மது அருந்துவது பற்றிய சமநிலையான கண்ணோட்டம்
“திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளி பண்ணும்; அதினால் மயங்குகிற [“வழிவிலகிப்போகிற,” Nw] ஒருவனும் ஞானவானல்ல.”—நீதிமொழிகள் 20:1.
1. யெகோவா தந்திருக்கும் நல்ல பரிசுகளுக்காக சங்கீதக்காரன் எவ்வாறு நன்றி தெரிவித்தார்?
“நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கி வருகிறது” என சீஷராகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 1:17) சங்கீதக்காரன், கடவுள் அளித்திருக்கும் ஏராளமான நல்ல பரிசுகளுக்கு நன்றி தெரிவித்து இவ்வாறு பாடினார்: “பூமியிலிருந்து ஆகாரம் உண்டாகும்படி, அவர் மிருகங்களுக்குப் புல்லையும், மனுஷருக்கு உபயோகமான பயிர் வகைகளையும் முளைப்பிக்கிறார். மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும் திராட்சரசத்தையும், அவனுக்கு முகக்களையை உண்டு பண்ணும் எண்ணெயையும், மனுஷனுடைய இருதயத்தை ஆதரிக்கும் ஆகாரத்தையும் விளைவிக்கிறார்.” (சங்கீதம் 104:14, 15) பயிர் வகைகள், ஆகாரம், எண்ணெய் ஆகியவையும் திராட்சரசமும் [ஒயினும்] மற்ற மதுபானங்களும் கடவுள் தந்திருக்கும் அருமையான பரிசுகள். நாம் அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?
2. மதுபானத்தைப் பயன்படுத்துவது சம்பந்தமாக நாம் என்ன கேள்விகளை சிந்திக்கப் போகிறோம்?
2 ஒரு நல்ல பரிசு சரியாக உபயோகிக்கப்படுகையில் மட்டும்தான் நன்மையானது. உதாரணத்திற்கு, தேன் “நல்லது,” ஆனால் “தேனை மிகுதியாய் உண்பது நல்லதல்ல.” (நீதிமொழிகள் 24:13; 25:27) ‘கொஞ்சம் திராட்சரசம்’ அருந்துவது நல்லதாக இருக்கலாம், ஆனால் மதுபானத்தை துஷ்பிரயோகம் செய்வது பெரிய தவறு. (1 தீமோத்தேயு 5:23) “திராட்சரசம் பரியாசஞ்செய்யும், மதுபானம் அமளிபண்ணும்; அதினால் மயங்குகிற [“வழிவிலகிப்போகிற,” NW] ஒருவனும் ஞானவானல்ல” என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதிமொழிகள் 20:1) ஆனால் மதுபானத்தால் வழிவிலகிப்போவது என்றால் என்ன?a எந்தளவு மதுபானம் அளவுக்கதிகமானது? இது சம்பந்தமான சமநிலையான கண்ணோட்டம் என்ன?
மதுபானத்தால் ‘வழிவிலகிப்போதல்’—எப்படி?
3, 4. (அ) வெறிக்கும் அளவுக்கு குடிப்பதை பைபிள் கண்டனம் செய்கிறது என்பதை எது காட்டுகிறது? (ஆ) குடிவெறியின் சில அறிகுறிகள் யாவை?
3 பூர்வ இஸ்ரவேலில், ஒருவருடைய மகன் பெருந்தீனிக்காரனாயும் குடியனாயும் இருந்து வந்தால் அவன் கல்லெறிந்து கொலை செய்யப்பட வேண்டியிருந்தது. (உபாகமம் 21:18-21) கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “சகோதரனென்னப்பட்ட ஒருவன் விபசாரக்காரனாயாவது, பொருளாசைக்காரனாயாவது, விக்கிரகாராதனைக்காரனாயாவது, உதாசினனாயாவது, வெறியனாயாவது [அதாவது, குடிவெறியனாயாவது], கொள்ளைக்காரனாயாவது இருந்தால், அவனோடே கலந்திருக்கக்கூடாது; அப்படிப்பட்டவனுடனேகூடப் புசிக்கவுங்கூடாது.” ஆகவே, வெறிக்கும் அளவுக்கு குடிப்பதை பைபிள் நிச்சயம் கண்டனம் செய்கிறது.—1 கொரிந்தியர் 5:11; 6:9, 10.
4 குடிவெறியின் அறிகுறிகளை பைபிள் இவ்வாறு விவரிக்கிறது: “மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும். உன் கண்கள் பரஸ்திரீகளை நோக்கும் [“விசித்திரமான காட்சிகளைக் காணும்,” NW]; உன் உள்ளம் தாறுமாறானவைகளைப் பேசும்.” (நீதிமொழிகள் 23:31-33) அளவுக்கதிகமாக குடிப்பது விஷப்பாம்பைப் போல் நம்மைக் கடிக்கும்; வியாதியையும் மனக்குழப்பத்தையும் ஏற்படுத்தி நினைவிழக்கவும் செய்யும். குடிவெறியன் கற்பனையில் மிதக்கலாம்; இந்தக் கருத்தில்தான் ‘விசித்திரமான காட்சிகளை’ காண்பான். பொதுவாக வாய்விட்டுச் சொல்ல விரும்பாத தாறுமாறான எண்ணங்களையும் ஆசைகளையும் பற்றி அவன் வாய்கூசாமல் பேசலாம்.
5. மதுபானத்தை வரம்புமீறி குடிப்பது எவ்விதத்தில் ஆபத்தானது?
5 ஒருவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்; மற்றவர்கள் கண்டுபிடித்துவிடும் அளவுக்குக் குடிக்காதிருக்கும்படி அவர் ஜாக்கிரதையாக இருக்கிறார் என்றும் வைத்துக்கொள்வோம். இதில் ஏதாவது தீங்கு இருக்கிறதா? சிலர் பல கிளாஸ் மதுபானம் குடித்தாலும் குடிவெறிக்கான அறிகுறிகள் அவ்வளவாக தெரியாது. அதற்காக அப்படிக் குடிப்பதில் தீங்கில்லை என நினைப்பது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்வதாக இருக்கும். (எரேமியா 17:9) மெதுமெதுவாகவும் படிப்படியாகவும் அவர் மதுபானத்தை அதிகம் சார்ந்திருக்க ஆரம்பித்து, “குடிவெறிக்கு அடிமை”யாகி விடுகிறார். (தீத்து 2:3, பொது மொழிபெயர்ப்பு) மதுபானத்திற்கு அடிமையாவதைப் பற்றி காரலைன் நாப் என்ற எழுத்தாளர் இவ்வாறு சொல்கிறார்: “அது மெல்ல மெல்ல, படிப்படியாக, மறைமுகமாக நடக்கும் ஒன்று.” ஆக, மதுபானத்தை வரம்புமீறி குடிப்பது மிக ஆபத்தான கண்ணி!
6. குடிவெறியையும் பெருந்திண்டியையும் ஏன் தவிர்க்க வேண்டும்?
6 இயேசுவின் பின்வரும் எச்சரிக்கையையும் கவனியுங்கள்: “உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் [அதாவது, குடிவெறியினாலும்] லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்த நாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர் மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும்.” (லூக்கா 21:34, 35) வெறிக்கும் வரை குடித்தால்தான் கெட்ட விளைவுகள் வரும் என்பதில்லை; அதற்கு முன்பே உடல் ரீதியிலும் ஆன்மீக ரீதியிலும் மயக்கமும் மந்தமும் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் ஒருவர் இருக்கையில் யெகோவாவின் நாள் வந்துவிட்டால்?
மதுபான துஷ்பிரயோகத்தின் விளைவுகள்
7. மதுபானத்தைத் துஷ்பிரயோகம் செய்வது ஏன் 2 கொரிந்தியர் 7:1-ல் உள்ள அறிவுரைக்கு இசைவாக இல்லை?
7 மதுபானத்தை ஒருவர் மிதமிஞ்சி பயன்படுத்தினால் அவரது உடலுக்கும் ஆன்மீகத்திற்கும் அநேக ஆபத்துக்கள் வரும். மதுபான துஷ்பிரயோகத்தால் ஈரல் கரணை நோய் (cirrhosis of the liver), சாராய நச்சேற்ற ஈரல் அழற்சி (alcoholic hepatitis), அதோடு, பிதற்றல் (delirium tremens) போன்ற நரம்புக் கோளாறுகள் ஏற்படுகின்றன. காலப்போக்கில் புற்றுநோய், சர்க்கரை நோய், சில இருதய நோய்கள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகியவைகூட ஏற்படலாம். ஆக, மதுபானத்தைத் துஷ்பிரயோகம் செய்வது பின்வரும் பைபிள் அறிவுரைக்கு கொஞ்சமும் இசைவாக இல்லை: “மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.”—2 கொரிந்தியர் 7:1.
8. நீதிமொழிகள் 23:20, 21-ன்படி மதுபான துஷ்பிரயோகத்தின் விளைவுகள் யாவை?
8 மதுபான துஷ்பிரயோகத்தால் பணம் விரயமாகலாம், வேலையும் பறிபோகலாம். பூர்வ இஸ்ரவேலின் ராஜாவான சாலொமோன் இவ்வாறு எச்சரித்தார்: “குடிகாரரோடு சேராதே; பெருந்தீனியரோடு சேர்ந்து கொண்டு அவர்களைப் போலப் புலால் உண்ணாதே. குடிகாரரும் பெருந்தீனியரும் முடிவில் ஏழைகளாவர்; உண்டு குடித்த மயக்கம் கந்தையை உடுத்தும்.”—நீதிமொழிகள் 23:20, 21, பொ.மொ.
9. ஒருவர் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும்போது மதுபானத்தைத் தொடாமலேயே இருந்துவிடுவது ஏன் சிறந்தது?
9 இன்னொரு ஆபத்தைக் குறித்து மதுபான அடிமைத்தனம் பற்றிய என்ஸைக்ளோப்பீடியா (ஆங்கிலம்) இவ்வாறு சொல்கிறது: “மதுபானம், வாகனம் ஓட்டும் திறமைகளை குலைத்துவிடுகிறது; சட்டென செயல்படும் திறன், ஒருங்கிணைப்புத் திறன், கவனம், விழிப்புணர்வு, ஊகித்து செயல்படுவதில் விவேகம் ஆகிய அனைத்தையும்கூட குலைத்துவிடுகிறது என ஆய்வுகள் காட்டுகின்றன.” குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது விபரீத விளைவுகளை ஏற்படுத்தும். ஐக்கிய மாகாணங்களில் மட்டுமே, குடித்து விட்டு ஓட்டுவதால் ஏற்படும் வாகன விபத்துக்களில் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கானவர்கள் இறக்கிறார்கள், லட்சக்கணக்கானவர்கள் காயமடைகிறார்கள். முக்கியமாக இளைஞர்கள்தான் இதற்குப் பலியாகிறார்கள்; ஏனென்றால் அவர்கள் வாகனம் ஓட்டுவதிலும் சரி குடிப்பதிலும் சரி அதிக பழக்கமில்லாதவர்கள். மதுபானத்தை கிளாஸ் கிளாஸாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் ஒருவர், யெகோவா தேவன் பரிசாக தந்திருக்கும் உயிரை மதிப்பதாக எப்படித்தான் சொல்ல முடியும்? (சங்கீதம் 36:9) உயிர் மிகவும் புனிதமானது என்பதால் ஒருவர் வாகனம் ஓட்ட வேண்டியிருக்கும்போது மதுபானத்தைத் தொடாமலேயே இருந்துவிடுவது சிறந்தது.
10. மதுபானம் எவ்வாறு மனதைப் பாதிக்கிறது, அது ஏன் ஆபத்தானது?
10 மிதமிஞ்சிக் குடிப்பது உடல் ரீதியில் மட்டுமல்லாமல் ஆன்மீக ரீதியிலும் கேடு விளைவிக்கிறது. “திராட்சரசமும் மதுபானமும் புத்தியைக் கெடுக்கும்” என பைபிள் குறிப்பிடுகிறது. (ஓசியா 4:11, திருத்திய மொழிபெயர்ப்பு) மதுபானம் மனதைப் பாதிக்கிறது. போதைப்பொருள் துஷ்பிரயோகம் பேரிலான ஐ.மா. தேசிய நிறுவனத்தின் ஒரு பிரசுரம் இவ்வாறு விளக்குகிறது: “ஒருவர் மதுபானம் அருந்துகையில் அது உணவுப் பாதை வழியாக இரத்தத்தில் கலந்து மூளையை விரைவில் எட்டிவிடுகிறது. சிந்தனையையும் உணர்ச்சியையும் கட்டுப்படுத்தும் மூளையின் பாகங்களை அது மந்தமாக்க ஆரம்பிக்கிறது. இதனால் குடிகாரர் சுய கட்டுப்பாட்டை இழந்து மனம் போல் செயல்படுகிறார்.” இப்படிப்பட்ட நிலையில் அவர் ‘வழிவிலகிப் போவதற்கும்,’ மற்றவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதற்கும், அநேக கவர்ச்சிகளுக்கு அடிபணிந்துவிடுவதற்குமான வாய்ப்பு மிக அதிகம்.—நீதிமொழிகள் 20:1.
11, 12. மிதமிஞ்சி மதுபானம் அருந்துவதால் ஆன்மீக ரீதியில் என்ன தீங்கு ஏற்படலாம்?
11 மேலும், “நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” என்று பைபிள் கட்டளையிடுகிறது. (1 கொரிந்தியர் 10:31) மதுபானத்தை மிக அதிகமாக அருந்துவது தேவனுக்கு எவ்வகையிலாவது மகிமை சேர்க்குமா? அளவுக்கதிகமாக குடிப்பவர் என்ற பெயர் எடுக்காதிருக்கவே கிறிஸ்தவர் விரும்ப வேண்டும். அப்படி பெயர் எடுப்பது யெகோவாவின் நாமத்திற்கு மகிமை சேர்ப்பதற்கு பதிலாக களங்கத்தையே ஏற்படுத்தும்.
12 ஒரு கிறிஸ்தவர் மிதமீறி குடிப்பது இன்னொரு கிறிஸ்தவருக்கு, அதுவும் புதிதாக கிறிஸ்தவரானவருக்கு இடறல் உண்டாக்கினால்? (ரோமர் 14:21) “என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் எந்திரக்கல்லை கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்” என இயேசு எச்சரித்தார். (மத்தேயு 18:6) வரம்புமீறி குடிக்கும்போது சபையில் பொறுப்புக்களை இழக்க நேரிடலாம். (1 தீமோத்தேயு 3:1-3, 8) அதுமட்டுமல்ல, குடும்பத்தில் குழப்படியும் ஏற்படலாம்.
ஆபத்துக்களைத் தவிர்ப்பது எப்படி?
13. மதுபான துஷ்பிரயோகத்தைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழி என்ன?
13 மதுபான துஷ்பிரயோகத்தின் ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்கான முக்கிய வழி, குடித்து வெறிப்பதை மட்டுமே அல்லாமல் வரம்புமீறி குடிப்பதையும் தவிர்ப்பதே ஆகும். உங்களைப் பொறுத்தவரை எந்தளவு மதுபானம் மிதமானது என்பதையும் எந்தளவு மதுபானம் வரம்புமீறியது என்பதையும் தீர்மானிப்பது யார்? இதில் அநேக விஷயங்கள் உட்பட்டிருப்பதால், எத்தனை கிளாஸ் மதுபானம் வரம்புமீறியது என திட்டவட்டமாக சொல்ல முடியாது. ஒவ்வொருவரும் அவரவர் வரம்பை அறிந்து, அதை மீறாதிருக்க வேண்டும். எந்தளவு மதுபானம் உங்களுக்கு அளவுக்கதிகமானது என்பதைத் தீர்மானிக்க எது உதவும்? இதற்கு உதவியாக ஏதேனும் நியமம் இருக்கிறதா?
14. எந்தளவு மதுபானம் மிதமானது என்பதையும் எந்தளவு மதுபானம் வரம்புமீறியது என்பதையும் தீர்மானிக்க உங்களுக்கு உதவும் நியமம் என்ன?
14 “நடைமுறை ஞானத்தையும் சிந்திக்கும் திறனையும் காத்துக்கொள், அவை உன் ஆத்துமாவுக்கு ஜீவனும் உன் கழுத்துக்கு அலங்காரமுமாய் இருக்கும்” என பைபிள் குறிப்பிடுகிறது. (நீதிமொழிகள் 3:21, 22, NW) ஆகவே தீர்மானமெடுக்கையில் மனதில் வைக்க வேண்டிய நியமம் இதுதான்: எந்தளவு மதுபானம் மட்டுமீறிய விதத்தில் உங்கள் விவேகத்தைக் கெடுத்து, சிந்திக்கும் திறனையும் மந்தமாக்குகிறதோ அந்தளவு மதுபானமே உங்கள் வரம்புக்கு மீறியது. ஆனால் உங்களுக்குரிய அந்த வரம்பை தீர்மானிக்கையில் நேர்மை அவசியம்!
15. எப்போது மதுபானத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது?
15 சில சமயங்களில் மதுபானத்தை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. உதாரணத்திற்கு கர்ப்பிணிப் பெண் தன் வயிற்றிலுள்ள குழந்தைக்கு ஆபத்தை ஏற்படுத்தாதிருக்க மதுபானத்தை தொடாமலேயே இருந்துவிடலாம். மேலும், முன்பு மதுபானத்திற்கு அடிமையாயிருந்த ஒருவரின் முன்னிலையில் அல்லது மதுபானம் குடிப்பதை மனசாட்சிப்படி தவறென கருதும் ஒருவரின் முன்னிலையில் நாம் குடிக்காதிருப்பது அன்பான செயல் அல்லவா? ஆசரிப்புக் கூடாரத்தில் ஆசாரியர்களாக பணியாற்றியவர்களிடம் யெகோவா இவ்வாறு கட்டளையிட்டார்: “[நீங்கள்] சாகாதிருக்க வேண்டுமானால் ஆசரிப்புக்கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்க வேண்டாம்.” (லேவியராகமம் 10:8, 9) ஆகவே கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வருவதற்கு முன்பும் ஊழியத்தில் கலந்துகொள்ளும்போதும் மற்ற ஆன்மீக பொறுப்புக்களைக் கையாளும்போதும் மதுபானம் அருந்துவதைத் தவிர்த்திடுங்கள். அதுமட்டுமல்ல, சில நாடுகளில் மதுபானம் அருந்துவதைச் சட்டம் தடை செய்திருக்கிறது அல்லது குறிப்பிட்ட வயதுவரம்பினர்தான் அதை அருந்த வேண்டுமென நிர்ணயித்திருக்கிறது; அப்படிப்பட்ட சமயங்களில் அரசாங்க சட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.—ரோமர் 13:1.
16. மதுபானம் உங்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும்போது என்ன செய்வதென்று எப்படி தீர்மானிப்பீர்கள்?
16 மதுபானம் உங்களுக்கு அளிக்கப்படும்போது அல்லது உங்களுக்கு முன் வைக்கப்பட்டிருக்கும்போது உங்களையே கேட்டுக்கொள்ள வேண்டிய முதல் கேள்வி: ‘நான் இதை குடிக்கத்தான் வேண்டுமா?’ நீங்கள் குடிக்கத் தீர்மானித்தாலும் உங்களுடைய வரம்பை மனதில் தெளிவாக வைத்து அதை மீறாதிருங்கள். விருந்தளிப்பவர் தாராளமாக ஊற்றித் தருகிறார் என்பதற்காக நீங்கள் மசிந்துவிடாதீர்கள். முக்கியமாக திருமண வரவேற்பு விழாக்கள், பார்ட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளின்போது மதுபானம் தாராளமாக வழங்கப்படலாம்; ஆகவே ஜாக்கிரதை! அநேக இடங்களில் பிள்ளைகள் மதுபானம் அருந்துவதற்குச் சட்டம் இடமளிக்கிறது. அச்சூழ்நிலையில், எந்தளவு மதுபானம் அருந்த வேண்டுமென பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவதும் இவ்விஷயத்தில் அவர்களைக் கண்காணிப்பதும் பெற்றோரின் பொறுப்பு.—நீதிமொழிகள் 22:6.
உங்களால் பிரச்சினையைச் சமாளிக்க முடியும்
17. மதுபானங்களை தவறாக பயன்படுத்தும் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா என்பதை தெரிந்துகொள்ள எது உதவலாம்?
17 ஒயினை அல்லது மற்ற மதுபானங்களை தவறாக பயன்படுத்தும் பிரச்சினை உங்களுக்கு இருக்கிறதா? மதுபான துஷ்பிரயோகம் ரகசிய பாவமாக ஆகிவருகிறதென்றால், ஒருநாள் இல்லையேல் இன்னொரு நாள் உங்களுக்கு உலை வைத்துவிடும் என்பது நிச்சயம். ஆக உங்களையே நடுநிலையோடும் நேர்மையாகவும் மதிப்பிடுங்கள். இப்படியெல்லாம் கேட்டு சுயபரிசோதனை செய்துகொள்ளுங்கள்: ‘முன்பைவிட இப்போது அடிக்கடி குடிக்கிறேனா? முன்பைவிட இப்போது ஸ்ட்ராங்காக குடிக்கிறேனா? கவலையை, உடல்/மன அழுத்தத்தை, அல்லது பிரச்சினைகளை மறப்பதற்காக குடிக்கிறேனா? நான் குடிப்பதைப் பற்றி குடும்பத்திலுள்ள ஒருவரோ நண்பரோ கவலைப்படுவதாகச் சொல்கிறாரா? நான் குடிப்பதால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கிறதா? ஒரு வாரத்திற்கு, ஒரு மாதத்திற்கு, அல்லது பல மாதங்களுக்கு குடிக்காதிருப்பது எனக்குச் சிரமமாக இருக்கிறதா? எந்தளவு ஒயினை அல்லது மற்ற மதுபானங்களை குடிக்கிறேன் என்பதை மற்றவர்களிடம் மறைக்கிறேனா?’ இந்தக் கேள்விகளில் சிலவற்றிற்கு ஆம் என்று நீங்கள் பதிலளித்தால் அடுத்து என்ன செய்வது? ‘கண்ணாடியிலே தன் சுபாவ முகத்தைப் பார்த்துவிட்டு உடனே தன் சாயல் இன்னதென்பதை மறந்துவிடும்’ மனிதனைப் போல் இருக்காதீர்கள். (யாக்கோபு 1:22-24) பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுங்கள். என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?
18, 19. மிதமிஞ்சி மதுபானம் குடிப்பதை நீங்கள் எவ்வாறு நிறுத்தலாம்?
18 ‘துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்திருங்கள்’ என அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவர்களுக்கு அறிவுறுத்தினார். (எபேசியர் 5:18) எந்தளவு மதுபானம் உங்களுக்கு மிதமிஞ்சியது என தீர்மானித்துத் தகுந்த வரம்புகளை நிர்ணயம் செய்யுங்கள். அந்த வரம்புகளை மீறாதிருக்கத் தீர்மானியுங்கள்; இச்சையடக்கத்தைக் காட்டுங்கள். (கலாத்தியர் 5:22, 23) வரம்புமீறி குடிக்கும்படி கட்டாயப்படுத்தும் கூட்டாளிகள் உங்களுக்கு இருக்கிறார்களா? நீங்கள்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். “ஞானிகளோடே சஞ்சரிக்கிறவன் ஞானமடைவான்; மூடருக்குத் தோழனோ நாசமடைவான்” என பைபிள் குறிப்பிடுகிறது.—நீதிமொழிகள் 13:20.
19 ஏதாவது ஒரு பிரச்சினையிலிருந்து தப்பிக்க நீங்கள் மதுபானத்தைப் பயன்படுத்துகிறீர்களா? அப்பிரச்சினையை நேரடியாக துணிந்து சந்தியுங்கள். கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம் எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சமாளிக்க முடியும். (சங்கீதம் 119:105) நம்பகமான கிறிஸ்தவ மூப்பரின் உதவியைப் பெற தயங்காதீர்கள். உங்கள் ஆன்மீகத்தை மேன்மேலும் அபிவிருத்தி செய்ய யெகோவாவின் ஏற்பாடுகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். கடவுளுடன் உள்ள உங்கள் உறவை பலப்படுத்திக் கொள்ளுங்கள். அவரிடம் தவறாமல் ஜெபம் செய்யுங்கள், முக்கியமாக உங்கள் பலவீனங்களைக் குறித்து ஜெபம் செய்யுங்கள். உங்கள் ‘உள்ளிந்திரியங்களையும் [அதாவது, சிறுநீரகங்களையும்] இருதயத்தையும் புடமிடும்படி’ கடவுளிடம் மன்றாடுங்கள். (சங்கீதம் 26:2) முந்தைய கட்டுரையில் பார்த்தபடி, உத்தமத்தில் நடந்திட முழுமுயற்சி எடுங்கள்.
20. நீங்கள் முயற்சிகள் எடுத்தும் வரம்புமீறி குடிப்பதை நிறுத்த முடியாவிட்டால் என்ன செய்ய வேண்டியிருக்கலாம்?
20 நீங்கள் முயற்சிகள் எடுத்தும் வரம்புமீறி குடிப்பதை நிறுத்த முடியாவிட்டால் என்ன செய்வது? அப்போது இயேசுவின் பின்வரும் புத்திமதிக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்: “உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய் . . . நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.” (மாற்கு 9:43) ஆக, குடிப்பதையே அடியோடு நிறுத்திவிடுவதுதான் பிரச்சினைக்குத் தீர்வு. இதைத்தான் ஒரு பெண் செய்ய தீர்மானித்தார்; அவரது பெயர் ஐரின் என வைத்துக்கொள்வோம். “கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களாக நான் மதுபானத்தை தொடவே இல்லை. ஒரேவொரு கிளாஸ் மட்டும் ட்ரை பண்ணலாம், இப்போது என்ன ஆகிறதென்று பார்க்கலாம் என சிலசமயம் தோன்றும். ஆனால் உடனே இவ்விஷயத்தைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்வேன். புதிய உலகம் வரும் வரை மதுபானத்தைத் தொடவே கூடாது என தீர்மானித்திருக்கிறேன், புதிய உலகிலும் அதைத் தொடுவது சந்தேகம்தான்” என அவர் கூறுகிறார். கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகில் கிடைக்கப் போகும் ஜீவனோடு ஒப்பிட, இன்று மதுபானத்தை அறவே தவிர்ப்பது அவ்வளவு பெரிய தியாகமொன்றும் இல்லை.—2 பேதுரு 3:13.
“நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”
21, 22. வாழ்க்கை என்ற ஓட்டத்தில் இறுதிக்கோட்டை எட்டவிடாதபடி எது நம்மைத் தடுக்கும், அதை எவ்வாறு நாம் தவிர்க்கலாம்?
21 அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்தவ வாழ்க்கையை ஓர் ஓட்டப் பந்தயத்திற்கு ஒப்பிட்டு இவ்வாறு சொன்னார்: “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும் ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”—1 கொரிந்தியர் 9:24-27.
22 ஓட்டத்தை வெற்றிகரமாய் முடிப்பவர்களுக்கே பரிசு வழங்கப்படுகிறது. ஆனால் மதுபான துஷ்பிரயோகமோ, வாழ்க்கை என்ற ஓட்டத்தில் இறுதிக்கோட்டை எட்டவிடாதபடி நம்மைத் தடுக்கலாம். ஆகவே நாம் இச்சையடக்கத்தைக் காட்ட வேண்டும். நிச்சயத்துடன் ஓடுவதற்கு ‘அளவுக்கதிக மதுபானத்தை’ அருந்தக் கூடாது. (1 பேதுரு 4:3, NW) எல்லாவற்றிலும் தன்னடக்கத்தைக் காட்ட வேண்டும். மதுபானங்களைக் குடிக்கும் விஷயத்தில், “நாம் அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்தபுத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்” இருப்பது ஞானமானது.—தீத்து 2:12.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையில், “மதுபானம்” என்பது பியரையும், ஒயினையும், அதோடு விஸ்கி, ஜின் போன்ற ஸ்ட்ராங்கான மது வகைகளையும் குறிக்கிறது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• மதுபான துஷ்பிரயோகம் என்பது என்ன?
• மதுபான துஷ்பிரயோகத்தால் ஏற்படும் தீங்குகள் யாவை?
• மதுபான துஷ்பிரயோகத்தின் ஆபத்துக்களை நீங்கள் எவ்வாறு தவிர்க்கலாம்?
• மதுபான துஷ்பிரயோகம் என்ற பிரச்சினையை ஒருவர் எவ்வாறு சமாளிக்கலாம்?
[பக்கம் 19-ன் படம்]
திராட்சரசம் “மனுஷனுடைய இருதயத்தை மகிழ்ச்சியாக்கும்”
[பக்கம் 20-ன் படம்]
நமக்குரிய வரம்பை அறிந்து அதை மீறாதிருக்க வேண்டும்
[பக்கம் 21-ன் படம்]
உங்களுடைய வரம்பு எதுவென்று முன்னரே தீர்மானியுங்கள்
[பக்கம் 22-ன் படம்]
உங்கள் பலவீனங்களைக் குறித்து யெகோவாவிடம் தவறாமல் ஜெபியுங்கள்
[பக்கம் 23-ன் படம்]
மது அருந்துவது சம்பந்தமாக பிள்ளைகளுக்கு அறிவுறுத்துவது பெற்றோரின் கடமை