“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்”
அன்றும் இன்றும்—இருண்ட கடந்தகாலம், ஒளிமயமான எதிர்காலம்
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், . . . இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது.” (எபிரெயர் 4:12) கடவுளுடைய செய்திக்கு இருக்கிற ஊடுருவும் சக்தியைப் பற்றி இப்படித்தான் அப்போஸ்தலன் பவுல் கூறினார். இதயத்தை செல்வாக்கு செலுத்தும் அதன் திறமை முக்கியமாக பொ.ச. முதல் நூற்றாண்டில் தெள்ளத் தெளிவாக தெரிந்தது. அந்தச் சமயத்தில் நிலவிய மோசமான நிலைமைகள் மத்தியிலும், கிறிஸ்தவர்களாக மாறியவர்கள் புதிய ஆளுமையைத் தரித்துக்கொண்டார்கள்.—ரோமர் 1:28, 29; கொலோசெயர் 3:8-10.
பைபிளில் சொல்லப்பட்டபடி, ஒருவருடைய வாழ்க்கையை அடியோடு மாற்றும் சக்தி கடவுளுடைய வார்த்தைக்கு இருப்பது இன்றைக்கும் தெளிவாக தெரிகிறது. உதாரணமாக, ரிச்சர்டு என்ற வாட்ட சாட்டமான மனிதரை எடுத்துக்கொள்ளுங்கள். அவருக்கு மூக்குக்கு மேலே கோபம் வரும், அதனால் எதற்கெடுத்தாலும் அடிதடியில் இறங்கிவிடுவார். அவருடைய மூர்க்கத்தனம் அவருடைய வாழ்க்கையை சீரழித்தது. பாக்ஸிங் கிளப்பிலும்கூட ரிச்சர்டு சேர்ந்தார். பாக்ஸிங் நுணுக்கங்களை ஆர்வத்தோடு கற்றுக்கொண்டு, ஜெர்மனியில் வெஸ்ட்பாலியாவின் ‘ஹெவி-வெய்ட் பாக்ஸிங்’ சாம்பியனாக திகழ்ந்தார். ரிச்சர்டு ஒரு மொடாக் குடியரும்கூட, அதனால் அடிக்கடி காட்டுக் கத்தலுடன் கலாட்டாவில் இறங்கிவிடுவார். அப்படி ஒரு சமயம் ஓர் ஆள் கொலையே செய்யப்பட்டார்; இதனால் ரிச்சர்டு சிறைச்சாலைக்கு போகத் தெரிந்தார்.
ரிச்சர்டுவின் மணவாழ்வைப் பற்றியென்ன? “நானும் ஹைக்காவும் பைபிளைப் படிப்பதற்கு முன்பு அவரவருக்குப் பிடித்தமான வழியில் போனோம். ஹைக்கா எப்பொழுது பார்த்தாலும் அவளுடைய பிரெண்ட்ஸுகளுடன்தான் நேரத்தை செலவழிப்பாள். நானோ பாக்ஸிங், சர்ஃபிங், டைவிங் என என்னுடைய ஹாபிகளில் நேரத்தை செலவிட்டேன்” என ரிச்சர்டு சொல்கிறார்.
ரிச்சர்டும் ஹைக்காவும் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிள் படிக்க ஆரம்பித்தார்கள்; கடவுளுடைய வார்த்தையில் காணப்படும் உயர்ந்த தராதரங்களுக்கு இசைய வாழ்வதற்கு நிறைய மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணமே ரிச்சர்டுவை திணறடித்தது. இருந்தாலும், யெகோவா தேவனை பற்றி நன்றாக அறிந்துகொண்ட போதோ அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற பலமான ஆசை ரிச்சர்டுக்குள் வேர்விட்டு வளர ஆரம்பித்தது. வன்முறையை நேசிப்போரை அல்லது அதை ஒரு பொழுதுபோக்காக அனுபவிப்போரை கடவுள் அங்கீகரிக்க மாட்டார் என்பதை ரிச்சர்டு புரிந்துகொண்டார். ‘கொடுமையில் பிரியமுள்ளவனை [யெகோவாவின்] உள்ளம் வெறுக்கிறது’ என்பதை ரிச்சர்டு கற்றுக்கொண்டார்.—சங்கீதம் 11:5.
அதோடு, பூமியில் பரதீஸில் என்றென்றும் வாழும் நம்பிக்கை ரிச்சர்டுவையும் ஹைக்காவையும் கவர்ந்தது. அவர்கள் இருவரும் அங்கே வாழ விரும்பினார்கள்! (ஏசாயா 65:21-23) “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என்ற அழைப்பு ரிச்சர்டுவின் இதயத்தை ஆழமாகத் தொட்டது. (யாக்கோபு 4:8, NW) “வன்முறையாளரைக் கண்டு பொறாமை கொள்ளாதே; அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதே. ஏனெனில், நேர்மையற்றோரை ஆண்டவர் அருவருக்கின்றார்; நேர்மையாளரோடு அவர் உறவுகொள்கின்றார்” என்ற அறிவுரைக்கு செவிசாய்ப்பதன் மதிப்பை உணர்ந்துகொண்டார்.—நீதிமொழிகள் 3:31, 32, பொது மொழிபெயர்ப்பு.
தன்னுடைய வழிகளை மாற்றிக்கொள்ள வேண்டுமென்ற பலமான ஆசை இருந்தபோதிலும், தன்னுடைய சொந்த சக்தியால் அப்படி செய்ய முடியாது என்பதை ரிச்சர்டு உணர்ந்தார். ஜெபத்தில் கடவுளுடைய உதவியை நாடுவதன் அவசியத்தைக் கண்டார். ஆகவே, “நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம் பண்ணுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” என இயேசு தமது அப்போஸ்தலர்களுக்கு சொன்ன வார்த்தைகளுக்கு இசைய செயல்பட்டார்.—மத்தேயு 26:41.
வன்முறையையும் கோபத்தையும் பற்றிய கடவுளுடைய கண்ணோட்டத்தை கற்றுக்கொண்ட பிறகு, குத்துச்சண்டை கடவுள் ஏற்றுக்கொள்ளாத ஒரு போட்டி விளையாட்டு என்பதை ரிச்சர்டு தெளிவாக தெரிந்துகொண்டார். யெகோவாவின் உதவியாலும், அவருக்கு பைபிளை கற்றுக்கொடுத்தவர்கள் தந்த ஊக்கத்தாலும் வன்முறையிலிருந்து விடுபட்டார். குத்துச்சண்டையையும் ஆக்ரோஷத்துடன் சண்டை செய்வதையும் விட்டுவிட்டு, தன்னுடைய குடும்ப வாழ்க்கையை சீர்படுத்த தீர்மானித்தார். “எந்தவொரு காரியத்தையும் செய்வதற்கு முன்பு சற்று நின்று யோசித்துப் பார்க்க பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட சத்தியம் எனக்கு கைகொடுக்கிறது” என கூறுகிறார். இப்பொழுது இவர் சாந்தமான கண்காணியாக யெகோவாவின் சாட்சிகளுடைய ஒரு சபையில் இருக்கிறார். அவர் மேலும் கூறுகிறார்: “அன்பையும் மரியாதையையும் பற்றிய நியமங்களே மனைவியிடமும் பிள்ளைகளிடமும் நல்ல உறவை வைத்துக்கொள்ள இப்போது எனக்கு வழிகாட்டுகின்றன. அதனால் எங்கள் குடும்பத்தில் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது.”
தவறான தகவலை பெற்ற ஆட்கள் சிலர், குடும்பங்களை யெகோவாவின் சாட்சிகள் சிதைப்பதாக சிலசமயங்களில் குற்றம் சாட்டியிருக்கிறார்கள். ஆனால் ரிச்சர்டுவைப் போன்றவர்களுடைய உதாரணங்கள் அவர்களுடைய குற்றச்சாட்டு பொய் என்பதை நிரூபிக்கின்றன. உண்மையில், இருண்ட கடந்த காலத்தை அனுபவித்தவர்களுக்கு பைபிள் சத்தியம் குடும்பத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி ஒளிமயமான எதிர்காலத்தைக் கொடுக்க முடியும்.—எரேமியா 29:11, NW.
[பக்கம் 9-ன் சிறு குறிப்பு]
“பரதீஸிய பூமியைப் பற்றிய நம்பிக்கையே மாறும்படி என்னை தூண்டியது”
[பக்கம் 9-ன் பெட்டி]
பைபிள் நியமங்கள் செயலில்
மக்களுடைய வாழ்க்கையில் பைபிள் மிகுந்த செல்வாக்கு செலுத்த முடியும். மூர்க்கத்தனமானவர்கள் மாறுவதற்கு உதவிய பைபிள் நியமங்களில் சில இதோ:
“பலவானைப் பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் [“கோபிக்க தாமதிக்கிறவன்,” NW] உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப் பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.” (நீதிமொழிகள் 16:32) கட்டுக்கடங்காத கோபம் பலத்திற்கு அல்ல, பலவீனத்திற்கே அடையாளம்.
“மனுஷனுடைய விவேகம் அவன் கோபத்தை அடக்கும்.” (நீதிமொழிகள் 19:11) ஒரு சூழ்நிலைமையைப் பற்றிய உட்பார்வையும் புரிந்துகொள்ளுதலும் அடியில் மறைந்திருக்கும் காரணங்களை ஒருவர் கண்டுகொள்ள உதவி செய்யும், திடீரென கொதித்தெழுவதையும் தடுக்கும்.
“கோபக்காரனுக்குத் தோழனாகாதே; . . . அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொ[ள்வாய்].” (நீதிமொழிகள் 22:24, 25) சட்டென கோபப்படுகிறவர்களின் கூட்டுறவை கிறிஸ்தவர்கள் ஞானமாய் தவிர்க்கிறார்கள்.