வாழ்க்கை சரிதை
இருட்டறைகளிலிருந்து ஸ்விஸ் ஆல்ப்ஸிற்கு
லோட்டார் வால்ட்டர் சொன்னது
கிழக்கு ஜெர்மனியின் கம்யூனிஸ சிறைச்சாலைகளிலிருந்த இருட்டறைகளில் மூன்று ஆண்டுகள் காலம் தள்ளினேன். விடுதலை பெற்று என் குடும்பத்தோடு குலவி மகிழும் இனிய காலத்திற்காக ஏங்கித் தவித்தேன்.
இருந்தாலும் என் ஆறு வயது மகன் யோஹானஸ் என்னைப் பார்த்து திருதிருவென்று முழிப்பான் என நான் கற்பனை செய்யவே இல்லை. மூன்று ஆண்டுகளாக என்னை பார்க்காததால் அவனுக்கு நான் புது முகமாகவே தெரிந்தேன்.
என் மகனைப் போலன்றி நான் சிறுவயதில் என் பெற்றோரை பிரியாமல் அவர்களுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்ந்தேன். எங்கள் வீட்டில் அன்பான சூழல் நிலவியது. ஜெர்மனியிலுள்ள கெம்னிட்ஸ் நகரில் 1928-ல் நான் பிறந்தேன். என் அப்பா மதத்தை வெறுத்தார், அதை வெளிப்படையாகவும் சொல்லி வந்தார். முதல் உலகப் போரின்போது இரு தரப்பிலுமிருந்த “கிறிஸ்தவ” வீரர்கள் டிசம்பர் 25-ம் தேதியன்று “மெரி கிறிஸ்மஸ்” சொல்லி ஒருவரையொருவர் வாழ்த்திக் கொண்டார்கள், ஆனால் மறுநாளே மறுபடியும் ஒருவரையொருவர் கொன்று குவித்தார்கள் என்பதை அவர் சொன்னார். அவரைப் பொறுத்தவரை மதம்தான் மாய்மாலத்திலும் மாய்மாலம் நிறைந்த ஒன்று.
ஏமாற்றம் போய் நம்பிக்கை பிறக்கிறது
நல்ல வேளையாக மதத்தில் அப்பாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம் எனக்கு ஏற்படவில்லை. நான் 17 வயதாக இருந்தபோது இரண்டாம் உலக யுத்தம் முடிவடைந்தது; ஆகவே கட்டாய ராணுவ சேவையிலிருந்து தப்பித்துக்கொண்டேன். இருந்தாலும், ‘எதற்காக இப்படியெல்லாம் கொலை செய்கிறார்கள்? நான் யாரை நம்புவது? உண்மையான பாதுகாப்பை எங்கே கண்டுபிடிப்பது?’ என பல கேள்விகள் என் மனதைக் குடைந்தன. நாங்கள் வசித்துவந்த கிழக்கு ஜெர்மனி, சோவியத்தின் அதிகாரத்திற்குக்கீழ் வந்தது. நீதி, சமத்துவம், ஒற்றுமை, சமாதான உறவு ஆகிய கம்யூனிஸ கொள்கைகள், போரினால் ஏற்பட்ட நாசங்களைக் கண்டு மனம் நொந்துபோயிருந்தவர்களுக்கு இனிமையாக தொனித்தன. உண்மை மனம்படைத்த அவர்களில் அநேகர் பெருத்த ஏமாற்றத்தை சந்திக்கவிருந்தனர்—இம்முறை மதத்தால் அல்ல, ஆனால் அரசியலால்.
நியாயமான பதில்களை நான் தேடிக்கொண்டிருந்த சமயத்தில்தான் என் பெரியம்மா ஒருவர் தன் மத நம்பிக்கைகளைப் பற்றி என்னிடம் பேசினார்; அவர் ஒரு யெகோவாவின் சாட்சி. அவர் பைபிள் அடிப்படையிலான ஒரு புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். அதை வாசித்த பிறகு முதன்முறையாக மத்தேயு 24-ம் அதிகாரம் முழுவதையும் படிக்கும்படி தூண்டப்பட்டேன். அந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருந்த நியாயமான, நம்பத்தக்க விளக்கங்கள் என் மனதைத் தொட்டன. நாம் வாழ்வது “உலகத்தின் முடிவு” காலம் என அடையாளங்காட்டி, மனித பிரச்சினைகளுக்கான அடிப்படைக் காரணத்தை அது சுட்டிக்காட்டியது.—மத்தேயு 24:3; வெளிப்படுத்துதல் 12:9.
சீக்கிரத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய இன்னுமதிக பிரசுரங்களை நான் பெற்றுக்கொண்டேன்; அவற்றை ஒரு வார்த்தை விடாமல் படித்தேன். நான் அவ்வளவு ஆவலாக தேடிக்கொண்டிருந்த சத்தியத்தை கண்டுபிடித்துவிட்டேன் என புரிந்தது. 1914-ல் இயேசு கிறிஸ்து பரலோகத்தில் ராஜாவாக முடிசூட்டப்பட்டார் என்பதையும் கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்திற்கு ஆசீர்வாதங்களைப் பொழிய சீக்கிரத்தில் கடவுளுக்கு விரோதமான அனைத்தையும் அழிப்பார் என்பதையும் அறிந்து புல்லரித்துப்போனேன். மீட்கும்பொருளைப் பற்றிய தெளிவான புரிந்துகொள்ளுதல், எனக்கு இன்னொரு பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. யெகோவா தேவனிடம் மன்னிப்பு கேட்டு மனதார ஜெபம் செய்ய அது எனக்கு உதவியது. “கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அவர் உங்களிடம் நெருங்கி வருவார்” என யாக்கோபு 4:8 (NW) விடுக்கும் அன்பான அழைப்பு என் மனதை நெகிழ வைத்தது.
புதிதாக கண்டுபிடித்த நம்பிக்கையின் பேரில் நான் மிகுந்த உற்சாகம் காட்டியபோதிலும் என் பெற்றோரும் அக்காவும் நான் சொன்னதை முதலில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தாலும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்ல வேண்டுமென்ற என் ஆர்வத்தை அது குறைக்கவில்லை; சாட்சிகளுடைய சிறிய தொகுதி ஒன்று கெம்னிட்ஸ் நகருக்கு அருகே கூட்டங்களை நடத்தி வந்தது. முதல் கூட்டத்திற்கு என் அம்மா, அப்பா, அக்கா எல்லாரும் என்னோடு வந்திருந்தார்கள், எனக்கு ஒரே ஆச்சரியம்! அது 1945/46 குளிர்காலத்தில் நடந்தது. பிற்பாடு, நாங்கள் வசித்த ஹார்டௌ பட்டணத்தில் ஒரு பைபிள் படிப்பு தொகுதி ஏற்படுத்தப்பட்டது; நாங்கள் குடும்பமாக தவறாமல் அதில் கலந்துகொண்டோம்.
‘சிறுபிள்ளையாயிருக்கிறேனே’
முக்கியமான பைபிள் சத்தியங்களை கற்றுக்கொண்டு யெகோவாவின் மக்களோடு தவறாமல் கூட்டுறவு கொண்டது, யெகோவாவிற்கு என் வாழ்க்கையை ஒப்புக்கொடுக்கத் தூண்டியது. மே 25, 1946 அன்று நான் முழுக்காட்டப்பட்டேன். என் குடும்பத்தாரும் ஆவிக்குரிய விதத்தில் முன்னேறியது எனக்கு மிகுந்த திருப்தியளித்தது. காலப்போக்கில் அவர்கள் மூவருமே யெகோவாவின் சாட்சிகளானார்கள். என் அக்கா கெம்னிட்ஸ் நகரிலுள்ள மூன்று சபைகளில் ஒன்றில் இன்னமும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். என் அம்மா 1965-லும் அப்பா 1986-லும் இறக்கும்வரை உத்தமமாக சேவித்தார்கள்.
நான் முழுக்காட்டப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பிற்பாடு விசேஷ பயனியராக சேவிக்க ஆரம்பித்தேன். “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்” ஊழியம் செய்யும் காலம் என் வாழ்க்கையில் அப்போது துவங்கியது. (2 தீமோத்தேயு 4:2) சீக்கிரத்தில், ஊழியம் செய்வதற்கான புதிய வாய்ப்புகள் கிடைத்தன. கிழக்கு ஜெர்மனியின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் ஊழியம் செய்ய முழுநேர சுவிசேஷகர்கள் தேவைப்பட்டார்கள். அந்த நியமிப்புக்காக நானும் ஒரு சகோதரரும் விண்ணப்பித்தோம். ஆனால் அப்படிப்பட்ட பொறுப்புமிக்க ஒரு வேலைக்கு தேவையான அனுபவமோ முதிர்ச்சியோ என்னிடம் இல்லை என்றே நினைத்தேன். எனக்கு அப்போது 18 வயதே ஆகியிருந்ததால், “ஆ . . . ஆண்டவரே, இதோ, நான் பேச அறியேன்; சிறுபிள்ளையாயிருக்கிறேன்” என்று சொன்ன எரேமியாவைப் போல் உணர்ந்தேன். (எரேமியா 1:6) எனக்கே என்மீது நம்பிக்கை இல்லை; இருந்தாலும் எங்களுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுத்துப் பார்க்க பொறுப்புள்ள சகோதரர்கள் தீர்மானித்தார்கள். ஆகவே ப்ரான்டன்பர்க் மாநிலத்திலிருந்த பெல்ட்சிக் என்ற சிறிய ஊருக்கு நியமிக்கப்பட்டோம்.
அந்தப் பிராந்தியத்தில் பிரசங்கிப்பது மிகப் பெரிய சவாலாக இருந்தது; ஆனால் அது எனக்கு மதிப்புமிக்க பயிற்சியைத் தந்தது. காலப்போக்கில், பிஸினஸ் புள்ளிகளாக இருந்த நிறைய பெண்கள் ராஜ்ய செய்தியை ஏற்றுக்கொண்டு யெகோவாவின் சாட்சிகளானார்கள். இருந்தாலும் அந்த கிராமத்துவாசிகளின் வாழ்க்கையில் வேரூன்றியிருந்த பாரம்பரியங்களுக்கும் பயங்களுக்கும் எதிராகவே அவர்கள் அந்த மாற்றத்தை செய்தார்கள். ஆகவே கத்தோலிக்க குருமாரும் சரி புராட்டஸ்டன்ட் குருமாரும் சரி எங்களை கடுமையாக எதிர்க்க ஆரம்பித்தார்கள்; நாங்கள் பிரசங்கம் செய்ததால் இழித்தும் பழித்தும் பேசினார்கள். ஆனால் வழிநடத்துதலுக்காகவும் பாதுகாப்புக்காகவும் நாங்கள் யெகோவாவையே நம்பியிருந்ததால், சத்தியத்தை ஏற்றுக்கொள்ள அநேகருக்கு உதவ முடிந்தது.
எதிர்ப்பு அதிகரிக்கிறது
1948-ம் வருடத்தில் ஒருபுறம் ஆசீர்வாதங்கள் வந்தன, மறுபுறம் எதிர்பாரா கஷ்டங்கள் வந்தன. முதலில், துரிங்கியாவிலுள்ள ரூடலஷ்டாட் நகரில் பயனியர் ஊழியம் செய்யும்படி நியமிப்பைப் பெற்றேன். அங்கே உண்மையுள்ள அநேக சகோதர சகோதரிகளோடு பழக முடிந்தது; அவர்களுடைய நட்பை அனுபவித்து மகிழ்ந்தேன். மற்றொரு பெரிய ஆசீர்வாதம் அவ்வருட ஜூலை மாதத்தில் கிடைத்தது. ஏரிக்கா உல்மான் என்ற இளம் கிறிஸ்தவ பெண்ணை மணம் முடித்தேன்; அவள் விசுவாசமும் வைராக்கியமும் மிக்கவள். கெம்னிட்ஸ் நகரிலிருந்த சபைக்கு நான் செல்ல ஆரம்பித்த காலத்திலிருந்தே அவளை எனக்குத் தெரியும். இருவரும் சேர்ந்து என் சொந்த ஊரான ஹார்டௌவில் பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தோம். இருந்தாலும் உடல்நலப் பிரச்சினைகளாலும் மற்ற காரணங்களாலும் ஏரிக்காவால் தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்ய முடியவில்லை.
யெகோவாவின் மக்களுக்கு அது கஷ்டமான காலமாக இருந்தது. கெம்னிட்ஸ் நகரின் தொழிலாளர் துறை, பிரசங்க வேலையை நிறுத்திவிட்டு உலகப்பிரகாரமான வேலையை முழுநேரம் செய்யும்படி என்னை கட்டாயப்படுத்தும் முயற்சியில் என் ரேஷன் கார்டை ரத்து செய்தது. என்னுடைய இந்தப் பிரச்சினையை காரணம் காட்டி, சட்டப்பூர்வ அங்கீகாரத்தைக் கோர பொறுப்புள்ள சகோதரர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் அது மறுக்கப்பட்டது. ஜூன் 23, 1950-ல், அபராதம் செலுத்தும்படி அல்லது 30 நாட்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி எனக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது. நாங்கள் மேல் முறையீடு செய்தோம், ஆனால் உச்ச நீதிமன்றம் அதை நிராகரித்து என்னை சிறைக்கு அனுப்பியது.
துன்புறுத்தலாகிய புயல் உருவாகிக் கொண்டிருந்ததற்கு அது வெறும் அறிகுறியாகவே இருந்தது. ஒரு மாதம்கூட ஆகியிருக்காது, செப்டம்பர் 1950-ல், மீடியா மூலம் எங்களைப் பற்றி அவதூறான விஷயங்களை பரப்புவதில் கம்யூனிஸ ஆட்சி தீவிரமாக இறங்கியது; அதன் பிறகு எங்கள் வேலைகளுக்கு தடை விதித்தது. எங்கள் தொகுதி வேகமாக வளர்ந்ததாலும் நாங்கள் நடுநிலைமையை காத்துக்கொண்டதாலும், மேலை நாடுகளின் ஆபத்தான வேவுகாரர்கள் என்று எங்கள் மீது முத்திரை குத்தினார்கள். மதம் என்ற போர்வையில் “கேள்விக்கிடமான நடவடிக்கையில்” நாங்கள் ஈடுபட்டு வந்ததாகவும் சொன்னார்கள். தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட அதே நாளன்று என் மனைவிக்கு வீட்டில் ஆண் குழந்தை (யோஹானஸ்) பிறந்தான்; நானோ சிறையிலிருந்தேன். மருத்துவச்சி எவ்வளவோ தடுக்க முயன்றும் ஸ்டேட் செக்யூரிட்டி ஆபீஸர்கள் எங்கள் அப்பார்ட்மென்ட்டிற்குள் நுழைந்து தங்கள் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஏதாவது ஆதாரம் கிடைக்குமாவென தேடினார்கள். அவர்களால் ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் பிற்பாடு, எங்கள் சபையில் சேர்ந்துகொண்டு வேவு வேலையைப் பார்க்க தங்கள் ஆளை சாமர்த்தியமாக அனுப்பி வைத்தார்கள். இதனால் என்னையும் சேர்த்து, பொறுப்பிலிருந்த எல்லா சகோதரர்களும் அக்டோபர் 1953-ல் கைதானோம்.
இருட்டறைகளில்
குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு மூன்று முதல் ஆறு வருடங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நான் ஸ்விக்கௌ நகரிலிருந்த ஓஸ்டஷ்டைன் கோட்டையின் அழுக்குப் பிடித்த இருட்டறைகளுக்கு அனுப்பப்பட்டேன்; அங்கே இன்னும் பல சகோதரர்களும் இருந்தார்கள். அங்கே படு மோசமான நிலைமை இருந்தபோதும் முதிர்ச்சி வாய்ந்த சகோதரர்களோடு கூட்டுறவு கொண்டது மிகுந்த சந்தோஷத்தைத் தந்தது. எங்களுக்கு சுதந்திரம் இல்லை என்பதற்காக ஆவிக்குரிய உணவு கிடைக்காமல் போகவில்லை. அரசாங்கத்தால் இகழப்பட்டு தடைசெய்யப்பட்ட போதும் காவற்கோபுர பத்திரிகை சிறைச்சாலைக்குள், ஏன் எங்கள் அறைக்குள்ளேயே வந்து சேர்ந்தது! எப்படி?
சில சகோதரர்கள் நிலக்கரி சுரங்கங்களில் வேலை செய்ய அனுப்பப்பட்டார்கள். அங்கே சிறையில் அடைக்கப்படாத மற்ற சாட்சிகளை சந்தித்தார்கள். அவர்களிடமிருந்து பத்திரிகைகளை பெற்றுக்கொண்டார்கள். பிறகு அவற்றை ரகசியமாக சிறைச்சாலைக்குள் எடுத்து வந்தார்கள். அதன்பின் புதுப் புது வழிகளைக் கண்டுபிடித்து எப்படியோ எங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். இப்படித்தான் நாங்கள் பெறத் துடித்த ஆவிக்குரிய உணவு எங்களை வந்து அடைந்தது. இவ்விதத்தில் யெகோவா காட்டிய கரிசனையையும் வழிநடத்துதலையும் ருசித்தது எனக்கு பெருமகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் தந்தது!
1954-ன் முடிவுக்குள், கொடுமைக்குப் பெயர்போன டோர்கௌ நகர சிறைச்சாலைக்கு நாங்கள் அனுப்பப்பட்டோம். அங்கிருந்த சாட்சிகள் எங்களை வரவேற்றார்கள். அதுவரை, காவற்கோபுரத்தின் பழைய பிரதிகளில் தாங்கள் படித்து ஞாபகம் வைத்திருந்த விஷயங்களைப் பற்றியே எப்போதும் பேசிக்கொண்டு ஆவிக்குரிய விதத்தில் பலமாக நிலைத்திருந்தார்கள். ஆவிக்குரிய உணவு ‘சுடச்சுட’ கிடைக்காதா என என்னமாய் ஏங்கித் தவித்தார்கள்! இப்போது, ஸ்விக்கௌவில் இருந்தபோது படித்தவற்றை அவர்களோடு பகிர்ந்துகொள்ளும் கடமை எங்களுக்கிருந்ததை உணர்ந்தோம். ஆனால் தினமும் வாக்கிங் சென்றபோது ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள நாங்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் எப்படி எங்களால் கடமையை நிறைவேற்ற முடிந்தது? என்ன செய்ய வேண்டுமென சகோதரர்கள் எங்களுக்கு அருமையான ஆலோசனைகளைத் தந்திருந்தார்கள், அதோடு யெகோவாவின் வலிமைமிக்க கரம் எங்களை காத்து வழிநடத்தியது. சுதந்திரமும் வாய்ப்பும் இருக்கும்போதே பைபிளை ஊக்கமாக படித்து தியானிப்பது எவ்வளவு முக்கியம் என்பது இதிலிருந்து எங்களுக்கு நன்றாக புரிந்தது.
முக்கிய தீர்மானங்களுக்கான நேரம்
யெகோவாவின் உதவியோடு நாங்கள் உறுதியாக நிலைத்திருந்தோம். 1956-ன் முடிவுக்குள் ஆச்சரியமளிக்கும் விதத்தில் எங்களில் அநேகருக்கு பொது மன்னிப்பு கிடைத்தது. சிறைச்சாலை கதவுகள் திறக்கப்பட்டபோது நாங்கள் அடைந்த அளவில்லா மகிழ்ச்சியை என்னென்று விவரிப்பது! அந்த சமயத்தில் என் மகனுக்கு ஆறு வயது. மறுபடியும் என் மனைவியோடு இணைந்ததில் பூரிப்படைந்தேன்; இருவருமாக சேர்ந்து மகனை வளர்க்க ஆரம்பித்ததால் எல்லையில்லா சந்தோஷம் அடைந்தோம். கொஞ்ச காலத்திற்கு என் மகன் யோஹானஸ் என்னை யாரோ எவரோ போல் நடத்தினான். ஆனால் சீக்கிரத்தில் எங்களுக்கு இடையே பாசப் பிணைப்பு ஏற்பட்டது.
கிழக்கு ஜெர்மனியிலிருந்த யெகோவாவின் சாட்சிகள் மிகக் கொடிய காலத்தை சந்தித்தார்கள். எங்கள் கிறிஸ்தவ ஊழியத்திற்கும் நடுநிலைமைக்கும் எதிர்ப்பு அதிகரித்துக்கொண்டே இருந்ததால் நாங்கள் சதா அச்சுறுத்தல் நிறைந்த—ஆபத்தும், கவலையும், சோர்வும் நிறைந்த—வாழ்க்கை வாழ வேண்டியிருந்தது. ஆகவே ஏரிக்காவும் நானும் எங்கள் சூழ்நிலையை கவனமாகவும் ஜெபசிந்தையோடும் சீர்தூக்கிப் பார்த்தோம். கவலையில் மூழ்கிவிடாதிருக்க சற்று சாதகமான நிலைமைகள் இருந்த இடத்திற்கு குடிமாறிப் போகும் அவசியத்தை உணர்ந்தோம். யெகோவாவை சுதந்திரமாக சேவிக்கவும் ஆவிக்குரிய இலக்குகளை வைத்து அவற்றை அடையவும் நாங்கள் விரும்பினோம்.
1957 வசந்த காலத்தில், மேற்கு ஜெர்மனியிலிருந்த ஸ்டுட்கார்ட் நகருக்கு குடிமாறிச் செல்லும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அங்கே பிரசங்க வேலை தடை செய்யப்படவில்லை, ஆகவே சகோதரர்களோடு சுதந்திரமாக கூட்டுறவு கொள்ள முடிந்தது. அவர்களது அன்பான ஆதரவு எங்களை நெகிழ வைத்தது. ஹேடல்ஃபிங்கன் பகுதியிலிருந்த சபையில் நாங்கள் ஏழு ஆண்டுகள் இருந்தோம். அந்த ஆண்டுகளில் எங்கள் மகன் பள்ளிப் படிப்பை ஆரம்பித்தான், சத்தியத்திலும் நன்கு முன்னேறினான். செப்டம்பர் 1962-ல் விஸ்பேடனில் நடந்த ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ளும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. ஜெர்மன் மொழி அறிந்த சாட்சிகள் தேவைப்பட்ட பகுதிகளுக்கு குடும்பமாக செல்லும்படி எனக்கு அப்பள்ளியில் உற்சாகம் அளிக்கப்பட்டது. ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் சில பகுதிகளும் அதில் உட்பட்டிருந்தது.
ஸ்விஸ் ஆல்ப்ஸிற்கு
ஆகவே 1963-ல் நாங்கள் சுவிட்சர்லாந்துக்கு குடிமாறிச் சென்றோம். ஸ்விஸ் ஆல்ப்ஸின் மத்திப பகுதியிலிருந்த அழகிய லேக் லூசர்னை பார்த்தவாறு அமைந்திருந்த ப்ரூனன் நகரின் சிறிய சபையோடு ஊழியம் செய்யும்படி நாங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டோம். எங்களுக்கு ஒரு பரதீஸில் இருப்பதைப் போலிருந்தது. அங்கே பேசப்பட்ட ஜெர்மன் கிளைமொழியையும், அம்மக்களின் வாழ்க்கை முறையையும், அவர்களது மனப்பான்மையையும் நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தாலும் சமாதானத்தை நேசித்த மக்களோடு சேர்ந்து வேலை செய்ததையும் அவர்களிடம் பிரசங்கித்ததையும் நாங்கள் அனுபவித்து மகிழ்ந்தோம். நாங்கள் ப்ரூனனில் 14 ஆண்டுகள் செலவிட்டோம். எங்கள் மகன் அங்குதான் வளர்ந்து பெரியவனானான்.
1977-ல், நான் 50 வயதை எட்டவிருந்த சமயத்தில், சுவிட்சர்லாந்தில் தூன் என்ற இடத்திலிருந்த பெத்தேலில் சேவை செய்ய எங்களுக்கு அழைப்பு வந்தது. நாங்கள் அதை எதிர்பாராமல் கிடைத்த பாக்கியமாகக் கருதி மிகுந்த நன்றியோடு ஏற்றுக்கொண்டோம். நானும் என் மனைவியும் பெத்தேலில் ஒன்பது ஆண்டுகள் சேவை செய்தோம்; அது எங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையிலும் தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சியிலும் ஒரு விசேஷ மைல்கல் என்றே நினைக்கிறோம். தூனிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலுமிருந்த உள்ளூர் பிரஸ்தாபிகளோடு ஊழியம் செய்ததையும் அனுபவித்து மகிழ்ந்தோம்; யெகோவாவின் ‘அதிசயங்களை’—பெர்ன் நகரிலுள்ள பனிமூடிய ஆல்ப்ஸ் மலைகளின் கம்பீர காட்சியை—எப்போதும் ரசித்தோம்.—சங்கீதம் 9:1.
மறுபடியும் குடிமாறினோம்
அடுத்ததாக 1986-ன் ஆரம்பத்தில் மறுபடியும் நாங்கள் குடிமாறிச் செல்ல வேண்டியிருந்தது. சுவிட்சர்லாந்தின் கிழக்குப் பகுதியிலிருந்த பூக்ஸ் சபைக்கு நியமிக்கப்பட்ட மிகப் பரந்த பிராந்தியத்தில் விசேஷ பயனியர்களாக சேவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். மறுபடியுமாக இன்னொரு வித்தியாசமான வாழ்க்கைமுறையோடு அனுசரித்துப் போக வேண்டியிருந்தது. இருந்தாலும் எங்கே மிகச் சிறந்த கருவிகளாக பயன்படுத்தப்பட முடியுமோ அங்கே யெகோவாவை சேவிக்கவே நாங்கள் ஆசைப்பட்டதால் இந்தப் புதிய நியமிப்பையும் சமாளித்தோம். இதனால் யெகோவாவின் ஆசீர்வாதம் கிடைத்தது. சிலசமயங்களில் உதவிப் பயணக் கண்காணியாக சபைகளை சந்தித்து பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன். பதினெட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இந்தப் பகுதியில் பிரசங்கித்து அநேக அருமையான அனுபவங்களை பெற்றிருக்கிறோம். பூக்ஸ் சபை வளர்ந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்யப்பட்ட அழகிய ராஜ்ய மன்றத்தில் நாங்கள் கூட்டங்களை நடத்துகிறோம்.
யெகோவா எங்களை அபரிமிதமாக ஆசீர்வதித்து பேணிப் பராமரித்திருக்கிறார். எங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை முழுநேர ஊழியத்தில் செலவிட்டிருக்கிறோம், ஆனால் எங்களுக்கு எந்தக் குறையும் ஏற்பட்டதே இல்லை. என் மகன், மருமகள், அவர்களுடைய பிள்ளைகள், அந்தப் பிள்ளைகளுடைய குடும்பத்தார் என அனைவரும் யெகோவாவின் வழியில் உத்தமமாய் நடப்பதைப் பார்க்கும் சந்தோஷத்தையும் திருப்தியையும் பெற்றிருக்கிறோம்.
பின்னோக்கிப் பார்க்கையில், “சமயம் வாய்த்தாலும் வாய்க்காவிட்டாலும்” ஊழியம் செய்திருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை. வைராக்கியமான கிறிஸ்தவ ஊழியத்தால் கம்யூனிஸ சிறைச்சாலையின் இருட்டறைகளுக்கும் சென்றிருக்கிறேன், ஸ்விஸ் ஆல்ப்ஸின் கண்கவர் மலைகளுக்கும் சென்றிருக்கிறேன். நானும் என் குடும்பத்தாரும் இதற்காக ஒரு விநாடிகூட மனம் வருந்தியது கிடையாது.
[பக்கம் 28-ன் பெட்டி]
துன்புறுத்தலின்போது “இரட்டை பலியாட்கள்” உறுதி காக்கிறார்கள்
கிழக்கு ஜெர்மனி என்றும் அழைக்கப்பட்ட ஜெர்மானிய மக்களாட்சிக் குடியரசின்கீழ் (GDR) விசேஷமாக யெகோவாவின் சாட்சிகள் மிகக் கொடூரமாக ஒடுக்கப்பட்டார்கள். 5,000-க்கும் மேற்பட்ட சாட்சிகள் கிறிஸ்தவ ஊழியத்தின் காரணமாகவும் நடுநிலைமை காரணமாகவும் கட்டாய உழைப்பு முகாம்களுக்கும் தடுப்புக்காவல் மையங்களுக்கும் அனுப்பப்பட்டதாக பதிவுகள் காட்டுகின்றன.—ஏசாயா 2:4.
இவர்களில் சிலர் “இரட்டை பலியாட்கள்” என விவரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனென்றால் இவர்களில் சுமார் 325 பேர் ஏற்கெனவே நாசி சித்திரவதை முகாம்களிலும் சிறைகளிலும் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்கள். பிறகு 1950-களில் GDR-ன் அரசு பாதுகாப்பு இலாகாவான ஷ்டாசி அவர்களை தேடிக் கண்டுபிடித்து மறுபடியும் சிறையிலடைத்தது. சில சிறைச்சாலைகளும்கூட இரட்டைப் பணி செய்தன—முதலில் நாசி சிறைச்சாலைகளாகவும் பிறகு ஷ்டாசி சிறைச்சாலைகளாகவும் செயல்பட்டன.
கடும் துன்புறுத்தல் நிலவிய முதல் பத்தாண்டுகளில், அதாவது 1950 முதல் 1961 வரை, மொத்தம் 60 சாட்சிகள்—ஆண்களும் சரி பெண்களும் சரி—சித்திரவதை, ஊட்டச்சத்துக் குறைவு, வியாதி, முதுமை ஆகிய காரணங்களால் சிறைச்சாலையில் இறந்தார்கள். பன்னிரண்டு சாட்சிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது; ஆனால் பிற்பாடு அது 15 வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டது.
இன்று, பெர்லினில் உள்ள முன்னாளைய ஷ்டாசி தலைமையகத்திற்கு எப்போது சென்றாலும் அங்கு வைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை பார்வையிடலாம்; அது, கிழக்கு ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் 40 ஆண்டுகளாக அரசாங்கத்தால் துன்புறுத்தப்பட்டதை சித்தரித்துக் காட்டுகிறது. அங்கே உள்ள ஃபோட்டோக்களும் தனிப்பட்டவர்களைப் பற்றிய விவரப்பதிவுகளும், துன்புறுத்தல் பற்றியெரிந்த சமயத்தில் உண்மை காத்த சாட்சிகளின் தைரியத்திற்கும் ஆவிக்குரிய பலத்திற்கும் மௌன சாட்சி பகருகின்றன.
[பக்கம் 24, 25-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
கிழக்கு ஜெர்மனி
ரூடலஷ்டாட்
பெல்ட்சிக்
டோர்கௌ
கெம்னிட்ஸ்
ஸ்விக்கௌ
[பக்கம் 25-ன் படம்]
ஸ்விக்கௌ நகரிலிருந்த ஓஸ்டஷ்டைன் அரண்மனை
[படத்திற்கான நன்றி]
Fotosammlung des Stadtarchiv Zwickau, Deutschland
[பக்கம் 26-ன் படம்]
என் மனைவி ஏரிக்காவுடன்