ஜீவனுள்ள தேவனுடைய வழிநடத்துதலை பின்பற்றுங்கள்
“வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்[புங்கள்].”—அப்போஸ்தலர் 14:15.
1, 2. யெகோவாவை ‘ஜீவனுள்ள தேவனாக’ ஏற்றுக்கொள்வது ஏன் பொருத்தமானது?
லீஸ்திராவில் அப்போஸ்தலன் பவுலும் பர்னபாவும் ஒரு மனிதனை சுகப்படுத்தினார்கள்; அதைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் பவுல் இவ்வாறு கூறினார்: “நாங்களும் உங்களைப் போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்ப வேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.”—அப்போஸ்தலர் 14:15.
2 யெகோவா “ஜீவனுள்ள தேவன்,” உயிரற்ற விக்கிரகம் அல்ல என்பது எவ்வளவு உண்மை! (எரேமியா 10:10; 1 தெசலோனிக்கேயர் 1:9, 10) யெகோவா உயிருள்ளவர் மட்டுமல்லாமல், நம் உயிரின் ஊற்றுமூலராகவும் விளங்குகிறார். ‘எல்லாருக்கும் ஜீவனையும் சுவாசத்தையும் சகலத்தையும் கொடுக்கிறார்.’ (அப்போஸ்தலர் 17:25) இன்றும் என்றும் வாழ்க்கையை நாம் அனுபவித்து மகிழ வேண்டும் என்பதில் அக்கறை உடையவராக இருக்கிறார். பவுல் மேலும் இவ்வாறு கூறினார்: “அவர் நன்மை செய்து வந்து, வானத்திலிருந்து மழைகளையும் செழிப்புள்ள காலங்களையும் நமக்குத் தந்து, ஆகாரத்தினாலும் சந்தோஷத்தினாலும் நம்முடைய இருதயங்களை நிரப்பி, இவ்விதமாய் அவர் தம்மைக் குறித்துச் சாட்சி விளங்கப் பண்ணாதிருந்ததில்லை.”—அப்போஸ்தலர் 14:17.
3. கடவுளுடைய வழிநடத்துதலில் நாம் ஏன் நம்பிக்கை வைக்கலாம்?
3 கடவுளுக்கு நம் உயிரின் மீது அக்கறை இருப்பதால் அவருடைய வழிநடத்துதலில் நம்பிக்கை வைப்பது நியாயமானதே. (சங்கீதம் 147:8; மத்தேயு 5:45) ஆனால் சிலர் பைபிள் கட்டளை எதையாவது புரிந்துகொள்ள முடியாததால் அல்லது அது தங்களைக் கட்டுப்படுத்துவதாக நினைப்பதால் அவருடைய வழிநடத்துதலை ஏற்காதிருக்கக்கூடும். என்றாலும், யெகோவாவின் வழிநடத்துதலில் நம்பிக்கை வைப்பது ஞானமானதென நிரூபிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பிணத்தைத் தொடக்கூடாது என்ற கட்டளையை ஓர் இஸ்ரவேலன் புரிந்துகொள்ளாதபோதிலும் அதற்குக் கீழ்ப்படிவதன் மூலம் பயனடைந்தான். முதலாவதாக, கீழ்ப்படிந்து நடப்பது ஜீவனுள்ள தேவனிடம் நெருங்கிவரச் செய்தது. இரண்டாவதாக, நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள உதவி செய்தது.—லேவியராகமம் 5:2; 11:24.
4, 5. (அ) கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முன்பு, இரத்தம் சம்பந்தமாக யெகோவா தந்த வழிநடத்துதல் என்ன? (ஆ) இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய வழிநடத்துதல் கிறிஸ்தவர்களுக்குப் பொருந்துகிறது என்று நாம் எப்படி அறிந்துகொள்கிறோம்?
4 இதுபோலத்தான் இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய வழிநடத்துதலும் இருக்கிறது. மனிதர் இரத்தத்தைப் புசிக்கக் கூடாதென அவர் நோவாவிடம் கூறினார். பாவ மன்னிப்புக்காக பலிபீடத்தின் மீது பலியாக செலுத்துவதற்கு மட்டுமே இரத்தத்தைப் பயன்படுத்த வேண்டும் என நியாயப்பிரமாணத்தின் மூலம் கடவுள் வெளிப்படுத்தினார். இந்தக் கட்டளைகள் மூலம் இரத்தத்தை உன்னதமான விதத்தில் உபயோகிப்பதற்கான அஸ்திவாரத்தை கடவுள் போட்டார்; இயேசுவின் கிரயபலியின் மூலம் உயிர்களைக் காப்பதே அந்த உபயோகம். (எபிரெயர் 9:14) ஆம், நம் உயிரையும் நலனையும் மனதிற்கொண்டே கடவுள் இந்த வழிநடத்துதலைக் கொடுத்தார். ஆதியாகமம் 9:4-ஐப் பற்றி பேசுகையில், 19-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பைபிள் அறிஞர் ஆடம் கிளார்க் இவ்வாறு எழுதினார்: “[நோவாவுக்குக் கொடுக்கப்பட்ட] இந்தக் கட்டளைக்கு கிழக்கத்திய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் மிகவும் கவனமாக கீழ்ப்படிகிறார்கள். . . . நியாயப்பிரமாணத்தின்படி எந்த இரத்தமும் புசிக்கப்படவில்லை, ஏனெனில் அது உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படவிருந்த இரத்தத்தின் மீது கவனத்தை ஒருமுகப்படுத்தியது; சுவிசேஷத்தின்படி, அதை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பாவ மன்னிப்புக்காக சிந்தப்பட்ட இரத்தத்தைக் குறிப்பதாக அதை எப்போதும் கருத வேண்டும்.”
5 இந்த அறிஞர் இயேசுவை மையமாகக் கொண்ட அடிப்படை சுவிசேஷத்தை, அல்லது நற்செய்தியைக் குறிப்பிட்டிருக்கலாம். நாம் நித்திய ஜீவனை அடைய கடவுள் தமது குமாரனை நமக்காக மரிப்பதற்கு, அதாவது உயிராகிய இரத்தத்தைச் சிந்துவதற்கு அனுப்பியதே அந்த நற்செய்தி. (மத்தேயு 20:28; யோவான் 3:16; ரோமர் 5:8, 9) கிறிஸ்துவைப் பின்பற்றுவோர் இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டும் என பிற்பாடு கொடுக்கப்பட்ட கட்டளையையும் அந்த அறிஞர் குறிப்பிட்டிருந்தார்.
6. இரத்தம் சம்பந்தமாக கிறிஸ்தவர்களுக்கு என்ன கட்டளைகள் கொடுக்கப்பட்டன, ஏன்?
6 இஸ்ரவேலருக்கு நூற்றுக்கணக்கான சட்டதிட்டங்களைக் கடவுள் கொடுத்தார் என்று உங்களுக்குத் தெரியும். இயேசு மரித்தப் பின்பு, அவருடைய சீஷர்கள் அந்தச் சட்டங்கள் எல்லாவற்றையும் கைக்கொள்வதற்குக் கடமைப்பட்டவர்களாக இல்லை. (ரோமர் 7:4, 6; கொலோசெயர் 2:13, 14, 17; எபிரெயர் 8:6, 13) எனினும், சிறிது காலத்திற்குப் பின் ஆண்கள் விருத்தசேதனம் செய்யும் முக்கிய கடமையைப் பற்றி ஒரு கேள்வி எழும்பியது. கிறிஸ்துவின் இரத்தத்திலிருந்து பயனடைய விரும்பிய யூதரல்லாதவர்கள் தாங்கள் இன்னும் நியாயப்பிரமாணத்தின்கீழ் இருப்பதைக் காட்டுவதற்கு விருத்தசேதனம் செய்துகொள்ள வேண்டுமா என்பதே அந்தக் கேள்வி. பொ.ச. 49-ல், கிறிஸ்தவ ஆளும் குழுவினர் அந்தப் பிரச்சினையைக் குறித்து விவாதித்தார்கள். (அப்போஸ்தலர், அதிகாரம் 15) விருத்தசேதனம் செய்ய வேண்டிய கட்டாயம் நியாயப்பிரமாணத்தோடு முடிவடைந்தது என்பதை கடவுளுடைய ஆவியின் உதவியால் அப்போஸ்தலரும் மூப்பரும் தீர்மானித்தார்கள். என்றபோதிலும், கடவுள் தந்த சில கட்டளைகள் இன்னும் கிறிஸ்தவர்களைக் கட்டுப்படுத்தின. சபைக்கு அனுப்பிய ஓர் கடிதத்தில் ஆளும் குழுவினர் இவ்வாறு எழுதினர்: “விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளுக்கும், இரத்தத்திற்கும், நெருக்குண்டு செத்ததிற்கும், வேசித்தனத்திற்கும், நீங்கள் விலகியிருக்க வேண்டுமென்பதே. அவசியமான இவைகளையல்லாமல் பாரமான வேறொன்றையும் உங்கள்மேல் சுமத்தாமலிருப்பது பரிசுத்த ஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது; இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும்.”—அப்போஸ்தலர் 15:28, 29.
7. ‘இரத்தத்திற்கு விலகியிருப்பது’ கிறிஸ்தவர்களுக்கு எந்தளவு முக்கியம்?
7 பாலியல் ஒழுக்கக்கேட்டிற்கு அல்லது விக்கிரக வழிபாட்டிற்கு விலகியிருப்பது போல் ‘இரத்தத்திற்கு விலகியிருப்பதும்’ முக்கியமான நெறிமுறை என ஆளும் குழுவினர் கருதியது தெளிவாக தெரிகிறது. இரத்தத்தின் மீதான தடை மிக முக்கியம் என்பதை இது நிரூபிக்கிறது. மனந்திரும்பாமல் விக்கிரகாராதனையில் அல்லது பாலியல் ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுகிற கிறிஸ்தவர்கள் ‘தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிக்க’ முடியாது; அவர்கள் ‘இரண்டாம் மரணத்தில் . . . பங்கடைவார்கள்.’ (1 கொரிந்தியர் 6:9, 10; வெளிப்படுத்துதல் 21:8; 22:15) இங்கு வித்தியாசத்தைக் கவனியுங்கள்: இரத்தத்தின் பரிசுத்தத் தன்மையைப் பற்றிய கடவுளுடைய வழிநடத்துதலைப் புறக்கணிப்பது நித்திய மரணத்தில் விளைவடையும். இயேசுவின் பலிக்கு மதிப்பு கொடுப்பது நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும்.
8. இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய அறிவுரைக்கு ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கவனம் செலுத்தினார்கள் என்பதை எது காட்டுகிறது?
8 இரத்தத்தைப் பற்றிய கடவுளுடைய வழிநடத்துதலை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் எவ்வாறு புரிந்துகொண்டு அதற்கு இசைவாக செயல்பட்டார்கள்? கிளார்க் சொன்ன குறிப்பை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்: “சுவிசேஷத்தின்படி, அதை சாப்பிடக் கூடாது, ஏனெனில் பாவ மன்னிப்புக்காக சிந்தப்பட்ட இரத்தத்தைக் குறிப்பதாக அதை எப்போதும் கருத வேண்டும்.” ஆரம்பகால கிறிஸ்தவர்கள் இதை மிக முக்கியமாக கருதினார்கள் என்பதை சரித்திரம் உறுதிப்படுத்துகிறது. டெர்ட்டுல்லியன் இவ்வாறு எழுதினார்: “இரத்த வெறிபிடித்த ஆட்கள் காக்காய் வலிப்பு நோயைச் சுகப்படுத்துவதற்கு . . . ஒரு வட்டரங்கு காட்சியில் கொடிய குற்றவாளிகளின் இரத்தத்தை பேராசையோடு எடுத்துச் செல்வதை கவனியுங்கள்.” புறமதத்தவர்கள் இரத்தத்தை சாப்பிட்டார்கள், கிறிஸ்தவர்களோ “மிருகத்தின் இரத்தத்தையும்கூட [தங்கள்] சாப்பாடுகளில் சேர்ப்பதில்லை. . . . கிறிஸ்தவர்களை விசாரணை செய்யும்போது இரத்தம் தோய்ந்த இறைச்சியை அவர்களுக்கு கொடுக்கிறீர்கள். ஆனால் அது அவர்களுடைய சட்டத்துக்கு முரணானது என்பதை நீங்கள் ஏற்கெனவே அறிந்திருக்கிறீர்கள்.” ஆம், மரண பயமுறுத்தல்களை எதிர்ப்பட்டபோதிலும் கிறிஸ்தவர்கள் இரத்தத்தை சாப்பிடவில்லை. கடவுளுடைய வழிநடத்துதல் அவர்களுக்கு அவ்வளவு முக்கியமாக இருந்தது.
9. இரத்தத்திற்கு விலகியிருப்பதில், அதை அப்படியே சாப்பிடாதிருப்பது மட்டுமல்லாமல் வேறு எதுவும் உட்பட்டிருந்தது?
9 கிறிஸ்தவர்கள் இரத்தத்தை அப்படியே குடிப்பதைத்தான் அல்லது இரத்தம் நீக்கப்படாத மாம்சத்தையோ இரத்தம் கலந்த உணவையோ சாப்பிடுவதைத்தான் ஆளும் குழு அர்த்தப்படுத்தியதாக சிலர் ஒருவேளை நினைக்கலாம். நோவாவுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய கட்டளையின் முதல் உட்கருத்தும் அதுதான் என்பது உண்மை. மேலும், அப்போஸ்தலரின் கட்டளை, ‘நெருக்குண்டு செத்ததற்கு விலகியிருக்க வேண்டும்,’ அதாவது இரத்தம் வடிக்கப்படாத மாம்சத்திற்கு விலகியிருக்க வேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்கு சொன்னதுகூட உண்மை. (ஆதியாகமம் 9:3, 4; அப்போஸ்தலர் 21:25) என்றாலும், இதில் இன்னுமதிக உட்கருத்து இருந்ததை ஆரம்பகால கிறிஸ்தவர்கள் அறிந்திருந்தார்கள். சில சமயங்களில் மருத்துவ காரணங்களுக்காக இரத்தம் உட்கொள்ளப்பட்டது. காக்காய் வலிப்பு நோயை சுகப்படுத்த புறமதத்தினர் சிலர் இரத்தத்தை அப்படியே குடித்தனர் என டெர்ட்டுல்லியன் குறிப்பிட்டார். நோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கு அல்லது உடல்நலனை மேம்படுத்துவதற்கு என வேறு காரணங்களுக்காகவும் இரத்தம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆகையால், கிறிஸ்தவர்கள் இரத்தத்திற்கு விலகியிருப்பது, “மருத்துவ” காரணங்களுக்காக அதை உட்கொள்ளாதிருப்பதையும் அர்த்தப்படுத்தியது. தங்கள் உயிர் ஆபத்தில் இருந்தாலும்கூட அந்த நிலைநிற்கையை அவர்கள் காத்துக்கொண்டார்கள்.
இரத்தத்தை மருந்தாக பயன்படுத்துதல்
10. மருத்துவத்தில் என்னென்ன வழிகளில் இரத்தம் பயன்படுத்தப்படுகிறது, இது என்ன கேள்வியை எழுப்புகிறது?
10 இரத்தத்தை மருத்துவ நோக்கங்களுக்குப் பயன்படுத்துவது இப்போது சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரம்பத்தில் இரத்தம் நேரடியாக ஏற்றப்பட்டது, அதாவது இரத்ததானம் செய்பவரிடமிருந்து எடுத்து, சேமித்து வைக்கப்பட்டு நோயாளிக்கு ஏற்றப்பட்டது; ஒருவேளை போரில் காயம் அடைந்தவருக்கு ஏற்றப்பட்டது. காலப்போக்கில், இரத்தத்திலிருந்து அதன் முக்கிய பாகங்களை (primary Components) பிரிப்பதற்கு ஆராய்ச்சியாளர்கள் கற்றுக்கொண்டனர். இப்படி பிரித்த பாகங்களை ஏற்றுவதனால், தானம் செய்யப்பட்ட இரத்தத்தை அதிகமான நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்க முடிந்தது; காயம்பட்ட ஒருவருக்கு ஒருவேளை பிளாஸ்மாவையும், மற்றொருவருக்கு சிவப்பு அணுக்களையும் அவர்கள் பயன்படுத்தினார்கள். கூடுதலான ஆராய்ச்சியின் விளைவாக, பிளாஸ்மா போன்ற இரத்தத்தின் முக்கிய பாகம் ஒன்றை எண்ணற்ற சிறு கூறுகளாக (fractions) பிரித்தெடுக்க முடிந்தது, இவற்றை இன்னும் பல நோயாளிகளுக்குப் பயன்படுத்த முடியும் என கண்டுபிடிக்கப்பட்டது. இந்த முயற்சிகள் தொடருகின்றன; இத்தகைய சிறு கூறுகளின் புதிய உபயோகங்களைப் பற்றி அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவற்றை ஏற்றுக்கொள்வதைப் பற்றி ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு உணர வேண்டும்? அவர் இரத்தத்தை ஒருபோதும் ஏற்கக்கூடாது என உறுதியாய்த் தீர்மானித்திருக்கிறார் என வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் அதிலுள்ள ஒரு முக்கிய பாகத்தை, ஒருவேளை சிகப்பு அணுக்களை ஏற்கும்படி மருத்துவர் அவரை வற்புறுத்துகிறார். அல்லது இரத்தத்தின் ஒரு முக்கிய பாகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறு கூறை ஏற்கும்படி வற்புறுத்துகிறார். இரத்தம் புனிதமானது என்பதையும் கிறிஸ்துவின் இரத்தம் விசேஷ கருத்தில் உயிரைக் காக்கிறது என்பதையும் மனதில் வைத்து, இத்தகைய சூழ்நிலையில் கடவுளுடைய ஊழியர் எவ்வாறு தீர்மானம் எடுக்கலாம்?
11. மருத்துவ ரீதியில் இரத்தம் சம்பந்தமாக சாட்சிகள் வெகுகாலமாக எடுத்து வந்திருக்கும் சரியான நிலைநிற்கை என்ன?
11 பல ஆண்டுகளுக்கு முன்னரே யெகோவாவின் சாட்சிகள் தங்கள் நிலைநிற்கையைத் தெளிவுபடுத்தினார்கள். உதாரணமாக, த ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் என்பதில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்கள். (நவம்பர் 27, 1981 இதழில் வெளிவந்த அந்த கட்டுரை இரத்தம் எவ்வாறு உங்கள் உயிரை காக்கக்கூடும்? என்ற சிற்றேட்டில் பக்கங்கள் 27-9-ல் மறுபடியும் அச்சிடப்பட்டது.)a அந்தக் கட்டுரை, ஆதியாகமம், லேவியராகமம், அப்போஸ்தலருடைய நடபடிகள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள் காட்டியது. அது இவ்வாறு சொன்னது: ‘இந்த வசனங்கள் மருத்துவ சொற்களில் சொல்லப்படவில்லை என்றாலும், முழு இரத்தம், சேமிக்கப்பட்ட சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் பிளாஸ்மா உடலில் ஏற்றப்படுவதையும் வெள்ளை இரத்த அணுக்களும் பிளேட்லெட்டுகளும் கொடுக்கப்படுவதையும் தடை செய்கின்றன என்று சாட்சிகள் கருதுகின்றனர்.’ 2001-ல் வெளியிடப்பட்ட அவசர கவனிப்பு (ஆங்கிலம்) என்ற பாடநூல், “இரத்தத்தின் கலவை” என்பதன்கீழ் இவ்வாறு சொன்னது: “இரத்தம் என்பது பிளாஸ்மா, சிவப்பு மற்றும் வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் ஆகிய பல பொருட்கள் அடங்கிய ஒன்றாகும்.” ஆகவே, மருத்துவ உண்மைகளுக்கு ஏற்றவாறு, முழு இரத்தமாக இருந்தாலும்சரி அல்லது அதிலுள்ள நான்கு முக்கிய பாகங்களில் ஒன்றாக இருந்தாலும்சரி சாட்சிகள் அவற்றை உடலில் ஏற்றிக்கொள்ள மறுக்கின்றனர்.
12. (அ) இரத்தத்தின் முக்கிய பாகங்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறு கூறுகள் சம்பந்தமாக என்ன நிலைநிற்கை விளக்கப்பட்டது? (ஆ) இதைப் பற்றிய கூடுதலான தகவலை எங்கு காணலாம்?
12 அந்த மருத்துவ கட்டுரை தொடர்ந்து இவ்வாறு கூறியது: ‘அல்ப்யூமின், தடைகாப்பு செய்யும் புரதங்கள், இரத்த ஒழுக்கைத் தடுக்கும் கலவைகள் போன்றவற்றை பயன்படுத்துவதை சாட்சிகளின் மத நம்பிக்கை முற்றிலும் தடை செய்வதில்லை; இவற்றை ஏற்கலாமா என்பதை அவரவரே தனிப்பட்ட விதமாக தீர்மானிக்க வேண்டும்.’ 1981 முதற்கொண்டு, பல சிறு கூறுகள் (நான்கு முக்கிய பாகங்களில் ஒன்றிலிருந்து பிரிக்கப்பட்டவை) மருத்துவ உபயோகத்திற்கு ஒதுக்கி வைக்கப்பட்டன. இதற்கிசைய, ஜூன் 15, 2000 காவற்கோபுரம், “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியில் இந்த விஷயத்தின் பேரில் பயனுள்ள தகவலை அளித்தது. இன்றுள்ள லட்சக்கணக்கான வாசகரின் நன்மைக்காக இந்தப் பத்திரிகையில் 29-31-ம் பக்கங்களில் அது மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது நுணுக்கமான விவரங்களையும் நியாயமான காரணங்களையும் அளிக்கிறது. இருந்தாலும், 1981-ல் அளிக்கப்பட்ட முக்கியமான கருத்துக்களுடன் அது ஒத்திருக்கிறது என்பதை நீங்கள் காண்பீர்கள்.
உங்கள் மனசாட்சி வகிக்கும் பாகம்
13, 14. (அ) மனசாட்சி என்றால் என்ன, இரத்தம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இது எவ்வாறு செயல்படுகிறது? (ஆ) மாம்சம் புசிப்பதைப் பற்றியதில் என்ன வழிநடத்துதலை இஸ்ரவேலருக்கு கடவுள் கொடுத்தார், ஆனால் என்ன கேள்விகள் எழும்பியிருக்கலாம்?
13 இத்தகைய தகவல் மனசாட்சியின்படி செயல்படுவதைத் தேவைப்படுத்துகிறது. ஏன்? ஏனென்றால் கடவுளுடைய வழிநடத்துதலைப் பின்பற்றுவதன் அவசியத்தை கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்; இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் சொந்தத் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது, இதில் மனசாட்சி உட்பட்டுள்ளது. மனசாட்சி என்பது பெரும்பாலும் நெறிமுறைகள் சம்பந்தமான விஷயங்களை சீர்தூக்கிப் பார்த்து தீர்மானம் எடுப்பதற்கு ஒருவர் பெற்றிருக்கும் உள்ளார்ந்த ஆற்றலாகும். (ரோமர் 2:14, 15) என்றாலும், ஒவ்வொருவருடைய மனசாட்சியும் வேறுபடுவதை நீங்கள் அறிவீர்கள்.b சிலருக்கு ‘பலவீனமுள்ள மனசாட்சி’ இருப்பதாக பைபிள் குறிப்பிடுகிறது; அப்படியானால் மற்றவர்களுக்கு பலமான மனசாட்சி இருப்பதை இது மறைமுகமாக தெரிவிக்கிறது. (1 கொரிந்தியர் 8:12) கடவுளுடைய சித்தம் என்ன என்பதைக் கற்றுக்கொள்வதிலும், அவருடைய எண்ணத்தை அறிந்து கொள்வதிலும், தீர்மானங்கள் எடுக்கும்போது அவற்றைப் பின்பற்றுவதிலும் கிறிஸ்தவர்கள் வெவ்வேறு அளவில் முன்னேற்றம் செய்திருக்கின்றனர். யூதர்களையும் அவர்கள் மாம்சம் புசிக்கும் விஷயத்தையும் வைத்து இதை நாம் விளக்கலாம்.
14 கடவுளுக்குக் கீழ்ப்படிகிற ஒருவர் இரத்தம் வடிக்கப்படாத மாம்சத்தைப் புசிக்க மாட்டார் என்று பைபிள் தெளிவாகத் தெரிவிக்கிறது. அந்தக் கட்டளை அந்தளவு முக்கியமானதாக இருந்ததால், மிக அவசரமான சூழ்நிலையிலும் இஸ்ரவேல் போர்வீரர்கள் இரத்தம் வடிக்கப்படாத மாம்சத்தைப் புசித்தபோது வினைமையான குற்றத்திற்கு அல்லது பாவத்திற்கு ஆளானார்கள். (உபாகமம் 12:15, 16; 1 சாமுவேல் 14:31-35) இருப்பினும், இஸ்ரவேலரின் மனதில் இதுபோன்ற கேள்விகள் எழும்பியிருக்கலாம்: ஆட்டை வெட்டும்போது, அதன் இரத்தத்தை எவ்வளவு விரைவில் வடித்துவிட வேண்டும்? வடிய வைப்பதற்கு அந்த மிருகத்தின் கழுத்தை அறுக்க வேண்டுமா? அந்த ஆட்டின் பின்னங்கால்களைக் கட்டி தொங்கவிட வேண்டுமா? எவ்வளவு நேரத்திற்கு? ஒரு பெரிய மாட்டின் இரத்தத்தை எவ்வாறு வடிய வைப்பது? வடித்தெடுத்த பின்பும் சிறிது இரத்தம் அந்த இறைச்சியில் இருக்கலாம், அத்தகைய மாம்சத்தை புசிக்கலாமா? தீர்மானிப்பது யார்?
15. மாம்சம் புசிப்பதைக் குறித்ததில் யூதர்கள் சிலர் எப்படி பிரதிபலித்தார்கள், ஆனால் கடவுள் என்ன வழிநடத்துதலை அளித்தார்?
15 வைராக்கியமுள்ள யூதர் ஒருவர் இத்தகைய கேள்விகளை எதிர்ப்பட்டதைக் கற்பனை செய்து பாருங்கள். இறைச்சியைக் கடையில் வாங்கி சாப்பிடாதிருப்பது நல்லது என அவர் நினைத்திருக்கலாம். வேறொருவரோ அது ஒருவேளை விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டிருக்கலாம் என நினைத்து மாம்சம் சாப்பிடாமல் இருந்திருக்கலாம். இன்னும் சில யூதர்களோ சில சடங்காச்சார முறைகளை செய்து இரத்தத்தை நீக்கிய பின்பே மாம்சத்தை புசித்திருக்கலாம்.c (மத்தேயு 23:23, 24) இத்தகைய மாறுபட்ட பல்வேறு பிரதிபலிப்புகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அதோடு, எப்படி பிரதிபலிக்க வேண்டும் என கடவுள் நேரடியாக சொல்லாதிருந்ததால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் என்ன செய்ய வேண்டுமென நேரடியாக குறிப்பிடும்படி ரபீக்களின் பேரவைக்கு யூதர்கள் கேள்விகளை அனுப்புவது சிறந்ததாக இருந்திருக்குமா? இத்தகைய பழக்கம் யூத மதத்தில் தோன்றியபோதிலும், இரத்தம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு இவ்வாறு பதிலை பெறும்படி உண்மையான வணக்கத்தாரிடம் யெகோவா சொல்லாததற்காக நாம் சந்தோஷப்படலாம். சுத்தமான மிருகங்களைக் கொன்று, இரத்தத்தை வடியவிடுவதன் பேரில் அடிப்படை வழிநடத்துதலை கடவுள் அளித்தார், அதற்கு மேலான நுணுக்கங்களை அவர் கொடுக்கவில்லை.—யோவான் 8:32.
16. இரத்தத்தின் ஒரு முக்கிய பாகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒரு சிறு கூறை ஊசியின் மூலம் ஏற்பதைப் பற்றி கிறிஸ்தவர்களுக்கு ஏன் வெவ்வேறுபட்ட கருத்துக்கள் இருக்கக்கூடும்?
16 பாராக்கள் 11, 12-ல் குறிப்பிட்டபடி, இரத்தமேற்றுதலை யெகோவாவின் சாட்சிகள் ஏற்பதில்லை, அது முழு இரத்தமாக இருந்தாலும்சரி அதன் நான்கு முக்கிய பாகங்களாகிய பிளாஸ்மா, சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் ஆகியவையாக இருந்தாலும்சரி, எவற்றையும் அவர்கள் ஏற்பதில்லை. அதன் முக்கிய பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சிறு கூறுகளைப் பற்றியென்ன? உதாரணமாக, நோயை ஒழிப்பதற்குரிய அல்லது பாம்பின் விஷத்தை முறிப்பதற்குரிய நோய் எதிர்ப்பு பொருட்கள் அடங்கிய சீரம்களைப் பற்றியென்ன? (பக்கம் 30, பாரா 4-ல் காண்க.) இத்தகைய நுண்ணிய கூறுகள் உண்மையில் இரத்தமல்ல என்றும், அதன் காரணமாக, ‘இரத்தத்திற்கு விலகியிருக்க’ வேண்டுமென்ற கட்டளையில் இது உட்படாது என்றும் சிலர் முடிவு செய்திருக்கிறார்கள். (அப்போஸ்தலர் 15:29; 21:25; பக்கம் 31, பாரா 1) அது அவர்களுடைய சொந்த தீர்மானம். வேறு சிலருடைய மனசாட்சியோ இரத்தத்திலிருந்து பெறப்படும் எதையும், ஒரு முக்கிய பாகத்திலிருந்து பிரித்தெடுக்கப்படும் மிக நுண்ணிய கூறையும்கூட ஏற்காதிருக்கும்படி சொல்கிறது.d இன்னும் சிலரோ நோயை எதிர்க்க அல்லது பாம்பின் விஷத்தை முறிக்க பிளாஸ்மா புரோட்டீனை ஊசி மூலம் ஏற்கக்கூடும், என்றாலும் மற்ற சிறு கூறுகளை அவர்கள் ஏற்காமல் ஒதுக்கிவிடக்கூடும். அதோடு, இரத்தத்தின் நான்கு முக்கிய பாகங்களில் ஒன்றிலிருந்து பெறப்படும் சில பொருட்கள் முழு இரத்தத்தைப் போலவே செயல்பட்டு உயிர் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதால் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அவற்றை ஏற்றிக்கொள்வதை ஆட்சேபணைக்குரியதாக கருதுகிறார்கள்.
17. (அ) இரத்தத்தின் சிறு கூறுகளைப் பற்றிய கேள்விகளைத் தீர்ப்பதில் நம் மனசாட்சி எவ்வாறு உதவியாக இருக்கலாம்? (ஆ) இந்த விஷயத்தின் பேரில் தீர்மானங்கள் எடுப்பது ஏன் மிக முக்கியம்?
17 அத்தகைய தீர்மானங்கள் எடுக்கையில் மனசாட்சியைப் பற்றி பைபிள் சொல்வது உதவியாக உள்ளது. முதற்படி என்னவென்றால், கடவுளுடைய வார்த்தை சொல்வதை அறிந்துகொண்டு, அதன்படி உங்கள் மனசாட்சியை பக்குவப்படுத்த முயற்சி செய்வதாகும். உங்களுக்காக மற்றவர்களைத் தீர்மானம் எடுக்கச் சொல்லாமல் கடவுளுடைய வழிநடத்துதலுக்கு இசைய நீங்களே தீர்மானிக்க இது உங்களுக்கும் உதவும். (சங்கீதம் 25:4, 5) இரத்தத்தின் சிறு கூறுகளை உட்கொள்வது, ‘மனசாட்சிப்படி செய்ய வேண்டிய காரியம், ஆகையால் அதிக முக்கியமானதல்ல’ என சிலர் நினைத்திருக்கிறார்கள். இப்படி நினைப்பது தவறு. மனசாட்சிப்படி தீர்மானம் எடுக்க வேண்டியதாக இருப்பதால் அது முக்கியமானதல்ல என்று அர்த்தமாகிவிடாது. அது உண்மையில் அதிக முக்கியமானதாக இருக்கலாம். ஒரு காரணம் என்னவென்றால், அது வேறொருவருடைய மனசாட்சியைப் பாதிக்கக்கூடும். ஒருவேளை விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டு, பின்பு மார்கெட்டில் விற்கப்படும் மாம்சத்தைப் பற்றிய பவுலின் அறிவுரையிலிருந்து இதை நாம் தெரிந்துகொள்கிறோம். ‘பலவீனமுள்ள மனச்சாட்சிகளைப் புண்படுத்தாதிருப்பதில்,’ ஒரு கிறிஸ்தவர் அக்கறை காட்ட வேண்டும். மற்றவர்களை இடறலடையச் செய்தால், ‘தன் சகோதரனுக்காக கிறிஸ்து மரித்திருக்கையில் அவரை கெடுக்கிறவராகவும்’ கிறிஸ்துவுக்கு விரோதமாக பாவம் செய்கிறவராகவும் இருப்பார். ஆகையால், இரத்தத்தின் சிறு கூறுகளைப் பற்றிய கேள்விகள் அவரவருடைய சொந்தத் தீர்மானமாக இருக்கிறபோதிலும், அதை மிக முக்கியமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 8:8, 11-13; 10:25-31.
18. இரத்தத்தைப் பற்றிய தீர்மானங்களைச் செய்கையில், தன் மனசாட்சி மழுங்கிப் போவதை ஒரு கிறிஸ்தவர் எவ்வாறு தவிர்க்கலாம்?
18 இரத்தத்தைப் பற்றிய தீர்மானங்களை எடுப்பது எந்தளவு முக்கியம் என்பதை மற்றொரு குறிப்பு வலியுறுத்திக் காட்டுகிறது. இந்த அம்சம் தனிப்பட்ட விதமாக உங்கள் மீது ஏற்படுத்தும் பாதிப்பைப் பற்றியது. இரத்தத்தின் சிறு கூறை ஏற்றுக்கொள்வது பைபிளால் பயிற்றுவிக்கப்பட்ட உங்கள் மனசாட்சியை உறுத்துகிறதென்றால், அதை நீங்கள் அசட்டை செய்யக்கூடாது. “இதில் ஒன்றுமில்லை, பலரும் இதை ஏற்றிருக்கிறார்கள்” என்று எவராவது சொல்லுகையில் உங்கள் மனசாட்சியை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது. இன்று லட்சக்கணக்கான ஆட்கள் தங்கள் மனசாட்சியைப் பொருட்படுத்துவதில்லை, பொய் சொல்லும் அளவுக்கு அல்லது தயங்காமல் தவறான காரியங்களைச் செய்யும் அளவுக்கு அவர்களது மனசாட்சி மழுங்கிப் போயிருக்கிறது. அப்படிப்பட்ட மனப்பான்மையை கிறிஸ்தவர்கள் நிச்சயமாய் தவிர்க்க விரும்புகிறார்கள்.—2 சாமுவேல் 24:10; 1 தீமோத்தேயு 4:1.
19. இரத்தம் சம்பந்தப்பட்ட மருத்துவ பிரச்சினைகளை எதிர்ப்படுகையில், மனதில் வைக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்ன?
19 பக்கங்கள் 29-31-ல் மீண்டும் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையின் கடைசி பகுதி இவ்வாறு சொல்கிறது: “ஒவ்வொருவருடைய கருத்துக்களும் மனசாட்சியின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளும் வித்தியாசப்படுவதால், இது முக்கியத்துவமற்ற விஷயமாகிவிடுகிறதா? இல்லவே இல்லை. இது மிகவும் முக்கியமான விஷயம்.” குறிப்பாக, ‘ஜீவனுள்ள கடவுளிடம்’ உங்கள் உறவு சம்பந்தப்பட்டிருப்பதால், அது மிகவும் கவனமாக சிந்திக்க வேண்டிய விஷயம். இயேசு சிந்திய இரத்தத்தின் இரட்சிக்கும் வல்லமையின் அடிப்படையிலான அந்த உறவு மட்டுமே நித்திய ஜீவனுக்கு வழிநடத்தக்கூடும். அந்த இரத்தத்தின் மூலம் கடவுள் உயிர்களை இரட்சிப்பதால் அதற்கு ஆழ்ந்த மரியாதை காட்டுங்கள். பவுல் இவ்வாறு எழுதியது பொருத்தமானதே: நீங்கள் ‘அக்காலத்திலே . . . நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள். முன்னே தூரமாயிருந்த நீங்கள் இப்பொழுது கிறிஸ்து இயேசுவுக்குள் கிறிஸ்துவின் இரத்தத்தினாலே சமீபமானீர்கள்.’—எபேசியர் 2:12, 13.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b ஒரு சமயத்தில், சடங்கு முறைப்படி தங்களைச் சுத்திகரித்துக்கொள்ள பவுலும் நான்கு கிறிஸ்தவர்களும் ஆலயத்திற்குச் சென்றார்கள். அப்போது நியாயப்பிரமாணம் அமலில் இல்லை. என்றாலும், எருசலேமில் இருந்த மூப்பரின் ஆலோசனைப்படி பவுல் அவ்வாறு செய்தார். (அப்போஸ்தலர் 21:23-25) ஆனால் அன்றிருந்த கிறிஸ்தவர்கள் சிலர் அவ்வாறு ஆலயத்துக்குச் செல்லாதிருக்கவும், அத்தகைய நடவடிக்கையை எடுக்காதிருக்கவும் ஒருவேளை தீர்மானித்திருக்கலாம். அக்காலத்தில் ஆளுக்கு ஆள் மனசாட்சி வேறுபட்டது, அது போலவே இன்றும் வேறுபடுகிறது.
c “யூத மரபு சட்டத்தின்படி” மாம்சத்தைத் தண்ணீரில் எத்தனை நிமிடங்கள் வைக்க வேண்டும், அதை எவ்வாறு ஒரு மரப் பலகை மீது வைத்து தண்ணீரை வடித்தெடுக்க வேண்டும், அதன் மீது எப்படிப்பட்ட உப்பை தடவ வேண்டும், பின்பு குளிர்ந்த தண்ணீரில் அதை எத்தனை தடவை கழுவ வேண்டும் என்பவற்றைப் பற்றிய “சிக்கல் வாய்ந்த நுணுக்கமான” விவரங்களை என்ஸைக்ளோப்பீடியா ஜூடேய்க்கா தெளிவாக குறிப்பிடுகிறது.
d சில ஊசிமருந்துகளில் காணப்படும் முக்கிய பொருள் இரத்தத்திலிருந்து எடுக்கப்படாத ஒரு செயற்கை (recombinant) பொருளாகும். ஆனால் சில சந்தர்ப்பங்களில், அல்ப்யூமின் போன்ற இரத்தத்தின் சிறு கூறு கொஞ்சம் சேர்க்கப்பட்டிருக்கலாம்.—அக்டோபர் 1, 1994 தேதியிட்ட காவற்கோபுரம் பத்திரிகையில் “வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற பகுதியைக் காண்க.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• இரத்தம் சம்பந்தமாக நோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் கடவுள் என்ன வழிநடத்துதலை கொடுத்தார்?
• இரத்தத்தைக் குறித்ததில், எதை யெகோவாவின் சாட்சிகள் முற்றிலும் மறுக்கிறார்கள்?
• இரத்தத்தின் முக்கிய பாகங்களிலிருந்து எடுக்கப்படும் சிறு கூறுகளை ஏற்பது என்ன கருத்தில் ஒருவருடைய மனசாட்சியைப் பொறுத்தது, ஆனால் அது எதை அர்த்தப்படுத்துவதில்லை?
• தீர்மானங்கள் எடுக்கையில், கடவுளோடுள்ள நம் உறவுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்?
[பக்கம் 22-ன் அட்டவணை]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
இரத்தம் சம்பந்தமாக அடிப்படை நிலைநிற்கை
முழு இரத்தம்
▾ ▾ ▾ ▾
ஏற்கத்தகாதது சிவப்பு அணுக்கள் வெள்ளை அணுக்கள் பிளேட்லெட்டுகள் பிளாஸ்மா
கிறிஸ்தவர்சிறு கூறுகள் ▾ ▾ ▾ ▾
தீர்மானிக்க சிறு கூறுகள் சிறு கூறுகள் சிறு கூறுகள் சிறு கூறுகள்
வேண்டியது
சிவப்பு வெள்ளை பிளேட்லெட்டுவிலிருந்து பிளாஸ்மாகளிலிருந்து
அணுக்களிலிருந்து அணுக்களிலிருந்து
[பக்கம் 20-ன் படம்]
கிறிஸ்தவர்கள் ‘இரத்தத்திற்கு விலகியிருக்க வேண்டுமென்று’ ஆளும் குழு தீர்மானித்தது
[பக்கம் 23-ன் படம்]
இரத்தத்தின் சிறு கூறுகள் சம்பந்தப்பட்ட தீர்மானத்தை நீங்கள் எதிர்ப்படுகையில் உங்கள் மனசாட்சியைப் புறக்கணியாதீர்கள்