வறுமை—நிரந்தர தீர்வு காணுதல்
வறுமையைக் குறித்து கவலை தரும் அறிக்கைகளே உலகெங்குமிருந்து வந்து கொண்டிருந்தாலும், திட்டவட்டமான ஒன்றை செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரணமாக, “இன்னும் 25 வருடங்களில் வறுமையை ஆசியா அடியோடு ஒழிக்க முடியும்” என ஆசிய முன்னேற்ற வங்கி அறிக்கை செய்ததாக மனிலா புல்லட்டீன் தலைப்புச் செய்தி கூறியது. வறுமை எனும் படுகுழியிலிருந்து மக்களைத் தூக்கிவிடுவதற்கு பொருளாதார வளர்ச்சியை ஒரு வழியாக இந்த வங்கி பரிந்துரைக்கிறது.
இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய ஆலோசனைகளும் திட்டங்களும் அடங்கிய ஒரு பெரிய பட்டியலை பிற அமைப்புகளும் அரசாங்கங்களும் வெளியிட்டிருக்கின்றன. அவற்றில் சில: சமூக காப்பீட்டுத் திட்டங்கள், மேம்பட்ட கல்வி, வளரும் நாடுகளின் கடன்களை ரத்து செய்தல், ஏழை நாடுகளில் உற்பத்திப் பொருட்களை மிகச் சுலபமாய் விற்பதற்கு வசதி செய்யும் வகையில் இறக்குமதித் தடைகளை நீக்குதல், ஏழைகளுக்கு குறைந்த வருவாயில் வீடுகளை கட்டிக் கொடுத்தல்.
2000-ம் ஆண்டில், 2015-க்குள் அடைய வேண்டிய இலக்குகளை ஐக்கிய நாடுகளின் பொது சபை வைத்தது. நாடுகளில் நிலவும் கொடிய வறுமை, பசி, சம்பளம் பெறுவதில் சமத்துவமின்மை ஆகியவற்றை ஒழிப்பதும் இந்த இலக்குகளில் அடங்கும். இவை எவ்வளவு உயர்ந்த இலக்குகளாக இருந்தாலும்சரி, பிளவுபட்ட இவ்வுலகில் இவற்றை சாதிக்க முடியுமா என்பதைக் குறித்து அநேகர் சந்தேகிக்கின்றனர்.
வறுமையை சமாளிக்க நடைமுறையான படிகள்
உலகளவில் உண்மையான முன்னேற்றத்திற்கான நம்பிக்கை ஒளி மங்கலாக இருப்பதால், உதவிக்காக ஒருவர் எங்கே செல்லலாம்? முன்பு குறிப்பிட்டபடி, இப்பொழுதே மக்களுக்கு நடைமுறை ஞானத்தை வாரி வழங்கும் சுரங்கம் ஒன்று உள்ளது. அது என்ன? அதுதான் கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள்.
பிற தகவல் சுரங்கங்களிலிருந்து பைபிள் எவ்வாறு வேறுபடுகிறது? இது உன்னத அதிகாரியாகிய நமது படைப்பாளரிடமிருந்து வந்திருக்கிறது. பைபிள் எனும் சுரங்கத்தில் விலையேறப்பெற்ற மணிக்கற்களை, அதாவது எல்லா மக்களுக்கும், எல்லா இடங்களுக்கும், எல்லா காலங்களுக்கும் பொருந்துகிற நடைமுறை நியமங்களை அவர் வைத்திருக்கிறார். இந்த நியமங்களைப் பின்பற்றினால், இப்பொழுதே ஏழைகள் திருப்தியான வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம். இதற்கு சில உதாரணங்களை கவனிக்கலாம்.
பணத்தைப் பற்றி சரியான கண்ணோட்டம் உடையவர்களாய் இருங்கள். “ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை” என பைபிள் கூறுகிறது. (பிரசங்கி 7:12) இதன் கருத்தென்ன? பணம்தான் எல்லாம் அல்ல. அது ஓரளவு பாதுகாப்பைத் தருகிறது என்பது உண்மைதான். நமக்குத் தேவையான சில பொருட்களை வாங்க உதவுகிறது, ஆனால் அதற்கு சில வரம்புகள் இருக்கின்றன. பணத்தால் வாங்க முடியாத அதிக மதிப்புமிக்க சில விஷயங்கள் உள்ளன. இந்த உண்மையை ஒப்புக்கொள்வது பொருளுடைமைகளை சரியான கண்ணோட்டத்தில் பார்க்க நமக்கு உதவுகிறது; பணத்தைத் திரட்டுவதிலேயே குறியாக இருக்கும்போது வாழ்க்கையில் வரும் ஏமாற்றங்களையும் தவிர்க்க உதவுகிறது. பணத்தால் ஜீவனை வாங்க முடியாது, ஆனால் ஞானமாக செயல்படுவது நமது ஜீவனை இப்பொழுதும் பாதுகாக்கும், நித்திய காலமாய் வாழும் வாய்ப்பையும் நமக்கு திறக்கும்.
வரவுக்குத் தக்க செலவு செய்யுங்கள். ஆசைப்பட்டதெல்லாம் அத்தியாவசியமானது என்று சொல்லிவிட முடியாது. எது அத்தியாவசியமானதோ அதற்கு மட்டுமே நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். “எனக்கு அது அவசியம் தேவை” என சொல்லி நம்மை நாமே சுலபமாக ஏமாற்றிக் கொள்ளலாம், ஆனால் உண்மையில் பார்க்கப்போனால், அது அத்தியாவசியமான ஒன்றாக இருக்காது, ஆசைப்பட்ட ஒன்றாகவே இருக்கும். சம்பாதித்த பணத்தை முதலில் உடனடித் தேவைகளுக்கே—உணவு, உடை, இருப்பிடம், இன்ன பிறவற்றிற்கே—ஞானமுள்ள ஒருவர் பயன்படுத்துவார். பிறகு, மீதமுள்ள பணத்தை செலவழிப்பதற்கு முன்பு கூடுதலாக தேவைப்படும் பொருட்களுக்கு போதுமான பணம் இருக்குமா என அவர் தீர்மானிப்பார். இதைத்தான் இயேசு ஓர் உவமையில் பரிந்துரைத்தார்: ‘தனக்கு நிர்வாகமுண்டோ இல்லையோ என்று முன்பு உட்கார்ந்து செல்லுஞ்செலவைக் கணக்குப் பார்க்கக்கடவன்.’—லூக்கா 14:30.
பிலிப்பைன்ஸில் வசிக்கும் யூஃப்ரோசினா என்பவர் ஒற்றைத் தாய், அவருக்கு மூன்று பிள்ளைகள். சில வருஷங்களுக்கு முன்னர் அவரது கணவன் அவரை கைவிட்டுவிட்டுப் போய்விட்டார்; ஆகவே குடும்பத்திற்காக பணம் சம்பாதித்து, அதை படுசிக்கனமாக பயன்படுத்தும் சவாலை எதிர்ப்பட்டார். அப்படி சிக்கனமாக செலவழித்து குடும்பம் நடத்தி வரும்போது, கையிலிருக்கும் பணத்தை செலவு செய்யும் விதத்தைப் பற்றி பிள்ளைகளுக்கும் கற்றுக் கொடுத்தார். உதாரணமாக, பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்தமான ஏதோவொன்றை பார்த்து அதை வாங்கித் தரும்படி கேட்கும்போது, அது வேண்டாம் என பட்டென்று சொல்லிவிடாமல், “உனக்கு வேண்டுமென்றால் அதை நீ வாங்கிக்கொள்ளலாம், ஆனால் நீ தீர்மானிக்க வேண்டும். நம்முடைய கையில் ஒரு பொருளை மட்டுமே வாங்க பணம் இருக்கிறது. இந்தப் பணத்தில், நீ கேட்கிற பொருளை வாங்கலாம், இல்லையென்றால் இந்த வாரம் சாதத்தோடு தொடுகறிக்கு கொஞ்சம் இறைச்சியோ காய்கறியோ வாங்கலாம். இப்போ சொல், உனக்கு எது வேண்டும்?” என அவர்களுக்கு நியாயங்காட்டி பேசுவார். பொதுவாக, சொல்ல வந்த குறிப்பை பிள்ளைகள் புரிந்துகொண்டு, வேறெதாவது வாங்குவதற்குப் பதிலாக சாப்பாட்டுக்கு தேவையானதை வாங்கவே விரும்புவார்கள்.
மனநிறைவுடன் இருங்கள். “உண்ணவும் உடுக்கவும் நமக்கு உண்டாயிருந்தால் அது போதுமென்றிருக்கக்கடவோம்” என மற்றொரு பைபிள் நியமம் கூறுகிறது. (1 தீமோத்தேயு 6:8) பணம் மட்டுமே மகிழ்ச்சியைத் தராது. பணக்காரர் அநேகர் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார்கள், அதேசமயத்தில் ஏழைகள் அநேகர் அதிக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். இவர்கள் வாழ்க்கைக்குத் தேவையான எளிய காரியங்களை வைத்தே திருப்தியாக வாழ கற்றுக்கொள்கிறார்கள். அதிமுக்கியமான காரியங்கள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தும் ‘தெளிவான கண்ணை’ பற்றி இயேசு பேசினார். (மத்தேயு 6:22) இது மனநிறைவுடன் இருக்க ஒருவருக்கு உதவுகிறது. ஏழைகள் பலர் மிகவும் திருப்தியுடன் இருக்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் கடவுளோடு ஒரு நல்ல உறவை வளர்த்திருக்கிறார்கள், மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் அனுபவிக்கிறார்கள்—இவையெல்லாம் பணத்தினால் வாங்க முடியாதவை.
இதுவரை சொல்லப்பட்டவை ஏழைகள் தங்களுடைய சூழ்நிலைமையை சமாளிப்பதற்கு உதவ பைபிள் தரும் நடைமுறையான அறிவுரைகளில் சில. ஆனால் இன்னும் அநேகம் இருக்கின்றன. உதாரணமாக, பணத்தை விரயமாக்கும் பழக்கங்களாகிய புகைப்பிடித்தல், சூதாடுதல் போன்றவற்றை தவிருங்கள்; வாழ்க்கையில் முக்கியமான காரியங்களை, குறிப்பாக ஆன்மீக இலக்குகளை கண்டு கொள்ளுங்கள்; வேலையில்லா திண்டாட்டம் அதிகமாய் இருக்கும் இடங்களில், மற்றவர்களுக்கு அதிக பிரயோஜனப்படும் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள் அல்லது மற்றவர்களுக்கு பிரயோஜனமான சின்ன சின்ன வேலைகளை செய்து கொடுக்க முயலுங்கள் என்றெல்லாம் பைபிள் அறிவுரை தருகிறது. (நீதிமொழிகள் 22:29; 23:21; பிலிப்பியர் 1:9-11) இத்தகைய ‘நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும்’ பயன்படுத்தும்படி பைபிள் பரிந்துரை செய்கிறது, ஏனென்றால் அவை ‘உங்கள் ஆத்துமாவுக்கு ஜீவனாயிருக்கும்.’—நீதிமொழிகள் 3:21, 22.
வறுமையில் போராடுகிறவர்களுக்கு உதவும் நிவாரணியை பைபிள் அறிவுரைகள் தருகிறபோதிலும், எதிர்காலத்தைப் பற்றிய கேள்விகள் இன்னும் மனதில் வட்டமிட்டுக் கொண்டே இருக்கின்றன. வறுமை எனும் கோரப் பிடிக்குள்ளேயே ஏழைகள் என்றென்றும் கிடந்து மடிய வேண்டியதுதானா? பெரும் செல்வந்தருக்கும் பரம ஏழைக்கும் இடையே இருக்கும் இந்தச் சமத்துவமின்மை என்றாவது சரிசெய்யப்படுமா? பலருக்கும் தெரிந்திராத ஒரு தீர்வை நாம் இப்பொழுது ஆராயலாம்.
நம்பிக்கை வைப்பதற்குரிய காரணத்தை பைபிள் தருகிறது
பைபிள் ஒரு சிறந்த புத்தகம் என்பதை பலரும் ஒத்துக்கொள்கின்றனர். ஆனால் விரைவில் வரப்போகும் பெரிய மாற்றங்களைப் பற்றி அது குறிப்பிடுவதை பெரும்பாலும் அவர்கள் அறியாமல் இருக்கிறார்கள்.
வறுமை உட்பட, மனிதகுலத்தின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு கடவுள் எண்ணம் கொண்டிருக்கிறார். இதை செய்வதற்கு மனித அரசாங்கங்கள் திறமையின்றி அல்லது விருப்பமின்றி இருப்பது தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப்பட்டிருப்பதால், அவற்றை நீக்கிப்போடுவதற்கு கடவுள் நோக்கம் கொண்டுள்ளார். எப்படி? தானியேல் 2:44-ல் பைபிள் திட்டவட்டமாக குறிப்பிடுகிறது: “பரலோகத்தின் தேவன் என்றென்றைக்கும் அழியாத ஒரு ராஜ்யத்தை எழும்பப் பண்ணுவார்; அந்த ராஜ்யம் வேறே ஜனத்துக்கு விடப்படுவதில்லை; . . . அது அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”
இந்த “ராஜ்யங்களையெல்லாம்,” அதாவது அரசாங்கங்களையெல்லாம் நீக்கிய பிறகு, கடவுளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் ஆளுகை செய்வார். அந்த ஆட்சியாளர் ஒரு மனிதரல்ல, ஆனால் கடவுளைப் போலவே வல்லமை வாய்ந்த ஓர் ஆவி சிருஷ்டி; தற்போதைய சமத்துவமின்மையை ஒழிப்பதற்கு தேவைப்படும் பெரும் மாற்றங்களைச் செய்ய திறமை படைத்தவர். இதைச் செய்வதற்கு கடவுள் தமது சொந்த குமாரனை தேர்ந்தெடுத்திருக்கிறார். (அப்போஸ்தலர் 17:31) இந்த ஆட்சியாளர் செய்யப்போவதை சங்கீதம் 72:12-14 இவ்வாறு விவரிக்கிறது: “கூப்பிடுகிற எளியவனையும், உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார். பலவீனனுக்கும் எளியவனுக்கும் அவர் இரங்கி, எளியவர்களின் ஆத்துமாக்களை இரட்சிப்பார். அவர்கள் ஆத்துமாக்களை வஞ்சகத்திற்கும் கொடுமைக்கும் தப்புவிப்பார்; அவர்களுடைய இரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கும்.” எப்பேர்ப்பட்ட மகத்தான எதிர்பார்ப்பு! எப்பேர்ப்பட்ட விடுதலை! கடவுளால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளர் ஏழை எளியோரின் சார்பாக செயல்படுவார்.
வறுமையுடன் தொடர்புடைய எல்லா பிரச்சினைகளும் அப்பொழுது தீர்க்கப்படும். சங்கீதம் 72-ல் வசனம் 16 (NW) இவ்வாறு கூறுகிறது: “பூமியில் ஏராளமாக தானியம் விளையும்; மலைகளின் உச்சியில் வழிந்தோடும்.” பஞ்சத்தாலோ, பணப் பிரச்சினையினாலோ, மோசமான நிர்வாகத்தினாலோ வரும் உணவுப் பற்றாக்குறைகள் இனிமேல் இரா.
மற்ற பிரச்சினைகளும் தீர்க்கப்படும். உதாரணமாக, இன்று பூமியில் வாழும் பெரும்பாலோருக்கு சொந்தம் கொண்டாட ஒரு வீடு இல்லை. என்றாலும், கடவுள் இவ்வாறு வாக்குறுதி தருகிறார்: “வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனி புசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.” (ஏசாயா 65:21, 22) ஒவ்வொருவருக்கும் சொந்த வீடு இருக்கும், அவரவர் தன்தன் வேலையை அனுபவித்து மகிழ்வர். ஆகவே வறுமைக்கு முழுமையான, நிரந்தரமான தீர்வை கடவுள் வாக்குறுதி அளிக்கிறார். பணக்காரருக்கும் ஏழைக்கும் இடையே உள்ள பெரும் பிளவுகள் இனிமேலும் இருக்காது, தொட்டுக்கொள்ள துடைத்துக்கொள்ள என சாப்பாட்டுக்காக மக்கள் இனிமேல் அவதிப்பட மாட்டார்கள்.
இந்த பைபிள் வாக்குறுதிகளை முதன்முதல் கேள்விப்படும்போது, இதெல்லாம் வெறும் கனவு என ஒருவர் நினைக்கலாம். ஆனால் கடந்த காலத்தில் கடவுள் தந்த எல்லா வாக்குறுதிகளும் நிறைவேறியுள்ளன என்பதை பைபிளை கூர்ந்து ஆராய்வதன் மூலம் அறிந்துகொள்ளலாம். (ஏசாயா 55:11) ஆகவே இதெல்லாம் நடக்குமா என்பது கேள்வியல்ல, இதெல்லாம் சம்பவிக்கும்போது இதிலிருந்து நன்மையடைய நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதே கேள்வி.
நீங்கள் அங்கே இருப்பீர்களா?
இந்த அரசாங்கம் கடவுளுடையது என்பதால், இந்த ஆட்சியில் ஒரு பிரஜையாக வாழ கடவுளுக்குப் பிரியமான ஆட்களாக நாம் இருக்க வேண்டும். இதற்கு எப்படி தகுதி பெறுவது? கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல நாம் தவிக்க வேண்டியதில்லை, இதற்குரிய தகுதிகள் பைபிளில் கொடுக்கப்பட்டுள்ளன.
நியமிக்கப்பட்ட அரசராகிய கடவுளுடைய குமாரன் நீதிபரர். (ஏசாயா 11:3-5) ஆகவே, இந்த அரசாங்கத்தில் வாழ அனுமதிக்கப்படும் ஆட்களும்கூட நீதிபரராக வாழ வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். நீதிமொழிகள் 2:21, 22 இவ்வாறு கூறுகிறது: “செவ்வையானவர்கள் பூமியிலே வாசம் பண்ணுவார்கள்; உத்தமர்கள் அதிலே தங்கியிருப்பார்கள். துன்மார்க்கரோ பூமியிலிருந்து அறுப்புண்டு போவார்கள்; துரோகிகள் அதில் இராதபடிக்கு நிர்மூலமாவார்கள்.”
இந்தத் தேவைகளை பூர்த்தி செய்வது எப்படி என்பதை அறிந்துகொள்ள ஏதாவது வழி இருக்கிறதா? ஆம், இருக்கிறது. பைபிளை படித்து அதன் வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த மகத்தான எதிர்கால வாழ்வை அனுபவிக்க நீங்கள் தகுதி பெறலாம். (யோவான் 17:3) இதற்கு உதவ யெகோவாவின் சாட்சிகள் ஆவலோடு காத்திருக்கிறார்கள். வறுமையோ அநீதியோ இல்லாத ஒரு சமுதாயத்தில் வாழும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி உங்களை கேட்டுக்கொள்கிறோம்.
[பக்கம் 5-ன் படம்]
யூஃப்ரோசினா: “சிக்கனமாக செலவழிப்பது என் குடும்பத்திற்கு அத்தியாவசியமானதை வாங்க உதவுகிறது”
[பக்கம் 6-ன் படங்கள்]
கடவுளோடு ஒரு நல்ல உறவையும் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையையும் பணத்தினால் வாங்க முடியாது