வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
1 சாமுவேல் 19:12, 13-ல் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, யெகோவாவுக்கு உண்மையுள்ள ஊழியக்காரனாகிய தாவீது தனது மனைவி மீகாள் ஒரு சுரூபத்தை வைத்திருக்க ஏன் அனுமதித்தார்?
முதலாவதாக, சூழமைவை நாம் சுருக்கமாக ஆராயலாம். தாவீதை கொலை செய்ய அரசனாகிய சவுல் போட்ட சதித்திட்டத்தைப் பற்றிய செய்தி தாவீதின் மனைவிக்கு எட்டியபோது, அவள் உடனடியாக செயல்பட்டாள். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “மீகாள் தாவீதை ஜன்னல் வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான். மீகாளோ ஒரு சுரூபத்தை [அது பெரும்பாலும் ஒரு மனிதனுடைய அளவும் வடிவமும் கொண்டது] எடுத்து, கட்டிலின்மேல் வைத்து, அதின் தலைமாட்டிலே ஒரு வெள்ளாட்டுத் தோலைப்போட்டு, துப்பட்டியினால் மூடி வைத்தாள்.” சவுலின் ஆட்கள் தாவீதைப் பிடிக்க வந்தபோது, “அவர் வியாதியாயிருக்கிறார்” என மீகாள் கூறினாள். இத்திட்டத்தால் தாவீதைத் தேடுவதில் காலதாமதமானது, இதற்கிடையில் தாவீது பத்திரமாக தப்பிச் சென்றுவிட்டார்.—1 சாமுவேல் 19:11-16.
பூர்வ காலங்களில், இந்தச் சுரூபங்கள் மத சம்பந்தமான காரியங்களுக்கு மட்டுமல்ல, சட்ட சம்பந்தமான நோக்கங்களுக்கும் பாதுகாத்து வைக்கப்பட்டன என்பதாக தொல்லியல் கண்டுபிடிப்புகள் தெரிவிக்கின்றன. இன்றைக்கு பட்டாவும் உயில்களும் சொத்துரிமையை ஊர்ஜிதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுவது போல, முற்காலத்தில் இந்தச் சுரூபங்கள் பயன்படுத்தப்பட்டன. சில சூழ்நிலைமைகளில், இந்தச் சுரூபத்தை வைத்திருப்பது, இறந்துபோன தனது மாமனாருடைய சொத்துக்களை சுதந்தரிக்க மருமகனுக்கு உரிமை அளிப்பதாக தெரிகிறது. முன்பு, ராகேல் தனது தகப்பனாருடைய சுரூபங்களை ஏன் எடுத்துக்கொண்டாள், அவரும் அவற்றை திரும்பப் பெற ஏன் அவ்வளவு சிரமம் எடுத்தார் என்பதற்குரிய காரணத்தை இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம். ராகேலின் விஷயத்தில், அவளுடைய கணவர் யாக்கோபுக்கு தனது மனைவி செய்தது தெரியாது.—ஆதியாகமம் 31:14-34.
இஸ்ரவேலர் ஒரு ஜனமாக ஆனபோது, பத்துக் கட்டளைகளைப் பெற்றார்கள், அதில் இரண்டாவது கட்டளை விக்கிரகங்களை உண்டாக்குவதை திட்டவட்டமாக தடை செய்கிறது. (யாத்திராகமம் 20:4, 5) பிற்பாடு, தீர்க்கதரிசியாகிய சாமுவேல் அரசனாகிய சவுலிடம் பேசியபோது இதை மறைமுகமாக குறிப்பிட்டார். “இரண்டகம் பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் [சுரூபத்தைப் பயன்படுத்துவதற்கும்] சரியாய் இருக்கிறது” என அவர் கூறினார். (1 சாமுவேல் 15:23) இதன் காரணமாக, இஸ்ரவேலில் சுதந்தரத்தைப் பெறும் நோக்கத்திற்கு சுரூபத்தை பயன்படுத்தியிருக்க சாத்தியமில்லை. என்றாலும், பண்டைக்கால இந்த யூத மூடநம்பிக்கை இஸ்ரவேலில் வாழ்ந்த சில குடும்பங்களில் தொடர்ந்திருந்ததாக தெரிகிறது. (நியாயாதிபதிகள் 17:5, 6; 2 இராஜாக்கள் 23:24) மீகாள் தான் வைத்திருந்த உடைமைகளுடன் அந்த சுரூபத்தையும் வைத்திருந்தது, அவளுடைய இருதயம் யெகோவாவுடன் முழுமையாக இசைந்திருக்கவில்லை என்பதை காட்டுகிறது. மீகாள் இந்தச் சுரூபத்தை வைத்திருந்ததைப் பற்றி தாவீதுக்கு தெரியாமல் இருந்திருக்கலாம் அல்லது அவள் அரசனாகிய சவுலின் குமாரத்தியாக இருந்ததால் அதை அவர் அனுமதித்திருந்திருக்கலாம்.
யெகோவாவுக்கு தனிப்பட்ட பக்தியை செலுத்துவதைக் குறித்ததில் தாவீதின் நோக்குநிலையை பின்வரும் வார்த்தைகள் காட்டுகின்றன: “கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே. சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.”—1 நாளாகமம் 16:25, 26.
[பக்கம் 29-ன் படம்]
இங்கே படத்தில் உள்ளதைப் போன்ற சுரூபங்களை உண்டாக்குவதை பத்துக் கட்டளைகளில் இரண்டாவது கட்டளை தடை செய்தது
[படத்திற்கான நன்றி]
From the book The Holy Land, Vol. II, 1859