கொந்தளிப்பான இந்தக் காலங்களில் கடவுளோடு நடவுங்கள்
‘ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற் போனார்; தேவன் அவரை எடுத்துக்கொண்டார்.’—ஆதியாகமம் 5:24.
1. நம்முடைய காலங்களை கஷ்டம் நிறைந்ததாக்கும் அம்சங்கள் சில யாவை?
கொந்தளிப்பான காலங்கள்! 1914-ல் மேசியானிய ராஜ்யத்தின் பிறப்பு முதல் மனிதகுலம் அனுபவிக்கும் வன்முறையும் குழப்பமும் நிறைந்த இக்காலப்பகுதியை விவரிக்க எவ்வளவு பொருத்தமான வார்த்தைகள்! இந்தக் காலம் முழுவதும் மனிதர்கள் “கடைசி நாட்களில்” வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பஞ்சங்கள், வியாதிகள், பூமியதிர்ச்சிகள், போர்கள் போன்ற துன்பங்கள் என்றுமில்லாத அளவுக்கு மனிதர்களை வாட்டி வதைத்திருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:1; வெளிப்படுத்துதல் 6:1-8) இத்துன்பங்களுக்கு யெகோவாவின் ஜனங்கள் விதிவிலக்கானவர்கள் அல்ல. நிச்சயமற்றதும் கஷ்டங்கள் நிறைந்ததுமான இந்தக் காலங்களை நாம் எல்லாருமே ஓரளவு சமாளிக்க வேண்டியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிகள், அரசியல் குழப்பங்கள், குற்றச்செயல்கள், நோய்கள் ஆகியவை வாழ்க்கையைக் கசப்பாக்கும் காரியங்களில் சில.
2. எப்படிப்பட்ட சவால்களை யெகோவாவின் ஊழியர்கள் எதிர்பட்டிருக்கிறார்கள்?
2 அதோடு, யெகோவாவின் சாட்சிகளில் பெரும்பாலோர் எண்ணற்ற கடும் துன்புறுத்தல்களைச் சகித்திருக்கிறார்கள். ஏனென்றால் ‘தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கும், இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சாட்சியை உடையவர்களுக்கும்’ எதிராக சாத்தான் போரிட்டு வந்திருக்கிறான். (வெளிப்படுத்துதல் 12:17) நாம் நேரடியாக துன்புறுத்தலை சந்திக்காவிட்டாலும், பிசாசாகிய சாத்தானையும் மனிதர்கள் மத்தியில் அவன் ஊட்டிவளர்க்கும் மனப்பான்மையையும் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது. (எபேசியர் 2:2; 6:12) இந்த மனப்பான்மை நம்மீது செல்வாக்கு செலுத்தாதபடிக்குத் தொடர்ந்து விழிப்புடன் இருப்பது அவசியம். ஏனென்றால் வேலை செய்யுமிடத்திலோ பள்ளியிலோ அல்லது வேறு ஏதாவது இடத்திலோ தூய வணக்கத்தில் அக்கறை காட்டாத ஆட்களுடன் நாம் தொடர்புகொள்ள வேண்டியிருக்கிறது.
கடவுளோடு நடவுங்கள், புறதேசத்தாரோடு அல்ல
3, 4. எந்த விதத்தில் கிறிஸ்தவர்கள் இந்த உலகிலிருந்து வேறுபட்டவர்கள்?
3 முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களும் இவ்வுலகின் மனப்பான்மையை எதிர்த்து கடினமாய் போராடினார்கள்; அதனால் மற்ற ஆட்களிலிருந்து மிகவும் வேறுபட்டு விளங்கினார்கள். பின்வருமாறு எழுதியபோது பவுல் இந்த வேறுபாட்டை விவரித்தார்: “கர்த்தருக்குள் நான் உங்களுக்குச் சாட்சியாகச் சொல்லி எச்சரிக்கிறது என்னவெனில், மற்றப் புறஜாதிகள் [அதாவது புறதேசத்தார்] தங்கள் வீணான சிந்தையிலே நடக்கிறது போல நீங்கள் இனி நடவாமலிருங்கள். அவர்கள் புத்தியில் அந்தகாரப்பட்டு, தங்கள் இருதய கடினத்தினால் தங்களில் இருக்கும் அறியாமையினாலே தேவனுடைய ஜீவனுக்கு அந்நியராயிருந்து; உணர்வில்லாதவர்களாய், சகலவித அசுத்தங்களையும் ஆவலோடே நடப்பிக்கும்படி, தங்களைக் காமவிகாரத்திற்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார்கள்.”—எபேசியர் 4:17-19.
4 பவுலுடைய நாளிலும்சரி நம்முடைய நாளிலும்சரி, ஆன்மீக ரீதியிலும் ஒழுக்க ரீதியிலும் இவ்வுலகம் இருளில் மூழ்கிக் கிடப்பதை இந்த வார்த்தைகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக விவரிக்கின்றன! முதல் நூற்றாண்டைப் போல், இன்றுள்ள கிறிஸ்தவர்களும் ‘புறதேசத்தார் நடப்பதைப் போல் நடப்பதில்லை.’ அதற்கு மாறாக, கடவுளோடு நடக்கும் பெரும் பாக்கியத்தை அனுபவித்து மகிழ்கிறார்கள். தாழ்ந்த, அபூரண மனிதர்கள் யெகோவாவுடன் நடக்க முடியுமென சொல்வது நியாயமானதா என சிலர் சந்தேகிக்கலாம். என்றாலும், அவர்களால் முடியுமென பைபிள் காட்டுகிறது. அதோடு, நாம் அவ்வாறு நடக்க வேண்டுமென்றே யெகோவாவும் எதிர்பார்க்கிறார். பொது சகாப்தத்திற்கு முன்பு எட்டாம் நூற்றாண்டில் மீகா தீர்க்கதரிசி பின்வரும் வார்த்தைகளை ஏவுதலால் எழுதினார்: ‘நியாயஞ்செய்து, இரக்கத்தைச் சிநேகித்து, உன் தேவனுக்கு முன்பாக மனத்தாழ்மையாய் நடப்பதை அல்லாமல் வேறே என்னத்தை யெகோவா உன்னிடத்தில் கேட்கிறார்.’—மீகா 6:8.
எப்படி, ஏன் கடவுளோடு நடக்க வேண்டும்?
5. அபூரண மனிதன் எப்படி கடவுளோடு நடக்க முடியும்?
5 காணக்கூடாத சர்வவல்லமையுள்ள கடவுளோடு நாம் எப்படி நடக்க முடியும்? தெளிவாகவே, கடவுளோடு நடப்பது என்பது சக மனிதருடன் நடப்பது போன்ற ஒன்றல்ல. பைபிளில், “நடப்பது” என்ற வார்த்தை ‘ஒரு குறிப்பிட்ட வழியைப் பின்பற்றுவதைக்’ குறிக்கலாம்.a இதை மனதிற்கொண்டு, கடவுளோடு நடப்பவர் கடவுள் வகுத்துக் கொடுத்திருக்கும் பாதையை, அவரைப் பிரியப்படுத்துகிற பாதையைப் பின்பற்றுகிறார் என நாம் புரிந்துகொள்கிறோம். இத்தகைய பாதையில் செல்வது நம்மைச் சுற்றியுள்ள அநேக ஆட்களிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது. என்றாலும், இதுவே ஒரு கிறிஸ்தவர் தேர்ந்தெடுக்க வேண்டிய சரியான பாதை. ஏன்? இதற்கு அநேக காரணங்கள் இருக்கின்றன.
6, 7. கடவுளோடு நடப்பது ஏன் மிகச் சிறந்த வழி?
6 முதலாவதாக, யெகோவாவே நம் படைப்பாளர், நம் உயிரின் ஊற்றுமூலர், நாம் உயிர் வாழத் தேவையான அனைத்தையும் அருளுபவர். (வெளிப்படுத்துதல் 4:11) ஆகவே, நாம் நடக்க வேண்டிய விதத்தைப் பற்றி சொல்வதற்கு அவருக்கே முழு உரிமையும் இருக்கிறது. மேலும், கடவுளோடு நடப்பதுதான் மிகுந்த பயனளிக்கும் வழி. கடவுளோடு நடப்பவர்களுக்கு, பாவ மன்னிப்பு ஏற்பாட்டை அவர் செய்திருக்கிறார், அதோடு நித்திய காலமாக வாழும் நிச்சயமான நம்பிக்கையையும் அளிக்கிறார். நாம் அபூரண மனிதர்களாகவும் சாத்தானின் உலகில் வாழ்கிறவர்களாகவும் இருக்கிறபோதிலும், வாழ்க்கையில் வெற்றிபெற உதவும் ஞானமான புத்திமதிகளையும் நமது அன்புள்ள பரம பிதா நமக்கு அளிக்கிறார். (யோவான் 3:16; 2 தீமோத்தேயு 3:15, 16; 1 யோவான் 1:8; 2:25; 5:19) கடவுளோடு நடப்பதற்கு கூடுதலான காரணம் என்னவென்றால், சபையின் சமாதானத்திற்கும் ஒற்றுமைக்கும் அது பங்களிக்கிறது.—கொலோசெயர் 3:15, 16.
7 கடைசியான ஆனால் மிக முக்கியமான காரணம், நாம் கடவுளோடு நடக்கும்போது ஏதேன் தோட்டத்தில் எழுப்பப்பட்ட மிகப் பெரிய விவாதத்தில்—சர்வலோக பேரரசுரிமை பற்றிய விவாதத்தில்—நாம் யாருக்கு ஆதரவு கொடுக்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். (ஆதியாகமம் 3:1-6) நம்முடைய முழு ஆதரவும் யெகோவாவுக்கே என்பதை நம்முடைய வாழ்க்கைப் போக்கிலிருந்து காட்டுகிறோம். அதோடு, பேரரசராக இருப்பதற்கு அவருக்கு மாத்திரமே உரிமை இருக்கிறது என்பதை பயமின்றி அறிவிக்கிறோம். (சங்கீதம் 83:17) இவ்வாறாக, கடவுளுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும், அவருடைய சித்தம் செய்யப்பட வேண்டும் என்ற நம் ஜெபத்திற்கு இசைவாக செயல்படுகிறோம். (மத்தேயு 6:9, 10) கடவுளோடு நடப்பதற்குத் தெரிவு செய்கிறவர்கள் எவ்வளவு ஞானமானவர்கள்! தாங்கள் செல்லும் பாதை சரியானதே என்பதில் அவர்கள் நிச்சயத்துடன் இருக்கலாம், ஏனென்றால் யெகோவா ‘ஒருவரே ஞானமுள்ளவராயிருக்கிறார்.’ அவர் ஒருபோதும் தவறு செய்யாதவர்.—ரோமர் 16:27.
8. ஏனோக்கு மற்றும் நோவாவின் காலம் எப்படி நம்முடைய காலத்திற்கு ஒத்திருந்தது?
8 ஆனால் கொந்தளிப்பான இவ்வுலகில், அதுவும் பெரும்பாலான மக்களுக்கு யெகோவாவை சேவிக்கும் ஆர்வமே இல்லாத இவ்வுலகில், கிறிஸ்தவர்களாக வாழ்வது எப்படி சாத்தியம்? கஷ்ட காலங்களில் தொடர்ந்து உத்தமத்தோடு நடந்த முற்கால உண்மை ஊழியர்களைப் பற்றி சிந்தித்துப் பார்க்கையில் நாம் இதற்குப் பதிலை தெரிந்துகொள்கிறோம். அவர்களில் இருவர்தான் ஏனோக்கு மற்றும் நோவா. அவர்கள் இருவருமே நம்முடைய காலத்திற்கு ஒத்தவொரு காலத்தில் வாழ்ந்து வந்தார்கள். துன்மார்க்கம் மலிந்து கிடந்தது. நோவாவின் காலத்தில், பூமி முழுவதும் வன்முறையும் ஒழுக்கயீனமும் தலைவிரித்தாடியது. என்றாலும், ஏனோக்கும் நோவாவும் அப்போதைய உலகில் நிலவிய மனப்பான்மையை எதிர்த்து நின்று, யெகோவாவுடன் நடந்தார்கள். அவர்களால் எப்படி முடிந்தது? இந்தக் கேள்விக்குப் பதிலைப் பெற ஏனோக்கைப் பற்றி இக்கட்டுரையில் நாம் சிந்திப்போம். அடுத்த கட்டுரையில் நோவாவைப் பற்றி சிந்திப்போம்.
கொந்தளிப்பான காலங்களில் ஏனோக்கு கடவுளோடு நடந்தார்
9. ஏனோக்கைப் பற்றி நம்மிடம் இருக்கும் தகவல் என்ன?
9 கடவுளோடு நடந்ததாக வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் நபர் ஏனோக்கு. அவரைப் பற்றி பைபிள் பதிவு இவ்வாறு கூறுகிறது: ‘ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், . . . தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தார் [அதாவது, நடந்து கொண்டிருந்தார்].’ (ஆதியாகமம் 5:22) அடுத்து, ஏனோக்கின் வாழ்நாட்காலத்தைப் பற்றி குறிப்பிட்ட பிறகு—அது நம்முடைய ஆயுளைவிட அதிகமாக இருந்தாலும், அந்நாட்களில் வாழ்ந்த மனிதர்களோடு ஒப்பிடுகையில் அது குறுகிய வாழ்நாளே—பதிவு இவ்வாறு கூறுகிறது: ‘ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில், காணப்படாமற்போனார்; தேவன் அவரை எடுத்துக்கொண்டார்.’ (ஆதியாகமம் 5:24) எதிரிகள் ஏனோக்கின் மீது கைவைப்பதற்கு முன்பே அவர் வாழ்ந்து வந்த இடத்திலிருந்து அவரை மரணம் எனும் ஆழ்ந்த நித்திரைக்கு யெகோவா மாற்றிவிட்டாரென தெரிகிறது. (எபிரெயர் 11:5, 13) இந்த சில வசனங்களைத் தவிர, ஏனோக்கைப் பற்றிய குறிப்புகள் பைபிளில் அவ்வளவாக இல்லை. என்றாலும், நம்மிடம் இருக்கும் தகவலையும் வேறுசில ஆதாரங்களையும் வைத்துப் பார்க்கும்போது, ஏனோக்கு கொந்தளிப்பான காலங்களில்தான் வாழ்ந்தார் என்று சொல்வதற்கு நமக்கு நல்ல காரணம் இருக்கிறது.
10, 11. (அ) ஆதாம் ஏவாளின் கலகத்தனத்திற்குப் பிறகு எப்படி தீய காரியங்கள் பரவின? (ஆ) ஏனோக்குப் பிரசங்கித்த தீர்க்கதரிசன செய்தி என்ன, அவருக்கு எத்தகைய பிரதிபலிப்பு கிடைத்தது?
10 உதாரணமாக, ஆதாம் பாவம் செய்தபின்பு மனித இனத்திற்குள் தீய காரியங்கள் வேகமாக பரவியதை சிந்தித்துப் பாருங்கள். ஆதாமின் முதல் மகனான காயீன் தனது சகோதரன் ஆபேலை கொலை செய்தபோது முதல் கொலைகாரன் ஆனான் என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 4:8-10) ஆபேலின் கொடூர மரணத்திற்குப்பின், ஆதாம் ஏவாளுக்கு மற்றொரு மகன் பிறந்தான், அவனுக்கு சேத் என்று பெயரிட்டார்கள். அவனைப் பற்றி நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: ‘சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.’ (ஆதியாகமம் 4:25, 26; NW) வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் ‘யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டது’ விசுவாசதுரோக முறையிலாகும்.b ஏனோஸ் பிறந்து வெகுகாலத்திற்குப் பிறகு, காயீனுடைய வம்சத்தில் லாமேக்கு என்பவர் பிறந்தார். தன்னை காயப்படுத்திய ஓர் இளைஞனைக் கொலை செய்ததைப் பற்றி தனது இரண்டு மனைவிகளுக்காக இயற்றிய ஒரு பாடலில் குறிப்பிட்டார். அவர் இவ்வாறாகவும் எச்சரித்தார்: “காயீனுக்காக ஏழுபழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்.”—ஆதியாகமம் 4:10, 19, 23, 24.
11 ஏதேன் தோட்டத்தில் சாத்தான் ஆரம்பித்து வைத்த தீமையால் ஆதாமின் சந்ததியார் மத்தியில் துன்மார்க்கம் வேகமாய் பரவியதை மேற்குறிப்பிடப்பட்ட சுருக்கமான உண்மைகள் சுட்டிக்காட்டுகின்றன. இத்தகைய உலகில், யெகோவாவின் தீர்க்கதரிசியாக ஏனோக்கு இருந்தார், தேவ ஆவியால் அவர் உரைத்த வலிமைமிக்க வார்த்தைகள் இன்றும் எதிரொலிக்கின்றன. ஏனோக்கு தீர்க்கதரிசனம் உரைத்ததைப் பற்றி யூதா இவ்வாறு அறிவிக்கிறார்: “இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், அவர்களைக் கண்டிக்கிறதற்கும், ஆயிரமாயிரமான தமது பரிசுத்தவான்களோடுங்கூட கர்த்தர் வருகிறார் என்று முன்னறிவித்தான்.” (யூதா 14, 15) இந்த வார்த்தைகள் அர்மகெதோனில் முழுமையாக நிறைவேறும். (வெளிப்படுத்துதல் 16:14, 16) என்றாலும், ஏனோக்கின் நாளிலும்கூட, அவரது தீர்க்கதரிசனத்தை ஒரு தொல்லையாக நினைத்த “அவபக்தியுள்ள பாவிகள்” பலர் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஏனோக்கிற்கு அவர்கள் எந்தத் தீங்கும் செய்யாதபடிக்கு அவரை யெகோவா எடுத்துக் கொண்டது எவ்வளவு அன்பான செயல்!
கடவுளோடு நடப்பதற்கு ஏனோக்கை பலப்படுத்தியது எது?
12. தன் காலத்தில் வாழ்ந்தவர்களிலிருந்து எது ஏனோக்கை வித்தியாசமானவராக்கியது?
12 ஏதேன் தோட்டத்தில், ஆதாமும் ஏவாளும் சாத்தானுடைய பேச்சைக் கேட்டார்கள், இப்படியாக யெகோவாவுக்கு எதிராக ஆதாம் கலகம் செய்தான். (ஆதியாகமம் 3:1-6) அவர்களுடைய மகன் ஆபேல் மாறுபட்ட பாதையைத் தேர்ந்தெடுத்தார், யெகோவா அவருக்குத் தயவு காட்டினார். (ஆதியாகமம் 4:3, 4) ஆனால் ஆதாமுடைய சந்ததியாரில் பெரும்பாலோர் ஆபேலைப் போல் இருக்கவில்லை. என்றாலும், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின் பிறந்த ஏனோக்கு ஆபேலைப் போல் இருந்தார். ஏனோக்கிற்கும் ஆதாமின் மற்ற சந்ததியார் பலருக்கும் இடையே இருந்த வித்தியாசம் என்ன? அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதியபோது அதற்கு பதிலளித்தார்: “விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சி பெற்றான்.” (எபிரெயர் 11:5) கிறிஸ்தவத்திற்கு முன்பு விசுவாசத்திற்கு தலைசிறந்த முன்மாதிரிகளாய் திகழ்ந்த “மேகம் போன்ற” திரளான ‘சாட்சிகளில்’ ஏனோக்கும் ஒருவராக இருந்தார். (எபிரெயர் 12:1) தன்னுடைய வாழ்நாட்காலத்தில், அதாவது 300 வருடங்களுக்கும் மேல்—நம்முடைய நாளில் வாழ்பவர்களுடைய ஆயுளைவிட மூன்று மடங்குக்கும் மேல்—சரியான நடத்தையைக் காத்துக்கொள்ள ஏனோக்கிற்கு உதவியது அந்த விசுவாசமே.
13. ஏனோக்கிற்கு எப்படிப்பட்ட விசுவாசம் இருந்தது?
13 ஏனோக்கு மற்றும் பிற சாட்சிகளுடைய விசுவாசத்தை விவரித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “விசுவாசம் என்பது நம்பப்படும் விஷயங்களின் நிச்சயிக்கப்பட்ட எதிர்பார்ப்பு, காணாவிடினும் உண்மைகளைப் பற்றிய மெய்ப்பிப்பு.” (எபிரெயர் 11:1, NW) ஆம், விசுவாசம் என்பது கொடுக்கப்பட்டுள்ள நிச்சயமான வாக்குறுதிகளின் அடிப்படையில், நாம் நம்புகிற காரியங்கள் கண்டிப்பாக நடக்கும் என்பதன் உறுதியான எதிர்பார்ப்பு ஆகும். நம்முடைய வாழ்க்கையில் எதன் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறோம் என்பதை பாதிக்கும் அளவுக்கு அது பலமான எதிர்பார்ப்பு ஆகும். தன்னை சுற்றியிருந்த உலகத்தார் கடவுளோடு நடக்காதபோதிலும், அத்தகைய விசுவாசமே கடவுளோடு நடக்க ஏனோக்கிற்கு உதவியது.
14. எந்தத் திருத்தமான அறிவின் மீது ஏனோக்கின் விசுவாசம் ஊன்றியிருந்திருக்கலாம்?
14 உண்மையான விசுவாசம் திருத்தமான அறிவின் அடிப்படையிலானது. ஏனோக்கிற்கு எதைப் பற்றிய அறிவு இருந்தது? (ரோமர் 10:14, 17; 1 தீமோத்தேயு 2:4) ஏதேன் தோட்டத்தில் நடந்த சம்பவங்களை ஏனோக்கு அறிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஏதேன் தோட்டத்தில் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதையும் அவர் கேள்விப்பட்டிருப்பார்—மனிதர்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போதிலும், அந்தத் தோட்டம் ஒருவேளை அப்போதுவரை இருந்திருக்கலாம். (ஆதியாகமம் 3:23, 24) ஆதாமின் சந்ததியார் பூமியை நிரப்பி, இந்த முழு கிரகத்தையும் ஆதி பரதீஸைப் போல் மாற்ற வேண்டுமென்ற கடவுளுடைய நோக்கத்தை அவர் அறிந்திருப்பார். (ஆதியாகமம் 1:28) அதோடு, சாத்தானுடைய தலையை நசுக்கி, அவனுடைய வஞ்சனையால் ஏற்பட்ட மோசமான பாதிப்புகளுக்கு முடிவை கொண்டு வரப்போகும் வித்துவின் பிறப்பு பற்றி யெகோவா கொடுத்த வாக்குறுதியையும் அவர் மனதார போற்றினார் என்பதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 3:15) சொல்லப்போனால், யூதா புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஏனோக்கின் தீர்க்கதரிசனம்தானே, சாத்தானுடைய வித்துவை அழிப்பதைப் பற்றி முன்னுரைத்தது. ஏனோக்கிற்கு விசுவாசம் இருந்ததால், யெகோவா ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்று உணர்ந்து அவரை வணங்கினார் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். (எபிரெயர் 11:6) ஆகவே, நமக்குத் தெரியும் எல்லா விஷயங்களும் ஏனோக்கிற்குத் தெரியாவிட்டாலும், உறுதியான விசுவாசத்திற்குத் தேவையான அறிவு அவருக்கு இருந்தது. இத்தகைய விசுவாசம் இருந்ததால், கொந்தளிப்பான காலங்களில் அவர் தன்னுடைய உத்தமத்தில் நிலைத்திருந்தார்.
ஏனோக்கின் முன்மாதிரியைப் பின்பற்றுங்கள்
15, 16. ஏனோக்கின் போக்கை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
15 இன்றைய கொந்தளிப்பான காலங்களில், ஏனோக்கைப் போல் யெகோவாவைப் பிரியப்படுத்த நாம் விரும்புவதால், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற வேண்டும். யெகோவாவையும் அவருடைய நோக்கத்தையும் பற்றிய திருத்தமான அறிவை நாம் பெற்றுக்கொள்வதும் அதை தக்க வைத்துக்கொள்வதும் அவசியம். ஆனால் அது மட்டும் போதாது. அந்தத் திருத்தமான அறிவு நம் பாதையை வழிநடத்துவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். (சங்கீதம் 119:101; 2 பேதுரு 1:19) நாம் எப்போதும் கடவுளுடைய யோசனையால் வழிநடத்தப்பட வேண்டும், சிந்தையிலும் செயலிலும் எப்போதும் கடவுளைப் பிரியப்படுத்த நாம் முயல வேண்டும்.
16 ஏனோக்கின் காலத்தில் யெகோவாவைச் சேவித்த வேறு எவரைப் பற்றிய பதிவும் நமக்கு இல்லை. ஆனால் அவர் ஒருவர் மட்டுமே இருந்திருக்க வேண்டும் அல்லது அவரோடுகூட சொற்ப எண்ணிக்கையான ஆட்கள் இருந்திருக்க வேண்டும். நாமும்கூட இவ்வுலகில் சொற்ப ஆட்களாக இருக்கிறோம், ஆனால் அது நம்மை ஊக்கமிழக்கச் செய்வதில்லை. ஏனென்றால் யார் நமக்கு விரோதமாக இருந்தாலும் யெகோவா நம்மை ஆதரிப்பார். (ரோமர் 8:31) தேவபக்தியற்ற மனிதருக்கு வரவிருந்த அழிவைப் பற்றி ஏனோக்கு தைரியமாய் எச்சரித்தார். நாமும்கூட, ஏளனம், எதிர்ப்பு, துன்புறுத்தல் மத்தியிலும் ‘ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப்’ பிரசங்கிக்கையில் தைரியமாக இருக்கிறோம். (மத்தேயு 24:14) தன் காலத்தவர் பலரைப் போல் ஏனோக்கு அவ்வளவு நீண்ட ஆண்டுகள் வாழவில்லை. இருப்பினும், அந்த உலகத்தின் மீது அவர் நம்பிக்கை வைக்கவில்லை. அதைப் பார்க்கிலும் மிக அதிக சிறப்பான ஒன்றின் மீதே தன் கண்களை ஊன்ற வைத்திருந்தார். (எபிரெயர் 11:10, 35) நாமும்கூட, யெகோவாவுடைய நோக்கம் நிறைவேறுவதிலேயே நம்முடைய கண்களை ஊன்ற வைத்திருக்கிறோம். ஆகவே, இந்த உலகத்தை நாம் முழுமையாய் பயன்படுத்துகிறதில்லை. (1 கொரிந்தியர் 7:31) மாறாக, நமது பலத்தையும் வளங்களையும் முக்கியமாய் யெகோவாவின் சேவைக்கே பயன்படுத்துகிறோம்.
17. ஏனோக்கிற்கு கிடைக்காத என்ன அறிவு நமக்கு கிடைத்திருக்கிறது, ஆகவே நாம் என்ன செய்ய வேண்டும்?
17 கடவுள் வாக்குறுதி அளித்த அந்த வித்துவானவர் யெகோவாவின் உரிய காலத்தில் தோன்றுவார் என்று ஏனோக்கு விசுவாசம் வைத்திருந்தார். அந்த வித்துவானவர் தோன்றி, அதாவது இயேசு கிறிஸ்து தோன்றி, மீட்கும்பொருளை அளித்து, நாமும் ஏனோக்கைப் போன்ற உண்மையுள்ள பூர்வ சாட்சிகளும் நித்திய ஜீவனைச் சுதந்தரிப்பதற்கு வழியைத் திறந்துவைத்து இப்போது ஏறக்குறைய 2,000 ஆண்டுகள் கடந்துவிட்டன. இப்போது கடவுளுடைய ராஜ்யத்தின் அரசராக முடிசூட்டப்பட்டிருக்கிற அந்த வித்துவானவர், சாத்தானை பரலோகத்திலிருந்து இந்தப் பூமிக்குத் தள்ளிவிட்டார், அதனால் விளைந்த பெருந்துன்பத்தை நாம் எங்கும் பார்க்கிறோம். (வெளிப்படுத்துதல் 12:12) ஆம், ஏனோக்கிற்கு கிடைத்ததைப் பார்க்கிலும் மிக அதிகமான அறிவை நாம் பெற்றிருக்கிறோம். ஆகவே, நாம் அவரைப் போல் உறுதியான விசுவாசத்தை உடையோராக இருப்போமாக. நாம் செய்யும் எல்லாவற்றிலும் கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் வைத்திருக்கும் நம்பிக்கை நம்மை செல்வாக்கு செலுத்துவதாக. நாம் கொந்தளிப்பான காலங்களில் வாழ்கிறபோதிலும், ஏனோக்கைப் போல் கடவுளோடு நடப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்ட வேதாகமத்தின் பேரில் உட்பார்வை, தொகுதி 1-ல், 220-ம் பக்கம், பாரா 6-ஐக் காண்க.
b ஏனோசின் நாட்களுக்கு முன்பு, ஆதாமிடம் யெகோவா பேசினார். யெகோவா ஏற்றுக்கொள்ளத்தக்க பலியை ஆபேல் செலுத்தினான். காயீன் பொறாமைப்பட்டு கோபாவேசத்தில் கொலை செய்வதற்கு முன்பு அவனிடம்கூட கடவுள் பேசினார். ஆகவே, ‘யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொள்ள’ ஆரம்பித்தது, தூய வணக்கத்தின்படி அல்ல, ஆனால் ஒரு புதிய முறையிலாக இருந்திருக்க வேண்டும்.
எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• கடவுளோடு நடப்பதன் அர்த்தமென்ன?
• கடவுளோடு நடப்பதே ஏன் மிகச் சிறந்த வழி?
• கொந்தளிப்பான காலங்களின் மத்தியிலும், கடவுளோடு நடக்க ஏனோக்கிற்கு எது உதவியது?
• ஏனோக்கின் முன்மாதிரியை நாம் எவ்வாறு பின்பற்றலாம்?
[பக்கம் 15-ன் படம்]
விசுவாசத்தினால், ‘ஏனோக்கு தேவனோடே நடந்து கொண்டிருந்தார்’
[பக்கம் 17-ன் படம்]
யெகோவாவின் வாக்குறுதிகள் நிறைவேறுமென நாம் உறுதியாய் நம்புகிறோம்
[பக்கம் 13-ன் படங்களுக்கான நன்றி]
பெண், வலதுகோடி: FAO photo/B. Imevbore; இடிந்துவிழும் கட்டடம்: San Hong R-C Picture Company