வாழ்க்கை சரிதை
யெகோவாவையே சார்ந்திருக்க பழகிக் கொண்டோம்
நாடலி ஹால்டார்ஃப் சொன்னபடி
1945-ம் வருடம் ஜூன் மாதத்தில் ஒருநாள் முகமெல்லாம் வெளிறிப் போன ஒருவர் எங்கள் வீட்டு வாசலில் வந்து பொறுமையாக நின்றுகொண்டிருந்தார். என் இளைய மகள் ரூத் பயந்துபோய், “அம்மா யாரோ வந்திருக்காங்க!” என கத்தினாள். அந்த “யாரோ”தான் அவளுடைய அப்பாவென அவளுக்குத் தெரியாது; ஆம், என் அருமை கணவர் ஃபெர்டினான்ட்தான் வந்திருந்தார். இரண்டு வருடங்களுக்கு முன்பு, ரூத் பிறந்து மூன்று நாள்தான் ஆகியிருந்தது, அப்போது அவர் வீட்டிலிருந்து போனார், கைது செய்யப்பட்டார், நாசி சித்திரவதை முகாமில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு ரூத் அவளுடைய அப்பாவை இப்போதுதான் பார்க்கிறாள், மீண்டும் எங்கள் குடும்பம் ஒன்றுசேர்ந்தது. நானும் என் கணவரும் பரிமாறிக்கொள்ள எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருந்தன!
ஜெர்மனியிலுள்ள கீல் நகரத்தில் 1909-ம் வருடம் ஃபெர்டினான்ட் பிறந்தார்; ட்ரெஸ்டென் நகரத்தில் 1907-ம் வருடம் நான் பிறந்தேன். எனக்கு 12 வயதிருக்கும்போது பைபிள் மாணாக்கர்களுடன் என் குடும்பத்தாருக்கு பழக்கம் ஏற்பட்டது; அப்போது யெகோவாவின் சாட்சிகளுக்கு பைபிள் மாணாக்கர்கள் என்றுதான் பெயர். 19 வயதில் எவான்ஜிலிக்கல் சர்ச்சிலிருந்து விலகிக் கொண்டு, யெகோவாவுக்கு என்னை ஒப்புக்கொடுத்தேன்.
அதற்கிடையில், ஃபெர்டினான்ட் மாலுமிகளுக்குரிய கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு மாலுமியாக வேலை செய்தார். இப்படிக் கடலில் பயணம் செய்யும் போதெல்லாம் அவர், படைப்பாளர் இருக்கிறாரா என்பதைப் பற்றிய கேள்விகளை மனதில் அசைபோட்டுக் கொண்டே இருந்தார். ஒருசமயம் ஜெர்மனியில் இருந்தபோது பைபிள் மாணாக்கரான அவருடைய அண்ணனைப் போய் சந்தித்தார். அவருடைய அண்ணனைச் சந்தித்துப் பேசியது, அவருடைய மனதை அரித்துக்கொண்டிருந்த கேள்விகளுக்கு பைபிளில் பதில்கள் இருக்கின்றன என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை அளித்தது. அவர் லூத்தரன் சர்ச்சிலிருந்து விலகினார், மாலுமி வேலையையும் விட்டுவிட தீர்மானித்தார். பிரசங்க வேலையில் முதல் நாள் கலந்துகொண்ட பிறகு, வாழ்நாள் முழுவதும் இந்த ஊழியத்தைச் செய்ய வேண்டுமென்ற ஆர்வக் கனல் அவருக்குள் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. அன்றிரவே அவர் தன்னை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்தார். 1931-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் முழுக்காட்டுதல் பெற்றார்.
மாலுமியாகவும் பிரசங்கியாகவும்
1931-ம் வருடம் நவம்பர் மாதத்தில் பிரசங்க வேலையில் உதவுவதற்காக நெதர்லாந்துக்கு ரயில் ஏறினார். அந்நாட்டில் ஊழியத்தை முன்நின்று நடத்திய சகோதரரிடம், அவர் மாலுமியாக வேலை பார்த்ததைப் பற்றி சொன்னபோது, “உங்களைப் போன்ற ஒருவர்தான் எங்களுக்குத் தேவை!” என்றார். நாட்டின் வடக்குக் கரையோரத்தில் வசிக்கும் ஜனங்களுக்குப் பிரசங்கிப்பதற்காகப் பயனியர்கள் (முழுநேர ஊழியர்கள்) செல்ல சகோதரர்கள் ஒரு பெரிய படகை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். ஐந்து பேர் அதில் செல்வதற்கு இருந்தார்கள், ஆனால் அவர்களில் ஒருவருக்குக்கூட படகு ஓட்டத் தெரியாது. எனவே ஃபெர்டினான்ட் அந்தப் படகின் தலைவர் ஆனார்.
ஆறு மாதத்திற்குப் பிறகு, நெதர்லாந்தின் தென்பகுதியிலுள்ள டில்பர்க் என்ற இடத்தில் பயனியராகச் சேவை செய்யும்படி அவர் நியமிக்கப்பட்டார். கிட்டத்தட்ட அந்தச் சமயத்தில்தான், பயனியராகச் சேவை செய்வதற்கு நானும் டில்பர்க் போய்ச் சேர்ந்தேன். அங்குதான் அவரைச் சந்தித்தேன். ஆனால் உடனடியாக நாங்கள் நாட்டின் வடபகுதியிலுள்ள குரோனிங்கன் என்ற இடத்திற்குச் செல்லும்படி கேட்டுக்கொள்ளப்பட்டோம். அங்கு, 1932-ம் வருடம் அக்டோபர் மாதம் நாங்கள் திருமணம் செய்துகொண்டோம். அங்கிருந்த ஒரு வீட்டில் பல பயனியர்கள் ஒன்றாக வசித்து வந்தார்கள்; அங்குப் பயனியர் ஊழியத்தைச் செய்துகொண்டே எங்கள் தேன்நிலவையும் கழித்தோம்!
1935-ம் வருடம் எஸ்தர் பிறந்தாள். கையில் நிறைய காசில்லாவிட்டாலும் பயனியர் செய்வதை நிறுத்திவிடக்கூடாது என்பதில் நாங்கள் தீர்மானமாக இருந்தோம். ஒரு கிராமத்திற்குக் குடிமாறினோம், அங்குச் சின்னஞ்சிறிய வீட்டில் வசித்தோம். வீட்டிலிருந்து நான் குழந்தையைப் பார்த்துக் கொண்டபோது அவர் நாள் முழுவதும் ஊழியத்தில் செலவிட்டார். மறுநாள் அவர் குழந்தையைப் பார்த்துக்கொண்டபோது நான் ஊழியத்திற்குச் சென்றேன். எஸ்தர் கொஞ்சம் வளர்ந்து, அவளை எங்களுடன் ஊழியத்திற்கு அழைத்துச் செல்லும்வரை இப்படித்தான் மாறிமாறி அவளைப் பார்த்துக்கொண்டோம்.
சீக்கிரத்திலேயே, ஐரோப்பாவின் அரசியல் நிலவரம் அச்சுறுத்தியது. ஜெர்மனியில் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்பட்டதைப் பற்றி கேள்விப்பட்டோம், விரைவில் அந்தத் துன்புறுத்தல் எங்களுக்கும் வருமென புரிந்துகொண்டோம். கடும் துன்புறுத்தலை எப்படிச் சகிக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசித்தோம். 1938-ல் அயல்நாட்டவர்கள் செய்த கால்போர்ட்டர் வேலைக்கு, அதாவது மத பிரசுரங்களை வினியோகிக்கும் வேலைக்கு டச்சு அதிகாரிகள் தடைச் சட்டம் போட்டார்கள். நாங்கள் தொடர்ந்து ஊழியம் செய்வதற்கு வழி செய்யும் வகையில் பைபிள் படிப்பில் ஆர்வம் காட்டுபவர்களின் பெயர்களை டச்சு சாட்சிகள் எங்களிடம் கொடுத்தார்கள்; அவர்களில் சிலருக்கு எங்களால் பைபிள் படிப்புகள் நடத்த முடிந்தது.
ஏறக்குறைய அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய மாவட்ட மாநாடு ஒன்று நடக்கவிருந்தது. அதற்குப் போக வேண்டுமென்று எங்களுக்கு ஆசை, ஆனால் ரயில் டிக்கெட் வாங்குவதற்கோ கையில் காசில்லை. எனவே சைக்கிள் ஹான்டில்பாரில் ஓர் இருக்கையைப் பொருத்தி அதில் எஸ்தரை உட்கார வைத்துக்கொண்டு மூன்று நாட்கள் சைக்கிளில் சவாரி செய்தோம். செல்லும் வழியில் இருந்த யெகோவாவின் சாட்சிகளுடைய வீடுகளில் இரவைக் கழித்தோம். தேசிய மாநாட்டில் முதன்முதலாகக் கலந்துகொண்டபோது எவ்வளவாய் சந்தோஷப்பட்டோம்! வரவிருந்த சோதனைகளைச் சகிப்பதற்கு அம்மாநாட்டு நிகழ்ச்சிகள் எங்களைத் தயார்படுத்தின. முக்கியமாகக் கடவுள் மீது உறுதியான நம்பிக்கை வைக்கும்படி அவை எங்களுக்கு நினைப்பூட்டின. சங்கீதம் 31:6-ல் காணப்படும் ‘யெகோவாவையே நம்பியிருக்கிறேன்’ என்ற வார்த்தைகளே எங்கள் பொன்மொழி ஆயின.
நாசிகளின் வலைவீச்சு
1940-ம் வருடம் மே மாதம் நாசிகள் நெதர்லாந்தைக் கைப்பற்றினார்கள். பின்னர் சீக்கிரத்திலேயே ஒருநாள், பைபிள் பிரசுரங்களை நாங்கள் பிரித்து அடுக்கிக் கொண்டிருந்தபோது கெஸ்டாப்போ என்று அழைக்கப்பட்ட இரகசிய போலீஸார் திடுதிப்பென வீட்டுக்குள் நுழைந்தார்கள். என் கணவரை அவர்களது தலைமையகத்துக்கு அழைத்துச் சென்றார்கள். நானும் எஸ்தரும் தவறாமல் அவரைப் போய் பார்த்துவிட்டு வந்தோம், சில சமயங்களில் அவரை விசாரணை செய்து, எங்கள் கண் முன்னாலேயே அடித்தார்கள். டிசம்பர் மாதத்தில் அவரைத் திடீரென விடுதலை செய்தார்கள், ஆனால் எல்லாம் கொஞ்ச நாட்களுக்குத்தான். ஒருநாள் நாங்கள் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்புகையில் வீட்டுக்குப் பக்கத்தில் கெஸ்டாப்போவின் காரைப் பார்த்தோம். என் கணவர் ஓடிவிட்டார், நானும் எஸ்தரும் வீட்டுக்குள் நுழைந்தோம். அவர்கள் எங்களுக்காகத்தான் காத்திருந்தார்கள். அவர்கள் என் கணவரைத் தேடினார்கள். அதே இரவில் கெஸ்டாப்போ போனபிறகு டச்சு போலீஸார் வந்து விசாரணை செய்வதற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். மறுநாள் நானும் எஸ்தரும் நார்டர் குடும்பத்தாருடைய வீட்டில் ஒளிந்துகொண்டோம்; அத்தம்பதியினர், யெகோவாவின் சாட்சிகளாகப் புதிதாய் முழுக்காட்டுதல் பெற்றவர்கள், அவர்களுடைய வீட்டிலேயே எங்களைத் தங்க வைத்து, பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
1941-ம் வருடம் ஜனவரி மாத முடிவில் படகு வீட்டிலிருந்துகொண்டு பயனியர் செய்து வந்த தம்பதியர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்குச் சொந்தமான சில பொருட்களைப் பத்திரமாக எடுத்து வருவதற்கு வட்டாரக் கண்காணி (பயண ஊழியர்) ஒருவரும் என் கணவரும் மறுநாள் அந்தப் படகு வீட்டுக்குச் சென்றார்கள், அப்போது திடீரென கெஸ்டாப்போ அவர்கள் மீது பாய்ந்தார்கள். என் கணவர் எப்படியோ அவர்களது பிடியிலிருந்து நழுவி, பைக்கில் ஏறி தப்பிவிட்டார். ஆனால் வட்டாரக் கண்காணியோ பிடிபட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அந்த வட்டாரக் கண்காணி செய்து வந்த வேலையை என் கணவர் ஏற்றுக்கொள்ளும்படி பொறுப்பான சகோதரர்கள் கேட்டுக்கொண்டார்கள். அப்படியென்றால், மாதத்தில் மூன்று நாட்கள்தான் அவர் வீட்டில் இருக்க முடியும். இது எங்களுக்குப் புதிய சவாலை முன் வைத்தது, இருப்பினும் நான் தொடர்ந்து பயனியர் ஊழியம் செய்து வந்தேன். அந்தச் சமயத்தில் யெகோவாவின் சாட்சிகளை கெஸ்டாப்போ ஆட்கள் மும்முரமாக வலைவீசி தேடி வந்தார்கள்; இதனால் நாங்கள் வீட்டை மாற்றிக்கொண்டே இருந்தோம். 1942-ம் வருடத்தில் மூன்று முறை குடிமாறினோம். கடைசியில் நாங்கள் ரோட்டர்டாம் நகரத்தில் குடியேறினோம்; இது, இரகசியமாக என் கணவர் ஊழியம் செய்து வந்த பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்தது. அதற்குள், நான் இரண்டாவது குழந்தையின் வரவை எதிர்நோக்கி இருந்தேன். இந்தச் சமயத்தில், கம்ப் குடும்பத்தார் அவர்களது வீட்டில் எங்களுக்கு இடமளித்தார்கள்; அவர்களது இரண்டு மகன்களும் அப்போதுதான் சித்திரவதை முகாம்களுக்குச் செல்லும்படி நாடு கடத்தப்பட்டிருந்தார்கள்.
கெஸ்டாப்போவின் வேட்டை
1943, ஜூலை மாதத்தில் இரண்டாவது மகள் ரூத் பிறந்தாள். அவள் பிறந்து மூன்று நாட்கள் என் கணவர் எங்களுடன் இருந்தார், அதன் பிறகு அவர் வீட்டை விட்டுப் போக வேண்டியிருந்ததால் கடைசியாக அன்றுதான் அவரைப் பார்த்தோம், அதற்குப் பிறகு ரொம்ப நாட்கள் அவரைப் பார்க்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு அவர் ஆம்ஸ்டர்டாமில் கைது செய்யப்பட்டார். கெஸ்டாப்போ நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு, சரியான நபரைத்தான் பிடித்திருக்கிறார்களா என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார்கள். நமது பிரசங்க வேலை சம்பந்தப்பட்ட தகவலைச் சொல்ல வைப்பதற்காக கெஸ்டாப்போ அவரிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். ஆனால் தான் ஒரு யெகோவாவின் சாட்சி என்பதையும் எந்த அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்பதையும் மட்டுமே சொல்வதற்கு அவர் தயாராக இருந்தார். ஜெர்மானியரான என் கணவர் இராணுவ வேலைக்கு வராததைக் கண்டபோது கெஸ்டாப்போ அதிகாரிகள் கொதித்தெழுந்தார்கள், சதிகாரன் என குற்றம்சாட்டி அவரைக் கொல்லப் போவதாகப் பயமுறுத்தினார்கள்.
அடுத்த ஐந்து மாத காலத்தை அவர் சிறையில் கழித்தார்; சுட்டுக் கொல்லப் போவதாகச் சதா பயமுறுத்தப்பட்டார். ஆனால் யெகோவாவுக்கு உண்மைத்தன்மையோடு நடந்துகொள்வதில் அவர் துளியும் தடுமாறவில்லை. ஆன்மீக ரீதியில் திடகாத்திரமாய் இருக்க அவருக்கு எது உதவியது? கடவுளுடைய வார்த்தையாகிய பைபிள்தான் உதவியது. அவர் யெகோவாவின் சாட்சியாக இருந்ததால் பைபிளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. ஆனால் மற்ற கைதிகளோ ஒரு பைபிளைக் கேட்டு பெற்றுக்கொள்ளலாம். அதனால் அவரது அறையிலிருந்த மற்றொரு கைதியிடம் அவர் பேசி, பைபிளை அனுப்பி வைக்கும்படி அவருடைய வீட்டுக்கு கடிதம் எழுத சொன்னார், அவரும் இணங்கினார். பல வருடங்களுக்குப் பிறகுகூட, அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் பேசிய போதெல்லாம் கண்கள் பிரகாசிக்க, உணர்ச்சிப் பெருக்கோடு, “அந்த பைபிள் எனக்கு ரொம்பவே ஆறுதலளித்தது!” என சொல்வார்.
1944-ம் வருடத்தின் ஜனவரி மாத ஆரம்பத்தில் திடீரென அவர் நெதர்லாந்திலுள்ள வ்வீகெட் சித்திரவதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார். எதிர்பாராத விதத்தில் அதுவும் அவருக்கு நன்மையாய் முடிந்தது, ஏனெனில் அங்கு யெகோவாவின் சாட்சிகளில் 46 பேரைச் சந்தித்தார். அவர் வேறு முகாமுக்கு மாற்றப்பட்டது எனக்குத் தெரிய வந்தபோது அவர் இன்னும் உயிரோடிருப்பதை அறிந்து பேரானந்தமடைந்தேன்!
சித்திரவதை முகாமிலும் தொடர்ந்து பிரசங்கித்தல்
முகாம் வாழ்க்கை கொடுமையான வாழ்க்கை. ஊட்டச்சத்தில்லாத உணவு, குளிருக்கு உதவாத உடை, ஊசிபோல் குத்தும் குளிர் ஆகியவையே பொதுவாக அங்கிருந்த நிலைமை. என் கணவர் டான்ஸில்ஸ் வந்து படுமோசமாகப் பாதிக்கப்பட்டார். அட்டென்டன்ஸ் எடுப்பதற்காக நீண்ட நேரம் கடும் குளிரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிறகு அவர் மருத்துவ சிகிச்சை பெறச் சென்றார். 104 டிகிரியோ அதற்கும் அதிகமாகவோ ஜுரம் இருந்தால் மட்டுமே அங்குத் தங்கி சிகிச்சை பெற நோயாளிகள் அனுமதிக்கப்பட்டார்கள். இவருக்கோ 102 டிகிரி ஜுரம்தான் என்று சொல்லி அங்குத் தங்கி சிகிச்சை பெற அனுமதிக்கப்படவில்லை! வேலைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். இருந்தாலும், அனுதாபப்பட்ட மற்ற கைதிகள் அவ்வப்போது கொஞ்ச நேரத்திற்குக் கதகதப்பான இடத்தில் அவரை மறைத்து வைத்து உதவினார்கள். குளிர் மாறி கோடை வந்தபோது நோய் சற்று தணிந்தது. அதுமட்டுமல்லாமல், உணவுப் பொட்டலங்கள் சகோதரர்களுக்குக் கிடைத்தபோது அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொண்டார்கள், இதனால் என் கணவரின் உடல்நிலையும் ஓரளவு தேறியது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு என்னுடைய கணவர் முழுநேரமாக ஊழியம் செய்து வந்தார், முகாமில் இருந்தபோதும் அதையே தொடர்ந்து செய்து வந்தார். யெகோவாவின் சாட்சிகளாக இருந்த கைதிகளை அடையாளம் காட்டிய ஊதா நிற முக்கோண சின்னத்தை அவர் அணிந்திருந்தார்; அதைப் பார்த்து முகாம் அதிகாரிகள் அடிக்கடி அவரைக் கேலி செய்தார்கள். ஆனால் அதையே ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அவர்களுடன் உரையாடலை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பெருமளவு யெகோவாவின் சாட்சிகள் இருந்த சிறைப் பகுதிகளில் சகோதரர்கள் ஊழியம் செய்து வந்தார்கள். ‘இன்னும் நிறைய கைதிகளுக்கு எப்படி பிரசங்கிப்பது?’ என அவர்கள் யோசித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் முகாம் நிர்வாகமே அதற்கு வழிசெய்துவிட்டது. எப்படி?
அச்சமயத்தில் சகோதரர்கள் இரகசியமாக பைபிள் பிரசுரங்களைப் பெற்று வந்தார்கள், அவர்களிடம் 12 பைபிள்களும்கூட இருந்தன. ஒருநாள் காவலாளிகள் சில பிரசுரங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள், ஆனால் அவை யாருக்குச் சொந்தமானவை என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சகோதரர்கள் மத்தியில் நிலவிய ஒற்றுமையைக் குலைப்பதற்கு முகாம் அதிகாரிகள் தீர்மானித்தார்கள். அதற்காக, சகோதரர்களுக்குத் தண்டனை கொடுக்கும் விதத்தில் எல்லாரையும் தனித்தனியாக யெகோவாவின் சாட்சிகள் இல்லாத சிறைப் பகுதிகளுக்கு இடம் மாற்றினார்கள். அதுமட்டுமல்லாமல், யெகோவாவின் சாட்சியாக இல்லாதவர்களுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அவர்கள் சாப்பிட வேண்டியிருந்தது. இந்த ஏற்பாடு பெரும் நன்மையாய் முடிந்தது. சகோதரர்கள் தாங்கள் என்ன செய்ய விரும்பினார்களோ அதைச் செய்வதற்கு, முக்கியமாக சக கைதிகளில் எத்தனை பேருக்கு முடியுமோ அத்தனை பேருக்கும் பிரசங்கிப்பதற்கு இது வாய்ப்பளித்தது.
தன்னந்தனியாக இரண்டு மகள்களை வளர்ப்பது
இதற்கிடையில், நானும் என் இரண்டு மகள்களும் இன்னும் ரோட்டர்டாமில்தான் குடியிருந்தோம். 1943/44 வருடத்தின்போது தாங்க முடியாத கடும் குளிர். எங்கள் வீட்டின் பின்புறம், விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்கு ஜெர்மானிய போர்வீரர்கள் பயன்படுத்திய பீரங்கிப் படையினரின் யூனிட் ஒன்று இருந்தது. எங்களுக்கு எதிர்ப்புறம், நேச நாடுகளின் போர் விமானங்களின் பிரதான குறியிலக்கான வால் துறைமுகம் இருந்தது. இது பதுங்குவதற்குத் துளிகூட பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. அதுமட்டுமா, அங்கு உணவு கிடைப்பதோ குதிரைக் கொம்பாக இருந்தது. எனவே எப்போதையும்விட இப்போது நாங்கள் முழுக்க முழுக்க யெகோவாவையே சார்ந்திருக்க பழகிக் கொண்டோம்.—நீதிமொழிகள் 3:5, 6.
எங்கள் சின்னக் குடும்பத்துக்காக, எட்டு வயது எஸ்தர் கால்கடுக்க க்யூவில் நின்று உணவு வாங்கி வருவாள். பெரும்பாலும் அவளுடைய முறை வருவதற்குள் எல்லாப் பொருட்களுமே தீர்ந்துவிடும். அப்படி அவள் ஒருமுறை போயிருந்த போது, விமானத் தாக்குதலுக்கு இடையில் சிக்கிக்கொண்டாள். குண்டுகள் வெடிப்பதைக் கேட்டபோது நான் பதறிப்போனேன், ஆனால் சீக்கிரத்திலேயே வேதனையில் வடிந்த கண்ணீர் ஆனந்தக் கண்ணீராய் மாறியது; ஆம், எந்தக் காயமும் ஏற்படாமல் அவள் பத்திரமாய் திரும்பி வந்தாள். அதுமட்டுமல்ல அவளிடம் சில சர்க்கரைவள்ளிக் கிழங்குகளும் இருந்தன. அவள் வந்ததும், “என்னம்மா ஆச்சு?” என்றுதான் முதலில் கேட்டேன். “குண்டுகள் விழும்போது ‘தரையோடு தரையாக படுத்துக்கொண்டு ஜெபிக்க வேண்டும்’ என அப்பா எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார், அதைத்தான் செய்தேன், எனக்கு ஒன்னும் ஆகல!” என அவள் பதட்டப்படாமல் பதிலளித்தாள்.
என் பேச்சில் ஜெர்மன் வாடை வீசியதால் கடைகண்ணிகளுக்கு எல்லாம் எஸ்தரை அனுப்பியது பாதுகாப்பை அளித்தது. ஆனாலும் ஜெர்மானிய போர்வீரர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டே இருந்தார்கள்; அவர்கள் எஸ்தரிடம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். அவளோ எந்த விஷயத்தைப் பற்றியும் மூச்சுவிடவில்லை. வீட்டிலிருக்கையில் அவளுக்கு பைபிளிலிருந்து பாடம் சொல்லிக் கொடுத்தேன்; அவளைப் பள்ளியில் படிக்க வைக்க முடியாததால் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்தேன், வேறு கலைகளையும் சொல்லிக் கொடுத்தேன்.
ஊழியத்திலும் அவள் எனக்கு உறுதுணையாய் இருந்தாள். பைபிள் படிப்பு நடத்த நான் போவதற்கு முன்பாக அவள் போய் வழியில் யாரேனும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்களா என பார்த்துவிட்டு வருவாள். பைபிள் படிக்கும் மாணாக்கரது வீட்டுக்குப் படிப்பு நடத்த வரலாமா என்பதைத் தெரிவிக்க அடையாளத்தை வைக்கச் சொல்லுவேன்; அதாவது அவர்களது ஜன்னல் திட்டில் பூச்செடியை எந்த நிலையில் வைத்தால் வரலாம் என்பதைக் குறிப்பாகத் தெரிவிக்க சொல்லியிருந்தேன்; இத்தகைய அடையாளங்கள் இருக்கிறதா இல்லையா என்பதை ஊர்ஜிதம் செய்வதிலும் எஸ்தர் உதவினாள். பைபிள் படிப்பு நடத்துகையில் குட்டிப் பிள்ளை ரூத்தை பேபி கேரேஜில் உட்கார வைத்து அந்த ரோட்டில் மேலும் கீழும் ஓட்டிக்கொண்டே இருப்பாள்; அதோடு, ஏதாவது ஆபத்துகள் வருகின்றனவா என்பதையும் கண்காணிப்பாள்.
சாக்சென்ஹாசனுக்குக் கொண்டு செல்லுதல்
இந்தச் சமயத்தில் என் கணவர் எப்படி இருந்தார்? 1944-ம் வருடம் செப்டம்பர் மாதம் அவரும் இன்னும் பலரும் பலவந்தமாக ரயில் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்; அங்குத் தயாராக இருந்த ரயில் பெட்டிகளில் 80 பேர் வீதம் அடைக்கப்பட்டார்கள். ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ஒரு பக்கெட் இருந்தது, அதுதான் “கழிவறை”; இன்னொரு பக்கெட் இருந்தது, அதிலிருந்த தண்ணீர்தான் குடிநீர். இராப்பகலாக மூன்று நாள் பிரயாணம், ரயில் பெட்டிகளிலோ நிற்பதற்கு மாத்திரமே இடம் இருந்தது! துளிகூட காற்றோட்டம் இல்லை. அவை முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன, அங்கொன்றும் இங்கொன்றுமாக சில துளைகள் இருந்தன அவ்வளவுதான். அதோடு, தாங்க முடியாத உஷ்ணம், வயிற்றைக் கிள்ளும் பசி, தணியாத தாகம், போதாக்குறைக்குக் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம்; விவரிக்க முடியாதளவுக்குக் கஷ்டங்களை அவர்கள் சகிக்க வேண்டியிருந்தது.
ரயில் மெல்ல மெல்ல சாக்சென்ஹாசன் முகாமைச் சென்றடைந்தது; அது சித்திரவதைக்குப் பேர்போன முகாம். உடைமைகள் என்று ஏதேனும் இருந்தால் அவற்றை எடுத்துச் செல்ல கைதிகள் அனுமதிக்கப்படவில்லை; யெகோவாவின் சாட்சிகளாக இருந்தவர்களிடம் 12 சிறிய பைபிள்கள் இருந்தன, அவற்றை எடுத்துச் செல்ல அனுமதி கிடைத்தது!
சாக்சென்ஹாசனுடைய கட்டுப்பாட்டின் கீழிருந்த ராட்டனோ என்ற இடத்தில், போர்த் தளவாடங்கள் தயாரிக்கப்படும் முகாமில் வேலை செய்வதற்கு என் கணவரும் இன்னும் எட்டு சகோதரர்களும் அனுப்பப்பட்டார்கள். கொலை செய்யப் போவதாக அடிக்கடி பயமுறுத்தப்பட்டாலும் சகோதரர்கள் அங்கு வேலை செய்ய மசியவில்லை. உறுதியாய் நிலைத்திருப்பதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்தும் விதமாகக் காலையில் அவர்கள் சங்கீதம் 18:2 போன்ற பைபிள் வசனங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்; நாள் முழுவதும் அதைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இப்படிச் செய்தது ஆன்மீக விஷயங்களைத் தியானிக்க அவர்களுக்கு உதவியது.
இறுதியில், வெடிகுண்டு முழக்கம் நேச நாடுகளும் ரஷ்ய படைகளும் நெருங்கி வருவதை அறிவித்தன. என் கணவரும் அவரது தோழர்களும் இருந்த முகாமிற்கு ரஷ்யர்கள் முதலாவது வந்தார்கள். கைதிகள் சாப்பிடுவதற்குக் கொஞ்சம் உணவைக் கொடுத்து, முகாமைவிட்டு வெளியேறும்படி கட்டளையிட்டார்கள். 1945-ம் வருடம் ஏப்ரல் மாத கடைசியில் அவர்கள் வீடு திரும்ப ரஷ்ய படையினர் அனுமதித்தார்கள்.
கடைசியில் ஒன்று சேர்ந்த குடும்பம்
ஜூன் 15-ம் தேதி என் கணவர் நெதர்லாந்துக்கு வந்து சேர்ந்தார். குரோனிங்கனிலிருந்த சகோதரர்கள் அவரை அன்புடன் வரவேற்றார்கள். நாங்கள் உயிரோடிருக்கிறோம், நாட்டில் எங்கோ இருக்கிறோம் என்ற விஷயத்தை அவர் சீக்கிரத்திலேயே தெரிந்துகொண்டார்; அவர் திரும்பி வந்த விஷயத்தை நாங்களும் தெரிந்துகொண்டோம். அவர் வருகைக்காகக் காத்திருக்கையில் நாட்கள் நகராததுபோல் தோன்றின. ஆனால் கடைசியாக ஒருநாள், “அம்மா யாரோ வந்திருக்காங்க!” என ரூத் கத்தினாள். ஆம், என் மகள்களின் அன்பு தகப்பன், என் அருமை கணவர் வந்திருந்தார்!
இயல்பாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன்பு பல பிரச்சினைகளைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. எங்களுக்குக் குடியிருக்க இடமில்லை, போதாக்குறைக்கு நெதர்லாந்தில் நிரந்தர குடியுரிமை பெறுவது பெரிய பிரச்சினையாக இருந்தது. நாங்கள் ஜெர்மானியராக இருந்ததால் வருடக்கணக்கில் டச்சு அதிகாரிகள் எங்களை ஒதுக்கப்பட்டவர்களைப் போல நடத்தி வந்திருந்தார்கள். ஒருவழியாக செட்டில் ஆகவும், நீண்ட காலமாக ஏங்கிக்கொண்டிருந்த வாழ்க்கையைத் தொடரவும், அதாவது குடும்பமாக யெகோவாவுக்குச் சேவை செய்யும் வாழ்க்கையைத் தொடரவும் முடிந்தது.
‘யெகோவாவையே நம்பியிருக்கிறேன்’
அதற்குப் பின் வந்த வருடங்களில், எங்களைப் போலவே கஷ்டப்பட்ட நண்பர்கள் சிலருடன் நேரத்தைக் கழிக்கும் போதெல்லாம், அன்று அந்தக் கஷ்ட காலங்களில் யெகோவா எப்படியெல்லாம் அன்பாக வழிநடத்தினார் என்பதை எண்ணிப் பார்த்தோம். (சங்கீதம் 7:1) இந்த எல்லா சமயங்களிலும் ராஜ்ய அக்கறைகளை அதிகரிக்கச் செய்வதில் யெகோவா எங்களுக்கும் வாய்ப்பைக் கொடுத்ததை நினைத்துப் பார்த்து ஆனந்தம் அடைந்தோம். யெகோவாவின் பரிசுத்த சேவையில் எங்கள் இளமை பருவத்தைச் செலவிட முடிந்தது எத்தனை சந்தோஷமான விஷயமென்று அடிக்கடி பேசிக் கொண்டோம்.—பிரசங்கி 12:1.
நாசி துன்புறுத்தலின் சகாப்தம் முடிவடைந்த பிறகு, 1995-ம் வருடம் டிசம்பர் 20-ம் தேதி என் கணவர் தன் பூமிக்குரிய வாழ்க்கையை முடிக்கும் வரையாக நானும் அவரும் சேர்ந்து 50 வருடங்களுக்கு மேலாக யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தோம். சீக்கிரத்தில் எனக்கு 98 வயதாகப் போகிறது. அந்தக் கஷ்ட காலத்தில் எங்கள் பிள்ளைகள் ரொம்பவே ஆதரவாக இருந்ததற்காகவும் யெகோவாவின் பெயரை மகிமைப்படுத்தும் ஊழியத்தில் இன்னும் என்னால் முடிந்தளவு ஈடுபட முடிவதற்காகவும் தினமும் அவருக்கு நன்றி சொல்கிறேன். எனக்கு யெகோவா செய்திருக்கும் அனைத்து நன்மைகளுக்காகவும் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், ‘யெகோவாவையே நம்பியிருக்கிறேன்’ என்ற எனது பொன்மொழிக்கு ஏற்ப எப்போதும் வாழ வேண்டுமென்பதே என் மனமார்ந்த ஆசை.—சங்கீதம் 31:6.
[பக்கம் 19-ன் படம்]
அக்டோபர் 1932-ல் என் கணவருடன்
[பக்கம் 19-ன் படம்]
பிரசங்க வேலைக்குப் பயன்படுத்திய “ஆல்மினா” என்ற படகும் பயணிகளும்
[பக்கம் 22-ன் படம்]
என் கணவரோடும் பிள்ளைகளோடும்