யார் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்?
“இதைக் குறித்து நீங்கள் வியப்படைய வேண்டாம்; ஏனெனில் காலம் வருகிறது, அப்போது ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்.”—யோவான் 5:28, 29, NW.
1. எரியும் முட்புதர் அருகே என்ன தனிச்சிறப்பான அறிவிப்பை மோசே கேட்டார், பிற்பாடு அவ்வார்த்தைகளைத் திரும்பவும் எடுத்துரைத்தது யார்?
மிகவும் அசாதாரணமான ஒன்று 3,500-க்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன் சம்பவித்தது. முற்பிதாவான எத்திரோவின் ஆடுகளை மோசே மேய்த்துக் கொண்டிருந்தார். ஓரேப் மலையருகே, முட்புதரின் நடுவில் தீ ஜுவாலித்து எரிந்துகொண்டிருந்தது. அதிலிருந்து யெகோவாவின் தூதன் மோசேக்குத் தோன்றினார். யாத்திராகம பதிவு அதை இவ்வாறு விவரிக்கிறது: ‘அவர் உற்றுப் பார்த்தார். முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.’ அதன் பிறகு, முட்புதரிலிருந்து ஒரு குரல் அவரை அழைத்தது. “நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன்” என்று அந்தக் குரல் அறிவித்தது. (யாத்திராகமம் 3:1-6) பிற்பாடு, பொ.ச. முதல் நூற்றாண்டில் கடவுளுடைய குமாரன் இயேசுவே இவ்வார்த்தைகளைத் திரும்பவும் எடுத்துரைத்தார்.
2, 3. (அ) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருக்கு என்ன வெகுமதி காத்திருக்கிறது? (ஆ) என்ன கேள்விகள் எழும்புகின்றன?
2 உயிர்த்தெழுதலை நம்பாத சதுசேயர்களோடு இயேசு பேசிக் கொண்டிருந்தார். “அன்றியும் மரித்தோர் எழுந்திருப்பார்களென்பதை மோசேயும் முட்செடியைப் பற்றிய வாசகத்தில் காண்பித்திருக்கிறார். எப்படியெனில், கர்த்தரை ஆபிரகாமின் தேவனென்றும் ஈசாக்கின் தேவனென்றும் யாக்கோபின் தேவனென்றும் சொல்லியிருக்கிறார். அவர் மரித்தோரின் தேவனாயிராமல், ஜீவனுள்ளோரின் தேவனாயிருக்கிறார்; எல்லாரும் அவருக்குப் பிழைத்திருக்கிறார்களே” என்று இயேசு கூறினார். (லூக்கா 20:27, 37, 38) வெகு காலத்திற்கு முன் இறந்த ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் கடவுளுடைய நினைவில் இன்னும் உயிர்வாழ்ந்து வருவதாக இவ்வார்த்தைகள் மூலம் இயேசு உறுதிப்படுத்தினார். யோபுவைப் போலவே இவர்களும், தங்கள் ‘கட்டாய சேவை’ முடிவடைவதற்காக, அதாவது மரணத் தூக்கம் முடிவடைவதற்காகக் காத்திருக்கிறார்கள். (யோபு 14:14, NW) கடவுளுடைய புதிய உலகில் அவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்.
3 மனித சரித்திரத்தில் இதுவரை இறந்துபோன கோடிக்கணக்கானோரைப் பற்றியென்ன? அவர்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்களா? இந்தக் கேள்விக்கு திருப்திகரமான பதிலைப் பெறுவதற்கு முன், மரித்தோர் எங்கே செல்கிறார்கள் என்பதை கடவுளுடைய வார்த்தையிலிருந்து காணலாம்.
மரித்தோர் எங்கே இருக்கிறார்கள்?
4. (அ) மக்கள் மரிக்கும்போது எங்கே செல்கிறார்கள்? (ஆ) ஷியோல் என்றால் என்ன?
4 “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என பைபிள் குறிப்பிடுகிறது. அவர்கள் நரக அக்கினியில் வாதிக்கப்படுவதும் இல்லை, லிம்போவில் வேதனையோடு காத்துக் கொண்டிருப்பதும் இல்லை. மாறாக, அவர்கள் வெறுமனே மண்ணுக்குத் திரும்புகிறார்கள். ஆகவே, “செய்யும்படி உன் கைக்கு நேரிடுகிறது எதுவோ அதை உன் பெலத்தோடே செய்; நீ போகிற பாதாளத்திலே [“ஷியோலிலே,” NW] செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லையே” என உயிரோடிருக்கும் அனைவருக்கும் கடவுளுடைய வார்த்தை அறிவுறுத்துகிறது. (பிரசங்கி 9:5, 10; ஆதியாகமம் 3:19) ‘ஷியோல்’ என்பது அநேகருக்குப் பழக்கமில்லாத வார்த்தை. இந்த எபிரெய வார்த்தை எப்படித் தோன்றியதென சரியாக தெரியவில்லை. இறந்து போனவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்கள் என்று பல மதங்கள் போதிக்கின்றன. ஆனால், ஷியோலில் இருப்பவர்கள் எந்த உணர்வுமில்லாமல் மரித்த நிலையில் இருக்கிறார்கள் என கடவுளுடைய ஏவப்பட்ட வார்த்தை காண்பிக்கிறது. ஷியோல் என்பது மனிதர்களின் பொதுப் பிரேதக்குழி.
5, 6. யாக்கோபு மரித்தபோது எங்கே சென்றார், அங்கே யாரோடு போய்ச் சேர்ந்தார்?
5 பைபிளில் ‘ஷியோல்’ என்ற வார்த்தை ஆதியாகமம் 37:35-ல் முதன்முறை வருகிறது. முற்பிதாவான யாக்கோபு தன்னுடைய அன்பு மகன் யோசேப்பு மரித்துவிட்டதாக நினைத்து, கவலையில் ஆழ்ந்திருந்தபோது, “நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் [ஷியோலில்] இறங்குவேன்” என்று கூறினார். தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக நம்பிய யாக்கோபு, தானும் மரித்து ஷியோலுக்குச் செல்ல வேண்டுமென விரும்பினார். பிற்பாடு, பஞ்சத்தின் பிடியிலிருந்து விடுபடுவதற்காக யாக்கோபின் மூத்த குமாரர் ஒன்பது பேர் அவருடைய கடைசி மகனாகிய பென்யமீனை எகிப்துக்கு அழைத்துச் செல்ல விரும்பியபோது யாக்கோபு அதற்குச் சம்மதிக்கவில்லை. “என் மகன் உங்களோடே கூடப் போவதில்லை; அவன் தமையன் இறந்துபோனான். இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்கு மோசம் நேரிட்டால், நீங்கள் என் நரை மயிரைச் சஞ்சலத்தோடே பாதாளத்தில் [ஷியோலில்] இறங்கப் பண்ணுவீர்கள்” என்று அவர்களிடம் கூறினார். (ஆதியாகமம் 42:36, 38) இவ்விரண்டு குறிப்புகளும், ஷியோலை மரணத்தோடுதான் சம்பந்தப்படுத்திக் காட்டுகின்றன, மரணத்திற்குப் பின்னான ஏதோவொரு வித வாழ்க்கையோடு அல்ல.
6 எகிப்தில் உணவு நிர்வாகியாக யோசேப்பு நியமிக்கப்பட்டிருந்தார் என ஆதியாகம பதிவு காட்டுகிறது. ஆகவே, யாக்கோபு அவ்விடத்திற்குச் செல்ல முடிந்தது; அங்கு இருவரும் மீண்டும் சந்தோஷமாக ஒன்றுசேர்ந்தார்கள். அதன்பிறகு, மிகவும் முதிர்ந்த வயதில்—147-ம் வயதில்—மரிக்கும் வரை யாக்கோபு அங்கேயே குடியிருந்தார். மரிக்கும் தறுவாயில் அவர் கேட்டுக்கொண்டதற்கு இசைவாக, அவருடைய மகன்கள் அவரது எலும்புகளை கானான் தேசத்தில் இருந்த மக்பேலா குகையில் அடக்கம் பண்ணினார்கள். (ஆதியாகமம் 47:28; 49:29-31; 50:12, 13) இவ்வாறு அவரது தகப்பனான ஈசாக்கும் தாத்தாவான ஆபிரகாமும் இருந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்தார்.
‘தங்கள் பிதாக்களிடத்தில் சேர்க்கப்பட்டார்கள்’
7, 8. (அ) ஆபிரகாம் மரித்தபோது எங்கே சென்றார்? விளக்கவும். (ஆ) மற்றவர்களும் மரித்தபோது ஷியோலுக்குச் சென்றார்கள் என்பதை எது காட்டுகிறது?
7 முன்பு ஆபிரகாமோடு யெகோவா தமது உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அவருடைய சந்ததி பெருகும் என்று வாக்குறுதி அளித்தபோது, அவருக்கு என்ன சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டார். “நீ சமாதானத்தோடே உன் பிதாக்களிடத்தில் சேருவாய்; நல்ல முதிர் வயதிலே அடக்கம் பண்ணப்படுவாய்” என்றும் கூறினார். (ஆதியாகமம் 15:15) இது அப்படியே சம்பவித்தது. ஆதியாகமம் 25:8 இவ்வாறு விவரிக்கிறது: ‘பிற்பாடு ஆபிரகாம் நல்ல நரை வயதிலும், முதிர்ந்த பூரண ஆயுசிலும் பிராணன் போய் மரித்து, தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டார்.’ இந்த ஜனத்தார் யார்? நோவாவின் மகனான சேமின் காலம் வரையுள்ள முற்பிதாக்களின் பட்டியலை ஆதியாகமம் 11:10-26-ல் காண முடியும். ஏற்கெனவே ஷியோலில் தூங்கிக்கொண்டிருந்த இவர்களோடுதான் ஆபிரகாம் மரணத்தின்போது சேர்க்கப்பட்டார்.
8 ‘தன் ஜனத்தாரோடே சேர்க்கப்பட்டார்’ என்ற வார்த்தைகள் எபிரெய வேதாகமத்தில் அடிக்கடி காணப்படுகின்றன. அதன்படி, ஆபிரகாமின் மகனான இஸ்மவேலும், மோசேயின் அண்ணன் ஆரோனும் மரித்தபோது ஷியோலுக்குச் சென்று அதுமுதல் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதாக இருக்கிறது. (ஆதியாகமம் 25:17; எண்ணாகமம் 20:23-29) மோசேயின் கல்லறை இருந்த இடத்தை எவரும் அறியாதபோதிலும், அவரும்கூட ஷியோலுக்குத்தான் சென்றார். (எண்ணாகமம் 27:13; உபாகமம் 34:5, 6) அதேபோல, மோசேக்குப் பின் இஸ்ரவேலரின் தலைவராக ஆன யோசுவாவும் அக்காலத்து சந்ததியார் எல்லாரும் மரித்தபோது ஷியோலுக்குச் சென்றார்கள்.—நியாயாதிபதிகள் 2:8-10.
9. (அ) எபிரெய வார்த்தையான ‘ஷியோலும்’ கிரேக்க வார்த்தையான ‘ஹேடீஸும்’ ஒரே இடத்தைத்தான் குறிக்கின்றன என்பதை பைபிள் எவ்வாறு காட்டுகிறது? (ஆ) ஷியோலில் அல்லது ஹேடீஸில் உள்ளவர்களுக்கு என்ன எதிர்பார்ப்பு இருக்கிறது?
9 பல நூற்றாண்டுகளுக்குப் பின், இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுக்கு தாவீது ராஜாவானார். அவர் மரித்தபோது, ‘தன் பிதாக்களோடே நித்திரையடைந்தார்.’ (1 இராஜாக்கள் 2:10) அவரும்கூட ஷியோலுக்குத்தான் போனாரா? பொ.ச. 33, பெந்தெகொஸ்தே தினத்தன்று தாவீதின் மரணத்தைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு பேசியது ஆர்வத்திற்குரிய விஷயம்; “உம்முடைய பரிசுத்தவானை அழிவைக் காணவொட்டீர்” என்று சங்கீதம் 16:10-ல் சொல்லப்பட்டிருக்கும் வார்த்தைகளை அவர் மேற்கோள் காட்டினார். தாவீது அதுவரையிலும் கல்லறையில்தான் இருந்தாரென குறிப்பிட்ட பிறகு, பேதுரு அவ்வார்த்தைகளை இயேசுவுக்குப் பொருத்தினார். பிறகு தாவீதைக் குறித்து இவ்வாறு சொன்னார்: ‘அவர் கிறிஸ்துவினுடைய ஆத்துமா பாதாளத்திலே [“ஹேடீஸிலே,” NW] விடப்படுவதில்லையென்றும், அவருடைய மாம்சம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, உயிர்த்தெழுதலைக் குறித்து சொன்னார். இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார். இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.’ (அப்போஸ்தலர் 2:29-32) “ஷியோல்” என்ற எபிரெய வார்த்தைக்கு இணையான “ஹேடீஸ்” என்ற கிரேக்க வார்த்தையை பேதுரு இங்கே பயன்படுத்தினார். ஆகவே, ஷியோலில் உள்ளவர்கள் இருக்கும் அதே நிலையில்தான் ஹேடீஸில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் உயிர்த்தெழுதலை எதிர்நோக்கி நித்திரையில் இருக்கிறார்கள்.
அநீதிமான்கள் ஷியோலில் இருக்கிறார்களா?
10, 11. மரிக்கையில், அநீதிமான்கள் சிலரும் ஷியோல் அல்லது ஹேடீஸுக்குச் செல்கிறார்கள் என்று நாம் ஏன் சொல்லலாம்?
10 மோசே இஸ்ரவேல் ஜனத்தை எகிப்திலிருந்து வழிநடத்தியபோது, வனாந்தரத்தில் ஒரு கலகம் வெடித்தது. கலகத்திற்குத் தலைமை வகித்த கோராகு, தாத்தான், அபிராம் ஆகியவர்களிடமிருந்து பிரிந்து செல்லும்படி ஜனங்களிடம் மோசே கூறினார். அவர்கள் கொடூரமாக சாகப் போகிறார்கள் என்றும் அவர் கூறினார். “சகல மனிதரும் சாகிறபடி இவர்கள் செத்து, சகல மனிதருக்கும் நேரிடுகிறது போல இவர்களுக்கும் நேரிட்டால், கர்த்தர் என்னை அனுப்பவில்லை என்று அறிவீர்கள். கர்த்தர் ஒரு புதிய காரியத்தை நேரிடச் செய்வதால், பூமி தன் வாயைத் திறந்து, இவர்கள் உயிரோடே பாதாளத்தில் [ஷியோலில்] இறங்கத்தக்கதாக இவர்களையும் இவர்களுக்கு உண்டான யாவையும் விழுங்கிப் போட்டதேயானால், இந்த மனிதர் கர்த்தரை அவமதித்தார்கள் என்பதை அறிந்துகொள்வீர்கள்” என்று விளக்கினார். (எண்ணாகமம் 16:29, 30) ஆகவே, பூமி பிளந்ததால் விழுங்கப்பட்ட இவர்களும் சரி, அக்கினியால் பட்சித்துப் போடப்பட்ட கோராகும் அவனைச் சேர்ந்த 250 லேவியர்களும் சரி, இந்த எல்லா கலகக்காரர்களும் ஷியோலுக்கு அல்லது ஹேடீஸுக்குச் சென்றார்கள்.—எண்ணாகமம் 26:10.
11 தாவீது ராஜாவைப் பழித்துப் பேசிய சீமேயி என்பவன் தாவீதுக்குப் பின் பட்டத்திற்கு வந்த சாலொமோனால் தண்டிக்கப்பட்டான். “நீ அவனை தண்டியாமல் விடாதே. நீ ஞானமுள்ளவனாக இருப்பதால், அவனுக்கு செய்ய வேண்டியது இன்னதென்று நீ அறிவாய். நீ அவனுடைய நரை மயிரை இரத்தத்துடன் ஷியோலில் இறங்கப்பண்ண வேண்டும்” என்று தாவீது ஆணையிட்டார். சாலொமோன் அந்தத் தண்டனையை பெனாயாவின் மூலம் நிறைவேற்றினார். (1 இராஜாக்கள் 2:8, 9, 44-46, NW) பெனாயாவின் பட்டயத்திற்குப் பலியான மற்றொருவன் இஸ்ரவேலின் முன்னாள் படைத்தலைவனாகிய யோவாப். அவனுடைய நரைமயிர் ‘சமாதானமாய் பாதாளத்தில் [ஷியோலில்] இறங்கவில்லை.’ (1 இராஜாக்கள் 2:5, 6, 28-34) “துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே [ஷியோலிலே] தள்ளப்படுவார்கள்” என்று கடவுளுடைய ஆவியின் ஏவுதலால் தாவீது எழுதிய பாடல் உண்மை என்பதை இவ்விரண்டு உதாரணங்களும் நிரூபிக்கின்றன.—சங்கீதம் 9:17.
12. அகித்தோப்பேல் யார், அவர் மரித்தபோது எங்கே சென்றார்?
12 அகித்தோப்பேல் தாவீதின் அந்தரங்க ஆலோசகராக இருந்தார். அவருடைய ஆலோசனை யெகோவாவிடமிருந்து வந்த ஆலோசனையைப் போல மதிக்கப்பட்டது. (2 சாமுவேல் 16:23) வருத்தகரமாக, நம்பிக்கைக்குரிய இந்த ஊழியக்காரர் ஒரு துரோகியாக மாறி, தாவீதின் மகன் அப்சலோம் செய்த கலகத்தில் சேர்ந்துகொண்டார். “என்னை நிந்தித்தவன் சத்துரு அல்ல, அப்படியிருந்தால் சகிப்பேன்; எனக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டினவன் என் பகைஞன் அல்ல, அப்படியிருந்தால் அவனுக்கு மறைந்திருப்பேன்” என்று எழுதியபோது தாவீது இந்தத் துரோகத்தையே மறைமுகமாகக் குறிப்பிட்டார். “மரணம் அவர்களைத் தொடர்ந்து பிடிப்பதாக; அவர்கள் உயிரோடே பாதாளத்தில் [ஷியோலில்] இறங்குவார்களாக. அவர்கள் வாசஸ்தலங்களிலும் அவர்கள் உள்ளத்திலும் பொல்லாங்கு இருக்கிறது” என்று தாவீது தொடர்ந்து குறிப்பிட்டார். (சங்கீதம் 55:12-15) அகித்தோப்பேலும் அவனைச் சேர்ந்தவர்களும் மரித்தபோது அவர்கள் எல்லாரும் ஷியோலுக்குச் சென்றார்கள்.
கெஹென்னாவில் இருப்பவர்கள் யார்?
13. யூதாஸ் ஏன் “கேட்டின் மகன்” என்று அழைக்கப்படுகிறான்?
13 தாவீதுக்கு நேரிட்டதை பெரிய தாவீதான இயேசுவுக்கு நேரிட்டதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். இயேசுவின் 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான யூதாஸ் காரியோத்து அகித்தோப்பேலைப் போலவே ஒரு துரோகியாக மாறினான். யூதாஸ் செய்த துரோகம் அகித்தோப்பேல் செய்ததைவிட பல மடங்கு மோசமானதாக இருந்தது. கடவுளுடைய ஒரே பேறான குமாரனுக்கு எதிராக அவன் செயல்பட்டான். கடவுளுடைய குமாரன் பூமியில் தம்முடைய ஊழிய காலத்தின் முடிவில் செய்த ஜெபம் ஒன்றில் தம்மைப் பின்பற்றியவர்களைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “நான் அவர்களுடனேகூட உலகத்திலிருக்கையில் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொண்டேன்; நீர் எனக்குத் தந்தவர்களைக் காத்துக்கொண்டு வந்தேன்; வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக, கேட்டின் மகன் கெட்டுப்போனானேயல்லாமல், அவர்களில் ஒருவனும் கெட்டுப்போகவில்லை.” (யோவான் 17:12) யூதாஸை “கேட்டின் மகன்” என்று சொல்வதன் மூலம், உயிர்த்தெழுதலுக்கான எந்த எதிர்பார்ப்பும் அவனுக்குக் கிடையாது என்பதை இயேசு சுட்டிக்காட்டினார். அவன் கடவுளுடைய நினைவில் இல்லை. அவன் ஷியோலுக்கு அல்ல, ஆனால் கெஹென்னாவுக்குச் சென்றான். கெஹென்னா என்றால் என்ன?
14. கெஹென்னா எதை அடையாளப்படுத்துகிறது?
14 இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மதத் தலைவர்கள் தங்களுடைய சீஷர்கள் ஒவ்வொருவரையும் ‘நரகத்தின் [கெஹென்னாவின்] மகனாக’ ஆக்கியதால் அவர்களை அவர் கண்டனம் செய்தார். (மத்தேயு 23:15) குப்பைகள் கொட்டப்படும் இடமாக இருந்த இன்னோம் பள்ளத்தாக்கைப் பற்றி அச்சமயத்தில் வாழ்ந்த மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். நல்லடக்கம் செய்யப்படுவதற்கு தகுதியற்றவர்களாகக் கருதப்பட்ட மரண தண்டனை குற்றவாளிகளின் உடல்கள் அங்கே எறியப்பட்டன. முன்னதாக, இயேசுதாமே மலைப்பிரசங்கத்தில் கெஹென்னாவைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார். (மத்தேயு 5:29, 30) அதன் அடையாளப்பூர்வ அர்த்தம் கேட்போருக்குத் தெளிவாக விளங்கியது. உயிர்த்தெழுதல் நம்பிக்கை எதுவும் இல்லாத, நிரந்தர அழிவையே கெஹென்னா அடையாளப்படுத்தியது. இயேசுவின் காலத்திலிருந்த யூதாஸ் காரியோத்தை தவிர, வேறு யாரேனும் ஷியோலுக்கு அல்லது ஹேடீஸுக்குச் செல்லாமல் கெஹென்னாவுக்குச் சென்றிருக்கிறார்களா?
15, 16. மரித்தபோது கெஹென்னாவுக்குச் சென்றவர்கள் யார், அவர்கள் ஏன் அங்கே சென்றார்கள்?
15 முதல் மனிதர்களான ஆதாமும் ஏவாளும் பரிபூரணராகப் படைக்கப்பட்டனர். ஆனால் வேண்டுமென்றே பாவம் செய்தனர். நித்திய ஜீவனையோ, மரணத்தையோ தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. அவர்களோ கடவுளுக்குக் கீழ்ப்படியாமல், சாத்தானோடு சேர்ந்துகொண்டார்கள். ஆகவே, அவர்கள் மரித்தபோது கிறிஸ்துவின் கிரய பலியிலிருந்து நன்மை அடைவதற்கான வாய்ப்பே அவர்களுக்கு இருக்கவில்லை. மாறாக, அவர்கள் கெஹென்னாவுக்குச் சென்றார்கள்.
16 ஆதாமின் முதல் மகனான காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான். அதன் பிறகு ஒரு நாடோடியாக அலைந்து திரிந்தான். ‘பொல்லாங்கனால் உண்டானவன்’ என்று காயீனை அப்போஸ்தலனாகிய யோவான் விவரித்தார். (1 யோவான் 3:12) அவனுடைய பெற்றோரைப் போல, அவனும்கூட மரித்தபோது கெஹென்னாவுக்குச் சென்றான் என்ற முடிவுக்கு வருவது நியாயமானதே. (மத்தேயு 23:33, 35) நீதிமானாகிய ஆபேலின் சூழ்நிலையோ எவ்வளவு வேறுபட்டதாக இருக்கிறது! “விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமானென்று சாட்சி பெற்றான்; அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சி கொடுத்தார்” என்று அப்போஸ்தலன் பவுல் விளக்கினார். “அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்” என்று குறிப்பிட்டார். (எபிரெயர் 11:4) ஆம், ஆபேல் இப்போது ஷியோலில், உயிர்த்தெழுதலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறான்.
“முதலாம்” மற்றும் “மேன்மையான” உயிர்த்தெழுதல்
17. (அ) இந்த ‘முடிவு காலத்தில்’ யார் ஷியோலுக்குச் செல்கிறார்கள்? (ஆ) ஷியோலில் உள்ளவர்களுக்கும் கெஹென்னாவில் உள்ளவர்களுக்கும் என்ன சம்பவிக்கும்?
17 உயிர்த்தெழுதலைப் பற்றிய இந்த விஷயங்களை வாசிக்கும் அநேகர், ‘முடிவு காலத்தில்’ மரிப்போருக்கு என்ன நேரிடுமென யோசிப்பார்கள். (தானியேல் 8:19) இந்த முடிவு காலத்திலே சவாரி செய்யும் நான்கு குதிரைவீரர்களைப் பற்றி வெளிப்படுத்துதல் 6-ம் அதிகாரம் விளக்குகிறது. ஆர்வத்திற்குரிய விஷயம் என்னவென்றால், அதில் கடைசி குதிரைவீரனுக்கு மரணம் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவனைத் தொடர்ந்தாற்போல் பாதாளம், அதாவது ஹேடீஸ், செல்கிறது. ஆகவே, முந்தின குதிரைவீரர்களுடைய செயல்களின் காரணமாக அகால மரணமடைகிற அநேகர் ஹேடீஸுக்குச் செல்கின்றனர். கடவுளுடைய புதிய உலகில் உயிர்த்தெழுப்பப்படுவதற்காக அங்கே காத்திருக்கின்றனர். (வெளிப்படுத்துதல் 6:8) அப்படியானால், ஷியோலில் (ஹேடீஸில்) உள்ளவர்களுக்கு என்ன ஆகும்? கெஹென்னாவில் உள்ளவர்களுக்கு என்ன ஆகும்? சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், ஷியோலில் அல்லது ஹேடீஸில் உள்ளவர்களுக்கு உயிர்த்தெழுதல்; கெஹென்னாவில் உள்ளவர்களுக்கு நித்திய அழிவு.
18. ‘முதலாம் உயிர்த்தெழுதல்’ என்ன எதிர்பார்ப்பை அளிக்கிறது?
18 “முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள் மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்” என அப்போஸ்தலனாகிய யோவான் எழுதினார். இயேசுவோடு உடன் அரசர்களாக ஆட்சி செய்பவர்கள் ‘முதலாம் உயிர்த்தெழுதலில்’ பங்குகொள்கிறார்கள். ஆனால் மற்றவர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?—வெளிப்படுத்துதல் 20:6.
19. ‘மேன்மையான உயிர்த்தெழுதலிலிருந்து’ எவ்வாறு சிலர் பயனடைகிறார்கள்?
19 கடவுளுடைய ஊழியர்களான எலியா மற்றும் எலிசாவின் காலம் முதற்கொண்டே உயிர்த்தெழுதல் என்ற அற்புதத்தின் மூலம் மக்கள் மறுபடியும் உயிருக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். “ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறு சிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு, விடுதலை பெறச் சம்மதியாமல், வாதிக்கப்பட்டார்கள்” என்று பவுல் சொன்னார். ஆம், விசுவாசத்தில் நிலைத்திருந்த இந்த ஆட்கள் உயிர்த்தெழுதலுக்காக ஆவலோடு காத்திருந்தார்கள். சில ஆண்டுகள் வாழ்ந்த பின்னர் மறுபடியும் மரித்துப்போக வேண்டிய உயிர்த்தெழுதலுக்காக அல்ல, ஆனால் நித்திய ஜீவனை அளிக்கும் உயிர்த்தெழுதலுக்காகவே காத்திருந்தார்கள்! அது நிச்சயம் ‘மேன்மையான உயிர்த்தெழுதலாக’ இருக்கும்.—எபிரெயர் 11:35.
20. அடுத்த கட்டுரை எதைப் பற்றி கலந்தாலோசிக்கும்?
20 யெகோவா இந்தப் பொல்லாத உலகை அழிப்பதற்கு முன் நாம் உண்மையுள்ளவர்களாய் மரித்தால், ‘மேன்மையான உயிர்த்தெழுதலை’ பெறுவோம் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். நித்திய ஜீவனோடு வாழும் எதிர்ப்பார்ப்பை அளிப்பதால்தான் அது மேன்மையான உயிர்த்தெழுதலாக இருக்கிறது. “இதைக் குறித்து நீங்கள் வியப்படைய வேண்டாம்; ஏனெனில் காலம் வருகிறது, அப்போது ஞாபகார்த்த கல்லறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவருடைய குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசு வாக்குறுதி அளித்தார். (யோவான் 5:28, 29, NW) உயிர்த்தெழுதலின் நோக்கத்தைக் குறித்து அடுத்த கட்டுரை கலந்தாலோசிக்கிறது. நாம் உண்மையோடு நிலைத்திருக்க உயிர்த்தெழுதல் நம்பிக்கை எவ்வாறு நம்மை பலப்படுத்துகிறது என்பதையும், சுய தியாக மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள அது நமக்கு எவ்வாறு உதவுகிறது என்பதையும் அக்கட்டுரை விளக்கும்.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
• யெகோவா ஏன் “ஜீவனுள்ளோரின்” தேவனாக விவரிக்கப்படுகிறார்?
• ஷியோலில் உள்ளவர்களின் நிலை என்ன?
• கெஹென்னாவில் இருப்பவர்களுக்கு என்ன சம்பவிக்கும்?
• ‘மேன்மையான உயிர்த்தெழுதலிலிருந்து’ சிலர் எவ்வாறு பயனடைவார்கள்?
[பக்கம் 15-ன் படம்]
ஆபிரகாமைப் போல, ஷியோலுக்குச் செல்பவர்கள் அனைவரும் உயிர்த்தெழுதலுக்காகக் காத்திருக்கிறார்கள்
[பக்கம் 16-ன் படம்]
ஆதாம், ஏவாள், காயீன், யூதாஸ் ஆகியோர் கெஹென்னாவுக்கு ஏன் சென்றார்கள்?