உண்மைத்தன்மை உதவுமா?
“ஹெல்த் இன்சூரன்ஸுக்காக நீங்க எக்கச்சக்கமா பணம் கட்டிட்டு வர்றீங்க” என்றார் கார்ல்.a இவர் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி பிரதிநிதி. “எங்க கம்பெனியில மட்டும் நீங்க சேர்ந்தீங்கன்னா மாசம் 15 யூரோ வரை சேமிக்கலாம், அது ஒரு பெரிய தொகை இல்லையா” என்றார் மேலுமாக.
அதற்கு என்ஸ், “நீங்க சொல்றது சரிதான், ஆனா பல வருஷங்களாவே நான் அந்த கம்பெனியிலதான் ஹெல்த் இன்சூரன்ஸ் கட்டிட்டு வர்றேன். அவுங்க எனக்கு நிறைய உதவி செஞ்சிருக்காங்க, அதனால அந்த கம்பெனிகாரங்களுக்கு உண்மையா இருக்க நான் விரும்புறேன்” என்று பதிலளித்தார்.
உடனே கார்ல், “உண்மையா இருக்கறது நல்ல குணம்தான், ஆனா அப்படி உண்மையா இருக்கறதனால நீங்க நிறைய பணத்தை இழக்கிறீங்களே!” என்றார்.
கார்ல் சொன்னது சரிதான். ஒருவருக்கு உண்மையாய் இருப்பது பெரும்பாலும் பண இழப்பை ஏற்படுத்தலாம். நம்முடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடலாம், அதுமட்டுமல்ல, உணர்ச்சிப்பூர்வ கடமையையும் அது உட்படுத்தலாம். அப்படியானால், உண்மையாய் இருப்பதில் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?
புகழப்படுகிறது, ஆனால் புழக்கத்தில்?
ஜெர்மனியிலுள்ள ஆலன்ஸ்பாக் கருத்துரை ஆய்வுக் கழகம் நடத்திய சுற்றாய்வின்போது பதிலளித்த 96 சதவீதம் பேர், உண்மைத்தன்மை என்பது ஒரு நல்ல குணம் என்பதை ஒத்துக்கொண்டார்கள். அதே ஆய்வுக் கழகம் இரண்டாவது முறையாக, 18-லிருந்து 24 வயதுக்காரர்கள் மத்தியில் சுற்றாய்வு நடத்தியபோது, உண்மைத்தன்மை என்பது தற்போது எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என 3-ல் 2 பேர் கருதினார்கள்.
உண்மைத்தன்மை என்ற குணம் பரவலாகப் புகழப்பட்டு வந்தாலும், நிஜமாகவே உண்மைத்தன்மையைக் காட்ட வேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகையில் விஷயமே தலைகீழாகி விடுகிறது. உதாரணத்திற்கு, பல ஐரோப்பிய நாடுகளில், மணமான தம்பதியர்கள் அல்லது குடும்ப அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்க அடிக்கடி தவறிவிடுகிறார்கள். நண்பர்கள்கூட ஒருவருக்கொருவர் உண்மையாய் இருக்க பெரும்பாலும் தவறிவிடுகிறார்கள். முன்பு ஒரு காலத்தில், தொழிலாளர் தொழிலாளிகளுக்கு இடையே காணப்பட்ட உண்மைத்தன்மையும், அல்லது வியாபாரிகள் வாடிக்கையாளர்களுக்கு இடையே காணப்பட்ட உண்மைத்தன்மையும் தற்போது மறைந்துவிட்டது என்றே சொல்லலாம். ஏன்?
ஏனென்றால், அவசரகதியான வாழ்க்கைப் பாணியின் காரணமாக, உண்மையாய் இருப்பதற்கு நேரமோ மன பலமோ சிலசமயம் இல்லாமல் போய்விடலாம். சக மனிதர்களால் ஏமாற்றப்பட்டு, மனக்கசப்படைந்த சிலர், எவருக்குமே உண்மையாய் இருக்க தயங்கலாம். இன்னும் சிலர், உண்மையாய் இருக்க வேண்டிய அவசியமில்லாத ஒருவித வாழ்க்கையை, அதாவது ‘இன்று இருக்கிறோம் நாளை சாகப்போகிறோம்’ என்பது போன்ற வாழ்க்கையை வாழ விரும்பலாம்.
காரணங்கள் என்னவாக இருந்தாலும், உண்மைத்தன்மை என்ற நல்ல குணம் அடிக்கடி புகழப்படுகிறதே தவிர, அது அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை. அப்படியானால், உண்மையாய் இருப்பது உதவுமா? உதவும் என்றால், யார் யாரிடம் நாம் உண்மையாய் நடந்துகொள்ள வேண்டும்? எந்தெந்த வழிகளில் அவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? உண்மையாய் இருப்பதால் வரும் நன்மைகள் யாவை? இந்தக் கேள்விகளை இப்போது நாம் சிந்தித்துப் பார்க்கலாம்.
[அடிக்குறிப்பு]
a இந்தக் கட்டுரையிலும் அடுத்த கட்டுரையிலும் சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
உண்மைத்தன்மை என்ற நல்ல குணம் அடிக்கடி புகழப்படுகிறதே தவிர, அவ்வளவாகப் புழக்கத்தில் இல்லை