாயந்தீர்க்க அவருக்கு ஞானத்தையும் அறிவையும் யெகோவா தாராளமாக கொடுத்தார்; அதோடுகூட சம்பத்தையும் கனத்தையும் அளித்தார். (2 நாளாகமம் 1:3-12) தாவீதுக்கு யெகோவா கொடுத்த கட்டட திட்டங்களை வைத்து சாலொமோன் மகத்தான ஓர் ஆலயத்தைக் கட்டினார். ஆனால், தன்னுடைய திருமண விஷயத்தில் சாலொமோன் யெகோவாவைத் தேட தவறினார். யெகோவாவை வணங்காத பெண்களை அவர் மணந்தார். அவர்கள் அவருடைய அந்திம காலத்தில் யெகோவாவைவிட்டு அவருடைய இருதயத்தை சாயப்பண்ணினார்கள். (1 இராஜாக்கள் 11:1-10) நாம் எவ்வளவுதான் முக்கியமானவர்களாக, ஞானிகளாக அல்லது அறிவாளிகளாக தோன்றினாலும் சரி, ‘கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ள’ வேண்டியது முக்கியம்!
15. எத்தியோப்பியனாகிய சேரா யூதாவிற்கு எதிராக வந்தபோது, யெகோவா யூதாவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையோடு ஆசாவால் ஏன் ஜெபிக்க முடிந்தது?
15 சாலொமோனின் கொள்ளுப்பேரனான ஆசாவின் ஆட்சி பற்றிய பதிவு மூலம் இதற்கான தேவை மேலும் வலியுறுத்தப்படுகிறது. ஆசா ராஜாவாகி பதினோரு வருடங்கள் கழித்து எத்தியோப்பியனாகிய சேரா பத்து லட்சம் பேர் கொண்ட படையோடு யூதாவிற்கு எதிராக வந்தான். யெகோவா யூதாவை காப்பாற்றினாரா? தம் ஜனங்கள் தமக்கு கீழ்ப்படிந்து, தம்முடைய கட்டளைகளை கடைப்பிடித்தால் எதை எதிர்பார்க்கலாம் என்றும் கடைப்பிடிக்கவில்லை என்றால் எதை எதிர்பார்க்கலாம் என்றும் 500-க்கும் அதிக வருடங்களுக்கு முன்பே யெகோவா தெளிவாக கூறியிருந்தார். (உபாகமம் 28:1, 7, 15, 25) பொய் வணக்கத்திற்காக உபயோகிக்கப்பட்ட பலிபீடங்களையும் தூண்களையும் ஆசா தனது ஆட்சியின் ஆரம்பத்தில் நீக்கிப்போட்டார். ‘யெகோவாவை தேடும்படி’ ஜனங்களை அவர் உந்துவித்தார். பெரும் பிரச்சினையை எதிர்ப்படுவதற்கு முன்பே ஆசா இதைச் செய்தார். ஆகவே, தங்களை காப்பாற்றும்படி யெகோவாவிடம் நம்பிக்கையோடு ஆசாவால் ஜெபிக்க முடிந்தது. விளைவு? யூதாவுக்கு மகத்தான வெற்றி கிடைத்தது.—2 நாளாகமம் 14:2-12.
16, 17. (அ) ஆசா யுத்தத்தில் வெற்றிபெற்ற போதிலும் யெகோவா அவருக்கு என்ன நினைப்பூட்டுதலைக் கொடுத்தார்? (ஆ) ஆசா முட்டாள்தனமாக நடந்துகொண்டபோது அவருக்கு என்ன உதவி கொடுக்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்றுக்கொண்டாரா? (இ) ஆசாவின் நடத்தை பற்றி சிந்திப்பதால் நாம் எவ்வாறு பயனடையலாம்?
16 என்றபோதிலும், ஆசா வெற்றிபெற்று திரும்புகையில் யெகோவா அசரியாவை அனுப்பி ராஜாவிடம் கூறியது இதுவே: “ஆசாவே, யூதா பென்யமீன் கோத்திரங்களின் சகல மனுஷரே, கேளுங்கள்; நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.” (2 நாளாகமம் 15:2) இதனால் ஆசாவின் வைராக்கியம் தூண்டப்படவே அவர் மெய் வணக்கத்தை ஆதரித்தார். ஆனால், 24 வருடங்கள் கழித்து மறுபடியும் யுத்தத்தை எதிர்ப்பட்டபோது ஆசா யெகோவாவை தேட தவறினார். அவர் கடவுளுடைய வார்த்தையை ஆராயவில்லை, எத்தியோப்பிய படை யூதாவை தாக்கியபோது யெகோவா செய்ததை நினைவுகூரவும் இல்லை. அவர் முட்டாள்தனமாக சீரியாவோடு உடன்படிக்கை செய்தார்.—2 நாளாகமம் 16:1-6.
17 ஆகவே, ஆசாவை கடிந்துகொள்ள அனானி என்ற ஞானதிருஷ்டிக்காரனை யெகோவா அனுப்பினார். யெகோவாவின் நோக்குநிலை விளக்கப்பட்ட இந்தச் சந்தர்ப்பத்திலும்கூட ஆசா பயனடைந்திருக்கலாம். ஆனால், அவர் கடுங்கோபங்கொண்டு அனானியை காவலறையிலே போட்டார். (2 நாளாகமம் 16:7-10) எவ்வளவு வருத்தகரமானது! நம்மைப் பற்றி என்ன? கடவுளை தேடிவிட்டு ஆனால் ஆலோசனை கொடுக்கப்படுகையில் அதை ஏற்க மறுக்கிறோமா? நாம் இந்த உலக காரியங்களில் சிக்கிக்கொள்கிறோம் என்பதால், கரிசனையும் அன்பும் மிக்க ஒரு மூப்பர் பைபிளை உபயோகித்து நமக்கு ஆலோசனை கொடுக்கையில், “கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று” அறிந்துகொள்ள நமக்கு கிடைக்கும் அன்பான உதவிக்காக போற்றுதல் காட்டுகிறோமா?
கேட்க மறவாதீர்கள்
18. யோபுவிடம் எலிகூ சொன்னவற்றிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
18 பல வருடங்களாக யெகோவாவை உண்மையோடு சேவித்திருப்பவர்கூட அழுத்தம் ஏற்படுகையில் தவறிப்போக வாய்ப்புண்டு. யோபு அருவருப்பான நோயினால் தாக்கப்பட்டு, தன் பிள்ளைகளையும் செல்வங்களையும் இழந்து, நண்பர்களால் பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டபோது தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்க ஆரம்பித்துவிட்டார். “என் சிருஷ்டிகர்த்தாவாகிய தேவன் எங்கே என்று கேட்பவன் ஒருவனுமில்லை” என எலிகூ அவருக்கு நினைப்பூட்டினார். (யோபு 35:11) யோபு, யெகோவாமீது தனது கவனத்தை ஒருமுகப்படுத்தி காரியங்களை அவர் நோக்கும் விதத்தை அறிய வேண்டியிருந்தது. அந்த நினைப்பூட்டுதலை யோபு மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார், அவ்வாறே செய்ய அவருடைய உதாரணம் நமக்கு உதவலாம்.
19. இஸ்ரவேலர்கள் அடிக்கடி எதைச் செய்ய தவறினர்?
19 கடவுள் தங்கள் தேசத்தோடு வைத்திருந்த தொடர்புகளை இஸ்ரவேலர்கள் அறிந்திருந்தனர். ஆனால், தங்கள் வாழ்க்கையில் குறிப்பிட்ட சூழ்நிலைகளை சந்தித்தபோது அவர்கள் அவற்றை நினைவுகூரவில்லை. (எரேமியா 2:5, 6, 8) வாழ்க்கையில் தீர்மானங்கள் செய்ய வேண்டிய சமயங்களில், “யெகோவா எங்கே?” என்று கேட்பதற்கு பதிலாக தங்கள் சொந்த விருப்பத்தையே அவர்கள் செய்தனர்.—ஏசாயா 5:11, 12.
“யெகோவா எங்கே?” என எப்போதும் கேளுங்கள்
20, 21. (அ) யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடுவதில் எலிசா போன்ற மனநிலையை இன்று காண்பித்திருப்பது யார்? (ஆ) நாம் எவ்வாறு அவர்களுடைய விசுவாசத்தின் முன்மாதிரியை பின்பற்றி அதிலிருந்து பயனடையலாம்?
20 எலியாவின் பொது ஊழியம் முடிந்தபோது, அவரிடமிருந்து விழுந்த சால்வையை அவருடைய உதவியாளரான எலிசா எடுத்துக்கொண்டு, யோர்தான் நதிக்கு சென்று, “எலியாவின் தேவனாகிய கர்த்தர் எங்கே” என்று சொல்லித் தண்ணீரை அடித்தார். (2 இராஜாக்கள் 2:14) தமது ஆவி இப்போது எலிசா மீது இருப்பதை காண்பிப்பதன் மூலம் யெகோவா அதற்கு பதிலளித்தார். இதிலிருந்து நாம் கற்கும் பாடம் என்ன?
21 நவீன நாளிலும் அதைப் போன்ற ஒன்று சம்பவித்தது. பிரசங்க வேலையை முன்னின்று வழிநடத்திய அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களில் சிலர் பூமிக்குரிய வாழ்க்கையை முடித்து சென்றனர். மேற்பார்வை செய்யும் பொறுப்பை அப்போது பெற்றிருந்தோர் வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து வழிநடத்துதலுக்காக யெகோவாவிடம் ஜெபித்தனர். “யெகோவா எங்கே?” என்று கேட்க அவர்கள் தவறவில்லை. அதன் விளைவாக, யெகோவா எப்போதும் தமது மக்களை வழிநடத்தி அவர்களுடைய செயல்கள் செழித்தோங்க உதவியிருக்கிறார். அவர்களுடைய விசுவாசத்தை நாம் பின்பற்றுகிறோமா? (எபிரெயர் 13:7) பின்பற்றினால், நாம் யெகோவாவின் அமைப்போடு நெருக்கமாக நிலைத்திருந்து, அதன் வழிநடத்துதலை ஏற்று, இயேசு கிறிஸ்துவின் வழிநடத்துதலில் அது செய்துவரும் வேலையில் முழுமையாக பங்குகொள்வோம்.—சகரியா 8:23.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• “யெகோவா எங்கே?” என்று என்ன நோக்கத்தோடு நாம் கேட்க வேண்டும்?
• “யெகோவா எங்கே?” என்ற கேள்விக்கு இன்று நாம் எவ்வாறு விடை காணலாம்?
• கடவுளுடைய வழிநடத்துதலுக்காக செய்யப்படுகிற ஜெபங்களில் சிலவற்றிற்கு பதில் கிடைக்காததற்கு காரணம் என்ன?
• ‘கர்த்தருக்கு ஏற்கத்தகுந்தது இன்னதென்று தொடர்ந்து நிச்சயப்படுத்திக் கொள்ள’ வேண்டிய தேவையை பைபிளிலுள்ள என்ன உதாரணங்கள் சுட்டிக்காட்டுகின்றன?
[பக்கம் 9-ன் படம்]
யோசபாத் ராஜா யெகோவாவை எவ்வாறு தேடினார்?
[பக்கம் 10-ன் படம்]
சவுல், குறிசொல்லும் பெண்ணை சந்தித்து பேச காரணம் என்ன?
[பக்கம் 12-ன் படங்கள்]
‘யெகோவா எங்கே’ என்பதை கண்டுபிடிக்க ஜெபியுங்கள், படியுங்கள், தியானியுங்கள்